இன்று பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டிய தலையாயப் பிரச்சினையாக உருவாகி இருப்பது ஒன்றுண்டு. அது நமது சிறு குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் நேரம் காலமின்றி அலைபேசியில் ஆழ்ந்துகிடக்கும் அவலம் தான்.
ஆறு மாதக் குழந்தைக்குக் கூட, கண் முன்னே ஏதேனும் காட்சியுடனான பாடலை அலைபேசியில் காட்டிவிட்டால் போதும்…..
அமைதியாக, இமை கூட அசையாமல் தாய் ஊட்டுவதை அழும்பு செய்யாமல் உண்டு விடும்.
நம் தாய்மார்களும் குழந்தைக்கு சோறூட்டும் நேரத்து மல்லாட்டத்தை தவிர்க்கவும் குழந்தை வயிராற சாப்பிட்டால் போதுமென்றும் அலைபேசியை குழந்தை கையில் தந்து விடுகிறார்கள்.. அங்கேயே ஆரம்பிக்கிறது சனி!
இன்று பெரும்பாலான குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதில்லை. புதிய நட்புகளைத் தேடுவதில்லை. அம்மா அப்பா, தாத்தா பாட்டி என யாரிடமாவது அலைபேசியைப் பெற்று பரபரவென அதனுடன் ஐக்கியமாகிப் போகிறார்கள். லேசில் அந்த அலைபேசியை அவர்களிடம் இருந்து திரும்ப வாங்கவும் இயலுவதில்லை. பெரியவர்களிடம் நைச்சியமாகப் பேசி அலைபேசியை வாங்கிக் கொள்ளவும் கற்றுக்கொண்டு விட்டார்கள்.
பிள்ளைகள் வெளியே டியூஷன் போகையில், அவர்கள் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளவும் அவசரத்திற்கு அழைக்கவும் சில பெற்றோர் தன் பழைய அலைபேசியை அவர்களுக்குத் தந்து விடுவதும் நடக்கிறது.
கிடைத்தற்கரிய குழந்தைப் பருவத்தை, வாழ்க்கையின் அடித்தளமாக அமையப்போகும் பிள்ளை பருவத்தை இந்த அலைபேசி பலியாக்கி கொண்டு விடுகிறது என்பதை உணர்கிறோமோ?
அலைபேசிகளில் உள்ள எது குழந்தைகளை தன் வசம் ஈர்த்துப் பிடிக்கிறது? இதற்குப் பல காரணங்களை கூறலாம்.
முதலாவதாக, பெற்றோர் தம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே இல்லை. கணவன் மனைவியென இருவருமே அலுவலகப் பணி செய்ய வேண்டிய பொருளாதார தேவை இருந்தாலும், அவர்களும்கூட தங்கள் மிகுதி நேரத்தை அலைபேசியில் தான் செலவிடுகிறார்கள் குழந்தைகளுடன் அளவளாவ அவர்களுக்கு எஞ்சிய நேரம் என்ன இருக்கிறது?
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா பாட்டி என்று பெரியவர்கள் உடன் இருந்தார்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார்கள். கதைகள் சொல்லியும் பிள்ளைகளுக்கு ஆதரவாய் இருந்தும் அவர்களின் மன வளம் காத்தார்கள். இன்று பெரும்பாலான குடும்பங்கள் சாட்டிலைட் குடும்பங்களாகச் சுருங்கி விட்டன. யாவருமே தீவுகளாக சிதறி கிடக்கிறார்கள்.
அலைபேசியில் பல ‘ஆப்’புகளும் கேம்ஸ் எனப்படும் ஓயாத விளையாட்டுகளும் அவற்றின் கற்பனைக்கெட்டாத வண்ணச் சலனங்களும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி எழுச்சியூட்டுகிறது. அவை மூளையில் நிகழ்த்தும் ரசாயன மாற்றங்களால் டோப்பொமைன் சுரப்பிகள் அதீத உற்சாகம் தருகின்றன.
இந்த அலைபேசி ஈர்ப்பும் அதிக நேரம் அத்துடன் செலவிடுவதும் நம் பிள்ளைகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவகையாகும். இதனால் அவர்களுக்குப் பார்வை குறைபாடு, கண் பிரச்சனைகள், தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, கொடுங்கனாக்கள் போன்றவை ஏற்படுகின்றன.
கவனச்சிதறல் பிரச்சனையால் படிப்பில் ஆர்வமும் கவனமும் இழந்து குறைந்த மதிப்பெண்களே பெற்று குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள்.
தொடர்ந்து அலைபேசியை பார்ப்பதால் ஏற்படும் நேர விரயத்தால் படிப்பது, விளையாடுவது, நேரத்திற்கு சாப்பிடுவது குளிப்பது போன்ற சுகாதார அவசியங்களையும் புறக்கணிக்கிறார்கள்
செல்போன் மறுக்கப்பட்டு விட்டாலோ மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறார்கள். கோபப்படுதல், பொருட்களை தூக்கி எறிதல் என மனப்பிறழ்வின் ஆரம்பகட்டத்தை தொடும் எல்லை வரை போகிறார்கள்.
இதனால் குடும்பத்திலுள்ளவர்களுடன் பிள்ளைகள் பேசுவதும் உறவாடுவதும் அறவே இல்லாமல் போவதும் கண்கூடு. அலைபேசி வெளிப்படுத்தும் நீலக்கதிர்வீச்சு மின்காந்த அலைகளும் தூங்குவதற்கு தேவையான மெலடினென் சுரப்பைத் தடுப்பதால் சரிவரத் தூங்காமல் குழந்தைகள் தவிக்கிறார்கள். இந்தத் தூக்கமின்மையால் எரிச்சலும் கவனச்சிதறலும் விபத்துகளும் கூட ஏற்படுவதற்கு ஏதுவாகிறது.
நட்புகளும் இல்லை, குடும்பத்தினருடன் அதிகம் பேச்சும் இல்லை என்றாகிப் போனதால் தனிமைப்பட்டு விடுகிறார்கள். அலைபேசியுடன் கட்டுண்டு கிடப்பதால் விளையாட்டும் உடல் அசைவுகளும் அதிகமின்றி உடற்பருமன் ஆகிவிடும் அபாயமும் நோய்வாய் படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரே நிலையில் அலை பேசி பிடித்துக் கொண்டு குறைந்து பார்த்தபடி இருப்பதால் கை மூட்டுகளில் வலி, கழுத்து வலி போன்றவை மிக இளம் வயதிலேயே வந்து சேர்ந்து விடுகிறது.
மனநிலை ஊசலாட்டம், மன அழுத்தம் பிறருடன் பழகும் விதத்தில் முறையின்மை போன்றவை அழையா விருந்தாளிகளாக நம் பிள்ளைகளை பெற்றது.
எதையும் பகுத்தாய்ந்து செயல்படும் மனநிலையை அலைபேசி உபயோகம் குறைத்து விடுகிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர்நீச்சல் போட்டு வெல்லும் உறுதியை அதீத அலைபேசி உபயோகம் கேள்விக்குரியதாக்குகிறது.
உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண பெற்றோர்கள் செய்ய வேண்டியவை எவை என பார்ப்போம்.
குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக அலைபேசிகளைப் பிடுங்குவதும் அவர்களை தண்டிப்பதும் எதிர்மறை பலன்களையே தரும். பெரியவர்களிடம் உண்டாகும் குடிப்பழக்கம், புகைப் பழக்கம் போன்றவற்றிற்கு இந்த
‘அலைபேசி அடிமைப்படுதல்’ எந்த விதத்திலும் குறைந்த தீமையன்று. பக்குவமாகவே இதற்குத் தீர்வு காணவேண்டும். முதலில் குடும்பமாகச் சேர்ந்தமர்ந்து நல்ல விதமாக அலைபேசி உபயோகிப்பதை குறைப்பது பற்றி அலச வேண்டும். எக்காரணம் கொண்டும் சாப்பாட்டு மேஜை மற்றும் படுக்கை அறைக்குள் அலைபேசிக்கு இடமில்லை என்று தீர்மானித்து செயல்பட வேண்டும்.
நாளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவு, வார இறுதியில் விடுமுறை நாட்களில் சற்று கூடுதலான நேரம் என்று அலைபேசி உபயோகத்தை வரையறுக்கலாம். பெற்றோர் முன்மாதிரியாக அலைபேசி உபயோகத்தை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவல் விஷயமாக வரும் அழைப்புகள் தவிர்க்க முடியாததாகையால் அவற்றை பிள்ளைகளுக்கு புரிய வைத்து விட்டு தேவைப் படும்போது மட்டும் உபயோகிக்கவும்.
வாய்ப்பு அமையும் போதெல்லாம் குழந்தைகளுடன் வெளியிடங்களுக்குச் செல்லுதல் சுற்றுலா போதல் என்று அழைத்துப் போகவும். அங்கெல்லாம் குடும்பமா மனம் விட்டுப் பேசி மகிழ இறுக்கம் தளரும்.
குழந்தைகளின் சிறு வெற்றிகளையும் கொண்டாடி உற்சாகமூட்டுங்கள். விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுங்கள். பாட்டு நடனம் என்று பல கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
குழந்தைகள் அலைபேசி பயன்பாட்டை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணியுங்கள். அழும் குழந்தைகளுக்கு சமாதானப்படுத்த வேண்டி செல்போன் தருவதை முதலில் நிறுத்துங்கள்.
குழந்தைகளுடைய நடவடிக்கைகளில் அலைபேசி பாதிப்பு அதிகம் இருந்தால் மனநல கவுன்சிலிங் ஆலோசனை மேற்கொள்ளத் தயங்க வேண்டாம்.
அலைபேசி போன்ற விஞ்ஞான சாதனம் நம் உபயோக சௌகரியத்திற்கு தான். அவையே நம் குழந்தைகளை உபயோகப்படுத்திக் கொள்ள விட்டு விடாதீர்கள்!


