“ஓமானின் மிக அழகிய இடம் எது?” என்ற கேள்விக்கு ஒரு போதும் பதில் சொல்ல முடியாது. ஆனால் “ஓமானின் மிக அழகிய கிராமம் எது?” என்றோ “ஓமானில் நீ மிக அதிக முறை கண்டு களித்த சுற்றுலாத் தலம் எது?” என்றோ நீங்கள் கேட்க வாயெடுத்தால் உங்கள் கேள்வி முடிவதற்கு முன் என் உதடுகள் உதிர்க்கும் பதில் “மிஸ்ஃபாத் அல் அப்ரியீன்” என்பதாகவே இருக்கும்.
அந்த அழகிய கிராமத்திற்கு நான் இதுவரை குறைந்தது ஐம்பது முறையாவது சென்றிருப்பேன். நிஸ்வாவிற்கு என்னைப் பார்க்க வரும் எவரையும் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக “மிஸ்ஃபாத்த மிஸ் பண்ணிராதீங்க” என எப்படியாவது அங்கு அழைத்துச் சென்று விடுவேன்.
“அப்படியென்ன இந்த ஊர்ல இருக்குன்னு நீ இத்தன பில்ட் அப் குடுக்கற?” என்ற உங்கள் மனக்குரல் எனக்குத் தெளிவாகக் கேட்கின்றது. அதனை வார்த்தைகளால் எழுத்தில் விளக்கிச் சொல்வது கடினம். சூரிய உதயத்திலும், அந்தி மயங்கும் வேளையிலும், நண்பகல் உச்சி வெய்யிலிலும், அரிதான மழை நாளொன்றிலும், பனிக்காலப் பகலிலும், முழு நிலவின் ஒளியிலும் வெவ்வேறு வண்ணங்களில் மிளிரும் இவ்வூர், நம்மைச் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை நான் வெறும் வார்த்தைகளால் எங்கனம் விவரிக்க?
சரேலெனச் சரிந்து இறங்கும் மலை மடிப்புகளின் பச்சைப் பசேலென்ற அடர்ந்த தோப்புகளுக்குள் பேரீட்சை, மா, வாழை, பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, அத்தி எனப் பலவிதமான மரங்களைக் காண முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெடிந்துயர்ந்த மொட்டைப் பாறைகளுக்கு நடுவே அப்படியொரு அடர் தோப்பை உருவாக்கிய மனித முயற்சியையும், உழைப்பையும், அவர்கள் கண்ட கனவையும் ஒவ்வொரு முறை அக்கிராமத்திற்குச் செல்லும் போதும் நான் நினைத்துப் பார்த்துச் சிலாகிக்கத் தவறுவதேயில்லை.
2014 ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘Misfah – Where Time Stand Still” எனத் தலைப்பிடப் பட்டதொரு பயணக் கட்டுரையின் வாயிலாகவே நான் இக்கிராமம் குறித்து அறிய வந்தேன். எனக்கு ஸ்மார்ட் ஃபோனோ, கூகுள் வரைபடமோ பரிட்சையமாகாத சமயம். அப்போது நான் இப்ராவிலும் எனது துணைவியார் நிஸ்வாவிலும் பணி புரிந்து கொண்டிருந்தோம்.
ஆனால் அந்த ஊரைப் பற்றி வாசித்த கணம் முதல் அதனைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைத்தீ மனதில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. பல பேரிடம் விசாரித்தும் ஒருவருக்கும் அந்த ஊருக்குப் போக வழி சொல்லத் தெரியவில்லை. பல வாரங்களுக்குப் பிறகு ஒரு வழியாக தோழர் ராம்பாபுவின் அறிமுகம் கிடைக்க முதல் சந்திப்பிலேயே, “நீங்க மிஸ்ஃபாத் அல் அப்ரியீன் போயிருக்கீங்களா?” எனக் கேட்டேன்.
ஒரு முறை சென்றிருப்பதாகவும் உடன் வந்து வழிகாட்டத் தயார் என்றும் சொன்னவரை வராது வந்த மாமணியேவெனக் கும்பிடு போட்டுக் கட்டுச் சோற்று மூட்டையுடனும், மற்றொரு குடும்பத்துடனும் வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அடுத்த நாளே மிஸ்ஃபாத்தை நோக்கிக் கிளம்பி விட்டோம்.
கண்டவுடன் காதல் என்பதெல்லாம் மிகக் குறைவான மதிப்பீடு. மிஸ்ஃபாத்தைக் கண்டவுடன் முழுப் பைத்தியமாகி விட்டேன் எனச் சொல்வதே சரி.
வட கிழக்கில் இருந்து தென்மேற்காகச் சரிந்திருக்கும் பள்ளத்தாக்கில் படிப்படியாகக் கீழிறங்கும் பச்சைப் பசேலென்ற தோப்புகளும், சிறு சிறு மரகதப் பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டதைப் போன்ற வயல்களும் கண்ணைப் பறித்தன. அப்படிச் சரிந்து இறங்கும் படிக்கட்டுத் தோட்டங்களின் மேற்பகுதியில் ஆங்காங்கே தலைகாட்டும் பழங்காலத்து மண் வீடுகள் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்வதை கணப் பொழுதில் உணர முடியும்.
உச்சியில் முற்றிலும் சிதிலமடைந்து குட்டிச்சுவர்களாய்ப் போன பழங்கால வீடுகள் மணல் மேடுகளாகக் கரையான் ஏறிய உத்திரங்களுடனும், உளுத்துப் போன சிறு சிறு சன்னல்களுடனும் சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தன.
தொலைவில் இருந்து பார்க்கும் போதே அவையனைத்தும் நூற்றாண்டுகளின் எச்சங்கள் என்பதை உணர முடிந்தது.
அந்த மலைச்சரிவில் தான் குடியிருப்புப் பகுதி துவங்குகிறது. ஆனால் அதன் பக்கவாட்டில் வடமேற்குத் திசையில் இருந்து தென்கிழக்கை நோக்கிச் சரேலெனக் கீழிறங்கும் மலைச் சரிவையும் அரும் பாடு பட்டுத் திருத்தி விளை நிலங்களாக மாற்றி வைத்திருக்கின்றனர். பல தலைமுறைகளாகக் கைமாற்றி விடப் பட்ட வேளாண் அறிவு கண்களுக்குக் குளிர்சியாக மிளிர்வதைப் பார்க்கும் போது வேறெதற்கும் துள்ளாத மனமும் துள்ளும். கூச்சம் களைந்து குத்தாட்டம் போட வைக்கும் அழகு.
அதனைக் கண்ட கணத்திலேயே ஆங்கில எழுத்தான V போலக் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரு உச்சியில் இருந்து இறங்கி மறு உச்சியை அடைய வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது.
அப்படிச் செல்லக் கண்டிப்பாக ஒரு பாதை இருக்கும் என எனது உள்ளுணர்வு கூறியது.
கருங்கற்கள் பாவப்பட்ட குறுகிய தெருக்களின் வழியே இரு புறங்களிலும் இருக்கும் சிறு சிறு வீடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே கிராமத்தின் நுழை வாயிலை அடைந்தோம். அங்கு உயரமான பாறைகளின் மீது கட்டப்பட்டுச் சிதிலமடைந்து கிடந்த மண் வீடுகள் ஆச்சரியத்தில் என் விழிகளை விரிய வைத்தன.
அதுவரை இறங்கி வந்த குறுகிய சாலை முடிவுற்று மேலும் குறுகும் வீதிக்கு வழிவிட்டது. இருவர் எதிரெதிரே நடந்து சென்றால் ஒருவர் நின்று ஒதுங்கி வழிவிட வேண்டும் என்ற அளவிலான வீதிகள். அவை ஒரு பெரிய ஆலமரத்தின் வேர்களைப் போல எண் திசையிலும் கிளை பரப்பிக் கிடந்தன. பெரும்பாலான வீடுகள் குட்டிச் சுவர்களாய்க் கிடந்தாலும் பல வீடுகளில் மனிதர்கள் வசிப்பதை உணர முடிந்தது. சப்தமிட வேண்டாமென்றும், உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தா வண்ணம் உடுத்துமாறும் வேண்டுகோற் பலகை வைக்கப் பட்டிருந்தது.
நடந்து நடந்து பளபளப்பேறிக் கிடந்த கருங்கற் படிக்கட்டுகளில் கவனமாக இறங்கினால் ஒரு மெகா சைஸ் தொட்டிக்குள் ஃபலஜ் என்ற வாய்க்கால் நீர் கொட்டிக் கொண்டிருந்து. உள்ளூர் ஓமானி இளைஞர்களும், சிறுவர்களும் அதில் குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். தொட்டியிலிருந்து வழிந்த நீர் மீண்டும் வாய்க்காலாக உருமாறி அடுத்தடுத்த தோப்புக்களுக்குள் ஊடுறுவிப் பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த அமைதியான ஊரில் இதனைத் தவிர வேறெந்த ஓசையையும் கேட்க முடியவில்லை. காற்றும் அதனால் அசைந்த இலைகளும் கூட சூழழின் அமைதியைக் குலைத்து விடக் கூடாதெனக் கவனத்தோடு இயங்குவதாகத் தோன்றியது.
அடர்ந்த தோப்புகளின் வழி ஊடுறுவி இறங்கிய கதிரவனின் ஒளிக்கீற்றுகள் இலைகளினூடேயும், வாய்க்கால் நீரிலும், மண் சுவர்களிலும், களிமண் தோப்புகளுக்குள்ளும் வித விதமான வர்ண ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. வாய்க்காலை ஒட்டியே செங்குத்தாகக் கீழிறங்கிய படிக்கட்டுகளில் மிகக் கவனமாக ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு இறங்கினோம்.
கீழே தற்காலத்தில் கட்டப்பட்ட மசூதி ஒன்றிருக்கிறது. அதற்கு எதிர்புறம் வாய்க்காலின் மேலாகக் கட்டப்பட்ட மிகச்சிறிய இருண்ட கதவில்லாத குளியலறைகள் இருக்கின்றன. குடிநீரூக்காக மூன்று குழாய்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. 24 மணி நேரமும் தூய்மையான, குளிர்ந்த குடி நீர் கிடைக்க வழி செய்யப் பட்டிருக்கிறது. இவையிரண்டும் படிக்கட்டின் இடப்புறத்தில்.
அதே திசையில் தோப்புகளினூடே செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தால் ஏழெட்டு மணி நேரத்தில் நாம் சென்ற அத்தியாயத்தில் கண்டு களித்த “ஷரஃப் அல் மேயன்” ஐ அடைந்து விடலாம். ஹஜர் மலைத் தொடரின் மறுபுறம் இருக்கும் பல ஊர்களுக்கு இங்கிருந்து மலைப் பாதைகள் உண்டு.
அது மிகவும் கடினமான சமாச்சாரமென்பதால் நாம் இடது புறத்தில் ஒரு பத்திருபது நிமிடங்கள் சலசலத்து ஓடும் வாய்க்காலின் வழி நடந்தால் தோப்புக்களின் அழகையும் எதிர்ப்புறம் நீண்டு கிடக்கும் உயர்ந்த மலையையும் கீழே தெரியும் பள்ளத்தாக்கையும், வட திசையில் பாம்பைப் போல் வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் நம்மை ஆசை காட்டி வரவழைத்து விழுங்கத் தவிக்கும் பிரம்மாண்டமான கணவாயையும், அதன் பின்புறம் பரந்து, விரிந்து கிடக்கும் உயர்ந்த மலைச் சிகரங்களையும், சிதிலமடைந்து கிடக்கும் பழங்காலக் கண்காணிப்புக் கோபுரத்தையும், பெரும் பாறைகளையும், வித விதமான மரங்களையும் கண்டு ரசித்து விட்டு இதற்கு மேல் போய்ப் பலனில்லை எனத் தோன்றும் கணத்தில் திரும்பி விடலாம். அப்படித்தான் நாங்களும் புறப்பட்ட இடமான மசூதிக்கே வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து வலது புறம் திரும்பிப் படியேறி வந்த வழி செல்லாது நேரே மேற்குத் திசையில் சென்ற பாதையைப் பிடித்து நடந்தோம். இடது புறம் நான்கைந்தடிப் பள்ளத்தில் சச்சதுரங்களாகச் சுற்றிக் கல்லால் கட்டப்பட்ட வயல்கள். அவற்றில் வாழை மற்றும் எலுமிச்சை மரங்களும் அவைகளுக்குத் தேவையான நிழல் தரும் உயர்ந்த பேரீட்சை மரங்களும். மரங்களைச் சுற்றிலும் ஆடு மாடுகளுக்குத் தேவையான தீவனப் புல்லும் பயிர் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.
வலது புறம் குறைந்தது எட்டடி உயரம் கொண்ட கருங்கல் சுவர். அதன் உட்புறம் மண்ணும் எருவும் கலந்து பதப்படுத்தப்பட்ட சத்தான வயலில் உயிர் பிடித்து வளர்ந்த பெரும் ஈச்ச மரங்கள். அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் இப்படி அடுக்கடுக்காக மலைச் சரிவில் பெரும் தொட்டிகள் கட்டி மண் சுமந்து வந்து நிரப்பி அதில் மரங்களை வளர்த்தும் பல வகை தானியங்களை விதைத்தும் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இதனை எழுதும் போது சீமைக் கருவேல மரப் புதர்கள் மண்டிக் கிடக்கும் அமராவதி ஆற்றின் அவல நிலை கண் முன் தோன்றி நெஞ்சைப் பிளக்கிறது.
நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்ட கிராமம் இன்றும் அதன் பழமை மாறாது நவீன வசதிகளையும், இக்காலத்திற்கான அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம், குளிர் சாதனம், குழாய் நீர் போன்ற வசதிகளைப் பூசிக் கொண்டு பருவத்திற்கு வந்த இளம் பெண்களைப் போல மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மேற்குத் திசையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். இருபதடி தொலைவிற்குள் மற்றொரு படிக்கட்டு வட திசையில் மேலேறியது. “நீங்க மெல்ல முன்னாடி போய்க்கிட்டே இருங்க நான் இந்தப் படிக்கட்டு எங்க போகுதுன்னு பாத்துட்டு வந்திடுறேன்” எனக் கூறிவிட்டுத் துள்ளியேறினேன். அது பாழடைந்து குட்டிச்சுவராய்ப் புதர் மண்டிக் கிடந்த கூரையில்லாத மூன்றடுக்கு வீடொன்றின் வழியே மற்றொரு குறுகலான சந்திற்கு இட்டுச் சென்றது.
அந்த முட்டுச் சந்து இடவலமாகப் பிரிய நான் வலது புறத்தைத் தேர்ந்தெடுத்து ஓடினேன். தொடர்ந்து சென்ற பாதை ஒரிடத்தில் மீண்டும் இட வலமாய்ப் பிரிந்தது.
அது நான் ஏற்கனவே கடந்து சென்ற பாதை என்பதைக் கண நேரத்தில் புரிந்து கொண்டேன். இடப்புறம் திரும்பினால் ஊரின் நுழைவாயிலை அடையலாம். அதனால் அங்கிருந்து மீணடும் வலது புறம் திரும்பி முதலில் கடந்து வந்த பெரிய தண்ணீர்த் தொட்டி, வழுக்கும் கருங்கற் படிக்கட்டுகள் எனச் சென்ற வழியிலேயே கீழிறங்கி அதே ஒற்றையடிப் பாதையைப் பிடித்து முன்னே நடந்து ஒரு சமதளமான புல்தரையில் வாழை மரங்களின் நிழலில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்த குடும்பத்தை அடைந்தேன்.
தொடர்ந்து Misfat old House என்ற புகழ் பெற்ற விடுதியைச் சுற்றிப் பார்த்தோம். இன்றைய இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ், இளவரசராக இருந்த சமயம் அந்த விடுதிக்கு வந்திருக்கிறார். அவரது புகைப்படத்தை அங்கு கண்டோம். மிகச் சிறிய அறைகள். அந்தக் கால மண் வீட்டை அதன் அமைப்பும், அளவுகளும் மாறாது மிகக் கவனமாக நவீன வசதிகளுடன் புதுப்பித்திருக்கின்றனர். அங்கு ஓரிரவு தங்கி ஓமானிகளின் வீடுகளில் சமைக்கப்பட்டுப் பரிமாறப்படும் உணவுகளை உண்டு “மிஸ்ஃபாத்” தின் தனித்தன்மையான அனுபவத்தில் மூழ்கித் திளைக்கக் குறைந்த பட்சம் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம். அது கொழுத்த பணக்காரர்களுக்கான அனுபவம் என்பதால் வெகு நேரம் அங்கு நிற்காது நடையைக் கட்டினோம்.
அதன் பிறகு சிறிது தூரம் மட்டும் கீழிறங்க முடிந்தது. அதற்கு மேல் எங்களுக்கு நேரமில்லாததால் அன்று அங்கிருந்து கிளம்ப மனமின்றியே கிளம்பினேன். ஆனால் அதன் பிறகு சிறிது சிறிதாக அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளனைத்தையும் சுற்றி வந்து விட்டேன். எனது நண்பர்கள் பலரையும், நண்பர்களது நண்பர்களையும் அந்தப் புகழ் பெற்ற விடுதியின் வழியே தொடர்ந்து அழைத்துச் சென்று கீழ்புற மலையில் இருந்து கீழே இறக்கி, மறுபுறம் இருக்கும் மலையில் ஏற்றி வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது.
சில சமயம் வாகனத்தை நிறுத்தி விட்டு தேன் விற்பனைக் கூடத்தின் பின்புறம் இறங்கி எதிர்புறமாக அழைத்துக் கொண்டு போய் கிராத்திற்குள் இருந்து நுழைவாயிலை அடைவதும் உண்டு. வழியில் இரண்டு பழங்கால மசூதிகளும், நிழற்படங்கள் எடுக்கத் தோதான ஏராளமான இடங்களும் உள்ளன. இந்த அழகிய கிராமத்தில் கழுதை சவாரி செய்யும் வசதியும் உண்டு. நான் ஏனோ இன்று வரை அதனை முயற்சிக்கவில்லை.
ஒவ்வொரு முறை அந்தக் கிராமத்திற்குச் செல்லும் போதும் சிறு வயதில் இங்கு வாழ்ந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்குமென மனம் ஏங்குவது வழக்கம். இன்று வரை என்னைப் பொறுத்தளவில் கண்ணாமூச்சி விளையாட உலகிலேயே மிகச் சிறந்த இடம் “மிஸ்ஃபாத்” கிராமம்தான்.
இன்று இந்தப் புகழ் பெற்ற கிராமம் சுற்றுலாப் பயணிகளின் வரவால் திமிலோகப் படுகிறது. ஏராளமான தங்கும் விடுதிகள் முளைத்து விட்டன. பழைய குட்டிச்சுவர்கள் ஒவ்வொன்றாக அரிதாரம் பூசிக் கொண்டு விடுதிகளாக மினுக்கத் துவங்கியுள்ளன. பழைமை மாறாத விடுதிகளில் நவீன காஃபி ஷாப்புகள் சரவிளக்குகளுடனும் இன்ஸ்ட்டாவிற்குத் தகுந்த உள் அலங்காரங்களுடனும் குடியேறியிருக்கின்றன.
உலகின் மிகச்சிறந்த ரொமான்டிக்கான இடங்களில் மிஸ்ஃபாத்தும் ஒன்றென்பது எனது தாழ்மையான கருத்து. உங்கள் காதலியை இந்தக் கிராமத்திற்கு அழைத்துச் சென்று ஆதவன் உதிக்கும் போதோ அல்லது அந்தியில் மறையும் கணத்திலோ ஒரு சரியான இடத்தில் நிறுத்தி அவள் முன் முழந்தாளிட்டால் நீங்கள் வாய் திறந்து இறைஞ்சும் முன் அவரே உங்களை இறுகத் தழுவி முத்தமிட்டு ஆம் ஆம் ஆம் என உரத்துக் கூச்சலிடுவது உறுதி.
அதனால் தான் சொல்கிறேன் “மிஸ்ஃபாத்தை மிஸ் பண்ணிடாதீர்கள்!!!”


