தடாகத்தில் முங்கிக் குளித்தெழுந்தவளைக் காட்டின் நள்ளிரவு ரீங்காரங்கள் ஈசல்களைப் போல சூழ்ந்து கொண்டு மொய்க்கத் தொடங்கின. அவள் ஊடல் கொண்டவளைப் போல இருளை நோக்கி சின்னதாய்ச் சிணுங்கினாள். எங்கோ ஒரு கூகையின் ராக்கால மந்திரங்கள் அவளின் ஏகாந்தத்தை சலனப்படுத்தாமல் ஒத்திசைந்து கருமையில் உருகிக் கலந்தன.
சதுப்புக் கரையில் ஒய்யாரமாக அமர்ந்தவள், கரிய திரவத்தில் மிதந்து நெளிந்து கொண்டிருந்த அம்புலியைத் தன் மயங்கிய கண்களினால் பிரியத்தோடு வருடிக் கொண்டிருந்தாள்.
சிறு வயதில் பல பௌர்ணமி இரவுகளின்போது அம்மாவுடன் சேர்ந்து மீன் பிடிக்க நிசோலை இதே தடாகத்திற்கு வந்திருக்கிறாள். குழந்தையின் மிருதுவான சருமத்தை ஒத்த மாசுமருவற்ற சேறு படிந்த குளக்கரை அது. அங்கு நிலவொளியில் இருவரும் கெளுத்தி மீன்களை சுட்டுத் தின்றபடி இருக்க, அம்மா கொடிய ஆண்களின் பாவக் கதைகளை விளம்பிக் கொண்டிருப்பாள். ஆண் வாசனை இந்தத் தீவின் வனாந்தரத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் நுழையவே கூடாது என்பாள்.
பல தலைமுறைகளுக்கு முன்பு இதே தீவின் வெண்ணிறக் கடற்கரையில் ஒரு சிறிய படகு ஒதுங்கியது. பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி ரூமை என்ற யுவதி தன் பாதங்களை மென்மணலில் பதித்தாள். பரதவ குடும்பத்தைச் சேர்ந்த ரூமை, அவள் கணவனின் மிருகத் தனத்திலிருந்து விடுபட்டு குழந்தையுடன் கடலைத் தாண்டி தப்பி வந்தவள்.
தீவின் பிடாரி ஆண்களை வெறுத்திருந்தாள். ஆணின் கைக்குள் தீவு அகப்படாமல் இருக்கவும், ரூமையின் சந்ததி விருத்தி அடையவும், கன்னிகளாகவே பிரசவிக்கும் வரத்தை அவளுக்கும் அவளின் வழி தோன்றல்களுக்கும் பிடாரி நல்கி இருந்தாள். ரூமையின் காலத்திற்குப் பிறகு அவளுக்கெனத் தீவின் வடக்குக் கரையில் ஒரு கற்கோவில் எழுப்பப் பட்டு, ஒவ்வொரு ஆவணி மாதத்தின் முதல் பௌர்ணமி அன்றும் வனிதைகள் ஆடிப் பாடி மழைப் பருவத்தைக் கொண்டாடினார்கள். அந்நேரங்களில் ரூமை நளின சிற்பமாக உதட்டில் மெல்லிய புன்னகையுடன் அரங்கேற்றங்களை ரசித்திருப்பாள்.
அம்மாவைப் போலவே, குடியின் மற்ற மூதாதையர்களைப் போலவே, நிசோலையும் தனது இருபத்து ஓராம் வயதில் கன்னியாக ஒரு பெண் குழந்தையைப் பிரசவிப்பாள். இந்தக் காட்டின் நியதி அது. இங்கு முளைக்கும் சிறு புற்களும் கூடக் காரிகைகளும், கோதைகளுமே. இது பெண்கள் மட்டுமே சுவாசிக்கும் வனம். இங்கு தாவரங்களின் தண்டுகளில் முளைத்தெழும் கொடிகளுக்கு, ஆண் வியர்வையை நுகர்ந்து முன் கூட்டியே ஆபத்தைக் கண்டறியும் நுண்ணுணர்வு உண்டு.
காளை குளம் என்றறியப் படும் இத்தடாகத்தில் மட்டும் விதிவிலக்காக ஆண் மீன்களே நீந்தித் திரியும். இது குடிகளின் பசி தீர்க்கப் பிடாரி அளித்த தானம் என அம்மா பரவசத்துடன் எத்தனையோ முறை கூறி இருக்கிறாள். நிலவொளியில் பளபளக்கும் கெளுத்திகளின் செதில்கள் கரையோரப் பாறைகளில் சிதறிக்கிடக்க, முட்களைப் காட்டுப் பூனைகளுக்காகப் படைத்துவிட்டு சாறு பொங்கும் பூ போன்ற மென்மையான தசையை செல்விகள் லயித்து உண்பார்கள்.
அந்த நடுநிசியில் தன் பூர்வகுடிகளின் வரலாற்றை மெய்மறந்து வனப்பாடலாக இசைத்துக் கொண்டிருந்த நிசோலை, திடீரென்று தடாகத்தின் மறுகரையிலிருந்த சேற்றுப் பகுதியில் ஒரு காட்சியைக் கவனித்தாள். இளமங்கை ஒருத்தி மயங்கிய நிலையில் சகதியில் குப்புறப் படுத்திருந்தாள். அவள் கூந்தல் முழுக்க மின்மினிப் பூச்சிகள் ஒட்டிக் கிடந்தன. ஆண் மின்மினிகள். இந்த ஆரண்யத்தில் எங்குமே அப்பூச்சிகள் இல்லை. அவள் மலைக்கு மறுபுறத்திலிருந்த ஏதோ ஒரு தீவின் வனாந்திரத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என யூகித்தாள்.
அந்தக் கன்னிப்பெண் கருவுற்றிருந்ததை அறிந்துகொண்ட நிசோலையின் மனதில் ஒரு இனம் புரியாத பயமும் கூடவே சின்ன நாணமும் துளிர் விட்டன. மூன்று மாதக் கரு என மூதாட்டி மரமான ஆலம் தன் விழுதால் நுகர்ந்து நடுக்கத்துடன் கூறினாள். கிழட்டு ஆலத்தின் சிந்தனையிலும் அவளை சுற்றி இருந்த மற்ற தாவரங்களிலும் விளங்கிக்கொள்ள முடியாத ஏதோ ஒரு பீதி பற்றியிருந்தது. அது என்ன உணர்வு என்பது அவர்களுக்குப் புலப்படவில்லை.
காட்டுச் செம்பருத்தியின் சாறை மயங்கிக் கிடந்தவளின் உதட்டில் நிசோலை நனைத்தாள். சில நிமிடங்களில் அவள் நினைவு திரும்பியதுமே தன் பெயர் அமரந்தா என்றாள். தன்னைப் பற்றிய விசாரணைகளுக்கு மௌனமும் விம்மல்களுமே அவளிடமிருந்து வெளிப்பட்டதால் இனி ஏதும் கேட்கப்போவதில்லை என நிசோலை ஆறுதலாகக் கூறினாள். இரவின் மூன்றாம் ஜாமம் முடியும் வேளையில் உள்காட்டில் அமைந்திருந்த தன் குடிசைக்குப் புதியவளை அழைத்துச் சென்றாள்.
அம்மாவின் மரணத்திற்குப் பிறகு காட்டின் ஒரே இளவரசியைப் போலத் தனிமையில் நாட்களை நகர்த்தி வந்தவளுக்கு அமரந்தா ஒரு அன்புத் தமக்கையைப் போலத் தோன்றினாள். அடுத்த சில வாரங்கள் இருவரும் ஒரே தாய் வயிற்றில் உதயமான சகோதரிகளைப் போல மகிழ்ந்து விளையாடித் தீவு முழுக்க சுற்றித் திரிந்தார்கள்.
மாதங்கள் நகர்ந்தன. அமரந்தாவின் குணத்திலும் குரலிலும் மர்மமான மூர்க்கம் குடியேறி இருந்ததை நிசோலையால் உணரமுடிந்தது. அமரந்தாவினுள் கருணையின் ஈரத் தடயங்கள் வற்றிக் கொண்டே வந்தன. அல்லது முன்பு இருந்ததாகத் தென்பட்ட ஈரம் வெறும் கானல் நீரா எனும் குழப்பம் நிசோலையை வாட்டி வதைத்தது. முற்றிலும் புதியவளாகத் தோன்றினாள் அமரந்தா. மரக் கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்திருந்த பறவைகளையும் அவைகளின் முட்டைகளையும் வேட்டையாடத் தொடங்கினாள். புள்ளி மான்களையும் முயல்களையும் பதுங்கிக் கொன்றாள். காளை குளத்து மீன்களைத் தொட மறுத்தாள். காடே அவளைக் கண்டு அஞ்சியது. நிசோலை அவளைக் கட்டுப்படுத்த முடியாமல் திக்குமுக்காடினாள். குழந்தை பிறந்தால் அவளின் வேட்கை மறையலாம் என ஆலம் மூதாட்டி ஆறுதல் உரைத்தாள்.
அமரந்தா ஏழாம் மாதத்திலேயே பிரசவிக்கத் தயாரானது அவளைச் சுற்றி இருந்த புதிர் தன்மையைப் பன்மடங்கு கூட்டியது. அன்று அமாவாசை. இது வரை அத்தீவில் கேட்டிராத நரிகளின் ஏளனச் சிரிப்பொலிகள், பயம் அறியாத கருவேங்கையின் உடலிலும் ரோமாஞ்சனத்தை எழுப்பின. இரண்டாம் ஜாமத்தின் உக்கிரப் பொழுதுகளில் கர்ப்பிணியின் உடல் குழந்தையை வெளியே உதறியது.
நிசோலை அதிர்ச்சியில் உறைந்தாள். அது ஆண் குழந்தை. கொழகொழப்பாக மினுங்கிய முகத்தின் தாடைப் பகுதியில் ரோமங்கள் நெளிந்தன. குடிசையின் களி மண் தரையைத் தொட்ட மூன்றாம் நிமிடம் குழந்தை இரண்டு கால்களில் எழுந்து நின்று, ஊனுண்ணிப் பற்கள் பளபளக்க வெறி கொண்டு ஒரு சைத்தானைப் போல சிரித்தான். அசுரப் பசி அவன் வயிற்றைக் கிள்ள, குடிசையை விட்டு அதிவேகமாகத் தாவி வெளியேறி பறவைக் கூடுகளைத் தேடி மரங்களில் ஏறத் தொடங்கினான்.
நிசோலை பயத்தில் சில்லிட்ட தன் தேகத்தைத் திருப்பி அமரந்தா படுத்துக் கிடந்த நார்ப் பாயைப் பார்த்தாள். அங்கு அவள் இல்லை. ஏழடி உயர ஆண் ஒருவன் நிர்வாண கோலத்தில் உருமிக் கொண்டு நின்றிருந்தான். ஒரு பெண்ணின் கூந்தலுடன் கூடிய முழு உடலின் தோல் பகுதி, உதறி விடப்பட்ட பாம்புச் சட்டையைப் போல குடிசையின் ஒரு மூலையில் நிர்க்கதியாகக் கிடந்தது. அதன் மேல் ஈசல்கள் சூழ்ந்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடி மொய்த்துக் கொண்டிருக்க, தீவின் வடக்குக் கரையில் கோவில் கொண்டிருந்த ரூமை கனத்த மௌனத்துடன் தன் முகத்தைக் கார்கடலின் பக்கம் திருப்பிக் கொண்டாள்.


