VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்
நேர்காணல்

‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்

புலம்பெயர் வாழ்வில் ஓய்வு அதிகமில்லை என்பதும் உண்மையே.

பரிவை சே. குமார்
Last updated: May 25, 2026 8:51 pm
12 Views
Share
8 Min Read
முல்லை அமுதன்
SHARE

இரா. மகேந்திரன் என்னும் பெயரைவிட முல்லை அமுதன் என்னும் பெயரே உலகளவில் இவரை நமக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. தேர்ந்த படைப்பாளி, கவிஞர், காற்றுவெளி ஆசிரியர்,  அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் ஒரு அங்கத்தினர் என பன்முகங்கள் கொண்டவர் அண்ணன் மகேந்திரன் ரத்தினசபாபதி.

இலங்கையில் இருந்து லண்டனுக்குப் புலம் பெயர் வாழும் ஒரு அற்புதமான மனிதர். இவரின் பேட்டியில் புலம் பெய்ர்ந்தவர்களுக்கான வலியையும் வாழ்க்கையும் பற்றிப் பேசியிருக்கிறார். குறிப்பாக அவர் தற்போது வாழும் இடத்தில் பெற்றவற்றையும், பிறந்த மண்ணில் இழந்தவற்றைப் பற்றியும் கூறியிருக்கிறார்.

‘நித்திய கல்யாணி‘, ‘யுத்தகாண்டம்‘, ‘விமோசனம் நாளை‘, ‘ஆத்மா‘, ‘யாகம்‘, ‘ஸ்நேகம்‘, ‘பட்டங்கள் சுமக்கின்றான்‘  உள்பட பல நூல்களை எழுதியிருக்கிறார். அதேபோல் இவர் எழுதி, வெளிவராமல் தொலைத்த எழுத்துக்களும் ஏராளம்.  ஈழத்து நூல் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார். அந்தப் புத்தகங்களை எல்லாம் ஒரு இடத்தில் நூலகமாக மாற்றி வைக்க வேண்டும் என்ற கனவும் இவரிடம் இருக்கிறது.

தனது பணிகளுக்கு இடையே  நாங்கள் கேட்டதும் மறுக்காமல் பதில் தந்த எழுத்தாளர், காற்றுவெளி ஆசிரியர் அண்ணன் முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி.

அவரின் வலிகளையும் வாழ்க்கையையும் வாசிக்க, கேள்விகளோடு பயணமாகுங்கள்.

தங்களின் இளமைப் பருவம் பற்றி?

என் இளமைக்காலம் யாழ்ப்பாணம், திருகோணமலை என் தந்தையின் தொழில்துறை சார்ந்து வாழவும்,அங்கு கல்வி பயிலும் சூழலும் இருந்தது. நிரந்தரமாக யாழ்ப்பாணம் (கல்வியங்காடு) வந்து வாழ்ந்தோம். அங்கிருந்துதான் கல்வியும், கலை இலக்கிய வாழ்வும் என்னுடன் பயணித்தது எனலாம். நண்பர்களுடன் உதைபந்தாட்டத்தில் ஆர்வம் இருந்தாலும், நண்பர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகள் என்னையும் ஆகர்சிக்கவும், நண்பர்களுடனும், இதழாசிரியர்களுடனும் இணைந்து பயணிக்கவும் முடிந்தது. குறிப்பாக சிரித்திரன் ஆசிரியர் அமரர் .சிவஞானசுந்தரம், மேகம் இதழாசிரியர் கணபதி கணேசன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்களாயினர்.

 

இரா. மகேந்திரன் முல்லை அமுதன் ஆனது எப்போது? எதனால்?

இளமைக்காலம் என்பது  சுவாரஸ்யம் நிறைந்ததாக இல்லை. எழுத்தாளனாக, கலைஞனாக வளர பெற்றோர்களுடன் உறவுகளும் அனுமதிக்கவில்லை. ஆதலால் புனைபெயரின் அவசியம் உணரப்பட்டது. இ.மகேந்திரன், இரா.மகேந்திரன் சோபா என ஆகி முல்லை அமுதனாகி இன்று உங்கள் முன் நிற்கிறேன். அதற்குள் வலிகள், ஏமாற்றம் என நிறையவே அடங்கியுள்ளது. இப்போது இயற்பெயரை விட புனைபெயரே நிரந்தரமாகிவிட்டது.

நித்திய கல்யாணி என்னும் கவிதை நூலே தங்களின் முதல் படைப்பு என்று நினைக்கிறோம், அது குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நாடகம், கவியரங்கம் என என் இலக்கிய முயற்சிகளின் தொடர்ச்சியாக நண்பரும் எழுத்தாளருமான ராதேயனின் நெறிப்படுத்தலில் கவிதைகள் தொகுக்கப்பட்டு சிரித்திரன் காரியாலயத்தின் அச்சகத்தில் (கவின் அச்சகம்– 1981) அச்சிடப்பட்டும் வெளியிடப்பட்டது. நித்யகல்யாணி கவிதை நூல் பலரின் கைகளுக்கும் சென்றடந்ததும், பல நூலாசிரியர்கள் / இதழாசிரியகளுடனான நட்பும் விரிவாக்கம் பெற்றது. அக்காலம் பொற்காலமே.

கவிதைகள் மட்டும்தான் அதிகம் எழுதுவது போல் தெரிகிறது..? எதனால்? ஏன்?

நாடகங்களிலிருந்து கவிதைக்கு நகர்ந்து நூலுருவாக்கத்தின் பின்னரும், தொடர்ந்து வந்த இளமைக் காதல், ஈழத்தின் அரசியல் மாற்றங்கள், இனமுரண்பாடு, யுத்தம், இடப்பெயர்வு, துன்பம், நண்பர்களின் பிரிவுகள் இன்னோரன்ன பிறவும் கவிதைகள் மீதான ஆர்வம் அல்லது விருப்பம் / கரிசனை  இலகுவாக்கித் தர கவிதைகளும் இலகுவாயிற்று. கூடவே, கவிஞர்களே நண்பர்களாயும் அமைந்தனர்.

சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள். நாவல்கள் எழுதியதுண்டா..?

ஆத்மா, யாகம், விமோசனம் நாளை, ஸ்நேகம், பட்டங்கள் சுமக்கின்றான் என்பன நாவல்களாகும். இவ்வருடம் நாவல்கள் வெளியிடப்படவுள்ளன.

தங்களின் ‘யுத்தகாண்டம்‘, ‘விமோசனம் நாளை‘ போன்ற படைப்புகள் ஈழத்துப் பிரச்சினையைப் பேசிய படைப்புக்களா? அது குறித்துச் சொல்லுங்களேன்.

ஈழத்தில் வாழ்ந்தவனின், ஈழக் கனவுகளுடன் வாழ்பவனின், சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டும், இன்னும்… இன்னும் அவலங்களையே கண்டும், கேட்டும் நோயாளியாகிப்போன  படைப்பாளனின் படைப்புகள் தவிர்க்கமுடியாதபடி  அவை பற்றி ஆங்காங்கே பேசியே செல்லும் என்பதே உண்மை.

தாங்கள் ஈழத்து நூல் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்துகிறீர்கள்… அவற்றை ஆவணமாக்குறீர்கள். இந்த எண்ணம் எப்படி வந்தது?

அது ஒரு கனவு. எழுத்தளனாக, சக படைப்பாளியை நேசிக்கின்றவனாக, யுத்தம் தின்ற பூமியிலிருந்து வந்தவனின் தீராக் கனவும், அடுத்த தலைமுறைக்கும் நமது படைப்புக்களை எடுத்துச் செல்லும் முயற்சியே அது (ஈழத்து நூல்களின் கண்காட்சி). பலரும் பாராட்டிய செயல்பாடு அது. இப்போது போல இணைய வசதிகளின் மூலம் அதிகம் பேசப்படவில்லை என்பது வருத்தமே. அப்போது அது பற்றி பேசவும், தாங்களே எல்லாம் என நினைப்பவர்களின் முன்னே எனது செயல்பாடு / கனவு தகர்க்கப்பட்டதுடன்  சுதாகரித்துக்கொண்டு மௌனமாகிவிட தீர்மானித்து நிறுத்திக்கொண்டேன். ஈழத்ததமிழர்களுக்கான நூலகமாகியிருக்கும் சூழலின் கனவும் தகர்ந்துபோயிற்று.

சொந்த மண்ணில் இருந்து புலம்பெயரும் வலியை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ஈழத்தமிழர்களின் துன்பம், துயரம்,               வாழ்விற்காக ஓடும் சூழல், வலிகள் நிறைந்தவர்களுடன் நானும் நகர்ந்தும், ஒடியும், ஒளிந்தும், காட்டிக் கொடுப்பவர்களிடமிருந்தும், சப்பாத்துக்காரர்களிடமிருந்தும் தப்பித்து இன்னொரு முகமறியா தேசத்தில் என்னை நிறுவிக்கொண்டாலும் இன்னும் அகதி எனும் உள்ளுணர்வு. இது என் நாடு இல்லை எனும் உணர்வு / பயமும் கூட…வலிகள் தான்.

லண்டனின் வசிக்கும் தாங்கள் கற்றதும் பெற்றதும் என்ன?

கைகளில் எல்லாம் கிடைக்கிறது… சுதந்திரமாக நடமாடவும், நம்பிக்கையுடனும் வாழமுடிகிறது. பிள்ளைகள் சுதந்திரமாக கற்கிறார்கள். உறவுகளின் அன்பையும் எதிர்கொள்ளும் கம்பீரம் இருக்கிறது. ஆனாலும் உள்ளுற அகதி என ஆழ் மனத்தில் இருக்கும் உணர்வும், எப்போதாவது களச்சூழல் மாற்றம் பெறுமாயின் நாம் துரத்தப்படலாம் என நினைக்கையில் நமது நிலம்…? பலவற்றை கற்றிருக்கிறோம்… மண்ணிலிருந்து எழுதும் எழுத்துக்கும், புலம் பெயர்ந்த பின் மண்ணின் சுகந்தம் மறந்து எழுதுகையில் யாவும் தூரமாய் போன உணர்வே மிஞ்சுகிறது. கற்றதை விட இழந்தவைகள் இங்கு அதிகம் தான். வாழும் மண்ணுடன் ஒத்துப்போகாமலும், ஊரே அந்நியமாகிவிட்ட காலத்தில் புலம்பெயர்ந்து வாழவேண்டியிருக்கிறது.

 

இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என எதைச் சொல்வீர்கள்?

இன்றைய காலத்தில் பலர்  எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள் என்பது மகிழ்வாய் இருக்கிறது. அதிகமாக நூல்களும், இதழ்களும் / பத்திரிகைகளும் அவற்றுக்கு  ஈடாக எழுத்தாளர்களும்  எழுதிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் அனுபவித்த துன்பம், கல்வி, காணும் உண்மைகள் / போலிகளின் காட்சிகள் எல்லாம் அவர்களின் எழுத்தில் காண்கிறோம். வாசகர்களும் அதிகமாகிய சூழலும் உள்ளதே. எனினும் அப்போதைப் போலவே இப்போதும் கையைச் சுட்டுக்கொள்வதும், பதிப்பாளர்களால் ஏமாற்றப்படும் நிலைமையும் இல்லாமல் இல்லை. இலங்கை, புலம்பெயர்  நிலத்தில் வாழும் படைப்பாளர்களின் அனுபவம் ஒன்றே என்பது என பார்வையாகிறது.

காற்றுவெளி இணைய இதழ் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது..? அதன் மூலம் கற்றதும் பெற்றதும் என்ன?

ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பித்த போது ஏற்பட்ட அனுபவம் ஒரு இதழின் தேவை என்னுள் விதையிட்டது. நினைத்த போது வெளிவரும் இதழாக வெளிவந்து, பின்னர் இணைய இதழாக மாதாமாதம் வெளிவந்து கொண்டிருப்பதும், நிறைய வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாதது. படைப்பாளர்களை ,படைப்புக்களை வாசிக்கும் போதும் ஏற்படும் உணர்வு கூட காற்றுவெளியால் பெருமையடைவதைத் தவிர வேறென்ன சொல்லிவிடமுடியும்.

இன்றைக்கு வெளிவரும் இணைய இதழ்களில் காற்றுவெளிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அதைத் தக்க வைத்துக் கொள்ள தாங்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்துச் சொல்லுங்கள்?

இன்றைய இதழியலாளர்களின் கனவுகளில் ஒன்று சிற்றிதழ் ஒன்றை தரமாக, பலரிடம் சென்று சேரவேண்டும் என்கிற நினைப்புடன் வெளிக்கொணரும் ஒவ்வொரு இதழையும் நடத்துவது இயலாமல் போய்விடுகிறது. அந்த நினைப்பே இணைய இதழுக்கு மாறிவிட உந்தப்படுகிறான். சிற்றிதழ் நண்பர்களுக்கிடையே பரவலாகும். பலரிடம் சென்றைடையும் வாய்ப்பும் அதிகமில்லாது போகலாம். சந்தா, விளம்பரம், அன்பளிப்பு சில சமயம் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடலாம். சில சமயம் சுய கௌரவத்தை (பணம் கேட்கையில்) இழக்காத சூழல் இணைய இதழுக்கு இல்லாமலும் போகலாம். காற்றுவெளிக்கும் அனுபவம் உண்டு.. இதழில் படைப்புக்கள்  தரமாக வரவேண்டும் என்பதே உள்ளுணர்வாக இருக்கும். இணைய இதழும் விதிவிலக்கல்ல. ஆனாலும் மூலை   முடுக்கெல்லம்  இதழ் சென்று சேர்வதும் இதழாளனுக்கு கிடைத்த வெற்றி என்பேன். மாறாக ஒவ்வொரு இதழுக்குமாக மேலதிகமாக உடல் உழைப்பை கொடுக்கவேண்டும். காற்றுவெளிக்கு ஓருவரைத்தவிர சந்தா என்பதை இல்லை என்பதும், புலம் பெயர் சூழலில் இலவசங்கள் அதிகமாக இருப்பதால் காற்றுவெளியை அச்சிதழாக்கிவிட முயன்றும் முடியாமல் போக இணையவெளி கைகொடுக்கிறது. யாவும் சவால் தானே.

தாங்கள் பல கதைகளை வாசிப்பவர் என்பதால் இன்றைய எழுத்து எப்படியிருக்கிறது?

பலரின் படைப்புக்களை வாசிக்கக் கிடைப்பதில்லை. புலம்பெயர் வாழ்வில் ஓய்வு அதிகமில்லை என்பதும் உண்மையே. ஆனாலும் கிடைக்கும் நூல்கள் அல்லது வாசிப்பிற்கு கிடைக்கும் கதைகள் புதிய அனுபவங்களைச் சொல்லிச் செல்வதை உணர்கிறேன். இப்போது சிறுகதைகளைப் பிரசுரிக்கும் களங்கள் பெருகிவிட்டன. பெரும் பத்திரிகைகள்கூட அவ்வப்போது தேர்ந்தெடுத்து கதைகளைப் பிரசுரம் செய்வதால் எம்மைப் போன்ற வாசகர்களுக்கும் அவ்வெழுத்துக்களை வாசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாகி விடுகிறோம். நாம் எழுதத் தொடங்கியபோது வசதிகள் அதிகமில்லை. கையெழுத்துப் பிரதியை அப்படியே அனுப்பிவிடும் காலமே நமக்கு வாய்த்திருந்தது. இப்போது உலகமும் விசாலித்து இருக்கிறது. தரமான பிறமொழிக் கதைகளும் நம்மை வந்தடைகின்றன. விரல்நுனியில் உலகம் என்பது போல வாசிப்புத் தேடலுக்கான தீனியும் கதைகளாக கிடைக்கின்றன. வாசிப்பும் ஒரு பயிற்சிதானே. பல வருடங்களுக்கு முன்னர் கதைகள் பற்றிய எனது கருத்துக்களை கட்டுரையாக்க முயன்றேன். கசப்பான அனுபவங்களைப் பெற்றமையால் அக்கட்டுரை முழுமையாகாமல் மௌனமாக்கப்பட்டுவிட்டது.

தற்போது எழுதுபவர்களுக்கு தாங்கள் சொல்ல நினைக்கும் அறிவுரை என்னவாக இருக்கும்?

விரல் நுனியில் உலகம் என்கிறோம். அறிவுரை சொல்ல, கருத்துக்கள் சொல்ல ஒரு அச்சம். பலரின் அடாவடித்தனங்களால் காயப்பட்டவன். மௌனமாக,ஒரு சிறு புன்னைகயுடன் கடந்து செல்லவே பிரியப்படுகிறேன். துணிச்சல் இல்லை என்பது அர்த்தமல்ல.

மேலும், நன்றாக எழுதுகிறார்கள். அவர்களுக்குள் ஒரு தேடல் எப்போதும் இருக்கும். கண்முன்னே நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவையே அவர்களை வழி நடத்தும் என்பது இப்போதைய எனது நம்பிக்கை.

 

அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் தாங்கள் நடத்தும் இலக்கியப்பூக்கள் குறித்துச் சொல்லுங்களேன்.

2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நண்பர்களால்  உருவாக்கப்பட்ட அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் கலை இலக்கிய இதழாக இலக்கியப்பூக்கள் நிகழ்வை கொண்டுவந்து தொடர்ச்சியாக நேயர்களுக்காக ஒலிபரப்பி வருகிறோம். வாராவாரம் கவிதை, சிறுகதை, உருவக்கதை, குட்டிக்கதை, நூல் அறிமுகம் இலக்கிய ஆய்வு, பாடல் என நிகழ்ச்சி அமைகிறது. படைப்பாளர்களின் குரலிலான படைப்புக்களும் இணைக்கப்படுகின்றன. சிறப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபனின் நினைவுகளுடன் நமது தேசியத்தலைவரின் அகவை வாழ்த்து சிறப்பு நிகழ்வு, மாவீரர்களின் நினைவு சுமந்த நிகழ்வு என சிறப்பு நிகழ்ச்சிகளும் இலக்கியப்பூக்களில் இணைக்கப்படுகின்றன. இது நமது தேசியக் கடமையாக நினைக்கிறேன்.

தாங்கள் எழுத நினைத்து எழுதாமல் இருக்கும் படைப்பு எதுவும் இருக்கிறதா? அதை மீண்டும் எழுதும் எண்ணம் உள்ளதா..? அப்படியெனில்  அதை எப்போது எதிர்பார்க்கலாம்..?

கற்பனை, அனுபவங்களைக் கடந்தே வாழ்ப்பழகிக் கொண்டோம். இவற்றுள் காற்றோடு போனவை அதிகம். ஈழப்பிரசினையை மையமாகக் கொண்டு ‘இருட்டு மனிதர்கள்‘ நாவல் அச்சிடப்பட்டு இராணுவ சுற்றிவளைப்பு காரணமாக மூலப்பிரதியுடன் எரிக்கப்பட்டுவிட்டிருந்தது. மல்லிகை ஆசிரியரிடமும், இன்னொரு அச்சகத்திலும் கவிதை நூலுகான, சிறுகதைக் நூலுக்கான கையெழுத்துப் பிரதிகள் கொடுத்தும் வெளிவரவுமில்லை. தொலைத்தும் விட்டிருந்தார்கள். யுத்த கால இடப்பெயர்வில், தட்டச்சு செய்ய கொடுத்த இடத்தில், இப்படியாக பிரதிகள் தொலைந்து போக கரையானும் தன் பங்கை விட்டுவைக்கவில்லை. படைப்பாளனின்  உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத உறவுகளின் அசண்டையீனமும்  முதன்மைக்காரணம். யாவற்றையும் மீளப்பெறவே முடியவில்லை. சிறுகதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். என் காலத்தில் வெளிவந்துவிடவேண்டும். இன்னும் ஒரு நாவல் ஒன்றையும் வெளியிட ஆவலாக இருக்கிறேன்.

காலமும் தேகமும் ஒத்துழைக்குமானால்..?

விண்மீன் இதழுக்கான என் நன்றியுடன்,

முல்லை அமுதன்.

தொகுப்பு : எழுத்தாளர் பரிவை சே. குமார்

You Might Also Like

கலைமகள் கதம்பம் – ஜி.ஏ.பிரபா
தலையாட்டி பொம்மை
அதர்ப்பட யாத்தல் – முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி
ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – மருத்துவர் பிரியதர்ஷினி
கணவாயும் குளங்களும்!!! நிஸ்வா – பகுதி 6
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஜனவரி 2026
Previous Article Vinmeen Jan 2026 வரலாறு
Next Article பால்யகால சகி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?