VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: மெழுகுவர்த்திகள்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > மெழுகுவர்த்திகள்
சிறுகதைகள்

மெழுகுவர்த்திகள்

நல்ல பாட்டாளிகள். ஆனால் வரும் வருமானத்தை சரியாக திட்டமிட்டு வாழ தெரியாதவர்கள்.

ராணி செந்தில்
Last updated: June 29, 2026 4:35 pm
19 Views
Share
23 Min Read
மெழுகுவர்த்திகள்
SHARE

மெழுகுவர்த்திகள்

–      ராணிசெந்தில்

 

இருள் பிரிந்தும் பிரியாத காலை வேளை. அந்த தெருவில் உள்ள வீடுகளில் விளக்குகள் ஒளிர, வாசலை கூட்டி சாண நீர் தெளித்துக் கொண்டும், கோலங்களை போட்டுக்கொண்டு இருக்க, வெண்ணிலா தூக்கு போசியை எடுத்துக்கொண்டு எட்டி நடையை போட்டாள். பொடி கற்கள் காலை குத்த, நேற்று வேலை விட்டு வரும்போது அறுந்த செருப்பை, இனி தைக்க முடியாது என்று சொன்ன காரணத்தால் அங்கேயே குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.

 

இன்னும் சம்பளத்திற்கு இரண்டு நாள் உள்ளது. அதுவரை வெறும் காலுடன் தான் நடக்க வேண்டும். இப்பொழுது பரவாயில்லை. மத்தியான சாப்பாட்டுக்கு வரும்போது, வசந்தா செருப்பை போட்டுக்கிட்டு வரவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டே வர மெயின் ரோடு வந்திருந்தது.

 

பழனியப்பன் டீ கடையில் சுறுசுறுப்பாக வியாபாரம் ஆரம்பித்திருந்தது. மணிபர்ஸிலிருந்த கசங்கிப்போன பத்து ரூபாய் தாள்களை எடுத்து குடுத்து, ‘அண்ணே ஒரு பார்சல் டீ, 3 வருக்கி‘ என்று வாங்கி கொண்டு கிளம்பினாள். சூடு ஆறுவதற்க்குள் வீடு போய் சேர வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாய் சென்றாள். அருகே இருந்த பட்டறைகளில் இருந்து விசைதறிகளின் தட் தட் என்ற சத்தம் லயத்துடன் கேட்க, பட்டறைக்கு 7 மணிக்கே போகவேண்டும். சீக்கிரம் வேலை முடிக்க வேண்டும் என்று ஆயிரம் எண்ணங்களை சுமந்து வீடு போய் சேர்ந்தாள்.

 

வெண்ணிலா ஒரு விசைத்தறி தொழிலாளி. அந்த ஊரின் முக்கிய தொழில் விசைத்தறி. காலம் காலமாக அந்த தொழிலில் இருப்பவர்கள். நல்ல பாட்டாளிகள். ஆனால் வரும் வருமானத்தை சரியாக திட்டமிட்டு வாழ தெரியாதவர்கள். சம்பளம் வாங்கி அடுத்த நாள் சினிமா, குடி என்று தொலைத்து விட்டு இரண்டு நாள் கழித்து முன் பணத்திற்காக போய் நிற்பார்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு தொழிலாளியின் தலையிலும் லட்சக்கணக்கில் பாக்கி இருக்கும்(அட்வான்ஸ்).

 

அவசர செலவு, மருத்துவசெலவு என சில ஆயிரம் ஆயிரமாக வாங்கியது இப்போது லட்சத்தில்.வெண்ணிலாவும் இதே ஊர் தான். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் படியான வேலைகளை பார்த்துவந்தாள். அண்ணன்கள் இரண்டு பேர். அவர்களும் விசைத்தறி தொழிலாளர்கள். அவர்களின் வசதிபடி பதினாறு வயதில் அவளின் மாமன் மகனான பூபதிக்கு திருமணம் செய்துவைத்தனர்.

 

ஒரு வருடம் மண வாழ்க்கை நன்றாக இருந்தது. ஒரு ஆண் பிள்ளை. பிறகு எதாவது ஒரு நாள் என்று ஆரம்பித்த குடிப்பழக்கம் தினமும் மது இல்லாமல் முடியாது என்ற நிலையில் வரும் வருமானம் அனைத்தும் குடிக்கே போனது. இதற்கிடையில் இரண்டு பெண் குழந்தைகளும் பிறக்க, வெண்ணிலா விசைத்தறி பட்டறை என்னும் புதைகுழியில் இறக்கப்பட்டாள். அவளின் தலைக்கும் பாக்கி வாங்கப்பட்டு, குடியில் நிதானம் இல்லாமல் வந்தவனை லாரி அடித்துவிட்டு பறக்க, மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்து அவளின் கடனை அதிகரித்து உயிர் விடும்போது வெண்ணிலாவுக்கு 25 வயதுதான்.

 

அன்றிலிருந்து தனியாக ஓடிக்கொண்டே இருக்கிறாள். மூன்று பிள்ளைகள், பெண்கள் இருவரும் முறையே பதினொன்று எட்டும் படிக்கிறார்கள். மகன் கல்லூரியில் கடைசி வருடம். அவன் படித்து வேலை பார்த்து தன் சுமையை குறைப்பான் என்று காத்திருக்கிறாள் வெண்ணிலா.

 

கடந்த காலத்தை அசை போட்டபடியே வீட்டை வந்தடைந்தாள் வெண்ணிலா. பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க, மூவருக்கும் டீயை ஊற்றி கொடுத்துவிட்டு, வர்க்கியையும்  கொடுக்க அவர்கள் குடித்துவிட்டு படிக்க ஆரம்பித்தனர். சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அடுப்பைப் பற்ற வைத்து ஒரு அடுப்பில் உலையை வைத்தவள், அடுத்த அடுப்பில் பருப்பு குழம்பு வைக்க ஆரம்பித்தாள். ரேஷன் அரிசியை பட்டை தீட்டி வைத்திருந்ததால் பழுப்பு ஆக இல்லாமல் சற்றே வெண்மையாக இருந்தது. ரேஷன் பருப்பை போட்டு ஒரு குழம்பு செய்து, தொட்டுக்க பக்கத்து வீட்டில் பறித்த முருங்கைக்கீரையை சுத்தம் செய்து பொரியல் ஆக செய்து வைத்து விட்டு, ‘கவி நீ போய் குளி‘ என்று முதல் மகளை சொல்ல, மகன் செல்வராஜோ ‘அம்மா நான் முதலில் குளிக்கிறேன். எனக்கு இன்னைக்கு நேரமே போகணும்‘ என்று சொல்லி துண்டையும், சோப் டப்பாவயும் எடுத்துக்கொண்டு பொது பாத்ரூமுக்கு சென்றான்.

 

அது பட்டறைகாரர்கள் அங்கு வேலை செய்பவர்களுக்கு கட்டி விட்டிருந்த லைன் வீடுகள். ஆறு வீட்டுக்கு ஒரு பொது பாத்ரூம். குளிக்க மட்டும். மற்றபடி பொது கழிப்பிடம் தான் மற்ற தேவைகளுக்கு. அதுவும் நான்கு புறமும் சுவர்கள் மட்டுமே இருக்கும். மேல் கூரை எதுவும் இருக்காது. இரண்டு பெண் பிள்ளைகள் குளித்துவிட்டு வரும் வரை கதவின் முன்னே நின்று கொண்டு இருப்பாள் வெண்ணிலா.

 

‘அம்மா சாப்பாடு போடு‘ என்ற மகனை நிமிர்ந்து பார்த்தாள். வயதிற்கு ஏற்ற வளர்ச்சியில் தலை முடி அலைஅலையாக முன் நெற்றியில் தவழ பேன்ட், ஷர்ட் அணிந்து வந்தவனை ரசித்த வெண்ணிலா, ஒரு வட்டிலில் சோற்றை போட்டு குழம்பை ஊற்றி ஓரத்தில் கொஞ்சம் கீரையை வைத்து கொடுத்தாள்.

 

‘இன்னைக்கும் ரேஷன் அரிசி சோறா‘ என்று அவன் முகம் சுளிக்க, ‘அரிசி தீர்ந்துடுச்சு செல்வா. நாளைக்கு சம்பளம் வந்ததும் நல்ல அரிசி வாங்கி வந்து செய்யறேன். இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடுய்யா‘ என்றாள். வேறெதுவும் பேசாமல் வேண்டா வெறுப்பாய் சாப்பிடும் மகனை பார்த்ததும், முன்பெல்லாம் அம்மா அம்மாவென வாய் நிறைய கூப்பிட்டு இவள் பின்னே சுற்றிக்கொண்டிருப்பவன் இப்போது அளவாய் பேசுவதுடன், தங்கைகளிடம் கூட சரியாக பேசுவதில்லை. கல்லூரி சென்ற இந்த 3 வருடங்களில் இந்த மாற்றம்.

 

சாப்பிட்டு முடித்ததும் கையை கழுவி எழுந்தவன் ‘எனக்கு டிஃபன் பாக்ஸ் வேண்டாம்‘ என்று சொல்லி விட்டு, ‘நாளைக்கு எனக்கு லேப் ஃபீஸ் கட்ட 1500 ரூபாய் வேண்டும்‘ என்று சொல்லி விட்டு அம்மாவை நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான்.

 

வெண்ணிலா தறிபட்டறைக்குள் நுழையும் முன்னே அங்கிருந்த வாட்ச்மேன் கருப்புசாமி, ‘வெண்ணிலா உன்னை முதலாளி அம்மா வந்ததும் பார்க்க சொன்னாங்க‘ என்றான்.

 

இன்னிக்கு வேலை செஞ்சமதிரி தான் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டு, ‘சரிண்ணா‘ என்றவள் பக்கத்து கேட் வழியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

பெரிய வாசல். அதை தாண்டி 5 கார் நிற்கும் அளவிற்கு போர்டிகோ. முன் வாசல் வழியாக வீட்டிற்குள் செல்லாமல், பக்க வாசல் வழியாக சமையல் அறைக்குள் சென்றாள்.

 

‘அக்கா, கூப்பிட்டீங்கன்னு கருப்பண்ணன் சொல்லுச்சு‘ என்றாள்.

 

கனத்த தேகத்துடன் கண்ணில் கண்டிப்பான பார்வையில் வெண்ணிலாவை எட்ட நிறுத்தியவாரு ஒரு பெண்மணி அருகில் வந்தாள்.

 

‘என்ன வெண்ணிலா வர்றதுக்கு நேரமாயிருச்சா?’ என்றாள்

 

‘ஆமாக்கா, இப்ப தான் வந்தேன். ரெண்டு தறில பாவு இல்ல. மேஸ்திரி மத்தியானம் தான் ஓட்டி விடுவேன் நூ சொல்லுச்சு. அதாங்க்கா கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தேன்‘ என்றாள்.

 

‘சரி, பாவாத்தா வாசல் வளிக்க வரேன்னு சொல்லிட்டு போனா, அதுக்குள்ள எதோ பெரிய காரியம் ஆயிடுச்சு ன்னு போயிட்டா. சாணி எடுத்து வச்சிருக்கு, கொஞ்சம் வளிச்சி விட்டுட்டு போ‘ என்றாள்.

 

எதுவும் சொல்ல இயலாமல் வெண்ணிலா பக்கெட் எடுத்து சாணியை கரைத்து, அதில் உள்ள குப்பை நீக்கி சாணி பவுடர் சேர்த்து கரைத்து வைத்துவிட்டு, கரை கட்ட நீலத்தை கரைத்து சுண்ணாம்புடன் சேர்த்து வைத்தாள்.

 

விளக்குமாறு எடுத்து முதலில் வாசலை சுத்தமாக கூட்டி எடுத்து, சுண்ணாம்பை எடுத்து கரை கட்ட ஆரம்பித்தாள். கரை கட்டி முடித்ததும், நிமிர்ந்தவளுக்கு நடு முதுகு விட்டு போவது போல் ஒரு வலி. எதையும் பொருட்படுத்தாமல், சாணியை துணியில் நனைத்து விரல்களில் வரி வரியாக வளிக்க ஆரம்பித்தாள். அந்த பெரிய வாசலை வளித்து முடிக்க மூன்று மணி நேரம் ஆனது. முடிந்ததும் பக்கெட், துணி முதலியவற்றை சுத்தம் செய்து வைத்தாள். இடுப்பு விட்டுப் போனது. காலையில் அவசரமாய் இரண்டு வாய் சோற்றை உருட்டி போட்டு வந்தது. நடுவில் ஒரு டீ கூட குடிக்கவில்லை. மிக சோர்வாக இருக்க சேலையை உதறி சரி செய்தாள்.

 

மீண்டும் சமயலறைக்கு முன் வந்தவள், ‘அக்கா வேலையை முடிச்சுட்டேக்கா‘ என்று சத்தம் கொடுத்தாள்.

 

‘இரு வரேன்‘ என்று உள்ளிருந்து குரல் வந்தது.

 

‘இப்பத்தான் கொஞ்சம் கண் அசந்தேன். அதுக்குள்ள எழுப்பி விட்டுட்ட‘ என்று சலித்தபடி வந்தவள், கையில் 150 ரூபாய் தாளை நீட்டினாள்.

 

கையில் பணத்தை வாங்கியவள், ‘அக்கா இன்னும் கொஞ்சம் சேர்த்துக் குடுக்கா. நாலு மணி நேரம் ஆச்சு‘ என்றாள்.

 

‘சரி சரி அழுகாதே‘ என்று எல்லளாக பேசியவள், ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்தாள்.

 

இனி பைசா தேறாது, என்று தெரிந்த வெண்ணிலா எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு நடையை கட்டினாள்.

 

நாளை தான் சம்பளம். மகன் வேறு ஃபீஸ் கட்ட பணம் வேண்டும் என்று கேட்டது நினைவில் வர அவசரமாக பட்டறைக்குள் நுழைந்தாள். அவளின் தறி ஓடிக்கொண்டு இருந்தது.

 

பக்கத்து தறி விஜயா, ‘ஏன் வெண்ணி, எங்க போன..? மேஸ்திரி வந்து உன்னை காணோம்னு திட்டிபுட்டு, பாவு கட்டி ஓட்டி விட்டுட்டு போச்சு. மிச்ச தறியை நான் தான் ஒட்டிவிட்டேன்‘ என்றாள்

 

‘அதை ஏன் கேக்கற விஜயா வந்து வராதுக்கு முன்னாடி, முதலாளி அம்மா வாச வளிக்க வரசொல்லி விட்ருச்சு. இடுப்பு கழண்டு போச்சு. அதான் சொல்ல முடியல‘ என்றவாறே நின்ற தறியில் நாடாவில் தீர்ந்து போன தார்க்குச்சியை மாற்றி புது தார் போட்டு ஓட விட்டாள் வெண்ணிலா.

 

‘சாப்டியாடி?’ என விஜயா கேட்க, ‘இல்லை விஜி, வீட்டுக்கு போயிட்டு வந்தா பொழுதே போய்டும். பசியில்ல‘ என்றவளை, பார்த்து முறைத்தவள் தன் தறியின் அருகே வைத்திருந்த ஒயர் கூடையை கொண்டு வந்து கொடுத்து, ‘வெண்ணிலா இட்லி தான் கொண்டாந்தேன். மூணு மிச்சமிருக்கு. சாப்பிட்டுட்டு வேலையை பாரு‘ என்றாள்

 

எதுவும் பேசாமல் வாங்கி, அங்கேயே ஒரு ஓரமாக உக்கார்ந்து இட்லியை வாய்க்குள் பிச்சுப்போட்டு முழுங்கியவள் தண்ணீரை குடித்து விட்டு எழுந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள். மேஸ்திரி பார்த்தால் அதற்கும் ஒரு திட்டு கிடைக்கும்.

 

தார் ஒட்டும் வசந்தி, ஒரு கூடை தார் கொண்டுவந்து கொடுக்க, அதை பெட்டியில் கொட்டியவள், ‘என்ன வசந்தி, குமார் உன்னை நல்லா வச்சிருக்கா?’ என்று கேட்டதும் தான் கண்ணிரண்டில் தாரை தாரையாக கண்ணீருடன் அழ ஆரம்பித்தாள்.

 

‘யேய் எதுக்குடி அழுவற‘ என்றவள், ‘விஜி இங்க வா புள்ள‘ என்று அழைத்ததும் விஜயாவும் ஓடி வந்தாள்.

‘ஏன் வசந்தி அழுவுற? முதல்ல அழுவறதை நிறுத்து‘ என அதட்டினாள். அழுகை தேம்பலாய் மாறி நின்று போக, கையில் வாட்டர் பாட்டில் கொடுத்து குடிக்க சொன்னாள்.

 

ஒரு முழுங்கு நீரை குடித்தவள், ‘அக்கா என் மாமியார் ரொம்ப திட்டுதுக்கா, வெறும் பய மக, என் மவனை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா? அப்படின்னு தொட்டதுக்கு  எல்லாம் பேசிட்டே இருக்குக்கா. தீவாளிக்கு எங்க அம்மாகிட்ட இருந்து 3 பவுன் செயின் வாங்கிட்டு வந்தா தான் வூட்டுக்குள்ள வுடுவேன்னு சொல்லுதுக்கா. எங்க அம்மா எங்கக்கா போகும் அவ்ளோ காசுக்கு‘ என்றாள்.

 

அதுக்கு விஜயா, ‘ஏண்டி உன்கிட்ட எவ்வளவு தரம் சொன்னேன். குமாரோட அம்மா ஒரு சரியான பஜாரி, அவன் கூட பழகாதன்னு. உங்க அம்மா ஒத்தை ஆளா உன்னை நல்லாதன பார்த்துக்கிடுச்சு. நீ கொழுப்பெடுத்து போயி, உங்க அம்மாவை ஏமாத்திட்டு அவனை போய் கல்யாணம் கட்டிக்கிட்ட.  இப்ப வந்து கண்ணை கசக்கிட்டு வந்து நிக்கிற‘ என்று பொரிந்து தள்ளினாள்.

 

வெண்ணிலா தான் ‘அவளுக்கு எல்லாம் சரியாயிடும் புள்ள. மனசை வுட்டுடாத‘ என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாள்.

 

ஆறு மணி ஆனது. ஒவ்வொரு தறியாய் நிற்க, அவசரமாய் தறிய நிறுத்திட்டு மேஸ்திரியய் பார்க்க ஓடினாள். அடுத்த நாள் சம்பளம். அதற்கு கணக்கு போட்டு எழுதி கொண்டு இருந்த மேஸ்திரி, ஓடி வந்த வெண்ணிலா வை பார்த்து, ‘எதுக்கு இப்ப ஓடி வர்ற?’ என்றார்.

 

‘இல்லை மேஸ்திரி நாளைக்கு பையனுக்கு ஃபீஸ் கட்டணும். ஒரு 1500 ரூபாய் குடுத்தீங்கன்னா பரவாயில்ல என்றாள்.

 

‘ஏன் வெண்ணிலா ஒரு வாரமாவது சம்பளம் முழுசா வாங்குறியா? ஏதாவது சொல்லி முன்னாடி வாங்கிக்குற. மீதி சம்பளத்தில் பாக்கிக்கு போக சொற்ப காசு தான் கைல வாங்குற. இதெல்லாம் எப்போ தான் மாறப்போகுது?’ என்று ஆயிரம் வார்த்தைகள் பேசியபடி பணத்தை எண்ணி நீட்டினார்.

 

இரவு 6.30 மணி.

 

தறி பட்டறையில் இருந்து வெண்ணிலாவும், விஜயாவும் வெளியே வந்தனர்.

 

“விஜயா ஒரு செருப்பு வாங்கணும். வாங்கிட்டு போயிடுவமா” என்றாள்.

 

“சீக்கிரம் வாங்கு. அவரு வேற வீட்டுல இருக்காரு. போயி வயித்துக்கு எதாவது செஞ்சுகுடுக்கணும்” என்றாள் விஜயா.

 

இருவரும் பேசியபடியே சாலையோர செருப்பு கடையில் ஒரு ரப்பர் செருப்பை விலை பேசி வாங்கிக்கொண்டு நடந்து சென்றனர். இருவரும் எதிர் எதிர் வீடு. விஜயாவின் கணவர் நல்ல நிலையில் இருந்தவர். சொந்தமாக தொழில் செய்ய நினைத்து லீசுக்கு தறி பிடித்து நடத்திவந்தார்.நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த தொழிலை விரிவு படுத்துகிறேன் என்று  கடன் வாங்கி மீண்டும் 6 தறியய் போட்டார்.

 

அவரின் நேரமோ என்னவோ சரியான ஆர்டர் இல்லாமல் தறிகள் அடிக்கடி நிற்க, வட்டி அசலை விட உயர்ந்தது. அதை சமாளிக்க மறுபடியும் கடன் வாங்கி கந்துவட்டி என்னும் புதைகுழியில் அனைத்தையும் இழந்து இப்போது உடல் நலம் சரி இல்லாமல் வீட்டில் இருக்கிறார். விஜயா வேலைக்கு வந்து சம்பாதித்தால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலை. அதிலும் இன்னும் முடிக்கப்படாத கடன்களுக்கு வட்டியும் கட்ட வேண்டும். அவ்வப்போது கந்துவட்டி கும்பல் வந்து வீட்டிலும் மிரட்டிவிட்டு போவதும் உண்டு.

 

“ஏன் விஜி, உன் மச்சாண்டார் கிட்ட பணம் கேட்டிருக்கென்னூ சொன்னியே, எப்போ தரேன்னு எதாவது சொன்னாங்களா” என்றாள் வெண்ணிலா.

 

“எங்க, எப்போ கேட்டாலும், கொஞ்சம் பொறு. ரெடி பண்ணி தரேன் அப்படின்னு தான் சொல்றாங்க” என்றாள்.

 

“அவுங்க தறி எல்லாம் நல்லா ஒடுதில்ல” என்றாள்.

 

“நல்லாத்தான் ஓடுது. அதுக்காக நமக்கு தூக்கி குடுக்கணுமுண்ணு அவுங்களுக்கு என்ன தலையெழுத்தா? இவரு கூறுகெட்டு போயி எல்லாத்தையும் தொலச்சுட்டு, கடனாளியாகி உக்கார்ந்ததுக்கு அவுங்களா பொறுப்பு” என்றாள்.

 

“இன்னும் சொல்லப்போனா அவுங்க அண்ணன் தறி அதிகப்படுத்தும் போது இப்போ வேண்டாம்,அடுத்த வருஷம் பண்ணிக்கிலாம்னு சொன்னாரு. யாரு கேட்டா? எல்லாம் நம்ம தலைஎழுத்து வெண்ணிலா” என்று சலித்தபடி சொன்னாள் விஜயா.

 

“வெண்ணிலா, உன் பெரியப்பா மகன் குமரேசனூக்கு  என்ன திடீர் பாசம் உன்மேல?  இப்போல்லாம் எங்க பார்த்தாலும் பாசமா பேசறாரு” என்றாள் விஜயா.

 

“ம்ம் ஆமா, என்ன விசயம் தெரியல, கத்திரிக்காய் முத்தினா, கடை தெருவுக்கு வந்து தான ஆகனும்.பார்க்கலாம்” என்றாள் வெண்ணிலா.

 

வீட்டிற்க்கு செல்லும் முக்கு திரும்பும் போதே, அவர்களின் வீட்டு வாசலில் ஒரே கூச்சல், சத்தம்.

 

பக்கத்து வீட்டு பையன் சைக்கிளில் வேகமாக வந்தவன், இவர்களை பார்த்ததும் நிறுத்தி, “விஜயாக்கா, அந்த அண்ணனை போட்டு வட்டி வாங்க வர்றவங்க போட்டு அடிச்சுட்டு இருக்காங்க” என்று சொன்னதும் தான் தாமதம், கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு ஓடினாள் விஜயா. கீழே விழுந்ததை எடுத்துக்கொண்டு, வெண்ணிலாவும் ஓடினாள்.

 

தடிமாடுகள் போல இருந்த நான்கு பேர் விஜயாவின் கணவன் இளங்கோவை அடித்துக்கொண்டு இருந்தனர். சுற்றி இருந்தவர்கள் பரிதவித்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை.

 

ஓடி வந்த விஜயா “அண்ணே அவரை விடுங்கண்ணா, அடிக்காதிங்கண்ணா, உடம்பு சரியில்லாத மனுஷன்னா” என்று கையை கூப்பி அவர்கள் காலில் விழுந்து, கணவனை எழுப்பி நிற்கிவைத்தாள்.

 

அவளின் இடையீட்டால், சற்றே நகர்ந்தவர்கள், “ஏண்டா நாயே, ஒழுங்கா  வட்டி குடுக்க துப்பில்ல. எங்க கிட்டயே குரலை உசத்தி பேசுறயா? இந்த ரோசம் எல்லாம் கைநீட்டி பணம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும். உன் பொண்டாட்டி மூஞ்சிக்காக உன்னை விட்டுட்டு போறேன். 15 நாள் அவகாசம். அசலும் வட்டியும் சேர்த்து எடுத்து வச்சிட்டு வேற வேலைய பாருங்க ரெண்டு பேரும்” என்று மிரட்டிவிட்டு வண்டியில் ஏறி சென்றனர்.

 

சட்டை கிழிந்து, உதடு கிழிந்து,  ரத்தக்கரையுடன்,கண்களில் நீருடன், விஜயாவை கட்டிபிடித்து அழுத  இளங்கோவை பார்த்த விஜயாவிற்கு நெஞ்சில் இரத்தம் வடிந்தது. கூனி குறுகி நின்றவனை கண்ணில் நீருடன், வெதும்பிய மனதுடன் வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.

 

அதற்குள் வெண்ணிலா போய் சூடாக டீ யை போட்டு எடுத்து வந்தாள்.

 

கணவன் மனைவி இருவரும் கண்களில் கண்ணீருடன் எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருக்க, உள்ளே வந்த வெண்ணிலா “விஜி, நடந்ததை நெனச்சிட்டு இருக்காம போயி அண்ணனுக்கு வேற லுங்கி எடுத்தா. எடுபட்ட பயலுங்க, இவனுங்க எல்லாம் வெளங்கவே மாட்டானுங்க. அண்ணே கவலைப்படாத. எதாவது அங்க இங்க பொரட்டி அவுங்க பணத்தை குடுத்துடலாம்” என்றாள்.

 

ஆவேசம் வந்தவள் போல விஜயா “என்னது பணத்த பொரட்டுறியா? ஏண்டி, என்ன 1000, 2000 ன்னு நெனச்சியா? ரெண்டு லட்சம் குடுக்கணும்” என்றாள்.

 

“என்ன 2 லச்சமா..?” என்று மலைத்து நின்றவள், ‘சரி எத்தனை குடுக்கணுமின்னாலும் குடுத்து தானே ஆகணும்‘ என்றவள், “சரி டீ ய குடிச்சுட்டு, அண்ணன் கிட்டயே உக்கார்ந்து இரு. நான் போய் எதாச்சும் செஞ்சு எடுத்தாரேன்” என்றாள் பதிலை எதிர்பார்க்காமல்.

 

வெண்ணிலா வீட்டிற்குள் நுழைந்தாள். பிள்ளைகள் இரண்டும் டிவி பார்த்துக்கொண்டிருந்தது.

 

“அம்மா தீனி எதும் இருந்தா குடும்மா” என்றாள் பெரியவள்

 

டப்பாவை தேடி பார்க்க ஒன்றும் இல்லை.

 

“தங்கம் அம்மாக்கு ஒரு வேலை செய்” என்றாள் சின்ன குட்டியை பார்த்து “என்னம்மா” என்றாள்.

 

“அண்ணாச்சி கடைல போய் ரெண்டு பாக்கெட் இட்லிமாவும், உனக்கு சாப்பிட பிஸ்கட் இல்ல வேற வாங்கிட்டு வரியாடி தங்கம்” என்றாள்.

 

“சரிம்மா” என்றவளிடம் காலையில் முதலாளி அம்மா குடுத்த பணத்தில் செருப்பு வாங்கியது போக மீதி இருந்ததில் ஒரு 100 ரூபாய் தாளை கொடுத்தாள்.

 

அவள் வருவதற்குள் தொட்டுக்க தக்காளி சட்னியும், தேங்காய் சட்னியும் செய்ய ஆரம்பித்தாள். மாவு வந்ததும் இட்லி சட்டியில் மாவை ஊற்றி வைத்தாள்.

 

தேங்காய் சட்னிய அம்மியில வைத்து அரைக்கும் போது யாரோ வந்த சத்தம் கேட்டது. அதை பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் பாத்திரத்தில் போட்டு ஒயர் கூடையில் வைத்து, விஜயா வீட்டிற்க்கு போக, வெளியே வாசல் நிறைய செருப்புகள்.

 

யாரா இருக்கும் என்று நினைத்து கொண்டே நுழைந்தாள். அங்கே வெள்ளை சட்டை போட்டு ” இங்க பாரு இளங்கோ இனி பண பிரச்சினை எல்லாம் தீர்ந்திடும். உனக்கு அதிகமாவே வாங்கி தரேன். முதல்ல அட் வான்ஸ் வாங்கி தாரேன். அவனுங்க மூஞ்சி ல வீசி எறி” என்று சொல்லிக்கொண்டிருந்த குணசேகரனை பார்த்து விக்கித்து நின்றாள் வெண்ணிலா.

 

குணசேகரனை பார்த்த வெண்ணிலா, மனதிற்குள் அவனுக்கு மண்டகப்படி குடுக்க ஆரம்பித்தாள்.

 

‘இவன் எதுக்கு இங்க வந்தான். யார் வீட்டுலயும் பணப்பிரச்சினையின்னா போதும். இவனுக்கு மூக்கு வேர்த்திடும். கடவுளே, இவன் வலயில விஜயா விழுந்துட கூடாது‘ என ஒரு கோரிக்கை வைக்க, அது தேவையில்லாதது என விஜயா அடுத்து பேச ஆரம்பித்தாள்.

 

“இங்க பார் குணா அண்ணா, நீ பேசுறது கேக்க நல்லாதான் இருக்கு. ஆனா மத்தவிங்களை ஏமாத்துற மாதிரி  என்கிட்ட உன் வேலையக் காட்டினா நான் பொல்லாதவள் ஆயிடுவேன்” என்றாள்.

 

“என்ன விஜயா, நீ எனக்கு ஒரு வகையில சொந்தம் தான, உன்னை போய் ஏமாத்துவனா” என்றான் குணசேகரன்.

 

“நான் சொல்றதை கேட்டுக்க, ஆஸ்பத்திரிக்கு போய் டெஸ்ட் முடிஞ்சு சரின்னு சொன்னதும், அட்வான்ஸ் 3 லட்சம் குடுத்துடனும். அப்புறம் அட்மிட் ஆகி வயித்துல கத்தி வைக்கிறதுக்கு முன்னாடி மிச்ச பணம் 7 லட்சத்தை கைல குடுத்திடனும். இல்லைன்னா நான் பாட்டுக்கு கிளம்பி வந்துடுவேன். இதுக்கு எல்லாம் சரின்னா மேற்கொண்டு பேசலாம்” என்றாள் விஜயா.

 

“அதுக்கென்ன விஜயா, நீ சொல்றபடி ஏற்பாடு பண்ணிக்கிடலாம்“வ்என்றான் குணசேகரன்.

 

“சரி விஜயா, நான் போய்ட்டு உனக்கு காலைல ஃபோன் செய்யறேன்” என்று எழுந்தவன், கூட வந்திருந்தவர்களை பார்த்து தலை அசைக்க அவர்கள் சென்றதும், “இங்க பாரு விஜயா, இதெல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி இருக்கணும். யார்கிட்டேயும் மூச்சு விட கூடாது” என்றவன் வெண்ணிலாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

 

அவன் சென்றதும் தான் தாமதம் “என்ன விஜயா இதெல்லாம், உனக்கு மூளை கெட்டு போச்சாடி, நீ என்ன பண்றேன்னு உனக்கு தெரியுதா, இல்லையா? வேண்டாண்டி உன் உடம்பை கெடுத்துக்காத புள்ள” என ஆத்திரத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் வெண்ணிலா.

 

“எனக்கு நான் என்ன செய்யரேன்னு தெரிஞ்சு தான் புள்ள செய்யிறேன். நான் என்ன சின்ன பிள்ளையா? யாராவது சொன்ன கேட்டுக்க” என்றாள்.

 

“அண்ணா, நீங்களாவது அவளுக்கு புத்தி சொல்ல கூடாதா?” என்று இளங்கோவைக் கேட்க, “நானே குடுக்கிறேன், நீ வேண்டாம்ன்னு சொன்னேன். எனக்கு உடம்பு சரி இல்லல்ல, அதனால் குணா தம்பி வேண்டான்நு சொல்லிடுச்சு” என்றான்.

 

வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் சுவர் ஓரம் சாய்ந்து அமர்ந்தவளின் அருகே வந்த விஜயா, ” கவலைப்படாத வெண்ணிலா, இதை தவிர எனக்கு வேற வழி தெரியல. ரொம்ப நாளாக நினைச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு நடந்ததை என்னால தாங்கவே முடியல” என்றாள்.

 

“என் பொறந்த வீட்டிலேயும் எல்லாரும் வேலை செஞ்சாதான் சோறு. நான் போனா, ரெண்டு நாள் வச்சு சோறு போடுவாங்க, அதுக்கு மேல எதுக்கும் வழி இல்ல. யாரு கிட்ட போயி இவளோ பணம் கேக்கிறது. அப்படி குடுத்தாலும், அவனும் ஓரு நாள் வந்து இப்படித்தான் சட்டய பிடிப்பான். உயிர விட மானம் பெருசுன்னு நீ தான புள்ள அடிக்கடி சொல்லுவ. அந்த மானம் இன்னைக்கு பாதி போயிடுச்சு, மீதி போறதுக்குள்ள உயிரை குடுத்து இல்லைன்னாலும், ஒரு உறுப்பை குடுத்து காப்பாதிக்கிறேன், அதான் ரெண்டு இருக்காமே நம்ம உடம்புல. நான் ஒண்ணுதான் குடுக்கிறேன். உயிர் வாழ ஒன்னு போதுண்ணு சொல்றாக. அதெல்லாம் நல்லா விசாரிச்சுட்டேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பின்னாடி தெருவில, நம்ம பானு புருஷன் குடுத்தானாமே. அவுங்ககிட்ட எல்லாம் விசாரிச்சுட்டேன். உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்று சொல்பவளை பார்த்த வெண்ணிலா எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

 

வீட்டிற்க்கு வந்த வெண்ணிலா, பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து தானும் உண்டவள் மகன் இன்னும் வராததை நினைத்து நேரம் பார்த்தாள். மணி 9க்கு மேல் ஆகி இருந்தது. கொஞ்ச நாட்களாக அடிக்கடி நேரம் கழித்து வருகிறான். கேட்டால் எதோ ஒன்று சொல்கிறான். பெரியவன் ஆகிவிட்டதால் அதட்டி கேக்கவும் முடியவில்லை.

 

கதவு தட்டும் சத்தம் கேட்டு போய் திறக்க, செல்வா உள்ளே வந்தான். வந்தவன் லுங்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன் கை, கால் முகம் கழுவி வர “தம்பி இட்லி செஞ்சுருக்கேன். ரெண்டு தோசை ஊத்தட்டுமா” என்றாள்.

 

“இல்லை வேண்டாம். நான் பிரெண்ட்ஸ் கூட வெளிய சாப்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு போய் படுக்கையில் விழுந்தவனை பார்த்த வெண்ணிலாவிற்கு மனசுக்குள் எதோ நெருடியது.

 

மாதங்கள் கடந்தது. விஜயா வீட்டை காலி செய்து கோயம்புத்தூர் போய்விட்டாள். அங்கே ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்கிறாள். வெண்ணிலாவின் மகன் செல்வராஜ்க்கு ஐடி வேலை. கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி இருந்தான். வேலைக்கு போய் 3 மாதங்கள் ஆகிறது. நடுவில் ஒரு முறை மட்டும் வந்து சென்றான். கையில் 10,000 ரூபாய் மட்டுமே கொடுத்தான்.

 

வேலை கிடைத்ததும் சென்னையில் வேலை என்று சொன்னவன் ரூம்க்கு அட்வான்ஸ் குடுக்கணும், புது டிரஸ் 5 செட், செருப்பு, கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கணும். 25000 ரூபாய் வேணும் என்ற போது வெண்ணிலா சங்கடப்படவே இல்லை. மறுபடியும் கடன் வாங்கி, ‘உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க செல்வா‘ என்று கொடுத்தவள், மனசு கேட்காமல் ‘சம்பளம் எவ்ளோ சாமி‘ என கேட்க, அவனோ ‘அதெல்லாம், கைக்கு வந்தாதான் தெரியும். பிடித்தம் எல்லாம் போக மீதி தான் வரும்‘ என்றான் வேண்டா வெறுப்பாய். பேசவே தயார் இல்லாதவனிடம் என்ன பேசுவது.

 

மகன் வேலைக்கு போனால் எல்லாம் சரியாகிவிடும். என்று தனக்குத்தானே தேற்றிக்கொண்டு வெண்ணிலா ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

 

காலையில் நேரமே பட்டறைக்கு வந்த வெண்ணிலாவுக்கு ஏனோ மனதே சரி இல்லை. பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை. பெரியவளிடம் மதியம் சமைத்து வைக்க சொல்லிவிட்டு நேரமே பட்டறைக்கு வந்திருந்தாள்.

 

“வெண்ணிலா உன் வீட்டு முன்னாடி கார் நின்னுச்சு. யார் வந்திருக்காங்க” என்றாள் பக்கத்து காம்பவுண்ட் கவிதா.

 

“தெரியல கவிதா. நான் நேரமே வந்துட்டேன். என் வீட்டுக்கு யாரு கார்ல வராங்க. பக்கத்து வீட்டுக்கு யாராவது வந்திருப்பாங்க” என்று சொல்லியவாறு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

 

‘அம்மா‘ என்று சத்தமிட்டு கண்ணில் நீருடன் அழுதவாறு, சின்ன மகள் வந்ததும் ஒரு நிமிடம் மனதே நடுங்கிவிட்டது. “என்ன குட்டி எதுக்கு அழுவுற?” என்றாள்.

 

“நீ வீட்டுக்கு வாம்மா“என்று அழவும், என்னவோ எதுவோ என்று தறியை நிறுத்தி விட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டிற்க்கு சென்றாள்.

 

குமரேசன் மற்றும் அவன் மனைவி, குடும்பத்தில் உள்ள அனைவரும் வெளியில் நிற்க, உள்ளேயும் ஆட்கள் இருக்க, எதுவும் புரியாமல் உள்ளே சென்றவள் ஈரக்குலை நடுங்க, பேய் அறைந்தது போல நின்றவள், அப்படியே தொப்பென தரையில் உக்காந்திருந்தாள்.

 

ஆமாம் முற்றிய கத்திரிக்காய் கடைதெருவுக்கு வந்தே விட்டது.

 

ஆமாம், வெண்ணிலாவின் மகன் செல்வராஜ், குமரேசனின் மகளை திருமணம் செய்து கொண்டிருந்தான்.

 

“ஹே என்னாச்சு வெண்ணிலா… சின்னஞ்சிருசுக, எதோ தெரியாமல் பண்ணிடுச்சு” என்றாள் தூரத்து உறவு சித்தி.

 

“உன் அண்ணன் பாரு, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, மனசை சமாதான படுத்திட்டு பிள்ளைகளை கூட்டிட்டு உன்னை பார்க்க வந்திருக்கான். அவே மகளும் தப்பு செஞ்சுட்டா, உன் முகத்தை பார்க்க முடியாமல் வெளிய நின்னுட்டு இருக்கான்” என்றாள் இன்னொருத்தி.

 

மகள்கள் இருவரும் தாயின் இருபுறமும் அமர்ந்து அம்மா மௌனமாக இருப்பதை பார்த்து பயத்துடன் உட்கார்ந்திருந்தனர்.

 

வெண்ணிலா சற்றே தெளிந்து செல்வராஜைப் பார்க்க, அவள் வந்ததில் இருந்து எதுவும் பேசவில்லை. அம்மாவின் அருகிலும் வரவில்லை.

 

குமரேசன் திட்டமிட்டு செய்திருப்பது, வெண்ணிலாவிற்கு புரிந்தது. மகனும் இதற்கு உடந்தையாக இருந்தது தான் தாங்கவே முடியவில்லை.

 

குமரேசனுக்கு ஒரே மகள். கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து, வெயில், குளிர் பார்க்காமல் வேலை செய்து, தனி ஒருத்தியாய் வளர்த்தவவளிடம் ஒரு வார்த்தை சொல்லாமல், அண்ணன் வீட்டிற்க்கு, வீட்டோடு மருமகன். இவ்வளவு சுயநலவாதியா? தன் மகன். இரண்டு தங்கைகள், தாய் யாரை பற்றியும் கவலைபடாமல் இப்படி ஒரு வேலை செய்திருக்கிறான்.

 

வெண்ணிலா “ஏதாவது சொல்லு, உன் பையன். நாலு வார்த்தை நறுக்குன்னு திட்டு, இல்ல ரெண்டு அடி போடு. அதை விட்டுட்டு இப்படி உக்காந்திருந்தா என்ன செய்யறது ரெண்டும் ரொம்ப நேரமாக உனக்காகத்தான் உக்கார்ந்திருக்குங்க” என்றாள் சித்தி.

 

வெண்ணிலா எதுவும் பேசாமல் எழுந்து சென்று ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்து மடக் மடக் கென குடித்தவள், அத்தனை வேதனைகளையும் சேர்த்து முழுங்கினாள். எதுவும் பேசாமல் பெட்டியில் இருந்து மகன் குடுத்த 10,000 ரூபாயை எடுத்தவள், மணமக்களிடம் வந்தாள்.

 

“இந்தா கீதா, இதுவும் உன் பணம் தான். புதுசா கல்யாணம் ஆனவங்க, ஆயிரம் செலவு இருக்கும்” வச்சிக்க என்றாள்.

 

“நீ வசதியா இருந்து பழக்கப்பட்டவ, இந்த வீடு வசதிப் படாது. நீ உன் புருஷனை கூட்டிட்டு உன் வீட்டுக்கே போய்டு. உங்க அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கங்க. உங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்” என்று சொன்னவள், “குட்டிமா, நான் பட்டறைக்கு போறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க” என்று சொன்னவள் வெளியே கிளம்பினாள்.

 

வெளியே சென்றவள், அந்த தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றவள், இந்நேரம் அடக்கி வைத்திருந்த வேதனை தாள முடியாமல் ஓவென கதறி அழுக ஆரம்பித்தாள்.

 

இந்த 20 வருடங்களில் எவ்வளவு போராட்டங்கள், கஷ்டங்கள். தனி ஒருத்தியாய் ஒடியவள், மகன் தன் ஓட்டத்தை நிறுத்தி, சற்றே ஓய்வளிப்பான் என்று இருந்தவள், யாரும் இல்லாமல் மீண்டும் தனித்து விடப்பட்டாள்.

 

இரண்டு நாட்களாக ஒரே காய்ச்சல். இன்று தான் கொஞ்சம் பரவாயில்லை. காலையில் எழுந்து சுடுதண்ணி வைத்து குளித்தவள், காளியம்மன் கோவிலுக்கு பிள்ளைகளுடன் போய்விட்டு வந்தாள்.

 

“மகா உனக்கும் பாப்பாக்கும் துணி எடுத்து வச்சிக்க. மாமா வரும். அங்க போய் இருங்க, பத்து நாள் கழித்து அம்மா வந்து கூட்டிட்டு வரேன்” என்றாள்.

 

“அம்மா நான் உங்கூடத்தான் இருப்பேன்” என்ற சின்னவளிடம் “அம்மா விஜயா அத்தை வீட்டுக்கு போறேன். அத்தைக்கு உடம்பு சரியில்ல. அதான் பார்க்க போறேன். சீக்கிரம் வந்துடறேன். என்றாள்.

 

அவளின் அண்ணன் வந்ததும் அனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றதும் வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களை கட்ட ஆரம்பித்தாள். கட்டி முடிக்கவும், கார் வரவும் சரியாக இருந்தது.

 

பின்புறம் ஏறியவள், “அண்ணே போகலாம்” என்று சொல்ல, முன் இருக்கையில் இருந்த குணசேகரன் ஒரு ஆள் கிடைத்த சந்தோசத்தில் வண்டியை கிளப்பினான்.

 

***

You Might Also Like

தைரியம்
விமானப்பயணம்
கண்ணாளனே
செதில்கள்
குருட்டுக் கோழிகள்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2026
Previous Article விண்மீன் ஜூன் 2026 இரண்டாம் ஆண்டில் இனிதே…!
Next Article பாசத்திற்குரிய பாரதிராஜா..!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?