VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: கேட்கமறந்தோம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > கேட்கமறந்தோம்
சிறுகதைகள்

கேட்கமறந்தோம்

அவனோட கனவைப் பத்தி கேட்காம விட்டுட்டோமோ. எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கோம்.

பாலமுருகன். லோ
Last updated: August 13, 2026 6:49 pm
14 Views
Share
8 Min Read
நிழல் நீங்கிய நிலா!
SHARE

கேட்க மறந்தோம்

பாலமுருகன். லோ

“திலிப், மத்தியானத்துக்கு என்ன வேணும்?” என்றாள் கத்ரீனா.

“ம்மா, வெஜிடபிள் ரைஸ் பண்ணித் தாங்கலேன்!”

“சரிடா, ஒன்பது மணிக் கிளாசுக்கு இப்படி? எட்டே முக்காலுக்குத்தான் வருவீங்களா? இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு; அதுக்குள்ள சாப்பிட்டு கிளம்பணும்.”

“ஏன், வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் சரியான நேரத்துக்கு போக முடியாதா?”

“உன் பின்னாடியே ஒருத்தர் நின்னுக்கிட்டே இருக்கணுமா?”

“எப்படா வளரப்போற!”

“நீ புலம்பாதம்மா. வாரத்துக்கு ஒரு நாள் தான் லீவு கிடைக்குது; அதுலயும் என்னை டியூஷன்ல சேர்த்துட்டீங்க. அப்போ நான் எப்போ ரெஸ்ட் எடுக்கிறது?”

“ஏன்டா! என்னத்த வெட்டி முறிச்ச நீ ரெஸ்ட் எடுக்கிறதுக்கு? இப்ப நீ சரியா படிக்கலேன்னா அவ்வளவுதான்.”

“சும்மா இதையே சொல்லும்மா நீ…”

“சரி, இப்ப என்ன சாப்பிட? இட்லி அவிச்சு வச்சிருக்கேன். தேங்காய் சட்னியும் செஞ்சிருக்கேன். சாப்பிட்டுட்டு சைக்கிள் எடுத்துக்கிட்டு கிளம்பு. மத்தியானத்துக்கு உன் அப்பா வந்து சாப்பாட்டைத் தருவாரு.”

வேகவேகமாகத் தட்டிலிருந்த இட்லியைப் பிட்டு, தன் வாயினுள் போட்டுக்கொண்டு விழுங்கினான் திலிப். பின்னர், பையில் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்தான்.

எதிர்க் காற்றைக் கிழித்துக்கொண்டு, பறவை போல் அவ்வளவு வேகமாகச் சைக்கிளில் சென்றான் திலிப். பதினைந்து நிமிடத்தில் டியூஷனுக்கு வந்தடைந்தான்.

டியூஷன் சென்டரில் மென்டர் பசங்களைப் பார்த்து,

“பசங்களா, ரிட்டன் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வந்துடுச்சு. யாருக்கு எவ்வளவு வந்திருக்கு என்பதை அவரவருடைய மொபைல் செயலியில் பார்க்கவும். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை; பொதுவா கிளாஸ் இருக்கும். ஆனா நாளைக்கு இங்க பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் இருப்பதால், அனைவரும் அவரவர் பெற்றோரை அழைத்துக்கொண்டு வரவேண்டும்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட பிறகு, மற்ற பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

திலிப்பிற்கு எதைப்பற்றியும் கவலையில்லை. மென்டர் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்றுதான் அவன் மனதில் நினைத்திருந்தான். ஆனால் மற்றவர்களுக்கு, வீட்டிலிருந்து அப்பா, அம்மா யாராவது ஒருவர் வந்து இந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் கலந்துகொண்டால், நம்முடைய வண்டவாளம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்ற அச்சம் இருந்தது.

மறுநாள் காலை, திலிப்பின் அப்பா டேவிட் அவனைப் பார்த்து,

“என்னடா, இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கிற? ஏன், இன்னைக்கு கிளாசு கிடையாதா?” என்று கேட்டார்.

“அப்பா, இன்னைக்கு கிளாசு காலையில கிடையாது. சாயந்திரம் ஏழு மணிக்கு பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் இருக்கு; அதுக்குத்தான் நாம போகணும்” என்று சொன்னான்.

அதைக் கேட்டு, ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “ஏன்டா, நீ பேசாம அம்மாவைக் கூட்டிக்கிட்டு போயேன்?” என்றார்.

“இல்லப்பா, அம்மாவுக்கு கிடைப்பதே ஒரு நாள் லீவு. அதுல இது சரியிருக்காது. அதனால நீங்களே வாங்க. ஒரு அரை மணி நேரம்தானே; அதுக்கப்புறம் போனவுடனே வந்துடலாம்” என்று சொன்னான்.

அன்று மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் டியூஷன் சென்டருக்கு விரைந்தனர்.

உள்ளே நுழைந்தவுடன், டேவிடின் கண்களில் பெற்றோரின் கூட்டம் தென்பட்டது. சில பிள்ளைகளின் பெற்றோர் ஒருவராக வந்திருந்தனர்; சிலருடைய வீட்டிலிருந்து இருவரும் வந்திருந்தனர்.

மென்டர் ஒவ்வொரு பெற்றோருடனும் சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவர்களது தருணம் வருவதற்காக இருவரும் காத்திருந்தனர்.

மென்டர் பெற்றோரிடம் பொதுவாகச் சொன்ன விஷயங்களை இவர்கள் இருவரும் கவனித்தனர். அதில் குறிப்பாக, டேவிட் மட்டும் கூர்ந்து கவனித்தார்.

“டேய், வேற எங்க பார்த்துக்கிட்டு இருக்க? சார் என்ன சொல்லுறாருன்னு கேக்கலையா?” என்று திலிப்பைப் பார்த்து டேவிட் கேட்டார்.

“அப்பா, நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கிறேன்” என்றான் திலிப்.

மென்டர் பொதுவாகச் சொன்னது இதுதான்:

“இங்க பசங்களைக் கவனிச்சதுல, பல பசங்க இன்னும் விளையாட்டுத்தனமாத்தான் இருக்காங்க. படிப்போட முக்கியத்துவம் இன்னும் அவங்களுக்கு தெரியல. நான் அவங்கக்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும், அதை விளையாட்டா எடுத்துக்கிறாங்க. இப்போ அவங்க பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. வாழ்க்கையில இது முக்கியமான தருணம்.”

அவர் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பையனின் தந்தை, “பசங்க சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்க. உடனே பனிஷ்மென்ட் கொடுங்க” என்றார்.

அதற்கு மென்டர், “சார், எந்த காலத்துல இருக்கீங்க? இப்போ எல்லாம் கொஞ்சம் கத்தினாலே போதும், பசங்களுக்கு தப்பா போயிடுது. இதுல நாங்க பனிஷ்மென்ட் கொடுத்தா அவ்வளவுதான்,” என்றார்.

“சார், எங்களை உள்ள தூக்கி வைக்கலாம்னு நினைக்கிறீங்களா?”

“வேற என்ன, சார்! நீங்க இருந்த காலம் வேற; இப்ப இருக்கிற காலம் வேற. அப்போ கண்டிச்சாங்க, அடிச்சுத் திருத்தினாங்க. ஆனா இப்போ அப்படிச் செய்ய முடியாது. பக்குவமா பேசித்தான் திருத்தணும்” என்று அவர் சொன்னார்.

“அடுத்து திலிப்” என்று அழைத்தார் மென்டர்.

டேவிட்டும் திலிப்பும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து, மென்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தனர்.

மென்டர் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“சார், நீங்க?” என்றார்.

“சார், திலிப்பின் அப்பா” என்றார் டேவிட்.

மெதுவாகப் புன்னகையை உதிர்த்தார் மென்டர். இருவரும் பதிலுக்கு ஒரு மெல்லிய சிரிப்பைப் பல் தெரியாமல் வரவழைத்தனர்.

“ஏங்க, வீட்டில் எப்படி இருக்கான்? முக்கியமா ஸ்கூலில் எப்படி படிக்கிறான் திலிப்?” என்றார் மென்டர்.

“ஏன் சார், அவன் நல்லாத்தான் படிக்கிறான். குறைந்தது 75% மார்க் வைத்திருக்கிறான்” என்றார் டேவிட்.

“அல்ல, அவனைப் பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே! ‘ஏன்டா இங்கே வந்தோம்னு’ தான் இருக்கான். நீங்க அவனுக்கு ஜே.இ.இ. படிக்கத்தானே சேர்த்தீங்க? பின்ன ஏன் அவன் வேற உலகத்தில் இருப்பது போல இருக்கிறான்? உங்களுக்கு தெரியுமா? அவன் இரண்டு ரிட்டன் டெஸ்டுகளை எழுதவே இல்லை. இப்படியே போனால் அவனால் ஜே.இ.இ.-யில் நல்ல ஸ்கோர் செய்ய முடியாது. கொஞ்சம் அவன்கிட்ட என்னன்னு கேளுங்க. என்னுடைய நம்பரை வைத்துக்கொள்ளுங்கள். அவனுடன் கலந்து பேசி, பிறகு என்னிடம் சொல்லுங்கள். இப்போ அவன் மனசுல, அவனை இங்க இழுத்துத் தள்ளின மாதிரி ஒரு உணர்வு இருக்கிறதா தோணுது. நீங்களும் சரி, உங்கள் மனைவியும் சரி, அவனுடன் மனம் விட்டு பேசுங்கள். பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்”

“சார், இதைக் கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. ஒன்றும் மட்டும் எங்களுக்கு புரியவில்லை. அவனை இரண்டு வருடம் படிக்கட்டும் என்று சேர்த்தோம். ஆனால் ஒரு முழு ஆண்டு முடிந்த பிறகுதான் இப்போது பெற்றோர்–ஆசிரியர் கூட்டத்தை வைத்திருக்கிறீர்கள். சார், இந்தக் கூட்டத்தை வகுப்புகள் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் வைத்திருந்தீர்களானால், நாங்கள் அப்போதே அவனிடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்திருப்போம். ஆனால் பாருங்கள், இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது. நீங்கள் சொன்னதை நாங்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவனிடம் பக்குவமாகத்தான் பேச வேண்டும். நாங்கள் பேசுகிறோம். அவனிடமும் நிதானமாகக் கேட்டு அறிந்து கொள்கிறோம் சார்” என்று கூறிவிட்டு இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

வெளியே வந்த டேவிடுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனால் அதை மகனிடம் காட்டவில்லை. மாறாக, “ஏன்டா திலிப், நீ நல்லா படிக்கிற பையன். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தா நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஜே.இ.இ.-யிலும் நல்ல மதிப்பெண் எடுத்தா ஐ.ஐ.டி.-யில் சேரும் வாய்ப்பு இருக்கு. இது உனக்கும் தெரியுமல்லவா?” என்றார்.

அவன் பேசாமல் அவரைப் பார்த்தான்.

“பின்னே என்னடா, நானும் சந்தைக்குப் போயிட்டு வர்றேன்னு இருந்தா எப்படி? இப்படி நீ சரியா ஜே.இ.இ.-யில் செய்யவில்லையென்றால் அம்மா, அப்பாவுடைய கனவு நிஜக் கோட்டையாக மாறாது. ஒரு கனவுக் கோட்டையாகவே நின்றுவிடும்.

டேய், பணம் போனா போகுது. இன்னைக்கு இருக்கும், நாளைக்கு இருக்காது. ஆனா கல்வி என்பது அப்படி இல்லடா!”

திலிப் டேவிட்டை ஒரு முறை கூர்ந்து கவனித்தான். அவன் ஏதோ சொல்ல வந்த தருணத்தில், டேவிட் விடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

திலிப் தனது பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு டேவிட்டின் கண்களை ஊடுருவிப் பார்த்தான். அவனது நேர்ப் பார்வை மட்டும் டேவிட்டின் கண்களுடன் இருந்தது; ஆனால் அவனது சிந்தனை வேறு எங்கோ இருந்தது.

“இந்த ஜே.இ.இ. எல்லாம் எதுக்கு? நான் தான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஆர்மி டிரெயினிங்குக்குப் போகலாம்னு நினைத்திருக்கிறேனே!” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

மீண்டும் டேவிட், “சரி வா, போகலாம். நாம அனைவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்” என்று சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துவந்தான்.

“கண்ணா, மணி ஆகுது. நீ போய் முகம், கை, கால் எல்லாம் அலம்பிக்கிட்டு வா. எல்லாரும் சாப்பிடலாம்” என்று சொன்னார் டேவிட்.

பின் கத்ரீனாவை ஒரு பார்வை பார்த்து மௌன சம்பாஷணை செய்ய, அவளும் அதை புரிந்துகொண்டது போல தன் தலையை அசைத்தாள்.

பின் அனைவரும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு உறங்கச் சென்றனர். திலிப் அவனது அறைக்குச் சென்றான். இவர்கள் இருவரும் அவர்களது அறைக்குச் சென்றனர்.

படுக்கைக்கு இருவரும் சென்றனர். ஆனால் தூக்கம் இருவரையும் பிடிக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கத்ரீனா மெல்லிய குரலில், “ஏங்க, என்ன ஏதோ சொல்ல வந்தீங்க. அப்புறம் பாதியிலேயே நிறுத்திட்டீங்க. போன விஷயம் என்ன ஆச்சு?” என்றாள்.

“அதை ஏண்டி கேக்கிற? நாம நினைச்சிருந்தோம், அவன் டியூஷன்ல படிக்கிறதால நல்லா ஜே.இ.இ.-யில் நல்ல மதிப்பெண் வாங்குவான்னு.”

“அதுக்கென்ன? இப்போ அவன் நல்ல மார்க்தானே வாங்குவான்?”

“போடி போ… அவன் இரண்டு ரிட்டன் டெஸ்ட்டே எழுதலையாம். அதான் கூப்பிட்டுச் சொன்னாரு அவனோட மென்டர். இப்படியே போயிட்டு இருந்தான்னா ஜே.இ.இ.-யில் நல்ல ஸ்கோர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அவன் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வர்றானான்னு கூட தெரியாமலே இத்தனை நாளா இருந்திருக்கிறோம்” என்றார்.

கத்ரீனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன, அவனுக்குப் பிடிக்கலையா? பிடிக்கலைன்னா ஒரு வருஷமா போயிட்டு வந்திருக்கான். நாம இதைக்கூட தெரிஞ்சுக்காம இப்படி இருந்துட்டோமே! நம் கனவு, நம் கனவுன்னு அவனுடைய கனவு என்னன்னு கேட்க மறந்துட்டோமே!” என்றாள்.

அதற்கு டேவிட்டும், “ஆமாம். அவனோட கனவைப் பத்தி கேட்காம விட்டுட்டோமோ. எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கோம். நல்ல வேளை, இன்னும் காலம் இருக்கு. ஜே.இ.இ. இல்லேன்னா பரவாயில்லை. அவனுக்கு என்ன பிடிச்சிருக்கோ, அதுலயே அவனை சேர்த்திடலாம்” என்றார்.

டேவிட் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தார்.

“கத்ரீனா, இப்போதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. திலிப்போட படுக்கையறையில உயர்திரு அப்துல் கலாம் அய்யாவோட புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டியிருப்பானே. அதுக்குப் பக்கத்துல அவர் விமானப்படை உடையணிந்து, குடியரசுத் தலைவராக இருந்தபோது விமானத்தை இயக்கிய புகைப்படமும் மாட்டியிருந்தது. நாம ஏன் அதை அலட்சியப்படுத்திட்டோம்? அந்த இரண்டு புகைப்படத்தையுமே நாம பெரிதா எடுத்துக்கொள்ளலை. அவனுக்குப் பிடிச்சிருக்கு, அதனால வைத்திருக்கிறான்னு மட்டும் தான் நினைச்சோம். ஆனால் அவனுள் அதுவே அவனுடைய கனவாக இருக்கலாமோ!”

“இருக்கலாம். நாமதான் அதைக் கவனிக்கத் தவறிட்டோம்” என்றாள் கத்ரீனா.

காலை விடிந்தவுடன் மகனிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.

காலைப் கதிரவன் ஒளியைக் கொண்டு வந்தது போல, டேவிட் மற்றும் கத்ரீனாவின் மனதிலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது அந்த பெற்றோர்–ஆசிரியர் கூட்டம்.

*

You Might Also Like

உலை வாய்
மாணிக்கம் உணவகம்
ஸெரிப்ரம்
அகத்தின் வண்ணம்
நிலை மாறும் உலகில்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூலை 2026
Previous Article மிஸ் பண்ணக் கூடாத மிஸ்ஃபாத்… நிஸ்வா – பகுதி 12
Next Article உதாரணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (14) கட்டுரைகள் (23) கவிதைகள் (30) குறுநாவல் (1) சிறுகதைகள் (81) திரைப் பார்வை (8) தொடர்கள் (17) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (13) புத்தகப் பார்வை (40) விண்மீன் மின்னிதழ் (14)

பதிவுகள்

  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?