VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: தடம் புரண்ட தருணம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > தடம் புரண்ட தருணம்
சிறுகதைகள்

தடம் புரண்ட தருணம்

இந்த உலகத்துல எல்லாமே ரெண்டு ரெண்டாவே படைக்கப்பட்டிருக்கு.

முரா. இரக்சன் கிருத்திக்
Last updated: June 30, 2026 3:09 pm
3 Views
Share
11 Min Read
தடம் புரண்ட தருணம்
SHARE

தடம் புரண்ட தருணம்

– முரா. இரக்‌ஷன் கிருத்திக்

ஆஸ்பத்திரில உள்நோயாளியாக கெடக்குற சீக்காளி ஒவ்வொருத்தளுக்கும் அவங்கவங்க சீக்குக்கு தகுந்தாப்புல மாத்திரயள கொடுத்துக்கிட்டே வந்தாவ நர்ஸ் கீதா. எட்டாமவராக ஜனனிய நெருங்குனப்போ “சிஸ்டர் எல்லோருக்கும் மாதிரி எனக்கும் மாத்திரயள தந்தறாதீக” என்றாள்.

 

“ஏம்மா அப்புடிச் சொல்லுத? மாத்திரயள ஒழுங்கா தின்னாத்தான சீக்கிரம் சொகமாகி வீட்டுக்குக் கிளம்பலாம்”

 

“சிஸ்டர் மத்த பேஷியண்ட்ஸ் வேணும்னா, மாத்திரைய ஒழுங்கா எடுத்தாகணும்ங்கிற மாதிரி இங்க வந்துருக்கலாம். ஆனா, நானு அப்புடியெல்லாம் இல்ல”

 

“பாரும்மா, என் அனுபவத்துல இருந்து சொல்லுதேன். வேறெந்த நோயா இருந்தாலும், தனக்கு இந்த நோயிதாங்கிறத நோயாளிக ஒத்துப்பாங்க. ஆனா, இந்த நோய பொறுத்தவரையில எவரா இருந்தாலும், அம்புட்டு லேசுல ஒத்துக்கிடமாட்டாவ”

 

“நீங்க சொல்லுதது நெசம்தான் சிஸ்டர். ஆனா, அதிகாரத்துல இருக்கவியளோட துஷ்பிரயோகத்தால என்னைய மட்டும் இல்ல, என்னை மாதி இன்னும் ஆயிரம் அப்பாவிகள வேணுமானாலும், இங்க கொண்டு வந்து விடலாம்ங்கிறத உங்க அனுபவத்துல அறிஞ்சிருக்கேளா?”

 

“என்னம்மா சொல்லுத?”

 

“பொம்பளப் புள்ளயள பெத்த ஒவ்வொரு அப்பன், ஆத்தாளோட கனவும் தன்னோட பொண்ண ஒரு நல்ல இடத்துல கலியாணம் செஞ்சிக் குடுத்துப்புடணும்ங்கிறதுதான். என்னோட கலியாணம் பத்தின கனவுகளோட என் குடும்பமும், என்னை பொண்ணு பாத்துட்டு போன மாப்பிளயோட குடும்பமும் இருந்தது. அந்த கனவோட மொத நாளு அதான், எனக்கும் ரவிக்குமான நிச்சயதார்த்தம். அந்தக் காரியம் எல்லாரும் நெனைச்சபடி எந்தக் கொறயும் இல்லாம ரொம்பவே கச்சிதமா நடந்து முடிஞ்சது. அடுத்த நாள் கல்யாண நாள். இன்னைக்கு வெள்ளிக்கிழம. இன்னிக்குல இருந்து இரண்டு நாட்களுக்கு முன்ன செவ்வாய்க்கிழம காலயிலே என் கழுத்துல நாளு, நேரம், நட்சத்திரம் பாத்து பெத்தவங்க, உறவுக்காரங்க, சேக்காளியன்னு எல்லாரும் புடை சூழ ரவி எங்கழுத்துல தாலிய கட்டினான். அவன் கட்டின தாலிக்கு சந்தோஷமா கழுத்த நீட்டுனாப்புல எல்லோருடைய பார்வைக்கும் தெரிஞ்சாலும், என் மனசுக்குள்ள ஒரு கொழப்பம் கெடந்தது என்னவோ நெசம்தான். அதுக்குபொறவு, நடக்க வேண்டிய எல்லா சடங்குகளும் மொறயா நடக்க, கிட்டதட்ட அன்னைக்கு பொழுது போயிட்டு, எங்க சாந்தி முகூர்த்த நேரத்தத் தவிர்த்து.

 

இராத்திரி ஒரு பத்தரை மணி இருக்கும், சினிமாவுல காட்டுறாப்ல, ஒரு சொம்புல தளும்ப தளும்ப பால எடுத்துக்கிட்டு, மொத இராத்திரி அறைக்குள்ளால போனேன். எங்கள மொத இராத்திரி அறைக்குள்ளே அனுப்பினதுமே, எங்க அப்பன், ஆத்தா, ஒறவுக்காரங்க பூரா பேரும் அவுகளோட கடமத் தீர்ந்து போச்சுங்குற திருப்தியிலும் அசதியிலும் நல்லா தூங்கிவிட்டிருந்தனர். மொத இராத்திரி அறைக்குள்ள என்னை பாத்தவொடனே, ரவி புருவம் தூக்கிச் சிரிச்சுகிட்டே என்னை வரவேத்தான். அவன பகடி செய்றாப்பல “சொம்போட குடிக்கியளா? இல்ல, டம்ளர்ல ஊத்தித் தரவா?” என்றேன் நான்.

 

என்னமோ அவன குடிக்க சொல்லி நான் நெருக்கடி குடுத்த மாதிரி “பாலக் குடிச்சுத்தான் ஆவணுமா?” என்றான்.

 

“உங்க இஷ்டம்தான். மேலுக்கு நல்ல திராணி வேணுமின்னா குடிங்க” என்றேன்.

 

இதச் சொன்னதும், ஏதோ நடக்கணும்னு நான் இஷ்டப்படுத மாதிரியும், அதெ மனசுல வச்சுக்கிட்டுதான் உள்ளர்த்தமா பேசுறதா நெனச்சுட்டு, உசுப்பேறி அவனது கொள்கெயள எனக்காண்டி தளர்வா விடறாப்புல “சரி, மொத மொதல்ல தர்ற, அத வேணாம்னு சொல்ல வேணாம்னு நினைக்கேன். உம்… டம்ளருலயே ஊத்திக் குடு” என்றான்.

 

நானு கையோட எடுத்துட்டுப் போயிருந்த டம்ளரில் பால ஊத்தி ரவியோட கையில குடுத்தேன். டம்ளர வாங்குனவன், பால் சூடா இருந்ததால, மடக்கு மடக்காக குடிச்சான். சில மடக்குகள் குடிச்சிட்ட பொறவு “நீ குடிக்கல” என்றான்.

 

“நான் வெறும் பால் சாப்புட மாட்டேன். பால் சேத்த காபி, டீ தான் எனக்கு புடிக்கும்” என்றேன். ஒடனே “உனக்கு வேற எதெல்லாம் புடிக்கும்?” என்று பேச்சு திசை மாறிச்சு. “இறைச்சி, மீன், ஐஸ் கிரீம், பிரியாணி, பரோட்டா, பானி பூரி, பிட்ஷா, பர்கர்…” என்று அடுக்குனேன் நான். அப்புடியே ரெண்டு பேரும் எங்களுக்கு பிடித்த, பிடிக்காத சிலதப் பத்திப் பேசிக்கிட்டோம். நான் பேசும் போது எற்படுத உடல் அசைவுகளை காம ரசம் ததும்ப கண் கொட்டாது பாத்துக்கிட்டும் எனது பேச்சைக் கேட்டுகிட்டும் இருந்தவனின் உடம்பும் மனசும் எதோ ஒன்னு கேக்க, அவனோட கை என்னைத் தீண்ட பைய கிட்ட வந்துச்சு. புரிஞ்சிக்கிட்ட நான் அதை தட்டி கழிக்க, லேசா வயித்த வலிப்பது மாதிரி பாசாங்கு செஞ்சிட்டு “டாய்லெட் போயிட்டு வாரேன். ப்ளீஸ்…” என்றேன்.

 

“நானும் வாரேன் கூட?” என்றான் ரவி.

 

இந்தக் கேள்விய கேட்டது, எம்மேல இருந்த மயக்கம், நேசம் இப்புடி எத வேணுமென்னாலும் எடுத்துக்கலாம். அதோட இன்னொன்னும் இருந்துச்சு. எங்க வீட்டு கக்கூச வீட்டோட ஒட்டினதா இல்லாம, ஒரே வளவுக்குள்ள சற்று தனிச்சுதான் அமைச்சிருந்தோம். எனவே, தானொரு ஆம்பள புள்ளங்கறதக் காட்டிக்கிடுததுக்குன்னுகூட எடுத்துக்கிடலாம்.

 

“இத்தன நாளும் தனியாத்தான போனேன். எனக்கு ஒரு பயமும் இல்ல” என்றேன்.

 

“இத்தன நாளும் போன. இப்பதான், நான் வந்துட்டேன்ல” என்றான்.

 

“நீங்க வாரேன்னு சொன்னதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, மனுசன் நிம்மதியா செய்யுத ஒரே காரியம் இது ஒன்னுதான். அதயும் ஏக அவசரமா செய்ய வேண்டிக் கெடக்கும்னுதான் யோசிக்கேன்” என்றேன்.

 

“என்ன?” என்று புரியாத மாதிரிக் கேட்டான்.

 

“இல்ல. நீங்க, எனக்காண்டி காத்திருக்கதால, நான் அந்த நெனப்புல, ஏக அவசரமாக போக வேண்டியது கிடக்குமேனு யோசிக்கேன்”

 

“ஓ! இப்புடி ஒன்னு இருக்குதா? இத நான் யோசிக்கலய. சரி, இங்கனயே இருக்கேன், நீ சாவகாசமா போயிட்டு,  வா” என்றான்.

 

அடுத்த கணம் அறையில இருந்து வெளியேறிய நான் வீட்டை விட்டும் வெளியே வந்தேன். யாரும் என்னைப் பாக்காங்களான்னு நாலாபுரமும் பாத்துவிட்டு வெரசலாக வளாக சுவத்த விட்டும் வெளில வந்தேன். இன்னொருக்கா, சுத்திப் பாத்துட்டு சர சரன்னு நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தேன். அங்கக் காரை வச்சுக்கிட்டு எனக்காண்டிக் காத்துருந்தான் வினோத். அவனோடு காரில் ஏறிப் போனேன்.

 

அறையில மொத ராத்திரி பத்தின கனவுல ஓவ்வொரு நிமிடத்தையும் ஒரு யுகமாக கடத்திக்கிட்டிருந்த ரவி, அரை மணி நேரம் கடந்தும், நான் அறைக்கு திரும்பாதது கண்டு என்னைத் தேடிக்கிட்டு கக்கூசுக்கு போயிருக்கான். அங்க கழிவறைக் கதவப் பாத்தவனுக்கு மேலும், அதிர்ச்சி. கதவு வெளியே தாழிட்டிருந்துச்சு. நான் கக்கூஸில் இல்லாததப் பாத்ததும் நாலாப்பக்கமும் தேடியிருக்கான். எங்கத் தேடியும் நான் கெடைக்கலேன்னதும், எல்லாத்துகிட்டயும் என்னைய காணோமுன்னு சொல்லிட்டான். சுத்துப்பத்தம் எல்லா சனங்களும் தேடினாங்க. விசயம் ஊர் முழுக்க கசிஞ்சு, ஊரே அல்லோலகல்லோலப் பட்டது. கொஞ்சம் பேரு தங்களுது மோட்டார் வண்டிகளை எடுத்துக்கிட்டு ஊரு முழுக்க சுத்தித் திரிஞ்சு தேடுனாங்க. ஊரில் ‘யாரோ ஒருத்தன் ஒரு தலையாக காதலிச்சிட்டு, நான் அவனுக்கு கெடைக்காம போன வருத்தத்துல சமயம் பாத்து என்னைக் கடத்திட்டு போயிட்டான்னும், எவனோ மாப்பிள்ளயப் பழி வாங்க பெண்ணைக் கடத்திட்டு போயிட்டான்னும்’ அவரவர்களுக்கு பட்டதப் பேசினாங்க. வம்பு பேசியும், வலைபோட்டுத் தேடியும் எந்த பயனும் ஏற்படல. ரவிக்கு அன்னைய ராத்திரி சிவராத்திரி ஆயிட்டு. ஆனா, அன்னைக்கு எனக்கும் வினோத்துக்கும் மொதலிரவு நடந்துச்சு, ரவி கட்டின தாலியோடவே.

 

வினோத் எனக்க கூடப் படிச்சவன். அவனுக்க அப்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர். வினோத் ஒரு ஃபேமிலி ஃப்ரெண்ட் கணக்கா அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவான். அதனாலயே, எங்க வீட்டுல பூரா பேத்துக்கும் அவனத் தெரியும். கல்யாணத்துக்கு வந்த என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் போன்ல கூப்பிட்டு விசாரிச்சாக. எல்லாரும் அவங்கவங்களுக்கு தெரிஞ்சதச் சொன்னாங்க. வினோத்தோட போன் மட்டும் சுவிட்ச் ஆப்ல கெடந்தது. அதனால, எல்லாருக்கும் அவன் மேலதான் சந்தேகம் வந்துச்சு. அதோட முக்கியமா நடந்துக்கிட்டுருந்த எடப்பாடு பூராம் வினோத்தோட அப்பாவுக்கும் தெரிஞ்சு போச்சு, அவர் போலீஸ்காரர்னதால அவரோட அதிகாரத்த வச்சு, எங்கள ஒடனே கண்டு புடிச்சுட்டாரு. வினோத்தோட அப்பாவும் வினோத்தும் தனியே சந்திச்சு பேசிட்டாங்க. என்ன பேசிக்கிட்டாங்க, ஏது பேசிக்கிட்டாங்கன்னு எனக்கு ஒன்னும் தெரியாது. அதுக்கப்புறம், வினோத்தோட அப்பா என்னைத் தனியா கூட்டிட்டு போயி “வினோத் உன்னோட காதலுல உறுதியா நிக்கான்…ம்மா. உடனே, உங்க ரெண்டு பேத்துக்கும் என் அதிகாரத்த வெச்சு கல்யாணம் செஞ்சு வச்சுரலாம். ஆனா, நீ வேற சாதி, நாங்க வேற ஜாதியாக இருக்குறதால, அது அம்புட்டு லேசானது இல்ல. ஒரு அப்பாவா நான் பயப்படுதேன். இருபத்தொன்னாம் நூற்றாண்டு, இங்க சாதி எங்கன இருக்குன்னு நானும் நீயும் சொல்லலாம். இங்க பூரா பேத்துக்கும் அந்த மனநெல வந்துருக்குதான்னு கேட்டா? அது கேள்விக்குறிதான். ஒரு போலீஸ்காரன்னா இருந்துட்டு இப்புடி பயப்படுறீங்களேன்னுகூட நீ நெனக்கலாம். என்னதான் நாட்டுக்கு ராசாவா இருந்தாலும், பெத்த பிள்ளைக்கு அப்பன்தான? எது போனாலும் திரும்பி வரும், உசிரு போனா திரும்பி வருமா? இது வெறும் சாதிப்பிரச்சன மட்டும் இல்ல. சட்டப்படி, நீ இன்னொருத்தரோட பொஞ்சாதி. இந்த பிரச்சனய சட்டப்படிதான் கையாள ஏலும். ஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ணும்மா. உன் வீட்டுலயும், அந்த மாப்பிள்ளயோட வீட்டுலயும் கொதிச்சிப் போயி கெடப்பாங்க. பூரா பேத்தோட கோபமும் கொஞ்சம் தனியட்டும் அதோட வினோத்துக்கும் ஒரு நல்ல வேலைக் கெடச்சிரட்டும். அப்புறம், உங்க வீட்டுல வந்து பேசி ரெண்டு பேத்துகும், நானே கல்யாணம் பண்ணி வெக்கேன். நானு சர்க்காரு உத்தியோகத்துல இருந்துக்கிட்டு இப்பம் போயி பேசுறது, எரியுற கொள்ளியில எண்ணெய் ஊத்தினது மாதிரி ஆயிடும், அவ்ளோ சரியா வராது. இப்ப, நீ வீட்டுக்கு திரும்பிப் போறதுதான் வினோத்தோட வருங்காலத்துக்கு நல்லது.” என்றார். நான் மொதல மறுத்தாலும் அப்புறம், அவர் சொன்னத ஏத்துகிட்டு, எங்க வீட்டுக்கு திரும்பிப்போக சம்மதிச்சேன். வினோத்தோட அம்மா என்னை ஒரு வாடக வண்டியில கூட்டீட்டு வந்து எங்க வீட்டு பக்கத்துலே கொண்டு இறக்கிவிட்டுட்டு, உடனே கார எடுத்துட்டு வெரசலா கிளம்பிப் போயிட்டாங்க. ‘மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு திருமணம், மணப்பெண் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓட்டம், முதல் இரவு பிடிக்காமல் ஒடிப்போன மணப்பெண் பொழுது விடிந்ததும் திரும்பி வந்தார்.’ என்று பேப்பர்ல வகைவகையான தலையங்கம் வச்சு கதய இட்டுக்கட்டி விட்டுடாங்க. அப்புறம் ’போலீச வெச்சு நடவடிக்கை எடுத்ததுல, மனநல மருத்துவரால பெண்ணுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு முடிவு செய்யப்பட்டு மனநலம் காப்பகத்துல அடைக்கப்பட்டார்னு சேதி போட்டு, என்னை இங்க கொண்டு வந்து சேத்துப்புட்டு போயிட்டாங்க. நானும், இங்க வந்து உங்க கையால வராத நோயிக்கு மருந்து தின்னுபுட்டு கெடக்கேன்”  என்றாள்.

 

“சரிம்மா, நீயும் வினோத்தும் லவ் பண்ணுனீங்களா?”

 

“ஆமாம் சிஸ்டர். நாலு வருஷமா லவ் பண்ணுதோம்”

 

“அப்புறம் ஏன் ரவிய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச? வீட்டுல சொல்லி அவனயே கல்யாணம் பண்ணிருக்களாமே?”

 

“வினோத்தும் நானும் வேற வேற சமூகத்தச் சேர்ந்தவங்கதனால, எங்க வீட்டுல பேச முடியாம போச்சு”

 

“சரி, ரவி உனக்கு சொந்தமா? அசலா?”

 

“அசல்தான்”

 

“உன்ன பெண் பார்க்க வந்தாங்கல்ல, அதுக்கும் கல்யாணத்துக்கும் எத்தனை நாள் இடைவெளி கெடந்துச்சு?”

 

“ஒரு மாசம்”

 

“அதாவது, முப்பது நாள் இடைவெளி”

 

“ஆமாம்”

 

“சரி, இந்த முப்பது நாளுல வராத தைரியம், இன்னொருத்தன் உன் கழுத்துல தாலி கட்டுனதுக்கு பொறவு, எப்புடி வந்துச்சு?”

 

“…..”

 

“உன்கிட்ட மட்டும் இல்ல எந்தப் பொண்ணுகிட்டயும் இதுக்கு பதில் கெடையாது. சும்மா சொல்லக்கூடாது, நீ அழகிதான். இம்புட்டு நாளும் உன்ன மேக்கப் இல்லாம பாத்துருப்பான், உன் அழகு அவனுக்கு தெரிஞ்சிருக்காது. ஒரு மணப் பெண்ணுக்கான அலங்காரத்துல, நக நட்டோடப் பாத்ததும், இப்புடியொரு பேரழகிய தவற விடுதோமேன்ன நினைப்பு வந்துருக்கும், உடனே வந்து பேசி உன் புத்திய கழுவிட்டான். நீயும், அவன் சொன்னதெல்லாம் நெசம்னு நம்பி கிளம்பிப் போயிட்ட.  இப்பும், அவனோட அப்பா அவன் புத்திய கழுவுனதுல உன்ன மறந்துட்டான்”

 

“…..”

 

“உன்ன கேட்டா, எனக்கு அவன அம்புட்டு பிடிக்கும்னு சொல்லுவ. வேற என்ன சொல்லுவ? என்னதான் சொல்ல தெரியும்? நீ யோசிக்காம செஞ்ச இந்த காரியத்தால உனக்கு ஏதாச்சும் நல்லது நடந்துச்சா?”

 

“இல்ல.”

 

“வினோத்தோட அப்பா சொன்ன மாதிரி, உங்க அப்பா, அம்மாகிட்ட வந்து பேசி உன்ன கலியாணம் செஞ்சுக்குவாங்கன்னு நம்புறீயா?”

 

“…..”

 

 “அதயெல்லாம், உண்மைன்னு நம்புனேன்னா, உன்ன மாதிரி ஒரு முட்டாள் உலகத்துலயே கிடையாது. வினோத்து அவனப்பத்தி மட்டுமே யோசிச்சிருக்கான். நீ அவன் பேச்ச நெசம்ன்னு நம்பி உன் எதிர்காலத்தத் தொலச்சிட்டு வந்து நிக்க. நீ படிச்சவதான? இந்த உலகத்துல எல்லாமே ரெண்டு ரெண்டாவே படைக்கப்பட்டிருக்கு. நாம யோச்சிச்ச மாதிரி ஒரு காரியம் நடந்தா, அது நமக்கு அதிஷ்டம். ஒரு கெடுதலும் இல்ல. இதே எதிர்மாறா நடந்தா, என்ன ஆவோம்னு, ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க? அப்புடி நீ யோசிச்சிருந்தா? இங்க வந்து நின்னுருக்க மாட்ட. பொண்ணுங்ககிட்ட கூடுதலாகவும் கொறச்சலாகவும் பாக்கிற ஒரு விஷயம், ஆம்பள கொடுத்த எம்புட்டுப் பெரிய வலியையும் அவனோட அனுசரணையான ஒத்த வார்த்தையில தூக்கிப் போட்டுட்டு போயிடுறதுதான். சரி, அது படைப்பு சார்ந்த பிரச்சனை, படைச்சவனோட பிரச்சனை. இடையில ஒருத்தன் உன் கழுத்துல தாலி கட்டினானே! அவன் என்ன தப்பு பண்ணுனான். அவனுக்கு ஏன் இம்புட்டு பெரிய தண்டனைய கொடுத்த? அவன் பெண் கேட்டு வந்தப்பவே, பிடிக்கலன்னு சொல்லி இருந்தா, அவன் போக்குல போயிருப்பான். இது அவனுக்கு எம்புட்டு பெரிய அவமானம்னு தெரியுமா? அவமானத்த விடு. ஊருன்னு இருந்தா, நாலு பேரு நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. இதையெல்லாம், ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டா காலம் பூராம் சம்மணம் கொட்டிட்டுதான் அலையணும். ஆனா, பையனோட மனசு எம்புட்டு வெதும்பியிருக்கும்னு  உன்னால உணர முடியுதா? அதையெல்லாம், யாரு ஈடு கட்டுறது?”

 

“…..”

 

“இந்தா, இந்த மாத்திரய முழுங்கு”

 

“இம்புட்டுச் சொல்லியும், எனக்குமேல நம்பிக்க வரலயா சிஸ்டர்?” என்றாள் அதிர்ச்சியுடன்.

 

“பாரும்மா, நீ, செஞ்ச துரோகத்த நானும் செய்யணும்னு எதிர்பார்க்காத” என்றதும் அவள் கொடுத்த மாத்திரையை வாங்கி வாயில போட்டுத் தண்ணியக் குடித்தாள் ஜனனி. அடுத்த பேஷிண்ட்டிற்கு மாத்திரைக் கொடுக்க கிளம்பிச் சென்றார் நர்ஸ் கீதா.

*****

You Might Also Like

யார் சிறந்தவர்கள்?
ஆறறிவு..?!
நிலை மாறும் உலகில்
ஓடுகாலன்
மாயநிழல்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2026
Previous Article அசைவுகளின் அர்த்தங்கள்
Next Article தன்னைச் செதுக்கும் சிற்பி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?