சிலோன் வைத்தியர்
– முரா. இரக்ஷன் கிருத்திக்
அன்னைக்கு பள்ளிக்கூடம் லீவுதான். இருந்தாலும் கூட, வீட்லயே அடைஞ்சு கிடந்தேன். காலை பலகாரத்த தின்ன குடுத்துட்டு “வெய்யிலுல திரியாம, பொறுப்பா வீட்டுல இருந்து புஸ்தத்த எடுத்து வாசிக்கணும்” என்கிற கட்டுப்பாட்டோடதான் வேலைக்கு போயிருந்தாள் அம்மா. ஏகப்பட்ட யோசனைக்கு பெறவு புத்தகத்த கையிலதான் எடுத்திருந்தேன்.
“மூர்த்தி, மூர்த்தி…” என்றவாறு வீட்டுக்குள்ள நுழைஞ்சான் செந்தில். நான் என்னானு அவனை ஏறிட்டதும் “எங்க தாத்தாவுக்கு நெறய ஓந்தான் (ஓணான்) வேணுமாம். புடிச்சு கொடுத்தா, ஓந்தான் ஒன்னுக்கு எட்டணா தரேன்னு சொல்லுதாரு” என்றான்.
செந்திலோட தாத்தா ஒரு நாட்டு வைத்தியர். எங்க சுத்து வட்டாரத்துல வேதக்கண்ணு வைத்தியருன்னா ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரியும்தான். அவரது வைத்தியத்தின் தனித்தன்மையே ஓந்தானை பிடிச்சுட்டு வந்து, அதன் தலையை வெட்டி, தோல உரிச்சு, குடல நீக்கி சுத்தம் பண்ணி இஞ்சி, பூண்டு, மிளகு சேத்து உரலில் போட்டு குத்தி, சாறு பிழிஞ்சு, அந்த சாத்த நாட்டுச் சாரயத்துல கலந்து குடிக்கக் கொடுப்பார். சாறு பிழிஞ்சேடுத்தச் சக்கையைத் தட்டி வடையாகவோ, வறுவல் போலவோ செஞ்சித் தின்னக் கொடுப்பார். குடிப் பழக்கம் இல்லாதவங்களுக்கு இலேகியமாக கூட செஞ்சிக் கொடுப்பார்.
“குறுக்கு, கை, கால் குடைச்சல்னு எப்பிடிப்பட்ட சீக்குக்கும் இது தான் ஒசத்தியான மருந்து.” அப்படின்னும் சொல்லிக்குவாரு. தினமும் அசலூர்ல இருந்து முட்டி வலி, குறுக்கு வலி, கை, கால் உளைச்சல், குடைச்சல்னு ஏதாவது ஒரு தீராத பிரச்சனையைச் சொல்லிக்கிட்டு வேதக்கண்ணுவ தேடி ஊருக்குள்ள ஆளுங்க வந்துகிட்டேதான் இருப்பாங்க.
“மண்ணெண்ண வைத்தியன்கிட்ட மருந்து சாப்புட்ட பெறவு குறுக்கு உளைச்சல் செத்த தேவல போல இருக்கு” அப்படின்னு ஊர்க்காரங்க சொல்லக் கேட்டிருக்கேன். சின்ன குழந்தயளுக்கு காய்ச்சல், சளி அதிகமாக இருக்கையில செவுலுல கோலிக்குண்டுபோல வீக்கம் கண்டு இருக்கும், அத ’எச்சி’ -ன்னு சொல்லுவாங்க. அப்பிடி இருந்தா, மண்ணெண்ணைய கையில தொட்டு செவுலுல தடவி விடுவார். தினமும், இப்பிடி எச்சி கண்ட பிள்ளையளோட தாய்மாருவ, அவுகளது பிள்ளையள கொண்டாந்து தடவிட்டு போவாங்க. இப்பெல்லாம், இந்த மாதிரி வைத்தியத்த யாரும் எட்டிக்கூட பாக்கதுல்ல. காய்ச்சல், சளிக்கு இங்கிலீசு வைத்திய முறையில ஊசிக் குத்துறதாலயே இந்த வீக்கமும் அமுங்கிப் போயிருது.
தொண்ணூறு வரைக்கும் இந்த வைத்தியம் எடுபட்டுச்சு. இதனாலயே வேதக்கண்ணுவ தேடிக்கிட்டு ஊருக்குள் புது ஆளுங்க வர்றப்ப… “மண்ணெண்ணெய் வைத்தியர் வூடு எங்கன இருக்கு?” அப்படின்னு கேக்குற ஆளுங்களும் உண்டும் “ சிலோன் வைத்தியர் வூடு எது?” -னும் கேட்டும் வருவர். வைத்திய தொழிலால் வேதக்கண்ணுவிடம் பண ஓட்டம் கொஞ்சம் கூடவே இருந்து, நிறைய பேத்துக்கு வட்டிக்கு விட்டுருந்தாரு. ஊருல மத்தவய்ங்க ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டின்னு வாங்குனாலும், இவர் மூனு பைசா வட்டிக்குத்தான் கொடுத்தாரு. அதோடு மாசம் மாசம் வட்டியக் கேட்டு கடனாளியோட வாசப் படியேறி வந்து நின்னுகிட்டு தொந்தரவு தரமாட்டார். அசலத் திருப்பிக் கொடுக்கையில ஒன்னு ரெண்டு மாச வட்டியைக் எறக்கிக் கொடுத்தாலும் மனசு கோணாது ஏத்துக்கிடுவாருதான்.
ஒரு தடவ எங்க அப்பாகூட அவருட்ட வட்டிக்கு காசு வாங்கிட்டு வட்டியோட அசலையும் திருப்பிக் குடுத்ததா நெனப்பு இருக்கு. வேதக்கண்ணுவுக்கு வேதமுத்துன்னு சொல்லுத கூடப் பொறந்த சகோதரர் ஒருத்தர் இருந்தார். அவர் புனித மிக்கேல் ஆதிதூதரைக் கடவுளாக ஏத்துக்கிட்டு கும்பிட்டு வந்தார். ஊரில் அவரது வயதுக்காரர் ‘மெக்கேலு’-னும் விடலைப்பயலுக ‘மெக்கேல் தாத்தா’ அப்படின்னுதான் கூப்பிடுவாங்க.
அவரு மட்டும் தனது தம்பியைத் தேடி ஆளுங்க வர்றத பாத்துப்புட்டா போதும் “இந்த புளுகுமூட்டை பெயல இன்னும்மா ஊரு நம்புது. இந்த பொசக்கெட்ட சனங்களுக்கு எப்பதான் புத்தி வரப்போகுதுன்னு தெரியல. நான் சாவுறதுக்குல, இந்த நாயி ஊருல செருப்படிப்பட்டு, மானங்கெட்டு நிக்கத ஒரு ஒருக்காவது பாத்துரணும்னு நினைக்கேன். அது நடக்காது போலயே.” என்று ஆதங்கப் படுவார்.
“என்ன தாத்தா, கூடப்பிறந்த தம்பின்னு பாக்காம நெஞ்சிக்குள்ள இம்புட்டு வன்மத்த வச்சிருக்க?”-ன்னா. “யாரு, நானா நெஞ்சில வன்மத்த வெச்சிருக்கேன். எல்லோரும் வேதக்கண்ணுவ சிலோன் வைத்தியருன்னு கூப்பிடறதால, அவன் சிலோன்ல படிச்சிப் பட்டம் வாங்கிப் பெரிய வைத்தியனான்னு நெனச்சுக்கிட்டயளாக்கும். அவன் வைத்தியனான கதைய சொல்லுதேன், கேட்டுட்டு, புரவாட்டி பேசுங்க.” அப்படின்னு பழங்கதை ஒன்னச் சொல்லுவார்.
“நாடு விடுதலைக்கு முன்ன கொழும்புக்கு பொழப்புத் தேடி நெறய பேரு போனாங்க. அந்த சனங்களோட சனமா நாங்க அண்ணன், தம்பி ரெண்டு பேரும் போனோம். என்னையும் சேத்து, எங்களோட கொழும்புக்கு வந்தவங்க எல்லாரும் தேயிலைத் தோட்டத்துலதான் வேலை பாத்தோம். இந்த தேயிலைத் தோட்டத்து வேலையும் அங்கே போனதுமே எங்களுக்குச் சுலபத்துல கெடச்சிடல. வெகு சிரமத்துக்கு பெறவு தான் கிடைச்சது. வேல கெடைக்க மட்டும் சோத்துக்கே திண்டாடினோம். அந்த நேரத்துல வேதக்கண்ணுவும் இன்னும் சில பேரு சேந்துகிட்டு களிமண்ணை சின்ன சின்ன உருண்டைகளாக பண்ணி வச்சுக்கிட்டு அத இலேகியம்னு சொல்லி, தன்னை பெரிய வைத்தியனப்போல காட்டிக்கிட்டு, மேலுக்கு முடியாம வர்ற சிங்கிள சனங்களுக்கு மருந்து குடுக்கத் தொடங்கிட்டாங்க. தெய்வ சித்தமா, அவங்க மருந்து குடுத்த ஆட்களுக்கு ஒன்னும் ஆகல, எல்லாருக்கும் சொவமாயிட்டு. அந்த சனங்களும் இவங்களப் பெரிய வைத்தியன்னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. சனங்க கும்பல் கும்பலா வந்து வைத்தியம் பாத்துட்டும் போனாங்க. இதுல, சாமர்த்தியமா செஞ்ச காரியம் என்னன்னா, களிமண் உருண்டைய, மாத்திரைன்னு சொல்லிக் கொடுத்துட்டு, நாக்குல படாம விழுங்கணும்னு சொல்லிடுவாங்க. அந்த அப்பாவி சனங்களும் இவங்க சொன்னத நம்பி அப்படியே விழுங்கிடும்ங்க. பொதுவாகவே சீக்கு கண்ட மனுசங்களுக்கு மருந்து, மாத்திரையவிட நாம குணமாயிடுவோம்ங்கிற நம்பிக்கை இருந்தாலே போதும் எப்பேர்ப்பட்ட சீக்கும் குணமாயிடும். மனுச அங்கத்துல எதாச்சும் பாதிப்பு இல்லாம இருக்குற பட்சத்துலகூட பருவ மாற்றத்தால திடுதிப்புன்னு மேலுக்கு முடியாம போவலாம். இந்த மாதிரி, ஆகையில மருந்து எடுத்துகிட்டாலும் சரி, எடுக்காட்டியும் சரி மனுஷ ஒடம்பு தன்னிச்சையாகவே சரி செஞ்சுக்கிடும். இதையே அவங்களுக்கு சாதகமாக்கிக்கிட்டு மக்களுட்ட பணத்தைக் கறக்க ஆரம்பிச்சிட்டாங்க. பெறவாட்டி எல்லாருக்கும் தேயிலைத் தோட்டத்துல வேலைக் கெடச்சது. உடன, இவனோட சேந்தவங்க எல்லாரும் வைத்திய தொழில விட்டுட்டு தோட்ட வேலைக்கு போயிட்டாங்க. இவன் மட்டும் வைத்திய தொழில்ல நல்ல வருமானம் வர்றதப் பாத்துட்டு தோட்ட வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டான். வயித்து பசிக்கு பொய் சொன்னதுக்குகூட மாப்பு குடுக்கலாம். ஆனா, இம்புட்டு காலமும் ஏமாத்துறதயே தொழிலா பண்ணிட்டு இருக்கான் பாரு, அந்த ஒன்னுக்குதான் என்னால அவனுக்கு மாப்பு கொடுக்க முடியல” என்பார்.
எது எப்படியோ இப்போதைக்கு செந்திலோட காட்டுல மழைதான். அடிக்கடி அவனது தாத்தாவோட சட்டைப் பையில இருந்து காசு களவாண்டுட்டு வந்து ஐஸ், கடல மிட்டாய், பொறி உருண்ட, உப்புக்கடலன்னு பலகாரங்கள் வாங்கித் தின்னுவான். பள்ளியில இருந்து சுற்றுலாப் போவதாக சொன்னால் வீட்டுல காசு வாங்காதே முதல் ஆளாக கொடுத்துருவான்.
ஒரு தடவ எங்கப் பள்ளியில இருந்து சுற்றுப்பயணம் செல்வதாக சொன்னாங்க. “வர விருப்பம் உள்ளவங்க, அவரவர் வீட்டுலருந்து இருவது ரூவா வாங்கிட்டு வாங்க” -ன்னு சொன்னாங்க. மறுநாளே செந்தில் அவனுடய வீட்டுல பணம் வாங்கியாந்து சுத்துப்பயணத்துக்கு கொடுத்துட்டான். நான், எனது வீட்டுல பணம் கேட்டதுக்கு “சுத்துப்பயணம் போவதுக்கு, உனக்கு நல்ல துணிமணி இல்ல. நீ சுத்துப்பயணம் போகணும்னா, புது சட்டை, டவுசர் வாங்கணும், எனக்கு நாப்பது ரூவா செலவாகும் அதனாலே, போவ வேணாம்” என்று அம்மா சொல்லிட்டார். அப்போதெல்லாம் வேதக்கண்ணுவுக்கு பேரனா பொறந்திருக்கலாமென்று தோன்றும். அடிக்கடிக்கு செந்தில் என்னைக் கல்யாணிப்புரம் சாங்கோ டெண்ட் கொட்டகைக்கு படம் பார்ப்பதற்கு அழைச்சிட்டு போவான். எங்கள் ஊரான ஒத்தவேம்புல இருந்து கல்யாணிப்புரம் நான்கு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். என்னை மொத மொதல பேருந்துல அழைச்சுட்டு போனது அவன்தான். கல்யாணிப்புரம் ஆயான் கிழப்பு கடைக்கு (ஹோட்டல்) அழைச்சுட்டு போயி இட்லி, தோசை, ஆப்பம் வாங்கித் தருவான். எங்க சுற்று வட்டாரத்தில் ஆயான் கிழப்பு கடை சாம்பாருக்கு இணையான சாம்பார் இல்லன்னு சாப்பிட்டவங்க ஒய்யாரமாக பேசிக்கிடுவாங்க. நான் ரெண்டு, மூனு தடவைக்கு மேல செந்திலோட தயவுனால சாப்புட்டு இருக்கேன். சாம்பார் பிரமாதமாக இருந்தது. ஆனால், எனக்கு என்னவோ முந்தின நாள் செஞ்ச சாம்பார மறு நாள் சூடு பண்ணித் தந்ததப் போலதான் புளிப்பாக இருந்தது. ஆனாலும், சுத்துப்பட்டு ஊர்க்காரங்க பேருந்து ஏறிக் கல்யாணிப்புரம் வந்து ரெண்டு இட்லிய வாங்கி எலையில வச்சுகிட்டு ஒரு வாளிச் சாம்பாரையும் காலிப் பண்ணிடுவாங்க. ஆயானும் சளைக்காது அண்டாவுல இருக்கும் சாம்பார கோரி (மொண்டு) வந்து வச்சுக்கிட்டே இருப்பார். ஒருக்காலும், மூஞ்சிய கோண மாட்டார். வீட்டுக்கு தெரியாம செந்திலோட சினிமாவுக்கு போயிட்டு வந்தது அம்மாவுக்கு தெரிந்து விளக்குமாறால அடி வாங்கின அனுபவமும் உண்டு.
ஒரு தரம் செந்திலின் தாத்தா எங்க ஊர்ல இருந்து ஒரு அஞ்சாறு கிலோ மீட்டர் தொலவுல இருந்த ஊர்ல வயசுக்கு வந்த இளம் பெண் ஒருத்திக்கு கண்டிருந்த நோய் குணமாக வேண்டி மருந்து கொடுத்துட்டு வந்துள்ளார். மறுநாளும் மருந்து கொடுப்பதற்கு போனார். அவர் ஊர் நுழைவு வாயலை சேர்ந்தப்போ ஊருக்குள்ள சங்கு ஊதும் சத்தம் கேட்டிருக்கு. உடனே “யாரு செத்துப்போனா?” என்று எதிரே வந்த ஒருத்தர வழிமறிச்சுக் கேட்டுருக்காரு. அவரு இவர் முந்தின நாள் மருந்து குடுத்துட்டு வந்த அந்த பொண்ணோட பேர சொல்ல வேதக்கண்ணுக்கு திக்கென்று ஆயிட்டு. அப்படியே ஊருக்குத் திரும்பி வந்துட்டார். வந்தவர், வீட்டின் முன் பக்கக் கதவை வெளிப்பக்கமாக பூட்டிட்டு பொறவாசல் வழியே வீட்டுக்குள்ள போயி உள் கொண்டியைப் போட்டுட்டு படுத்துக் கிடந்தார். ஒரு வாரத்துக்கு வீட்ட விட்டு வெளில காலடி வைக்கல. அவசிய தேவைக்குக்கூட ராத்திரி நேரத்துலதான் வெளியே சுத்தினார்.
ஓந்தான் பிடிச்சுக் கொடுத்தா காசு கெடைக்கும்ங்குற ஆசையில அம்மாவின் பேச்சைக் கண்டுகிடக்காம ரெண்டு கண்ணிக் குச்சிய தூக்கிக்கிட்டு செந்திலோடு ஓந்தான் வேட்டைக்குக் கிளம்பிட்டேன்.
இதுக்கு முந்தியும் ஓந்தான் மூலமா காசு பாக்கிற ஒத்த வழியையும் சொல்லிக் குடுத்திருக்கான் செந்தில். அதாவது, “ஓந்தான அடிச்சுக் கொன்னு புதைச்சுட்டு மூனு நாள் கழிச்சு போயித் தோண்டிப் பாத்தா துட்டு கெடைக்கும்” என்றான். நான் எப்படி துட்டு வரும்னு கேட்டதுக்கு “சீதையை இராவணன் தூக்கிட்டு போனதும், இராமர், சீதையை தேடிக் காடு, மேடெல்லாம் சுத்தித் திரிஞ்சப்போ ராமருக்கு தண்ணித் தாகம் எடுத்திருக்கு, அப்ப வழியில ஒரு ஓந்தானைப் பாத்த ராமர் அதுகிட்ட தண்ணீர் கேட்டிருக்காரு. அந்த ஓந்தான் இராமருக்கு மோண்டு கொடுத்திருக்கு. அடுத்து அணில சந்திச்சு தண்ணிக் கேட்டிருக்காரு. அது ராமருக்கு இளநீர் பறிச்சு கொடுத்திருக்கு. இராமர் அணிலோட ஒத்தாசைய பாராட்டி அதனோட முதுவு மேல பாசமாக வருடிக் கொடுத்துட்டு போனாராம். அதுதான் அணிலோட முதுவுல மூனு கோடு இருக்குதாம்” என்றவன் “ஓந்தான புதைச்ச இடத்தில இராமரே காசு வைப்பாரு” என்றான். வெளியூருல இருக்க செந்திலோட அத்தை மகன் செஞ்சிப் பாத்தப்ப அவனுக்கு இருபது காசு கெடச்சதாட்டு செந்தில் சொன்னான்.
நானும் அவனும் ஒண்ணாச் சேந்து ஒத்த ஓந்தானைப் புடிச்சு கொன்னு பொதச்சுட்டுப் போனோம். மூனு நாள் தள்ளி வந்து ஓந்தானைப் பொதச்ச எடத்துல தோண்டிப் பாத்தோம். ஓந்தான் மட்டுமே அழுகின நிலையில இருந்துச்சு, ஒத்த காசில்ல. காசு இல்லையே? என்றதுக்கு “நாம ஓந்தானக் கொன்னு பொதச்ச விஷயத்த சித்திரக்குப்தன் இன்னும் இராமருக்கு கணக்கு சொல்லியிருக்க மாட்டார்ன்னு நினைக்கேன்” என்றான். எங்க போயி இதையெல்லாம் தெரிஞ்சிட்டு வருவான்னு தெரியாது. மாசத்துக்கு ஒருக்காச் சிங்காரத் தோப்புல இருக்க அவனோட அத்தை வீட்டுக்குப் போயிட்டு வருவான். அவ்வாறு போயிட்டு வரும்போதெல்லாம் இப்புடி எதையாவது புதுசு புதுசா அளந்து விடுவான்.
ஓந்தானைக் கொன்னு பொதச்ச இடத்தில் காசு இல்லாம போனது. செந்தில் என்னை விட்டுட்டு தனியா போயி காசை எடுத்துட்டு எங்கிட்ட நாடகம் ஆடுறானோ! என்ற சந்தேகம் தோணிட்டு எனக்கு. செந்தில் தானே சொன்னான், ஓந்தானை கொன்னு பொதச்சா காசு இருக்குன்னு, செந்திலோட அத்தை மவனுக்கு கிடைச்ச காசு எங்களுக்கு மட்டும் எப்புடி இல்லாம போச்சு? என்கிற கேள்வி மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்து. அந்தக் கேள்விதான் எனக்குள்ள இப்படி ஒரு வஞ்சக எண்ணத்தையும் விதைச்சு விட்டது.
மறுநாளு காலயில நான் சீமைக்கருவேல முள் காட்டுக்கு மலம் கழிக்க போனேன். தொண்ணூறு சமயத்தில் எங்க ஊருல எல்லாரும் திறந்தநிலை மலம் கழிப்பைத்தான் செஞ்சிட்டு வந்தோம். நான் கழிச்சுப்புட்டு பூனை மலம் கழிச்சுப்புட்டு அதை மண்ணு அள்ளி போட்டு மூடிட்டு போறதுபோல நானும் எனது மலத்தை மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்னு நெனச்சப்ப ஒரு பொல்லாத புத்தி தோணுச்சு. அதைச் செஞ்சு முடிக்க வேண்டி, ஒத்தப்படியா ஏழு மணல் திட்டை வரிசையா குவிச்சேன். ஆக, மொத்தம் எட்டு மணல் திட்டுகள் உருவானது. அத ஒத்தப்படியா முற்றிலும் போலியாக இன்னும் ஒரு வரிசை மணல் திட்டுகளை உண்டாக்கினேன்.
அதுக்கப்பறம், வீட்டுக்குப் போயி கால் அலாம்பிகிட்டு செந்திலை தேடி அவன் வீட்டுக்கு போனேன். “கந்தசாமி தோட்டத்துல நிலக்கடல புடுங்குறாங்க. அங்க போனா கடலச் சாப்புடலாம்.” என்று சொல்லி அவனுக்குள் கடலை தின்னணும்கிற நினைப்ப உண்டாக்கி அழைச்சிட்டுப் போனேன். தந்திரமாக நான் மலம் கழிச்சு மூடி வெச்சிட்டுப் போயிருந்த அதே வழியில ஒன்னும் தெரியாத மாதிரி அழைச்சிட்டுப் போனேன். அவன் நடக்கப் போறத அறியாம என் கூடவே வந்துக்கிட்டு இருந்தான். சம்பவ இடம் வந்ததும், நான் கூட்டிவெச்சிருந்த மணல் திட்டை காட்டி “யாரோ மணலக் குவியலா கொட்டி வச்சிட்டு போயிருக்காக, நாம கலைச்சுப் போட்டுருவோமா?” என்றேன். அவன் உசுப்போட “சரி” என்றான். எறக்குறைய நான் நெனச்சது நடந்து போச்சுங்குற சந்தோசத்துல, புளுகு மணல் திட்டை காட்டி “இங்கிட்டு இருக்கற மணல் திட்ட நான் கலைக்கேன். நீ அங்கிட்டு இருக்கிற மணல் திட்ட கலைச்சுப்போடு.” என்றேன். செந்தில் எனது சூழ்ச்சம் தெரியாததால மறுக்காம அந்த மணல் திட்டின் கிட்ட போயி ஒவ்வொன்னா கலைக்க தொடங்கினான். நானும் எனது மணல் திட்டை ஒவ்வொன்னா கலைச்சேன். செந்தில் அவனது திட்டுகளை வேக வேகமாக களைத்துக்கொண்டிருந்தான். அந்த கடைசி மணல் திட்டை அழிப்பதற்காக அதை நோக்கி பயங்கர ஆக்ரோசமாக துள்ளி குதித்தான். நான் விபரீதத்தை இமைக்காம பாத்துக்கிட்டு இருந்தேன். கால் வச்ச வேகத்துல தடால்னு சறுக்கி விழுந்தான். அவன் உடம்பு பூராம் பீ அப்பிகிடுச்சு. அதைப் பாத்து நான் விழுந்து விழுந்து சிரிச்சேன். அவன் அழுதுகிட்டே வீட்டப் பாத்து ஓட்டம் புடிச்சான்.
என் அம்மா கையில் துடைப்பத்தை வச்சுகிட்டு ஊரெல்லாம் தேடுதான்னு கொக்கலி மண்டையன் வந்து சொன்னான்.
அன்னிக்கு பகல் முழுக்க நான் வீட்டுக்குத் போகல. வேலைய முடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்பி இருந்த அப்பா என்னைக் காணாதது குறித்து அம்மாவிடம் எம்புள்ளைய எங்கேன்னு விசாரிச்சார், நான் பண்ண கூத்தையெல்லாம் சொல்லிப்புட்டு “நான் அடிப்பேன்னு பயந்துட்டு இன்னும் வீட்டுக்கு வரல” என்றார் அம்மா. இரவு ஆனதால, வேற வழி கெடக்காம வீட்டுக்கு திரும்பிட்டேன் நான். வீட்டு வாசப்படியில காலெடுத்து வெச்சப்போ… “ சின்ன வயதில் நான் அவனது தந்தையை பீயில தள்ளி உருட்டினேன். இப்ப, என் மகன் அவனோட மகன பீயில தள்ளி உருட்டியிருக்கான். இது அந்தப் பய அப்பனுக்கு புரிஞ்சிருக்கும். சின்ன புள்ளையன்னா, அப்டித்தான் இருப்பாங்கன்னு. நீ என் மவன அடிக்க ஊரு முழுக்க தேடித் திரிஞ்சிருக்கே. காலையில போனவன் இன்னும் சோறு திங்க வரலேங்குறே. புள்ளய தேடாம இருக்க? உன்னை என்ன சொல்லுததுன்னு தெரியல?” என்று ஏசிட்டு என்னை தேடுவதற்கு கிளம்பினார்.
அப்போ, நா வீட்டுக்குள்ள பைய பூந்தத பாத்துட்டு… “ம்… புள்ள வந்துட்டான். இப்ப ஒன்னும் சொல்லாத. போயி சோத்த குடு” என்றார். எங்கிட்ட ஒன்னுமே பேசாம வந்து சோறு வச்சுத் தந்தாரு அம்மா. நான் சோத்தை தின்னுபுட்டு படுக்கைக்குப் போனேன். பாத்திரத்த அலம்பி வச்சுட்டு, என் எடத்துல வந்து படுத்துக்கிட்டு “நீ அந்தப் பையன் மேல பீய அள்ளி வீசல, எம்மேலதான் வீசிட்ட” என்றார்.
“….”
“செந்திலோட அம்மா என்னைப் பாத்து என்ன புள்ள வளர்த்திருக்கன்னு சொல்லுதப்ப, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நானே அந்த பீயில புரண்ட மாதி இருந்துச்சு” என்றார். என்னால, அம்மாவிடம் ஒன்னும் பேச முடியல.
அந்த சம்பவத்துக்குப் பிறகு செந்தில் ஒரு வாரமா எங்கிட்ட பேசல. அதுக்கப்பறம், இன்னிக்குதான் என்னைய பாக்க வந்திருக்கான். நெடு நாள் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா சேந்த சந்தோசத்துல அம்மா சொன்னதக் காத்துல பறக்க விட்டுட்டு அவனோட போனேன்.

