‘தாக்கத்தின் விளைவுகள்தான் எழுத்து’ – எழுத்தாளர் மகி ஆதிரன்
சித்ரா சிவன்
மகி ஆதிரன், சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிவரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல் மற்றும் நவீன கவிதையியல் குறித்த சிந்தனைகளில் தனது தனித்துவமான பார்வையை முன்வைத்து வருபவர். ‘மாயக்கண்ணி’ சிறுகதைத் தொகுப்பும் ‘அலறல்’ நாவலும் அவரது படைப்புலகின் முக்கியமான படைப்புகளாகக் குறிப்பிடலாம். மனிதர்களின் அகஉலகம், சமூக உறவுகள், காலத்தின் மாற்றங்கள், நவீன வாழ்வின் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றை இலக்கியத்தின் வழியாக அணுகும் அவரது எழுத்து, சமகால வாழ்வனுபவங்களுடன் உரையாடுகிறது.
கவிதையின் இயல்பு, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கவிதையின் எதிர்காலம், கவிதையின் சமூகப் பங்கு போன்றவற்றையும் அவர் நவீன கவிதையியல் சார்ந்த கட்டுரைகளில் விவாதித்து வருகிறார். குறிப்பாக, மனிதப் படைப்பாற்றலுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் எழுப்பும் கேள்விகள், இன்றைய இலக்கியச் சூழலில் கவனிக்கத்தக்கவை.
காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தேனி நகர் கிளைச் செயலாளராக செயல்படுகிறார். இதுவரை ‘இடர்களின் தட்பம்’, ‘கொரியாலிஸ் விளைவு’, ‘கனைத்துக்கொண்டே இருக்கும் நார்சிஸ குதிரை’, ‘கள்ளக்காதல்’ கவிதைத் தொகுப்புகளும் ‘மாயக்கண்ணி’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. தற்போது எதிர் பதிப்பகம் வழியாக ’அலறல்’ எனும் நாவல் வெளிவரவிருக்கிறது. கேலக்ஸி விண்மீன் இதழுக்காக நேர்கண்டபோது மிகச் செறிவான மொழியில் மகி ஆதிரன் அளித்த செவ்வி…
- ’மாயக்கண்ணி’ என்ற தலைப்பே வாசகருக்குள் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது. இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?
முதலில் இந்த நேர்காணலுக்காக பதில் சொல்லும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த சித்ரா சிவன் ஆகிய உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு வாழ்வின் முதல் செவ்வி. மகிழ்ச்சியும் நன்றியும்.
‘மாயக்கண்ணி’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை எனது மனதுக்கு நெருக்கமான ஒரு கதை. அனைத்துக் கதைகளும் நெருக்கமானவைதான். இருந்தாலும் இது சற்று அதிகமானது என்பேன். எனக்கு காலம்/ வெளி (Time & Space) என்கிற புலம் குறித்த ஆழமான இயற்பியல் கலந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையிலான மனச்சிக்கல் எப்பொதும் உண்டு. இந்த பூமியில் அமைந்திருக்கும் வேவ்வேறு நாடுகளின் இடையில் வேவ்வேறு ’நேரம்’ இயங்குகிறது. அப்படியான வெவ்வேறு நேரங்களில் நிகழும் வெவ்வேறு சம்பவங்கள் ’வெளியில்’ ஒன்றாகவே நிகழ்கிறது.
ஒரே காலத்தில் நிகழும் வேவ்வேறு நிகழ்வுகள் நேரத்தால் எப்படி பிரிக்கப்படுகின்றன என்பதே நான் புரிந்துகொள்ள சிரமப்படும் தத்துவச் சிக்கலாக இருக்கிறது. இதை எளிமையாக புரிந்துகொள்ள ’தூரம்’ என்கிற ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மாயநிகழ்வுதான் மனிதனின் புரியாத இருப்பைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை நான் புரிந்துகொள்ள விழைகிறேன். இந்த சிக்கலை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் புரிதல்களாக இருக்கிறது என்று அறிவியலாளர்கள் குறிப்பாக உளவியல் ஆய்வாளர்கள் விவாதிக்கிறார்கள்.
நேரத்தில் இயங்கும் மனிதனின் இருப்பு உண்மையாகவும் காலத்தின் வெளியில் (ஸ்பேஸ்) இயங்கும் மனிதனின் இருப்பு அபத்தமாகவும் இருக்கிறது என்கிற விவாதத்தை தத்துவவாதிகள் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். சரிதவறு என்பதைத் தாண்டி எனக்கு இவ்வகை விவாதங்கள் மிகுந்த விருப்பத்தைத் தருகிறது. இலக்கியச் செயல்பாடுகளில் இந்தத் தத்துவ ஊடுபாடுகள் ஒருவகை கண்ணுக்குத்தெரியாத கண்ணி. நான் அதில் மாட்டிக் கொண்டாலும் வெளியேற விருப்பமில்லாமல் இருக்கிறேன். இந்தக் கண்ணியில் நான் இருக்கிறேன் என்பதை சொல்ல முயலுபவைதான் எனது புனைவுகள். நான் எழுதும் கதைகளில் இவ்வகைக் கண்ணிகள் பாவிக்கிடக்கின்றது என்பதை சொல்ல நினைத்ததால்தான் இந்தத் தலைப்பை எனது சிறுகதைத் தொகுப்பிற்கு வைத்திருக்கிறேன்.
- இந்தச் சிறுகதைத் தொகுப்பு உருவாகத் தொடங்கிய தருணம் எது? ‘மாயக்கண்ணி’ தொகுப்பாக வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது?
இரண்டாயிரத்து பத்தொன்போதில் நான் சென்னையில் பணி புரிந்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வசுமித்ர, வெயில் மற்றும் அழகு சுப்பையா ஆகியோர் எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்த நிகழ்வு இது. எனக்கு எனது சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் சிந்தனைகூட இல்லை. நான் கடைசியாக எழுதிய சிறுகதை அனேகமாக இரண்டாயிரத்து பத்து என்று நினைக்கிறேன். பிறகு ஏறக்குறைய எட்டாண்டுகள் நான் எந்த சிறுகதையும் எழுதவில்லை. இன்றுவரையும் கூட. இந்தப் புத்தகச் செயல்பாடு நண்பர்களினால் மட்டுமே உண்டானது. மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்வாக அது எனக்கு இருக்கிறது. ஒருவழியாக இந்தக்கதைகளைத் தொகுத்த பிறகு இந்தப்புத்தக வெளியீடு எனக்கு தனிப்பட்ட வகையில் ஏதோவொரு மனதிருப்தியை அளித்தது. நமக்கிடையான இந்த சிறு உரையாடலில் புலம் பதிப்பாளர் லோகநாதனுக்கும் புத்தகத்திற்கு மதிப்புரைகள் எழுதிய நாவலாசிரியர் பிரியா விஜயராகவன் மற்றும் பேராசிரியர் நவீனா அமரனுக்கும் நன்றியைத் தெரிவிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.
- எழுத்திற்கு எட்டாண்டு இடைவெளி ஏன்?
பணி நிமித்தம் என்று சொன்னாலும் உண்மை என்னவென்றால் முகநூல் அறிமுகம்தான். பிளாக் ஸ்பாட்-டும் முகநூலும் வசீகரமாய் என்னுள் நுழைந்தது. நான் சிறுகதைகள் எழுதுவதற்காக எழுதிவைத்திருந்த நிறைய குறிப்புகளைச் சிறுசிறு கவிதைகளாக மாற்றிப் பதிவேற்றத் தொடங்கினேன். அது ஒருவகை போதையாக மாறியது. முதலிலேயே கவிதைகளை எழுதும் ஆசை எனக்குள் இருந்தது. நானும் வசுமித்ர-வும் சேர்ந்து இரண்டாயிரத்துப் பத்து வாக்கில் ’கள்ளக்காதல்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தோம்.
கவிதை எனும் செயல்பாடு எனக்குள் கடும் சிக்கலாகிக் கிடந்த காலம் அது. அந்த நேரத்தில் இந்த முகநூல் ஊடகத்தில் நான் வாசித்த அனேகப் பதிவுகளும் கவிதைகளும் எனது தீவிர வாசிப்பினை முடக்கத் தொடங்கியிருந்ததை இப்போது உணர்கிறேன். இந்த எளிமையான கவிதை செயல்பாடு எனது சிறுகதை எழுதும் திறனை மிகவும் பாதித்தது என்றே சொல்லுவேன். உண்மையில் இந்த சோம்பேறித்தனம் வலுவாக என்னை உட்கொண்டது. எதையுமே கவிதைகளாக எழுதிவிடலாம் என்று எனது மனம் குருட்டுத் தனமாக நம்பியிருந்தது என்பதை நான் புரிந்துகொள்ள பத்து வருடங்கள் ஆகியிருந்தன.
கவிதை எழுதுவது என்பது எளிமையானது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இன்றும் நான் கவிதைகள் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கவிதைகள் குறித்த புரிதல் மிக ஆழமான வடுக்கலாக மாறத் தொடங்கிவிட்டன என்பேன். பிறகு ஒரு தருணத்தில் அனேகமாக இரண்டாயிரத்து இருபத்து இரண்டில் நாவல் ஒன்று எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முயற்சி இன்று வரை தொடர்கிறது. சொல்லப்போனால் சிறுகதைகள் எழுதி எட்டாண்டுகள் இல்லை கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஆகிவிட்டன.
- கவிதைகள் குறித்து பின்னர் விவாதிக்கலாம். முன்னதாக உங்கள் கதைகளில் சாதாரணமாகத் தோன்றும் மனிதர்களுக்குள் இருக்கும் அசாதாரணமான மன உலகத்தை பதிவு செய்யும் முயற்சி இருப்பதாகத் தோன்றுகிறது. இது திட்டமிட்ட அணுகுமுறையா?
திட்டமிட்ட அனுகுமுறையா என்றால் ஓரளவு உண்மைதான். ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை எளிய அல்லது சாதாரண மனிதன் என்று ஒருவரும் இல்லை. சூழலுக்குத் தக்கவே மனிதரின் இருப்பு. நாம் சூழல் குறித்து பேசப்பேச எளிய மனிதர்களின் செயல்பாடுகள் அசாதாரணமாக மாறி விடுகிறதை புரிந்துகொள்கிறோம். எனக்கு இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் அதனதன் நுண்ணறிவைப் பெற்றிருக்கிறது என்கிற அறிவியல் உண்மை பிரமாண்டமாகப் படுகிறது.
பொதுவாக பார்வைக்கு வெளிப்படையாகத் தெரியாத இந்த நுண்ணறிவு ஒவ்வொரு மனிதனின் மன உலகத்திலும் – முக்கியமாக பெண்களின் – தன்னியல்பாக நிகழ்த்துகலையாக செயல்படுவதை நான் ஒரு எழுத்தாளனாக உணர்கிறேன். இந்த பிரமாண்டமான நிகழ்வுப் போக்கின் தரவுகளை மொழிகளின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு திட்டமிட்ட செயல்பாடுதான். ஒரு நீண்ட பயிற்சியின் மூலம் இந்த எழுத்தாக்கம் சிறிதுசிறிதாக தன்னை கூர்மைப்படுத்திக் கொள்கிறது என்பதே எனது புரிதல்.
- உங்கள் எழுத்துமொழி தனித்துவமாக இருக்கிறது. கதைகளின் மொழிநடை குறித்து நீங்கள் அதிகம் சிந்திப்பீர்களா? கதை சொல்லும் மொழி இயல்பாக வருகிறதா, அல்லது (அதற்காக மெனக்கெடுகிறீர்களா) ஒவ்வொரு சொல்லையும் செதுக்குகிறீர்களா?
நன்றி. உண்மையில் எனக்கு கதை சொல்லும் மொழி இயல்பாக வரவில்லை. பொதுவாக நான் நிறைய படிக்கவில்லை என்றாலும் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் கவனம் செலுத்துகிறேன். உண்மையில் என்னுடைய மொழிநடையை நான் எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் உத்தியின் மூலம் உருவாக்கிக் கொண்டேன். கூடவே ஆரம்பத்தில் ஜெர்மன் மற்றும் ரஷ்ய இலக்கியங்களில் இருந்து ஒருசில விசயங்களை என்னுள் உள்வாங்கியிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவதில் ஒரு குறிப்பிட்ட இலக்கணத்தை நானே எனக்குள் உருவாக்கிக் கொண்டேன். அது என்னவென்று துல்லியமாக சொல்ல ஆங்கில வாக்கியம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது ’Not a word more; not a word less’ என்பது சரியாக இருக்கும். பிறகு மொழிநடை குறித்து தனிப்பட்ட சிந்தனையை தவிர்த்துவிட்டேன். பொதுவாக என் எழுத்தின் மொழி இயல்பாக இருப்பதைப் பழகிக் கொண்டேன். பிறகு நான் மெனக்கெடுவது இல்லாமல் போய்விட்டது. எழுதுவதன் இயல்பு எளிமையாகப் பழக்கமாகி விட்டது. எனது எழுத்துமொழி தனித்துவமாக இருக்கிறது என்று சொல்கிறீர் அல்லவா… அதற்கு மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஒரு நல்ல சிறுகதைக்கு மொழி முக்கியமா, கதை முக்கியமா, அல்லது சொல்லப்படாத இடைவெளிகள்தான் முக்கியமா?
என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறுகதைக்கு இந்த மூன்றுமே நிச்சயமாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவுமில்லை. முக்கியமாக சிறுகதைகளில் புலத்தில் சொல்லப்படாத இடைவெளியில் அதன் மூலக்கதை பாவியிருக்கிறது என்பது எனது புரிதல். போலவே ஒரு புனைவின் மொழி என்பது பல்வேறு புரிதல் வகைமைகளை உருவாக்குகிறது எனலாம்.
நீங்கள் குறிப்பிட்ட மூன்று நிலைகளும் சிறுகதையில் தனித்தனியாகவும் அதேசமயம் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் செயல்படுகிறது. ஒரு சிறுகதையில் மூன்றையும் தனித்தனியாக புரிந்து கொள்வது சரியான தன்மையை உண்டாக்குவது இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனது சிறுகதைகளிலும் கவிதைகளிலும் வாசகர்களுக்கு இந்த மூன்றையும் (மொழி, கதை, இடைவெளி) நேரடியாக புரிந்துகொள்ள ஒருவித உத்தியை முடிந்தவரை சிறுகதைகளில் உபயோகிக்கிறேன்.
- ‘அலறல்’ என்ற நாவலுக்கான கரு உங்களுக்குள் எப்போது, எப்படித் தோன்றியது? ’அலறல்’ என்ற தலைப்பே வாசகருக்குள் ஒரு பதற்றத்தையும் கேள்வியையும் உருவாக்குகிறது. இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?
உண்மையில் ‘அலறல்’ என்ற எனது புனைவுக் கதையை நாவல் என்று சொல்ல முடியாது என்பேன். எனக்கு அது நெடுங்கதை மட்டுமே. எனது பணி நிமித்தமான சூழலில் பலவகைச் செயல்பாடுகளை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். இது அப்படியான ஒரு நிகழ்வை ஒரு பெண் கதாப்பாத்திரத்தில் நுழைத்து கற்பனையில் எழுதிய கதையாகும். நான் இப்படியான நிகழ்வின் பதற்றம் ஒன்றை முழுமையாக அனுபவித்திருக்கிறேன். அதன் சிக்கலை முடிந்தளவிற்ககு ஒரு எளிமையான சரடாகத் திரித்து எழுத முயன்றிருக்கிறேன்.
இந்தக் கதையையை எழுதுவதற்கான ஆழமான மற்றும் நீண்ட ஆய்வுகளை செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட உணர்வுச் சிக்கல் நிலையை விவாதிக்க வேண்டிய வகையிலான புனைவாக மட்டுமே எழுதியிருக்கிறேன். என்றாலும் உளவியல் ரீதியான சிக்கலான உண்மை ஒன்றை விவாதித்திருக்கிறேன் என்று மட்டும் உறுதி சொல்லமுடியும். இங்கு இந்த புத்தகத்தை பதிப்பித்த ’எதிர்’ பதிப்பகத்திற்கும் எழுத்தாளர் கார்த்திகைப்பாண்டியனுக்கும் இந்த புத்தகத்திற்கு மதிப்புரைக் குறிப்பு எழுதித் தந்த உங்களுக்கும் (சித்ரா சிவன்) எனது நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
இருக்க, என்னைப் பொறுத்தவரை அலறல் என்பது ஒரு மனிதரின் – குறிப்பாக ஒரு பெண்ணின் – வாழ்க்கைச்சூழலில் உண்டாகியிருந்த கடுமையான மனஅழுத்தத்தினால் மனதளவில் கதறியலறும் செயல்பாடு ஆகும். இது, ஒரு பெண்ணுக்கு குடும்பச்சூழல் மற்றும் காவல்பணிச்சூழல் ஆகியவற்றின் மூலமாக தாங்கமுடியாத அக/புற வலி ஏற்பட்டிருந்தது குறித்தும் அந்தப்பெண் இந்த கடுமையான சிக்கலைப் புரிந்து கொண்டு தனது புறச்சூழலில் உண்டான மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை சரியான வகையில் தகவமைத்துக் கொள்ளும் வலிமையை உருவாகிக் கொண்டது குறித்தும் வெளியில் சொல்லமுடியாத அவளின் அலறலைக் குறித்தும் விவரிக்கும் ஒரு கதை ஆகும். இந்தக் கதையில் வரும் பெண்ணின் கடுமையான வலியினை வாசகர்கள் புரிந்து கொள்ள அலறல் என்ற சொல் உதவும் என்பது எனது நம்பிக்கை ஆகும்.
- உங்கள் கதாபாத்திரங்கள் நல்லவர்–கெட்டவர் என்ற எளிய இருமைக்குள் சிக்காமல், பல்வேறு உளவியல் அடுக்குகளுடன் இயங்குகின்றன. இதை உருவாக்குவதில் உங்களுடைய அணுகுமுறை என்ன?
ஒரு நல்ல கேள்வி இது. ’நல்லவர் – கெட்டவர்’ கோட்பாடு என்பது சமூக வளர்ச்சி நிலைப்-பாடுகளுக்கான ஒரு வசதியான கருத்தாக்கம் ஆகும். குழந்தை வளர்ப்பு முதல் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு வரையிலான சமூக ஒழுங்குமுறை உற்பத்தியாக்கத்தின் ஒரு அங்கமாக இந்த இருமை வளை இயங்குகிறதை நாம் பார்க்கிறோம். இல்லையா? சமூகத்தின் வளர்சிதை மாற்றத்தில் தனிமனித ஒழுக்கத்தைக் கறாரான நிபந்தனை விதிகளுடன் இந்த ’நல்லவர் – கெட்டவர்’ கோட்பாடு முன்னெடுக்கிறது. மாறாக, உளவியல் சார்ந்த சமூக வளர்ச்சி நிலைப்பாடுகளின் அடிப்படையில் தனிமனிதனைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல நல்லது கெட்டது என்கிற இயல்பு செயல்படுவது நிதர்சனமாக இருக்கிறது.
ஆக, உளவியல் என்கிற பூதக்கண்ணாடி வழியாகப் பார்த்தால் நல்லவர் – கெட்டவர் என்கிற இருமை எதுவும் இல்லாமல் போய்விடுவதை உணர்கிறேன். இந்த நிலைப்பாட்டை உங்கள் கேள்வியில் உள்ள வாக்கியமே எளிமையாகச் சொல்லிவிட்டது. கதைகளில் இதை உருவாக்குவது – கதாப்பாத்திரங்களின் இயக்கம் சார்ந்த உருவாக்கம் – என்பது இலக்கியத்தின் அடிப்படை செயல்பாடு ஆகும். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது அரசியல் சார்பின் அடிப்படையில் இந்த அணுகுமுறையை உபயோகிப்பதைப் பார்க்கலாம். இதனடிப்படையில் எனது அணுகுமுறை என்பது பொருளியல் சார்ந்த உளவியல் அணுகுமுறை என்று உறுதியாகச் சொல்வேன். எளிமையாக சொல்வதானால், புனைவுகளில் யதார்த்த வகைமையில் அழகியலை இணைத்து எழுதும் யுக்தியை நான் உபயோகிக்கிறேன்.
- உங்களின் புனைவுகளை வாசிக்கும்போது சில இடங்களில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விசயங்களே அதிகமாகப் பேசுவதாகத் தோன்றுகிறது. ‘சொல்லாமல் விடுதல்’ என்ற பாணியை உங்கள் புனைவுகளில் எதற்காக உபயோகிக்கிறீர்கள்?
ஒரு புனைவில் பொதுவாக அனைத்து உணர்வுகளையும் எழுதிவிடுவது போலவே உணர்கிறேன். அதை எழுதி முடித்த பிறகு குறைந்தது ஒருமுறையாவது திருத்துகிறேன். அப்படி திருத்தும் போது சில விசயங்களை சொல்வதும் சொல்லாததும் தன்னிச்சையான இயல்பாகவே இருக்கிறது. நீங்கள் சொல்வது போல பல விசயங்களை என்னை அறியாமலேயே விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த விடுபடுதல் என்பது ஒரு ’பாணி’ இல்லை என்றுதான் சொல்வேன். அது ஒரு இயல்பு. அவ்வளவே. நீங்கள் முன்னமே கேட்டது போல, புனைவில் மொழியும் கதையும் முன்னிருப்பது முக்கியமானதுதான். போலவே வெளிப்படையாகச் சொல்லாததும் ஒரு அழகியல் விசயம்தான் என்பது எனது புரிதலாக இருக்கிறது.
- சரி இப்போது கவிதைக்கு வருவோம். கவிதையின் வலிமை அதன் மொழி, வடிவம், கற்பனை ஆகியவற்றில் இருக்கிறதா? அல்லது அதன் பின்னால் இருக்கும் வாழ்ந்த அனுபவத்தில்தான் இருக்கிறதா?
இது ஒரு அடிப்படையான மற்றும் எளிமையான கேள்வி. கவிதை என்றால் என்ன என்கிற கேள்வியின் சற்று விரிவாக்கப்பட்ட வகை எனலாம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்த கேள்வி நிச்சயமாகக் கேட்கப்படவேண்டும். அனைத்து கவிஞர்களும் ஒருமுறையேனும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் என்பது எனது விருப்பம். என் பங்கிற்கு நானும் சொல்கிறேன். கவிதையின் வலிமை என்பது மொழி, வடிவம் மற்றும் கற்பனை ஆகிய மூன்றிலும் இருக்கிறது. ’வாழ்ந்த அனுபவம்’ என்பதில் மட்டும் நான் சற்று குழப்பமடைகிறேன். ஒரு கவிதை எனது சொந்த அனுபவத்தில் இருந்து வரலாம். ஆனால் பார்த்த அனுபவம், கேட்ட அனுபவம், படித்த அனுபவம் எல்லாமும் கவிதையாக்க முடியும். இல்லையா?
இப்படிப்பட்ட எந்தவொரு அனுபவமும்தான் கவிதையின் அடிப்படை. ஒரு கவிஞர் ஏதொவொரு வகையில் உணர்ந்த வலி, மகிழ்ச்சி, இழப்பு அல்லது தரிசனமே கவிதை பிறப்பதற்கான முதல் தூண்டுதல் என்பது அறிஞர்களில் விவாதம். அனுபவம் இல்லாத வெறும் சொற்கள், எவ்வளவுதான் நயம்பட எழுதப்பட்டிருந்தாலும், வாசகனின் மனதை ஆழமாகத் தொட முடியாது. அது ஒரு உயிரற்ற மெழுகுப் பொம்மையைப் போலத்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
எனக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அனுபவம் மட்டுமே ஒரு கவிதையைச் சிறந்ததாக்கி விடாது. அந்த அனுபவத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் கவிதையின் கலைத்தன்மை இருக்கிறது என்பதும் அடிப்படை. எனவே அனுபவமும் மொழிவடிவமும் இணைந்து உருவாகும் கவிதை என்பது சரியான தொடக்கம் மட்டுமாகும். அனுபவம் சார்ந்த அதன் ஆழமான பரிமாணம் கவிஞர்களில் பயிற்சியில் இருக்கிறது என்பேன். ஒரு மனிதன் தனக்குக் கிடைத்த அனுபவத்தை பல்வேறு பார்வைக்கோணத்தில் பரிசீலிக்க வேண்டியதிருக்கிறது. நாம் பார்க்கும் பார்வை வேறு பார்வைக்கோணம் (perceptions) வேறு அல்லவா?
- கவிதை குறித்த உங்கள் கட்டுரையின் தொடக்கத்திலேயே செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கவிதையின் சமூக மற்றும் உளவியல் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்கிறீர்கள். இந்த மறுபரிசீலனை ஏன் இவ்வளவு அவசியமானதாகிறது?
கடந்த வருடம் வேரல் பதிப்பகம் கன்னியாகுமரியில் நடத்திய கவிதை பயிலரங்கத்தில் வாசிக்க முயன்ற கட்டுரை இது. என்னால் முழுமையாக வாசிக்க இயலாமல் போய்விட்டது. நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி ஒரு பெரிய ஆய்வுக்குரிய விவாதம். எளிமையாக சொல்வது சற்று கடினம். நீங்கள் குறிப்பிட்ட எனது கட்டுரையை எழுத நான் குறிப்புகளுக்காக படித்த ஒரு புத்தககத்தின் சாரத்தை சொல்லுகிறேன். இந்த சாரம் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் சொல்லப்படும் ஒரு சிறிய பதில் எனலாம்.
நீனா பெகுஷ் (Nina Beguš) எழுதிய ‘ஆர்டிஃபிஷியல் ஹுமேனிட்டீஸ்’ (Artificial Humanities) என்ற நூல், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழியின் தன்மை, படைப்பாற்றல் மற்றும் மனித உணர்வுகளின் எதிர்காலம் குறித்து மிக ஆழமாக விவாதிக்கிறது. மனிதநேயத் துறைகளும் (Humanities) இலக்கியப் பின்புலமும் எஐ (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், அதன் போக்கைக் வழிகாட்டுவதற்கும் எந்த அளவிற்கு இன்றியமையாதவை என்பதை இந்நூல் முக்கியமாக எடுத்துரைக்கிறது. இயந்திரங்கள் மனிதனைப் போலவே இலக்கணச் சுத்தமான, அழகான உரைகளையும் கவிதைகளையும் உருவாக்கும் திறனைப் பெற்றுவிட்ட போதிலும், அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் மனிதனின் ‘வாழ்ந்த அனுபவம்’, சமூகக் சூழல் மற்றும் அசல் உணர்வுநிலை ஆகியவற்றை எஐ-யால் ஒருபோதும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே எஐ-யின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக, தத்துவவாதிகள், கவிஞர்கள் மற்றும் சமூகவியலாளர்களின் பார்வைகள் ஏன் தேவைப்படுகின்றன என்பதை விவரிக்கும் இந்நூல், எஐ-யால் உருவாக்கப்பட்ட படைப்புகள் மனிதனின் அக உலகையும் தத்துவார்த்தத் தேடல்களையும் எவ்வாறு சவாலுக்கு உட்படுத்துகின்றன என்பதையும், இத்தகைய சூழலில் மனிதனின் தனித்துவமான கற்பனைத்திறனை எப்படிக் காப்பாற்றுவது என்பதையும் தெளிவாகப் பகுப்பாய்வு செய்கிறது. இதனடிப்படையில் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியின் ஆழம் மிகப் பெரியது இல்லையா…?
இது தொடர்பாகத் தனியாக பல்வேறு ஆய்வுகளை உருவாக்கி ஆய்வரங்கங்களை ஒருங்கிணைத்து நடத்தினால் நல்லது. தமிழ்நாட்டின் கவிஞர் குழாம் இதை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். உலகமெங்கும் பெரும் பல்கலைக் கழகங்களில் தொழில்நுட்ப அறிஞர்களும் தத்துவ / மொழி / இலக்கிய ஆசிரியர்களும் இணைந்து நிறைய ஆய்வுகளை நடத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். நமது தமிழகப் பல்கலைகழகங்களும் தமிழ் எழுத்தாளர்களும் இதுபோன்ற ஆய்வுகளைத் தீவிரமாக நடத்துவது அவசியமான காலமாக இருக்கிறது என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன்.
- “ஒரு இயந்திரம் தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடற்ற கவிதையை நொடிகளில் உருவாக்க முடிந்தால், கவிஞரின் பங்கு என்ன?”
இயந்திர கதியில் உருவாகிய குறைபாடற்ற கவிதையில் அனுபவம் என்பது கிடையாது. கவிஞர்களின் அனுபவம் ஒருபோதும் இயந்திரத்திற்குக் கிடையாது. இணையப் புலத்தில் கிடைக்கும் கணக்கிலடங்காத தரவுகளின் இருப்பு எழுத்தாளருக்கு கிடையாது. இருந்தாலும் எதிர்காலத்தை எளிதில் யூகித்து விடமுடியாது. மனித அனுபவம் என்பது அனுபவத் தரவுகளின் நிகழ்தகவு என்று வைத்துக் கொண்டால் இயந்திரங்களின் தொகுக்கப்பட்ட தரவுகளின் நிகழ்தகவை மனித மூளை ஒருபோது நெருங்க முடியாது. என்றாலும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியது இயற்கை நுண்ணறிவுதான்.
எனவே, எனது புரிதல் செயற்கை நுண்ணறிவைச் சரியான புரிதலோடு அணுகினால் எழுத்தாளர்களின் அனுபவமும் இயந்திரத்தின் தொழில் நுட்பமும் இணைந்து சிறப்பான கலையை உருவாக்க முடியும் என்பதுதான். ஆனாலும், இப்போதைய சிக்கல் என்பது கலைப்படைப்பின் நம்பகத்தன்மை (Authenticity) குறித்த புரிதல் என்பேன். இதுவும் மிக ஆழமான விவாதப்பொருள். இல்லையா? மேற்கு உலகமும் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளும் கொண்டிருக்கும் அறிவுலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. தமிழ்ச்சமூகம் குறைந்தது ஐம்பது வருடம் பின்னால் கிடக்கிறது. வருத்தம்தான்.
- இன்றைய கவிஞருக்கு மார்க்சியச் சிந்தனை ஏன் இன்னும் தேவைப்படுகிறது?
எளிமையாக சொல்கிறேன். ஒட்டுமொத்த உலகமும் நுகர்வுப் பண்பாட்டில் திளைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் இயற்கைவளம் ஒளியின் வேகத்தில் அழிந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தாரக மந்திரம் என்பது ’பொறுப்பற்றத் தன்மை’ என்பதாக இருக்கிறது. இந்த அழிவுச்சக்திக்கு மருந்தாக நம்மிடம் மார்ஸியம் தவிர வேறெந்த மாற்றும் இல்லை. கவிதைக்கும் இது பொருந்தும்.
- கருத்தியல் ரீதியாகச் சரியான கவிதை என்ற ஒன்று இருக்க முடியுமா? அல்லது “சரியான கவிதை” என்ற கருத்தே கவிதையின் இயல்புக்கு எதிரானதா?
கவிதைகள் குறித்த அடிப்படைக் கேள்விகளில் இதுவும் ஒன்றுதான். கருத்தியல் என்ற பதத்திற்கு என்ன ஒரு சரியான வரைமுறை இருக்கிறது என்பதில் இந்த விவாதம் தொடங்கலாம். கருத்தியல் என்பது ஒரு தனிநபர், சமூகம் அல்லது அமைப்பு பின்பற்றும் கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். எளிமையாகக் கூறினால், மனிதர்கள் உலகத்தைப் புரிந்து கொள்ளும் விதம், அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சமூக அமைப்பை வழிநடத்தும் சிந்தனைச் சட்டகமே கருத்தியல் என்ற சொல்லுக்கு பாந்தமான விளக்கமாக் கொள்ளலாம்.
கருத்தியல், வெறும் கற்பனைச் சிந்தனையாக மட்டும் இல்லாமல், ஒரு சமூகம் எவ்வாறு இயங்க வேண்டும், மக்களிடையே அதிகாரமும் வளங்களும் எவ்வாறு பகிரப்பட வேண்டுமென்பதையும், சரி / தவறு என்பதைத் தீர்மானிக்கும் வழிகாட்டியாகச் செயல்படவேண்டும் என்பதையும் சமூக அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனடிப்படையில் சரியான கவிதை என்பது அதன் நோக்கத்தில் இருப்பதை பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் சரியான கவிதை என்ற கருத்து கவிதையின் இயல்பிற்கு எதிரானது இல்லை.
- ஒரு கவிதையின் அரசியல் நோக்கம் வலுவாக இருந்தாலும், அதன் கலைநயம் பலவீனமாக இருந்தால் அதை சிறந்த கவிதை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
கலைநயம் என்பதை அழகியல் என்று புரிந்து கொள்கிறேன். அரசியல் நோக்கம் வலுவாக இருந்து அழகியல் இல்லை என்றால் அதைக் கவிதையென்று சொல்ல முடியாது. அழகியல் இல்லாத காத்திரம் மிக்க கருத்துமொழி வெறும் அறிக்கையாக நின்றுவிடும் என்பது எனது புரிதல். பொதுவாக அழகியல் இல்லாத எந்தவொரு கருத்தும் கவிதைக்குள் அடங்காது என்பதும் எனது வாதமே.
- சங்க இலக்கியம் முதல் நவீனக் கவிதை வரை மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. AI காலத்தில் இந்த மோதல் புதிய வடிவம் பெறுகிறதா?
மிகவும் முக்கியமான கேள்வி. இதற்கு ஒரு தீர்மானமான பதிலை சொல்லமுடியாத குறைந்த அறிவைக் கொண்டிருக்கிறேன். நிறைய படிக்கவேண்டும். இருந்தாலும் எனது புரிதலை சுருக்கமாக சொல்ல முயல்கிறேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் முதல் நவீன காலம் வரை மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான உரையாடலும் மோதலும் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்றுதான். இல்லையா?
சங்க காலத்தின் இறுக்கமான அகப்பொருள்-புறப்பொருள் திணை இலக்கணங்கள், பிற்காலத்தில் பக்தி இயக்கப் பாடல்களின் எளிய வெளிப்பாட்டு முறையால் நெகிழ்வடைந்தன என்பதையும் பாரதியாரின் வருகை, மரபுக்கவிதையின் யாப்புச் சட்டகங்களை உடைக்காமல் எளிய மக்களுக்கான பாடுபொருளை அறிமுகப்படுத்தியது என்பதையும். அதைத் தொடர்ந்து புதுக்கவிதை இயக்கம் யாப்பிலக்கணங்களையே துறந்து, கட்டற்ற கருத்து வெளிப்பாட்டிற்கு வழிவகுத்தது என்பதையும் வல்லிக்கண்ணன், தி.சு.நடராஜன் போன்றவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்.
இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுமை என்பது வடிவத்திலோ அல்லது பாடுபொருளிலோ உருவெடுத்து மரபோடு மோதி, காலப்போக்கில் தானே ஒரு மரபாக மாறிக் கொண்டது எனலாம். இதனடிப்படையில், செயற்கை நுண்ணறிவு காலத்தில் இந்த மோதல் முற்றிலும் ஒரு புதிய வடிவத்தை எடுக்கிறது என்பதை ஒரு பெரிய விவாதக் களமாக நான் புரிந்து கொள்கிறேன். மரபு-புதுமை மோதல் என்பது மனிதர்களின் இரு வேறு சிந்தனை முறைகளுக்கு இடையிலானதாக இருந்தது. ஆனால் AI காலத்தில், இது மனித படைப்பாற்றல் மற்றும் எந்திரத்தின் வழிமுறை (Human Creativity vs Algorithmic Generation) என்ற புதிய தளத்திற்குச் சென்றுள்ளது.
கடந்த காலத்தில் புதுமை என்பது மரபின் எல்லைகளை விரிவுபடுத்தியது. ஆனால் AI காலத்தில், கவிதை என்பது சொற்களின் நேர்த்தியான சேர்க்கையா அல்லது உயிர்ப்புள்ள மனித அனுபவத்தின் வெளிப்பாடா? என்ற ஆழமான கேள்வியை எழுப்புவதன் மூலம் மரபு-புதுமை மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்த விலாவாரியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எழுத்தாளர்களின் தேவையும் இதுவாக இருக்க வேண்டும்.
- “கவிதை மரபுகள் ஆறுகளைப் போன்றவை” என்ற உங்கள் உருவகம் அழகானது. மரபைக் காப்பதற்கும் அதை உடைப்பதற்கும் இடையில் கவிஞனின் பொறுப்பு என்ன?
பேராசிரியர் தி.சு.நடரஜன், எழுத்தாளர் க.ந.சு. போன்றவர்களின் திறனாய்வுகளின் அடிப்படையில் நான் கவிதை மரபுகள் ஆறுகள் போன்றவை என்ற புரிதலுக்கு வந்திருக்கிறேன். சுருக்கமாக நான் இப்படி சொல்லுகிறேன்: கவிதை மரபு ஒரு குறிப்பிட்ட காலத்தின் பண்பாடு, மொழி மற்றும் சமூகத் தேவைகளில் இருந்தே பிறக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறோம். ஆரம்பக்காலத்தில் அது குறுகிய இலக்கண விதிகளுடனும், வரையறுக்கப்பட்ட வடிவத்துடனும் மட்டுமே இயங்கியதையும் நாம் அறிவோம்.
காலப்போக்கில் புதிய சிந்தனைகள், பிற மொழித் தொடர்புகள், சமூக மாற்றங்கள் மற்றும் புதிய தலைமுறைக் கவிஞர்களின் கற்பனைகளைத் தன்னுள் உட்செறித்துக் கொண்டு தன்னைத் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. கவிதை மரபும் பழமையை முற்றிலும் கைவிடாமல், புதுமையான வடிவங்களையும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. கவிதை மரபு எனும் ஆறு கடந்த காலத்தின் உறைந்துபோன பெரிய பனிப்பாறை இல்லை. அது நிகழ்காலத்தில் பாய்ந்து, எதிர்காலத்தை நோக்கி வளமையுடன் செல்லும் பேறாறு ஆகும் என்பது எனது புரிதல். இதிலிருந்து மரபைக் காப்பதற்கும் அதை உடைப்பதற்கும் இடையில் கவிஞனின் பொறுப்பு என்ன? என்ற கேள்விக்கு எனது பதில்; ஒரு கவிஞர் எடுக்கும் முடிவு எந்த வகையாக இருந்தாலும் அது மனிதகுல சமப்பான்மையை (human equality) உருவாக்க எடுக்கப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் என்பதே.
- நவீன தமிழ் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் உங்களைப் பெரிதும் ஈர்த்த படைப்புகள் எவை? அவற்றை உருவாக்கிய படைப்பாளர்கள் குறித்து உங்கள் பார்வையையும், அந்தப் படைப்புகள் உங்கள் வாசிப்பு அனுபவத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?
முன்னமே சொன்னது போல நான் நிறைய வாசிப்பவனல்ல. ஆனால் மிகவும் தேர்ந்தெடுத்து வாசிப்பவன். எல்லோரைரையும் போல பள்ளிக்காலங்களில் அம்புலிமாமா, காமிக்ஸ் புத்தகங்கள் போன்றவற்றில் தொடங்கியவன்தான். இரும்புக்கை மாயாவி இன்றுவரை என்னை புல்லரிக்கச் செய்யும் பாத்திரம். பின்னர் அப்படியே தமிழ்வாணன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்றவர்களின் துப்பறியும் கதைகளில் நுழைந்து பின்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தாறு என்று ஞாபகம், பட்டுக்கோட்டை பிரபாகரனின் ‘நீ மட்டும் நிழலோடு’ என்ற நாவலில் எனது சமூக புனைவு வாசிப்பு ஆரம்பமானது.
பிறகு வாசந்தி, பாலகுமாரன், சுஜாதா, ஜானகிராமன் சாரு நிவேதிதா, ஜெயமோகன், போன்றோர் பக்கம் இருந்த ஈர்ப்பு காதுகள் என்ற எம்.வி.வெங்கட்ராம் நாவலைப் படித்தபின் மொத்தமாக என்னைப் புதிதாக மாற்றியதை நினைவு கூர்கிறேன். அதன்பிறகு சிங்காரம், ஜி.நாகராஜன், சு.ரா., கி.ரா., ஆதவன், மாதவன், யூமா.வாசுகி என்று ஒரு குறுகியப் பட்டியல் இருந்தது. பிறகு ரஷ்ய இலக்கியமும் ஜெர்மானிய இலக்கியமும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. பிறகொரு கட்டத்தில் நான் கோபிகிருஷ்ணனை மட்டுமே வரிந்துகொண்டேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புனைவிலக்கியத்திலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டேன். தத்துவமும் வரலாறும் என்னை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு இன்றுவரை தொடர்கிறது.
என்னை ஈர்த்த நிறைய கவிதைகளும் சிறுகதைகளும் இருக்கின்றன. முக்கியமாக மொழிபெயர்ப்பு கவிதைகள் எனது உளவியல் சார்ந்த சிந்தனைக்கும் வாசிப்பிற்கும் மிகவும் உதவியாக இன்றளவும் இருக்கிறது. உண்மையில் படைப்பாளுமைகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள் என்று எனக்கு ஏறக்குறைய இல்லை என்பேன். ஆனால் மனதிற்கு நெருக்கமான எழுத்தாளர்கள் என்றதும் எனக்கு நினைவில் இருப்பவர்களாக கோபிகிருஷ்ணன் தவிர க.நா.சு வையும், சூடாமணியையும் அம்பையையும் சொல்வேன். போலவே, இலக்கியத்திற்கு எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களையும், தத்துவத்திற்கும் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் அவர்களையும் எனது வழிகாட்டிகளாக உணர்ந்திருக்கிறேன்.
எப்பொழுதும் நான் யாருக்கேனும் ஒரு நாவலை சிபாரிசு செய்வதாய் இருந்தால் அது நவல் எல் சாதாவி (Nawal El Saadawi) -யின் ’சூன்யப் புள்ளியில் பெண்’ என்ற புத்தகத்தைச் சொல்வேன். இதுவொரு திட்டமிடப்படாத தற்குறிப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நிறைய விடுபடல் இருக்கிறது. சந்தர்பம் கிடைத்தால் விரிவாகச் சொல்வேன். எனது வாசிப்பு அனுபவம் எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டால், எனது வாசிப்பு அனுபவம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகள்தான் எனது எழுத்துக்கள்.
நன்றி.


