VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: “மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > “மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
நேர்காணல்

“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி

நம் வாழ்நாளில் எப்போதோ சந்தித்த கதாபாத்திரங்களுக்கு நாவலின் வழியே அழுத்தமாக உயிர் கொடுக்க முடியும்.

பரிவை சே. குமார்
Last updated: June 29, 2026 4:40 pm
15 Views
Share
28 Min Read
எழுத்தாளர் கரன் கார்க்கி
SHARE

‘மாயத்தின் விளைவுதான் உணர்வுபூர்வமான படைப்பு’

– எழுத்தாளர் கரன் கார்க்கி

 –பரிவை சே.குமார்

நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்வியலை, மறைந்து கிடக்கும், மறைக்கப்படும் வரலாற்றுத் தடத்தை எந்தவிதப் பூச்சுமின்றி தனது எழுத்தில் கொண்டு வரும் வடசென்னைக்காரர். நாம் கணாத, நம் கண் முன் காணாமல்போன வரலாற்றை எழுதுவதற்கு இங்கே எழுத்தாளர்கள் இல்லை என்ற குறையை நீக்கியதுடன் உண்மைக்கு மிக நெருக்கமான எழுத்தையும் கொடுப்பவர்.

இவரை நான் கண்டு கொண்டது ‘மரப்பாலம்’ என்னும் அவரின் இரண்டாவது உலகப்போர் காலத்தை கதைக்களமாக்கிய நாவலின் வழிதான். சென்னையில் ஆரம்பிக்கும் கதை, மலேசியாவில் பயணித்து சயாம் (தாய்லாந்து) – பர்மா (மியான்மர்) இடையே மரப்பாலம் கட்டுவதில் அடிமைகளாய் இருக்கும் தமிழர்களும் ஆங்கிலேயர்களும் படும் வேதனைகளை விவரிக்கும் விதத்தால் கவர்ந்த நாவல். இதன் வாசிப்பின் போதுதான் கரன் கார்க்கி எப்படிப்பட்ட எழுத்தாளுமை என்பதை உணர்ந்தேன். அது குறித்து நானெழுதிய விமர்சனப் பார்வையை வாசித்தபின் தொடர்பில் வந்தவர் இன்று வரை எனக்கு ஒரு அண்ணனாகத் தொடர்வது என் பாக்கியம்.

ஏதோ ஒரு வகையில் நான் அவருக்கு இணக்கமானவனாக மாறியதால் அவரின் ‘சட்டைக்காரி’ மற்றும் ‘கருந்துளை’ நாவல்களை எழுத்தின் சூடு காயும் முன், அது புத்தகமாவதற்கு முன்னரே எனக்கு வாசிக்கக் கொடுத்தார். ஒரு பிரபல எழுத்தாளரின் நாவலை அச்சாகுமுன் வாசிக்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்துவிடாது, எனக்குக் கிடைத்தது என் பாக்கியம்.

மரப்பாலத்துக்குப் பின் கறுப்பர் நகரம் வாசித்து செங்கேனி – ஆராயியின் முடிவில் ஆடிப்போய்விட்டேன். எப்படிப்பட்ட கதைக்களம் அது. நாம் இழந்த சென்னையின் பக்கங்களை நமக்குக் காட்டிய நாவலில் அதுவும் ஒன்று. அதன்பின் சட்டைக்காரி, கருந்துளை வாசித்து, அது குறித்து எழுத்தாளருடன் நிறையப் பேசியிருக்கிறேன். சமீபத்தில் அவரின் முதல் நாவலான ‘அறுபடும் விலங்கு’ வாசித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்… தனது முதலாவது நாவல் முதல் சமீபத்திய நாவல் வரை அவரிடம் வாழ்வியலைச் சொல்வதற்கும், சென்னையை காட்சிப்படுத்துவதற்கும் ஏராளமான செய்திகள் இருக்கிறது என்பதுதான். இன்னும் எத்தனை நாவல் எழுதினாலும் அத்தனையிலும் வாழ்வியலையும், மண்ணின் வரலாற்றையும் அவரால் சொல்லிக்கொண்டே இருக்கமுடியும்.

அவரின் ‘மரப்பாலம்’ திரைப்படம் ஆக இருக்கிறது. வெள்ளித்திரையில் பாலம் கட்டும் காட்சிகளையும், போர்க்காட்சிகளையும் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும் போது கரன் கார்க்கி எப்படிப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்து கொள்வோம், கொண்டாடுவோம்.

அவர் ஒரு சமரசமில்லாத எழுத்தாளர். தான் எழுதியது சரியில்லை என்றால் கிழித்தெறியவும் தயங்காத எழுத்தாளர். பேசும்போது பல உலக இலக்கியங்களைப் பேசும் எழுத்தாளர். தனது நாவல்களில் தத்துவார்த்த உரையாடல்களை தனித்துவமாய் எழுதும் எழுத்தாளர். சிறுகதையை விட நாவல் எழுதுவதுதான் எனக்கு ஏற்புடையதாகிறது. அதில்தான் ஒருவனின் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அனுபவிப்பதை சிறப்பாக கொண்டு வரமுடியும் என்று சொல்லும் எழுத்தாளர் கரன் கார்க்கி, தமிழின் தனித்துவமான எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரை ஒரு வட்டத்துக்குள் நிறுத்த முயல்வது சரியல்ல, அவர் தமிழ் எழுத்துலகம் கொண்டாட வேண்டிய முக்கியமான எழுத்தாளர்.

இதுவரை ‘அறுபடும் விலங்கு’, ‘கறுப்பு விதைகள்’, ‘ஒற்றைப்பல்’, ‘வருகிறார்கள்’, ‘மரப்பாலம்’, ‘கறுப்பர் நகரம்’, ‘சட்டைக்காரி’, ‘கருந்துளை’ என எட்டு நாவல்களையும், ‘திருடர்களின் கைகள் மென்மையானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.

விண்மீனின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தின் முதல் இதழை அண்ணனின் பேட்டி அலங்கரித்தால் இன்னும் சிறப்பாகும் என்று நினைத்தாலும், அவரின் பரபரப்பான பணிச்சூழலுக்கு இடையே கேட்டால் கிடைக்குமா என்ற ஊசலாடும் எண்ணத்தோடு தொடர்பு கொண்டபோது ‘நீ என் தம்பி… நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா’ என்று சொல்லி, சொன்னபடி எனது சாதாரணக் கேள்விகளுக்கு மிகச் சிறப்பான, விரிவான பதிலைத் தந்திருக்கிறார். அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நேர்காணல் இது. எழுத்தாளர் கரன் கார்க்கிக்கு நன்றி.

இனி….

கரன் கார்க்கி – பெயர்க்காரணம் மற்றும் கடந்து வந்த பாதை பற்றி?

நான் என்னை உணர ஆரம்பித்த காலத்தில் அதாவது பதின்வயதின் இடைப்பகுதியில் ஏறக்குறைய 16 வயது நிரம்பும் சமயத்தில் நான் என்னை ஒரு முக்கியம் அற்றவனாக, வீணாக இருப்பதாக எனக்குள்ளே கவலைப்பட தொடங்கிய காலம் அந்த நேரத்தில் நான் செய்த, எனக்கு உவப்பான ஒரு வேலை நூலகங்களுக்கு செல்வது அங்குள்ள நூல்களை மிகத் தீவிர ஆர்வத்துடன் வாசிப்பது…

இந்த வாசிப்பின் வழியே நான் என்னை விடவும் இந்த உலகில் முக்கியமான பல விடயங்கள் இருப்பதை உணரத் தொடங்கியபோது, அதை குறித்து மற்றவர்களோடு பேசும்போது, மற்றவர்கள் என்னை கவனிக்க தொடங்கினார்கள். இந்தப் போக்கு எனக்கு மிகத் தீவிரமான ஆர்வமூட்டக்கூடியதாகவும், இந்த உலகை மேலும் புரிந்து கொள்வதற்கான ஒரு சூழலாகவும் அமைந்தது. தொடர்ந்து புத்தக வாசிப்பின் வழியே என்னை புதிய சிந்தனைகளால் நிரப்பிக் கொள்ள தொடங்கினேன்…

இந்த சூழலில் நான் கவிதைகள் எழுதுகிற ஒரு போக்கை கொண்டிருந்தேன். அவைகள் கவிதைகளா என்று எனக்கு தெரியாது ஆனால் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கவிதை எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். ஏனெனில், மிக அசலான கவிதைகளை நான் நிறைய வாசிக்க தொடங்கியதால் அதைப் போன்று என்னால் செய்ய முடியவில்லை என்பதால் நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். பிறகு சிறுகதையின் சாதனையாளர்களின் படைப்புகளை வாசிக்கும் போது எனது சிறுகதைகள் அந்த அளவுக்கு எனக்கு உவப்பாக இல்லாததால்… சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் குறைந்துவிட்டது. ஏனெனில், என் சிறுகதைகளை எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை அதனால் நான் சோர்வடைந்தவனாக இருந்தேன்.  

பிறகு, அந்த காலகட்டத்தில் நான் நிறைய உலகின் பல பாகங்களை சேர்ந்த நாவல்களை வாசித்துக்கொண்டிருந்ததால் நாவலின் மீது எனது தீவிர கவனம் இருக்க, அந்த சூழலில் உலகின் மிகச்சிறந்த மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை பேசும் அலெக்சேய் ஹோலி எழுதிய ‘வேர்கள்’, மக்சிம்கார்க்கியின் ‘மூவர்’ மற்றும் ‘தாய்’ நாவல்கள், ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா நாவல்’ , கே. டானியலின் படைப்புகள் எனக்குள் மிகப்பெரிய எண்ணங்களை உருவாக்கியது அப்போது எனது வாழ்வை, எனது சுற்றி இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையை நான் எழுத நினைத்து எழுத தொடங்கினேன்…

அவ்வளவு எளிதாக என்னால் எழுதிவிட முடியவில்லை. ஏனெனில், வாழ்வின் அனுபவத்திற்கும் வாசிப்புக்கும் இடையிலான மன கிளர்ச்சியில் எழுதுவதால்.. அவை படைப்பாக இல்லாமல் வெறும் உள்ளக் கிளர்ச்சியின் வடிகாலாகவே இருப்பதை நான் புரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதுவதும் கிழிப்பதுமாகவே இருந்த சூழலில் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. வெறுமனே மேசையில் உட்கார்ந்து கற்பனை செய்து கொண்டிருப்பதால் ஒருபோதும் ஒரு படைப்பை உருவாக்கி விட முடியாது; சொந்த வலிகளோ வாழ்வின் மீதான சொந்த பார்வையோ இல்லாமல் ஒரு பக்கத்தை கூட நம்மால் எழுதிவிட முடியாது என்பதை புரிந்து கொண்ட நாளில் அந்த சமூகப் புரிதலை உருவாக்கிய பலரில் மிக முக்கியமானவராக மக்சிம் கார்க்கி இருந்தார். அதனால் எனது தாய் தந்தையர் எனக்கு வைத்த பெயரான தினகரன் என்ற பெயரில் பாதியையும், மக்சிம் கார்க்கியின் பெயரில் பாதியையும் இணைத்து ‘கரன் கார்க்கி’யாக மாறினேன்…

இலக்கிய மனம் தெளிவடைந்து கொண்டு வந்த சூழலில் கற்பனையாக எழுதுவதை நிறுத்தியதோடு எழுதிய சில ஆயிரம் கையெழுத்துப்பிரதிகளை கிழித்து வீசிவிட்டு என் சொந்த வாழ்வை, என்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை, என் நகரத்தை, அந்த நகரின்  மக்களின் சமூக வாழ்வியல் போக்கு இவற்றை எழுத தீர்மானித்து அதன் தரவுகளை வைத்துக்கொண்டு சில மனிதர்களின் வரலாற்றில் சம்பவங்களை தொகுத்து வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கியதுதான் என் முதல் நாவல். அந்த நாவல் மிகச் சிறப்பாக வந்த போது எழுதுவதின் தொழில்நுட்பம் மற்றும் எழுதுவதின் நோக்கம் புரிந்தது இப்படி பல விடயங்களை கடந்தே… எழுத்துப் பாதைக்கு வந்தேன்.

வடசென்னை மக்களின் வாழ்வியலை மட்டும்தான் தங்களின் எழுத்துக்களில் கொண்டு வருவீர்களா அல்லது மற்றவர்களின் வாழ்வியலையும் எழுத்தாக்குவீர்களா? சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளை மட்டுமே கதையாக்குவதன் காரணம் என்ன?

நான் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால் வடசென்னை வாழ்வியலை பேசுவதை தவிர்க்க முடியாது. ஆனால், வடசென்னை மட்டும் பேசுவேன் என்று நீங்கள் முடிவு பண்ணவும் கூடாது. என்னுடைய நாவல்களை வாசித்தால் அது புரியும். அதை விட முக்கியமான விடயம் வடசென்னை என்பதுதான் உண்மையான மெட்ராஸ். உலகமயமாக்கலுக்குப் பிறகு நகரின் தென்பகுதி வளர்ச்சியடைய அதை தென் சென்னையென குறிப்பிட, இயல்பாக வட சென்னை தேக்கநிலைக்கு ஆளானது. ஆனால் வடசென்னையென்ற அந்த நிலப்பரப்பு உலகின் ஒரு குட்டி மாதிரி, ஒட்டுமொத்த தமிழகத்தின் புதிய பண்பாடு, மற்றும் கலாச்சார மாற்றங்கள் அல்லது உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட, ஐரோப்பிய மன சாயல்கொண்ட ஒரு நகரம். இந்த நகரத்தில் டச்சு மற்றும் போர்சுகீசிய ஆங்கிலேய பண்பாட்டுடன் யூத மற்றும் வட இந்திய, தென்னிந்திய மக்களின் பண்பாட்டு சாயல் மற்றும் அவற்றின் பாதிப்புள்ள மெட்ராஸ் மொழி என பலதும் இங்குள்ளது… அது ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. அதை அவ்வளவு அழுத்தமாக யாரும் இலக்கியத்தில் கையாளாத்தால் நான் அதை செய்ய முயல்கிறேன் என்பது உண்மைதான். அதே நேரம் வட சென்னையை, அதாவது மெட்ராஸ் என்கிற சென்னையை மைய்யமாக வைத்து ஒட்டு மொத்த தமிழக வாழ்வியலையும் எழுதுகிறேன் என்பது எனது படைப்புகளை வாசித்தாலே புரியும்.

அதே நேரம் நான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கிறதாலும் அதன் சமூக வாழ்வியல் மற்றும் அதன் சமூக பண்பாட்டு பழக்க வழக்கங்கள்  பெரும்பாலும் புறக்கணிக்கப் படுவதாலும் அதை என் படைப்புகளில் அதிகமாக பேச முயற்சி பண்ணுகிறேன், அது இயல்பாக நடக்கிற ஒன்று. அது ஒரு பெரிய நகரம் ஏழு, எட்டு விதமான சமூகங்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு பெரிய நகரம். அந்த நகரத்துக்குள்ள அடிதட்டு மக்கள் மற்றும் எளிய மக்கள் எவ்வளவு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை பேசுறதுக்கு அதை ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.

மற்றபடி வடசென்னையை மட்டும் தான் எழுதணும் அப்படின்றது கிடையாது. இப்போ என்னுடைய முதல் நாவலான ‘அறுபடும் விலங்கு’ நாவலில் வரக்கூடிய பேராசிரியர், மாணவர் அதில் வரக்கூடிய ஆண்டை, தாசி தொழில் செய்யும் சுலோச்சனா விஜயா… அவங்க சமூகத்துல பாதிக்கப்பட்டவர்களே தவிர அவங்க அடித்தட்டு மக்கள் கிடையாது என்றாலும் அப்படியான ஒரு பார்வை இருக்குது. அதே போல அதில் வரக்கூடிய சங்கரன் வாழுகிற ஊர், அவர்களது சமூகப்பார்வை, அவர்கள் பேசுகிற மொழியென வேறுபாடான விடயங்களை அந்த நாவல் பேசுகிறது. ஆனால், கரன் கார்க்கி வட சென்னை மட்டும்தான் எழுதுவான் என்கிற ஒரு பார்வை இருக்கத்தான் செய்கிறது. அது மேலோட்டமான நியாயமற்ற தட்டையான பார்வை.

சென்னையின் உழைக்கும் மக்களைப் பற்றி. அடிதட்டு விளிம்பு நிலை மக்களை பற்றி பேசுவதற்கான படைப்புகள் கடந்த நூறாண்டுல முழுமையா இல்லைன்னு சொல்ல முடியாது என்றாலும் அவர்களை மையப்படுத்திய நாவல்கள் 1990களுக்கு முன் இல்லவே இல்லை என்பதுதான் நிஜம். ஆனால், எளிய உழைக்கும் மக்களின் கதாபாத்திரங்கள்தான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு, வளர்ச்சிக்கு ஆதாரமா இருக்கு. அவங்க தான் எல்லா விதமான கட்டுமானங்களையும் அடித்தளங்களையும் உருவாக்குறவங்களாவும் ஓட்டரசியலில் தீவிர பங்கேற்பாளராகவும் இருக்கிறார்கள். ஆனால், அந்த அடித்தளத்திலேயே நசுங்கி உரமாக மாறுகிற மக்களாகவும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அவங்கள பத்தி இலக்கியங்கள் பேசணும்ன்றது மிக அவசியமான ஒன்று.

இந்த நகரத்துல மட்டுமில்லாம ஒட்டுமொத்த மாநிலத்திலும், ஏன் ஒட்டுமொத்த நாட்டிலும் கூட மக்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள். வர்க்கமாக மட்டுமின்றி சாதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் ஒன்னு உயர் வசதி இன்னொன்னு அடிமட்ட விளிம்பு நிலை. இது ரெண்டுமே ஒரே நாட்டுக்குள்ள ஒரே மண்ணுக்குள்ளதானே இருக்கு, அப்ப அத பத்தி பேச வேண்டிய அவசியம் இருக்குல்ல. அந்த விதத்துல நான் திரும்பத் திரும்ப அந்த மக்களப் பத்தி எழுத வேண்டிய தேவையும் அவசியமா இருக்கிறது. வடசென்னையை மட்டும் எழுதனும் என்று நமக்கு நோக்கம் இல்லை; அந்த நிலத்தில் தொடங்கி உலகம் முழுக்க பயணிக்க கூடிய கதாபாத்திரங்களை வடிவமைக்க வேண்டுமென்பதுதான் நமக்கு நோக்கம்.

என் அனுபவத்தில் உள்ள அனைத்தையும் அந்த படைப்புக்கு தேவையான எல்லை வரை போகவும் மனம் தயாராக இருந்தாலும் எப்போதும் படைப்பு நிர்பந்திக்கும் சூழலில் வட சென்னையை எழுதுகிறேன். வட சென்னையை மட்டும் தான் நான் எழுதுவேனென்று ஒருவன் புதினத்தை எழுதவே முடியாது. நான் வாழும் பகுதி, எனக்கு அதிகம் அனுபவம் தந்த பகுதி அதன் வழியாகவே நான் இந்திய நிலபரப்பு முழுதையும் இந்த உலகையும் பார்க்கிறேன். என் ஒப்பீடுகளுக்கு மிக முக்கியமான பரிசோதனை காலமாகவும் அது இருப்பதால் பெரும்பாலும் அந்த களத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேற்று நிப்பரப்பையும் எழுதி இருக்கிறேன்.

முதல் நாவலான ‘அறுபடும் விலங்கு’ கிராமங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களை பேசுகிற நாவல். பிறகு நகரத்தில் படித்து விட்டு கிராமத்துக்கு போகிற ஒரு மாணவனின் வாழ்க்கை 1960-கள் முன்பாக நடந்த சம்பவங்களின் ஒரு சமூகப் போக்கை சமூக வாழ்வியலை ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தையும் பிரதிபலிக்கிற நாவலாக தான் அது இருந்தது. முக்கிய கதாபாத்திரம் கோபால் மெட்ராசுக்கு பிழைக்க வருகிறார். அப்படி வருகிறவரின் சூழலை அதில் பதிய வேண்டும் என்பதால் வடசென்னை அதில் ஒரு முக்கிய நிலப்பரப்பாக அமைந்து விடுகிறது. மற்றபடி பெரும்பகுதி நாவல் சென்னைக்கு வெளியில் தான் நடக்கிறது.

கடந்த நூறாண்டுகளில் எவ்வளவு நாவல்கள் எளிய உழைக்கும் மக்களை பற்றி பேசி இருக்கிறது என்ற கேள்வியை இதுவரை யாருமே எழுப்பியதில்லை. ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக உழைக்கும் மக்கள், சாமானிய மக்கள், எளிய மக்கள் இவர்களைப் பற்றிய படைப்புகள் வரும்போது இந்த கேள்விகள் எழுகிறது. வாழ்க்கையும், அதன் அனைத்து விதமான சாராம்சமும் ஒட்டுமொத்த மக்களிடமும் அவரவர் சூழலுக்கு ஏற்ப இருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த சமூகங்களைப் பற்றிய படைப்புகளே பெரும்பாலும் தமிழகத்தின் நூற்றாண்டு கால நாவல் வரலாற்றில் இருக்கிறது. எப்போதாவது ஒரு துக்கடா போல எளிய மக்களை அவர்கள் கோடிட்டு காட்டுவார்கள் அதனால் எளிய உழைக்கும் மக்கள் வாழ்வில் இருக்கக்கூடிய முழுமையை பேச வேண்டும் என்பது எனது நோக்கமாக இருப்பதால் பெரும்பகுதி எளிய மக்களின் வாழ்வை பற்றி பேசும் படைப்புகளாக இருக்கிறது. அதற்கான தேவையும் அவசியமும் இருப்பதாக கருதி எழுதுகிறேன்.

அதே நேரம் சாமானிய மக்களை மட்டுமே வைத்து ஒரு சமூகத்தை, ஒரு சமூக வரைபடத்தை முழுமையாக பூர்த்தி செய்து விட முடியாது… அனைத்து தரப்பையும் எழுத வேண்டும். எல்லா தரப்புக்கும் அவரவர் நியாயம் இருக்கும்; எல்லா தரப்புக்கும் ஒரு சிக்கல்கள் இருக்கும்; எதிர்கொள்ள வேண்டிய ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கும் அனைத்தையும் பேச வேண்டியது தான் எழுத்தாளனின் கடமை. ஆனால், சமூகப் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ரீதியாக யார் மிக மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது பாதிக்கப்படுகிறார்களோ அந்த கொந்தளிப்பான வாழ்க்கையை எழுத வேண்டும் என்பது மிக அவசியமாக எனக்குப்படுகிறது. அதன் அடிப்படையில் நான் எழுதுவதையும் தவிர்க்க முடியாது.

சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள என்றாலும் நாவல்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் என்ன? அதேபோல் ஒவ்வொரு நாவலுக்கும் இடையில் அதிக இடைவெளி எடுப்பதற்கான காரணத்தையும் தெரிஞ்சிக்கலாமா? 

ஆமாம், நான் சிறுகதைகள் எழுதி இருக்கிறேன், அதன் ஒரு தொகுதியை ஒரு பதிப்பகத்தில் கையெழுத்து பிரதியாக தந்திருந்தேன். அவர்கள் சில காலம் கழித்து அது காணாமல் போய்விட்டது என்று சொல்லிவிட்டார்கள்… என்னிடம் வேறு பிரதியும் இல்லை. பிறகு, அதை நினைவில் வைத்து வேறு சில கதைகளை எழுதி, ஒரு பத்தாண்டு காலத்தில் எழுதியதில்  பத்துக் கதைகளை உயிர்மை பதிப்பகம் தொகுப்பாக கொண்டு வந்தது என்பதை தவிர சிறுகதைகள் மீது எனக்கு ஒரு பெரிய ஆர்வம் இல்லை. காரணம், நாவல் வடிவம் எனக்கு மிக வசதியான ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. ஒரு மனிதனின் முழு வாழ்வையும் ஒரு நாவலில் எழுதிவிட முடியும். சிறுகதையில் அது சாத்தியமில்லை.

நம் வாழ்நாளில் எப்போதோ சந்தித்த கதாபாத்திரங்களுக்கு நாவலின் வழியே அழுத்தமாக உயிர் கொடுக்க முடியும். கடந்த கால, நிகழ் கால காட்சிகளை உருவகப்படுத்த முடியும். மாயங்களை, எதார்த்தங்களை, புனைவுகளை, வரலாறுகளை, விமர்சனங்களை, ஒவ்வாமையை இன்னும் எத்தனை எத்தனையோ நாவலில் செய்து பார்க்க முடியும்… நான் அப்படிதான் செய்து பார்க்கிறேன். எனது புதினங்கள் வரலாற்றின் மீதான புனைவாகவே நான் புனைய முயல்கிறேன். நாவலின் வழியே நீங்கள் பூமியின் எந்த பகுதிக்கும் நகர்ந்து போய் அதை காட்சியாகவோ கதாபாத்திரமாகவோ மாற்றி விட முடியும். அந்த வசதி நாவலில் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் எனக்கு நாவல் வடிவம் மிக வசதியானதாகவும் இயல்பானதாகவும் இருக்கிறது. அது நிறைய காலத்தை எடுத்துக் கொள்ளும் என்பதுதான் அதன் ஒரே சச்சரவு.

என்னளவில் எப்போது ஒரு நாவல் முடிந்து விட்டதாக கருதுகிறேனோ அப்போதுதான் அந்த நாவல் தொடங்குவதை கண்டுணர்ந்தவன் ஆகிறேன். ஒரு நாவல் முழுமை அடைவதற்கு ஒன்றரை ஆண்டு காலத்துக்கு மேல் ஆகிறது. பிறகு, அதை செப்பமாக்கி அழகாக்குவதென ஓயாமல் அதில் வேலை செய்ய வேண்டும் என்றால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தேவைப்பட்ட பிறகுதான் அந்த நாவலில் எனது பங்களிப்பு ஏதும் இல்லை என்ற நிலைக்கு வர முடிகிறது.   அதனால் ஒரு படைப்புக்கும் அடுத்தப் படைப்புக்கும் அதிக இடைவெளியிருப்பதை என்னால் மறுக்க முடியாது.

இணையத்தில் தேடி வரலாற்று நாவல்கள் எழுதுவோர் மத்தியில் தாங்கள் பார்த்து வளர்ந்த மக்களின், தங்களுக்கு முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலை, நிலம் சார்ந்த அடையாளத்துடன் கதையாக்கும் எண்ணம் தங்களுக்கு எப்படித் தோன்றியது..?

இணையத்தை வைத்து ஒரு நாவலை எழுத முடியும் என்று நான் நிச்சயம் நம்பவில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தந்திருக்கிற மிக அற்புதமான ஒரு நுட்பம் இணையம்… இணையம் நமக்கு தகவல்களை தரலாம் ஆனால் படைப்பை படைப்பாளன்தானே செய்ய வேண்டும்.

ஒரு நாவல் எழுதும்போது பல புத்தகங்கள் நமக்கு தேவைப்படும் குறிப்பாக கடந்த காலத்தை அறிந்து கொள்ள புத்தகங்களின் இடத்தை இப்போது இணையம் செய்வதை மறுக்க முடியாது. ஆனால் இணையத்தை வைத்து ஒரு படைப்பை உருவாக்கும் வாய்ப்பு மிக குறைவுதான். அப்படி யாராவது முயற்சிப்பார்கள் என்பதை பற்றி எனக்கு யோசனை கிடையாது. அதே நேரத்தில் கடந்தகால வாழ்வியல் பின்புலங்கள், சமூக வாழ்வியல் போக்கு, பொருளாதாரம், சமூக சச்சரவுகள் இவற்றையெல்லாம் பேசுவதற்கு நிகழ்காலம் மட்டும் போதுமானதாக நான் கருதவில்லை. அதற்கு கடந்த கால சூழலையும் படைப்பாக்கும் தேவை நமக்கு இருக்கிறது… இந்தப் புரிதல் மட்டுமே என்னை எழுத்தாளன் ஆக்கியது.

காரணம், நான் முதல் நாவலுக்கு முன்பு சில ஆயிரம் பக்கங்கள் எழுதி குவித்து ஆனால் அவையெல்லாம் வெறும் குப்பைகள் என்று சுயமாக உணர்ந்து என்ன எழுத வேண்டும் என்று குழம்பிய நாட்களில் தெளிவடைந்து என்னை என் சூழலை எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால், நான் என்பது ஒன்றுமற்ற வெற்று கதாபாத்திரமாகத் தோன்ற அதற்குப் பதிலாக நான் என்பது நான் மட்டுமில்லை என் முன்னோர்கள், என்னை சுற்றி உள்ளவர்கள், என் சமூக வாழ்க்கை, என் பகுதியில் உள்ள அனைத்து மாந்தர்கள், அவர்களின் அழகியல், சமூகவியல், பொருளாதாரம், சச்சரவுகள் இது எல்லாம் தான் நான் என்ற புரிதலுக்கு வந்தபோது நான் எழுத தொடங்கினேன். அது சரியான எழுத்தாகவும் எனக்குப் பட்டது. அந்த சரி என்பது கடந்த காலத்திலிருந்து தான் நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியும் என்று உணர்ந்தேன். நிகழ்காலத்தில் இருந்து தான் எதிர்காலத்தை திட்டமிட முடியும் என்ற புரிதலும் உண்டான போது தான் கடந்த கால தலைமுறை வாழ்க்கையை படைப்பாக்கும் போக்கு என்னில் நிகழத் தொடங்கியது.

 

தங்களின் முதல் நாவல் எழுதி முடித்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பின்னர்தான், அதுவும் இரண்டாவது நாவலான ‘கருப்பு விதை‘களுடன்தான் வெளியானது என்று தங்களது பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறீர்கள், அந்த வலியையும், நாவலின் வெற்றியையும் எப்படி எதிர்க்கொண்டீர்கள்?

ஆமாமா… அது ஒரு துன்பமான காலம் தான்; நான் சில நாவல்களை எழுதி இவையெல்லாம் நாவல்கள் இல்லை என்று கிழித்தெறிந்த சூழலில் ஒரு விடயத்தை கண்டடைந்து அந்த நாவலை எழுதத் தொடங்கினேன்… அதுதான் ‘அறுபடும் விலங்கு’. ஆனால், அது எழுதி முடித்தும் எப்படி வெளியிடுவது என்கிற நடைமுறைகள் எனக்கு தெரியவில்லை. சில பதிப்பகங்கள் அதை சில ஆண்டுகள் வைத்திருந்தார்கள் பிறகு வாசிக்காமலே தந்து விட்டார்கள்.

இப்படியான சூழலில் அதை அச்சிடக் கூடிய ஒரு நண்பரை கண்டுபிடித்து, அது ஒரு மூன்று நான்கு வருடங்கள் கடந்தது. இப்படியாக அது ஒன்பது ஆண்டு காலம் என்னை எதிர்பார்ப்புடன் வதைத்த சூழலில் நான் முதல் நாவல் வரும்போது வரட்டுமென மேலும் நான்கு நாவலை எழுதி வைத்திருந்தேன். அதில் ஒன்றுதான் ‘கருப்பு விதைகள்’ மற்ற இரண்டு நாவல்கள் ஒரு மழைநாளில் செல்லரித்து பாழாகி விட்டன என்றாலும் மற்ற இரண்டு நாவல்களும் வந்து ஓரளவுக்கு என்னை வாசகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்பதுடன அந்த வெற்றி தான் எனக்கு மேலும் படைப்புகளை செதுக்குவதற்கான மனநிலையை உருவாக்கியது. அந்த மனநிலையில் தான் ‘கறுப்பர் நகரம்’, ‘வருகிறார்கள்’, ‘ஒற்றைப்பல்’ போன்ற நாவல்களை என்னால் தொடர்ந்து எழுத முடிந்தது.

அறுபடும் விலங்கு நாவலில் ரங்கனும் அவனது குடும்பமும் பஞ்சம் பிழைக்கப் போய், அங்கு வாழ்வின் வசந்தத்தைப் பார்க்காமல் தங்களின் உயிரை விடுவார்கள். நாவலில் இந்தக் கதை இல்லையென்றாலும் நன்றாகத்தானே இருந்திருக்கும். பின்னர் ஏன் இந்தக் கதாபாத்திரங்கள்? ஆண்டைகளிடம் அடிமையாக இருப்பதைக் காட்டவா?

ஆமாம், ரங்கன் இல்லாமலும் அந்த நாவல் சிறப்பாக தான் இருந்திருக்கும், ஆனால் அந்த காலகட்டத்தில் சொந்த நிலம் இருக்கிறது அவர்களிடம் மிகச்சிறந்த உழைப்பும் இருக்கிறது ஆனால் அவர்களால் அந்த நிலத்தில் வாழ முடியவில்லை. உயிர்த்தப்புவதற்காக அவர்கள் உலகின் பல திசைகளுக்கும் போகிறார்கள். அந்த சூழலை சொல்வதன் வழியாக முழு நாவலையும் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிற அடிப்படையில் ரங்கனின் கதாபாத்திரம் அவசியமானதாக இருந்தது. ரங்கனால் வாழ முடியாத ஊரில்தான் நாவலின் முக்கிய கதாபாத்திரமான கோபால் என்பவராலும் வாழ முடியவில்லை என்று பட்டணம் கிளம்புகிறார்.

உழைப்பும் நிலமும் இருந்தும் வாழ முடியாமல் ஒரு பெரும் குடும்பம் உலகின் பல திசைகளுக்கு சிதறுகிறது. பிழைக்க சென்ற இடத்திலும் அவர்களால் வாழமுடியவில்லை ஏன்? என்ற காரணத்தை நேரடியாக பேசாமல் அந்த துயரத்தை பல விதங்களில் நாவல் பேசிக்கொண்டே தான் இருக்கிறது. ரங்கன் கதாபாத்திரம் என் அளவில் சிறந்த ஒன்று. ‘அறுபடும் விலங்கு’ நாவலில் ரங்கன் கதாபாத்திரம் அந்த நாவலின் போக்குக்கு மிக அவசியமான ஒன்று என்று நான் கருதினேன். அது உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நாவல். என் சொந்தப் பாட்டனின் குடும்பம் பிழைப்புக்காக கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தார்கள்… இந்த செய்தி தான் அந்த நாவலுக்கே ஆதாரமாக இருந்தது.

தங்களது நாவலின் நாயகர்கள் – பெரும்பாலும் – குடியை அதிகம் விரும்புவதும், அதேபோல் மரணித்துப் போவதும் ஏன்..?

பெரும்பாலும் என்னை சுற்றி வாழ்ந்தவர்கள் சிலரது வாழ்வில் அது ஒரு பெரிய சச்சரவாகவே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். குடி மிகச் சிறந்த மனிதர்களை அவர்களது நடுத்தர வயதிலேயே மரணித்து போக வைத்த காட்சிகளை பார்த்து வருந்தியவன் நான். அது என்னை பாதித்திருக்கிறது என்ற முறையிலும், பொதுவாக வாழ்வின் ஒரு பகுதியாக மது இருப்பதாலும் அதை தவிர்த்து விட்டு என்னால் எழுத முடியாது என்பது ஒரு காரணம். அடுத்து அளவுக்கு அதிகமானால் எப்படி மனிதர்கள் நாசமாகி போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டிய நோக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அறுபடும் விலங்கு நாவலில் மட்டும்தான் குடியால் நாசமான குடும்பங்களை எழுதி இருப்பேன், மற்ற நாவல்களில் குடிப்பார்கள் ஆனால் அவர்கள் அதனால் நாசமானதாக எழுதியிருக்கமாட்டேன்.

தங்களின் ‘மரப்பாலம்’ நாவல் இரண்டாம் உலகப் போரின் கோரத்தை நம் முன்னே காட்சியாக்கியிருந்தது. சிறப்பான அந்த நாவல் சினிமா ஆகும் போது எழுத்தில் கடத்திய வலியை காட்சியாய் கடத்தும் என்று நினைக்கிறீர்களா..?

எப்போதும் ஒரு இலக்கிய படைப்பு அப்படியே சினிமாவாக மாறுவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனால், மரப்பாலம் நாவலை பொருத்தவரையிலும் ஏறக்குறைய அது சினிமாவாக மாறும்போது வலியை நிச்சயம் கடத்தி விடும். ஏனெனில், போர் என்பதே துயரம் மிக்கது தான் அதுவும் எளிய மனிதர்கள் வெறும் கட்டாய உழைப்பு ஆதாயத்திற்காக மட்டுமே கொல்லப்படுகிற சம்பவங்கள் நிறைந்த அந்த நாவல், எதிர்கால கனவுகளோடு போய் பயங்கரமான சூழலில் சிக்கி நாசம் அடைகிற மக்களைப் பற்றி பேசுகிற நாவல் என்பதால் நிச்சயம் அது வலியை கடத்துகிற வேலையை செய்து விடும் என்று தான் நான் நம்புகிறேன். மேலும் திரைகதைக்கான பல நல்ல அம்சங்களை அது கொண்டிருப்பதால் எழுத்தை போலவே காட்சிகளும் வந்துவிடும் என்றே நினைக்கிறேன் பார்க்கலாம்.

 

 

உண்மைக் கதாபாத்திரங்களுடன் கற்பனைக் கதாபாத்திரம் இருந்தால்தான் நாவல் சிறப்பாகும் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். ஒருவேளை கற்பனைக் கதாபாத்திரமே இல்லாமல் உண்மைக் கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து நாவல் எழுதும் சூழல் வந்தால் அந்த நாவல் நன்றாக இருக்குமா… இருக்காதா?

உண்மை கதாபாத்திரங்களுடன் கற்பனை கதாபாத்திரங்கள் சேர்ந்து உலவும் போது ஒரு படைப்பு மேலும் மெருகோடும் அழகியலோடும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உண்மை கதாபாத்திரங்களை மட்டுமே வைத்தும் ஒரு படைப்பை நம்மால் செய்ய முடியும். ஆனால் கடந்த காலத்தை, நிச கதாபாத்திரங்களை நீங்கள் அதே அசலில் படைப்பாக்கவே முடியாது. அங்கு கற்பிதங்களும், கற்பனைகளும், அழகியிலும் தன்னியல்பாகவே வந்துவிடும். வரலாறு என்பது ஒரு கச்சா பொருள்தான்… இலக்கியத்தை பொறுத்த அளவில் அந்த கச்சாப் பொருளை அப்படியே தருவதற்கு வேறு சில ஊடகங்கள் இருக்கிறது. ஒரு நாவலில் அதன் உண்மை மாறாமல் வாசகனுக்கு கிடைக்க சில உதவி கதாபாத்திரங்கள் சேர்ப்பது தன்னியல்பாக நிகழ வேண்டுமே ஒழிய வலுக்கட்டாயம் நிச்சயம் கிடையாது. எனக்கு இப்படி தோன்றுகிறது இன்னொருவருக்கு வேறு மாதிரி தோன்றக்கூடும்.

எழுத்தாளரிடம் தங்களது கதாபாத்திரத்தில் தங்களைக் கவர்ந்தது எது என்ற கேள்வியைக் கேட்கக் கூடாதுதான் என்றாலும், இதுவரை ஏழு நாவல் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அதில் தங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் யார்? ஏன்? 

நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல நிறைய யோசனை தேவைப்பட்டாலும், எல்லாவற்றிலும் முடிவில் ‘ஒற்றைப்பல்’ நாவலில் வரக்கூடிய கோவில் தாஸ் தான் என் நெஞ்சை கவர்ந்த கதாபாத்திரம் என்று உறுதியாக சொல்ல முடியும். உங்கள் கேள்வியில் ஏழு நாவல்கள் என்று சொல்லியிருப்பது தவறு, நான் இதுவரை எட்டு நாவல்கள் எழுதியுள்ளேன்.

‘கறுப்பர் நகரம்’ செங்கேனி, ஆராயி போன்ற கதாபாத்திரங்களுடன் எழுத்தில் வாழ்ந்திருப்பீர்கள்? அதை வாசிப்பவரால் கண்டிப்பாக உணர முடியும்? எப்படி தங்களால் அப்படி உணர்வுப்பூர்வமாக எழுத முடிந்தது?

அந்த மக்கள் மத்தியில் தான் நான் வாழ்கிறேன். ஆராயியையும் செங்கேணியையும் நான் சந்தித்து இருக்கிறேன். அவர்களை இணையராக சந்தித்ததில்லை, அவர்கள் நிசத்தில் தனித்தனி மனிதர்கள்… அவர்களை நான் என் பதின்வயதில் பார்த்திருக்கிறேன். அவர்களை ஒன்றிணைப்பதுதான் வரலாற்றின் ஊடான புனைவு. அவர்களைப் போன்று காதல் மிக்க சிலரை நான் சந்தித்தும் இருக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த கலவை தான் அந்த இரண்டு கதாபாத்திரங்கள். உணர்வுடன் எழுதுவதும் அதில் மூழ்கியதும் தன்ணுணர்வற்று படைப்பு வளர்வதுமான ஒரு மாயம் நிகழும் ஆழ்மனம் தன்னுள் தன்ணுணர்வுடன் ஆர்வமாக விழுங்கப்பட்ட அத்தனையையும் கோர்த்து கொள்ளும். அந்த மாயத்தின் விளைவுதான் உணர்வுபூர்வமான படைப்பென்று நான் கருதுகிறேன்.

தங்களது நாவல்களில் தத்துவங்களை அதிகம் பேசுவார்கள்… மாய ரியலிசம் என்னும் கருந்துளை நாவலில் தத்துவார்த்த விவாதங்கள் அதிகமாக இருப்பது ஏன்..? தொடர்ந்து தத்துவார்த்த எழுத்தாய் நகரும் பக்கங்கள் வாசிப்பவர்களை அயற்சியாக்கும் என நீங்கள் யோசிக்கவில்லையா? இல்லை அயற்சியாக்கினாலும் பரவாயில்லை சொல்ல வேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும் என எழுதினீர்களா? 

இந்தக் கேள்விக்கு பதில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய முதல் கச்சா கையெழுத்துப் பிரதியை உங்களுக்கு அனுப்பி வைத்தேன். அது ஒரு பரிசோதனை முயற்சி… ஆனால் பிறகுதான் அந்த நாவலை முழுமையாக்க தொடங்கினேன். நீங்கள் அந்தக் கச்சாவிலிருந்து இப்போது செப்பமான வடிவமாக வந்திருக்கிற புத்தகத்தை வாசித்தால் ஒரு வேலை இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்கள் என்று தான் நான் கருதுகிறேன். நீங்கள் இப்போது வெளியாகியுள்ள நாவலை வாசிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

தத்துவங்கள் பேசப்பட வேண்டிய ஒன்று; அதை பேசுவதற்கான சிறந்த கதாபாத்திரம் அமைந்தது தான் அந்த நாவலில் எனக்கு மிக மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது. ஒரு தத்துவ மாணவனும் அவனுக்கு கற்பிக்கிற தத்துவ பேராசிரியரும் உரையாடிக் கொண்டிருப்பார்கள்… அதன் வழியாக அவன் தத்துவங்களை எப்படி புரிந்து கொள்கிறான்? இந்த உலகை எப்படி புரிந்து கொள்கிறான் என்ற உரையாடல்களை என்னால் அற்புதமாக அந்த நாவலில் நிகழ்த்த முடிந்தது. அந்த உரையாடல்கள் மிக மிக அவசியமானவை என்றே நான் கருதுகிறேன்.

உலக இலக்கியங்கள் அதிகம் படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான தங்களைக் கவர்ந்த எழுத்தாளர் கார்க்கி என்பதை அறிவோம், அவரைத் தாண்டி தங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? அவரது படைப்புப் பற்றிச் சிலவரிகள் சொல்லுங்களேன்?

மக்சிம் கார்கியை போலவே என்னை உலுக்கிய மிகச் சிறந்த படைப்பாளிகள் ஏராளம் அதில் என்னைக் கவர்ந்தவர்களில் குறிப்பாக, அலெக்சாண்டர் குப்ரின்… அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் இலக்கியத்தை அழகியலுடன் படைப்பதில் மேதை அவர்.

அவரது ‘மலோக்’ என்கிற நாவலால்தான் என் குடியிருப்பை சுற்றியுள்ள தொழிற்சாலைகளை, அதன் மாசுகளை, அது நகரை படுத்தும் பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தொழில் துறை மனிதர்களை இயந்திரங்கள் போல உறிஞ்சும் முதலாளித்துவ அமைப்பை புரிய வைத்த நாவல் அது. அவர்தான் அற்புதமான ‘செம்மணி வளையல்’ என்கிற இலக்கிய அற்புதத்தையும் எழுதினார்.

 படைப்புகளை கலை மேதமையோடு எழுதிய அந்த எழுத்தாளர் ரஷ்ய புரட்சி நடந்தபோது அச்சத்தில் ரஷ்யாவை விட்டு ஓடி போனவர் 20 ஆண்டுகள் கழித்து அவர் ரஷ்யாவை பார்க்க வந்த போது அதன் வளர்ச்சியை கண்டு வியந்து போகிறார். தொழிலாளி காட்டான்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்று கருதி தப்பி ஓடிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று மனம் வருந்துகிறார். அவரைப்போலவே இன்னொரு இலக்கிய படைப்பாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ், காதலை அற்புதமாக எழுதியவர். அவரது குல்சாரியும், ஜமீலாவும், முதல் ஆசிரியரும் என்னை எவ்வளவு மேம்படுத்தியது என்று என்னால் முழுமையாக சொல்ல முடியாது. காதலை, லட்சியத்தை ஒன்றிணைத்து மிக அற்புதமாக எழுதிய மகத்தான கலைஞன். இருவருமே காதலை, சமூக வாழ்வை அதன் அரசியலை மிக அற்புதமாக பேசியவர்கள்

தாங்கள் நிறைய நாவல்களை எழுதி, கிழித்துப் போட்டிருக்கிறீர்கள். அதேபோல் மழையிலும், கரையான்களின் ஆக்கிரமிப்பிலும் உங்கள் எழுத்தை இழுந்திருக்கிறீர்கள், அந்த எழுத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்று நினைக்கும் போது வருந்தியதுண்டா..? இழப்புக்களின் பின்னே இன்னும் உயிர்ப்பாய் எழுத முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது?

என் 15 வயதில் இருந்து நான் செய்த ஒரே வேலை தீவிரமாக வாசிப்பது… இந்த உலகை உற்றுப் பார்ப்பது… பிறகு எனக்குள்ளே விவாதம் செய்து கொள்வது என்ற போக்குகளுக்கு மத்தியில் நான் எழுத தவித்த காலத்தில் நான் எழுதியது எதுவுமே சரி இல்லை. உலக இலக்கியங்களை வாசிக்கிறோம் ஆனால் எழுதுவது மிக தட்டையாக இருப்பதால் துணிந்து கிழித்துப்போடும் மனம் வாய்த்தது. முக்கிய காரணம் எதை..? எப்படி..? எழுத வேண்டும்..? என்ற நுட்பத்தை அதுவே எனக்கு கற்று தந்தது.

அப்படியான தெளிந்த மனதுடன் எழுதிய முதல் படைப்பை எழுதி வாசித்துப் பார்த்து இதுதான் நான் எழுத வேண்டிய படைப்பு என்று கண்டுணர்ந்த நாளிலிருந்து நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறேன் என்றாலும் முதல் நாவல் புத்தகமாக வருவதற்கு ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது… ஆனாலும், நான் எழுதிக் கொண்டே தான் இருந்தேன். அந்த கால இடைவெளியில் எழுதப்பட்ட மூன்று நாவல்களில் இரண்டை கரையான்கள் அழித்து விட்டதால் நான் ஒரு வார காலம் பித்து பிடித்த நிலையில் தான் திரிந்துக் கொண்டிருந்தேன்.

மிக  கனவோடு எழுதப்பட்ட நாவல்கள் அது; திரும்பவும் எழுத முடியாது… ‘துறவிகளின் தோட்டம்’ என்ற நாவலில் ஒரு துணுக்கை வைத்து ‘அலங்கார குளத்தில் இருபத்தி மூணு அல்லிகள்’ என்றொரு சிறுகதை எழுதினேன். பிறகு, அது ஒழிந்து போகட்டும் ஒன்றும் கவலை இல்லை வேறொன்றை எழுதுவோம் என்று ‘கருப்பர் நகரம்’ நாவலை எழுதுவதில் அந்த துயரை மறந்தேன். கரையான்கள் என் படைப்பை அரித்ததால் படைக்கும் நிலையில் நான் மேலும் மேம்பாட்டேனே தவிர முடங்கிப் போகவில்லை. ஏனெனில், என் மனம் அந்த காத்திருப்பு காலமான ஒன்பது ஆண்டுகளில் பல விதங்களிலும் பக்குப்பட்டிருந்தது.

 

தங்களது நாவல் சினிமா ஆவதில் உங்கள் எழுத்தின் ரசிகனாய்  மகிழ்ச்சி. தங்களுக்கு படம் இயக்கும் ஆசையும் இருக்கிறதுதானே… ஒரு இயக்குநராய் திரையில் எப்போது நாங்கள் உங்களைக் காணலாம்?

உண்மையில் நான் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்துடனே பத்தாம் வகுப்பு பயிலும் காலத்தில் இருந்தே கனவு கண்டு கொண்டிருந்தேன். எனது கணக்கு புத்தகத்தில் வரிகள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும் பகுதியில் கதை, திரைக்கதை, வசனம் இராச தினகர் என்றுதான் எழுதி வைத்திருப்பேன். அதற்காக ஆசிரியரிடம் அடியும் வாங்கி இருக்கிறேன். வாழ்வியல் நெருக்கடிகள் மற்றும் என் மனநிலைக்கு எழுத்தே எனக்கான சிறந்த வடிவம் என்று ஒரு கட்டத்தில் உணர்ந்த பிறகு அதில் நான் தீவிரம் காட்ட தொடங்கினேன். அதே நேரத்தில் நான்கு படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறேன், இப்போதும் வெற்றிமாறன் அவர்களது ‘ராஜன் வகையறா’ திரைபடத்துக்கான கதையை இயக்குனருடன் சேர்ந்து எழுதியதால் அந்த படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறேன்… என்றாலும் ஏனோ எனக்கு எழுதுவதில் தான் மனம் ஆர்வம் கொள்கிறது. இலக்கியம் மிக அவசியமானது என்று நான் உணர்கிறேன். ஒரு நாள் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை இந்த சமூகமும் உணர்ந்து கொள்ளும் என்று நம்பிக்கை எனக்கு உண்டு. அதே நேரம் ‘ஒற்றைப்பல்’ நாவலை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

அடுத்து எழுதும் நாவல் குறித்து..? புளியந்தோப்பு சம்பவம், கூவம் பிரச்சினைகளை மையமாக வைத்து நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

என் மனதை எது அதிகம் பாதிக்கிறதோ, எதை மக்களிடம் பேச வேண்டி இருக்கிறதோ, எதை பேசுவதின் வழியாக மக்கள் நிலைமையை புரிந்து கொள்வார்களோ அதைப் பேசுவதையே முக்கியமாக கருதுகிறேன். நகரம் என்ற நெருக்கடிக்குள் இருக்கும் எளிய மக்களின் கதறுகிற வாழ்வை கண்டுக்கொள்ளாத அதிகாரங்கள், அலட்சியம் செய்யும் ஆட்சியாளர்கள் என பலதையும் பேசுகிற ஒரு நாவலை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்… வீடற்றோர் காப்பகம் என்ற தலைப்பில். என் அளவில் இது ஒரு அவசியமான முக்கியமான ஒரு நாவல், இதை வழக்கமான முறையில் இல்லாமல் வேறு ஒரு வடிவமைப்பில் எழுதுவதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

 புளியந்தோப்பு சம்பவம் 1920களில் நடந்தது… அதை ஒரு வரலாற்று புதினமாக எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. இப்போது சில நண்பர்கள் அதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன் என்றாலும் ஒரு நாள் நிச்சயம் அதை எழுதும் எண்ணம் உள்ளது.

இப்போது நிறைய நிகழ்வுகளில் பேசுகிறீர்கள். உலக இலக்கியங்கள் பற்றி தாங்கள் தொடர்ந்து பதிவு பண்ணும் எண்ணம் இருக்கிறதா? அப்படியெனில் தங்களுக்கென ஒரு யூட்யூப் சேனல் தொடங்கும் எண்ணம் இருக்கிறதா?

ஆமாம் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது எழுதுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு பேசுவதும் அவசியமாக இருக்கிறது.

நிச்சயம் ஒரு யூட்யூப் சேனல் உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு.

இப்போது எழுதுபவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்..? 

இப்போது மிக சிறப்பாக எழுதுகிறார்கள்… உண்மையில் முன் எப்போதையும் விட இப்போது மிகச்சிறந்த படைப்புகள் வருகிறது. ஏலக்காய் தோட்டங்களில் தங்களது திணற வைக்கும் சமூக சூழலை எழுதுகிறார்கள். நெஞ்சை உருக்கும் சமூக கேடுகளை அப்பட்டமாக மிகச் சுதந்திரமாக எழுதுகிற படைப்புகள் இப்போது வருகிறது. அதன் வழியாக ஒரு புதிய பாய்ச்சல் இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறேன். முன்னெப்போதையும் விட நிகழ்காலத்தில் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான வாசகர்களும் உருவாகியிருக்கிறார்கள்… படைப்பாளிகளும் உருவாகி வருகிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் இளம் படைப்பாளிகள் தங்களின் படைப்பின் காத்திரத்தின் வழியாக திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

கலை கலைக்காகவே என்கிற மாய பாசாங்கு உடைந்து கலை மக்களுக்காகவே என்ற முழக்கத்தை முன்னெடுக்கும்படியான படைப்புகளை மரபுகளை உடைந்தெறிந்து புதிய பார்வையுடன் இளைஞர்கள் எழுத வந்திருக்கிறார்கள் என்பது உண்மை. வருங்காலத்தில் தமிழ் இலக்கியம் மிகச் சிறப்பான இடத்திற்கு செல்வதற்கான அனைத்து அடையாளங்களும் இளையவர்கள் வழியாக நமக்கு தெரிகிறது.

(மிகச் சிறப்பான, விரிவான, தெளிவான பதில்களைக் கொடுத்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு விண்மீனின் நன்றி)

*****

You Might Also Like

துண்டுபீடி
“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
கண்டிப்பாரற்ற சுதந்திரப் பறவை
‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
உடல்நலத்தை கவனிக்கத் தூண்டுவது எது?
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஜூன் 2026
Previous Article கதாவிலாசம்
Next Article நினைவுச் சாரல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?