ஆகாஷ் தெருவில் இறங்கி பைக்கை உசுப்பி
மெயின் ரோடுக்கு வந்தான், தூரத்தில் ஒரு சிறு கூட்டம் தெரிய, எதிரே வந்தவரிடம் கேட்டான்.
“சார்… அங்கே என்ன கூட்டம்?”
“ஹெல்மெட் போடாமப் போறவங்களைப் பிடிச்சி ஃபைன் போட்டுக்கிட்டு இருக்காங்க சார்.” என்றவர், “நீங்க ஹெல்மெட் போடாமப் போறீங்க? ஃபைன் கட்டப் போறீங்களா என்ன?” என்று கிண்டலடித்துவிட்டுப் போக, பயந்துப்போன ஆகாஷ், ‘சட்’டென பைக்கைத் திருப்பி வீட்டை அடைந்தான்.
“ஹெல்மெட் போடாமப் போனவங்களைப் பிடிச்சி ஃபைன் போட்டுக்கிட்டிருந்தாங்க. நல்ல வேளை நான் துரத்திலிருந்தே கவனிச்சதனால தப்பிச்சேன்.” என்று பெருமையுடன் மனைவி ஷாலினியிடம் சொன்னான் ஆகாஷ்.
“உங்களுக்குக் கொஞ்சங்கூட என் மேலோ, குழந்தைங்க மேலோ அக்கறை கிடையாது. ஃபைன் கட்டலைங்கறதுதான் உங்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயமா தெரியுது. ஹெல்மெட் போடாமப் போய் அதனால உங்களுக்கு ஒரு ஆபத்துனா அது உங்க பெண்டாட்டி குழந்தைகளுக்கும் ஆபத்துதான். எங்களுக்குப் பாதுகாப்பு கவசமா இருக்கிறவர் நீங்க. உங்களுக்குப் பாதுகாப்பு கவசமா இருப்பது ஹெல்மெட். அதைப் புரிஞ்சுக்குங்க.” என்றாள் ஷாலினி.
மனைவியின் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்ட ஆகாஷ், உடனே கடைக்குப் புறப்பட்டான் ஹெல்மெட் வாங்க.


