“எல
பீமா ! பாவநாசம் பஸ் போய்ட்டானு” கேட்டுட்டே வந்து சேரில் உட்கார்ந்தார் அப்பாஸ்
பாய். “இல்லங்கா , இன்னும் வரல. இப்போ
வர நேரந்தான். தூரமா போறியோ?”.
“இந்நேரத்துல
நான் எங்கல போவ போறேன் ? வெள்ளேனேயே எம்மொவன் சிவகாசிக்கு போனான். இன்னும் ஆள வரக்காணோம்.
அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேம்ல…”
“அவனென்ன
சின்னப்பையனா? போனயிடத்துல முன்னப்பின்ன ஆயிருக்கும். வாடக்காத்து அடிக்குது . நீங்க
வீட்டுக்கு போங்க. அவன் வருவான்”.
“இல்லல
பீமா ! இதுவரைக்கும் அவன் ஊர விட்டு எங்கேயுமே போனதில்ல. அதான் கொஞ்சம் பக்பக்னு இருக்கு”.
“சரிங்க
அப்பாஸ் பாய்… அப்போ உள்ள வந்து இருங்க…”
கையடக்க
எப்.எம் ரேடியோவில் துரை கோபால் குரலோடு ஒலிபரப்பப்படும் மெல்லிசை பாடல்கள் இரவை மெதுவாக
கடத்துகின்றன.
ஆனால் அப்பாஸ் பாய்க்கு எதுவும் காதில் கேட்கவுமில்லை, கேட்கும் மனநிலையிலும் இல்லை…
“பீமா
!! ஒரு சாயா போடேன்”, சாயாவை வாங்கிட்டு சந்தை பஸ் ஸ்டாப்பை பார்த்துட்டே ஒரு
நாற்காலியில உட்கார்ந்தார்.
டிப்ளமோ
முடிச்சிட்டு ஒரு கம்பெனி இன்டர்வியூக்காக கல்லூரி நண்பர்களோடு சிவகாசி போயிருக்கான்
இத்ரீஸ். மற்ற நண்பர்கள் முதல் சுற்றிலேயே தேர்வாகாமல் போக இவன் மட்டும் அடுத்தக் கட்டத்துக்கு
தேர்வாகி விட்டான்.இதுவரை ஊர விட்டு எங்கேயும் தனியாக போனதில்லை. போகும் போது நண்பர்கள்
எல்லோரும் சேர்ந்து போனதால் ஒன்றும் தெரியவில்லை. இப்போது நண்பர்கள் எல்லாம் கிளம்பி
போகவே ஊருக்கு தனியாகச் செல்ல வேண்டுமென்ற பயம் தொற்றிக் கொண்டது.
‘மாப்ள
! நான் வர லேட்டாகும்னு எங்கூட்ட சொல்லிடுல’ன்னு நண்பனிடம் சேதி சொல்லி அனுப்பி விட்டு, அடுத்தக் கட்ட தேர்வுக்கு காத்திருக்கிறான்.
ஷோபா
டெவலப்பர்ஸ்னு பெரிய கம்பெனி. ஆஸ்திரேலியா, துபாய்ன்னு நிறைய நாட்டுல ப்ரொஜெக்ட் நடக்குது.
இப்போது தேர்வாகி விட்டால், வெளிநாட்டுக்கு போய் விடலாம்னு நினைச்சிட்டு இருந்தாலும்
, மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு.
மொத்தம்
நாற்பது பேர். ஒவ்வொரு ஆளுக்கும் பத்து நிமிடமாகுது. நேரம் நேரம் செல்ல இத்ரீஸுக்கு
பயமும் படபடப்பும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அப்படி இப்படின்னு இண்டர்வியூ ரூமுக்குள்ள
போகும் போது சாயந்திரம் ஏழு மணி. உள்ளே கோட் சூட் அணிந்த மூன்று பேர் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள்.
முதல் இண்ட்ர்வியூ என்பதால் பயத்தில் உள்ளங்கை வேர்த்துக் கொண்டிருக்கிறது.
“ஹலோ
மிஸ்டர் இத்ரீஸ்… உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள்… ப்ளீஸ்”
அவர்கள்
ஆங்கிலத்தில் என்ன சொல்கிறார்கள் என்பது இத்ரீஸ்க்குப் புரிகிறது ஆனா இங்கிலீஷ்ல பதில்
சொல்ல நினைக்கும் போது, ‘உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது. அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுதுன்னு’ அபிராமியிடம் சொல்லும் குணா கமல் மாதிரி வார்த்தை திக்குது.
தட்டு
தடுமாறி Is , was , the போட்டு ஒரு வழியா பதில் சொல்லி விட்டான். பதினொன்னு, பனிரெண்டுல தேவராஜ் சார் சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் அன்னைக்கு
தான் அவனுக்கு ஹெல்ப்பானது.
Pile
foundation பத்தி சொல்லுங்கன்னு அடுத்த கேள்வி தமிழ்லயே கேக்குற அளவுக்கு அவனோட இங்கிலீஷ்
இருந்துச்சு. அதுக்கு பதில் தெரியல… ஆனாலும் வேற எதையோ சொல்லி சமாளிச்சு முடிக்க
, ஆட்டோகேட் படிச்சி இருக்கீங்களான்னு அடுத்த
கேள்வி.
“இல்ல
சார்… இனிதான் படிக்கணும். போன மாசம் தான் டிப்ளமோ முடிச்சேன்”.
“ஓகே
மிஸ்டர் இத்ரீஸ்… இப்ப நீங்க போகலாம். தேர்வான விபரத்தை விரைவில் தங்களுக்குத் தெரிவிப்போம்”ன்னு
சொல்லிட்டாங்க.
மத்தவங்களுக்கெல்லாம்
பத்து நிமிசம் நடந்த இன்டர்வியூ இவனுக்கு மட்டும் ஐந்து நிமிசத்துல முடிஞ்சிட்டு. அதுவும்
ஒரு வகையில நல்லதுக்கு தான்.
வெளியே
வந்தவனுக்கு சரியான பசி. காலையில சிவகாசி பஸ் ஸ்டாண்டல மூனு இட்லி சாப்பிட்டது. மதியமும் சாப்பிடவில்லை. ஏற்கனவே தாமதமானதால், பஸ் ஸ்டாண்ட்ல
போயி ஏதாவது சாப்ட்டுக்கலாம்னு அடிச்சி பிடிச்சி
பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டான்.
பஸ்
ஸ்டாண்ட் முழுவதும் அந்நியன் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலிக்கு
செல்லும் LSS பஸ் ஒன்று கிளம்ப தயாராக நிற்கிறது. இதனை விட்டால் அடுத்த பஸ் எப்போ வரும்னு
தெரியாது. அதனால் அதுல ஏறிட்டான். ஜன்னலோர சீட்ல உட்கார்ந்த சிறிது நேரத்தில் , குலுக்கலோடும்
சப்தத்தோடும் பஸ் கிளம்பி விட்டது. பசி அதிகமாகி ஏப்பம் ஏப்பமாக வருகிறது.
ஜன்னலோர
இருக்கையின் வழியே முகத்தை தழுவும் காற்றும் ,
பேருந்தில் ஒலிக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் பசி மறக்க வைத்து தூக்கத்தை
தந்தன.
அன்னா
இன்னான்னு பஸ் திருநவேலி வரும்போது பதினொன்னரை மணி ஆகி விட்டது. ஜங்சன் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பாபநாசம் போற பஸ்ஸேறி
ஊருக்கு பக்கத்துல வரும்போது தான் அவனுக்கு மூச்சே ஒழுங்கா வந்துச்சு.
சந்தை
பஸ் ஸ்டாண்ட்ல இறங்கும் போது “எல பீமா ! எம்மொவன் வந்துட்டான்” என்ற வாப்பாவின்
குரல் கேட்கிறது.
இத்ரீஸுக்கு
ஒருபக்கம் வாப்பாவை பார்த்ததுல சந்தோசமும், இந்நேரத்துல வாப்பா இங்கே என்ன செய்றாருன்னு
குழப்பம் வேற…
“இங்க
என்ன செய்றியோ வாப்பா ? “
“இல்லல
அப்பா… உன் கூட வந்த சங்காத்திமார்கள் எல்லோரும் ஊருக்கு வந்துட்டானுவோ. நீ மட்டும்
வரல. அதான் ஒரு பயம்”.
“நான்
வர நேரமாகும்னு சொல்லி விட்டேனே… இம்ரான் வந்து சொல்லலியா..?”
“இல்லையே…
சரில அப்பா.. இங்க வந்து உக்காரு. பீமா… நாலு ரொட்டியும் ஒரு சாயாவும் கொண்டுவா…”
ரொட்டியை
தன் கையால் பிச்சிப்போட்டு சால்னாவை கொழுக்க
கொழுக்க ஊத்தி , நல்ல விரவி , சாப்பிடுல அப்பான்னு சாயாவை குடிக்கிறார். தனக்கு பசிக்குதுனு
வாப்பாக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியத்தோடு அவரை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறான்.
“நீங்க சாப்பிடலியா வாப்பா”
“இல்லல…
நான் அப்போவே சாப்டுட்டேன். அதனால பசிக்கல…”
அன்னைக்கு
மட்டும் பீமா ஹோட்டலின் அந்த நாலு ரொட்டி ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. அதுக்கு காரணம்
பசியா இல்லை வாப்பாவின் கைவண்ணமான்னு இத்ரீஸ்க்கு தெரியவில்லை
“எல
அப்பா ! உங்க வாப்பா ரொம்ப நேரமா பொலம்பிட்டே இருந்தாருல. உன்ன பார்த்த பொறவு தான்
அவர் முகத்துல சிரிப்பு வருது”ன்னு ஹோட்டல் முதலாளி சொல்லும் பொழுது தான் அவனுக்கு
உண்மை தெரியுது. பத்து மணில இருந்து அங்கேயே வெய்ட் பண்ணிட்டு இருந்திருக்காரு.
வாப்பா
எப்போவுமே இப்படி தான். ஐந்தாவது படிக்கையில் ஸ்கூலோடு திருவனந்தபுரம் டூர் போயிட்டு
திரும்ப வரும் பள்ளியில் காத்திருந்து கூப்பிட்டு வந்ததிலிருந்து , கடந்த மாசம் கல்லூரி
நண்பர்களோடு குற்றாலத்துக்கு சர்வே எடுக்க போயிட்டு வரும் போது சந்தைக்கு வந்து கூட்டிட்டு
போனது வரைக்கும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சிறு
வயதில் சைக்கிளின் கேரியரில் அமர்ந்து செல்கையில் வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டுச்
செல்வது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ‘கவனமா உக்காருல அப்பா… கால உள்ளே விட்றாத’ன்னு
அப்பப்போ சொல்லிட்டே வருவார். ஒரு வயதுக்கு மேல வாப்பாவோடு பேசுவதும் சைக்கிளில் போவதும்
குறைந்தே போனது.
அது
என்னவோ தெரியவில்லை , ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பா மீதான பாசத்தையும் இணக்கத்தையும் பெண் பிள்ளைகள் வெளிபடுத்துவது
போல ஆண் பிள்ளைகளால் முடியவில்லை. நெஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கும் பாசத்தை வெளியே
காட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பு ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.
வெகுநாட்களுக்கு
பிறகு வாப்பாவின் சைக்கிளில் அவரின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு பின்னாடி உக்கார்ந்து
வீட்டுக்கு போகிறான். பத்து அடி தாண்டியதும், ‘கால பார்த்து வச்சிக்கோல அப்பா… உள்ளே
விட்றாத’ன்னு சொல்லும் வாப்பாவை ஆச்சரியமாக பார்த்து விட்டு , ‘சரிங்க வாப்பா’ன்னு
முகம் நிறைய புன்னைகையோடு சொல்றான்.
வாப்பாக்கள்
என்றும் மாறுவதில்லை.. எத்தனை வயதானாலும் அவர்கள் நம்மை குழந்தையாக தான் பார்க்கிறார்கள்.
“இன்டர்வியூ
என்ன ஆச்சுல அப்பா”
“அனுபவம்
வேணுமாம் வாப்பா”
“இப்போ
தானே படிச்சி முடிச்சியிருக்கே ? அதுக்குள்ள முன் அனுபவம் எப்படி வரும். சரில அப்பா…
ஒண்ணும் கவலைப்படாத, அடுத்த தடவை வேலை கிடைச்சிடும்” என்றபடி சைக்கிளை மிதித்தார்.
இத்ரீஸிற்கு
அந்த நாலு பரோட்டா வாசமும் வாப்பாவின் நேசமும் மணந்துக் கொண்டே வருகிறது.


