அகத் தொற்று
சதீஷ்குமார்
எங்கள் வீடு எப்போதும் ஒரு சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். 2018-ல் என் தந்தை எங்களைவிட்டுப் பிரிந்தபோது, எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரமும் அம்மாவின் தோள்களில்தான் விழுந்தது. எங்களை தவிக்கவிடாமல் தாங்கிப் பிடித்தது அம்மாவின் ஒற்றை மனோதிடம் மட்டும்தான்.
அம்மாவின் நாடித் துடிப்பு அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கிவிடும். காலை நான்கு மணிக்கு கண் திறந்த முதல் நிமிடத்திலிருந்தே அவரது நாள் ஓடத் தொடங்கிவிடும். கொல்லைப்புறத்தில் பாத்திரம் உருளும் சத்தமும், வாசலில் தண்ணீர் தெளிக்கும் ஓசையும் அம்மாவின் வருகையை அறிவிக்கும். காபி போடுவதில் தொடங்கி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எனத் தொடர்ந்து இரவு பதினோரு மணி வரை அம்மாவின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர் களைப்படைந்து நான் பார்த்ததே இல்லை. இரவு பதினொன்று மணிக்கு படுக்கைக்குச் செல்வார். ஆனால் அந்த நேரத்திலும் அடுத்த நாள் செய்ய வேண்டிய விஷயங்களை மனதில் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார்.
எங்கள் குடும்பத்தின் ‘நடமாடும் அகராதி’ அம்மா. எங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு உறவினரின் பெயரைச் சொன்னால், உடனே அவர் ஒரு குடும்ப மரத்தை வரைந்து காட்டிவிடுவார்.
“அவங்களா? அவர் திண்டுக்கல்ல இருக்காரு. அவரோட மாமனாரின் தம்பி சிங்கப்பூர்ல வேலை பாக்கறாரு. அவரோட பொண்ணு டாக்டர்…” அவருடைய நினைவாற்றல் எங்களை வியக்க வைத்தது. மனிதர்களைப் புரிந்து கொள்வதில் அவருக்கு அசாத்தியமான அறிவு இருந்தது. அவரது பேச்சில் ஒரு கம்பீரம் இருக்கும்; அதே சமயம் அன்பும் இருக்கும். தஞ்சாவூர் வட்டாரத்துக்கே உரிய அந்தத் தனித்துவமான தமிழ் நயத்தோடு அவர் பேசத் தொடங்கினால், கேட்பவர்கள் அப்படியே சொக்கிப் போவார்கள்.
எல்லாவற்றையும் விட, அம்மாவின் ஆகச்சிறந்த குணம் அவரது விருந்தோம்பல். யாராவது வீட்டுக்கு வந்தால் “சாப்டுட்டுப் போப்பா” என்பதுதான் அவரது தாரக மந்திரம். எங்கள் வீட்டு வாசற்படியை மிதித்த எவரும், ஒரு வாய் காபியோ அல்லது வயிறார உணவோ உண்ணாமல் திரும்பியதே இல்லை. பலர் சிரித்தபடி, “அக்கா வீட்டுக்கு வந்தா தான் வயிறு நிறைய சாப்பிட முடியும்!” எனச் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை கேட்கும்போது அம்மாவின் முகத்தில் மலரும் புன்னகை இன்னும் என் கண்முன்னே இருக்கிறது. எங்கள் குடும்பத்தின் அசைக்க முடியாத தலைவியாக திகழ்ந்தவர் அவர்.
ஆண்டுகள் ஓடின. அம்மாவுக்கு இப்போது அறுபத்தைந்து வயது. ஒருமுறை, அவரது நீண்ட நாள் ஆசையான திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்று வந்தோம். அந்த நீண்ட பயண முடிவில், வீட்டுக்குத் திரும்பிய அம்மாவுக்குக் கடுமையான தலைவலியும், தொடர் வாந்தியும் ஏற்பட்டது. வயது முதிர்வால் வந்த சாதாரணக் களைப்பு என்றுதான் நாங்கள் நினைத்தோம். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பல ஸ்கேன்கள், பல பரிசோதனைகள். அந்த அறிக்கையை பார்த்த மருத்துவரின் முகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘மெனிஞ்சியோமா’ (Meningioma) – மூளைக்கட்டி. மருத்துவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது, எங்கள் உலகையே நொறுக்கிவிட்டது.
அடுத்த ஒரு மாதத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அம்மா உயிருடன் திரும்பி வந்தார். ஆனால் அவர் பழைய அம்மாவாக இல்லை அதன் பின்விளைவு ஒரு கொடூரமான முரணாக எங்கள் முன் நின்றது. யார் யாருக்கோ வாரி வாரி உணவளித்த என் அம்மா, இன்று தன் மூக்கு வழியாகச் செலுத்தப்பட்டிருந்த ஒரு மெல்லிய உணவு குழாய் (Nasal food pipe) மூலமாகத்தான் திரவ உணவை உட்கொள்ள வேண்டியிருந்தது. அதைவிடக் கொடுமை, அவரது குரல் நாண்கள் (Vocal cords) செயலிழந்து போயின. பேசத் துடிக்கும் அவரது உதடுகள் அசைந்தனவே தவிர, ஒரு சிறு சத்தம்கூட வரவில்லை. கம்பீரமாகப் பேசிய குரல், மௌனத்தின் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தது.
அறுவைச் சிகிச்சை முடிந்து, தீவிரப் சிகிச்சைப் பிரிவிலிருந்து அறைக்கு மாற்றியபோது மருத்துவர் என்னைக் கூப்பிட்டுத் தனிமையாகப் பேசினார். “தம்பி, உங்க அம்மாவுக்குப் பெரிய ஆபரேஷன் நடந்திருக்கு. நோய் எதிர்ப்புச் சக்தி ரொம்பக் கம்மியா இருக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டம் கூடக்கூடாது. அலட்சியமோ இருந்தா தொற்று (Infection) ஏற்பட்டு நிலைமை மோசமாயிடும். ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கணும்” என்றார்.
மருத்துவரின் வார்த்தைகளை நான் ஒரு வேதவாக்காக எடுத்துக் கொண்டேன். மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்த முதல் பதினைந்து நாட்களிலும் அம்மாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கினேன். என் அக்கா, தம்பி உட்பட மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைக் கூட அம்மாவின் அறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. கைகளைக் கிருமின்நாசினியால் சுத்தம் செய்த பிறகே அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தேன்.
அந்தப் பதினைந்து நாட்களும் அம்மா அமைதியாக இருந்தார். பேச முடியாவிட்டாலும், அவளது கண்கள் எங்களைப் பாசத்தோடும் பரிவோடும் பார்த்தன. உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக மருத்துவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
பதினைந்தாவது நாளில் நாங்கள் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தோம். அம்மா வீடு திரும்பிய செய்தி கேட்டு உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் எனப் பெரும் கூட்டமே எங்கள் வீட்டை நோக்கி வரத் தொடங்கியது.
தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று நான் எவ்வளவோ தடுத்தும், “நாங்க என்ன உங்க அம்மாவுக்கு எதிரியா? பார்க்காமப் போனா எப்படி?” என்று வாதம் செய்தார்கள். வேறு வழியின்றி, நான் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அனுமதித்தேன். ஆனால், அவர்கள் கொண்டு வந்தது அன்பு மட்டும் அல்ல; எதிர்மறை கூடிய அனுதாபங்களை!
அம்மாவின் படுக்கையருகே வந்து அமர்ந்தவர்கள், அவளது நிலையைப் பார்த்துவிட்டு நெஞ்சில் கைவைத்து அழத் தொடங்கினர்.
“ஐயோ! எல்லாரையும் கைதூக்கிவிட்ட மனுஷிக்கு இப்படி ஒரு நிலைமையா? பார்க்கவே சகிக்கலையே!”
“என்னடி இது, மூக்குல குழாயெல்லாம் மாட்டியிருக்கு? இனிமே உன்னால பேசவே முடியாதா? ச்சே… என்ன ஜென்மமோ!”
“என் தூரத்து சொந்தக்காரர் ஒருத்தருக்கும் இப்படித்தான் ஆச்சு… அப்புறம் அவரால எந்திரிக்கவே முடியல…”
இப்படியாக, ஆளாளுக்குத் தங்கள் வாய்க்கு வந்த எதிர்மறையான கருத்துக்களையும், தேவையில்லாத ஆலோசனைகளையும், அவநம்பிக்கையான கதைகளையும் அம்மாவின் காதுகளில் கொட்டினார்கள். அம்மாவை ஒரு வாழும் பிணமாகப் பார்க்கும் பார்வை அவர்களின் கண்களில் இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல, அம்மாவின் உடல்நிலையில் அல்ல, அவர்து மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் தெரியத் தொடங்கியது. அதுவரை அமைதியாகத் தேறி வந்தவர், மெல்ல மெல்லக் கடுமையான மன அழுத்தத்திற்கும், மனச்சோர்விற்கும் ஆளானாள்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மனநலப் பாதிப்பு (Postoperative delirium (POD)) அவரை ஆட்கொண்டது. சிறிய விஷயங்களுக்குக் கூடக் கத்தத் தொடங்கினார். எங்களைப் பார்த்துப் பற்களைக் கடித்தார். உணவுக் குழாயைப் பிடுங்கி எறிய முயன்றார். தன் பிள்ளைகளான எங்கள் மீதே கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். அவர்து முகத்தில் இருந்த அந்தத் சாந்தம் மறைந்து, ஒருவித விரக்தியும் ஆக்ரோஷமும் குடியேறியிருந்தது.
“ஏன் இப்படி நடக்கிறது…?” என நான் குழம்பிப் போனேன்.
அப்போதுதான், ஒருநாள் மாலை உறவினர் ஒருவர் அம்மாவைப் பார்த்துவிட்டுப் புலம்பிக் கொண்டே போவதையும், அதைக்கேட்டு அம்மா படுக்கையில் தலையணையைப் பிடித்துக்கொண்டு அழுவதையும் கவனித்தேன்.
அம்மாவைத் தாக்கிய தொற்று எந்த ஒரு வைரஸாலோ அல்லது பாக்டீரியாவாலோ ஏற்படவில்லை! அது அவளைப் பார்க்க வந்த மனிதர்களின் வார்த்தைகளிலிருந்தும், அவர்களின் எதிர்மறையான அதிர்வுகளிலிருந்தும் (Negative vibes) பரவிய தொற்று என்பதை உணர்ந்து கொண்டேன்.
தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்குத் முன் மாதிரியாக இருந்து, உணவளித்து கம்பீரமாக வாழ்ந்த ஒரு பெண்ணால், பிறரின் இரக்கத்தையும், “நீ இனி அவ்வளவுதான்” என்கிற அவநம்பிக்கையான வார்த்தைகளையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தைகள் அவரது மூளையைக் காட்டிலும் மனதை ஆழமாகக் காயப்படுத்தியிருந்தன. மனிதர்களின் எதிர்மறை பேச்சுக்கள் அவரது உடல் நலத்தையும் மன நலத்தையும் சிதைத்து, அவரைப் பைத்தியமாக மாற்றிக் கொண்டிருந்தன.
அடுத்த நாள் முதல் நான் ஒரு முடிவு எடுத்தேன்.
அம்மாவை மீண்டும் தனிமைப்படுத்தினேன்.
இந்த முறை கிருமிகளிடமிருந்து அல்ல. எதிர்மறை மனிதர்களிடமிருந்து. வீட்டிற்கு வரும் வருகையாளர்களை மிகவும் கட்டுப்படுத்தினேன். தேவையானவர்களுக்கு மட்டும் அனுமதி.
அதுவும் நேர்மறையான மனநிலையுடன் இருப்பவர்களுக்கு மட்டும்… அம்மாவை அன்பாலும் நேர்மறை ஆற்றலாலும் (Positive energy) நிரப்பினேன். அடுத்து, பேச்சுப் பயிற்சி (Speech therapy) தொடங்கியது. “அம்மா… உன்னால பேச முடியும். நீ எத்தனையோ பேருக்கு வழிகாட்டியவள்” என்று அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு தினமும் நம்பிக்கையூட்டினோம். மெல்ல மெல்ல அவரது உதடுகள் ஒலிகளை எழுப்பப் பழகின. முதலில் ஒரு சில எழுத்துக்கள், பின்னர் வார்த்தைகள், சில மாதங்களில் அவரது சொந்தக் குரல் மெலிதாகத் திரும்பியது. மூக்குக் குழாய் அகற்றப்பட்டு, அவராகவே உணவை எடுத்துண்ணத் தொடங்கினார்.
அம்மாவின் முகத்தில் மீண்டும் அந்தப் பழைய புன்னகையும், கண்களில் கம்பீரமும் லேசாக எட்டிப்பார்த்த அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
இந்த நீண்ட போராட்டத்திலிருந்து, ‘மனித வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான தொற்றுகள் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் வருவதில்லை. எதிர்மறை மனங்கள், விஷமான உரையாடல்கள், நம்பிக்கையற்ற எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்துதான் வருகின்றன. காயமடைந்த உடலை மருந்து குணப்படுத்தும்; ஆனால் காயமடைந்த மனதை குணப்படுத்த அன்பும், பொறுமையும், நேர்மறை சொற்களும் மட்டுமே அதுக்கு உண்மையான மருந்து’ என்ற மாபெரும் உண்மையை நாங்கள் புரிந்துகொண்டோம்.
*


