எழுத்தாளார் வா.மு.கோமு என்கிற வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே பதிமூன்று கி.மீ தூரத்திலிருக்கும் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் முத்துச்சாமி, மணி தம்பதிகளுக்கு 20-6-1969-ல்
மகனாக பிறந்தவர். கல்லூரிப் படிப்பை பாதியில் முடித்துக் கொண்டார். 1989-ல் ‘ஊன்றுகோல்‘ என்னும் பத்திரிக்கையை நண்பர் ஜே.பி.ஆருடன் இணைந்து சைக்ளோஸ்டைல் முறையில் 100 பிரதிகள் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் மாலைமுரசு பேப்பரில் சில கதைகள் எழுதினார். திருப்பூரில் அச்சகத்தொழிலில் இருந்தபோது 1991-ல் ‘நடுகல்‘ என்கிற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்து 21 இதழ்கள் வந்த நிலையில் நின்று போய், மீண்டும் மறு பிறப்பெடுத்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை என 16 இதழ்களுடன் நின்று போய், தற்சமயம் இணையதள இதழாக மாதம் ஒருமுறை வந்துகொண்டிருப்பதுடன் பல புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டும் இதழாக, வளர்த்துவிடும்
இதழாக தொடர்ந்து பயணிக்கிறது
‘வாழ்க்கை நம்மை வாழவே அழைக்கிறது!’ என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். சினிமா வசனம் எழுத வாய்ப்பு தேடிவந்த போது மறுக்காமல் ‘கடலை’ என்கிற படத்திற்கு எழுதியிருக்கிறார். அழுவாச்சி வருதுங்க சாமி, பிலோமி டீச்சர், தேர்த்திருவிழா,வெள்ளந்தி உள்ளிட்ட 19 சிறுகதைத் தொகுப்புக்கள், எல்லோராலும் பாராட்டப்பட்ட கள்ளி, மங்கலத்து தேவதைகள், சயனம், நாயுருவி, ஆட்டக்காவடி உள்ளிட்ட 20 நாவல்கள், டுர்டுரா, சிவப்பு குதிரை உள்ளிட்ட 7 குறுநாவல்கள், 6 கவிதைத் தொகுப்புகள், 16 சிறார் புத்தகங்கள், 3 நினைவோடை குறிப்புகள் என 71 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
செளமா
இலக்கிய விருது, கு.அழகிரிசாமி சிறுகதை விருது , பெரியசாமி தூரன் விருது , கு.அழகிரிசாமி சிறுகதை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் கொங்கு வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸிக்காக அவர் அளித்த நேர்காணலில் அவரைப் பற்றி நாம் இன்னும் அறிந்து கொள்ளலாம்.
எழுத்தாளர் வா.மு கோமு உதயமானது எப்போது..? எப்படி..?
1986-ல் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஹையர் செகண்டரி முதல் குரூப் வாசிக்கச் செல்கையில் பள்ளியிலேயே ’சுடர் விளக்கு’ என்கிற கையெழுத்து பத்திரிக்கை ஆரம்பித்தேன். வாரம் ஒருமுறை விசயங்களுக்குத் தக்கபடி பக்க அளவுகளுடன் பள்ளி அறைக்குள் மட்டுமே சுற்றிய பிரதி அது. கூடவே பாலா என்கிற நண்பன் அதில் ‘காட்டுவளவில் அரசியல் அலசல்’ என்று அரசியல் செய்திகள் எழுதினான். அதற்கு நானே ரசிகன். அப்போது கவிதைகள் எழுதத்துவங்கினேன். அப்போதெல்லாம் நிலா என்கிற தலைப்பிட்டு நிலாபற்றியும், சூரியன் என்று தலைப்பிட்டு சூரியன் பற்றியும், காதல் என்று தலைப்பிட்டு காதல் பற்றியும் எழுதுவதே கவிதைகள்.
பின்பாக 1989-ல் கோவையில் ‘ஊன்றுகோல்’ என்று சைக்ளோஸ்டைல் பிரதியாகவும், அச்சிதழாகவும் கொண்டு வருகையில் சிறுகதைகள் வரிசையாக எழுத ஆரம்பித்திருந்தேன். இதழில் கால்பக்கம், அரைப்பக்கம், முழுப்பக்கமென விளம்பரங்கள் கிட்டியது. அப்போது ஒருகுயர் நோட்டில் நாவல்களும் சில எழுதினேன். வாசிப்பவர்களிடம் நோட்டுகள் சுற்றிக்கொண்டிருந்தன. சில நோட்டுகள் கைக்கு சிக்காமல் அதற்காக சில வருடங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். கோவை மாலைமுரசு பதிப்பில் சிறுகதைகள் பல வெளிவந்தபோது 15 ரூபாய் தொகையும் கதையொன்றுக்கு கிடைத்தது.
பின்பாக அப்பா எனக்கு வாசிக்க கொடுத்த புத்தகங்கள் அசோகமித்ரன், அஸ்வகோஸ், ஜி.நாகராஜன், சுஜாதா என்று வாசிப்பு மாறிவிட எழுதும் எழுத்துக்களும் மாற்றமடைந்துவிட்டன.
தங்களின் இளமைக்காலம் பற்றி..?
கோவையில் லேத் மிஷினிலிருந்து, இரும்புக்கம்பெனி, டிசிஎம் டயோட்டா என்று ஆறு ஆறு மாதங்கள் பணிக்குச் சென்றேன். ஊன்றுகோல் பிரதி அச்சடித்த அச்சகத்திலேயே அந்தத் தொழிலையும் கற்றுக்கொண்டேன். பின்பாக திருப்பூர் வந்தபிறகு அச்சகத்தில் தான் பணியிலிருந்தேன். 1991- ஆவணி மாதம் நடுகல் முதல் இதழ் வெளிவந்தது. சொந்தமாக திருப்பூரில் பள்ளிக்கால நண்பன் பாலாவுடன் இணைந்து அச்சகம் நடத்தினேன். எல்லாமே கொஞ்சம் காலம் மட்டுமே. தொன்னூறுகளின் கடைசியில் திருப்பூரிலிருந்து காசநோயை சம்பாதித்துக்கொண்டு வீடு திரும்பினேன். அப்பாவும் உடல்நலக் கோளாறால் இறந்தார். காசம் என்னை ஆறேழு வருடங்கள் துன்பப்படுத்திவிட்டு விடைபெற்றது. இதை எழுதலாமா? என்ற கேள்வி மனதில் பல வருடங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. இப்போது 2026-ல் ‘சானடோரியம்’ என்கிற தலைப்பில் நாவலாக வெளிவரவிருக்கிறது.
வட்டார வழக்குக் கதைகளை எழுதும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது..?
திட்டமிட்டு நடந்ததல்ல. ஆரம்பகால வாசிப்பில் கி.ரா, பூமணி இவர்களை வாசிக்கையில் அந்தந்த வட்டார பேச்சு வழக்குகள் அவர்கள் புத்தகங்களில் கண்டேன். எனக்கு எளிதாக கொங்கு மண்ணின் பேச்சுவழக்கு எழுத்தில் வந்து சேர்ந்துவிட்டது. அதை குறைத்துக்கொண்டு பொதுத்தமிழில் எழுதும் ஆசையும் போய்விட்டது. இருந்தும் வியாபாரப் பத்திரிக்கைகளில் எழுதுகையில் கவனமாய் பொதுத்தமிழில் தான் எழுதுகிறேன்.
தங்களின் கதைகளை பாலியல் கதைகள் எனச் சிலர் சொல்வது குறித்து..?
அப்பா உயிருடன் இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். அவர் என் ஆரம்பகால எழுத்துக்களை வாசித்து குற்றம் குறை கூறியவர். ’கொசு’ என்றொரு கதை எழுதினேன். இறுதியில் கொசுக்கடி வாங்கியவன் கொசுவாக மாறிவிடுவான். அதை கனவு என்று முடித்திருந்தேன். ‘மாறிட்டு போறாண்டா.. கனவுன்னு ஏன் சொல்றே? தூக்கு அதை!’ என்றவர். நான் ரொம்பகாலமாய் எழுதிவந்தாலும் தொகுப்பாக ‘அழுவாச்சி வருதுங் சாமி’ ’மண்பூதம்’ என்று தாமதமாய்த்தான் வெளிவந்தன. ‘கள்ளி’ என்கிற நாவல் எனது சிறப்பான படைப்பு என்கிறார்கள். ஆனால் வந்த புதிதில் நிலவரமெல்லாம் அறிந்துகொள்ள முடியவில்லை. பதிப்பகத்தார் என்னால் நஷ்டப்பட்டு விட்டாரோ என்ற கவலை பிடித்துக்கொண்டது. பின்பாக சாந்தாமணி நாவல் வெளிவந்தது. ஏக விற்பனை என்றார்கள். அதிரடியாக பாலியலை எழுதிக்காட்டினேன். அடுத்து மங்கலத்து தேவதைகள். பாலியல் எழுத்தாளர் என்ற பெயர் அப்போது அடிபட்டது. பெரிதாக வருத்தப்படவும் இல்லை. அப்படி எழுதியும் பைசா பெருசாய் பார்க்காமல் போனதும் இப்போது வருத்தம் தான். போகப்போக நான் பாதைமாறி விலகி வந்துவிட்டேன்.
மனதில்பட்டதை மறைக்காமல் எழுதும் எழுத்தாளர் என்ற பெயர் பெற்ற தாங்கள், எழுத நினைத்து இதுவரை எழுதாத கதை என்று எதுவும் உண்டா..? அப்படியெனில் ஏன் எழுதவில்லை.
எழுத்தாளனுக்கு பலவிதங்களில் எழுதிப்பார்க்க ஆசை நிச்சயம் உண்டு. எழுத நினைத்து எழுதாமல் இருந்தது காசநோய் தன்மைகளைத்தான். அதையும் எழுதிவிட்டேன். முன்பாக எந்த திட்டமிடல்களும் என்னிடமில்லை. இப்படி எழுதலாம் என எழுத அமர்ந்தபிறகு கூட யோசித்து எழுதுபவன். இப்போது பித்தப்பை, சிறுநீரக கற்கள் இவற்றிற்காக கொஞ்சம் அலைந்த அனுபவங்கள் இருக்கிறது. தீர்ந்தபாடில்லை என்பதால் சேகரமாகிறது. அடுத்த சிறுகதை ஒன்று பிறந்துவிடலாம் எப்போது வேண்டுமானாலும். ஓ! சொந்த அனுபவங்களைத்தான் எழுதுவார் போல! என்று எண்ணிவிடாதீர்கள். கற்பனைக்கதைகள் பல எழுதிவிட்டேன் உண்மையின் சாயல்களோடு.
தங்களின் கதைகளில் இழையோடும் நகைச்சுவை உணர்வுகள் வாசிப்பவரை கொங்கு வட்டார வழக்குக்குள் ஈர்த்துக் கொள்ளும். அப்படியான நகைச்சுவையை கதைக்காக சேர்ப்பீர்களா..? அல்லது அந்தக் களத்தில் அது இயல்பாய் அமைகிறதா..?
இயல்பாகவே நான் நகைச்சுவைத்தன்மை உள்ளவன் தான். யாரும் துக்கமான விசயங்களை வாசிக்க தயாராய் இல்லையென்று நானாகவே நினைத்துக் கொள்கிறேன். கதைக்காக நகைச்சுவைகள் வருவதில்லை. அதில் வரும் கேரக்டர் அப்படியான தன்மையுடையவராய் இருப்பார். அப்படியில்லையெனினும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் குசும்புக்காரர்களாய் இருப்பார்கள். சம்பவம் ஒன்று சொல்கிறேன். டாஸ்மார்க் விற்பனையாளர் சொன்னது தான். நான் கேட்டேன்.. ‘என்ன இப்பிடி சிரிக்கறீங்க குழந்தைவேலு?’ ‘இல்லங்க.. இப்ப ஒருத்தரு போனாரே.. அவரு என்கிட்ட நல்ல விஸ்கீல ஒரு பிராந்து குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு போறாரு!’ அவ்வளவுதான். இது இயல்பாய் அமைவது தான். உடனே ஒரு கதையில் இந்தச்சமபவம் வந்துவிடாது. ஒரு வருடமேனும் மனதில் இருக்க வாய்ப்பிருக்கிறது. எப்போதேனும் கதையின் கேரக்டர் டாஸ்மார்க் சென்றால் இந்த சமபவம் அந்தக்கதைக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளூம்.
நடுகல் இணைய இதழைக் கொண்டு வரும் எண்ணம் எப்போது ஏற்பட்டது..? தொடர்ந்து இயங்குவதில் இருக்கும் சிக்கலும்… மகிழ்ச்சியும் பற்றிச் சொல்லுங்களேன்.
நண்பர்கள் சிலர் உதவியதால் 3 மாதத்திற்கு ஒருமுறை நடுகல் அச்சிதழாக 16 இதழ்கள் வெளிவந்தது. பின்பாக நண்பர்களை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பமில்லாமல் போய்விட்டது. என்ன வழி என்று யோசிக்கையில் இணைய இதழாக வடிவமைத்துக் கொடுக்க ஒருவர் அமைந்தார். இன்னமும் அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. இப்போது இணையத்தில் பல இதழ்கள் வருகின்றன. சரியான தேதியில் வரும் இதழாக ஒரு சில இதழ்கள் உள்ளன. புதியவர்களின் படைப்புகள் நடுகல் மெயிலுக்கு வந்து சேர்ந்து விடுவதற்கு ஓரளவு படைப்புத்தன்மை இருந்தால் வெளிவந்துவிடும் என்கிற நம்பிக்கையை முதல் இதழிலிருந்தே உருவாக்கியிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் எப்படியேனும் இரு புதிய படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். தொடர்ந்து இயங்குபவர்கள் வெற்றிபெறுகிறார்கள். வாழ்க்கைச்சூழல் சிரமப்படுத்துகையில் சில கதைகளோடு சிலர் ஒதுங்கிவிடுகிறார்கள். நடுகல் இதழால் வளர்ச்சியடைந்தவர்கள் என்கிற லிஸ்ட் இருந்தது முன்பாக. இப்போது அதையும் மறந்துவிட்டேன். இருபத்தைந்து படைப்புகளுக்கும் மேலாக ஒவ்வொரு இதழிலும் படைப்புகள் மாதாமாதம் வருகிறது. இது அதிகம் என்று சொல்கிறார்கள். குறைவாய் நிறைவாய் செய்யலாமே என்றும் கூறுகிறார்கள். தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் எதுவுமில்லை. அவ்வப்போது மெயில் பார்த்து படைப்புகளை எடுத்து சேகரித்து சரிபார்த்து ஓவியமும் எடுத்து வைக்க வேண்டும். அமர்ந்ததும் அனைத்தையும் எடுத்து வாசித்து ஓவியம் இணைத்து செய்வது முடியாத காரியம். கிட்டத்தட்ட பல வருடங்களாக அச்சிதழாக நடத்திய அனுபவம் இருப்பதால் இணையம் மிக எளிதாக இருப்பதாக உணர்கிறேன். அதில் பக்க அளவுகள் என்கிற சிக்கல் இருந்தது. இங்கே அது இல்லை. இயல்பான விஷயமாகத்தான் இதுவும் இருக்கிறது. ஓரளவான கதைகள் பின்னாலும்.. முன்னால் வரவர நல்ல கதைகளும் நடுகல் இதழில் நீங்களே கவனிக்கலாம்.
புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்கு தாங்கள் மிகவும் ஆசைப்படுவீர்கள் என்பதை நடுகல் சொல்கிறது… அப்படியான புதியவர்கள் தங்களின் எழுத்தில் மேம்பட வேண்டும் எனில் தாங்கள் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்கும்?
தொடர்ந்து வாசிக்க வேண்டும், தொடர்ந்து படைப்புகள் எழுதுவதில் முனைப்போடு இருக்க வேண்டும். வாசித்த நல்ல கதைகள் மனதை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும். அதைத்தாண்டிய கதையைத்தான் இனி எழுதனும் என்ற பிடிவாதம் இருக்க வேண்டும். புதியவர்களின் படைப்புகள் முதலாக வாசிக்கையில் ‘அட!’ என்று சில இடங்களில் ஆச்சரியப்படுகிறேன். அதுவே அவர்கள் கதையை வாசிக்க ஆர்வத்தை கொடுக்கிறது. இவர் நடுகல் இணையத்தில் தொடர்ந்து எழுத வேண்டுமென நினைத்துக்கொள்வேன். உங்கள் கதை அருமை என்று மெயிலில் பதிலும் நான் இடுவதில்லை. அருமை என்றாலே இதழில் வந்துவிடுகிறதே!
தங்களின் அப்பாதான் தங்களை வாசிக்கப் பழக்கினார் என்று சொல்லியிருக்கிறீர்கள்… அப்பா எழுதுவாரா..?
அப்பாவின் இயற்பெயர் முத்துச்சாமி. முத்துப்பொருணன் என்கிற புனைப்பெயரில் 70-களில் பல சிற்றிதழ்களில் கவிதைகள் மட்டுமே எழுதினார். 91-ல் திருப்பூரிலிருந்து வெளிவந்த நடுகல் அச்சிதழில் அவர் புதிதாகவும் சில கவிதைகள் எழுதினார். அட்டைப்பட கவிதையும் இடம்பெற்றது. ‘எழுபதுகளில் பரியாகாமல் விட்டுப்போன நரி’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை இதழில் வந்த சமயம் என்னிடம் .. இது ஏன் தெரியுமா? என்ற கேள்வியை வைத்தார். ‘நீ 70-ல எழுதி வெளிவராமல் போன கவிதையா இருக்கும்’ என்றேன். ‘சரிதான்’ என்றார். அவர் ஒரு தொகுப்பு கொண்டுவர முயற்சித்திருக்கிறார். ஏனோ அதை கிடப்பில் போட்டுவிட்டார். அவரது மரணத்திற்குப்பிறகு அவரது கவிதைகளைத் தொகுத்து கோவை ஞானியிடம் கொடுத்தேன். அவர் ‘முத்துப்பொருணன் கவிதைகள்’ என்ற தலைப்பில் தொகுப்பை கொண்டு வந்தார். சிறுகதை எழுதும் முயற்சியை அவர் துவங்கவில்லை.
எழுத்துலகில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும் மன நிறைவான புத்தகத்தைக் கொண்டு வரும் கனவு ஏதுவும் இருக்கிறதா..? அப்படியெனில் அது எப்போது நிகழும் எனச் சொல்ல முடியுமா..?
இப்படியொரு கேள்வி எழுத்தாளரிடம் வைப்பது தவறு. எழுதி முடிக்கப்படும் ஒவ்வொரு படைப்புமே எழுத்தாளனின் மனநிறைவான படைப்புகள் தான். ஒவ்வொரு முறையும் எழுத்தாளன் சிறந்ததை கொடுக்கணுமென முயற்சித்துக்கொண்டேதான் இருக்கிறான். எந்தப்படைப்பும் முழுதிருப்தியை எழுத்தாளனுக்கு கொடுத்திருக்காது என்றே நினைக்கிறேன். அதனால்தான் தொடர்ந்து இயங்குகிறான். சமீபகாலமாக நான் எழுதும் நாவல்கள் போட்டிகளுக்கும் செல்கின்றன. முன்பெல்லாம் போட்டிகளில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தேன். போட்டிகளுக்கு என்று எழுதுகையில் எழுத்து வேறுவிதமாய் இருக்கவேண்டுமென திட்டமிடுகிறேன். இதனால் என்னுடைய… கள்ளி-2, ஆகாவழி, கெடாவெட்டு, வாழங்கருக்கு, சானடோரியம் போன்ற சமீபத்திய நாவல்கள் முந்தைய படைப்புகள் பலவற்றைவிட முக்கியமானவைகளாக எனக்குப்படுகிறது. இன்னமும் போகப்போக வரும் நாவல்கள் இன்னமும் மெருகு கூடிவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.
சில பல விருதுகளை வாங்கியிருந்தாலும் இந்த விருது வாங்க வேண்டும் என்ற கனவு விருதாய் எதுவும் இருக்கிறதா..?
இது வரை கிட்டிய விருதுகள் கூட நான் எதிர்பாராமல் கிட்டியவைகள் தான். விருதுகள் சமீப மூன்றுவருட காலங்களில் தான் எனக்கு கிட்டுகின்றன. எனக்கு கனவு விருது என்று எதுவுமில்லை. வரும் விருதுகளை மகிழ்வாய் பெற்றுக்கொள்கிறேன்.
தோட்டப் பணிகளில் தங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை வைத்து, அப்படியானதொரு நாவல் வருமென எதிர்பார்க்கலாமா..?
நிச்சயமாக.. நீங்கள் சொன்னபிறகுதான் இந்த யோசனையே எனக்கு வருகிறது. முன்பாக சிறுகதைகளில் மட்டுமே தோட்டப்பணிகள் இடம்பெற்று வந்தன. நாவல்களில் தோட்டம் கவனிக்கும் பெரியவர்கள் வந்திருக்கிறார்கள். நாவலின் போக்கில் கிராமிய நாவலாக அது இருப்பின் தோட்டமும் அங்கு விளையும் பயிர் வகைமைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
தங்களின் நாவல்களில் பெண் கதாபாத்திரங்கள் இயல்பாகவே அழுத்தமாக அமைகின்றனவா அல்லது அந்த பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவீர்களா..?
என் கதைகளில் வரும் பெண்கள் குறுநகரம், கிராமம் சார்ந்த பெண்கள் தான். முப்பது வருட காலத்தில் பெண்களின் மனநிலை மாறியிருப்பதை கண்கூடாகக் காண்கிறேன். பலரிடமும் பேசுகிறேன். எழுதப்படும் கதையில் வரும் பெண் யார் என்பதை நான் மனதில் நினைத்துப்பார்த்து தீர்மானித்து எழுதப்படும் பெண்ணோடு ஒரிஜனல் பெண்ணை கொண்டு போய் ஒட்டுகிறேன். மனதில் பழகிய பெண் இருப்பதால் எந்த எந்த நேரங்களில் எப்படியெல்லாம் அந்தப்பெண் நடந்துகொள்வாள் என்பது அசலாகவே எனக்குத்தெரியுமென்பதால் மிக எளிதாக கதை வேகமெடுத்து சென்றுகொண்டே இருக்கும். அதை நான் தடைபோடுவதுமில்லை. பெருநகரப்பெண்களின் பழக்க வழக்கங்கள் ஓரளவுதான் எனக்குத் தெரியுமென்பதால் தெரியாத விசயத்தை எழுதுவதுமில்லை.


