மண்டாடி
- பரிவை சே.குமார்
மண்டாடி என்றால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும்போது, கடலின் தன்மையையும் காற்றையும் கணித்து, தனது படகையும் அதில் இருக்கும் மீனவர் குழுவையும் வழி நடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பவர் ஆவார். இந்தப் படத்தில் ஒரு இக்கட்டான சூழலில், பாய்மரப் படகுப் போட்டியின் போது தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட அணியை வழிநடத்தி வெற்றி வாய்ப்பை உயிரைப் பணயம் வைத்துப் போராடி பெற்றுத் தருகிறார் ‘மண்டாடி’யான சூரி.
போட்டி சம்பந்தமான சினிமாக்களைப் போன்ற, தோல்வியும் இறுதி வெற்றியுமான கதைதான் என்றாலும் எடுத்துக் கொண்ட களம் வித்தியாசமானது. இதுவரை இப்படியானதொரு களத்தில், அதுவும் முழுக்க முழுக்க கடலுக்குள் விறுவிறுப்பாய் ஒரு போட்டியை படமாக்கியதாய் தெரியவில்லை. சிறப்பான காட்சி அமைப்புகளே இந்தப் படத்தை மற்ற போட்டி சம்பந்தமான படங்களில் இருந்து வித்தியாசப் படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி, நாயகனாய் ஜெயித்தவர்கள் சிலரே. அந்தச் சிலரில் முக்கியமானவராய் ஆகியிருக்கிறார் சூரி. அவருக்கு ஏதோ மச்சமிருக்கும் அதான் ஜெயிச்சிட்டாரு என்றெல்லாம் போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. விடுதலை, கொட்டுக்காளி, மாமன் என அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் அதற்கான உழைப்புமே அவரை மண்டாடியில் கூடுதல் உழைப்பைக் கொடுக்க வைத்திருக்கிறது. அதில் அவர் மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்து முன்னணி நாயகர்களின் வரிசையில் போய் அமர்ந்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகம் எப்போது வித்தியாசமான களங்களையும் , புதுமையான காட்சி அமைப்புக்களையும் வாரி அணைத்துக் கொள்ளும் என்பது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தையும், வன்முறையையும், பாலியல் காட்சிகளையும், போதை ஆட்டங்களையும், துப்பாக்கிச் சத்தங்களையும்தான் தமிழ்ச்சமூகம் விரும்புகிறதென ஆட்டம் போடுவோர் மத்தியில், “கிறுக்குப் பயலுகளா இப்படி அழகியலாய் கதை சொன்னால் மக்கள் கொண்டாடுவாங்கடா” என நிரூபித்திருக்கிறது மண்டாடி படக்குழு.
சூரியோட உழைப்புக்கு முதலில் வாழ்த்துச் சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பக் காட்சியில் இறுகிய முகத்துடன் சென்னையில் வேலை செய்வதாக இருக்கட்டும், தன்னிடம் அடைக்கலமாய் வந்த தனது ஊரைச் சேர்ந்த மாரிக்காக இருபது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து வில்லனுடன் மோதுவதாக இருக்கட்டும், தான் செய்யாத குற்றம் என்றாலும் அதில் தனக்குப் பங்கு இருப்பதால் அதை நினைத்து வருந்துவதாக இருக்கட்டும், இறுதிக் காட்சியில் மண்டாடியாய் கடலுக்குள் போராடுவதாய் இருக்கட்டும் எல்லா இடத்திலும் நமக்கு வெண்ணிலா கபடிக்குழு புரோட்டா சூரி தெரியவே இல்லை. காளிதான் கண் முன்னே நிற்கிறார். மனிதர் தனக்கான இடத்தை நோக்கிப் பயணிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். அவரின் கஷ்டங்களெல்லாம் அவருக்கு இப்போது வெற்றி என்னும் கோப்பையைக் கையில் கொடுத்திருப்பதுடன் தமிழின் முன்னணி நாயகனாகவும் நிறுத்தியிருப்பதில் சூரிக்கு இருக்கும் மகிழ்ச்சியே நமக்கும். வாழட்டும்… வளரட்டும்.
பெரும்பாலான போட்டிப் படங்களில் நாயகனுக்கு இருக்கும் முக்கியத்துவம் நாயகிக்கு இருப்பதில்லை. காதலியாய் இருக்கும் போதும் சரி, அப்பாவின் மரணத்தின் போது தனது காதலனை திட்டித் தீர்க்கும் போதும் சரி, வேறொருவனின் மனைவியாக ஆனபின் ஊருக்குத் திரும்பி வந்த காதலனை வெறுத்து கோபத்தை வெளிப்படுத்துவதிலும் சரி, இறுதிக் காட்சியில் உன்னால் முடியும் எனத் தன்னம்பிக்கை கொடுப்பதிலும் சரி, அடித்து ஆடியிருக்கிறார் ஏஞ்சல் ராக்கம்மாவாக வரும் மஹிமா நம்பியார். அட்டகாசமான நடிப்பு.
தனது முன்னாள் காதலியின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதெல்லாம், அதுவும் வயதுக்கு வந்த அவளின் மகனுக்கும் , தனது நண்பனான அவளின் கணவனுக்கும் முன்னே ‘தாயி…’ என மன்னிப்புக் கோரி நிற்பதெல்லாம் தமிழ் சினிமாவுக்குப் புதிது. கிராமத்தில் பிறந்து உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களுக்கு இந்தக் காட்சியில் துக்கம் தொண்டையை அடைத்து, கண்ணீரை வெளியேற்றும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த அனுபவத்தை நான் உணர்ந்தேன். தன் முன்னே மன்னிப்புக் கேட்டுவிட்டு அவன் நகர்ந்ததும் அவள் உடைந்து அழுவதும், ஆதரவாய் நிற்கும் கணவனின் மடியில் தலை சாய்த்து ஆதரவு தேடுவதும், மகன் ஆறுதலாய் கைகளைப் பிடித்துக் கொள்வதும் ஆஹா கவிதை.
வில்லன் சாட்டைப்புலியாக சுஹாஸ், நண்பனாய் இருந்து எதிரியாய் மாறி இறுதிவரை மோதிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு குரல் ஒரு சில சமுதாயப் பிரச்சினைகளில் மட்டும் வாய் திறந்து அரசியல் பேசும் வெற்றிமாறன் போலும். குரல் நன்றாகப் பொருந்திப் போகிறது. அரசியலில் மகளுக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து அதில் வெல்லமுடியாமல் போன சத்தியராஜ், இந்தப் படத்தில் அவருக்கான இடத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய நடிப்பு சிறப்பு.
படத்தில் நடித்த மற்ற அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. இந்தாளு நாயகனாய் ஆகிறேன் எனத் திரியாமல் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அனிருத், சாய் போன்றோரின் தொல்லைகளில் இருந்து சில படங்களிலாவது நாம் தப்பிக்கலாம். பாடல்களில், சண்டைகளில் எல்லாம் பாத்திரங்களைப் போட்டு உருட்டாமல் ராஜா இசைக்குப் பக்கத்தில் உட்கார வைக்கிறார்.
படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கடல் காட்சிகள்தான்… கரையோரத்தில் வைத்து காட்சிகளை எடுத்து முடிக்காமல் ஆழ் கடல் பகுதிகளுக்குச் சென்று படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் பாய்மரப் படகுப் போட்டியின் போது அவர்களுக்குள் நடக்கும் மோதல், கடலில் தோன்றும் சுழி, காற்றுக்குத் தகுந்தவாறு பாயை மாற்றுதல், கயிறு மாற்றுதல் என அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர், அட்டகாசம்… அதுவும் கடல் காட்சிகளில் மனிதர் அடித்து ஆடியிருக்கிறார். பிரதீப்பின் படத்தொகுப்பு கச்சிதம்… படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்னுடன் இணைந்து ஸ்டண்ட் சிவா மற்றும் மகேஷ் மாத்யூ ஆகியோர் செய்திருக்கிறார்கள். முக்கியப் போட்டிக்கு முன் பயிற்சி படகுப் போட்டிக்குப் பின் வில்லனுடன் சூரி மோதும் சண்டைக்காட்சியும் இறுதிக் காட்சியில் படகில் இருந்தபடி மோதும் காட்சிகளும் அட்டகாசம்.
எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் இப்படத்துக்கான கதையை மதிமாறன் புகழேந்தி, ஆர்.மோகன வசந்தன் மற்றும் திறல் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு இப்படம் உச்சம். இனி எடுக்கும் படங்களை இதற்கு மேல் உச்சமாகக் கொடுக்க அவர் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். முகவைப் பட்டணம் என்ற ஊரில் நடக்கும் கதைக்களமாக இருந்தாலும் அதிகமான மக்கள் கூட்டமில்லாத தொண்டி கடற்பகுதியில்தான் படம் முழுவதும் எடுக்கப்பட்டிருக்கிறது. கடலும் படகுமாய் திரையில் விரியும் போது அட்டகாசமாய் தெரிகிறது தொண்டிக் கடல்.
மண்டாடி பார்க்க வேண்டிய படம்.

