‘சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே…’
ரேடியோவில் இசைஞானியின் இசையில் எஸ்.பி.பியின் குரலில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க..
அதிகாலை 6 மணி இருக்கும்.
பரபரப்பாக டீ ஆத்திக் கொண்டிருந்தான் சிவநேசன்..
‘சிவநேசா.. ஸ்ட்ராங்கா ஒரு டீ…’
‘சிவநேசா… சர்க்கரை கொஞ்சம் கம்மியா லைட்டா ஒரு டீ
போடு…’
‘சிவநேசா… சர்க்கரை கொஞ்சம் தூக்கலா ஸ்ட்ராங்கா ஒரு
காப்பி…’
‘வழக்கம்போல நமக்கு டிகாஷன் டீ போடு சிவநேசா…’
இங்கே கேசியர், மாஸ்டர், சப்ளையர் எல்லாமே சிவநேசன்
தான்.
‘சிவநேசன் டீக்கடை’ன்னு சொன்னால் அந்த சுற்றுவட்டாரத்தில்
தெரியாத ஆட்களே கிடையாது. இந்த டீக்கடை சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரேதான் உள்ளது.
சிவநேசனின் சிரித்த முகத்துக்காகவே இங்கே கூட்டம் கூடும்.
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் இசைஞானியின் பாடல் கேட்கவே..
விடியற்காலை 6 மணிக்கே சிவநேசன் டீ கடையில வந்து உட்கார்ந்துக்குவாங்க.
விளையாட்டு, அரசியல், சினிமா என காரசாரமான விவாதங்களும்
நடக்கும்.
காலை சுமார் பத்து மணி இருக்கும்… கூட்டம் கொஞ்சம்
குறைந்து ஒரு சிலரே இருந்த நிலையில் சிவநேசன் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.
‘ஹலோ நான் சிவநேசன் பேசுறேன் சொல்லுங்க…’
“வணக்கம் சிவநேசன், நான் டைரக்டர் கார்த்திக்
ஆபீஸ்ல இருந்து அவருடைய அசிஸ்டன்ட் பேசுறேன்”
“கார்த்திக் சார் ஆபீஸ்ல இருந்தா… வணக்கம் சார்…
சொல்லுங்க சார்”
“நாளைக்கு காலைல ஒரு 11 மணிக்கு எங்க ஆபீஸ்க்கு
வந்துருங்க உங்களுக்கு ஆடிஷன் இருக்கு”
“சார்… சந்தோஷமா இருக்கு சார், ஆனா நான் இப்போ
சேலத்தில் இருக்கேன் சார்…”
“ஓஹோ… அப்படியா .. உங்களால் வர முடியுமா…?”
“கண்டிப்பா… வரேன் சார்…”
“உங்களுக்கு லொகேஷன் சென்ட் பண்றேன் அத ஃபாலோ
பண்ணிக்கோங்க
ஓகேவா…”
“ஓகே சார்”
போனில் பேசியதை நினைத்து தீவிர சிந்தனையில் இருந்தான்
சிவநேசன்..
‘மாஸ்டர் ஒரு டீ..’. என்று ஒரு குரல் வந்தது.
நான் படித்த படிப்பு ஒன்று, விரும்பிய தொழில் ஒன்று
இப்போ செய்ற தொழில் ஒன்று. ஆனாலும் காலம் எனனை என்னதான் புரட்டிப் போட்டாலும் என்னுடைய
பாதையில் இருந்து நான் திரும்புவதாக இல்லை என்று மனசுக்குள் உறுதியை இறுக்கமாக்கிக்
கொண்டான்.
மாலை வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே கடை சாத்திவிட்டு
வீடு வந்தான்.
“என்னங்க.. இன்னிக்கு நேரமா… வீட்டுக்கு வந்துட்டீங்க…”
என்ற மனைவியிடம் “சுமதி ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு சினிமா கம்பெனியில் இருந்து
என்னை கூப்பிட்டு இருக்காங்க…” மகிழ்வோடு சொன்னான்.
“என்னடா நல்லா போயிட்டு இருந்துச்சேன்னு பார்த்தேன்,
மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா…”
“சொல்றதை கேளு… எதேச்சியாகத்தான் நானும் போட்டோ
அனுப்பினேன். திடீர்னு கூப்பிட்டாங்க பெரிய பேனர் வேற… நான் என்ன பண்றது… இந்த
ஒரு முறை மட்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடும்மா…”
“என்னமோ பண்ணுங்க போங்க… ஆமா எப்ப கிளம்புறீங்க..?”
“காலைல 11 மணிக்கு அங்க இருக்கனுமாம். இன்னைக்கு
சாயந்திரமே கிளம்பியாகனும் அதனால தான் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டேன்”
“இன்னைக்கேவா எங்க போய் தங்குவீங்க..?”
“அதைத்தான் நானும் யோசனை செய்துக்கிட்டு இருக்கிறேன்”
“இந்த ஜென்மத்துல நீங்க திருந்த மாட்டீங்க உங்க
இஷ்டம் என்னமோ பண்ணிக்கங்க போங்க” என்றாள் மனைவி.
அவன் சினிமாவை விட்டு விலகி வந்து சரியாக 10 வருடங்கள்
ஆகிறது.
அது ஒரு அழகிய கனாக்காலம். மனசுக்குள் அந்தக் காலத்து
நினைவுகளைக் கொண்டு வந்தான்.
அப்போதெல்லாம் நரேஷ் வர்மா, புரட்சிக் காந்தன், பாபுச்சந்தர்
இவங்களோட ரொம்ப நெருக்கமா இருந்தான். எல்லாரும் ஒன்றாகத் தங்கியிருந்தார்கள். பேச்சுலர்
லைப் அது. கனவுகளோட அவங்க சுத்தாத இடமில்லை, நிக்காத டீக்கடையில்லை, பேசாத பேச்சு இல்லை…
அது ஒரு தனி வாழ்க்கை.
அவர்களை எல்லாம் பிரிஞ்சு சரியா பத்து வருஷம் ஆகுது.
எப்ப சிவநேசனுக்குக் கல்யாணம் ஆனதோ அப்போ விட்டது இந்த சினிமா வாழ்க்கை. ரொம்ப நாளைக்கு
அப்புறம் இன்ஸ்டாகிராம்ல விளம்பரம் பார்த்து அவனுடைய போட்டோ அனுப்பி இருந்தான். ஆனா
இப்படி திடுதிப்புன்னு கூப்பிடுவாங்கன்னு அவன் எதிர்பார்க்கவே இல்லை.
‘அங்க போனா எங்கே தங்குவேன்னு தெரியலையே’ என்பதுதான்
அவனது கவலையாக இருந்தது, யோசித்தான்.
அவனது பழைய நண்பர்கள்ல இப்ப யார் யார் எங்க இருக்காங்கன்னே
அவனுக்குத் தெரியாது. அவனது பழைய நோட்டில் பாபுச்சந்தர் மொபைல் நம்பர் இருந்ததா ஒரு
ஞாபகம் வர, தேடிப் பார்த்து மொபைல் நம்பரை எடுத்தான்.
‘அப்பவே எப்போதும் தன்னை பிசியாகவே காட்டிக் கொள்பவன்
அவன். இப்போ கால் செய்தால் எடுப்பானா..?’ என்ற சந்தேகத்திலேயே அவனுக்கு கால் செய்தான்.
ஆச்சரியம் முதல் ரிங்கிலேயே கால் அட்டென்ட் செய்து
விட்டான்..
“ஹலோ யார் பேசறது…?”
“டேய் மச்சான் நான்தான்டா…”
“நான்தான்னா..?”
“டேய் நான் சேலத்திலிருந்து சிவநேசன் பேசுறேன்
டா…”
“டேய் மச்சான்… எப்படிடா இருக்க..?” ஆச்சரியமாக
கேட்டான் பாபுச்சந்தர்..
“நல்லா இருக்கேன்டா…”
“எத்தனை வருஷம் ஆச்சு உன்ன பாத்து… ஆமா… நீ
கல்யாணம் பண்ணிட்ட இல்ல… ஃபேமிலி லைப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு. பசங்க எல்லாம்
நல்லா இருக்காங்களா..?”
“எல்லாரும் நல்லா இருக்காங்கடா.. உனக்கு மேரேஜ்
ஆயிடுச்சா பாபு..?”
“நான்தான் அப்பவே சொன்னேனே லைஃப்ல அச்சீவ்மென்ட்
பண்ணாம கல்யாணம் பண்ண மாட்டேன்னு…”
“நீதான் அவசரப்பட்டுட்ட. இட்ஸ் ஓகே… இப்ப சந்தோஷமா
இருக்கல்ல..,”
“ம்ம்.. இருக்கேன் டா…”
“என்ன விஷயமா போன் பண்ண மச்சான்…”
“மச்சான் ரொம்ப நாள் கழிச்சு ஒரு கம்பெனிக்கு
போட்டோ அனுப்பினேன், ஆடிஷனுக்கு கூப்பிட்டு இருக்காங்க. அங்க வந்தா உன் ரூம்ல தங்க
முடியுமா மச்சான்… ஒரே ஒரு நாள்தான்”
“என்னடா இப்படி கேட்டுட்ட வாடா…”
“மச்சான் ரூம் அட்ரஸ்…”
“நம்ம இருந்த அதே ரூம் தாண்டா…”
“மச்சான் இன்னமும் அதே ரூம்லயாடா இருக்க…”
“ரூம் செட் ஆகிடுச்சுடா விட மனசு வரல…”
“மச்சான் நீ நல்லா இருக்கல்ல…”
“என்ன மச்சான் டவுட்டா கேக்குற… நல்லாதான்டா
இருக்கேன் ஆமா நீ எப்ப கிளம்புற..?”
“காலைல 11 மணிக்கு அங்க இருக்கனும்டா… இப்போ
சாயந்திரம் கிளம்பினா அங்க வர நைட்டு 2 மணி ஆயிடும் மச்சான்”
“மச்சான் இன்னைக்கு எனக்கு நைட் ஷுட் இருக்கு.
வீட்டு சாவியை நான் வாசக்காலில் உள்ள ஆணியில் மாட்டிட்டு போறேன்… நீ வந்து எடுத்துக்க…”
“ரொம்ப தேங்க்ஸ்டா…”
“டேய் இதுக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு…
வா பேசிக்கலாம்…”
இரவு 2 மணி சென்னை வடபழனியில் உள்ள 100 அடி சாலையில்
பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிவநேசன். கமலா திரையரங்கம் பின்புறம்
உள்ள அந்த தெருவுக்குள் நுழைந்தான்.
தெருவே கும்மென்று அமைதியாக இருந்தநிலையிலும் காற்றுமட்டும்
வேகமாக அடித்துக் கொண்டே இருக்க, கூட்டம் கூட்டமாக நாய்கள் இவனை பார்த்து குறைத்துக்
கொண்டே இருந்தது.
இந்த தெருவின் முனையில் தான் ஒரு மயானம் உள்ளது. அது
இன்னும் இவன் பயத்தை கிளறியது.
வீட்டின் கேட்டை திறந்து முதல் மாடிக்கு சென்றான்.
வாசக்கதவில் உள்ள சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்று லைட் ச்விட்சை போட்டான்.
ஒரு கிச்சன் ஒரு ஹால் மட்டுமே உள்ள அந்த அறையை சுற்றும்
முற்றும் பார்த்தான். என்ன ரூம் இவ்வளவு அசுத்தமா வச்சிருக்கான் இவன்.
டேபிளின் மேல் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..
ஒரே தூசியாக இருந்தது. அதை தட்டி கொண்டிருந்தான்..
அங்கே ஒரு பேப்பர் கிடந்தது.. எடுத்துப் பிரித்துப்
பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.
பாபுச்சந்தரின் படம் போட்டு அவன் இறந்துவிட்டதாக அந்த
உள்ளூர் செய்தியில் எழுதியிருந்தது. அதைப் பார்த்த அவனுக்கு தூக்கி வாரி போட்டது.
அந்த நேரம் பார்த்து அங்கே கரண்ட் ஆஃப் ஆக, பதட்டத்துடன்
மொபைல்டார்ச் லைட்டை அடித்தான்.
அவசரமாக அங்கே இருந்து வெளியே செல்ல முயற்சித்த பொழுது,
கதவு டமால் என்று அடிக்க, பயந்து பின் வாங்கி ஒரு மூலையில் போய் அமர்ந்தான்.
பக்கத்து வீட்டில் யாரோ ஒரு பெண்மணி அழுது கொண்டிருக்கும்
சத்தம் கேட்டது.
காதில் கையை வைத்து பொத்திக் கொண்டான்.
கிச்சன் பக்கம் ஏதோ உருளும் சத்தம் கேட்க, மொபைல் டார்ச்சை
கிச்சன் பக்கம் திருப்பினான். கதவோரம் கையில் கத்தியும், ரத்தமுமாக பாபுச்சந்தர் நின்று
கொண்டிருந்தான்.
பயந்து லைட்டை வேறு பக்கம் திருப்பி, மீண்டும் அங்கு
அடித்துப் பார்த்தால்…
பாபுச்சந்தர் அங்கே இல்லை.
கரண்ட் வந்து ஃபேன் ஓடுவதற்குள் மீண்டும் கட் ஆகிவிடவே
ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.
லைட்டை ஃபேன் மேலே திருப்பினான்.
தூக்கில் தொங்கி கொண்டிருந்தான் பாபுச்சந்தர்.
கை உதறி மொபைலை கீழே போட்டு விட்டான்.
அதை ஓடிப் போய் எடுத்து சுமதிக்கு கால் செய்தான்.
நம்பர் பிஸியாக இருந்தது.
மீண்டும் மீண்டும் முயற்சிதான்.
ரிங் அடிக்க.. சுமதி அதை அட்டென்ட் செய்தாள்.
ஹலோ.. என்று கூறுவதற்குள் மொபைல் சுவிட்ச் ஆப்.
வீடே கருங்கும்மென்று இருட்டாக இருந்தது.
யாராவது இருக்கீங்களா…?
என்னை எப்படியாவது காப்பாத்துங்க…
நான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்…
வெளியே உள்ள நாய்கள் அந்தக் கட்டிடத்தைப் பார்த்து
குறைத்துக் கொண்டே இருந்த சத்தத்தில் இவன் குரல் வெளியே கேட்கவில்லை.
எப்படி இங்கே இருந்து தப்பிப்பது என்று தெரியாமல் விழித்துக்
கொண்டிருந்தான்..
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. யாரோ ஒருவர் கதவை திறப்பது
போல இருந்தது வெடவெடத்து எழுந்து நின்றான்.
பார்த்தால் பாபுச்சந்தர்.
ஐயோ பேய்… பேய்… என அலறி அடித்து ஓட பார்த்தான்.
“டேய்… டேய்… மச்சான் என்னடா ஆச்சு உனக்கு…
ஏண்டா இப்படி பயப்படுற..?”
“டேய்…. நீ தான்…. செத்துப்…. போயிட்ட இல்ல…”
“நானா? நான் எப்படா செத்தேன்..?”
“அந்த பேப்பர்ல பார்த்தேன்”
ஹா ஹா ஹா ஹா…
பலமாக சிரித்தான் பாபுச்சந்தர்.
“அதுவா… எப்பவோ ஒரு ஷார்ட் ஃபிலிம்காக ரெடி
பண்ண பேப்பர்டா அது. அத போய் பாத்துட்டு பயந்து இருக்கியே…”
“மச்சான் நெஜமாவாடா சொல்ற…” என்று அருகில்
வந்து அவனை கிள்ளிப் பார்த்து, “ஆமா உசுரோட தான் இருக்க…”
“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். நைட் டிராவல்
பண்ணாதடா… நைட் டிராவல் பண்ணாதடான்னு… நேரம் கெட்ட நேரத்துல வந்துகிட்டு இதெல்லாம்
தேவையா…”
“மச்சான் சினிமாவுக்கு ஏதுடா நைட் பகல் அந்த நெனப்புல
தான்டா வந்துட்டேன்…”
“அதெல்லாம் அந்த காலம் மச்சான் இப்ப எல்லாம் மாறி
போச்சு. நீ நினைக்கிற சினிமா இப்ப இல்லை”
“பாத்தியா ஏதோ ஒன்னு எதேச்சையா நடக்க போக, நீ
என்னென்னவோ…
கற்பனை பண்ணிக்கிட்டு அரண்டு போய் நிற்கிற”
“உன்ன வச்சே ஒரு கதை பண்ணலாம் போல இருக்கேடா…”
என்று பாபுச்சந்தர் சொல்லிக் கொண்டிருக்க, அவன் செல்லுக்கு சுமதி இடம் இருந்து அழைப்பு
வந்தது.
“ஹலோ யார் பேசறது..?”
“அண்ணே நான் சிவநேசன் வைஃப் பேசுறேன்… அவர்
அங்க வந்துட்டாரா..?
அவர் நம்பருக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்… பிஸினு
வருது இல்ல சுவிட்ச் ஆப்னு வருது”
“அதெல்லாம் நல்லபடியா வந்துட்டான்மா… இதோ அவன்
கிட்ட கொடுக்கிறேன்”
“என்னங்க ஏங்க மொபைல் சுவிட்ச் ஆப்னு வருது..?”
“சுவிட்ச் ஆப் ஆனா.. சுவிட்ச் ஆப்ன்னுதாம்மா வரும்”
“இந்த லொள்ளுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. சட்டுபுட்டுன்னு
வேலைய முடிச்சுட்டு ஊருக்கு வர வழிய பாருங்க… என்னமோ ஏதோ நான் பயந்து போயிட்டேன்”
“சரிமா”
“மச்சான் நீ பேச்சுலரா இருக்கும்போது எந்த நேரம்
வேணா போலாம் வரலாம் பட், ஃபேமிலி ஆயிட்டா ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்… ஓகே.
இதுக்குத்தான் என் தலைவன் சொல்லி இருக்கான். எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்
பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்னு” சிரித்துக் கொண்டே சொன்னான் பாபுச்சந்தர்.
“அதான் சரி…” என்றான் சிவநேசன்.
தனது ஆடிஷனை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஊர் திரும்பினான் சிவநேசன்.


