எது சரி? எது தவறு?
என்.நாகராஜன்
வங்கி மேலாளர் கூட்டத்தில் சங்கரநாராயணனும் செங்குட்டுவனும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். அந்த வருடத்தின் வரவு செலவு, நிலுவைக்கடன், நிகர லாபம் என எல்லாவற்றையும் கணக்கிட்டு எந்தெந்தக் கிளைகள் மிக நன்றாக செயல்பட்டிருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தது சேர்மன் குழு.
அந்தக் கூட்டம் முடிந்து மதிய உணவுக்கு வெளியே வரும்போது “ஏதோ ஆறு மாசத்துக்கொருதரம் இந்த மாதிரி மீட்டிங் இருக்கறதால நாம பாத்துக்க முடியுதல்ல…” என்றார் செங்குட்டுவன்
“ஆமா, நான் மெயினா இந்தக் கூட்டத்திற்கு வர்றதே உன்னை மாதிரி ஃப்ரண்டைப் பாத்துப் பேச சந்தர்ப்பம் கிடைக்குங்கிறக்காகத்தான்…” பதிலிறுத்தார் சங்கரநாராயணன்.
சங்கரநாராயணனும் செங்குட்டுவனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்து ஒரே வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அன்றிலிருந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஒன்றாகவே பயணம் செய்திருக்கிறார்கள். இருவரின் திருமணங்களிலும் ஒருவருக்கொருவர் மிகுந்த ஒத்தாசையாக இருந்தார்கள். குழந்தைகள் என்றானபின்னும் இரு குடும்பங்களும் முக்கியமான விழாக்களில் கலந்துகொள்வார்கள். மேலாளர் பதவி உயர்வில் இருவரும் வேறு வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் பிரிய வேண்டியதானது. அதற்குப் பிறகு இந்த மாதிரிக் கூட்டங்களில் சந்தித்துக்கொள்வார்கள்.
”ஆமா, போன முறை மீட்டிங்க்கு நீ வரலியே…?” சங்கரநாராயணன் கேட்டார்.
“அமெரிக்காவில வசிக்கிற என் பையனைப் பாக்க நானும் என் மனைவியும் போயிருந்தோம். அதான் வர முடில… ஆமா, உன் பையனும் அங்கதான இருக்கான். நீயும் போய்ட்டு வரலாமே…?”
”எங்கப்பா? ஒய்ஃப் இருந்தப்பப் போனோம். இப்பத் தனியா போகப்பிடிக்கலே… தவிர கடைசிப் பையனுக்கு ரெண்டு வருஷம் முந்திதானே கல்யாணம் ஆச்சு. இப்பதான் ஒரு குழந்தை. அவனுக்கும் சப்போர்ட்டா இருக்கணுமல்ல…?”
“ஆமா, அவன்தானே நா போனமுறை உன் வீட்டுக்கு வந்திருந்தபோது என்னை ரயிலேத்தி விட வந்தான். அன்னிக்கு ட்ரெயின் ரெண்டு மணி நேரம் லேட். பரவாயில்லே நீ போ தம்பி நான் போய்க்கிறேன் என்றபோதும் பரவாயில்லீங்க அங்கிள் என்று சொல்லி விடாப்பிடியாக இருந்து என்னை அனுப்பிச்சிட்டுத்தான் போனான்… ரொம்ப தங்கமான பையன்.”
“என்ன பிரயோஜனம்? அவங்க அண்ணனுங்க மாதிரி படிச்சிருந்தான்னா எனக்குப் பிரச்சினையே இருந்திருக்காது…” ஆயாசத்துடன் சொன்னார் சங்கரநாராயணன்.
சங்கரநாராயணனுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூத்தவன் லண்டனில் எஃப்..ஆர்.சி.எஸ் முடித்துவிட்டு அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டான். அதற்கடுத்தவன் அமெரிக்காவில் கூகுளில் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர். கடைக்குட்டிக்கு மட்டும் படிப்பு காத தூரம் விலகி நின்றது.
”ஆமா, சின்னவந்தான் சரியா படிக்கலேன்னு அடிக்கடி சொல்வீங்க… இப்ப எப்பிடியிருக்கான்…?”
“பி.காம். முடிக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டான். நானும் ஒரு நப்பாசைல சிஏ, ஐசிடபிள்யுஏன்னு கோச்சிங்ல சேர்த்துவிட்டேன். நோ யூஸ். எனக்கு இதெல்லாம் வராதுப்பான்னு சொல்லிட்டான். அப்புறம் நானா தெரிஞ்சவங்ககிட்ட ஒரு வேலைக்கு சேர்த்துவிட்டேன். மாசம் பத்தாயிரம் வாங்கி குடும்பத்தை ஓட்டிட்டிருக்கான். ஏதோ நா இருக்ககறதால என் சம்பளத்துல கொஞ்சம் சௌகரியமா இருக்கான்.”
”சரி விடுப்பா, படிப்பு இருந்தாத்தான் வாழ்க்கைல முன்னேற முடியுமா, என்ன?… என் ரெண்டாவது பையனைப் பாரு பிஸ்னஸ்ல கொடிகட்டிப் பறக்கிறான்… தவிர நீ இருக்கியல்ல சப்போர்ட்டுக்கு? அப்புறமென்ன?” செங்குட்டுவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வெளிப்பட்டாலும் நண்பனின் மனக்குறையை எண்ணி நிறையவே வருத்தப்பட்டார்.
“ஆமா, அண்ணன்மாருங்க நல்ல நிலைமைலதானே இருக்காங்க… ஒரே தம்பிக்கு ஏதாவது வழி பண்ண உதவலாமல்ல…?”
“நீ வேற… இங்கிருக்கிற சொத்துல கூட அவங்க பங்கை எதிர்பாக்கிறாங்க… அவனுக்கு படிப்பு கஷ்டம்னு தெரிஞ்சும் அவனை சிஏ, ஐசிடபிள்யுஏக்கு நல்லா ட்ரெயினிங் எடுத்துட்டு எக்ஸாம்ல பாஸாக வையுங்கன்னு சொல்றாங்க… இல்லப்ப அவனால முடியலேன்னு சொன்னாலும் அதெப்பிடி நாங்க பிறந்த வயித்தில்தான அவனும் பொறந்தான்… இப்படியெல்லாம் சோம்பேறியா இருந்தான்னா எங்களால் ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாங்க…”
மரு.சரவணன் என்ற கவிஞர் வாட்ஸப்பில் பகிர்ந்தது செங்குட்டுவன் நினைவுக்கு வந்தது.
’நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்று பேர் லட்சங்களில் சம்பாதிப்பர். ஒருவன் வயிற்றுக்கே வழியின்றி வாழ்வான். அவனும் தங்களைப் போலவே முன்னேற வேண்டுமென நினைப்பாரே தவிர, அவனையும் சேர்த்துக்கொண்டு பகிர்ந்து வாழமாட்டார். வீடளவில் பகிர்தல் தெரியாத மனித புத்தி நாடளவிலா விரியும்…’ தனக்குள் சிரித்துக் கொண்டார்.
“இந்த வருஷத்தோடு ரெண்டு பேரும் ரிட்டயராறோம்… என்னை மறந்துடாத, என்ன? அப்பப்ப வந்துட்டுப் போய்ட்டிரு…” சங்கரநாராயணன் சொல்லவும் செங்குட்டுவன் கண்கலங்கி நண்பனின் கையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் சந்தித்துக்கொள்ளவேயில்லை.
*
ஒருநாள் தன் இன்னொரு நண்பர் மூலமாக சங்கரநாராயணனைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் செங்குட்டுவன். சங்கரநாராயணனுக்கு தலையில் இரத்தக்கசிவினால் பக்கவாதம் வந்து எமனுடன் போராடி இப்போது ஓரளவுக்குப் பரவாயில்லை என்று சொன்னார் அந்த நண்பர். அடுத்த கணமே சங்கரநாராயணின் ஊரை நோக்கிப் புறப்பட்டார்.
‘சே, என்ன மனுஷன் நான்! எத்தனை தடவை பாக்கப்போலாம்னு நெனைச்சும் ஏதோ காரணத்தினாலே தள்ளி தள்ளிப் போட்டு இப்ப இந்த நிலையில அவனைப் பாக்கப்போறேனே…’ எனத் தன்னையே நொந்துகொண்டார்.
“வாப்பா, இப்பத்தான் வழி தெரிஞ்சுதா…?” கண்களில் கண்ணீரோடு வரவேற்றார் சங்கரநாராயணன்.
“என்னை மன்னிச்சிடுப்பா… வரணும்னு நெனைச்சுட்டே இருந்தேன். என்னவோ முடியல… சரி, இப்ப உடம்பு நல்லாத்தானே இருக்கு… ஒரு ப்ராப்ளமும் இல்லியே?”
“அதையெல்லாம் தாண்டி வந்தாச்சு…” சொன்னவர் மருத்துவமனியில் சேர்த்ததிலிருந்து வெளியே வரும் வரை நடந்தவற்றை வரிசைக்கிரமாக விளக்கினார்.
“பரவாயில்லே… எப்பிடியோ ஆண்டவன் புண்ணியத்தில மீண்டு வந்துட்டே… பயப்படாதேப்பா, உன் நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான்…”
“மாமா, இந்தாங்க காஃபி எடுத்துக்குங்க…” என்று அந்தப் பெண் தட்டை இருவருக்கும் நீட்டினாள்.
“இது உன் கடைசி மருமகதானே” என்று கேட்ட செங்குட்டுவன் “நல்லாயிருக்கியாம்மா…?” என்றார். புன்னகையுடன் தலையாட்டினாள் அந்தப் பெண்.
“செங்குட்டுவா, இவதான் என்னை அப்பா மாதிரி பாத்துக்குறா. ஆஸ்பத்திரிலே சேர்த்ததிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்வரை என் கடைசிப் பையனும் அவன் பொண்டாட்டியும் என்னை அப்பிடி கவனிச்சிட்டாங்க… பணம் செலவழிச்சதென்னவோ நாந்தான்… ஆனா, என் பையன் ஆஸ்பத்திரில இருந்த நாள் பூரா என் கட்டில் தலைமாட்லயே இருந்து பாத்துட்டான். அவன் பொண்டாட்டியும் தினம் மூணு நாலு தடவை சாப்பாடு காஃபின்னு சுமந்தாள்…” சங்கரநாராயணனுக்குச் சொல்லும்போது கண்களில் கடகடவென கண்ணீர் ஓடியது.
“மாமா, இப்ப எதுக்கு அழறீங்க? அதான் நாங்க இருக்கோம்ல… டாக்டர் உங்களை உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க…” செல்லமாகக் கடிந்தாள் மருமகள்.
“ஆமாம்பா, எத்தனை பேருக்கு இந்த மாதிரி பாக்கியம் கிடைக்கும்?” ஆதரவாகப் பேசினார் செங்குட்டுவன். மருமகள் காஃபி கொண்டு வந்த தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“ஆமா, உன் மத்த ரெண்டு பசங்களும்…” இழுத்தார் செங்குட்டுவன்.
“வந்தாங்க, வந்தாங்க… மகன்க மட்டும் வந்தாங்க… மருமகள்க குழந்தைகளைப் பாத்துக்கணும்னு வரலே… அவங்களும் ஒரு வாரம் இருந்துட்டு லீவ் இல்லப்பா மனைவி குழந்தைகள் தனியா இருக்காங்கன்னு சொல்லிட்டுக் கிளம்பிப் போய்ட்டாங்க…” அவர் குரலில் துயரம்.
“விடப்பா, அவங்களும் பொழப்பைப் பாக்கணுமல்ல…”
“ரெண்டு பசங்களையும் ஃபாரினுக்கு அனுப்பிப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்… இதோ, இந்த இளையவனுக்கு நா எதுவுமே பண்ணல…” விம்மினார்.
“சங்கரா, கடவுள் கணக்கு சரிதான்பா… நாமதான் எல்லாத்தையும் பிழையா பாக்கிறோம்… எது சரி, எது தவறுன்னு சொல்ல முடியாது. இன்னிக்கு சரின்னு தோண்றது நாளைக்குத் தவறா தெரியலாம்…. அன்னிக்கு மூத்தவங்க ரெண்டு பேரால பிரச்சினை இல்லை, நல்லாப் படிச்சு ஃபாரின்லே செட்டிலாய்ட்டாங்கன்னு பெருமையா சொன்னே… சின்னவனுக்குத்தான் படிப்பு வரலே இப்படி ஆய்ட்டான்னு வருத்தப்பட்டே… இப்ப யோசிச்சுப்பாரு… இந்தப் பையனும் நல்லாப் படிச்சுட்டு ஆஸ்திரேலியா, ஜெர்மனின்னு போயிருந்தான்னா உன் நிலைமை என்னாயிருக்கும்…”
நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது சங்கரநாராயணனுக்கு. மூத்த மகன்கள் போகும்போது பேசியது நினைவுக்கு வந்தது. “அப்பா, சொல்றோம்னு தப்பா எடுத்துக்காதீங்க… இப்பவே நீங்க யார் யாருக்கு என்ன தரணும்னு உயில் எழுதிட்டீங்கன்னா பின்னாடி சண்டை சச்சரவு வராது…”
இந்த உலகில் எல்லாருக்கும் எல்லாமும் இருக்கிறது, ஆனால் ஒரு பேராசைக்காரனுக்கு அது போதாது. அது தன் மூத்த மகன்கள் விஷயத்தில் எப்படிக் கச்சிதமாகப் பொருந்துகிறதென்று எண்ணி வியந்தார். கோடி கோடியா வெளிநாட்டில் சம்பாரித்தாலும் இங்கு இருக்கிற சில லட்சங்களுக்கு இன்னும் ஆசை. ஒரு முடிவுக்கு வந்தவராக வக்கீலை வரவழைத்து உயில் தயார் செய்தார். தன் சுய சம்பாத்தியத்தில் உருவான வீடு, சேமிப்பு அனைத்தும் தன் கடைசி மகனுக்கு மட்டுமே சேரவேண்டுமென்று எழுதினார். மகனிடம் காட்டினார்.
“அப்பா, இந்த உயில் வேண்டாம். நாங்க மூணு பேரும் உங்க புள்ளைகதான்… அவங்களுக்கும் எல்லா வகையிலும் உரிமை உண்டு….”
“அப்போ என்னை இந்த நிலைமைல விட்டுட்டு ஏம்பா போனாங்க? என்னைப் பாத்துக்கிறதில அவங்களுக்குக் கடமை இல்லியா?”
“அப்பா, இந்த சேவை எனக்குக் கிடைச்ச பாக்கியம். என் அப்பாவைக் கடைசிவரைப் பாத்துட்டோம்கிற திருப்தியே எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சொத்து. அளவான பணத்தோடு நாங்க சந்தோஷமாவே இருக்கிறதை நீங்க பாத்திங்கள்ல? என்ன, என் குழந்தையை கான்வெண்ட்ல சேர்த்து படிக்க வெக்க முடியாது. சரி, கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்துட்டுப் போறேன். அப்துல் கலாம் ஐயா கான்வெண்ட்லியா படிச்சார்? பணம் இன்னிக்கு வரும்; நாளைக்குப் போகும். ஆனா, பாசம் என்னைக்கும் மாறாது. இப்ப நான் அண்ணன்களுக்குரிய பங்கையும் சேர்த்து வாங்கிட்டன்னா அது பண்டமாற்று முறையாயிடும். ’எல்லார்கிட்டியும் சும்மாவா எங்கப்பாவைப் பாத்துட்டான்? அவர் பணத்துக்காத்தானே செஞ்சான்னு சொல்வாங்க…’ எனக்கு அந்த அவப்பெயர் வேண்டாம். எனவே, இந்த மேட்டரை இதோட விட்ருங்க…” மகன் கறாராகப் பேசினான். மருமகளும் கணவனை ஆமோதித்துப் பேசினாள்.
இரண்டாவது முறையும் தான் பிழையாகவே யோசித்ததை எண்ணி வெட்கப்பட்ட சங்கரநாரயணன் தன் இளைய மகனையும் மருமகளையும் பெருமையாகப் பார்த்தார்.


