அசைவுகளின் அர்த்தங்கள்
– சோ. ம. மலையமான் திருமுடிக்காரி
எழுத்தாளர் அழகர்சாமியின் “அசைவுகளின் அர்த்தங்கள்” என்ற கவிதைத் தொகுப்பைப் படித்தேன். அவை படித்’தேன்’ – தேன். கவிதைகளில் எதார்த்தங்களை எவ்வித பொய்ப்பூச்சும் இன்றி பக்குவமாய் பதிவு செய்திருக்கிறார்.
பல இடங்கள் எனது நினைவுகளை சுகமாய் சுமந்து சென்றதோடு மட்டுமின்றி, இழந்த கனவுகளை மீட்டெடுத்தது போலிருந்தது.
“எங்கள் ஊர்த் திருவிழா” என்ற கவிதை, என்னைப் போல பல்வேறு சூழ்நிலைகளால் ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் உணர்வுகளை பிரதிபலித்தது:
“பிழைப்புக்காக…
படிப்புக்காக…
வாழ்க்கைத் துணைக்காக
தேசம் தேசம் சென்றோரெல்லாம்
ஒன்று கூடும்
ஊர்த் திருவிழா…”
இது போன்ற சமூக நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை இழந்தவர்களில் என்னைப் போல பலரும் இருக்கின்றனர். பணி நிமித்தமாய் தள்ளி இருக்க வேண்டிய தருணத்தின் காரணத்தை இந்த வரிகள் வேதனையோடு விளக்குகின்றன.
“எப்படி புரிய வைப்பது
திருவிழாக்கள்
எங்கள் இதயத்தை இயக்கும்
ரத்த நாளங்கள் என்பதையை…”
GRV பள்ளி குறித்து “நற்பண்பில்” என்ற கவிதையில் வரும் வரிகள் இன்றளவும் என்னைப் போன்ற பலரையும் ஒரு சில தீய பழக்கங்களில் இருந்து காக்க உதவியவை:
“விற்பனையாளர் இல்லாத
அங்காடியில் நாங்கள்
நேர்மையை கற்றுக் கொண்டோம்…”
அப்போதெல்லாம் எனக்கு தெரிந்த திரும்பால் அழகு, ஜெ.சி. போன்ற சில பேருந்துகள் மட்டுமே இருந்தன என நினைக்கிறேன். பேருந்தில் ஏற முடியாமல் பல நாட்கள், எனது தாயின் ஊரான நாராயணபுரத்திற்கு நடந்து சென்றது நினைவுக்கு வருகிறது.
அதையும் மீறி கூட்டத்தில் ஏறிவிட்டால், சாலையோர கருவேல மரங்களின் தடவல் தவிர்க்க முடியாதது. அதை “தழும்பு” என்ற கவிதையில் பதிவு செய்த விதம் அழகு:
“மூச்சு விட முடியாத கூட்டத்தில்
பேருந்துப் படிக்கட்டில்
பயணம் செய்ததில்
சாலையோர கருவேலமுள்
உரசியதில் முதுகில்
ஒரு தழும்பு…”
“தை” என்ற தலைப்பில் உள்ள கவிதை, இன்றைய சமூக சூழலை பட்டவர்த்தனமாய் பதிவு செய்கிறது. மேலும் ஆடுகளின் பார்வையில் இருந்து தைப்பொங்கலை அழகாக கூறுகிறது:
“சாவின்
நிமிடங்களை
எண்ணிக் கொண்டிருக்கின்றன
கசாப்புக் கடையில் ஆடுகள்…”
நிறைய வரிகள் எனது நெஞ்சை தொட்டவை. அவற்றில் சில:
“மாறாதவை எல்லாம் மாறினாலும்
மனிதன் மனிதனாக
மாறவில்லை…”
“சின்னஞ்சிறு வயதில்
சிகரெட் என நினைத்து
சுவைத்த தட்டைக்குச்சி…”
“பட்டாம்பூச்சியாய்
பறந்து பறந்து விளையாடியது
வீட்டுப் பூச்சிகளை
விரட்டிப் பிடித்து விளையாடியது…”
“பேனா தொட்ட கையும் கூட
வேல் கம்போடு…”
“உயிரில்லா சிலைக்கு
ஒருநூறு போலீஸ் பாதுகாப்பு…”
இன்றைய சமூக நிலைகளையும் இவை பிரதிபலிக்கின்றன.
விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவரின் கவிதைகள் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றன.
இப்போது காவேரி கூட உலக வங்கி உதவியுடன் மாறிவிட்டது. ஆனால் நமது வைகை மட்டும் குப்பைகளால் தொப்பை போட்டுக் கிடக்கிறது. அதையும் உங்கள் கவிதை எதார்த்தமாகச் சொல்கிறது:
“ஆற்றில்
மூழ்கிக் குளிக்கத்தான்
ஆசை.
கூவத்திற்குப் போட்டியாய்
நம் ஆறுகளும்
மாறி இருக்கின்றதே…”
உண்மையை உரைப்பதற்கு நேர்மையும் கூர்மையும் அவசியம். அது எழுத்தாளர் அழகர்சாமியிடம் அபரீதமாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள் எழுத்தாளருக்கு.
-------------------------------------------------
அசைவுகளின் அர்த்தங்கள்
(கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர்: மு. அழகர்சாமி.
வெளியீடு: அன்புநிலா பதிப்பகம்.
பக்கம்: 64
விலை: ரூ.80/-
-------------------------------------------------
*****


