VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: வட்டம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > வட்டம்
சிறுகதைகள்

வட்டம்

அப்பு சிவா
Last updated: October 20, 2026 12:26 pm
12 Views
Share
9 Min Read
SHARE

வட்டம்

– அப்பு சிவா

            “வெளிய அங்கயே நில்லு, புகுந்த வீடு வரும்போது முதல்ல வலது கால் எடுத்து வைக்கணும்னுகூட தெரியாதா உனக்கு?” என்ற குரலைக் கேட்டு அரண்டுபோனாள் கவிதா. கவிதாவைச் சுற்றியிருந்த, இதுவரை நிஜ சந்தோஷத்தில் இருந்த, கூடவே வந்த உறவினர்கள் பயத்தை மறைத்துக்கொண்டு அசட்டுச்சிரிப்பு சிரித்தனர். உள்ளே மகாராணி போல நாற்காலியில் உட்கார்ந்தபடி சத்தமிட்டது மாமியார் கமலா.

            இப்படியாகத்தான் ஆரம்பித்தது கவிதாவின் புகுந்தவீடு படலம். வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தபோது  முதலில் வெட்கம் வந்தது. பயம் என்பது சுத்தமாக இல்லை. கூட இருந்த தோழிகள் இன்னமும் அதையும் இதையும் கிண்டலாக பேசி வெட்கத்தை அதிகரிக்கவே செய்தனர். ஊரில் நடக்காத விஷயமா நடக்கப்போகிறது என்று கவிதாவுக்கு  கோபம் கூட வந்தது. வாசலில் அதிகாலை கோலம் போடச்சென்றால்கூட, யாருமே இல்லை என்றாலும்கூட வெட்கத்தையும், சிறு புன்சிரிப்பையும் முகம் இயல்பாக சுவீகரித்துக்கொண்டது.

            பெரியவர்கள்தான் பயத்தை சிறுகச் சிறுக மனதில் புகுத்தியது. கணவன் வீட்டில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்ன என்ன சங்கடங்கள் வரும், அதையெல்லாம் எப்படி முகம் சுளிக்காமல் சமாளிக்கவேண்டும் என்றெல்லாம் ஓயாமல் பாடம் எடுத்தனர். மெல்லமெல்ல பயம் உருவாகியது. மாமியாரைப் பற்றிய உருவகங்கள் கேள்விபட்டு கொஞ்சநஞ்சம் இருந்த துணிச்சலும் கவிதாவுக்கு  காணாமல் போயிற்று.

            கணவன் பாபுவின் அம்மா கமலா சரியான சிடுமூஞ்சி என  சொல்லி வைத்திருந்தார்கள். வயதானாலும், சரியாக நடக்கமுடியவில்லை என்றாலும் அவரது திமிர் மட்டும் குறையாமல் இருக்குமாம்.

             சமயங்களில் பாபு ‘என்ன டிரஸ் எடுக்க வேண்டும், எந்த கல்யாண மண்டபம், என்ன மாதிரியான உணவு வகைகள்’ என்பதை சாக்காக வைத்து வீட்டுக்கு ஃபோன் செய்வான். வீட்டில் அப்பாவுடன், அம்மாவுடன் பேசிவிட்டு சிறிதுநேரம் ஃபோனை வைக்காமல் தயங்குவான். அதைப்புரிந்து கவிதாவிடம் ஒருசில நிமிடங்கள் ரிஸீவரைக் கொடுப்பார்கள். அப்போதும் சுற்றியே நிற்பார்கள் ஆதலால் வெறுமனே ‘உம்’ கொட்டிக் கேட்டுக்கொள்வாள் கவிதா. பாபுவின் தந்தை சிறு வயதிலேயே தவறிவிட, தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர் தன் அம்மா எனவும் அதனால் சற்றே முரட்டுச் சுபாவம் கொண்டவர் எனவும், ஆனாலும் குணத்தில் தங்கம் எனவும் அவன்தான் சொல்லியிருந்தான். அந்த ஒரு விஷயம் அவர் மேல் மரியாதை ஏற்பட காரணமாக இருந்தது. அதனாலேயே அவர் என்ன சொன்னாலும், எப்படி கொடுமை செய்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என திருமணத்திற்கு முன்பே முடிவு செய்து வைத்திருந்தாள் கவிதா.

            ஆனாலும் பொறுமையின் கடைசி எல்லைவரை ஆழம் பார்ப்பதாகவே இருந்தது கணவனின் வீடு.

            பாபுவின் தம்பி கணேஷ், படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருப்பவன். பெரும்பாலும் சோஃபாவில், தரையில் என தூங்கியே கழிப்பான். ஆனாலும் வேலைக்குச் செல்பவன் போலவே சரியாக நேரத்துக்கு சாப்பாடு, தினம் இரு உடைகள் என அழிச்சாட்டியம் செய்வான். வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டான். சமயங்களில் கூடவே நண்பர்கள் என சிலரைக் கூட்டி வந்து வீட்டையே இரண்டு பண்ணுவான். அவர்கள் போனதும் தலைகீழாக இருக்கும் வீட்டை ஒழுங்கு செய்வதில் நாளே ஓடிவிடும். இத்தனைக்கும் துணிகளைத் துவைத்து அப்பாடாவென அயரும்போதுதான், ”அண்ணி, இந்த ஒரு டிரஸ் மட்டும் அவசரம், இதையும்…” என தினமும் எதாவது தூக்கிப் போடுவான்.

            பாபுவின் தங்கை தாரணி கல்லூரியில் படிப்பவள். தாவணிகள் மறைந்து கல்லூரிகளில் சுடிதார் போட ஆரம்பித்த காலம் அது. வகைவகையான சுடிதார்களை வாங்கிக் குவிப்பாள். அடிக்கடி மாற்றிப் போடுவாள். துவைத்து மாளாது. பொழுதுக்கும் டிவி, அதைவிட்டால், காதில் எதையோ மாட்டிக்கொண்டு பாட்டு என்றே காலம் கடத்துவாள். அந்த பாட்டு கேட்கும் கருவியை பிடுங்கிவிட்டால் அப்படியே மூச்சை விட்டுவிடுவாள் போலத்தோன்றும். நண்பர்களுடன் ஃபோனில் பேசும்போது மட்டும் ஊரே பார்க்கும் அளவுக்கு சிரித்துச் சிரித்துப் பேசுவாள். கவிதா அருகில் வந்துவிட்டாலோ  சுவிட்ச் ஆஃப் ஆனது போல அந்தச் சிரிப்பு மறைந்துவிடும். வீட்டுக்குள் அவள் மற்றவர்களிடம்  சிரித்து பேசியோ, வேலைகள் செய்தோ கவிதா பார்த்ததே  இல்லை.

            எதையும் பாபு காதில்  போட்டுக் கொள்ளமாட்டான்.

            முடிந்தவரை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் கவிதா. ஆனால் சில நாளிலேயே தன்  மனநிலையே பாதித்திருக்குமோ என குழம்பும் அளவுக்கு தான் கொடுமைகளை அனுபவிப்பதை  அவளால் உணர முடிந்தது.

            அனைவர் துணிகளையும் அவள் ஒருத்தியே மடிக்கவேண்டும். மாமியாருக்கு பீரோ இருந்தாலும் முக்கியமில்லாத, போடவே போடாத துணிகளை  கொண்டு வந்த கவிதாவின் பீரோவில் வைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார். சிலநாளிலேயே அதை எடுக்கச் சொல்லி கேட்பார். வாங்கும்போது பீரோவில் வைத்து கிழித்து விட்டதாகவும், அழுக்கு செய்ததாகவும் கண்டிப்பார்.  வேண்டுமென்றே தோட்டத்துக்கு வெறும் காலுடன் நடந்து சென்று செம்மண் அப்பிக்கொண்டு வந்து வீடு  முழுதும் தடம் பதிப்பார். கவிதாவைக் கூப்பிட்டு ‘வீடு இப்படிதான் வச்சுக்கறதா’ என சத்தமிடுவார். கவிதாவின் வீட்டார் வந்தாலோ அவர்களிடம் ஜென்ம விரோதி போலவும், வேண்டா விருந்தாளி போலவும் பேசுவார். கூடவே மூட்டை மூட்டையாக கவிதாவைப் பற்றிய புகார்களும் ஒலிபரப்பாகும்.

            எவ்வளவு அழகாக சமைத்தாலும் அதில் கண்ணாடி லென்ஸ் வைத்து குற்றம் தேடுவார் மாமியார். அப்படித்தான் ஒருநாள் பிரியாணியை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு தட்டை தூக்கி எறிந்தார்.

            “என்னதான் சமைக்கிறா உன் பொண்டாட்டி? வாய்ல வைக்க  முடியலை” என்று பாபுவிடம் சத்தம்போட,

            “அம்மா, இது கடையில் வாங்கி வந்தது” என்று பாபு தயங்கியபடி சொல்ல, அப்போதும் விடாமல், ”கடைக்காரனும் இவளைப் போலவே சமைக்கிறான் பாரு“ என்றாரே பார்க்கலாம்.  தலை வெடிக்கும்போல் இருந்தது கவிதாவுக்கு.

            தன் படிப்பை வைத்து வேலையில் இணைந்து சற்றே நிம்மதியாக ஒதுங்கிவிடலாம் என்றால், “நீ என் ராணி, வேலைக்கு எல்லாம் போகாம ஹாயா வீட்ல இரு, நான் சம்பாதிச்சு போடுறேன்” என்று ரொமான்ஸ் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு அசமந்தமாக பேசுவான் பாபு.

            ஒருநாள் அப்படித்தான், கவிதா மாடியில் துணி காயவைத்துவிட்டு இறங்கும்போது ஃபோனில் யாரிடமோ மாமியார் கமலா பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து மெல்லப் படியிலேயே நிதானித்தாள்.

            “வேலைக்குப் போறதா சொன்னாளாம்… ஆமா… வேலைக்குப் போனா இஷ்டத்துக்கு இருக்கலாமில்ல, பாபுகிட்டச் சொல்லிட்டேன், வேலை அதுஇதுன்னு சொன்னா அப்படியே அவங்க வீட்ல விட்ருன்னு, ஆமா… நீ சொல்றது சரிதான்… ஆள்மயக்கி போலதான் இருக்கா… சேலை கட்ற தினுசு என்னா, அந்த மேக்கப் என்னா… ஒண்ணும் சொல்றமாதிரி இல்லடி, நீ செய்ததுபோல சொந்தத்தில் கட்டியிருந்தாச் சொல் பேச்சு கேட்கும், இது ஒரு  கெரகம், இங்க வந்து உசுர வாங்குது, ஒரு வேலை செய்யறதில்ல, நல்லா டிவி பாக்குது, தூங்குது, எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு”

            கோபம் உச்சம் ஏறியது கவிதாவுக்கு. மனம் விம்ம, சத்தமில்லாமல் மாடிக்குச்சென்று உட்கார்ந்து தனியே அழுதாள்.  ஒரு நாள் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு சாமியாரிணி ஆகிவிடுவோம் என்றுகூட  தோன்றியது.

                         கமல், மனிஷாகொய்ராலா நடித்து ஒரு புதிய படம் வந்ததாக விளம்பரம் பார்த்தாள். அதில் வருவதுபோல கை விரலை வைத்து மாமியார் தொண்டையில் இறக்கிவிடலாமா, அல்லது வயதான மேக்கப் போட்டு வந்து கணேஷ் முகத்தில் குத்தலாமா, கூடவே தாரிணியை தலைகீழாக தொங்கவிட்டு ஊஞ்சலாட விடலாமா என்றெல்லாம் அவள் மனதில் தோன்றியது.

            பாபு வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த ஒரு நாளில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. முழு வில்லியாக மாறினாள் கவிதா. அவள் முகம் மாறி சிவந்த லைட்டிங் போட்டது போல கோரமாக இருந்தது. பாபுவின் சொந்தத்தில் ஒரு திருமண நிகழ்வு. கட்டாயம் வீட்டில் ஒருவர் போயே ஆகவேண்டிய சூழல். மாமியார் கமலா போகமுடியாமல் டல்லாக இருக்க, கவிதாவை போய்வரச் சொன்னார்கள். வீட்டில் மாமியார் மட்டும் இருக்க, அவருக்கு பிடிக்காத காளான் பிரியாணியை செய்து அதனோடு சற்றே பூச்சி மருந்தைக் கலந்து வைத்தாள் கவிதா. கமலாவை கடைசியாக ஒருதடவை பார்த்துவிட்டு சாப்பிடச் சொல்லிவிட்டு, வெளியேறி ஆட்டோ பிடித்தாள்.

            திருமண நிகழ்வுக்கு அரைமணிநேரம் பயணிக்க வேண்டும். வழியில் இயல்பான கவிதா விழித்து வில்லியைத் தூரத்தள்ளினாள். ‘எப்படியும் போலீஸ் கேஸ் ஆகும், எந்தவகையிலாவது துப்புதுலக்கி, கண்டுபிடித்து கவிதாவை விலங்கிட்டு சாலையில் நடக்க வைத்துக் கூட்டிச்செல்வார்கள்’ என்பதெல்லாம் மனத்திரையில் சினிமாவாக ஓட, பயம் பிடித்து அவசர அவசரமாக ஆட்டோவை வீட்டுக்குத் திருப்பினாள்.

            அங்கே,

            பிரியாணி பாத்திரம் காலியாக இருந்தது. திகீரென்று இருந்தது கவிதாவுக்கு. உள்ளே மாமியாரின் படுக்கையறைக்கு ஓடினாள். கமலா தன் படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். சுத்தமாக பேச்சு மூச்சு இல்லை. உடல் சற்றே சில்லிட்டு இருப்பதாக தோன்றியது. கவிதாவின் சப்தநாடியும் ஒடுங்கிய சமயம் அது.

            படபடவென வெளியேறி ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தாள். ஒருமணிநேரம் உள்ளே சிகிச்சை நடந்தது. வெளியே கவிதாவின் முகம் இருண்டு, வாழ்க்கையே கேள்விகுறியாக தோன்றி சுழன்ற நேரம் மருத்துவர் அழைப்பதாக நர்ஸ் வந்து சொன்னார்.

            “டாக்டர்…” என்று தயங்கியபடி நின்றாள் கவிதா.

            “உங்களைத்தான் பாராட்டணும்மா, சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்த்தீங்க, இன்னும் கொஞ்சநேரம் தாமதிச்சிருந்தா காப்பாத்தியிருக்க முடியாது. இப்போ ஓகே… அவங்க கண்முழிச்சதும் நீங்க போயி பார்க்கலாம்”

            “வந்து… மருந்து, வந்து… அதாவது…” என்று கவிதா குழற…

            “ஹார்ட் அட்டாக்தான்மா, மெடிசின் எடுத்துக்கணும் இனிமே, வயசாவுது இல்லையா, ஜாக்கிரதையாதான் இருக்கணும். மருந்து எல்லாம் எப்படி கொடுக்கணும்னு நர்ஸ் சொல்லுவாங்க” என்றார் அவர்.

            பாபுவை தொடர்புகொள்ள முடியவில்லை. அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்துவிட்டு திருதிருவென உட்கார்ந்திருந்தாள் கவிதா. கமலா கண் விழித்து கூப்பிடுவதாக சொன்னார்கள். பாவமாக படுத்திருந்தவர் கவிதாவின் கையை பிடித்துக்கொண்டார்.

            “கவிதா…” அவ்வளவு மென்மையாக அவர் பேசி கவிதா கேட்டதே இல்லை.

            “சொல்லுங்க அத்தே” பயத்துடன் பேசினாள் கவிதா.

            “எப்படி எனக்கு அட்டாக் வரும்னு உடனே வந்த? என் மேல அவ்வளவு பாசமா?”

            “வந்து… ஆங்… இருக்காதா அத்தே, நீங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரிதானே…”

            “ஆமா, நான்தான் சினிமா மாமியார் மாதிரி உங்கிட்ட நடந்துகிட்டேன். எவ்வளவு கொடுமை செய்தேன், ஆனா உன் மனசில் தோணியிருக்கு பாரு… உடனே போன வண்டியைத் திருப்பி வரணும்னு சொல்லியிருக்கு பாரு… நீ வரலைனா இந்நேரம் போட்டோவா மாறி மாலை போட்ருப்பாங்க இல்ல?”

            “அச்சோ, அப்படியெல்லாம் பேசாதீங்க அத்தை… என்னால் தாங்கமுடியாது”

            “உன்னைப்போயி நான்… இனிமே நான் உன்னை திட்டவே மாட்டேன்… நீ ஆசையா செய்து வச்ச பிரியாணியை ஒருவாய்கூட சாப்பிடாம கோபமா தூக்கி குப்பையில் போட்டுட்ட பாவி நான்… என்னை தெய்வம் மாதிரி காப்பாத்தியிருக்கிற மகாலட்சுமி நீ…” என பேசிக்கொண்டே இருந்தார் கமலா.

            இதோடு கதை முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால்…

            டிவியில் இந்தியன் 2 ட்ரெய்லரில் “ஓடமுடியாது ஒளியமுடியாது” என கமல் சொல்வது சத்தமாக வெளியே வரை கேட்டது. அதையும் மீறி…

            “வெளிய அங்கயே நில்லு, புகுந்த வீடு வரும்போது முதல்ல வலது கால் எடுத்து வைக்கணும்னுகூட தெரியாதா உனக்கு?” என்ற குரலைக் கேட்டு அரண்டுபோனாள் ஸ்வேதா. ஸ்வேதாவைச் சுற்றியிருந்த, இதுவரை நிஜ சந்தோஷத்தில் இருந்த, கூடவே வந்த உறவினர்கள் பயத்தை மறைத்துக் கொண்டு அசட்டுச்சிரிப்பு சிரித்தனர். உள்ளே மகாராணி போல நாற்காலியில் உட்கார்ந்தபடி சத்தமிட்டது மாமியார் கவிதா.

            இப்படியாகத்தான் ஆரம்பித்தது ஸ்வேதாவின் புகுந்தவீடு படலம்.

You Might Also Like

தொலைந்த சாவி
பாதுகாப்பு
புரிந்தது
செதில்கள்
மெழுகுவர்த்திகள்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் செப்டம்பர் 2026
Previous Article ‘தாக்கத்தின் விளைவுகள்தான் எழுத்து’ – எழுத்தாளர் மகி ஆதிரன்
Next Article மண்டாடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?