பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு படியிறங்கி வெளி வந்த சரண் திரும்பி கோபுரத்தை அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டு கொண்டான். கோவில் வாசலில் இருபுறமும் வயதான ஆண்களும் பெண்களுமாய் யாசகம் கேட்பதற்காக கையில் தட்டுடன் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். கோவிலில் இருந்து வெளி வருபவர்களிடம்
“ஐயா, அம்மா” என்றபடி தங்கள் கையிலிருந்த தட்டை நீட்டினார்கள். சிலர் காசு போட்டார்கள். சிலர் கண்டும் காணாமல் அவர்களை கடந்தார்கள்.
மற்றவர்களோடு சரணும் அவர்களை தாண்டுகையில் வலது பக்கம் அமர்ந்திருந்த வயதான மூன்று பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தன் கையில் வைத்திருந்த தட்டை அவன் முன்னே நீட்டி “யப்பா தர்மம் பண்ணுப்பா” என்றார் கெஞ்சலாக. மற்ற இருவர் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.
சரண் பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து தர்மம் கேட்ட பெண்மணியின் தட்டில் போட்டு விட்டு திரும்ப எத்தனிக்கையில் பேசிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ” “யப்பா. யப்பா….. எனக்குப்பா” என்றபடி தட்டை நீட்டி எழுந்தே நின்று விட்டார். கொடுக்காவிட்டால் அவன் கூடவே பின் தொடர்ந்து வருவார் போலிருந்தது.
தனது சட்டை பாக்கெட்டை பார்த்தான். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும் இருந்தது. ஒரு பத்து ரூபாயை எடுத்து , வலுக்கட்டாயமாக கேட்ட பெண்மணியின் தட்டில் போட்டவன், அங்கிருந்து உடனே அகன்று விடும் எண்ணத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். மூன்றாவது பெண்மணியும் கேட்டு விட்டால் என்னாவது? பஸ்சுக்கு சில்லறை வேண்டும்.
ஆனால் அந்த பெண்மணி அப்படியொன்றும் குரல் கொடுக்கவில்லை. அவனை ஒரு பார்வை பார்த்தபடி அமைதியாக இருந்து விட்டார். இரண்டு பேருக்கு கொடுத்திருகிறான். நாமளும் போய் எப்படி கேட்பது என்று அவர் நினைத்திருக்க கூடும். இரண்டு பேருக்கு கொடுத்தவன் நமக்கு கொடுக்காம போறான் பாரு என்றும் பொருமியிருக்கலாம்.
இப்படியாக சரண் எண்ணமிட்டபடி நான்கைந்து கடைகள் தாண்டி வந்த திருப்பத்தில் திரும்பும்போது தான் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது.
‘ஏன்டா. மூன்று பேர்ல மிச்சமிருப்பது ஒரு பெண்மணி தான். உன் பாக்கெட்டில் இருந்த முப்பது ரூபாயில் மிச்சமிருப்பதும் பத்து ரூபாய் தான். அந்த பத்து ரூபாய் அவருக்கு கொடுத்திருக்கலாமே. ஏன் ஐநூறு ரூபாய் உன்னால சில்லறை மாத்திக்க முடியாதா?. இல்லே மாத்தாம தான் இருந்திட போறியா? ‘
மனசாட்சியின் இந்த கேள்வி அவனை திக்குமுக்காட வைக்கவே அவனது கால்கள் மீண்டும் கோவில் வாசலை நோக்கி நடை போட்டது.
கோவில் வாசலுக்கு வந்த சரண் மிச்சமிருந்த அந்த பத்து ரூபாயை எடுத்தான். அவன் பணம் எடுப்பதை பார்த்த எதிரில் இருந்தவர்கள் எனக்குப்பா என்று கோரசாக குரல் கொடுக்க ஆரம்பிக்க, அருண் யாருக்கு பணம் கொடுக்காமல் விட்டு வந்தானோ அந்த பெண்மணியின் அருகில் சென்று அவரது தட்டில் பத்து ரூபாயை போட்டான். சரணை நிமிர்ந்து பார்த்த அந்த பெண்மணி கேட்டார்.
” என்னப்பா மனசு கேக்காம வந்துட்டியா?”


