VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா
நேர்காணல்

‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா

எழுத்தைப் பொருத்தவரை என்னுடைய கனவுகள் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

பரிவை சே. குமார்
Last updated: May 24, 2026 9:39 pm
By
பரிவை சே. குமார்
Published: December 24, 2025
2 Views
Share
21 Min Read
ஜி. ஏ. பிரபா
SHARE

தற்போது எழுதும் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா.  நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் தொடர்ந்து இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருக்கும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்.

 

முதல் சிறுகதையான ‘பங்கு’ வை சொந்தப் பெயரில் எழுதியவர் சில படைப்புக்களுக்குப் பின் புவன பாரதி என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்திருக்கிறார். உனது சொந்தப் பெயரிலேயே எழுது என்று தனது பள்ளி ஆசிரியர் சொன்னதைத் தொடர்ந்து மீண்டும் சொந்தப் பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரை எழுதிக் கொண்டிருப்பவருக்குள் மீண்டும் புவன பாரதி என்ற பெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

 

எளிமையான தமிழில் ஆன்மீக உணர்வுகளையும் மன உறவுகளின் ஆழத்தையும் மிக அழகாக தனது படைப்புகளில் கொண்டு வரும் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா அவர்கள், ‘எனக்கென விரியும் வானம்’, ‘பாதை காட்டும் பாரதம்’, ‘நதி வழிப் பயணம்’, ‘கரை சேரும் அலைகள்’, ‘விளக்கு’, ‘சத்திய தீபங்கள்’, ‘காவியம் காட்டும் காரிகைகள்’, ‘கந்தன் புகழ் பாடும் கந்தரலங்காரம்’, ‘பெண் எனும் பெருஞ்சக்தி’, ‘பொக்கிஷம்’, ‘பெண்ணால் மட்டுமே முடியும்’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார்.

 

புதியவர்களின் எழுத்தை ஊக்குவித்து, அவர்களையும் சிறந்த எழுத்தாளர்களாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது நண்பர்களுடன் இணைந்து ‘சங்கப்பலகை’ என்னும் முகநூல் குழுமத்தை ஆரம்பித்து, அதில்தொடர்ந்து போட்டிகளைகளை நடத்தி, பரிசுகளை கொடுத்து நிறையப் பேரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா அவர்களின் விரிவான நேர்காணல் உங்களுக்காக.

 

தங்களது இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்…?

 

ரொம்ப உற்சாகமான பொற்காலம். அதிகமான கட்டுப்பாடுகள், பள்ளி பாட அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் இசையும், இலக்கியமும் கைகோர்த்து நடந்த பருவம் அது. அப்பா பிரைமரி ஹெல்த் சென்டரில் ஹெல்த் இன்ஸ்பெக்டர். கிராமத்தில் குவாட்டர்ஸ் அனைத்துமே ஊரைவிட்டு தள்ளிதான் இருக்கும்.


      ஸ்கூல் முடிந்து வந்ததும் எங்களுடைய நட்பு புத்தகங்களோடு தான். அப்பா அனைத்து வார, மாத, தினசரி பத்திரிக்கைகள் வாங்குவார். அதில் உள்ளவற்றை படிப்பது, இலங்கை ரேடியோவில் தமிழ் பாடல்களைக் கேட்டு ரசிப்பது, வாசலில் அமர்ந்து சுற்றி தெரியும் இயற்கையை ரசிப்பது என்ற காலம் அது.

 

     பள்ளிகளில் பாடமும், ரிசல்ட் மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் இலக்கிய அறிவை புகட்டிய தமிழாசிரியர்கள். 12-வது முடிக்கும்போதே எனக்கு அனைத்து இதிகாசங்களும், சங்க இலக்கியங்களும் பரிச்சயம் ஆகி இருந்தது. பாடத்தோடு சேர்ந்து நல்ல, நல்ல விஷயங்களைச் சொல்லி எங்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்.

 

     ஒவ்வொரு ஆசிரியர்களும் என்னுடைய முன்னேற்றத்தின் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளவர்கள். ஆங்கிலம், தமிழ் என்று இலக்கியங்களைப் போதித்தவர்கள், அறிவியல் என்று உடல் உள் உறுப்புகளை பற்றி ஒரு பிரம்மிப்பையும், இதுதான் ஆண்டவன் படைப்பு என்று உணர்த்திய ஆசிரியர்கள், அனைத்து வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, வரலாற்றுப் பாடங்களோடு சேர்ந்து இந்திய உலக வரலாற்றையும் போதித்த ஆசிரியர்கள் என்னுடைய வழிகாட்டிகள்.

 

      பத்தாவது படிக்கும்போதே அம்புலி மாமாவில் சிறுகதை எழுதினேன். நிறைய கையெழுத்து பத்திரிகைகள் நடத்திய ஆசிரியர்கள் என்னை அதில் எழுத ஊக்குவித்தார்கள். எனக்கு நன்னெறியை போதித்த தமிழ் ஆசிரியர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் என்னை கை தூக்கி விட்டிருக்கிறார்கள். அதுதான் என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணம்.

 

   மறக்க முடியாத ஆசிரியர்கள். பள்ளிப் பருவத்தில் என்னுடன் படித்த நண்பர்கள், 40 வருடம் கழித்து இப்பொழுது என்னைக் கண்டுபிடித்து என்னோடு இப்போது தொடர்பில் இருக்கிறார்கள். அப்பா ஊர் ஊராக மாற்றல் என்பதால், எந்த ஊரிலும் நான் நிரந்தரமாகப் படித்ததில்லை. பிளஸ் டூ வகுப்பில் காலாண்டு ஒரு இடத்தில், அரையாண்டு ஒரு இடத்தில், முழு ஆண்டு ஒரு இடத்தில் என்று எழுதினேன்.

 

     படித்தது எல்லாமே அரசுப் பள்ளியில்தான். அதேபோல் பிளஸ் டூ ஆங்கில மீடியத்தில் சேர்ந்து தமிழ் மீடியத்தில் தேர்வு எழுதி கடவுள் அருளால் தேர்ச்சி பெற்றேன். (நான்தான் முதல் செட். தப்பித்தேன்) ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு கிடைத்த நண்பர்கள் எனக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்தார்கள். இப்பொழுது இருக்கும் சீண்டல்கள் எதுவும் எனக்கு அப்போது இல்லை. நாங்கள் எங்கள் வகுப்பு மாணவிகளுக்கு கேடயங்கள் என்று சொல்லியே அனைத்து மாணவர்களும் இருந்தார்கள். நான் படித்தது கோ எஜுகேஷன்தான் என்றாலும், இன்று வரை ஒரு சிலரின் நட்பு எனக்கு தொடர்ந்து வருகிறது. நினைத்து நினைத்து மகிழக்கூடிய இளமைப் பருவத்தைக் கொடுத்த ஆண்டவனுக்குத்தான் நன்றி.

 

தங்களின் முதல் படைப்பு எது…? அது எதில் பிரசுரமானது…?

  

 பத்திரிக்கையில் வெளியான முதல் படைப்பு ‘பங்கு’ என்ற சிறுகதை. அதற்கு முன் சிறிது சிறிதாக கையெழுத்துப் பத்திரிக்கையில் எழுதினாலும், அதெல்லாம் எங்களுக்குள்ளேயே, ஆனால் ஆனந்த விகடனில் வெளியானதுதான் முதல் படைப்பு. 1982ல் ஆனந்த விகடன் மாணவர் பக்கத்தில் ‘பங்கு’ என்ற சிறுகதை பிரசுரம் ஆகியது.

 

    நான் இரண்டாம் வருடம் படிக்கும்போது, அனுப்பிய கதை மூன்றாம் வருடத்திற்கான முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பும்போது வந்தது. எவ்வளவு ஆனந்தமான நாட்கள் அது! அந்தப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு குவார்ட்ரஸ் முழுக்க சுற்றினேன்.

 

      அனைவரிடமும் போய்ப்போய் பகிர்ந்து கொண்டேன். மறுநாள் கல்லூரிக்குள் நுழைந்து எங்களுடைய ஓய்வறையை நோக்கி நடக்கும் போது திரு சே,சு. பழனிச்சாமி என்ற தமிழாசிரியர் என்னை அழைத்து “உன்னுடைய கதையைப் படித்தேன் பிரபா. நன்றாக இருக்கிறது. இதோடு நிறுத்தி விடாதே. மேலும் தொடர்ந்து செல்” என்றார். அதுதான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு, ஊக்குவிப்பு.

 

    அதன் பின் கல்லூரிக்குள் வந்த கடிதங்கள் ஏகப்பட்டது இருக்கும். 500 கடிதங்களுக்கு மேல் பியூன் கொண்டு வந்து ஓய்வறையில் வைத்து விட்டு, “என்ன உனக்கு இத்தனை கடிதம் வருகிறது?” என்று கேட்டு விட்டுப் போவார். அலுவலகம், ஆசிரியர் அறை என்று எல்லாப் பக்கமும் என்னுடைய பெயர் ஒலிக்க ஆரம்பித்தது. அதே வருடம் அமுதசுரபி தீபாவளி மலர் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு, தாய் நடத்திய தலைப்புக்கேற்ற சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு. அடுத்தடுத்து சே.சு. பழனிச்சாமி சாரின் அறிவுறுத்தலில் என்னுடைய பயணம் எழுத்துடன்தான் என்று இந்த பிரபஞ்சம் உறுதிப்படுத்தியது

 

தாங்கள் பெரும்பாலும் ஆன்மிகம் சம்பந்தமான கட்டுரைகள், கதைகள் எழுதுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா…?   

 

அது இயற்கையாக அமைந்தது. இப்படித்தான் எழுதவேண்டும் என்று நான் எந்தக் கற்பனையும் செய்யவில்லை. என்னிடம் என்ன கதை கேட்கிறார்களோ, அதை எழுதுவேன். ஆனால் எனக்கான வாய்ப்புகள் ஆன்மீகத்தில் தேடி வந்தது. ஆசிரியர் பணி ஏற்ற பிறகு என்னுடைய மாணவிகளுக்கு புராணங்கள், இதிகாசங்களில் இருந்து நான் கதைகள் சொல்வேன். அப்பொழுது ஒரு மாணவி “இதையெல்லாம் தொகுத்து நீங்கள் புத்தகமாகப் போட்டால் எங்களுக்கு உதவியாக இருக்குமே” என்றாள்.

 

    அதே நேரத்தில் தினமலர் பெண்கள் மலரில் எழுதும் வாய்ப்பு கிடைத்து. பாதை காட்டும் பாரதம், ரிக்வேத கால பெண்களைப் பற்றி, மாயப் பொய்கை என்று தொடர்ந்து எழுதினேன். அடுத்தடுத்து மாலை மலரில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்தர் அலங்காரம் என்று எழுத ஆரம்பித்தேன். இதற்காகப் பல புத்தகங்களை படிக்கும் போது நம்முடைய ஆன்மிகம், இறை சக்தி ஒன்றின் மூலம் எத்தனை நல்ல விஷயங்களை புகுத்தி இருக்கிறது என்று புரிந்தது.

 

    அதன்பின் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். நான் படித்த நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசையில் எழுத ஆரம்பித்ததே ஆன்மீகம். அது ஒரு தேடல். தீராத தாகமும், அறியும் ஆசையும், ஆழ்ந்து அதற்குள் பயணிக்க வைத்தது. மேலும் பல விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதில் எனக்கு ஏற்படும் ஆத்ம திருப்தி வார்த்தையில் சொல்ல முடியாது. வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், ஆன்மீக விஷயங்களை எழுதும்போது எனக்கு கிடைக்கிறது.

 

இயற்பெயரில்தான் எழுதுகிறீர்கள், புனைப்பெயரில் எழுதிய அனுபவம் எதுவும் உண்டா…?

   

 ஸ்ரீ சாந்தானந்த சத்குரு சுவாமிகள் என்னுடைய முதல் கதை வெளியான போது, என் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். அவரை நமஸ்காரம் செய்து விட்டு கதை எழுதிய விவரத்தைக் கூறிய போது புவன பாரதி என்ற பெயரில், ராஜி என்ற கேரக்டர் பெயர் வருமாறு எழுது என்றார்.

 

      நான் அதில்தான் அடுத்தடுத்து எழுத ஆரம்பித்தேன். இரண்டு மூன்று சிறுகதைகள் வெளியாகியது. பிறகு ஒரு பட்டிமன்றத்தில் தமிழாசிரியர் திரு. பழனிச்சாமி அவர்களை சந்தித்த போது “ஏன் பிறகு எழுதவில்லை?” என்று கேட்டார். நான் விஷயம் சொன்னதும் “புனைப்பெயர் நல்லதுதான். ஆனாலும் ஜி ஏ பிரபா என்ற பெயரில் எழுதினால் எங்களுக்கு, இது நம் மாணவி என்று தெரியும்” என்றார். அவருடைய சொல்லுக்கு மரியாதை கொடுத்து நான் ஜி ஏ பிரபா என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

 

     இந்தப் பெயரை வைத்துதான் 1978-இல் என் உடன் படித்த ஒரு மாணவர் குழு 2021-இல் என்னை அடையாளம் கண்டுபிடித்து தற்போது கோவையில் நாங்கள் சந்திக்கிறோம், நட்பு தொடர்கிறது. ஆனாலும் புவன பாரதி என்ற பெயரிலும் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கென்று ஒரு தனிப்பட்ட கருத்துக்களை வைத்து அந்த கதைகளை புவன பாரதி என்ற பெயரில் எழுதலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். 

 

 

தாங்கள் சிறுகதைகளை விட நாவல் அதிகமாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்? 

எழுதுவதைத் தவிர வேற வேலை இல்லை. அம்மா நீ எழுத்தைப் பார். இது என்றைக்கும் இருக்கக்கூடிய விஷயம். மற்ற விஷயங்களை நான் கவனித்துக் கொள்கிறேன் என்பார். ஸ்கூல் நேரம் முடிந்து வீட்டில் எழுதிக் கொண்டிருப்பேன். சனி ஞாயிறுகளில் எழுதுவேன். அதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்வேன். முதலில் பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கணினியை வைத்து எழுதுகிறேன். மொபைலில் வாய்ஸ் டைப்பிங் கற்றுக் கொண்டதால், இப்போது எழுதுவது இன்னும் சுலபமாகிவிட்டது. 

2001-இல் தான் கண்மணியில் முதல் நாவல் வெளியானது. அதன் பிறகு அடுத்தடுத்து பத்திரிகைகள் கேட்க ஆரம்பித்ததும், கடவுள் அருளில் எனக்கான கற்பனை வளமும் வந்தது. எந்நேரமும் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் அப்பாவும் அம்மாவும் ஏற்றுக்கொண்டார்கள். அப்பா இறந்த பிறகு சிறிது அந்த பொறுப்பு என் தோளில் விழுந்தது என்றாலும், ஓய்வு பெற்ற பிறகு என்னுடைய முழு நேரத்தையும் எழுத்தில் தான் செலவிடுகிறேன். எந்த விஷயங்கள் செய்து கொண்டிருந்தாலும் என் மனம் எழுத வேண்டியதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். உடனுக்குடனே அதற்கான குறிப்பு எழுதி வைத்துக் கொள்வேன். ஆனால் நாவல் கேட்கும் போது தான் எழுதி அனுப்புகிறேன். அதற்கு சிறிது தாமதம் ஆகிவிடுகிறது. 

என் நண்பர் திரு சப்தரிஷி ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். உன் மனதில் ஒரு நாவலோ, சிறுகதையோ அதற்கான கருத்து உருவாகும் போதே அதை எழுதி வைத்துவிடு. கேட்பவர்களுக்கு உடனே அனுப்ப முடியும் என்று கூறியிருக்கிறார். இனி அதை பின்பற்றலாமா என்று இருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இந்த மாதிரி சின்னச்சின்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் தான் நம் பாதையை சுலபமாக்குகிறது. கடக்க உதவுகிறது. 

தங்களின் எழுத்துப் பணிக்குக் கிடைத்த விருதுகள் பற்றிச் சொல்லுங்களேன்? 

பாதை காட்டும் பாரதம் என்ற நூலுக்கு திருப்பூர் சக்தி விருது கிடைத்தது. அதன் பிறகு ஒரு இலக்கிய அமைப்பு அதற்கு பரிசு கொடுத்தது. அதன் பிறகு தினமணியும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய போட்டியில் சிறந்த பெண் எழுத்தாளர் விருது கிடைத்தது. அது தவிர பிரபல பத்திரிகைகள் நடத்திய அனைத்து சிறுகதைப் போட்டிகளிலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறேன். ஆனந்த விகடன் பவள விழா, கலைமகள் குறுநாவல் போட்டி, பெண்மணி என்ற பத்திரிகை ஒரு முறை நடத்தியதில் லலிதா ஜுவல்லரியின் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நெக்லஸ் (அப்பொழுது) இரண்டு பவுன் கிடைத்தது. இப்பொழுது நினைத்து கூட பார்க்க முடியாது. 

இது தவிர இலக்கிய அமைப்புகள் அவ்வப்போது சில அவார்டுகள் கொடுக்கும். அது எல்லாமே என்னுடைய எழுத்துக்கு கிடைத்த பரிசு. அதுக்கு முழு முழு தகுதியானது அந்த எழுத்துக்கள் தான். விருதுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது. அது உண்மை. ஆனால் விருதுக்காக எதையும் எழுதுவதில்லை. கிடைக்கும்போது உற்சாகப்படுவேன். இல்லை எனும் போது அதை பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருப்பேன். நகர்வது தானே வாழ்க்கை.

 

 

 

தாங்கள் ஆசிரியையாக இருந்தவர் அல்லவா…? தங்களின் மாணக்கர்களில் யாரேனும் தங்களால் எழுத்தாளர் ஆகியிருக்கிறார்களா? 

வெளிப்பத்திரிகைகளில் எழுதியதில்லை என்றாலும் சின்னச்சின்ன ஓவியங்கள் எல்லாம் அவர்களை உற்சாகப்படுத்தி சிறுவர் பகுதிகளுக்கு அனுப்ப சொல்லுவேன். அது மாதிரி சில மாணவிகளுடைய ஓவியங்கள் பத்திரிகைகளில் வெளிவரும். சிறுவர் பகுதிகளில் வெளியாகி இருக்கிறது. குழந்தைகள் அதை ஆர்வமாகக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்கும் போது அவர்களை வாழ்த்தி, பாராட்டி பிரேயரில் அவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லுவேன். இது மற்றவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். 

சில பேர் எனக்கு கதைகள் எழுதிக் கொண்டு வந்து காண்பிப்பார்கள். அதை நான் திருத்திக் கொடுப்பேன். ஆனால் அதை அவர்கள் பத்திரிகைகளுக்கு எழுத முடிந்ததில்லை. ஏனென்று கேட்டபோது, படிக்கிறதே மிகச் சரியாக இருக்கிறது மேடம். எங்களுக்கு நேரமே இல்லை என்கிறார்கள். அதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும் என்றால், எந்த கருவும் தோன்ற மாட்டேன் என்கிறது என்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு சின்ன குறை மட்டும் உண்டு. என்னுடைய மாணவிகளில் யாரும் எழுத்தில் ஆர்வம் காட்டவில்லையே என்று ஒரு ஏக்கம் உண்டு. ஆனால் அந்த ஏக்கத்தை தற்போது சங்கப் பலகை தீர்த்து வைக்கிறது. 

சங்கப்பலகை முகநூல் குழுமத்தை ஆரம்பித்து அதில் தாங்கள் நட்புக்களுடன் இணைந்து பல போட்டிகளை நடத்தி, உடனுக்குடன் பரிசுகளும் வழங்குகிறீர்கள். இந்த எண்ணம் எப்படித் தோன்றியது?           

2019-ல் கொரோனா வந்து பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வீட்டிலேயே இருந்த காலம். அப்பொழுது எனது வலது காலில் ஒரு சின்ன எலும்பு விரிச்சல் விட்டிருந்தது் அதற்கு வீட்டிலேயே கட்டுப்போட்டு இருக்க வேண்டிய நேரம். மனது மிகவும் சோர்ந்து வீட்டில் இருந்த நேரம், என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசையில், அனைவரையும் பார்த்துப் பேச வேண்டும், பழக வேண்டும், என்ற ஒரு ஆர்வம். அதற்காக whatsapp குழு ஒன்று ஆரம்பித்தேன். ஆனால் அதில் யாரும் எதையும் கண்டுகொள்ளவில்லை. எனவே அப்பொழுதுதான் முகநூலில் நுழைந்து சிறிது சிறிதாக அதைப் பற்றி அறிய ஆரம்பித்து இருந்தேன். அதில் கிரியேட் குரூப் என்று ஒரு ஆப்ஷன் வந்தபோது, இதில் ஆரம்பித்தால் என்ன என்று சங்கப் பலகை குழுவை ஆரம்பித்தேன் 

        தாங்கள் படித்த நல்ல இலக்கியங்களை, கதைகளை ரசித்த விஷயங்களை, தாங்கள் எழுத வேண்டும் என்று விரும்புவதை அதில் எழுதலாம் என்ற கொள்கையோடு நாங்கள் ஆரம்பித்தது. 

      நான் ஆரம்பித்த உடனேயே கணேஷ் பாலா, ரிஷபன் சார், சுரேஷ் சந்த் என்ற மூவரையும் குழுவில் இணைத்தேன். அவர்களும் ஆர்வத்தோடு வந்து இணைந்தார்கள். அதன் பிறகு அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை சங்கப் பலகையில்  இணைத்தார்கள். கணேஷ் பாலா தன்னிடம் உள்ள பொக்கிஷத்தில் இருந்து அழகழகான புகைப்படங்களை போட ஆரம்பித்தார். வெறுமனே அதை பார்த்து கடந்து போவதை விட இதற்கு சிறுகதை போட்டிகள் நடத்தலாமே என்று நினைத்து அதற்கான போட்டிகள் அறிவித்தேன். 

      அதன் பிறகு அது சிறிது சிறிதாக விரிவடைந்து இன்று சங்கப் பலகை ஒரு மிகப்பெரிய இலக்கிய குழுவாக எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய குழுவாக இருக்கிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள அனைவருமே தான். என்னுடைய ஆசைகள் அனைத்திற்கும் ‘டன்’ என்று கைகொடுக்கும் அட்மின்கள். சொன்னதும் உடனடியாக ‘மடமட’வென்று எழுதும் உறுப்பினர்கள் என்று குதூகலமாக போகிறது சங்கப் பலகை. இதற்கு எங்களுக்கு அதிகம் உற்சாகம் தந்தது திரு இந்திரா சௌந்தர்ராஜன் சார். அவருடைய ஆசிர்வாதம்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.         

தற்போது திரு ரவி பிரகாஷ் சார், குங்குமம் ஆசிரியர் திரு கே. என். சிவராமன் சார் எங்களுக்கு பலமாக இருக்கிறார்கள். 

தாங்கள் கண்ட கனவு நனவானதாகச் சொல்லியிருந்தீர்கள், அப்படிக் கண்ட கனவை வைத்து ஏதேனும் நாவல் எழுதிய அனுபவம் உண்டா…? இனிமேல் எழுதும் எண்ணம் எதுவும் இருக்கிறதா?           

வாழ்க்கையில் நிறைய கனவுகள் அனைவருக்குமே இருக்கும். வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை எனக்கு கனவுகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில் நான் கண்ட கனவு வேறு, நடக்கும் விஷயங்கள் வேறு எனும் போது, நான் நடப்பதை ஏற்றுக் கொள்ள அதன் வழியில் பயணப்பட பழகி விட்டேன் ஆனால் எழுத்து உலகைப் பொறுத்தவரை என்னுடைய கனவு இன்னும் சிறு பாக்கி இருக்கிறது. மிகப் பிரபலமான எழுத்தாளராக வேண்டும், இன்னும் நிறைய நல்ல விஷயங்களை எழுத வேண்டும் என்ற கனவு இருக்கிறது.  

அதையெல்லாம் எனக்கு தூங்கும் போது கனவில் வரும். உள் மனதின் ஆழ் ஆசைகள் தான் கனவுகள் என்பார்கள். ஆனால் இன்னும் அந்தக் கனவே பிரதிபலிக்கும் கதையை நான் எழுதவில்லை. ஏனெனில் எழுத்தைப் பொருத்தவரை என்னுடைய கனவுகள் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.  ஆனால் நிரந்தரமாக இருப்பது, நல்ல விஷயங்களை எழுத வேண்டும். இந்த சமூகத்துக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. 

மற்றபடி ஒவ்வொரு எழுத்தாளரைப் பொருத்தவரைக்கும் அந்த விருதுகள் வாங்க வேண்டும், இந்த பரிசுகள் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்குமல்லவா… அந்த ஆசைகள் எல்லாம் எனக்கும் உண்டு. அதில் பொய் சொல்ல விரும்பவில்லை.

 

சங்கப் பலகையில் எழுதுபவர்கள் பலர் இப்போது எழுத்துலகில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்களின் எழுத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

குறை சொல்லும்படி புதியவர்களின் எழுத்து இல்லை. ஒவ்வொருவர் எழுத்தும் சிறப்பான கருத்துக்களுடன், முதிர்ந்த எழுத்துத் திறமையுடன், சொல்ல வந்ததை ‘நச்’சென்று சொல்லும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது. பொதுவாக வெளித்தளத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் தான் இப்பொழுது புதிதாக சேர்ந்து சங்கப் பலகையில் எழுதுகிறார்கள். 

      ஒவ்வொருத்தரும் தாங்கள் எழுதிய புத்தகங்களை, கவிதைகளை, சிறுகதை தொகுப்புகளை நம் சங்கப் பலகையில்  பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. புதிதாக அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில்லை. குறைவாக இருந்தாலும் இலக்கிய தாகத்தோடு பயணிப்பவர்கள் மட்டுமே இந்த குழுவில் இருந்தால் போதும் என்று முடிவெடுத்திருக்கிறோம். 250 உறுப்பினர்கள் தான் இருப்பார்கள் இதிலும் ஒரு சிலர் தான் ஆக்டிவா இருக்கிறார்கள். தவிர மற்றவர்கள் அவ்வளவுக்காக இல்லை என்றாலும் இருப்பவர்கள் ஒருநாள் இதில் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

        சிலருக்கு சங்கப் பலகையில் எழுதி என்ன பிரயோஜனம்? யாரும் லைக் கமெண்ட் போடுவதில்லை என்ற நினைப்பு இருக்கிறது. என்றாலும் அவர்கள் மற்றவர்களின் கதைகளை படித்துவிட்டு, தங்கள் படைப்புகளை வெளிப் பத்திரிக்கைகளில் வெளியிட்டாலும் சந்தோஷமே எங்களுக்கு. அதற்காக ஆரம்பித்த குழு தானே இது. 

சமீபமாய் சங்கப் பலகையில் எழுதுபவர்களில் தங்களைக் கவர்ந்த சிறந்த எழுத்தாளர்கள் என யாரைச் சொல்வீர்கள்? (பிரபலங்களைத் தவிர்த்து விடுங்கள்) 

குறிப்பிட்டுத் தனித்து சொல்ல முடியவில்லை.  ஏனெனில் ஒவ்வொருவருமே தங்கள் எழுதும் படைப்புகளில் தங்களுடைய திறமையை காட்டுகிறார்கள். ஆரம்பித்த புதிதில் ‘பஞ்சமுகி’ என்ற பெயரில் ஐந்து பேர் இணைந்து கதைகள், தொடர்கள் எழுதினார்கள். அவர்கள் இன்று மற்ற பத்திரிகைகளில் பிரபலமாக எழுதி பரிசுகள் வென்று வருகிறார்கள். 

     தற்போது குழுவில் எழுதுபவர்கள் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள்.  போட்டிகள் நடக்கும் போது, சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர்கள் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை. 

     ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதுகிறார்கள். நாங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே, அமானுஷ்ய குறுநாவல் போட்டி, மாத குறுநாவல் போட்டி, ஒரு பக்க கதை என்று பல போட்டிகள் அறிவித்தோம். 

        குறிப்பிட்ட சிலர்தான் அதில் மீண்டும் மீண்டும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவரின் எழுத்துக்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒரு சிலரை மட்டும் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில் எல்லோருமே மிகச் சிறப்பாக எழுதுபவர்கள்தான். சங்கப் பலகையின் உறுப்பினர்கள் என்ற ஒரு சொல்லே அவர்களின் திறமையை வெளிப்படுத்தி விடும் 

தாங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை வைத்து பல ஆன்மீக கட்டுரைகள், கதைகள் எழுதியிருக்கிறீர்கள். இதுபோல் வேறு ஏதாவது காப்பியத்தை வைத்து நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

 சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களை வைத்து ‘காவியம் காட்டும் காரிகைகள்’ என்று ஒரு தொடர் எழுதி முடித்து விட்டேன். பெண்கள் மலரில் வெளியானது. மகாபாரதத்தில் உள்ள குட்டிக் கதைகளை தொகுத்து எழுத வேண்டும், ராமாயணத்தில் உள்ள நமக்குத் தெரியாத எத்தனையோ கதாபாத்திரங்கள், அதாவது சீதை, ராமன், ராவணன் என்று நமக்கு நன்றாக அறிமுகமான பெயர்களைத் தவிர கதையின் போக்கில் கடந்து போகும் சிலரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல் கோவில்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், அங்கு பாடப்பட்ட பதிகம், அதைப் பாடுவதால் என்ன பலன் என்பதை பற்றியும் எழுதும் ஒரு ஆசை. லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ர நாமத்தில் நாமம், அதற்கான கதை என்று இன்னும் ஏராளமான ஆசைகள் இருக்கிறது.  இதற்கான வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் தரும் என்று நம்புகிறேன். 

 

 

மிகச் சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரரான தாங்கள், இப்போது எழுதும் எழுத்தாளர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன? 

எனக்குச் சொன்ன அறிவுரைகளையேதான் நான் இப்போது எழுதும் எழுத்தாளர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நிறைய படியுங்கள். ஆபாச கலப்பில்லாமல் எழுதுங்கள். நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள், நெகட்டிவ்வான விஷயங்களை தவிர்த்து விடுங்கள். நம் கதையைப் படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள், பாசிட்டிவான எண்ணங்களை உருவாக வேண்டும். ஏதோ ஒரு வகையில் சமூக நலனுக்கான விஷயங்கள், உறவுகளுக்கு மத்தியிலான பிணைப்புகள், அன்பு, பாசம், கருணை, பெற்றவர்களுக்கான மரியாதை, பெண்கள் ஜெயிப்பது, தாழ்வு மனப்பான்மையில் குறுகிப் போகாமல் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த சமூகத்தையும் மேம்படுத்தக்கூடிய பெண்களைப் பற்றி எழுதுங்கள் என்பதுதான் நான் சொல்லக்கூடிய விஷயம். 

நீங்கள் எங்களைக் கவர்ந்த எழுத்தாளர், தங்களைக் கவர்ந்த, தாங்கள் மதிக்கும் எழுத்தாளர் இருந்தால் அவரைப் பற்றிச் சொல்லுங்களேன். 

ஜெயகாந்தன். இன்னமும் என்னை பிரமிக்க வைக்கும் எழுத்து அவருடையது. எந்தப் பகுதி மக்களைப் பற்றி எழுதினாலும், அந்த மொழியில் அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்ப்பது போல ஒவ்வொன்றையும் எழுதிய அவரைப்போல் எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அடுத்து தி. ஜானகிராமன், லா.சா.ரா. இவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நான் மகான்கள் என்ற வரிசையில் இவர்களை வைத்திருக்கிறேன். 

    திரு. லா.சா.ரா தன் எழுத்தின் மூலம் தெய்வீகத்தை பரப்பினார். தெய்வீக உணர்வுகளை, தான் அனுபவித்த ஆன்மீக விஷயங்களை பொய் கலப்பில்லாமல், இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு அமையாதா என்ற ஏக்கத்தையும் உண்டாக்கக்கூடிய அளவில் எழுதினார். 

     எத்தனை முறை படித்தாலும் புதிதாகத் தோன்றும் எழுத்து அவருடையது. அதை அடுத்து பாலகுமாரன், லட்சுமி, அனுத்தமா, சூடாமணி இவர்களின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பது உண்டு. குடும்பக் கதைகள், அதில் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை மிக அழகாக கூறுவார்கள். அந்த மாதிரியான குடும்ப அமைப்பை மேம்படுத்தும் விதமாக கதைகளை எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

 உங்கள் எழுத்து வளர்ச்சிக்குக் காரணகர்த்தா என யாரைச் சொல்வீர்கள்? 

என் அப்பா. படிப்பின் மீது ஆசை வர காரணமே அவர்தான். நான் முன்பே சொன்னது போல குவாட்டர்ஸில் அக்கம் பக்கம் சேர்ந்து பழக  ஆட்கள் இருக்காது. அப்போதெல்லாம் எங்களுக்குத் துணை புத்தகங்கள்தான். 

      லைப்ரரியிலிருந்து நான்கு, ஐந்து எனப் புத்தகங்களை எடுத்து வருவார். ஆறாவது படிக்கும்போதே எனக்கு ஜெயகாந்தன், லா.சா.ரா, தி. ஜானகிராமன் அறிமுகம். புரியலப்பா என்றால் திரும்பத்திரும்ப படி புரியும் என்பார். மொழிபெயர்ப்பு நாவல்கள், மேல்நாட்டு கதைகள், சரத் சந்திரர், தாகூரின் கதைகள், பாரதியார் கவிதைகள் என்று அனைத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அப்பா தான். 

     என்னுடைய முதல் கதை வந்த போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாலைந்து பிரதிகள் வாங்கி அதை தன்னுடைய ஹாஸ்பிடல் முழுக்க விநியோகித்தார் அப்பா. ஒவ்வொரு கதை வரும்போதும் ‘உன் கத வந்து இருக்குப்பா’ என்று கூறி, இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுவார். 

     அதேபோல் அம்மா. நிறைய கதைகளைப் படிக்கும்போது அதில் இருக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் உன்னைக் கவர்ந்தால் அதையே மாற்றி உன் பாணியில் எழுதிப் பழகு என்பார். நான் வெளியில் எங்கேயேனும் சென்றால், பத்திரமா போயிட்டு வா. மனிதர்களை கூர்ந்து கவனி. எல்லாரையும் நம்பு, ஆனால் யாரையும் நம்பாதே என்பார். 

       அதற்கான அர்த்தம் எனக்கு பல நாட்கள் புரியாமல் இருந்தது. ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு மனிதர்களையும் சந்திக்கும் போது அம்மாவின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது. 

     என்னுடைய கருத்துக் கருவூலம் அம்மாதான். நிறையப் படிப்பார்கள். தான் படித்தவற்றையெல்லாம் என்னிடம் சொல்வார்கள். தினசரிகளில் வரும் செய்திகளைச் சேர்த்து வைத்து, இதைப் பற்றி நீ எழுது என்பார். எந்த ஒரு விஷயத்திலும் எதிர்மறை கருத்துக்களைப் பரப்பாது, ஆபாசமாக எழுதாது இரு. இதை மட்டும் மனதில் வைத்துக்கொள் என்றார். அவர் கூறியதை பின்பற்றியே இப்போது நடக்கிறேன். 

  என் சகோதரி் (இப்போது இல்லை). கதையில் கனம் இல்லை. ஆழம் இல்லை என்று மீண்டும் மீண்டும் எழுதச் சொல்வார். இவர்களின் ஊக்குவிப்பே இவ்வளவு நீண்ட பயணத்திற்குக் காரணம். 

தாங்கள் நன்றி சொல்ல விரும்பினால் யாருக்குச் சொல்வீர்கள்? ஏன்? 

நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு. நீ இப்படித்தான் என்று என்னை உருவாக்கி, எனக்கான பாதையையும் அமைத்துக் கொடுத்து, அதில் என்னை பத்திரமாக பயணிக்க வைக்கும் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு  என்னுடைய நன்றிகள். 

      இதில் உள்ள ஒவ்வொரு துகளையும் ஒவ்வொரு தெய்வங்களாக நாம் உருவாக்கி மகிழ்கிறோம். அதில் நான் உருவாக்கி மகிழும் என்னுடைய தெய்வங்கள் அனைத்திற்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

     இதை அடுத்து என்னைப் பார்க்காமலேயே என்னுடைய கதைகளைப் படித்து, இன்று வரை எனக்கான வாய்ப்புகளைத் தரும் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது அவசியம்.முக்கியமாக திரு சாவி சார். 

     ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு நாலு சுவற்றுக்குள் அமர்ந்து நான் படித்ததை, நான் பார்த்த மனிதர்களைப் பற்றி, என் மனதிற்குள் தோன்றும் கருத்துக்களை கதையாக எழுதி அனுப்புகிறேன். அதை பாராட்டி பிரசுரித்து எனக்கு இன்று வரை வாய்ப்புகள் தரும் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இப்படி ஒரு வாழ்க்கையை எனக்கு அமைத்துத் தந்த தெய்வத்திற்கு நன்றி நன்றி என்று கூறிக் கொண்டே இருக்க விரும்புகிறேன்.

You Might Also Like

“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
நெஞ்சம் மறப்பதில்லை
நீரோடைகளின் கதை!!! நிஸ்வா – பகுதி 5
களம்காவல் (மலையாளம்)
கதையின் போக்கில் பயணிக்கும் பயணி
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் டிசம்பர் 2025
Previous Article நெஞ்சம் மறப்பதில்லை
Next Article நீரோடைகளின் கதை!!! நிஸ்வா – பகுதி 5
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?