தால்ச்சா
S.நூருல் இர்ஃபான்
தாளிப்பு இல்லாமலே தால்ச்சாவின் சுவையை தரமாக கொண்டு வந்து இருக்கின்றார் சகோதரி சாரா.
ஆரம்பமே பிள்ளையார், படிக்கும் போது நண்பர்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதை நினைவுக்கு கொண்டு வந்தது தால்ச்சா. நடப்பு காலங்களில் பிள்ளையார் வந்தாலே அதனுடன் கலவரத்தையும் சேர்த்து கொண்டு வருகின்றனர் ஒரு கோஷ்டியினர். ஆனால் தால்ச்சாவின் பிள்ளையாரோ இரு ஊரையும், இரு கலாச்சாரத்தையும் (காயல், தஞ்சை) ஒற்றுமையாக்கி இருக்கின்றார்.
போலீஸ் அதிகாரி அகமது, கோழி குஞ்சுவை வைத்து கோழியை (ஷைமாவை) தன் கூண்டிற்கு கொண்டு வரும் கதையும் கதையில் வரும் கதாபாத்திரங்களும் அருமை.
இப்பும் வரும் படத்திற்கெல்லாம் பிஜிஎம் போல், தால்ச்சாவின் பிஜிஎம் எப்போ வருவியோ மச்சான், எப்போ வருவியோ மச்சான் என்ற ஷைமாவின் கேள்வியின் ஏக்கத்தின் வலிகளையும், வழிகளையும் காயல்பட்டினத்தின் வட்டார வார்த்தையின் அழகில் அழகாக எழுத்து வடிவில் கொண்டு வந்து இருக்கின்றார் சகோதரி சாரா.
இன்ஸ்பெக்டர் அகமது முஸ்லிம் என்று அறிந்தவுடன் காயல்பட்டினத்தின் இளவட்டங்கள் பயங்கர சந்தோஷமா சலாம் சொல்லி முலாகத் செய்து ஜூம்மாவிற்கு அவனுடன் கூட்டமாக செல்வதை பாரத்து என்னடா ஒண்ணுக்குள்ளா ஒண்ணாயிட்டங்களா என்று மாணிக்கம் கேட்க அவனைப் பத்தி முழுச தெரியாம அவன் கூடவே பலியாடுங்க மாதிரி போகுதுங்க பக்கிங்க என்று அருண் கூறிய வார்த்தை நிஜத்தில் நம் சமுதாயத்தின் சிலரின் செயல்பாட்டின் வெளிப்பாடாகவே எனக்கு தெரிந்தது.
என்னுடைய தஞ்சாவூர் நண்பர் பேசும் போது அடிக்கடி லாத்தா என்ற வாரத்தையை உபயோகப்படுத்துவார் நான் லாத்தா என்றால் பெத்தும்மா (அம்மாவுடைய அம்மா) என்று நினைத்தேன் தால்ச்சா கற்று தந்தது அக்கா என்று. அதுமட்டுமல்லாமல் தாதி (அப்பாவின் அம்மா), கம்மா (அம்மாவின் அம்மா) போன்ற உறவுமுறை வார்த்தைகளையும் கற்று தந்தது தால்ச்சா.
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்க ஊரிலிருந்து (மேலப்பாளையம்) வேன் பிடித்து காயல்பட்டினத்திற்கு வந்து கந்தூரியின் கடைவிதியில் கலந்து விட்டு பலாப்பெட்டியில் நேர்ச்சை சோறு வாங்கிய நியாபகம். அது சாயப்பா தைக்காவின் கந்ததூரி சோறு என்பதை கிட்டதட்ட 35 ஆண்டுகள் கழித்து தால்ச்சாவின் மூலம் அறிந்து கொள்கின்றேன்.
ஊருக்கு சென்றால் காயல்பட்டினம் கடற்கரைக்கு போவது வழக்கம். இனி அங்கும் செல்லும் போது தால்ச்சாவின் கதாபத்திரங்களையும் தேடச் சொல்லும் என்னுடைய பயணம்.
காயல்பட்டினம் என்றால், கடற்கரை, கஞ்சி, வாடா, தம்மடை, களறி கறி, நியாபகம் வரும் அதனுடன் தற்பொழுது தால்ச்சாவும் சேர்ந்து கொண்டது.
வளையல் கைகளினால் தயாரித்த தால்ச்சாவின் சுவையை கேட்கவா வேண்டும் மிகவும் அருமை திகட்டாத சுவை.
*
கதாப்பாத்திரம் – ஆல்டோ :
பல படங்களில் காட்டப்படும் அதிரடி காவல் அதிகாரி போல் இல்லாமல், கார்த்திக் ஆல்டோ எப்போதும் ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்தே முடிவு எடுப்பார். அதுவே அவருடைய கதாப்பாத்திரத்தை வளரச் செய்தது. சண்டைகள் எதுவும் இல்லாமல், தன்னுடைய புத்திசாலித்தனத்தை வைத்தே வழக்கை தீர்த்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய கவனிப்பு திறன் மிகக் கூர்மையானது. தன் அருகில் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனிக்காமல், அது எதுக்கு நடக்கிறது என்றும் சேர்த்து மனதில் யோசிப்பார். மற்றவர்கள் சுலபமாக விடும் விவரம் கூட, இவருக்கு தெள்ளந்தெளிவாய் தெரியும்.
இவர் உணர்வு ரீதியாகவும் மிகக் கட்டுப்பாடு உடையவர். எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், தன் உணர்வுகளை மட்டுமே கேட்டுவிட்டு எந்த அவசர முடிவையும் அவர் எடுக்கமாட்டார். தன்னுடைய உணர்வுகளை அடக்கவும், சரியாகக் கையாளவும் தெரிந்தவர் அவர். பரபரக்கும் தருணங்களிலும் அவரிடம் ஒரு அமைதியைக் காண முடியும். அதுவே அவர் வழக்கை முடிக்கப் பெருந்துணை புரிந்தது. அவர் மக்களைப் படிக்கும் விதமாக இருக்கட்டும், அவருடைய பேச்சு, நையாண்டி எல்லாமே வாசகர்களின் மனதில் கதாப்பாத்திரத்தை ஆழமாகப் பதிய வைத்தது.
பிடித்த கதாப்பாத்திரம் :
கார்த்திக் ஆல்டோ எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம். ஏனென்றால் அவர் புத்திசாலி, அமைதியானவர் மற்றும் எதையும் சுலபத்தில் தீர்த்து விடுவார். வழக்கமான வீரம் மிக்க காவல்துறை கதாப்பாத்திரங்களைப் போல் இல்லாமல், ஆல்டோ அமைதியாகவும் கூர்ந்து கவனிப்பவராகவும் இருக்கிறார். இது இவரை இயல்பானவராகவும் நம்பக்கூடியவராகவும் உணர வைக்கிறது. விசாரணைகளின் போது அவரது பொறுமை, சிந்தனை மற்றும் உறுதி அவரை நினைவில் கொள்ளத்தக்கவராக ஆக்குகின்றன. எனவே, ஆல்டோ எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் ஆவார்.


