- உங்களது பின்னணி பற்றி சிறிது கூற முடியுமா? இலக்கிய மொழிபெயர்ப்பாளராக நீங்கள் எப்படி ஆனீர்கள்?
கவிதை படிப்பது, எழுதுவது எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழும். கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டே எழுத்து மரபுடைய தமிழ்மொழி பேசும் எல்லாரும் கவிதை மரபுக்குரியவர்களே. தடுக்கி வழுந்தால் கவிதையில் விழுமளவிற்கு எண்ணிலடங்கா கவிதைகள் கொண்டது தமிழ்மொழி. தமிழ் இலக்கிய மரபு கவிதை வடிவத்திலிருந்தே தொடங்குகிறது. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பிய காலத்திலிருந்தே மொழிபெயர்ப்புக்கான வரையறை உள்ளது. இன்று மொழிபெயர்ப்பு உலகில் கூறும் Transliteration என்பது, தற்சமம், தற்பவம் என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. சென் கவிதை மொழிபெயர்ப்பில் தமிழ் இலக்கண, இலக்கிய மரபைப் பேசக் காரணம், தமிழ்தான் என்னைப் புலம்பெயர வைத்தது, வைத்துள்ளது; வைக்கும். என் அப்பா செளந்தர ராஜன், அம்மா ஈஸ்வர வடிவு. அம்மா பணிபுரிந்த, கூடல் நகரிலுள்ள புனித அந்தோணியார் பள்ளிக்கு அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே சென்றேன். ஆறாம் வகுப்பில் இருந்து திருக்குடும்பப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிதேன். பத்தாம் வகுப்பில் பள்ளியளவில் இரண்டாம் இடம் எடுத்த என்னை, வழக்கம் போல டாக்டராக்கும் முடிவுடன் மேனிலைப்பள்ளியில், கணிதம், உயிரியல் படிக்க வைத்தார்கள். ஆனால் நான் விரும்பிய, மதுரையின் புகழ்பெற்ற சேர்க்கவில்லை. இத்தனைக்கும் என் மதிப்பெண் காரணமாக, எங்கள் பள்ளி தாளாளர் சொல்லி, அப்பள்ளியின் தாளாளர் என்னை அங்கே சேர வரச்சொல்லி விட்டார்கள். ஆனால் என் அப்பா அப்பள்ளிக்கு பள்ளிப்பேருந்து இல்லை என்று சொல்லி சேர்க்க மறுத்துவிட்டார். அப்பா சேர்த்ததும் நல்ல பள்ளிதான். ஆனால் என் சுழி விடவில்லை. அப்பள்ளியிலும் என் தோழிகள் எல்லாம் வணிகவியல் படித்ததால் நான் பெரும்பாலும் அங்கேதான் இருப்பேன். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். வகுப்பில் நன்றாக பதில் சொல்லும் நீ, தேர்வில் ஏன் எழுதவில்லை என்பார்கள் ஆசிரியர்கள். வீட்டில் மருத்துவராக்கக் கண்ட கனவு நடக்கவில்லை. நான் பெற்ற மதிப்பெண்ணிற்கு அது நிகழ வாய்ப்பில்லை. அப்போதுதான் தனியார் பொறியியல் கல்லூரிகள் வரத்தொடங்கிய காலம். என் தோழியின் அம்மா என்னைத் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்க்கச்சொல்லி மிகவும் பரிந்துரைத்தார். அதிக செலவாகும் என்று அம்மா மறுத்துவிட்டார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நானும் வற்புறுத்தவில்லை. ஆசிரியராகயிருக்கும் என் அண்னன் இயற்பியல், வேதியியல் படிக்கச் சொன்னான். அம்மாவுடன் பணிபுரிந்த, என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களெல்லாரும் என்னை ஆங்கிலம் படிக்க வைக்குமாறு என் அம்மாவிடம் சொன்னார்கள். ஆனால் அப்பா என்னைத் தமிழ் படிக்கச் சொன்னார். இத்தனைக்கும் நான் தமிழைவிட ஆங்கிலத்தில்தான் அதிக மதிப்பெண். நான் அந்த நேரத்தில் புதிதாக வந்த கேட்டரிங் டெக்னாலாஜி படிக்க ஆசைப்பட்டேன். நான் எதற்குமே விண்ணப்பிக்கவில்லை. இருந்தாலும் அப்பா, என்னைத் தமிழ் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார். பாண்டித்துரை தேவரின் மாளிகையின் படிக்கட்டில் அமர்ந்து அப்பா இதையெல்லாம் சொன்னார். அது, மதுரைத் தமிழ்ச்சங்கம். இப்பொழுது (1998) கலைஞர் ஐயாவின் ஆட்சி.(இத்தனைக்கும் அப்பா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்) கலைஞர் ஐயா ஆட்சியில் தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும், தமிழ் படித்தால் வெளிநாடுகளில் தமிழாசிரியராகச் செல்லலாம் என்றெல்லாம் சொல்லித்தான் என் அப்பா தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்த்துவிட்டார்.
அம்மா, பெரியம்மா, சித்தி, அக்கா, அண்ணன் என அனைவருமே பள்ளி ஆசிரியர்கள். தமிழ் படித்த நான் பள்ளி ஆசிரியராகக் கூடாது, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியராக வேண்டுமென முடிவு செய்தேன். முதுகலை படிக்கும் போது ஆட்சிப்பணித் தேர்வுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. முனைவர் பட்டம் மேற்கொள்ளவே விரும்பினேன். 2005ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவித் தொகையில் முனைவர் பட்டம் மேற்கொண்டேன். அப்போதே பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். சிவகாசியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பணி, அப்பாவின் திடீர் மறைவு. பின் திருமணம், சில ஆண்டுகள் கழித்து, காதல் கணவர் சரவண ஜோதி அவர்களுடன் மலேசியா பயணம். மலேசியாவில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பெற்றேன். குடும்பத்தோடு மலேசியா பயணம். 2013 திசம்பர், என் மகன் சர்வேஷ்வருக்கு மூன்று வயது, என் மகள் சாகித்யா பிறந்து ஏழு மாதம் தான் ஆகியிருந்தது. ஆகையால் என் அம்மாவும் எங்களுடன் வந்தார். மலேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய நொடி, என் அப்பாவை நினைத்தேன். அப்போது அங்கே ஒரு காகம் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் நின்றது. அம்மாவிடம் காண்பித்தேன். அது உங்க அப்பாதான். உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். அதன் பிறகு மலேசியாவிலிருந்த நான்காண்டுகளில் ஒருநாள் கூட நான் காகத்தை பார்க்கவே இல்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது. எதற்கு இவ்வளவு கதை என்றால், இப்படித்தான் நாட்டை விட்டான முதல் புலம்பெயர்வு எனக்கு நிகழ்ந்தது. என் கணவருக்கு மதுரையில் தியாகராசர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நிரந்தரப்பணி கிடைத்தது. நான்காண்டுகள் மலேசியப் பணிக்குப் பின் 2018 ஜனவரி மதுரையில் நிம்மதியாகக் கூட்டைந்தேன். அடுத்த புலம்பெயர்வாக 2018 மார்ச் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் பணி கிடைத்தது.
“நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ….”- புறநானூறு 192
என்ற இந்தப் பாடலை என் வாழ்வின் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்வின் போதும் நினைப்பேன். வாழ்க்கையின் போக்கை நாம் திட்டமிட முடியாது. வாழ்க்கை போகும் போக்கில் நாம் சென்றுதான் ஆகவேண்டும்.
- மற்ற துறைகளின் மொழிபெயர்ப்பை விட இலக்கிய மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்ய உங்களை ஈர்த்தது என்ன?
என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்கு அ.சீநிவாசராகவன் அவர்களின் படைப்புகளை எடுத்துக் கொண்டேன். தமிழில் கவிதைக்காக முதன்முதலில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். ஆங்கிலத் துறை பேராசிரியரான அ.சீ.ரா., ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் , தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், வடமொழியிலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆய்வு அடிப்படையில் இலக்கிய மொழிபெயர்ப்பை அணுகியதால் இலக்கிய மொழிபெயர்ப்பின் மீது விருப்பம் ஏற்பட்டது. எம் தமிழ்ப்பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறையில் 2018 லிருந்து இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.ஆய்வுத்திட்டப் பணிக்காக சென் கவிதைகளை மொழிபெயர்க்கத் தேர்வு செய்தேன். பி.ஜி. சரவணன் முகநூலில் பதிவிடும் சென் கவிதைகளுக்கு ஆசிரியர் திரு சுரேஷ் காத்தன், முகநூல் பிரபலம் இளங்கோவன் முத்தையா, நான் மூவரும் மொழிபெயர்ப்பை கமெண்ட்டில் எழுதுவோம். அப்படியே விளையாட்டாகப் படிக்க, படிக்க எனக்கு சென் கவிதைகள் மீதான விருப்பமும் தேடலும் உருவாகியது.
- நீங்கள் முதல் முறையாக மொழிபெயர்த்த நூல் அல்லது படைப்பு எது? அந்த அனுபவம் எப்பது இருந்தது?
படைப்பு எனும் பொழுது நான் முதல் முறையாக, முழுமையாக மொழிபெயர்ப்பு செய்தது தோகென் சென்சி கவிதைகள் – புலம் பெயரும் பறவை என்ற நூலும் பிச்சைப் பாத்திரத்தில் வயலட் மலர்கள் (ரியோகன் கவிதைகள்) ஜென் கவிதைகள் ஆகியன. ஊடகம் எனும் பொழுது அகிரா குரோசாவாவின் Red Beard எனும் திரைப்படத்தின் துணைத்தலைப்பு மொழிபெயர்ப்பு ஆகும். மருத்துவப் பின்னணி உடைய இப்படம் 1965 ல் வெளிவந்தது. நான் மொழிபெயர்த்த வெர்ஜீனியா உல்ஃப்பின் சிறுகதைகள், நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளரான செல்மாவின் கதை, நோபல் பரிசு பெற்ற ஆக்டேவியா பாஸ் ஆகியன உயிர்மை மார இதழில் வெளி வந்துள்ளன.
சென் கவிதை மொழிபெயர்ப்பு அனுபவத்தைச் சொல்ல வேண்டுமானால் நான் மொழிபெயர்த்த சென் தோகென் கவிதையின் வழி கூற விரும்புகிறேன். சென் கவிதைகள் குறியீடுகள் நிறைந்தவை.
சில நாற்பதாண்டுகள் ஏற்கனவே
கடந்து விட்டன
முயலின் பாதையிலும்
காகத்தின் பாதையிலும்
நடக்கிறேன்.
இக்கவிதையில் முயல், காகம் என்பது எதைக் குறிக்கிறது என்று பார்த்த போது, சென் மரபில் அதற்கான விளக்கம் கிடைத்தது.
முயல், காகம் :
முயல் என்பது நிலவையும் காகம் என்பது சூரியனையும் குறிக்கிறது. நிலவில் முயல் இருப்பதாகவும் சூரியனில் மூன்று கால்களையுடைய காகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முயல், காகத்தின் பாதை என்பது இரவும் பகலும் தொடர்ந்து வருவதைக் குறிக்கும் குறியீடாகும். மேலும் இது எல்லையில்லாத வெளியையும் குறிப்பிடும்.
பன்னெடுங்காலத்திற்கு முன்னர் ஜப்பானில் ஒரு பகலும் இரவும் 12 மணிநேரமாகவும் அதற்குப் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரும் இருந்தன. தோகென்னின் ஆறாவது தலைமுறை வழித்தோன்றலான தாய்ச்சி சோகேய், 12 மணி நேரத்திற்கான புத்த சமயப் பயிற்சி எடுப்பவர்களுக்கு இந்தக் குறிப்பை எழுதி வைத்திருக்கிறார். புலி (அதிகாலை 3–5), பசு (நள்ளிரவு 1-3) வரை 12 விலங்குகளின் பெயர் ராசிகளுக்கு உள்ளதைப் போலவே வழங்கப்பட்டுள்ளது. புத்த சமய முன்னோடிகளைப் போலவே இந்தப் பகலிலும் இரவிலும் தொடர் பயிற்சி மேற்கொண்டால் இருபது, முப்பது வருடங்களாக, வாழ்நாள் முழுவதும் பயிற்சி எடுப்பது ஒன்றுமே இல்லை.
இக்கவிதையை மொழிபெயர்த்த போது இதை நான் அடிக்குறிப்பாகக் கொடுத்துள்ளேன். இவ்வாறு படைப்பின் பின்புலத்தை ஆராய்ந்து மொழிபெயர்க்கும் அனுபவத்தைப் பெற்றேன்.
4. மொழிபெயர்ப்பளராக பணியற்றியதால் உங்கள் வாசிப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டதா?
இலக்கிய வாசிப்பு எனும் பொழுது ஒரு நாவலை முழுமையாக வாசிப்பது என்பது மிகவும் குறைவு ஏனென்றால் பாதி நாவலை வாசிக்கும் பொழுதே அதன் முடிவு தெரிந்துவிடும். சிறுகதைகள் எனும் பொழுது புதுமைப்பித்தன் சிறுகதைகள் வாசிப்பதுண்டு பொன்னகரம் போன்ற கதைகள் எல்லாம் இன்றளவும் சிறப்பான படைப்பாகும். அதை கடந்து என்னுடைய ஈடுபாடு என்பது கவிதைகள் தான் அதன் ஈர்ப்பாகத் தான் கவிதை மொழிபெயர்ப்பை எடுத்தேன். பெரும்பாலும் நான் பிறமொழி இலக்கியங்களை வாசிப்பது உண்டு உதாரணகாக பெண் எழுத்துக்களைப் பார்க்கும் பொழுது கன்னட மொழி படைப்பும், தெலுங்கு மொழி படைப்பும், மலையாள மொழி படைப்பும், மலேசியாவில் உள்ள படைப்பும் மற்றும் தமிழ் மொழியில் உள்ள படைப்புகளையும் வாசிக்கும் பொழுது ஒரு பரந்துப்பட்ட பார்வை நமக்கு கிடைக்கிறது. இந்த மொழிபெயர்ப்புத்துறைக்குள் வந்த பிறகு வெளிநாட்டுப் படைப்புகள் மற்றும் வெளி மாநிலப் படைப்புகளை வாசிக்கிறேன்.
5. இலக்கிய மொழிபெயர்ப்பாளராக வர விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?
மொழிபெயர்ப்பு என்பதை எல்லோரும் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை. மொழிபெயர்ப்பு என்பது , ‘அரிசியை என் வாயில் போட்டு விட்டு அதன் சுவையை நீ உணர்கிறாய்’ என்று சொல்வதைப் போன்றது என்பார்கள். மொழிபெயர்ப்பில் மிக சிக்கலானது கவிதை மொழிபெயர்ப்பாகும் எனினும் நான் கவிதை மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்க காரணம் கவிதைகள் மீதான என் விருப்பமாகும்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு நான் சொல்வது படைப்பின் சூழலைப் புரிந்துக்கொள்ளுங்கள், அதன் கருத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் கவிதையோ, சிறுகதையோ, நாவலோ எதுவாக இருந்தாலும் படைப்பை வரலாறு, பண்பாடு என்று பல நிலைகளில் முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
6. பதிப்பகத் துறையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கிறதா?
மொழிபெயர்ப்பும் ஒரு புதுப்படைப்பே என்பது அ.சீ.ரா அவர்களின் கருத்து. படைப்பாளர்களுக்குத் தரும் அங்கீகாரம் அளவிற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் மூலமொழி ஆசிரியரின் பெயர் அட்டைப்படத்தில் பெரிதாக இருக்கும், மொழிபெயர்ப்பாளருடைய பெயர் உள்பக்கத்தில் இருக்கும் இதுமாதிரியான சூழல் முன்பு இருத்திருக்கிறது ஆனால் இப்பொழுது குறைந்திருக்கிறது. தற்பொழுது மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கும் சற்று பரவலாக விருதுகள் கொடுக்கப்படுகிறது அதனால் பதிப்பகத் துறையில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறது.
7. உலக இலக்கியத்தை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாக மொழிபெயர்ப்பின் பங்கு பற்றி உங்கள் பார்வை என்ன?
மொழிபெயர்ப்பாளர்கள் தான் வேறு வேறு உலகங்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றனர். மொழிபெயர்ப்பாளர்கள் தம் படைப்பிற்கு உண்மையாக இருக்க வேண்டும். மூல மொழியின் இயற்கை, மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பெறு மொழிக்குக் கொண்டு செல்கின்றனர்.
உலகில் 7159 மொழிகள் உள்ளன என்றும், அவற்றில் தோராயமாக 44% மொழிகள் 1000 பேருக்கும் குறைவான மக்களே பேசக் கூடிய அழியும் நிலையில் உள்ளன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 20 பெரிய மொழிகள் மட்டுமே உலகில் 3.7 பில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது உலகளவில் பேசக்கூடிய மொழிகளில் 0.3% மட்டுமே ஆகும். ஆனால் உலகின் பாதியளவு மக்களால் பேசப்படுகிறது. மற்ற மொழிகள் ஒடுக்கப்படுகின்றன. (https://www.ethnologue.com/insights/how-many-languages/) மொழிபெயர்ப்பு மட்டுமே எல்லா மொழிகளும் நிலைத்திருப்பதற்கான தீர்வு ஆகும். அறிவுசார் நூல்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து உலகிலுள்ள மொழிகளைக் காக்க வேண்டும்.
8. ஒரு மொழிபெயர்ப்பாளர் ‘கண்ணுக்குத் தெரியாதவர் போல் இருக்க வேண்டுமா, இல்லையெனில் அவருடைய படைப்பாற்றலும் வெளிப்பட வேண்டுமா?
ஒரு மொழிபெயர்ப்பு படைப்பு மொழிபெயர்ப்பு படைப்பாகத் தெரியக்கூடாது ஆனால் அது மொழிபெயர்ப்பு படைப்பாக தெரிய வேண்டும் என்பார்கள். இது மொழிபெயர்ப்பிற்கான அடிப்படைக் கோட்பாடு.ஆனால் வாசகர் வாசிக்கும் பொழுது மொழிபெயர்ப்பு படைப்பு என்ற உணர்வு ஏற்படாத வகையில் அமைய வேண்டும். சில நேரங்களில் மொழிபெயர்ப்பாளன் மீது விமர்சனங்கள் கடுமையாக வருகிறது. எனினும் ஒரு மொழிபெயர்ப்பாளன் தன்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும்.
தொல்காப்பியம் பனை ஓலையில்
9.மொழிபெயர்ப்பு எப்போது தோன்றியது? உலகளவில்
தமிழில் மொழிபெயர்ப்பின் தோற்றம் எப்போது?
மொழி தோன்றிய போதே மொழிபெயர்ப்பும் தோன்றியது. மொழியை மட்டுமல்லாது குறியீடுகள், பாவனைகள் ஆகியவை சொல்லும் செய்தியை மொழி வடிவில் தருவதும் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. ‘Translation
services is as old as language itself’ என்று அதனால் தான் சொல்லப்படுகிறது. தமிழ் மொழியில், தொல்காப்பியர் காலத்திலேயே மொழிபெயர்ப்பு என்ற தொடர் மரபியலில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே.”
(தொல்காப்பியம் : பொருள் : மரபியல் :98)
‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்பது வேற்று மொழிப் படைப்பினைத் தமிழுக்கு ஆக்குதல் என்ற பொருளில் இங்கு வழங்கப்பட்டுள்ளது. திசைச் சொல்(Dialect ) வடசொல் (Sanskrit) என்பனவற்றிற்கான இலக்கணம் சொல்லும் நிலையிலும் தமிழ்ப் படுத்தும் நிலை பற்றித் தொல்காப்பியர் பேசுகிறார். இவ்வடிப்படையில் தமிழில் மொழிபெயர்ப்பு என்ற சொல்லை தமிழ் மொழியில் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே இடம்பெற்றுள்ளது. அகச்சான்று இவ்வாறு இருக்க, புறச்சான்றாக சின்னமனூர்ச் செப்பேடு வேற்று மொழியிலிருந்து தமிழில் நிகழ்ந்துள்ள மொழிபெயர்ப்பினைச் சுட்டுகிறது.வடமொழியிலிருந்து பல நூல்கள், தண்டியலங்காரம், பாரதம் போன்றன தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப் பெற்றன.
‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்’
என்று வரும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகள் தமிழில் வேற்று மொழி படைப்புகள் மொழிபெயர்க்கப் பட்டமையைக் குறிப்பிடுகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதல் பாடல் :
சங்க இலக்கியம் தமிழின் தொன்மையை உணர்த்தும் அகச் சான்று. கீழடி, மயிலாடும்பாறை ,
கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய தொல்லியல் தடயங்களும் செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளும் தமிழினத்தின் தொன்மையை, உண்மையை உணர்த்தும் புறச் சான்றுகள் ஆகும். தம்மபதத்தில் இடம்பெற்றுள்ள பாலி மொழியில் அமைந்த,
“காமே வா யதி வா ரஞ்ஞே
மிந்நே வா யதி தலே
யஹதா அர்ந்தொ விஹரந்தி
தம் பூமிம் ராமணேய் யகம்.”
என்ற இப்பாடல், சங்க இலக்கியத்தில் அவ்வையார் பாடிய,
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”
– அவ்வையார் – புறநானூறு 187
என்ற பாடலை ஒத்துள்ளது என்று பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தம் ஆய்வில் கூறினார். பேராசிரியர் செ.வை.சண்முகம் பாலி மொழியிலிருந்து மொழியாக்கம் –
‘Transcreation’ செய்யப்பட்டது என்று கூறினார். இவ்விரு பாடல்களையும் ஒப்பிடுகையில்,
தம்மபதம் | புறநானூறு |
கிராமம் ஆயினும் பள்ளம் ஆயினும் எங்கே முனிவர்கள் அந்த நிலம் | நாடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் (நிலமே) எங்கு அங்கு (நீ) நல்லதாய் – அவ்வையார் |
அவ்வையார் , புத்தரின் பாடலை மொழி பெயர்த்தாகக் கூறுவர். ஆனால், அவ்வையின் காலம் தம்மபதத்தின் காலத்தின் முந்தையது. அதனால் தான் அவ்வையார்,
“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்று கூறியுள்ளார். தம்மபதத்தின் பாடல் முனிவர்கள் பற்றி பேசுகிறது. அவ்வையார், ‘ஆடவர்’ என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளார். சங்கத் தமிழரிடையே முனிவர், துறவு வழக்கம் இல்லையாதலால் தமிழில் இருந்தே இப்பாடல் பாலி மொழிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆகையால் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதல் சங்க இலக்கியப் பாடல் அவ்வையாரின் புறநானூற்றுப் பாடல் என்றும், பாலி மொழியில், தம்மபதத்தில் அப்பாடல் இடம்பெற்றிருக்கிறது என்றும் கூறலாம்.
கிடைத்தவற்றுள் மிகப் பழமையான மொழிபெயர்ப்பைக் கொண்டதாகக் கருதப்படுவது கி.மு.2 ஆம் ஆண்டைச் சார்ந்த. ‘ரொசட்டா கல்’ (Rosetta Stone) ஆகும். இக்கல், எகிப்தில் நைல் நதிக் கரையிலுள்ள ரஷீத் (Rashid) என்னும் ஊருக்கருகிலுள்ள கோட்டையினருகே கிடைத்தது. எகிப்திய மொழியில் ரஷீத் என்றழைக்கப்படும் ஊரின் பெயரே ரொசட்டா என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. அரசன் நெப்போலியன் போனோபெர்ட்டால்
1799 ல் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்லில் சித்திர முறையில் எழுதப்பட்ட பண்டைய எகிப்திய எழுத்து, டிமோட்டிக் எழுத்து, தொல் கிரேக்க எழுத்து ஆகியன உள்ளன. மூன்று மொழிகளிலும் ஐந்தாம் டாலமி (Ptolemy V, r. 204–181 BC) அரசர் பிறப்பித்த ஆணை எழுதப்பட்டுள்ளது. அரசரின் ஆணை பொறிக்கப்பட்ட கற்கள் படி எடுக்கப்பட்டு பல இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றன. சித்திர முறையில் எழுதப்பட்ட பண்டைய எகிப்திய மொழி இக்கல் கிடைக்கும் வரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்தது. இக்கல் கிடைத்த காலத்தில் பண்டைய கிரேக்க மொழி தெரிந்த அறிஞர்கள் இருந்ததால் அவர்கள் அதைக் கொண்டு சித்திர முறையில் எழுதப்பட்ட பண்டைய எகிப்திய எழுத்தைப் புரிந்து கொண்டனர். எகிப்தின் பண்பாட்டு, வரலாற்றுப் பதிவுகளில் ரொசட்டா கல் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது. இக்கல் 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ரொசட்டா கல் (Rosetta
Stone)
ரொசட்டா கல் (Rosetta Stone) – கி.மு.,2 – பிரிட்டிஷ் அருங்காட்சியகம், இலண்டன்
மேற்கத்திய நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய கிரேக்க நாட்டில் மொழிபெயர்ப்புக்கென அமைப்புகள் தோன்றின. கி.மு.240ல் லிவியஸ் அன்டோனிக்ஸ் என்பவர் ஹோமருடைய ஒடிசியை முதன்முதலில் கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தார். 24 பாகங்கள் கொண்ட ஒடிசி காப்பியத்தின் 17 பாகங்களிலிருந்து 46 சிதறுண்ட வரிகள் மட்டுமே கிடைத்தன. அதில் லிவியஸ், சில வரிகளை, சொல்லுக்குச் சொல்லாகவும், சில வரிகளை மொழியாக்கமாகவும் செய்திருந்தார். லிவியஸ் அன்டோனிக்ஸ் அவர்களின் ‘ஒடிசி’ மொழிபெயர்ப்பு வரலாற்றுப் புகழ் மிக்கது.
கி.மு.5 ஆம் நூற்றாண்டில் ‘நெகிமா’ என்னும் யூதத் தலைவர் அரபு மொழி பேசுகின்ற யூதர்களுக்காக ஈப்ரு மொழியிலிருந்து கிறித்தவத் திருநூலின் பழைய ஏற்பாட்டை அரபு மொழியில் மொழிபெயர்த்தார். கி.மு.250 இல் முதல் மொழிபெயர்ப்பு நிகழ்ந்தது என்று சில அறிஞர்கள் கூறினர்.
கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் அரபுக் கல்வி வளர்ச்சி பெருகத் தொடங்கிய சூழலில், அரேபியத் தலைநகரான பாக்தாத்தில் மொழிபெயர்ப்பு மையம் ஒன்று உருவானது. இந்த மையத்தில் அரபு மொழி நூல்கள் பல இலத்தீன் மொழிக்கு மாற்றப் பெற்றன. இலத்தீன் அறிஞர்கள்தாம் உலகில் பன்மொழி அறிந்தோரில் முதலிடம் பெற்றிருந்தனர் என உய்த்துணர முடிகிறது. காலப் போக்கில் இலத்தீனிலிருந்து பல மொழிபெயர்ப்புகள் தோன்றின. இந்நிலை அரசியல் மாற்றத்தால் நிகழ்ந்ததென வரலாறு விளம்புகிறது.
10. மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடக் காரணம் என்ன?
போப் டமாசஸ், புதிய ஏற்பாட்டினை எபிரேய மொழியிலிருந்து இலக்கிய நடையில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த இலத்தீனில் மொழிபெயர்க்குமாறு புனித ஜெரோம் பாதிரியாரைப் பணித்தார். புனித ஜெரோம் பாதிரியாரின் அணுகுமுறை ”சொல்லுக்குச் சொல்” முறையை விடுத்துப் ”பொருளுக்குப் பொருள்” என்னும் முறையிலேயே அமைந்திருந்தது. “not word for word but sense for sense” (“non verbum e verbo sed sensum de sensu”). இவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவருடைய நேர்த்தியான மொழிபெயர்ப்பு, பிறருக்குச் சேவை செய்யும் துறவு வாழ்க்கை ஆகியவற்றால் இவர் போப்பாண்டவராக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் அன்றைய மதகுருமார்களின் செயல்பாடுகளைப் பற்றி எள்ளலுடன் பேசியது அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கியது. புனித ஜெரோம் போப்பாண்டாவர் டமாசஸின் ஆதரவைப் பெற்றிருந்ததால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை. போப் டமாசசின் மரணத்திற்குப் பின் புனித ஜெரோம் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இறக்கும் காலம் வரை பெத்தலேகமில் தங்கி இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். ஆதரவற்றோருக்குப் புகலிடம் தந்தார். புனித ஜெரோம் பாதிரியாரின் நினைவு நாளான செப்டம்பர் 30 அன்று ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்’ கொண்டாடப்படுகிறது.
11. தற்போது மொழிபெயர்ப்பின் நிலை என்னவாக இருக்கிறது?
உலகமே ஒரு கிராமமாக மாறி விட்ட சூழலில் மொழிபெயர்ப்பு தான் குக்கிராமங்களை இணைக்கும் கோடாக இருக்கிறது. இயந்திர மொழிபெயர்ப்பு, செயற்கை நுண்ணறிவின் வழி மொழிபெயர்ப்பு ஆகியன பெருகி விட்ட சூழலில் இவையெல்லாம் அறிவுசார் நூல்கள் , எழுத்துகளுக்குப் பயன்படும். ஆனால் உணர்வுகளைக் கொண்ட இலக்கியத்தை மொழிபெயர்க்க மனித மூளையே பொருத்தமானது. மனித மனத்தை , உணர்வை மொழிபெயர்க்கும் கருவி எதுவும் இல்லை , இனி வர வாய்ப்பும் இல்லையாதலால் மனித மூளைக்கே சவாலான இலக்கிய மொழிபெயர்ப்பானது இன்றும் என்றும் மானுடர்களின் மொழிபெயர்ப்பால் மட்டும் தான் உலகம் எங்கும் பரவும்.
12. சமூக ஊடகங்களில் மொழிபெயர்ப்பின் பயன்பாடு எப்படிப்பட்டதாக இருக்கிறது?
சமூக ஊடகங்களில் இயந்திர மொழிபெயர்ப்பு என்பது முக்கிய இடம் வகிக்கிறது. இயல்பாகவும் எளிதாகவும் விரைவாகவும் ஒரு தகவலை மொழிபெயர்க்க இது பயன்படுகிறது. எனினும் இயந்திர மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது அது கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்கிறது இதுபோன்ற சிக்கல் ஊடக மொழிபெயர்ப்பில் இருக்கிறது.
13. செறிவான மொழிபெயர்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
மூலமொழி மற்றும் பெறுமொழியினை தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
சூழலை நன்கு உள்வாங்க வேண்டும், மூலமொழியின் வட்டார வழக்கு, பண்பாடு, கலச்சாரம் தெரிந்திருக்கவேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் தன்னை முழுமையாக மொழிப்பெயர்ப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
14. கலைச்சொல்லாக்கம் என்றால் என்ன? அது தேவையானதா?
ஒரு சொல்லோ, பல சொற்களோ,கூட்டுச் சொற்களோ குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படுவது கலைச் சொல் ஆகும். கலைச் சொற்களையும் அவற்றின் பயன்களையும் பேசுவது கலைச்சொல்லாக்கம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் முறைப்படி சொற்களை ,கருத்துக்களை உருவாக்குதல் கலைச்சொல்லாக்கம் எனப்படும். தற்போதைய உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகம். அறிவுசார் நூல்களைத் தாய் மொழியில் அறிய கலைச்சொல்லாக்கம் தேவை, கலைச்சொற்களை, தாய்மொழியில் மொழிபெயர்க்கும் போது அச்சொல் பரவலாக்கம் பெறும்.
காலந்தோறும் இவ்வுலகில் புதிய கொள்கைகள் தோன்றும் போதும், அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் போதும் கலைச்சொற்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அவ்வாறு கலைச்சொல்லாக்கம் நிகழும்போது தான் எல்லா மொழிகளும் உயிர்ப்புடன் இயங்க முடியும்.
வளர்ந்து கொண்டிருக்கிற அறிவியல் உலகில் கலைச்சொல்லாக்கம் தேவையானது. இந்தியாவில் தமிழ்மொழியில் தான் அதிகக் கலைச்சொற்கள் உருவாக்கப்படுள்ளது. பிறமொழிகளில் இருந்து அதிக சொற்களைக் கடன் வாங்குவதை விட சொந்த மொழியில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ளுதல் சிறப்பான ஒன்றேயாகும்.
15. மொழிபெயர்ப்பு தொடர்பான படிப்புகள் அவற்றின் தேவை என்ன?
மொழிபெயர்ப்புத் துறையில் முதுகலைப் படிப்பு இருக்கிறது. எனினும் தேசிய தகுதி தேர்வில் NET மொழிபெயர்ப்புத் துறை இல்லை எனவே ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கும் மாணவர்கள் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் குறைகிறது. மேலும் முதுகலைப் பட்டயம் மொழிபெயர்ப்பு எனும் படிப்பும் இருக்கிறது தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் மட்டுமே மொழிபெயர்ப்புத் துறையில் படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆங்கில வழியில் மொழிபெயர்ப்புப் படிப்புகள் வழங்கப்படுகிறன. IGNOU தேசிய அளவிலான கல்வி நிறுவனம் என்ற போதும் மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டத்தை இந்தி மொழியிலேயே வழங்குகிறது.
மேலும், ஊடக மொழிபெயர்ப்பு பற்றி பலருக்கும் தெரியவில்லை, Subtitle Translation முக்கியமான ஒன்றாகும். உலகளவிலான குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைபடங்களுக்கான விருதுகளுக்குச் செல்லும் படங்களுக்குத் துணைத்தலைப்பு மொழிபெயர்ப்பு (Subtitle Translation) அடிப்படைத் தேவையாக உள்ளது. Netflix, Amazon போன்ற நேரடிக் காட்சித் தளங்களில்(OTT) வெளியாகும் தொடர்கள், படங்களுக்கும் துணைத்தலைப்பு மொழிபெயர்ப்பு மேற்கொள்ள மொழிபெயர்ப்பு நம் இளைய தலைமுறை இதில் அதிகம் செலுத்த வேண்டும்.
இன்றைய உலகில் ஊடகத் துறையில் மொழிபெயர்ப்பாளருக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது ஆனால் வேறு துறை சார்ந்தவர்கள் அங்கு பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு மொழிபெயர்ப்புக் கல்வியை முறையாகப் படித்த மாணவர்கள் சென்றால் சிறப்பாக இருக்கும்.


