“இந்தாம்மா, இந்த மாச சம்பளம். நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேணாம்.” என்றார் தணிகாசலம்.
‘பக்’கென்று அதிர்ந்தாள் பூங்கொடி.
“ஐயா…. ஏன் என்னை வரவேணாம்னு சொல்றீங்க?”
“நாங்க வீடு மாறப்போறோம்.”
பொய் சொன்னார்.
“சரிங்கய்யா….”
சோகமாய் அகன்றாள் பூங்கொடி.
அடுப்படியில் காபி போட்டுக்கொண்டிருந்த பத்மாவதி ஓடி வந்தாள்.
“ஏங்க வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டீங்க?”
“எல்லாம் காரணமாத்தான்.”
“அப்படி என்ன பொல்லாத காரணம்? இந்த காலத்துல வேலைக்காரிங்க கிடைக்கறதே கஷ்டம். ரொம்ப நாளைக்கு அப்புறம் அதுவும் என்னோட தம்பி தேடிப்பிடிச்சு கொண்டு வந்த வேலைக்காரி. தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பவ. வீட்டு வேலையில எனக்கு எவ்வளவு ஒத்தாசையா இருந்தா தெரியுமா? ஒரு நல்ல வேலைக்காரியை நிறுத்திட்டீங்களே? இப்ப நான் தனியா அல்லல்படணுமா? என்னால முடியாது.” என படபடத்தாள் பத்மாவதி.
“பூங்கொடி ஒரு நல்ல வேலைக்காரிதான். நான் மறுக்கலை….”
“பின்னே? ஏன் நிறுத்திட்டீங்க?”
“சொல்றேன். ஒரு பெண் பிள்ளை என்றால் நாம் எப்படி பொத்தி, பொத்தி வளக்கறோம்?”
“நமக்குத்தான் ரெண்டுமே ஆண் பிள்ளைங்கத்தானே?”
“அதுக்காக அவங்களை எப்படி வேணாலும் விட்டுட முடியுமா? அவங்களையும் நாம் ஒழுங்கா வளர்க்க வேணாமா? மூத்தவன் ஃபைனல் இயர்ல இருக்கான். இன்னொருத்தன் செகெண்ட் இயர்ல படிக்கிறான். பூங்கொடி டீன் ஏஜ்ல இருக்கா. பாக்கறதுக்கு அழகா வேறு இருக்கா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாதில்லையா? அதனால்தான் அவளை நிறுத்தினேன். அவளுக்கு பதிலா வயதான பொம்பளையை நாளையிலிருந்து வரச்சொல்லியிருக்கேன். போதுமா?” என்றார் தணிகாசலம்.
“ஸாரிங்க… உங்க நல்ல எண்ணத்தைப் புரிஞ்சுக்காம உங்க மேல் கோபப்பட்டுட்டேன்…” என்ற பத்மாவை புன்னகையுடன் பார்த்தார் தணிகாசலம்.


