VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: குட்டே
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > குட்டே
சிறுகதைகள்

குட்டே

‘ஒத்த மெஷின்ல பணம் எடுக்க எவளோ பாடா இருக்கு. அதான் ஆள் வருதுன்னு தெரியும்ல, இன்னும் ரெண்டு மெஷினை வைக்க வேண்டியது தானே’

அபு பர்ஹானா
Last updated: August 13, 2026 6:44 pm
16 Views
Share
12 Min Read
குட்டே
SHARE

குட் டே

அபு பர்ஹானா

‘கொல்லலேடுவானுங்க! ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இதே மாதிரி பேங்குக்கு கூப்ட்டு கைரேகை, கையெழுத்து வாங்குறானுவோ’ புலம்பிட்டே, பேங்க் பாஸ்புக், ஆதார் கார்ட் மற்றும் மணி பர்ஸை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது , ‘பெரிம்மா எங்கே போற’ன்னு கேட்கும் பேத்தியை பார்த்து ‘பேங்குக்கு போறேன் ராசாத்தி. உனக்கு என்ன பண்டம் வேணும்’ன்னு கேட்டாள் ஹமீதா.

‘எனக்கு லாலிபப்பும், பிஸ்கட்டும் வேணும்!! நீ வரும் போது வாங்கிட்டு வா’வென சொல்லும் அப்ரா ஹமீதாவின் மகள் பொண்ணு. இவள் வயித்திலிருக்கும் போதே அப்பன்காரன் இவங்களை விட்டுட்டு எங்கேயோ போயிட்டான். அப்ரா உம்மாவும் கொரோனால இறந்து போகவே பேத்திக்கு முழு பொறுப்பும் ஹமீதா தான்.

‘உனக்கில்லாமலா!! கண்டிப்பா வாங்கிட்டு வரேன்டி. நான் போயிட்டு வெரசா வந்துடுவேன். அது வரைக்கும் சேட்டை பண்ணாம இருக்கணும். சரியா குட்டிமா! எங்கேயும் போக கூடாது’ன்னு பேத்தி தலையை தடவி சொல்லிட்டு வேட்டி துப்பட்டாவை சரி செய்துட்டு வாசலில் கிடந்த செருப்பை போட்டுட்டு, ‘யா மீரா, வூட்ல அப்ரா தனியா இருக்கா, கொஞ்சம் உன் வூட்ல விட்டு பார்த்துக்கோ’ன்னு பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

சந்தை பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும், அங்கே நின்றுக் கொண்டிருந்த ஜெய்லானியை பார்த்து, ‘யா ஜெய்லானி! நீயும் பேங்குக்காலா போற’ன்னு கேட்டாள். ஆமலா, ‘கைரேகை வைக்கணும். சட்டுபுட்டுன்னு போயிட்டு வரலாம்னு பார்த்தா,

இந்த பஸ்சு இன்னும் வரல. வெயில் வேற மண்டையை பொலக்குது, ஒரே கிறக்கமா வருது’ன்னு புலம்பவே,

‘காலம் பூரா குறுக்கொடிய பீடி சுத்தினத்துக்கு இப்போ வர பி.எப்பும் கருணாநிதி மொவன் தர ஆயிரம் ரூவாயும் எவ்ளோ வசதியா இருக்கு பாத்தியா. ஆனா அந்த ரூவாயை எடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. நாம உசுரோட தான் இருக்கோம்னு ஆயுள் சான்றிதழ் கேட்டு நம்ம உசுரை வாங்குறானுவோ. அடுத்த தடவ ஆட்சிக்கு வரவங்க, வீட்டுக்கு வந்து ரேஷன் சாமான் தர மாதிரி இதையும் வீட்டுக்கு வந்து வாங்குற மாதிரி வச்சா நல்லா இருக்கும்லா. ஒரே அலைய முடியல’ன்னு தன் பங்குக்கு கொஞ்சம் புலம்பினாள்.

‘ஆமாலா அப்படி செஞ்சா நல்லாத்தான் இருக்கும்’னு சொல்லும்போதே ஜெய்லானிக்கு இருமல் வந்தது. தொடர்ச்சியாக இருமியதால் இளைப்பு போல மூச்சு வாங்கியது. கையில் வைத்திருந்த பையிலிருந்து மருந்து பாட்டிலை திறந்து குடித்ததும் இருமல் சற்று குறைந்தது.

‘பீடி சுத்தினதுக்கு நமக்கு கிடைச்ச இந்த பாழாப்போன இருமல் ரெண்டு நாளா படாதபாடு படுத்துது. ராத்திரியான தூங்க முடியல, தலைய கீழே வைக்கத்தான், பிஸ்மில்லான்னு இருமல் வந்துடுது. இந்த கச்சாத்து ஆஸ்பத்திரி டானிக்கை குடிச்சாத்தான் கொஞ்சம் ராஹத்தா இருக்கு.’ 

ஹமீதாவும் ஜெய்லானியும் பீடி கம்பெனி தோழிகள். இரண்டு பேரும் காஜா பீடி கம்பெனிக்கு தான் பீடி சுத்தினார்கள். இரவும் பகலும் ஹமீதா வீட்டு திண்ணையில் அமர்ந்து, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே பீடி சுற்றுவார்கள். ஓடைத்தெருவிலிருந்த கம்பெனியில பீடியை கொடுத்துட்டு வரும்போது கடையில் சாமான் வாங்கிட்டு, இரண்டு பேரும் ஊர்ப்பாடு பேசிட்டே வருவாங்க.

‘யா ஜெய்லானி, நேத்து கடைக்கு போவும்போது ராஜன் பிள்ளையை பாத்தேம்லா. எட்டு மொழம் வேட்டி கட்டிட்டு, ஒரு சிம்பை தூக்கி பிடிச்சிட்டு நடந்து போனான். என்னை பார்த்து, என்ன ஹமீதா நல்லா இருக்கியான்னு கேட்டாம்லா. இன்னும் அந்த பந்தா மட்டும் குறையவேயில்லை’ன்னு படபடன்னு பேசினாள் ஹமீதா.

‘பீடி கொண்டு போவும் போது, அவனை பார்த்தாலே பயமா இருக்கும். அவன் கையில பீடி மாட்டினா அவளோ தான். வாந்திலபோவான் ஒடிச்சி போட்ருவா’ன்னு ஜெய்லானி ராஜன் பிள்ளை புராணம் பாடினாள்.

 ‘ரோஸ் கலர் பஸ் போயிட்டா? அதுல போனா தான் துட்டு கேக்க மாட்டா’ன்னு ரெண்டு பெரும் பஸ் வர திசையை பாக்குறாங்க. அடிக்கிற வெயிலுக்கு ரோட்டை பார்க்கவே முடியல.

‘பேங்குக்கு போனாலும், அங்கே வேல பாக்குறவங்க நம்மள பாக்குறதே ஒரு மாதிரியா தான் இருக்கு. என்னமோ அவன் வாப்பூட்டு காச எடுக்க வந்த மாதிரி பாக்குறானுங்க. என்ன செய்ய நம்ம நெலம அப்படி இருக்கு’ன்னு வருத்தப்பட்டு இருக்கும் போதே பஸ் வந்து விட்டது.

பஸ்ல அவ்வளவாக கூட்டமில்லை. அதனால் ரெண்டு பேருக்கும் உக்கார சீட் கிடைத்தது. படியேறி வந்ததால் இரண்டு பேருக்குமே மூச்சு வாங்கியது.  மஞ்சள் பையிலிருந்து ஜெய்லானி, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கும் பொழுது தான் தண்ணீர் பாட்டிலை எடுக்காமல் வந்தது நினைவில் வந்தது. ஒரு முடக்கு குடித்துவிட்டு ஹமீதாவிற்கு குடிக்க கொடுத்தாள். தண்ணியை குடித்ததும் தான் பார்வை தெளிவாக தெளிவானது.

‘யா ஹமீதா! அப்ராவ அடுத்து என்ன பண்ண போற? அவ வாப்பாக்காரன் எதுவும் சொன்னானா? செலவுக்கு ஏதும் தரானா? அந்த புள்ளையை வச்சிட்டு ஒத்தையில கஷ்டப்படுறியே. பொம்பள புள்ள கண்ணா மூடி தொறக்குறதுக்குள்ள வளர்த்துடுமேலா! உனக்கு பொறவு அந்த புள்ளைய யார் பார்த்துக்குவா’ன்னு கேள்வி மேல கேள்விகள் கேட்ட ஜெய்லானியை பார்த்து இலேசாக சிரித்தவள், ‘அல்லாஹ் பார்த்துக்குவான் .அவன் மேல பாரத்தை போட்டு, நம்ம வேலையை பாப்போம் . இந்த திரேகத்துல தெம்பு இருக்கிற வரைக்கும் பார்த்துக்குவேன். இல்லனா அப்ரா மாமி ஒருத்தி இருக்கா, அவ புள்ளைய வளக்குறேன்னு சொல்றா. எனக்கு பொறவு அங்கே அனுப்பிட வேண்டியது தான்’னு சொல்லவும் ஹமீதாவின் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.

கண்ணீரை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டே, ‘செத்தவன் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்திய வச்சிட்டு இருந்திருக்கான். அது தெரியாம வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு ஒழுங்கா விசாரிக்காம கொடுத்ததால என் புள்ள வாழ்க்கை நாசமாப் போச்சு. கல்யாணமான புதுசுல அவனும் அந்த சண்டாளி பக்கம் தல வச்சி படுக்காம. என் மொவக் கூட நல்ல பாசமாதான் இருந்தான். ஆனா அவன் அக்காக்காரிதான் அவனை கெடுத்து குட்டிச்சுவராக்கி மறுபடியும் அங்கே போக வச்சா. அந்த அரதலி தான் எல்லாம் நாச வேலையும் பார்த்து, என் மொவ வாழ்க்கையை கெடுத்துட்டு…’

‘ஆமலா! அந்த புள்ள ரொம்ப மோசம் தான். வாயில்லா பூச்சி உன் மொவளுக்கு இப்படி பண்ண அந்த சண்டாளிக்கு எப்படி மனசு வந்துச்சோ? உன் மொவள்ட்ட கொண்ட பாவத்தை, இந்த துனியாவுல அனுபவிக்காம அவ போவ மாட்டா’ன்னு ஜெய்லானி பொரிந்து தள்ளி விட்டாள்.

‘நாம எதுக்குலா பத்வா உடணும்? படைச்ச ரப்பு எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கான். அந்தப்புள்ள சின்ன புள்ளையா இருக்கும்போது அவ வாப்பா இறந்து போனாரு. பீடி சுத்தி, நாலு வீட்டு வேலை பார்த்து இந்த புள்ளைய வளர்த்து கடைசியில, கிளியை வளர்த்து பூனை கையில கொடுத்த மாதிரி அந்த வூட்ல கட்டிக்கொடுத்தேன். கொமரியா இல்லாம கல்யாணம் பண்ணி வச்சியோ, மலடியாக இல்லாம அல்லாஹ் புள்ளையா கொடுத்தான்னு சொன்ன என் புள்ளையும் போயிட்டு. என்ன செய்ய… கடைசி வரைக்கும் நான் தனியா தான் இருக்கணும்னு எழுதியிருக்கோ என்னவோ? மொவல வளர்த்த மாதிரி அவ புள்ளையையும் வளர்ப்பேன். நல்ல படிக்க வைப்பேன்’ ஹமீதா பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டே வந்த ஜெய்லானி அதன் பிறகு பேசவேயில்லை.

பஸ் ஸ்டாண்ட் வாசலில் மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் உள்ளே நுழையமுடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல். ‘யா அல்லாஹ்! ஊர் முழுக்க இந்த மாட்டோட பெரும் பாடா கிடக்கு. வூட்ல வச்சி வளக்காம ரோட்டுல விட்டு வளக்குறானுவோ. அது என்னான்னா ரோட்ல போறவங்கள முட்டுது, பைக்ல போறவங்கள தள்ளி விடுது. இந்த மாடும் நாயும் எத்தனை பேரை சாவடிக்க போவுதோ’ன்னு சொல்லிட்டே ஹமிதாவும் ஜெய்லானியும் கீழே இறங்கிட்டாங்க.

மாதத்தின் முதல் தேதி என்பதால், தூய்மை பணியாளர்கள் சம்பளம் எடுக்க வந்திருப்பதால் பேங்க்ல அதிக கூட்டம் காணப்படுகிறது. ‘அய்யயோ! இன்னைக்குனு பார்த்து இவ்ளோ கூட்டம் நிற்குதே!! இதுல நெசுங்கி பிசுங்கி கைரேகை வச்சிட்டு போறதுக்குள்ள ஒரு வழியா ஆயிடுமே!  சும்மாவே சிடுசிடுன்னு பேசுவானுவோ, இப்போ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிட்டு இருப்பானுகளே’ன்னு நினைச்சிட்டே, அவங்க போக வேண்டிய கவுண்டரில் ஆள் இருக்கானு பார்க்க. அங்கே இரண்டு பேர்கள் இருக்கிறார்கள்.

ஒரு ஆளுக்கு எப்படியும் பதினைந்து நிமிடமாகும். அப்போ அரைமணிநேரத்தில் நமக்கு முடிந்து கிளம்பிடலாம்னு நினைச்சிட்டு, எங்கேயாவது உக்கார இடம் கிடைக்குமான்னு பார்த்தால், எல்ல சேரிலும் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். சின்ன வயசு பிள்ளைகள் எல்லாம் எதையும் கண்டுக்காமல் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்த்திருக்காங்க. யா, நாம வெளியே உக்காருவோமான்னு ஜெய்லானி கேட்க, AC போட்டு ஜில்லுன்னு இருக்குலா. வெயில்ல வந்ததுக்கு ராஹத்தா இருக்கு. கொஞ்ச நேரம் இங்கேயே நிப்போம்லான்னு சொல்லி செல்லான் நிரப்புமிடத்தில் உள்ள பலகையில் கையை தாங்கிக்கொண்டு நின்றார்கள்.

காத்திருக்கும் நேரத்தில் ஹமீதாவிற்கு மகளின் நியாபகமும் பேத்தி குறித்த கவலையும் ஒன்றுசேர வந்துப்போனது. அரைமணி நேரம் கடந்தும் அந்த கவுண்டரில் இருந்தவங்க வேலை முடியவில்லை. தனியாக இருக்கும் பேத்தி நினைப்பாகவே இருந்தது. பன்னிரெண்டு மணி பஸ்சை பிடித்தால் தான் மதியம் சாப்பிடுறதுக்குள்ள வீட்டுக்கு போக முடியும்னு நினைத்துக்கொண்டே இருக்கிறாள். சரி பணத்தை மட்டும் எடுத்துட்டு போலாம்னு பார்த்தல் கைரேகை வச்சாத்தான் பணம் எடுக்க முடியும்.

என்னடா செய்யலாம்னு யோசிச்சிட்டே இருக்கும் போது, போன் அடிக்குது. பக்கத்து வீடு மீராதான் பேசினாள். ‘ஹமீதாம்மா இன்னும் வரலியா? உங்க பேத்தி உங்களை தான் கேட்டுட்டே இருக்கு. எப்போ வருவீங்க’ன்னு பேசிட்டு இருக்கும் போதே, எப்போ வருவே? ஹமிதாம்மா நீ பண்டம் வாங்கிட்டு வந்தா தான் நான் சாப்டுவேன்னு பின்னாடியிருந்து ஆப்ரா சொல்ல, யா’ மீரா! இப்போ வேலை முடிஞ்சிடும். புள்ளையை கொஞ்சம் தாக்காட்டி வச்சிக்கோ. சீக்கிரம் வந்துடுறே’ன்னு போனை வைக்கும் போது கவுண்டரில் இருந்த ஆள் எழுந்துட்டாங்க.

உடனே ஹமீதா வேகமா நடந்து போயி அங்கே உட்கார்ந்துட்டு, ‘வீட்ல பேத்தி தனியா இருக்கா. கொஞ்சம் சீக்கிரம் கைரேகை வச்சா வேலை முடிஞ்சிடும்’னு சொல்லவும், ‘சரிங்க உங்க பாஸ்புக், ஆதார் கார்டு எல்லாம் கொடுங்க’ன்னு வாங்கியதும் கம்பியூட்டரில் டப்டப்ன்னு தட்டிட்டு, பாட்டி இங்கே கைரேகை வைங்கன்னு சொன்னார் அந்த பேங்க்காரர்.

பெருவிரலை வச்சதும், ‘ரேகை விழல பாட்டி நல்ல துடைச்சிட்டு வைங்க’ன்னு சொல்லவும், ரேஷன் கடையிலும் இதேதான் சொல்றானுவோன்னு கையை வேட்டியில் நல்ல துடைச்சிட்டு வைத்தாள். நல்ல அழுத்தி வைங்க பாட்டின்னு சொல்லி விரலை அழுத்தினார். பல முயற்சிகளுக்கு பிறகு, ஒரு வழியாக ரேகை விழுந்ததும் அல்லாஹுன்னு பெருமூச்சு விட்டாள்.

ஐந்து நிமிடம் கம்பியூட்டரில் உத்து உத்து பார்த்து ஏதேதோ டைப் பண்ணி முடிச்சிட்டு, பாட்டி அப்டேட் பண்ணிட்டேன். நீங்க போலாம்னு சொன்னார். இப்போ மெஷின்ல பணம் எடுக்கலாம் தானேன்னு கேட்டுட்டு, ஜெய்லானியை பார்க்கிறாள். தலை முடியில் விரலை தேய்த்து, வேட்டியில் துடைத்து மீண்டும் ரேகை வைக்கிறாள். சரி அவள் வருவதற்குள் ஏடிம் மில் பணம் எடுத்துட்டு வரலாம்னு வெளியே வந்து விட்டாள்.

‘ஒத்த மெஷின்ல பணம் எடுக்க எவளோ பாடா இருக்கு. அதான் ஆள் வருதுன்னு தெரியும்ல, இன்னும் ரெண்டு மெஷினை வைக்க வேண்டியது தானே’ன்னு புலம்பிட்டு ஒரு பொண்ணு பின்னாடி வரிசையில் நிற்கிறாள். பேத்தி தனியாக இருப்பதால், ஹமீதாவிற்கு எல்லாமே எரிச்சலாக இருக்கிறது.

இவளுக்கு முன்னாடி போன ஒருத்தர், இரண்டு மூன்று கார்டுகளை சொருகி பணமெடுப்பதை பார்த்து, மற்றவர்களெல்லாம் வாயிற்குள் புலம்ப, ‘இன்னுங்கோ! ஒரு ஆளுக்கு ஒரு கார்டு தானே, நீங்க என்னங்க ரெண்டு மூணு கார்ட் வச்சி பணம் எடுக்குறியோ, வரிசையில நிக்குறவுங்கள பார்த்தா உங்களுக்கு கிறுக்கு மாதிரி தெரியுதா’ன்னு ஹமீதா சப்தம் போடவும், அந்த ஆள் சட்டென்று வெளியே வந்து விட்டார்.

பின்னாலிருந்து பார்க்கும் போது பெரிய ஆள் மாதிரி தெரிந்தவர், திரும்பியதும் நடுத்தர வயதுக்காரர் போலிருக்கிறார். வெள்ளை சட்டை, நெற்றியில் சந்தனப்பொட்டு, கழுத்தில் மாலை போட்டிருக்கும் அந்த மனிதர் ஹமீதா பக்கம் வந்து, ‘இது என்னோட கார்ட் இல்லங்க. உங்களை மாதிரி வயதான பாட்டிங்க மூணு பேர் என்கிட்ட பணம் எடுத்து கேட்டாங்க. அதான் அப்படி எடுத்தே’ன்னு அந்த ஆள் சொல்லவும், ஹமீதாவிற்கு ஏன் தான் அப்படி பேசினோமோனு ஆனது. ‘அப்பா, தெரியாம பேசிட்டம்ல, மனசுல ஒண்ணும் வச்சிக்காத’ன்னு கையை புடிச்சி உடனே சமாதானமாகிவிட்டாள். அப்பா எனக்கு கார்டுல இருந்து ரூவா எடுத்து தரியான்னு அவரிடமே கார்டை கொடுத்துட்டு அவரோடு உள்ளேப் போனாள்.

கார்டை போட்டு நபரை அடித்து டர்ருன்னு சத்தம் வரும்போது தான், ஹமீதா முகத்தில் சிரிப்பு வருது. ஆயுத்தோட சிறப்பா இருப்பலா அப்பான்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு வெளியே வரும் போதே ஜெய்லானியும் வந்து விட்டாள்.

‘யா சீக்கிரம் வா! இப்போ போனா தான் பஸ்ஸை பிடிக்க முடியும்’னு சொல்லிட்டு பேத்திக்கு பண்டம் வாங்க பேங்கிற்கு பக்கத்திலுள்ள கடைக்கு போனாள். அப்ராவுக்கு பிடிச்ச குட் டே பிஸ்கட் அங்கேயில்லை. அதனால லாலிபப்பும் சிப்ஸ், ஜூஸ் மட்டும் வாங்கிட்டு, அவசர அவசரமாக இரண்டு பேரும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விட்டனர். அங்கே நின்றிருந்த பஸ்ஸில் ஏறி சீட்டில் பையை வைத்து விட்டு, கொஞ்சம் பையை பார்த்துக்கோ அந்தக்கடையில போயி பிஸ்கட் இருக்கான்னு பார்த்துட்டு வரேன்னு கீழே இறங்கினாள்.

கடையில் பிஸ்கட் வாங்கிட்டு வரும்போது, உள்ளே வந்த பேருந்தை மாடுகள் மீது இடிக்காமலிருக்க வலதுபக்கம் திருப்ப அது கட்டுப்பாட்டை இழந்து அங்கேயிங்கேன்னு போக, கூடவே மாடுகளும் தெறித்து ஓட, இதை பார்த்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடன்னு பஸ் ஸ்டாண்ட் கலவர பூமி மாதிரி ஆகியது. ஹமீதாவால் ஓட முடியல, அதனால கொஞ்சம் வேகமா நடந்து போயிட்டிருக்கும் போது கூட்ட்டத்தில் ஒருவர் இடித்ததில் கீழே விழுந்து விட்டாள்.   ஹமீதாவிற்கு ஒரு நிமிடம் கண்கள் இருட்டி விட்டது.

கண்கள் இருந்த நிலையில் பஸ் சப்தம் அருகில் கேட்டதால் பயந்தவளின் எண்ணமெல்லாம் பிஸ்கட் கேட்ட பேத்தியை பற்றியே இருந்தது. இதனால் கீழே விழுந்த நிலையிலும் கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அல்லாஹ் ரஸூலே, என்னை காப்பாத்துங்கன்னு மனசுக்குள்ள துஆ செய்கிறாள். நடைமேடையில் விழவும், பஸ் அங்கே வரவும் சரியாக இருந்தது. அய்யோன்னு எல்லோரும் சப்தம் போட்டுக்கொண்டு ஓடி வரும் போது சடாரென்று பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்டது. எல்லோரும் பஸ் கீழ பார்க்கவே, அங்கே கோழிக்குஞ்சு மாதிரி சுருண்டு ஹமீதா நடுங்கி கொண்டிருக்கிறாள். சரியாக அவளின் காலுக்கு மிக அருகில் பஸ் சக்கரம் நிற்கிறது. கொஞ்சம் முன்னால் வந்திருந்தால் ஹமீதாவின் காலில் ஏறி இறங்கியிருக்கும்

அதற்குள் பஸ்ஸிலிருந்து இறங்கி வந்த ஜெய்லானி, ‘யா ஹமீதா! எங்கலா இருக்கே’ன்னு சப்தம் போட்டுட்டே சம்பவ இடத்துக்கு வந்து விட்டாள். அவள் கூப்பிடுவது கேட்டாலும் ஹமீதாவால் பதில் சொல்ல முடியல. ‘ஏய், பாட்டியை தூக்குங்க’ன்னு நாலு பேர் கீழே போயி வெளியே தூக்கிட்டு வந்தாங்க. அதை பார்த்ததும், ‘யா என்னலா ஆச்சு’ன்னு ஜெய்லானி பதறியடிச்சு வந்தாள்.

கை காலெல்லாம் நடுங்கியவாறே, கீழ விழுந்தது மட்டும்தான் நியாவத்துலா இருக்கு. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலேலான்னு சொல்லும் போது ஒரு பெண், தண்ணீர் பாட்டிலை கொடுத்து குடிக்க சொன்னாள்.

தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது, பாட்டிம்மா ஒண்ணும் ஆகலியேன்னு பஸ் டிரைவர் வந்தார். யார் செய்த புண்ணியமோ ஒண்ணும் ஆகலேன்னு ஜெய்லானி சொல்லவும் ஹமீதாவின் போன் அடிக்குது.

ஜெய்லானி தான் எடுத்து பேசினாள். ‘எங்கே இருக்கேம்மா? இவளோ நேரம் ஆயிட்டு? எப்போமா வருவே? எனக்கு பண்டம் வேண்டாம். நீ மட்டும் வந்தா போதும்’னு எதிர்முனையில் கேட்ட அப்ராவின் குரலால் ஹமீதாவின் பதட்டமும் நடுக்கமும் குறைந்தது. பிஸ்கட் பாக்கெட்டின் மீது பிடி இன்னும் இறுகியது. அது வெறும் பிஸ்கட் பாக்கெட் இல்லை என்பது ஹமீதாவிற்கு தெரியும்.

*

You Might Also Like

புரிந்தது
கதை சொல்லப்போறேன்
உதாரணம்
பயணம் (கிழமைபட வாழ்)
தர்மம்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூலை 2026
Previous Article நானும் நீதிபதி ஆனேன்
Next Article விண்மீன் ஜூலை 2026 மின்னிதழ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (15) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20265
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?