கலிங்கத்தைக்
கொன்றொழித்த அசோகன்
புத்தனான வரலாறு…
துருக்கியர்தம்
ஆர்மீனிய இன அழிப்பில்
அகமகிழ்ந்த நாட்கள்..
முள்ளிவாய்க்காலைக்
கொத்தோடு கொய்த
கொல்லிவாய்ப் பிசாசுகளுடன்
கைகுலுக்கிக் கொஞ்சிய காலம்..
ஹிட்லர் கொன்றொழித்த
யூதப்பிணங்கள்
கோரைப் பற்களுடன்
காசாவை வேட்டையாடுகின்றபோது,,,
’இணையென என்றுமே
இனம்சேரலாகாது’
ஆவணக் கொலைதின்னும்
மாண்ட சரித்திரங்கள்…
திரைக்கவர்ச்சி, கேளிக்கையில்
தன்னையே தொலைத்து…
தன்குஞ்சைத் தானே
தின்று மகிழும் பருந்து…
உணவுக்கு அழும்
உக்ரைன் மழலையர்….
கைகொட்டிச் சிரித்த
செயற்கைப் பஞ்சம்.. – என
உண்மையும் நேர்மையுமற்ற
உவரி மண்ணில்
விதையாய் வீழ்ந்தபடி
விழிக்கும் மனிதம்…


