VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: “கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > “கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
நேர்காணல்

“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”

தேவதர்சினி நடராஜன்
Last updated: June 18, 2026 1:30 pm
21 Views
Share
10 Min Read
மு. பழனி இராகுலதாசன்
மு. பழனி இராகுலதாசன்
SHARE
பேராசிரியர் முனைவர். மு. பழனி இராகுலதாசன்

Contents
பேராசிரியர் முனைவர். மு. பழனி இராகுலதாசன்தொகுப்பு : திருமதி. தேவதர்ஷினி நடராஜன்

பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், சமூக சிந்தனையாளர், மாணவர்களின் பேராசிரியர் எனப் பல முகம் கொண்ட, எல்லாருக்கும் பிடித்தவராய், எல்லோரையும் மதிப்பவராக, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற  முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் நல்ல சிந்தனையாளர், சிறப்பான வட்டார, வாழ்க்கைக் கதைகளையும்  பல வரலாற்று, வாழ்வியல் கட்டுரைகளையும், சாகித்திய அகாதெமிக்காக பல மொழிபெயர்ப்புகளையும் எழுதியவர். இப்போதும் நிறைய வாசிக்கவும், எழுதவுமாக இருக்கும் அய்யாவின் மனதுக்குள் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகள், நிகழ்வுகள், நினைவுகளில் இருந்து கொஞ்சத்தை இந்தப் பேட்டியின் மூலமாய் பெற்று இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். இந்தக் கேள்விகளுக்கான பதிலை அவர் எழுதி அனுப்பியிருந்தார். இவற்றை வாசித்த போது அய்யாவிடம் இருந்து இன்னும் நிறைய தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. காலம் அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் நிறைவான தகவல்களை அய்யாவிடம் இருந்து பெற முடியும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

 

இனி பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் பேட்டியைத் தொடர்வோம்..

 

கே. எழுத்தின் மீதான ஆர்வம் எப்போது ஏற்பட்டது?

 

ப. இந்த வயதில், இப்போது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் சோழவந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றபோது தமிழாசிரியர் இராசகோபாலனும், தமிழாசிரியர் ச.நடராசனும்தான் கட்டுரை எழுதத் தூண்டினார்கள். அதுதான் தொடக்கம் என்று சொல்லலாம்.

 

கே. பழனி இராகுலதாசனாக எப்போது மாறினீர்கள்?

 

ப. எங்கள் கிராமத்தில் எங்கள் குடும்பம்தான் பேப்பர் படிக்கிற குடும்பம். தினமணி, கல்கி, மஞ்சரி என்ற பத்திரிக்கைகள் வீட்டிற்கு வரும். என் அண்ணன் சங்கரலிங்கம் என்ற சிவசாமி சோழவந்தான் T.R. மகாலிங்கத்துடன் இணைந்து சங்கீதம் பயின்றவர். பயிற்சியை அவரால் தொடரமுடியவில்லை. அந்தத் தொடர்பால் எங்கள் வீட்டுக்கு ‘மஞ்சரி‘ இதழ் வந்தது. மஞ்சரியில் ஒருமுறை புத்தர் பற்றிய புத்தகச் சுருக்கம் வெளியானது. அதைப் படித்தபோதுதான் ‘இராகுலன்‘ என்ற பெயரைப் படிக்க நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ‘இராகுலதாசன்‘ என்ற பெயர் அமைத்துக் கொண்டேன். புத்தர் வரலாற்றில் ‘இராகுலன்‘ மிகவும் பரிதாபத்திற்கு உரிய பாத்திரம் அல்லவா!

 

கே. தங்களின் முதல் படைப்பு எப்போது எழுதப்பட்டது?

 

ப. கட்டுரை என்றால் பள்ளியில் எழுதப்பட்ட கட்டுரையைத்தான் சொல்ல வேண்டும். அந்தக் கட்டுரையைப் பாராட்டி, அன்றைய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் பள்ளி விழாவில் புத்தகம் அளித்தார். அதுதான் எனது முதல் படைப்பும் முதல் பரிசும் என்று சொல்லலாம்.

 

கே. பேராசிரியர் தமிழண்ணலுக்கும் தங்களுக்கும் இடையிலான நட்பு பற்றிச் சொல்லுங்கள்.

 

ப. பேராசிரியர் தமிழண்ணல் ஓர் அபூர்வமான ஆசிரியர்; சிந்தனையாளர்; தமிழ் – தமிழ் வளர்ச்சி என்பதில் மிகவும் தெளிவான பார்வையும் படைப்புத் திறனும் உடையவர். நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தபோது மாணவர்களிடையே மிகவும் செல்வாக்கும், நெருக்கமும் உடையவர். தியாகராசர் கல்லூரியில் நான் பி.ஏ., எம்.ஏ., பயின்ற போது நெருக்கம் அமைந்தது. எனது கல்லூரி ஆண்டு மலர்க் கட்டுரைகளையும், கல்லூரி விழாக்களில் நான் பேசும் பேச்சுகளையும் மிகுந்த கவனத்தோடு கேட்டு, நேரில் அழைத்துப் பாராட்டுவார். மாணவர்களிடையே அவர்தான் மிகுந்த செல்வாக்கு உடைய பேராசிரியராக இருந்தார்.

 

கே. கிராமத்திலிருந்து தேவகோட்டைக்கு வந்த போது என்ன உணர்ந்தீர்கள்?

 

ப. அதுதான் எனக்கு இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்மீது மிகவும் அன்பும் பிரியமும் கொண்ட பேராசிரியர் டாக்டர் சுப. அண்ணாமலைதான் தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ் – பயிற்றுநர் பணிக்குப் பரிந்துரை செய்தார். பணியில் சேர வரும்போது எனக்கு வழிகாட்டியாக உடன் வந்தவர் நாடகக் கலைஞர் உடையப்பாவின் மகன் உ.சுப்பிரமணியன் என்ற நண்பர் ஆவார். வந்தேன், சேர்ந்தேன்; பிறகு அனுபவங்கள் விரிந்தன; வளர்ந்தன.

 

கே. சிறுகதை மீதுதானே தங்கள் கவனம் இருக்கிறது. ஏன் நாவல் எழுதவில்லை?

 

ப. ‘சிறுகதை‘ என்பது ஓர் அபூர்வமான உருவம்; நாவல் பக்கம் போக வேண்டுமானால் அனுபவம் மிகவும் விசாலமாக இருக்க வேண்டும். அதற்கான பின்புலம், அனுபவம் அமையவில்லை. நீங்கள் கேட்பது போல ஒருமுறை கவிஞர் மீராவும் நாவல் எழுதுமாறு சுட்டிக்காட்டி, விரைவு படுத்தினார்; என்னவோ அந்தப் பக்கம் போகவில்லை.

 

கே. நல்ல எழுத்தைக் கைவசம் வைத்திருந்தும் தொடர்ந்து சிறுகதைகளை எழுதியிருந்தால் மிகப்பெரிய இடத்தை தமிழ் இலக்கிய உலகில் பெற்றிருக்கலாம், அதை ஏன் தாங்கள் செய்யவில்லை?

 

ப. நீண்ட கேள்வி, இதற்குக் குறிப்பிட்டு ஒரு பதிலைச் சொல்ல முடியாது. வாழ்க்கைச் சூழல், பணியாற்றும் சூழல், வேறுபிற பணிகளில் கவனம் என்று பல வகையான விடைகளைச் சொல்லலாம். வேறு ஒரு வகையில் சொல்வதானால் நான் மதுரை அல்லது சென்னையில் இருந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்தான்; தேவகோட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம், சன்மார்க்க சங்கம், லெனின் நூலகம், இந்திய – சோவியத்துக் கலாச்சாரக் கழகம் என்று பணிகளை விரிவாக்கிக் கொண்டேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

கே. வரலாற்றுக் கட்டுரைகள் நிறைய எழுதியதால்தான் சிறுகதை எழுதுவதை நிறுத்திவிட்டீர்களா..?

 

ப. ஆம்; ஒருவகையில் கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே; இப்படி நீங்கள் யோசித்துப் பாருங்களேன்.

 

கே. சாகித்ய அகாதெமிக்காக தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பும், வாழ்க்கை வரலாறும் எழுதியுள்ளீர்கள், எழுதுகிறீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்.

 

ப. என்னுடைய பரந்த வாசிப்பில் சாகித்ய அகாதெமி நூல்களும் அடங்கும். சாகித்ய அகாதெமியில் கவிஞர் மீரா ஏதோ ஒரு பிரிவில் உறுப்பினராக இருந்தார். அப்போது எனது விண்ணப்பத்தைப் பார்த்து என் பெயரைப் பரிந்துரை செய்தார். அப்படித்தான் முதன் முதலாக ‘கேசவதேவ்‘ என்ற ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்தேன்; தொடர்ந்து அகாதெமி எனக்குப் பல வாய்ப்புக்களைத் தந்தது. நூல்களைத் தேர்வு செய்வது, பரிசுக்குரிய நூல்களைத் தேர்வு செய்யும் பட்டியல் தயாரிப்பது என்று பல பணிகளைச் செய்திருக்கிறேன். இப்போது “தாகூரின் அழகியல் கோட்பாடுகள்” என்ற நூல் மொழி பெயர்த்திருக்கிறேன்; ஓரிரு வாரங்களில் நூல் வெளிவர இருக்கிறது.

 

கே. மாணவர்களுக்கும் உங்களுக்கும் அமைந்த தொடர்பு குறித்துச் சொல்லுங்களேன்.

 

ப. நல்ல கேள்வி; ஆசிரியர் என்றால் மாணவர்கள்தானே தொடர்பும் உறவும். எனக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு மிகமிக நேரியதாக, பயன் உள்ளதாக அமைந்தது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற வாழ்வியல் சூத்திரம் மிகமிக அபூர்வமானது. இது குறித்து மிகமிக விரிவாகவும் ஆன்மீகப் பூர்வமாகவும் எழுதலாம். இது மாதிரியான சூத்திர ரீதியான சொல்லமைப்பு அல்லது வாக்கிய அமைப்பு அல்லது சமுதாய சூத்திரம் உலகில் எங்கேயும் இல்லை. இந்தக் கேள்வியை மிகவும் கூர்மையாகக் கேட்டு விட்டீர்கள். இது குறித்து பக்கம் பக்கமாய் என்னால் எழுத முடியும். எனது ‘கல்லூரி வாழ்க்கை‘ மாணவர் தொடர்பு குறித்து தனி நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் பெயர் “தோட்டக்காரன்” என்று அமைகிறது. கல்லூரிதான் தோட்டம்; அங்கே பணியாற்றிய தோட்டக்காரன் நான்தான்.

ஒரு குறிப்பு: எனது முழுமையான கல்லூரி ஆசிரியர் பணியில் எந்த ஒரு மாணவரையும் நான் ‘வா‘, ‘போ‘ என்று சும்மா ஒருமையில் அழைத்ததே இல்லை.

கே. தவத்திரு குன்றக்குடி அடிகளார், வண்ணதாசன், சூரிய தீபன் ஆகியோருடனான தங்கள் தொடர்பு பற்றிச் சொல்லுங்களேன்.

 

ப. தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் நேரடித் தொடர்பை, தியாகி கே.எம்.எஸ். தான் அமைத்துக் கொடுத்தார். அடிகள் கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்தார்; நானும் இருந்தேன். சிந்தனை – சிந்தனை வட்டம்; சிந்தனை வளர்ச்சி என்றெல்லாம் இயங்குவதற்கு வழிகாட்டியவர் தவத்திரு அடிகளார்தான். தேவகோட்டை தோழர்களுக்கு என்று ஒரு தனி, சிறப்புச் சந்திப்பை அடிகள் ஏற்படுத்தி அழைப்பார்; அந்தச் சந்திப்பில் நான் தவிர்க்காமல் இடம் பெறுவேன்; அடிகளின் தேசிய, சர்வ தேசிய சிந்தனைகள் என்னை மிகவும் கவர்ந்தன. அடிகளாருடனான சந்திப்பு பற்றி ஒரு சிறிய நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன்; அதன் பெயர் “அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்” (சிலப்பதிகாரம்) என்பது, நூல் விரைவில் வெளிவரும்.

 

சூரியதீபன் தியாகராசர் கல்லூரியில் எங்களுக்கு முன்னோடி மாணவராக இருந்தார்; மிகத் தீவிரமான இடது சாரிச் சிந்தனையாளர்; மிகவும் நேர்மையானவர்; அவர் தமிழ்நாடு, தனி ஈழம் என்று பேசுவார்; நான் ஏக இந்தியா, இந்திய ஒருமைப்பாடு என்று பேசுவேன்; எங்களை இணைத்தது இலக்கியம்; குறிப்பாக சிறுகதை இலக்கியம்; சிறுகதை வாசிக்கவும், எழுதவும் தூண்டியவர் அவர்.

 

உயர்திரு வண்ணதாசன் நட்பு ஓர் அரிய நிகழ்வு. பள்ளியில் நான் படித்தபோது (தந்தி) இதழில் சிரிப்பு படம் எப்படி வரைவது என்று எனக்கு வண்ணதாசனும் அவருடைய இனிய சகோதரர் கணபதியும்தான் வழிகாட்டினார்கள். இது ஒரு அதிசயம்தான். எங்கோ ‘நெடுங்குளம்‘ என்ற சின்னஞ்சிறிய கிராமத்துக்காரனான நானும் ‘திகசி‘ குடும்பத்தார்களும் ஒன்றிணைந்தது எப்படி என்று பார்த்தீர்களா? வண்ணதாசன் எனக்கு எழுதிய கடிதங்கள் நூற்றுக்கும் மேலே இருக்கும்; அந்தக் கடிதங்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். அக்கரைப்பூக்கள் தொகுதிக்கு அட்டைப்படம் வரைந்தவர் வண்ணதாசன்தான்.

 

கே. இதுவரை தாங்கள் எழுதிய கதைகளில், கட்டுரைகளில் தங்களுக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது எது..? ஏன்..?

 

ப. அப்படி ஒரு நிறைவான கட்டுரையை, அப்படி ஒரு நிறைவான கதையை, நான் இன்னும் எழுதவில்லையே!

 

கே. ஒரு சிறுகதையை எப்படி எழுதினால் சுவராஸ்யமாக வாசிப்பவரை ஈர்ப்பதாக இருக்கும்?

 

ப. மிகவும் சிக்கலான கேள்வி. இது வாசிப்பவருடைய சுவை, விருப்பம், கவனம் பற்றிய கேள்வி. எனது அனுபவமாக எதுவும் சொல்ல முடியாது. வேறு ஒரு வகையில் சொல்கிறேன். ஜெயகாந்தன் எழுதிய “அக்னிப் பிரவேசம்” கதையைப் படித்திருக்கிறீர்களா? ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. அந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதிப் பல ஆண்டுகள் கழித்து, ஒரு கருத்தரங்கில் ஜெயகாந்தனிடம் வாசகர்கள், “அக்னிப்பிரவேசம் கதையில் இடம் பெற்ற அந்த அபலைப் பெண் என்ன ஆனாள்?” என்று கேட்டார்கள். ஜெயகாந்தன் அதிர்ந்து போனார். வாசகர்களின் அறிவு நுட்பம், திறனாய்வுப் பார்வை ஆகியவை அவரைத் திகைக்க வைத்தது. அக்னிப்பிரவேசம் கதையில் ஒரு முரட்டு இளைஞனால் கெடுக்கப்பட்ட அவளுக்கு வாழ்க்கை இல்லையா? அவள் என்ன ஆனாள்? என்று வாசகர் கூட்டம் கேட்கிறதே என்று அவர் திகைத்துத்தான் போனார். அதற்குப் பிறகுதான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்றும் “கங்கை எங்கே போகிறாள்?” என்றும் எழுதி முடித்தார். “கங்கை கங்கையோடு போனாள்” என்று முடியும் அந்த நாவலையும் சேர்த்து, இந்த மூன்று படைப்பையும் ஒரு சேரப் படிக்க வேண்டும்!

 

கே. தாங்கள் வாசித்ததில் கவர்ந்த சிறுகதை அல்லது நாவல் பற்றிச் சொல்ல முடியுமா..?

 

ப. சிறுகதைகளே அதிகம் வாசித்தேன்; குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கு.ப.ரா. எழுதிய ‘பண்ணைச்செங்கான்‘ என்ற சிறுகதையையும், செக்காவ் எழுதிய ‘வான்கா‘வையும் சொல்லலாம். பைபிளில் இடம் பெறும் ஊதாரி மகன் (Prodigal Son) என்ற சிறுகதைதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. உலக அளவில் இதனை மிகச் சிறந்த சிறுகதை என்று சொல்லலாம்.

 

கே. தமிழில் வந்த சிறுகதை பற்றிய முழுமையான ஆய்வு நூல் எது? ஏன்?

 

ப. எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘தமிழ் சிறுகதை பிறக்கிறது’ என்ற நூலைத்தான் குறிப்பிட வேண்டும். இது எழுத்தாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அதுவும் நுணுக்கமான முழுமையான ஆய்வு ஏடு. இதற்குப் பிறகு இது போன்றதொரு நுணுக்கமான முழுமையான சிறுகதை பற்றிய திறனாய்வு நூல் எதுவும் வெளிவரவில்லை

 

கே. தங்களது ‘அக்கரைப்பூக்கள்‘ சிறுகதைத் தொகுப்பு யதார்த்த எழுத்து என்று பலரும் சொல்கிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து?

 

ப. கேள்வியிலேயே பதில் இருக்கிறது. அக்கரைப்பூக்கள் என்ற தொகுப்பில் இடம் பெறும் கதை மாந்தர்கள் அனைவரும் எனது சொந்தக் கிராமத்து மனிதர்களே. நான் பார்த்த மனிதர்கள், என்னோடு பழகியவர்கள்; எனவே யதார்த்தமாக இருப்பதில் வியப்பில்லையே!

 

கே. இப்போது எழுதுபவர்களுக்குத் தாங்கள் சொல்லும் குறிப்புகள்?

 

ப. உங்களைப் பற்றி எழுதுங்கள்; உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்துப் பார்த்து எழுதுங்கள். ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் அனுபவ அலைகள் தத்தளிக்கின்றன; அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள் போதும்.

 

 

தொகுப்பு : திருமதி. தேவதர்ஷினி நடராஜன்

PrevPreviousதியாகம்
Nextநிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1Next

You Might Also Like

அறிவுரைகள் விற்பனைக்கல்ல!
“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
தெரியாத விசயத்தை எழுதுவதில்லை
சந்தியா ராகம்
அந்த மாலை – வினோத் – வினோதினி
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஆகஸ்ட் 2025
Previous Article தியாகம் தியாகம்
Next Article Oman நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
1 Comment
  • சரோஜாதேவி says:
    June 26, 2026 at 3:43 pm

    அருமையான பதில்கள்.. பேராசிரியர் அய்யா இராகுலதாசன் அவர்களுக்கு வணக்கம்!

    இந்த நேர்காணலில் மாணவர்கள் குறித்த தங்களுடைய பார்வையும் மதிப்பீடும் சிறப்பானவை தங்களுடைய பேராசிரியர் பணி அனுபவத்தையும் மாணவர் ஆசிரியர் உறவையும் பதிவு செய்யும் தோட்டக்காரன் நூலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ஜெயகாந்தன் படைப்பு குறித்து தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் அருமை!
    எழுத வருவோருக்கு தாங்கள் கொடுத்த ஆலோசனை சிறப்பு..
    மேலும் இந்த நேர்காணலில் என்னைக் கவர்ந்தது அதிக ஆர்வம் மூட்டியது தங்களின் பெயர் குறித்த பதிவு..
    “புத்தர் வரலாற்றில் ராகுலலன் கதாபாத்திரம் மிகவும் பரிதாபத்திற்குரியது!”
    என்ற கருத்து ..
    புத்தர் வாழ்வு குறித்து அடிப்படையான தகவல்களை தெரிந்து வைத்திருந்தாலும் ராகுலன் பற்றி சிந்தித்தே இல்லை. இதுவே பரிதாபத்திற்குரியதுதான்! ராகுலன் வரலாற்றை அறிய ஆவல்.. வாய் இருப்பின் இது பற்றிய உரையோ எழுத்தையோ தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!

    தங்களுக்கும் நேர்காணல் நிகழ்த்தியவருக்கும் ‘விண்மீன்’ இதழிற்கும் மிக்க நன்றி.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?