VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7
தொடர்கள்

பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7

ரோஜா நீர் நறுமணத் தைலமாகவும், மருத்துவ குணமுள்ள நிவாரணியாகவும் ஓமானிகளால் பயன்படுத்தப்படுகிறது.

இளங்கோ ராமசாமி
Last updated: June 18, 2026 2:42 pm
10 Views
Share
7 Min Read
பச்சைமலை!!!
SHARE

அரபியில் “ஜபல்” என்றால் ‘மலை’ என்றும் “அக்தர்” என்றால் ‘பச்சை’ என்றும் பொருள். தமிழ்நாட்டின் உதகையைப் போல் ஒமானுக்கு வாய்த்த கோடை வாசஸ்தலம் இந்த ‘அல் ஜபல் அல் அக்தர்’ என்றறியப்படும் பச்சமலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது தான் நான் கடந்த அத்தியாயத்தில் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.   

‘பச்சை மலை’ எனப் பெயர் பெற்றிருந்தாலும் எங்கு பார்த்தாலும் மொட்டைப் பாறைகளாகவே கண்ணுக்குத் தட்டுப்படும். நான் உதகையோடு ஒப்பிட்டதாலும் இந்த மலையின் பெயரில் “பச்சை” இருப்பதாலும், நமது மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பசுமை மாறாக் காடுகள் போல எதனையும் எதிர்பார்த்து இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள். அதற்குப் பதில் ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ தான் சர்க்கரை’ என்ற பழமொழியை நினைவுறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். மற்ற ஓமானிய மலைக் கிராமங்களோடும் தோப்புக்களோடும் ஒப்பிட்டால் ஜபல் அக்தர் சற்றே வித்தியாசமாகவும் பரப்பளவில் பெரியதாகவும் இருப்பதே பெயர்க் காரணம். 

மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதென்பதற்கிணங்க சிறிதளவே இருந்தாலும் இந்த ஜபல் அக்தரின் படித்தோட்டங்கள் வசந்த காலத்தில் நம் கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பன. பருவத்தில் காய்த்துக் குலுங்கும் இங்குள்ள ஆலிவ், ஏப்ரிகாட் மற்றும் பச்சைப் பசேலென்ற மாதுளை மரங்கள் நம் விழிகளை வியப்பில் விரியச் செய்வது இயல்பு. அதுவும் குண்டெறிதல் போட்டியில் பயன்படுத்தப்படும் குண்டுகளைப் போல கனக்கும் ஜபல் அக்தர் மாதுளம் பழங்களது சுவையை நீங்கள் உலகில் வேறெங்கும் ருசித்திருக்க முடியாது. ஒற்றைப் பழம், அளவைப் பொறுத்து 230 ரூபாயில் 700 ரூபாய் வரை விலை போகும். மக்கள் பருவகாலத்தில் அவற்றைப் பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்று சுவைத்து மகிழ்வர். பேரமெல்லாம் கிடையாது. “இஷ்டம்னா வாங்கு கஷ்டம்னா போய்க்கிட்டே இரு” என்னுமளவிற்கு அந்தக் கனிகளுக்கு மதிப்பு.   

மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஜபல் அக்தரில் டமாஸ்கஸ் ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜா சீசன். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ‘அனந்தாரா’ என்ற நட்சத்திர விடுதியின் பின்புறம் இருக்கும் “அல் எய்ன்” என்ற கிராமத்தில் இருந்து “அல் அக்கர்” என்ற கிராமத்திற்குச் செல்லும் ஒற்றையடி மலைப் பாதையில் நடப்பது அலாதியான அனுபவம். 

வலது புறத்தில் உயர்ந்த மலையும் இடது புறத்தில் அடுக்கடுக்காக வளைந்தும், நீண்டும் கிடக்கும் பச்சை வண்ணப் படிக்கட்டுத் தோட்டங்களும், அவற்றிற்குக் கீழே சரேலெனச் சரிந்து கீழிறங்கும் பள்ளத்தாக்குமாகக் கொள்ளை கொள்ளும் இயற்கையழகு “யேஹ் தில் மாங்கே மோர்” என நம்மை வாய்விட்டுக் கூவச் செய்யும். அப்படி நாம் இடும் கூக்குரல், சூழ்ந்திருக்கும் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்து, அலையலையாக “மோர்… மோர்… மோர்…” என வெகு நேரம் நம் செவிப் பறைகளை வந்து மோதிக் கொண்டே இருக்கும். 

தொலைவில் தெரியும் “அல் அக்தர்” கிராமத்தின் தோப்புக்களை அடைவதற்கு வெகு தூரத்திற்கு முன்பே அக்கிராமத்தின் ரோஜாத் தோட்டத்தில் இருந்து தென்றலின் தோளில் ஏறி வரும் நறுமணம் நம் சுவாசப் பைகளை நிரப்பி நம்மைக் கிறுகிறுக்கச் செய்யும். ஆனால் அந்தச் சுகந்தம் வீசிய தூண்டிலில் வகையாகச் சிக்கிய நமது கால்கள் அந்தப் பூந்தோட்டங்களைக் காணும் ஆவலால் சுண்டப்பட்டு புயல் வேகத்தில் பாயும். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கொத்துக் கொத்தாக மலர்த்து கிடக்கும் ரோஜாக்களை கண்ட மனம் கள்ளுண்ட மந்திகளைப் போலக் கிறங்கித் துள்ளாட்டம் போடும். 

ஒரு ரியால் காசு செலவழித்தால் அந்தத் தோப்புக்குள் இறங்கி, ஒரு சிறு பூக்கூடையில் ஒரு டஜன் ரோஜாக்களைப் பறித்து வந்து உங்கள் மனதிற்குப் பிரியமானவர்களுக்குக் கொடுக்கலாம். அந்த அனுபவத்திற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. 

இந்த இரண்டு ஊர்களிலும் ரோஜா இதழ்களில் இருந்து சாறு பிழிந்து எடுத்து அதனைக் காய்ச்சிப் பன்னீர் போன்ற ஒரு நறுமணத் திரவத்தைப் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் குடிசைத் தொழில் இன்று வரை நடை பெற்று வருகிறது. ஒரு சிறு தொகையைக் கட்டணமாகக் கட்டினால் செய்முறை விளக்கத்தைக் கண்டு ரசிக்கலாம். இந்த ரோஜா நீர், புகழ் பெற்ற ஓமானி அல்வாவின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது நறுமணத் தைலமாகவும், மருத்துவ குணமுள்ள நிவாரணியாகவும் ஓமானிகளால் பயன்படுத்தப்படுகிறது.

 

 

இந்த இரண்டு கிராமங்களிலும் சிதிலமடைந்து குட்டிச்சுராகவும் மாட்டுக் கட்டுத் தாரைகளாகவும், ஆட்டுப் பட்டிகளாகவும் கிடந்த இடிபாடுகள் இன்று மராமத்துப் பார்க்கப்பட்டு, புத்தம்புது அரிதாரங்களைப் பூசிக்கொண்டு, நவீன வசதிகளுடனான தங்கும் விடுதிகளாக உருமாறி விட்டதைப் பார்க்கும் போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. 

நான் முதன் முதலில் கண்ட நமது ஊரின் மூத்திரச் சந்துகளுக்கு ஒப்பான அப்பழைய கிராமங்கள் மெல்லமெல்ல உருமாறுவதைப் பார்க்கும் போது ஒரு புறம் மகிழ்ச்சியும் மறுபுறம் தமிழ்நாட்டில் இருக்கும் எங்களது பூர்வீக கிராமத்தின் நிலை குறித்த வருத்தமும் ஒரே சமயத்தில் மனதிற்குள் அலையடிப்பது வழக்கமாகிப் போய் விட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தக் கிராமங்கள் செல்வச் செழிப்பு மிக்க புகழ் பெற்ற ஐரோப்பிய கிராமங்களைப் போல மினுக்கப் போவது திண்ணம். 

இரண்டாவது கிராமத்தைத் தாண்டி மூன்றாவது கிராமமான “அஸ் ஷிரை ஜா” வை அடைந்தால் ஜபல் அக்தரின் W 18 b என்ற புகழ்பெற்ற முன்று கிராம மலைப் பாதையை நிறைவு செய்த சாதனைக்குச் சொந்தக்காரர்களாவீர்கள். 

இந்த மலைவாசஸ்தலத்தில் “அனந்தரா” மற்றும் “அலிலா” போன்ற ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக ஓமானிகளின் சிறு சிறு பாரம்பரிய மண் மற்றும் கல் விடுதிகளுக்குக் கட்டணம் வசூலிக்கின்றனர். அவைகளில் தங்கும் தனித்துவமான அனுபவத்திற்காக மேற்குலக சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் இரவிற்கும் பல்லாயிரங்களைக் கொட்டிக் கொடுக்கின்றனர். 

அப்படிப்பட்ட ஒரு விடுதி “தி க்ளிஃப்”. ஐபல் அக்தர் நகரத்தின் மையத்தில் இருந்து 30 நிமிட தொலைவில் உள்ளொடுங்கி இருக்கும் “அல் சோவ்க்ரா” (Al Sowagra) ஒரு சிறு மலைக் கிராமம். அந்த கிரமத்தில் மொத்தம் ஐந்து குடும்பத்தினர் மட்டுமே வாழ்கின்றனர். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்பிற்காக அவர்கள் ஒரு பெரும் கணவாயின் மறுபுறம் மலையின் விளிம்பில் சிறு சிறு வீடுகளில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கணவாயைத் தாண்டி எதிரிகள் ஊருக்குள் நுழைவது சாத்தியமேயில்லையல்லவா? 

சுல்தான் காபூஸ் பதவியேற்று நாட்டை மறுமலர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்த பிறகு வெளியுலகோடு தொடர்பு கொள்ள வசதியாகத் தங்களது பழைய வீடுகளைக் கைவிட்டு கணவாயைத் தாண்டி மேட்டிற்கு வந்து நல்ல வசதியான நவீன வீடுகளைக் கட்டிக் குடியேறியுள்ளனர். 

அங்கிருந்து அரசு வேலைகள், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, மருத்துவமனை, நீராதாரம் என அவர்களும் பிற ஓமானிகளைப் போல தங்களைப் பொது நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களது பழைய குடியிருப்புப் பகுதிக்கு மேலே ஒரு மிகப் பெரிய குகை இருக்கிறது. “அமர்” என்ற பெயர் கொண்ட அந்தப் பெரிய குகை அவர்களது குடும்ப சொத்து. 

2015 ஆம் ஆண்டு அந்த குகைக்குள் இறங்கும் ஒரு சாகசப் பயணத்திற்காக, மலையேறுபவர்களுக்கான ஃபேஸ்புக் குழு ஒன்றோடு இணைந்து அந்தக் கிராமத்திற்கு முதன் முறையாகச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடிபாடுகளைப் புனரமைத்து ஒரு சிறு ரிசார்ட்டாக மாற்றும் திட்டம் இருப்பதாகக் கூறினர். அந்தக் குகைக்குள் எங்களை அழைத்துச் சென்ற இளைஞர்களில் இருவர் என்னிடம் அப்போது படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். நுழைவாயிலில் இருந்து கடைசி வரை செல்ல 45 நிமிடங்கள் பிடித்தது. அது ஒரு அலாதியான வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.  

அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு அதாவது கொரோனா ஊரடங்கெல்லாம் தளர்த்தப் பட்ட பிறகு ஒரு முறை நண்பர்களுக்கு அந்த ஊரைச் சுற்றிக்காட்ட அங்கு சென்றவன் அதிசயித்துப் போனேன். கணவாயின் மறுபுறம் இருந்த பழைய கல் வீடுகளைப் புதுப்பித்து மிக அழகிய ரிசார்ட்டாக மாற்றி விட்டிருந்தனர். 

ஒரு முறை எனது திருமண நாளிற்கு இன்ப அதிர்ச்சியாக எனது இணையரை அழைத்துக் கொண்டு சென்று அந்த ரிசார்ட்டில் ஓரிரவு தங்கியிருந்து விட்டு வந்தேன். 

இன்று வரை “நீங்கள் அளித்த பரிசுகளிலேயே மிகச் சிறந்தது அந்த இரவு அங்கு தங்கியது தான்” என அவ்வப்போது அவர் குறிப்பிடுவதுண்டு. அவ்வளவு நிசப்தமான இரவை நாங்கள் அதற்கு முன்னும் பின்னும் என்றும் அனுபவித்து உணர்ந்ததில்லை. வானில் மின்னும் விண்மீன்களைத் தவிர வேறெந்த வெளிச்சப் புள்ளியும் கண்களுக்குத் தட்டுப் படாத அந்த ஏகாந்த இரவு வாழ் நாள் முழுமைக்கும் நினைவை ஆக்கிரமித்திருக்கும் வல்லமை பெற்றது.  

அந்தக் கணவாய்குள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இறங்கி ஏறுவது சிரமம் என்பதால் மின் மோட்டாரால் இயக்கப்படும் கயிற்றுத் தொட்டிலொன்றை அமைத்திருக்கின்றனர். கணவாயைக் கடக்கும் இடத்தில் மரத்தாலான ஒரு சிறு தொங்கு பாலம் இருக்கிறது. ஆங்காங்கே அழகிய பூச்செடிகள், அந்த மலைப் பிரதேசத்திற்கேயுரிய மரங்கள் செடிகள், சிறு தோட்டங்கள் என அங்கு செலவிடும் ஒவ்வொரு நொடியும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் வடிவமைத்திருக்கின்றனர்.  

          ஒரு அசல் ஓமானி மலைக் கிராமத்தின் அரவணைப்பை அங்கு துளித் துளியாய் ரசித்து, ருசித்து மகிழ்ந்திடலாம். அங்கு நான் பருகிய லெமன் க்ராஸ் மூலிகைத் தேனீர் இன்று வரை எனது நாவின் சுவையரும்புகளை விட்டு அகலவில்லை. அந்த வாழ்நாளுக்கான அனுபவத்தை நீங்களும் உய்த்துணர வேண்டும் என்ற ஆசையில் தான் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன். அந்த ஊருக்குச் செல்லும் மலைப் பாதையே உங்களுக்கு ஒரு பெரும் சாகச உணர்வைத் தரும். 

ஓமானில் ஆஃப் ரோடு ட்ரைவ் செல்வது அவசியம் தவற விட்டுவிடக் கூடாத அனுபவங்களில் ஒன்று. அந்த விடுதியை அடைந்து ஓமானிகளின் விடுந்தோம்பலையும், அவர்களது கிராமத்தின் எழிலையும், அந்த அசாதாரணமான மலையின் விளிம்பில் தங்கும் தனித்துவமான அனுபவத்தையும் அணு அணுவாக ரசித்துக் கொண்டிருங்கள்.

நான் உங்களை அடுத்த விண்மீன் உதிக்கும் போது ஜபல் அக்தர் போர் குறித்த விவரங்களோடு சந்திக்கிறேன்

PrevPrevious‘கணியன் பூங்குன்றனார் விருது’ பாராட்டு விழா
Nextஇல்லறம்Next

You Might Also Like

அந்த மாலை – வினோத் – வினோதினி
ஒரு மனிதனின் கவனக்குறைவு
ஏமாற்றம்
இல்லறம்
நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் ஃபெப்ரவரி 2026
Previous Article ‘கணியன் பூங்குன்றனார் விருது’ பாராட்டு விழா
Next Article இல்லறம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?