VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ஓடுகாலன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > ஓடுகாலன்
சிறுகதைகள்

ஓடுகாலன்

வசந்தி முனீஸ்
Last updated: May 24, 2026 6:44 pm
By
வசந்தி முனீஸ்
Published: December 24, 2025
3 Views
Share
12 Min Read
ஓடுகாலன்
SHARE

        அதிகாலை நான்கு மணிக்கு பம்பாயிலிருந்து மே மாதம் கோடை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இளங்கோவனின் தங்கச்சிகளும், மருமகப் பிள்ளைகளும், மாப்பிள்ளைமார்களும் அசதியில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

இளங்கோவன் பனங்காட்டுக்குப் போய் இட்லி நாடாரிடம் காலையில் குடிப்பதற்கு பெரிய தூக்குவாளி நிறைய சுண்ணாம்பு பதனியை வாங்கிக் கொண்டு, மாலையில் தன் மாப்பிள்ளைமார்கள் குடிக்க ‘கள்’ பதனிக்கும் அட்வான்ஸ் பணம் கொடுத்துவிட்டு, பனையோலையில் பட்டை பிடித்து அவரும் வயிறு முட்ட பதனியைக் குடித்துவிட்டு தூக்குவாளியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

            இளங்கோவன் வேலைக்குப் போனயிடத்தில் வேட்டிக்குள் மறைத்துக்கொண்டு வந்த மூன்று செந்தூரம் மாம்பழங்களை நீள நீளமாய் வெட்டி பதனிக்குள் போட்டதும், ஒரு விதமான நறுமணம் வீடெங்கும் வீசத் தொடங்கியது. அந்த மணம் நல்லா உறங்கிக்கொண்டிருந்தவர்களின் நாசிக்குள்ளிறங்கி அவர்களை உசுப்பிவிட்டது. அனைவரும் எழுந்து அவசரமாய் பல் துலக்கி ஆளுக்கொரு சொம்பு குடித்தனர். அவரின் மருமகப்பிள்ளைகள் மாம்பழத் துண்டுகளை ‘உச்சிக்கொட்டியும் நாக்கைச் சொட்டப்போட்டும்’ தின்றனர்.

            விருந்தினருக்காக முதல்நாள் ராத்திரியிலயே மூங்கில் கோழிக்கூடைக்குள் அடைக்கப்பட்ட இரண்டு வெடக்கோழிகளை இளங்கோவன் மனைவி பிடித்துக்கொண்டு வீட்டின் பின்புறம் நிற்கும் பூவரச மரத்தடியில் றெக்கைகளை ஒன்றோடொன்று பின்னி கோழிகளை தரையில் போட்டுவிட்டு, “யோவ்! சீக்கிரம் கோழிய வெட்டித்தாரும். நா இட்லி அவிக்கிறேன்” என்றாள்.

            இளங்கோவன் உஜாலா போட்ட வெள்ளைச் சட்டையைக் கழற்றி மரக்கிளையில் தொங்கவிட்டு விட்டு, அசையில் கிடந்த வாழைக்கறை  படிந்த ‘அரசன் சோப்’ கை பனியனையெடுத்துப் போட்டுக்கொண்டு கடலை மூடினைப் பிடுங்கி கொத்தாய்க் கடலையைத் திருகுவதுபோல் கோழித் தலைகளைத் திருகினார். கோழிகள் ‘கொக்’கென சிறு சத்தமெழுப்பி தலையைத் தொங்கப்போட்டன.

       பனையோலைகளை அள்ளிக்கொண்டு வந்து தீமூட்டி கோழிகளைத் தலைகீழாய் மயிர்கள் கருகும்வரை மாற்றி மாற்றிப் பிடித்து தீயில் வாட்டியெடுத்து, சூட்டோடு சூட்டாய் கால்களின் தோல்களை உருவியெடுத்து, உடம்பில் ஒட்டியிருந்த கருகிய மயிர்களையெல்லாம் கருவாலிகள் கரையான்கள் தின்பதுபோல் வேகமாய்ப் பிடுங்கிச் சுத்தம் செய்து, கட்டையில் வைத்து கறியை வெட்டருவாளால் வெட்டத் தொடங்கியவர். தன்னருகே நின்ற தன் மூத்த தங்கச்சியின் இளைய மகளிடம், “தங்கக்கட்டி, அத்தக்கிட்டப் போயி கறிக் கழுவ பாத்திரம் வாங்கிட்டு வாம்மா” என்றார். 

     கோழிக்குஞ்சுவைப்போல் குடுகுடுவென ஓடிப்போய் சருவச்சட்டியை எடுத்து வந்தவள், வெட்டிய கறிகளில் கிடந்த சிறிய  ஆரஞ்சு நிற உருண்டைகளைப் பார்த்து, “மாமா கோழி தேன் மிட்டாய்லாம் சாப்பிட்டுருக்குப் பாருங்க” என்றாள்.

இளங்கோவன் கல்லில் தீட்டிய கத்தியைப்போல் பளிச்சென்று சிரித்து, “இது தேனு முட்டாயி இல்ல தங்கம், கோழி முட்ட” என்றார். “மாமா கோழி முட்ட ஒயிட்டுலா! இந்தக் கலருலய்யா இருக்கும்”  என்றவளிடம், “முட்ட மொதல்ல இப்படித்தான் இருக்கும். நாளாவ நாளாவ வெள்ளத்தோடு வளந்து வயித்துக்குள்ளருந்து வெள்ளக்கலரா வெளிய வரும்” என்று சொல்லிக் கொண்டே சட்டியில் கறியை அள்ளிப்போட்டுக் கழுவி மருமகப் பிள்ளையிடம் கொடுத்தார். அவள் கறியில் கிடந்த ஆரஞ்சு நிற முட்டைக் கருக்களை மெல்ல அமுக்கிப் பார்த்தபடியே அடுப்படியிலிருந்த அத்தையிடம் போய்க் கொடுத்தாள்.

      இளங்கோவன் மனைவி அம்மியில் அரைத்த மசாலாவோடு கறியை சேர்த்து கொதிக்க வைத்ததும் கோழிக்கறி வாசம் தெருப்பூராம் மணத்தது. மாட்டைப் பத்திக்கொண்டு தெருவில் போன மாரியம்மாள், “ ஓ மைனியோ…! பம்பாயிலிருந்து ஆளுவ வந்தாச்சி போலிய. கறிக்கொழம்பு வாசம் காத்துல கமகமக்குதும்மா!” என்றாள்.

      “எ பலவட்ர முண்ட, கொதிகிதி போட்றாத. மாடு மேய்ச்சிட்டு வந்து கொழம்பெடுத்துட்டுப் போ!” என்று இளங்கோவன் மனைவி சொன்னதும் மாட்டு மணியைப்போல் சிரித்து மாடுகளை ஓட்டினாள் மாரியம்மாள்.

     கொதித்து வெந்த கோழிக்குழம்பினை அகப்பையில் கோரி இளங்கோவன் கையில் கொஞ்சமாய் ருசி பார்க்க ஊற்றினாள் அவரின் மனைவி. குழம்பை உறிஞ்சிக் குடித்துவிட்டு, “ஒரப்பெல்லாம் சரியா இருக்கு! உப்பு தான் கொஞ்சம் கம்மி. ரெண்டு உப்புப்போட்டு ஒரு கிண்டு கிண்டி எறக்கீரு போது”மென்று மனைவிடம் சொல்லிவிட்டு, மாப்பிள்ளைகளுக்கும் ருசிப்பார்க்க கிண்ணத்தில் கறியைக் கோரிக்கொண்டு போய்க் கொடுத்தார். அவரின் மாப்பிள்ளைகள் அவருக்கு சூட்கேஸிலிருந்து வெள்ளையனை எடுத்துக் கொடுத்தனர். அவர்கள் மொழியில் ‘வெள்ளையன்’ என்றால் பட்டச்சாராயம். வெள்ளையன் மூடியை கோழித்தலையைத் திருகியதுபோல் திருகி மோந்துப் பார்த்த இளங்கோவன், “நம்மூரு வெள்ளையனக் குடிச்சிட்டுத் தெக்குத் தெருவுல வந்தோம்ன்னா… வடக்குத் தெருக்காரி வாயாலயெடுத்துருவா! நாத்தம் அப்பிடி கொடலப்புடுங்கும். ஆனா, பம்பாயி வெள்ளையன் சும்மா கும்பாட்டக்காரி பூசுற பவுடர்மாறி கும்முன்னு இருக்குவோய்..!” என்று பாட்டிலில் பாதியை காலிசெய்து ஆவிப்பறக்க கோழிக்கறியை அள்ளி வாயில் போட்டு, ஆகா! “வெள்ளையன்னா பம்பாய் வெள்ளையந்தான் மாப்ள”  என்றார்.

        “வெள்ளனயே ‘வெள்ளையன்’ உள்ள போயிட்டாம்லா! இன்னைக்கிப் பூராம் ஒங்க மச்சான் குளிக்காம, கொள்ளாம ஒரே வீர வசனம் பேசிட்டுத்தான் திரிவாரு… நீங்க குளிச்சிட்டு  சாப்பிடுங்க. தொட்டியில தண்ணிப்புடிச்சி வச்சிருக்கேன்” என்றாள் இளங்கோவன் மனைவி.

    “என்னது தொட்டித் தண்ணியிலக் குளிக்கணும்மா? குளத்துலத் தண்ணி தெப்பு தெப்புன்னு கெடக்குது! நல்ல அலறக் குளிச்சிட்டு வரலா”மென்றார் இளங்கோவன்.

  “கோடையில கொளத்துலத் தண்ணிக் கெடக்கா! எக்கோவ்… மச்சானுக்கு வெள்ளையன் வேலச் செய்ய ஆரம்பிச்சிட்டான்” என்றனர் மாப்பிள்ளைமார்கள் இருவரும்.

    “தம்பியளா! அவரு சொல்றது நெசந்தான். நாந்தான் மறந்துட்டேன். போன வாரத்துக்கு முந்துன வாரம் வெள்ளிக்கெழமக் காலங்காத்தால புடிச்ச மழ மறுநாளு காத்தால வரைக்கும் கொளுத்து கொளுத்துன்னு கொளுத்தியெடுத்ததுல, கொளம் மேவி மறுவாலு விழுந்துடுச்சி. அப்பிடியொரு பேய் மழ!” இளங்கோவன் மனைவி சொன்னதும்… பம்பாய் ஊர்ல ஒரு பக்கெட்டுத் தண்ணியில் அழுக்கும் அசதியும் போகாமல் அரக்கப்பரக்க குளித்துவிட்டு வேலைக்கு ஓடியவர்கள், ஆளுக்கொரு தேங்காப்பூத் துண்டையெடுத்துக்கொண்டு முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் வேப்பங்குச்சியை முறித்து கடித்தபடி குளத்தைப் பார்த்து குளிப்பதற்கு குதிப்போட்டு இளங்கோவன் பின்னால் ஓடினர்.

      வயிறு பெருத்த கர்ப்பிணிப் பெண்போல் தண்ணீர்ப் பெருகி குளம் கடல்போல் காட்சியளித்தது; கரையில் ஆவாரம்பூவும் காட்டுமல்லியும் அழகழாய்ப் பூத்துக் கிடந்தன; செங்கா நாரைகள்  தன் நீள மூக்கினை குளத்து நீரிலிட்டு சல்லடை போட்டு இரையைத் தேடிக்கொண்டிருந்தன; வானில் கார்மேகங்களைப்போல குளத்தில் நீர்காகங்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன; பெண்கள் குளிக்குமிடத்திலுள்ள ஆலமர விழுதுகளில் அம்மணமாய் சிறுவர்கள் ஊஞ்சலாடியபடி குளத்தில் குதித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். மஞ்சள் பூசும் பெண்களைக் கண்டு பகலிலேயே தவளைகள் இனப்பெருக்கக் காலக் குரலை இடைவிடாது எழுப்பிக் கொண்டிருந்தன; கெண்டையும் கெளுரும் பெண்களின் கால் கடித்த போதையில் கரையில் தள்ளாடியபடி நீந்தின; ஆலமரத்தின் மறைவில் உடைமாற்றும் பெண்களைக் கண்டு உச்சானிக் கொப்பிலிருந்த ஆண் கிளிகளும் ஆண் மைனாக்களும் பழங்கொத்த மறந்தன. ஆண்கள் குளிக்குமிடத்தில் பறவைகளில்லை; நாரைகளில்லை. பாவம்…! சதுரவடிவ  சலவைக்கல். மூர்க்கமான முதியவரிடம் மூஞ்சி முகரையெல்லாம் அழுக்கு வேட்டியால் அடி வாங்கிக்கொண்டியிருந்தது.

பால்போல பெருகிக் கிடந்த குளத்துத் தண்ணீரைப் பார்த்ததும் இளங்கோவனும் அவனின் மாப்பிள்ளைமார்களும் பால்யகாலத்துக்குள் விழுந்தனர். கண்ணாடித் தம்ளரில் நுரை பொங்க டீ ஆத்தித் தரும் டீ மாஸ்டரைப்போல்   வெயில் சூடாக்கிய குளத்துநீரை ஆத்தி ஆத்தி கரையில் நுரை சேர்க்கும் அலைகள்மீது சிறு சப்பைக் கல்லையெடுத்து பெரும் வேகத்துடன் எறிந்தனர். முதல் மாப்பிள்ளையின் சப்பைக்கல் இரண்டு முறையும், இரண்டாவது மாப்பிள்ளையின் கல் மூன்று முறையும் துள்ளியோடும் விட்டில் பூச்சிப்போல் அலைகளில் துள்ளி தண்ணீரில் மறைந்துக் கொண்டது. “ யே… எங்கல்லுந்தான்  மூட்டயடிச்சது. ஓங்கல்லு ரெட்ட” என்று ஒருவருக்கொருவர் சிறுவர்களைப்போல் செல்லமாய் சண்டையிட்டு, தரையில் கால்படாமல் கரையில் துள்ளிக் குதித்தனர்.

      முதல் மாப்பிள்ளை சப்பைக்கல்லையெடுத்து இளங்கோவனிடம் கொடுத்து, “மச்சான்! நீங்க எறிங்க. ஒங்கக் கல்லு எத்தன அடிக்கிதுன்னு பாப்பு”மென்றான். இளங்கோவன் கல்லை வாங்கிக்கொண்டு, கையை பின்னாலிழுத்து வேகமாய் எறிந்தார். கல் அலைகளில் ஆறுமுறை கர்ணமடித்ததைப் பார்த்து அதிசயித்த மாப்பிள்ளைமார்கள், மச்சானை மார்புக்கு மேல் தூக்கிப் பாராட்டினர்.

    இளங்கோவன் சிரித்தபடி, “பின்ன சின்னவயசுல கொளத்துல, கெணத்துல கண்ணு செவக்க செவக்க என்னா ஆட்டம் போட்டுருக்கோம். அதெல்லாம் கண்ண மூடுறவரைக்கும் ஒண்ணும் மறக்காது!” என்று கண்ணை மூடி குளத்திற்குள் முங்கியவர் கால்மணி நேரமாகியும் எழுந்திருக்கவில்லை; மாப்பிள்ளைகள் இருவரின் கண்ணுக்கும் தென்படவேயில்லை.  கரையிலிருந்தவர்கள் காணாமல் போனவரைத்தேடி தண்ணீருக்குள் அவர் முங்கியயிடத்தில் முங்கி முங்கிப் பார்த்தனர். கண்ணுக்கெட்டும் தூரம்வரை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ மச்சான்! மச்சான்! “ என இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கேட்கும்படி கதறினர்.

        இருவரின் கதறலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுமாடுகள் தலைதூக்கிப் பார்த்து ‘ம்… மா…’ என்றது. நீர்காகங்களும் நீளலகு கொண்ட நாரைகளும் ‘கியாவ் கியா’வென குளத்தைவிட்டு கூட்டம் கூட்டமாய் பறந்துப் போயின.  குளத்தில் ஒரு சுடுகுஞ்சியைக் கூட காணோம். இருவரும் செய்வதறியாமல்  திகைத்து, கண்ணீருடன் எழுந்து, கவலையோடு கரைக்கு விரைந்தனர். அவிழ்த்து வைத்த ஆடைகளை ஈரத்தோடு கட்டிக்கொண்டு, கரைமேல் ஏறி நின்று அக்கம்பக்கம் ஆடுமாடு மேய்ப்பவர்களை கத்திக் கூப்பிட்டனர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நம்பி, ஆட்டின் கொம்பின் மேல் பறந்து பறந்து உக்காரும் தும்பிபோல பறந்தோடி வந்தார்.

     “அண்ணே! எங்க மச்சான் கொளத்துல முங்கி அரைமணி நேரத்திற்கு மேலாச்சு. ஆளக்காணும். ஏறங்கிக் கொஞ்சம் என்னன்னு பாருங்க; எங்க மச்சான காப்பாத்துங்கண்ண” இருவரும் நம்பியிடம் குழவிக் கொட்டிய ஆட்டைப்போல் கதறினர்.

    “என்னப்பா நீங்க ஆள் வளந்தளவுக்கு அறிவு வளரலயே. தெரியாத ஊருல இப்படி தெரியாத்தனமா குளிக்கலாமா? இது மோசமான கொளம் லா. எத்தனப்பேர காவு வாங்கிருக்கு! உள்ளூருக்காரங்க யாருட்டயாவது கேக்கக்கூடாதா. இப்படி கேக்காமக் கொள்ளாமக் குளிச்சி, வம்பா ஒரு ஊசுர பறிகொடுத்திட்டியளப்பா!” நம்பி சொன்னதும், “அண்ணே எங்களுக்குத்தான் வெளியூரு. எங்க மச்சானுக்கு இந்த ஊரு தான். பேரு எளங்கோவன்” – குன்னிமுத்துப்போல் கருவிழியைத் தவிர வெள்ளை விழியெல்லாம் இரத்தமாய் சிவக்க அழுதபடி சொன்னார்கள்.

       “ஏ என்னப்பா சொல்றிய… எளங்கோ மாப்பிள்ளையளா நீங்க?”

      “ஆமாங்கண்ணே”

      “காலங்காத்தாலயே ஒங்க மச்சானுக்கு ‘வெள்ளையன் ’ எதும் குடுத்தீயளா?!”

       “முழுப் பாட்டுலுக் குடுத்தோம். அரப் பாட்டுலுக் குடிச்சிட்டாரு.”

       “பாவிமனுசன் அதான் போதக் கெறக்கத்துல பழசலாம் மறந்து இப்படி புத்திக்கெட்டு போய்ச்சேந்துட்டான்!“ தொரட்டிக் கம்பையும், தூக்குச் சட்டியையும் கீழே வைத்துவிட்டு, கட்டியிருந்த கைலியில் கண்ணீரைத் துடைத்தார் நம்பி.

    “அண்ணே கொஞ்சம் கொளத்துலறங்கிப் பாருங்க. தயவுசெஞ்சி எங்க மச்சான செத்துட்டாருன்னு மட்டும் சொல்லாதீங்க. “ மீண்டும் அழத்தொடங்கினர்.

     “தம்பியளா வெளியூருக்காரனா இருந்தா இந்நேரம் நீங்க சொல்றதுக்கு முன்னே கொளத்துல ஏறங்கியிருப்பேன். ஆனா, எளங்கோ இந்தக் கொளத்தப்பத்தி நல்..லா தெரிஞ்ச உள்ளூருக்காரன். அதுமட்டுமில்லாம அம்பதடி கெசமுள்ள கெணத்துல வுழுந்த பொருள அஞ்சே நிமுசத்துல எடுத்துட்டு வந்துருவான். அப்படியாப்பட்ட நீச்சல்காரங் இந்த இடுப்பளவுத் தண்ணில முங்கிட்டு இன்னமும் வெளிவரலன்னா… இது அவ வேல தான். “

     “யாருண்ணே அவ?“ குளிரிலும் பயத்திலும் நடுங்கியபடி கேட்டனர்.

     “அவ பேரு… ரெண்டு புருசங்காரி. அவ செத்து பத்து பதினைஞ்சி வருசமிருக்கும். அவளுக்கு அந்த விசியத்துல மத்த பொம்பளயளவிட ஆர்வம் ஜாஸ்தி. அதனால மொத புருசன் அதுக்குச் சரிப்படாமப் போனதால, ரெண்டாவதா ஒருத்தனச் சேத்துக்கிட்டா. அவனும் அதுக்குச் சரிப்படாமப் போனதால, மூணாவதா ஒருத்தங்கூட மூஞ்சி கருக்கல்லுல இந்த கொளத்துப் பக்கம் அடிக்கடி ஒதுங்கிட்டுயிருந்தா. இவ இப்படி ஒதுங்குறது ஊருக்குத் தெரிஞ்சி, ஊரு வாயிலருந்து ரெண்டாவது புருசன் காதுக்குப்போயி, அவன் வாயிலருந்து மொத புருசன் காதுக்குப் போனது. ஒருநாளு ஒண்ணும் ரெண்டும் ஒண்ணு சேந்து மூணையும் அவளையும் போட்டுத்தள்ள, அவுங்க ரெண்டுபேரும் ஒதுங்குறதுக்கு முன்னாடியே போயி இவனுவ கொளத்தாங்கரையில ஒளிஞ்சிக்கிட்டாணுவ. அவனும் அவளும் ஆளுவ யாராவது வர்றாங்களான்னு நோட்டம் பாத்துட்டு ஒடமூட்டுக்குள்ள ஒதுங்கவும், இவனுவ ரெண்டுபேரும் பையப் போவாம. மாடு களஞ்சா மடத்தனமா ஓடும, அந்தமாறி ஒடமூட்டப் பாத்து ஓடியிருக்காணுவ. மூணாவதுக்காரன் முத்தம் குடுக்கும்போது என்னடா சத்தமுன்னு எட்டிப் பாத்துட்டு எடுத்துட்டான் ஓட்டம்! இவ ரெண்டு புருசங்காரனையும் ரெண்டு கண்ணாலப் பாத்தப் பயத்துல ரெண்டு காலும் நடுநடுங்க, எப்படியும் இவனுவக்கிட்ட மாட்னா அடிச்சே கொன்னுருவாணுவன்னு, அவளே இந்தக் கொளத்துல வுழுந்து செத்துட்டா! அன்னையிலிருந்து  வாட்ட சாட்டமான ஆளுவ யாராவது குளிக்க வந்தா, தண்ணிக்குள்ள இழுத்துக்கிட்டுப் போயிடுவா. “

   “அண்ணே! நீங்க சொல்றமாதிரி அந்த வெளங்காதவ வாட்ட சாட்டமான ஆளத்தான இழுத்துட்டுப் போணும். எதுக்கு வயசான எங்க மச்சான இழுத்துட்டுப் போனா?!“ இளங்கோவன் முதல் மாப்பிள்ளை பெருங்கோபம் கொண்டு நம்பியிடம் கேட்டான்.

     “அதொரு பெரிய ரகசியம். ஊருக்குள்ள எவனுக்கும் தெரியாது. எனக்கு மட்டுந்தான் தெரியும். ஒங்கக்கிட்டச் சொன்னா ஊருக்காரணுவக்கிட்ட ஒளறிற மாட்டியள“  நம்பி பம்மியபடி கேட்டார்.

     “சாமி சத்தியமா, எங்கம்மா சத்தியமா, எங்கப் புள்ளயளு மேல சத்தியமா யாருட்டயும் சொல்ல மாட்டோம்.“

 நம்பி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு,  “ரெண்டு புருசங்காரி மூணாவதா ஒருத்தனக் கூட்டிட்டு ஒட மூட்டுக்குள்ளப் போனதா சொன்னமில்லா“

     “ஆமா சொன்னீங்க“ இருவரும் ஒருசேர சொன்னனர். அடுத்து நம்பி வாய்த்திறக்கும் முன், “அண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். ரெண்டு புருசங்காரி தப்பானவளாயிருந்தாலும் நம்பி வந்த ஒரு பொம்பளய நடுக்காட்டுல உட்டுட்டு ஓடுன அந்த ஓடுகாலனுக்கெல்லாம் நல்ல சாக்காலமே வராதுண்ணே!“ என்றான் இளங்கோவனின் இரண்டாவது மாப்பிள்ளை. 

     “ஓன் வாயில சீனிய அள்ளிப் போட! கரைட்டா சொன்ன. அதான் அவனுக்கு இப்படியொரு சாக்காலம் வந்துருக்கு“ நம்பி சொன்னதும் இளங்கோவன் மாப்பிள்ளைமார்கள் இருவரும் திகைத்துப் போய், “என்ன சொல்றீங்கண்ண? நெசமாவா!!“ என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கரையில்  உட்கார்ந்து விட்டனர்.

      “ஆமாப்பா, அன்னைக்கி ஒட மூட்டுலருந்து ஓடுனது வேற யாருமில்ல ஒங்க மச்சான் எளங்கோ தான். அவன் உசுரயெடுக்கத்தான் ரொம்ப நாளா… காத்துட்டுருந்தா! இன்னைக்கி வசமா அவக்கிட்ட மாட்டிக்கிட்டான்.“  நம்பி கழுத்தில் கிடந்த அழுக்குத்   துண்டையெடுத்து அவுக்கென்று வாயில் திணித்துக் கொண்டார்.

    தண்ணீருக்குள் நீண்ட நேரம் மூச்சடக்கும் இளங்கோவனால் அதற்குமேல் சிரிப்பினை அடக்க முடியாமல் பூவரசு மரத்தின் கிளையிலமர்ந்து புணில்(தவிட்டுக்) குருவிகள் கத்துவதுபோல் கும்மமாகயிருந்த நொச்சி மூட்டிலிருந்து சிரித்தபடி வெளியே வந்தார். மச்சானைப் பார்த்த மாப்பிள்ளைகள், “மனுசன்னா நீரு! கொஞ்ச நேரத்துல எங்க கொலய நடுங்கிப் போச்சி. ஆமா… கொளத்துல முங்குன நீரு கரைக்கி எப்படி வந்தீரு?“ என்றனர்.

   “நீங்க ரெண்டுபேரும் என்னத்தேடி கொளத்துல ஏறங்குனதும், நா அந்தா… கரைய ஒட்டியிருக்குற ஊமத்தஞ்செடிகளுக்குப் பின்னால எந்துச்சி அப்புமே வெளில வந்துட்டேன்“ என்று இளங்கோவன் ஊமத்தம் பூவாய் சிரித்து, “சின்னப்பயலுவக்கூட நம்பி சொன்ன கதைய நம்பாம, யாரு காதுலப் பூச்சுத்துறீருன்னு எதுத்துக் கேட்டுருப்பானுவ. ஆனா, நீங்க மல மாடுவமாறி வளந்தும் அவன் வுட்டக் கதயைக் கேட்டு, ரெண்டுபேரும் மண்டைய மண்டைய ஆட்டுனதப்பாத்தா எனக்கு சிரிச்சி வயிறே வலிச்சிப்போச்சி. சின்ன மாப்ள என்னன்னா, அந்த ‘ஓடுகாலனுக்கெல்லாம் நல்லச் சாக்காலம் வராது’ன்னு சாவம் விடுறாரு. நானாவோய் ‘ஓடுகாலன்’ ஒக்காப்புண்ணாக்கு! “ என்று சின்ன மாப்ள நடுமுதுகில் சிறிய குத்தொன்று விட்டார் இளங்கோவன்.

   அவர்களும் சிரித்துக்கொண்டே, “எங்களுக்கும் தெரியும் அவரு கத தான் உட்டாருன்னு. நாங்க ஒண்ணும் அத நம்பலயே” என்ற மாப்பிள்ளைமார்களை, “மண்ணாங்கட்டி! முட்டாயிக் கேட்டு அழுது மூஞ்சி மோரையெல்லாம்  வீங்கிப்போன சின்னப்புள்ளையப்போல ஒங்க மூஞ்சிங்கப் போனப்போக்க தான் மறைஞ்சிருந்து நா பாத்தன”- மீண்டும் முதுகில் ஒண்ணு போட்டார் இளங்கோவன்.

    “எடே எளங்கோ! ஓன் மாப்பிள்ளைமாருவ இப்படி வெள்ளந்தியாயிருந்தா எப்படிடே மண்ணள்ளிப் போட்டா மண்ணு கீழ உளாத பம்பாயி ஊர்ல காலந்தள்ளுறாணுவ?“ என்று சூடான பொறிக்கான் சட்டியில் அரிசியைப் போட்டதுபோல் சுருசுருவென்று சிரித்தார் நம்பி.

    “ஆனா, நீயிருக்கீய… ஐயன் மந்திரம் சொல்லுறமாறி ரெண்டு புருசங்காரி, அது இதுன்னு சும்மா கதைய அடிச்சிவுட்டு, படிச்சப் பயலுவளையே ஏமாத்திப்புட்டிய. ஓங்கிட்ட கொஞ்சம் உசாராத்தான் இருக்கனும் பா“ என்று குளத்தில் தண்ணீர்க் கோரிக் குடித்துவிட்டு மாப்பிள்ளைமார்களைக் கூட்டிக்கொண்டு குளத்துக் கரையிலிருந்து கீழிறங்கினார் இளங்கோவன். தண்ணீர்க் குடிக்க கரையிலேறின ஆடுகள். 

PrevPreviousநேசம்
NextமலடுNext

You Might Also Like

மாயநிழல்
மூன்றாம் பாலினம்
ராட்சசி
பொம்மிகளின் கலர் பென்சில்கள்
புதிய தொடக்கம்…
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் டிசம்பர் 2025
Previous Article நேசம்
Next Article மலடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?