எழுதாத பேனாக்கள் தொலைவதில்லை
என். நாகராஜன்
“கடந்த ஆறு மாசமா முகநூல் ட்விட்டர்னு அலைஞ்சு தேடி எங்க எல்லாரையும் கண்டுபிடிச்சு இந்த விழாவுக்கு ஏற்பாடு பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் நர்மதா…” முன்னாள் மாணவர்களுக்கான விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நர்மதாவை அனைவரும் பாராட்டினார்கள்.
”நா ஒன்னும் பெரிசா செஞ்சிடலே… ஜஸ்ட் எல்லாரையும் தொடர்ச்சியா மெயில்ல காண்டேக்ட் பண்ணிட்டே இருந்தேன்… அவ்வளவுதான்” அடக்கத்துடன் புன்னகையோடு சொன்னாள் நர்மதா.
“நோ நோ, இந்த பதினைஞ்சு வருஷத்தில நம்ம க்ளாஸ்மேட்ஸ் எங்கெங்கியோ செட்டிலாயிருப்பாங்க… அவங்களைக் கண்டுபிடிக்கறது அவ்வளவு சுலபமில்லேன்னு எங்களுக்குத் தெரியும்… ஆமா, எல்லாரும் வர்றாங்களா…?”
ஒரு தோழி, ”எல்லாரும் இங்கியே இருக்கறவங்கதானே… அதனால அநேகமா எல்லாருமே வருவாங்கன்னு நெனைக்கிறேன்… என்ன நர்மதா, நா சொல்றது சரிதானே…” என்றாள்.
“நீ சொன்னது சரிதான்… ஆனா நம்ம சிவரஞ்சனி மட்டும் டெல்லிலிருந்து வர்றா…”
“யு மீன் தியாகராஜனோட…”
“ஸாரி, அதெல்லாம் முடிஞ்சுபோன கதை. அதைப்பத்தி இப்போ பேசவேண்டாம்…” என்று தடுத்தாள் நர்மதா.
சிவரஞ்சனி தியாகராஜன் காதல் கல்லூரியில் அரசல்புரசலாகத் தெரிந்திருந்தது. படிப்பு முடித்துப் போகும்போது பலவிதக் கனவுகளுடன் இருவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். ஆனால் அங்கு சிவரஞ்சனிக்கு நேர்ந்த பேரிழப்பு அனைத்தையும் புரட்டிப்போட்டது. அவளின் நெருங்கிய தோழியான நர்மதாவுக்கு மட்டுமே சில விஷயங்கள் தெரிந்திருந்தன.
வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தின் மேடையில் அவர்கள் படித்த வருடங்களைக் குறிப்பிட்டு ’பிரிந்திருந்தவர்கள் ஒன்றாகக் கூடும் நாள்’ என்ற ஜிகினா எழுத்துகள் பிரகாசமாக மிளிர்ந்தன.
”ஸ்டேஜ் டிசைன் சூப்பரா இருக்குடி…” நர்மதாவைப் பாராட்டினார்கள்.
“காலேஜ்லியே அவதானே எல்லா விழாவுக்கும் டெகரேஷனுக்கு ஐடியா தருவா…”
”சரி சரி, புகழ்ந்தது போதும்…” என்ற நர்மதா, அனைவரையும் அவரவர்க்கென்று ஏற்பாடு செய்திருக்கும் அறைக்குச் சென்று தயாராகி காலை உணவை முடித்துவிட்டுச் சரியாக பத்து மணிக்கு விழாவுக்கு வந்துவிட வேண்டினாள். அனைவரும் பேசிக்கொண்டே கலைந்தனர். பதினைந்து வருடங்கள் கழித்து சந்திப்பதால் சில பேரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.
“டேய் நீயா…? ஆளே அடையாளம் தெரியலடா…”
“ஆமாண்டா ரொம்ப வெய்ட் போட்டுட்டேன்… எல்லாம் நம்ம அம்மாவின் சமையல்தான்…” என்று மனைவியைக் கைகாட்ட அந்தப்பெண் வெட்கத்தில் நெளிந்தாள். பரஸ்பரம் அறிமுகம் முடிவதற்குள் அடுத்த நண்பனைப் பார்த்ததும், ‘எக்ஸ்கியூஸ் மி…’ என்றபடி புதிதாக வந்து சேர்ந்தவனிடம், “ஹலோ சௌக்கியமா…?” என்று விசாரிப்புகள் தொடர்ந்தது.
நர்மதா அடுத்து தான் செய்யவேண்டிய வேலைகள் நினைவுக்கு வர, மணியைப் பார்த்தவள் ’ஓ மை காட்’ என்றபடி அவசரமாக ஓடினாள். மதிய உணவுக்கான கட்டண விவரத்தில் சில சந்தேகங்கள் இருந்ததால் விடுதி மேலாளாரிடம் கேட்கச் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மி… அஞ்சு வயசுக்குக் கீழே கட்டணம் கிடையாதுன்னுட்டு இப்ப பாதி ரேட் போட்டிருக்கீங்க… அதே மாதிரி ஃபைவ் டு ட்வெல்வ் இயர்ஸ் குழந்தைகளுக்கு பாதி ரேட்டுன்னுட்டு ஃபுல் ரேட் போட்டிருக்கீங்க…”
“ஸாரி மேடம், நான் நேத்து லீவ்… புதுசா வந்தவர் மிஸ்டேக் பண்ணிட்டார்… நான் சரி பண்ணிடறேன்…” என்றார்.
”நிகழ்ச்சி நடத்தற ஹால்கூட ஃப்ரீனு சொன்னீங்க… இப்ப சார்ஜ் பண்ணியிருக்கீங்க…”
“டோண்ட் ஒரி மேடம், நா ப்ராமிஸ் பண்ணினதுபடி உங்களுக்கு செஞ்சு தரேன்…”
“கடைசி நேரத்தில மெனுல எதும் சொதப்பிர மாட்டீங்களே…” என்று கேட்டதற்கும் இல்லையென்ற பாவனையில் மேலாளர் தலையாட்ட விடைபெற்றுக்கொண்டாள். நெற்றியில் சுருக்கத்துடன் தான் அடுத்து செய்ய வேண்டியதென்ன என யோசித்துக்கொண்டே நடந்தவளின் தோளை யாரோ பின்னாலிருந்து தொட்டார்கள். திரும்பியவள் முகம் மலர்ந்தாள்.
”ஹேய் சிவரஞ்சனி நீயா?… இப்பதான் நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாம் உன்னைப்பத்தி விசாரிச்சாங்க…” வறண்ட புன்னகையுடன் தலையசைத்தாள் சிவரஞ்சனி.
”நீ வருவேன்னு எனக்கு நம்பிக்கையே இல்லடி… நான் அனுப்பிச்ச எதுக்கும் நீ பதிலே போடலையா… ஸோ வரமாட்டேன்னு நினைச்சேன்…”
”என் நிலைமை என்னிக்குமே இப்படித்தான்…கடைசிவரை இழுத்தடிக்கும், முடிவு தெரிய…” என்றவளைப் புரிந்து கொண்ட நர்மதா ஆதரவாக அவளை அணைத்தாள். சில வினாடிகள் மௌனம். கடந்து சென்ற ஓரிருவர் ஹாய் என கையசைத்தபடியே சென்றார்கள். சிவரஞ்சனியின் மகள் அம்மா என அழைக்கவே அணைப்பிலிருந்து விலகிய நர்மதா, ”ஆமா, அவர் வர்லியா” என்று கேட்டாள். கணவனுக்கு திடீரென அவன் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு திடீர் வேலை வந்துவிடவே வரமுடியவில்லை எனச் சொன்னாள். குழந்தை தன்னையே பார்ப்பதைக் கண்டு சிரித்தவள், “ஹாய் குட்டி உன் பேரென்ன…எத்தனாவது படிக்கிறே…? என்று கேட்டாள்.
”தியா…ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட்”
அந்தப் பெயரைக் கேட்டதும் சிவரஞ்சனியை ’நீ முக்கியமா வந்தது தியாகுவைப் பார்க்கத்தானே…?’ என்பதுபோல் ஓரக்கண்ணால் பார்த்தாள். சிவரஞ்சனியின் கண்களில் ஒருவிதக் குறுகுறுப்பு தெரிந்தது.
கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சிவரஞ்சனிக்கு முதன்முதலாக தியாகராஜனுடன் பேச நேரிட்டது. செய்முறைப் பருவத்தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவளுடைய ரெக்கார்ட் நோட் தொலைந்துவிட்டது. விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தவளை அவளுடைய தோழிகள் என்ன சொல்லியும் தேற்றமுடியவில்லை. அப்போதுதான் ஒருத்தி அந்த யோசனையைச் சொன்னாள். ”ஏய் நம்ம தியாகுகிட்ட கேட்டம்னா ஏதாவது ஐடியா குடுப்பான்…”
அவனைச் சந்தித்து அவளின் நிலைமையைச் சொல்லும்போதும் அவளின் அழுகை நிற்கவில்லை. ”ஹலோ அழாதிங்க, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை…” என்று ஆறுதல் சொன்னான். “இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம்… காலேஜ் ஸ்டேஷனரில கேட்டா ரெக்கார்ட் நோட் ஸ்டாக் இல்லேன்னுட்டாங்க… எப்ப நோட்டு வாங்கி அத்தனை எக்ஸ்ப்ரிமெண்ட்ஸும் எழுதி முடிக்கறதுன்னு தெரிலை…” அழுகையை அடக்க கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டாள். ”இதெல்லாம் வேற மாதிரி ட்ரீட் பண்ணனுங்க…ஒரு டு அவர்ஸ் டைம் குடுங்க, நோட்புக்கோட வர்றேன்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். கல்லூரி புத்தக அங்காடிக்குச் சென்று அவனுக்குத் தெரிந்த சிப்பந்தியிடம் யோசனை கேட்க அவன் நகரில் கல்லூரிக்கு வினியோகிக்கும் கடையின் பெயரைச் சொல்லி அங்கு முயற்சிக்கச் சொன்னான். அங்கு சென்று தன் செல்வாக்கு அனைத்தையும் உபயோகப்படுத்தி நோட்டை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான்.
ரெக்கார்ட் நோட்டுடன் வந்தவனை ஆச்சரியமும் பரவசமுமாகப் பார்த்தாள் சிவரஞ்சனி. இரண்டு நாட்களில் அத்தனைப் பரிசோதனைகளையும் எழுதித் தேர்வுக்கும் தயாராகவேண்டுமென எண்ணியபோது மலைப்பாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டவன், “ஒண்ணும் கவலைப்படாதீங்க… எனக்கு எக்ஸாம் அடுத்த வாரந்தான்… படங்கள்லாம் நா போட்டுத் தந்துர்றேன்… எழுதறது மட்டும் நீங்க பண்ணா போதும்… ஏன்னா ஹேண்ட்ரைட்டிங் மாறும்… அதுவரைக்கும் எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ணிக்குங்க…” கண்கள் பனிக்க நன்றி சொன்னாள்.
அதன் தொடர்ச்சியாக ஓரிரு முறை பேசிப்பழக அதுவே நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது அவளை அவன் லூஸு என்றழைத்ததை இப்போது நினைத்தாலும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிவரஞ்சனி எல்லாவற்றிலும் சரியாக இருந்தாலும் நேரம் தவறாமையில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கமாட்டாள். அவனைக் காத்திருக்க வைக்க வேண்டுமென்பது அவளது நோக்கமில்லை; இயல்பாகவே அப்படித்தான். சில சமயங்களில் வரவே மாட்டாள். முன்கூட்டியே சொல்லவும் மாட்டாள். காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புவான் தியாகராஜன். நர்மதாவிடம், “என் ஆளு லூஸை எங்காவது பாத்தீங்களா?” என்று கேட்பான். நர்மதா அவளிடம் சென்று, “டீ, உன்னை உன் ஆளு லூஸுன்னு சொல்றாண்டி….” என்று சொல்லி சிரிப்பாள். மறுநாள் கோபத்துடன் அவனிடம் சென்று “நானொன்னும் லூஸு இல்லை…” என்றாள்.
“சரி, சரி… நீ லூஸு இல்லே… சாணைதான்…”
வழக்கமாக அவள் எப்போதெல்லாம் அவனுடன் மாறுபடுகிறாளோ அவன் தன் கோபத்தை மௌனத்தில் காண்பிப்பான். சில மணி நேரம் பேசமாட்டான். அவள் கெஞ்சுவாள்; அழுவாள். இறுதியில் மனமிளகி, ’சரி விடு லூஸு’ என்பான். ’ஆமாம் தியாகு… நீ சொன்ன மாதிரி நா லூஸுதான்… இல்லேன்னா உன்னை இப்பிடி மிஸ் பண்ணியிருப்பேனா…?’ மனதில் ஏற்பட்ட படபடப்பை நீக்க நெஞ்சைத் தடவிக்கொண்டாள்.
ஒரு நாள் திடீரென்று தியாகராஜன் அவளிடம் படத்துக்குப் போகலாமா எனக் கேட்டான்.
“ஐயோ, நா மாட்டேம்பா… யாராவது பாத்துட்டாங்கன்னா அவ்வளவுதான்…” என்று பதறினாள்.
“நீ வீட்லருந்து ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கற… நானும் அப்படித்தான்… இதுல யார் வந்து பாக்கப்போறாங்க…”
“இருந்தாலும்… “ என மென்று விழுங்கினாள். அவன் மௌனமாக இருந்தான். கோபமா எனக்கேட்டபடி ஆதரவாக அவன் கையைப் பற்றினாள். ”லூஸு இதுக்கெல்லாமா கோபிப்பாங்க… சரி, ஓட்டலுக்காவது ஒன்னா சாப்பிடப்போலாமா?” அவள் சரியெனத் தலையை ஆட்டினாள்.
எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது, அவளும் அவனும் கல்லூரி முடித்து அவரவர் ஊருக்குச் சென்று சேரும்வரை…
இருவரும் பிரளயமே வந்தாலும் நம்மைப் பிரிக்க முடியாது என நிறைய சத்தியம் செய்துகொண்டனர். சிவரஞ்சனிக்கு அவள் தந்தை மேல் அசைக்க முடியாத நம்பிக்கை… மூத்த பெண்ணானாலும் முதல் குழந்தையானதால் தங்கையைவிட அவளுக்குத்தான் செல்லம் அதிகம். ஊரில் எல்லாரும் படிப்புக்காக அவ்வளவு தூரம் அனுப்பக்கூடாது என எதிர்த்தபோது அவள் தந்தை ஆதரவு தெரிவித்து அனுப்பிவைத்தார். எனவே தன்னுடைய காதலுக்கு மறுப்பேதும் சொல்லமாட்டார் என திடமாக நம்பினாள். ஆனால், வீட்டுக்குச் சென்றபோது அவள் தந்தையின் உயிரற்ற உடல்தான் அவளை வரவேற்றது. நொறுங்கிப்போனாள்; அம்மாவும் தங்கையும் அவளைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். அவளுக்கு அழுகைகூட வர மறுத்தது. யாரிடமும் எதுவும் பேசக்கூட இல்லை.
இரண்டு மாதங்கள் கழித்து சிவரஞ்சனியின் தாய்மாமன் அவள் தாயிடம், “அக்கா, சாவு விழுந்த வீட்ல உடனே ஒரு நல்ல காரியம் நடக்கணும்னு எல்லாரும் சொல்றாங்க… அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம சிவரஞ்சனிக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு…” என்றான்.
“உன் இஷ்டப்படியே செய்டா…அவரில்லாம நிர்க்கதியா இருக்கிற எங்களுக்கு நீதான் அவர் ஸ்தானத்திலிருந்து எல்லாம் செய்யணும்…” என்று விசித்தாள். சிவரஞ்சனிக்குத் தன் காதலை சொல்லக்கூடத் தோன்றவில்லை. ஒரே ஒரு கடிதம் மட்டும் எழுதி தியாகராஜனுக்கு அனுப்பிவிட்டு மணவறையில் உட்கார்ந்தாள்…
”சரி ரஞ்சனி, நாம அப்புறம் பேசலாம். ரூமுக்குப் போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடு…” என்று நர்மதா சொன்னபோது, “தியாகு வர்லயா…?” என்று கேட்டாள். அவள் கண்களில் ஒருவிதமான பரிதவிப்புத் தெரிந்தது. ”கவலைப்படாதே, கட்டாயம் ஒய்ஃப் குழந்தையோட வர்றேன்னு மெஸேஜ் குடுத்திருக்கான்…“ அதைக் கேட்டதும் முகத்தில் ஒருவித சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. ’யாரைத் தன் வாழ்நாளில் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று தவித்தாளோ, இதோ அவனைக் கொஞ்ச நேரத்தில் பார்க்கப்போகிறோம்…’ என எண்ணியபடியே தியாவை அழைத்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தாள். மனதில் கூடவே அவனைச் சந்திக்கும்போது அவனுடைய வினையாற்றல் எப்படியிருக்குமோ என்றெண்ணும்போது சற்றுக் கலக்கமாகவும் பயமாகவும் இருந்தது. ‘தியாகு என்னை மன்னிப்பாயா…?’ எனத் தனக்குத்தானே முணுமுணுத்தாள்.
தியாகராஜன் வந்து சேர்ந்ததும் அந்த இடமே கலகலப்பானது. அங்கிருந்தவர்களின் கல்லூரி பட்டப்பெயர்களை நினைவூட்டினான்; ஒவ்வொருவர் செய்த குறும்புகளைச் சொல்லிக் குஷிப்படுத்தினான்.
“எப்பிடிடா இன்னும் இதெல்லாம் ஞாபகத்தில் வச்சிருக்கே, ஆச்சரியமா இருக்கு… இப்பத்தாண்டா பதினைஞ்சு வருஷத்துக்கு முந்தி இருந்த ஃபீலிங் வருது…” ஒருவன் சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.
“தேங்ஸ்… பை தி பை, இவங்க என் ஒய்ஃப் கலையரசி, இவ என் பொண்ணு மித்ரா…” எல்லாருக்கும் அறிமுகம் செய்தான். அனைவரும் பரஸ்பரம் அறிமுகமானார்கள். இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சிவரஞ்சனி. தானும் அருகில் செல்லலாமா என யோசித்தாள். ’அவன் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால்…’ தன் எண்ணத்தைக் கைவிட்டாள். இருந்தபோதிலும் தியாகராஜனையும் அவன் மனைவியையும் குழந்தையையுமே பார்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரியில் பார்த்தபோது எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான். அவள் கூட சற்று முதிர்ச்சி அடைந்ததுபோல் தோன்றியது.
நர்மதா அனைவரையும் விழா நடக்கும் இடத்திற்கு வரச்சொல்லி வேண்ட அனைவரும் ஐக்கியமானார்கள். ஒவ்வொருவராக மேடை ஏறித் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் அனுபவத்தைச் சொன்னார்கள்; கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்கள். தியாகராஜன் முறை வந்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது. அவனுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் கை தட்டியது. அவனின் இந்த வசீகரம்தான் அவளை வீழ்த்தியது. பேசும்போது அவன் சிவரஞ்சனியைப் பார்க்கவில்லை. உண்மையாகவே பார்க்கவில்லையா அல்லது தவிர்த்தானா என சிவரஞ்சனிக்குப் புரியவில்லை. அவளுடைய பெயரை நர்மதா அழைத்தபோது தான் உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ‘ப்ளீஸ் வேண்டாம்’ என முகபாவனையைக் காட்டினாள். நர்மதா விடாமல் கையசைத்துக் கூப்பிட, அவளுடைய தோழிகளும் கட்டாயப்படுத்தி மேடைக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் நின்று எதிரே இருந்த கூட்டத்தைப் பார்த்தபோது தியாகராஜன் அங்கில்லை. முகம் பொலிவிழந்தது. ஏதோ பேசிவிட்டு இறங்கி வந்தவள் அவனை சுற்றுமுற்றும் தேடினாள். அவன் தூரத்தில் அவன் வகுப்புத் தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்தபோது மனம் நெருப்பாய் கனன்றது; அவனுடன் கரம் கோர்த்திருந்தால் இந்நேரம் எப்படியிருக்குமென யோசித்தாள்.
“நீ ரொம்ப லக்கிடி… தியாகு மாதிரி ஒருத்தன் கிடைக்கக் கொடுத்து வச்சிரக்கணும்…” தோழிகள் பொறாமையில் அன்று சொன்னது நினைவுக்கு வர, கண்ணோரத்தில் வந்த நீரை சுண்டி எறிந்தாள். தியாவை இறுகக் கட்டிக்கொண்டாள். அப்போது அங்கு வந்த நர்மதா, சிவரஞ்சனியின் வாடிய முகத்தைப் பார்த்ததும், ”நீ இன்னும் தியாகுவைப் பாக்கலியா…? டோண்ட் ஒரி, இப்ப அவனை உன்கிட்ட அனுப்பி வெக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு தியாகராஜன் இருக்குமிடம் நோக்கி நடந்தாள்.
அவனிடம் சென்றவள், “டேய் தியாகு… ரஞ்சனி உன்னைப் பாக்கணும்னே டெல்லிலிருந்து வந்திருக்கா… ஏன் இப்பிடிப் பண்றே?” கடிந்தாள். “இல்ல நர்மதா… இவங்க விடவே மாட்டேன்றாங்க… ஒவ்வொருத்தராதானே பாக்க முடியும்…” என்று சொன்னவனிடம், ”சரி, நீ சீக்கிரம் போ… அவ காத்திட்டிருக்கா…” என்றவள் சிவரஞ்சனியைப் பார்த்துக் கட்டை விரலை உயர்த்தினாள். பின் யாரோ நர்மதாவை அழைக்கவே அங்கு நோக்கிச் சென்றாள்.
அரைமணியாயிற்று. தியாகராஜன் சிவரஞ்சனி இருக்குமிடம் வரவில்லை. வேண்டுமென்றே ஒவ்வொருத்தராக அவனே தேடிச்சென்று பேசுவது போல் தோன்றியது. மதிய உணவின் போதும் எதிரெதிர் மேசைகளில் அமர்ந்திருந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. உணவிற்குப்பின் மீண்டும் அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது தன் மகளிடம் சொல்லி தூது அனுப்பினாள்.
“அங்கிள், சிவரஞ்சனி மம்மி உங்களைக் கூட்டி வரச்சொன்னாங்க…”
“உன் பேரென்ன…?”
“தியா…”
சில வினாடிகள் குழந்தையையே உற்றுப்பார்த்தவன் அவளின் முகவாய்க்கட்டையைப் பிடித்து ’வர்றேன்னு சொல் போ’ என்றான். தியா திரும்பி ஒரே ஓட்டமாக ஓடி வந்து சொன்னாள். ஆனால் அதற்குப் பிறகு அரைமணி ஆகியும் அப்போதும் வரவில்லை. சிவரஞ்சனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது பார்த்து தியாகராஜன் கழிவறைக்குச் செல்வதைக் கவனித்தவள் அருகில் சென்று காத்திருந்தாள். நட்சத்திர விடுதியின் ஏஸியிலும் அவளுக்கு வியர்த்தது. சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். அப்போது அங்கு வந்த இரு தோழிகள் இங்க என்ன பண்றே என்பதுபோல் பார்த்தார்கள். அவள் வெறுமனே முறுவலித்தாள்.
ஐந்து நிமிடங்களில் வெளியே வந்த தியாகராஜன் அவளுக்கு எதிர்த்திசையில் செல்ல ஆரம்பித்தான். அவளுக்குப் பொறுக்கவில்லை. “தியாகு, தியாகு” என்று அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாகக் கூப்பிட்டாள். ஒரு கணம் நின்றவன் திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான். சிவரஞ்சனி நம்பிக்கையை முழுதும் இழந்தவளாகக் கண்களில் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு தானிருந்த இடத்திற்கு வந்து தன் மகளை அணைத்துக்கொண்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள். ’தான் அவனுக்குக் கொடுத்த வலி, வேதனையை விட இது ஒன்றும் பெரிதில்லை; தனக்கு இந்தத் தண்டனை வேண்டியதுதான்…’ என நினைத்தாள். இருந்தாலும் மனம் பரிதவித்தது. ’ஏண்டி நாயே, இப்பிடி பண்ணே…?’ எனக்கேட்டு முகத்தில் அறைந்திருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டிருப்பாள். இப்படிப் பாராமுகமாகப் போனது அவளை மிகவும் பாடாய்படுத்தியது.
லாபியில் எத்தனை நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாளென்று தெரியாது. ’ஹலோ’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். எதிரில் தியாகராஜனின் மனைவி கலையரசி மகளோடு நின்றிருந்தாள். அதிர்ச்சி உடலோடு ஒட்ட சிவரஞ்சனி பதைபதைப்புடன் எழுந்தாள். ’ஸாரி… நீங்க…’ குரல் குழறியது; நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ”ஈஸி ஈஸி சிவரஞ்சனி…” ஆதரவாக அவளின் தோளைப்பிடித்து அமரவைத்துத் தானும் அமர்ந்தாள். ”குட்டி உன் பேரென்ன தியாவா? நைஸ் நேம்… ’தியா’ ன்னா தியானம், தியாகம்னு சொல்லலாம்…” என்றவள் சிவரஞ்சனியைப் பார்த்தாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் எனப் புரியாமல் விழித்தாள். கலையரசி குழந்தைகள் இருவரையும் விளையாட அனுப்பினாள்.
பின் சிவரஞ்சனியிடம், “எல்லாம் எனக்குத் தெரியும்” என்றாள்.
“என்னை மன்னிச்சிடுங்க…”
“மன்னிப்பு எதுக்குங்க… நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்… இப்படி ஒரு ஜெம்மை எனக்கு விட்டுக் கொடுத்ததுக்காக…”
சிவரஞ்சனி என்ன சொல்வதெனத் தெரியாமல் மௌனமானாள். அப்போது அவர்களைக் கடந்து சென்ற தோழிகள், ”கார்னிவெல் கேம் ஸ்டார்ட் ஆகப்போகுது, வரலையா…?” என்று கேட்டார்கள். ’நீங்க முன்னாடி போங்க, நாங்க வர்றோம்…’ எனப் பதிலிறுத்தாள். சற்று நேரம் இருவருக்கிடையே அமைதி. இறுதியில் கலையரசியே அதைக் கலைத்தாள்.
“உங்களைப் பத்தி எந்தத் தகவலும் தெரியாம அவர் பித்துப் பிடிச்ச மாதிரி இருந்தார். நர்மதாதான் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியப்படுத்தினாள். கேட்டதும் உடைஞ்சு போய்ட்டார்…”
சிவரஞ்சனி, “லெட்டர் போட்டிருந்தேனே… அவர் பதிலே போடலை….” சொல்லும்போது குரல் நடுங்கியது.
“அந்த லெட்டரை அவர் பார்க்கவே இல்லை; இன்னும் அப்படியே ஓபென் பண்ணாம இருக்குது…” இதைக்கேட்ட சிவரஞ்சனி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்..
“அவர் எனக்கு அத்தை பையன்; அவர் நிலையைப் பார்த்து என் அத்தைதான் எங்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டாங்க… ஸோ நான் அவர்ட்டையே உங்க கடந்த காலத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நீங்க சரின்னா நா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு” சொன்னேன். சிவரஞ்சனி மௌனமாக விரல்களால் சேலைத்தலைப்பைக் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள்.
“கல்யாணத்துக்கப்புறம் அவருடைய ஷெல்ஃபில எதையோ தேடினப்ப ஒரு லெட்டர் கிடைச்சது. அனுப்புநர் முகவரில உங்க பேர். அவர்ட்ட காட்டி ஏன் இதைப் பிரிக்கவே இல்லே”ன்னேன். அவர் ,”கல்யாணமே ஆய்டுச்சு; ஏதோ சாக்கு போக்குச் சொல்லிருப்பா… அதைத் தெரிஞ்சுட்டு நா என்ன பண்ணப்போறேன்னு பிரிக்கலே… ஆமா, அதை எதுக்கு இன்னும் வச்சுட்டு… கிழிச்சுப்போடு” என்றார். என்னமோ தெரிலே… எனக்கு மனசு வரலே… அப்படியே பத்திரப்படுத்தி வச்சிட்டேன்…” கலையரசி சொன்னபோது நர்மதாவின் முகம் வெளுத்துப்போனது.
”ஹஸ்பெண்ட் கூட முன்னாடி பழகுனவங்கன்னு தெரிஞ்சாலே எல்லா மனைவிகளும் எரிச்சலோட பார்ப்பாங்க … நீங்க வித்தியாசமா இருக்கீங்க…”
“நாட்ல ஆல்மோஸ்ட் எல்லாருமே காதலிக்கறாங்க… சில பேர் டைம்பாஸ் காதல்; சிலருக்கு இன்ஃபேக்சுவேஷன்; இதையெல்லாம் விட்டுட்டுப் பாத்தம்னா கொஞ்ச பேர் உண்மையாவே காதலிச்சிருப்பாங்க… ஆனா இதிலும் சிலர் சந்தர்ப்பவசத்தால கல்யாணம் பண்ணிக்காம பிரிஞ்சிடுறாங்க… உங்க கேஸில என்ன நடந்ததன்னு எனக்குத் தெரியாட்டியும் எதுக்காகவோ யாருக்காகவோ நீங்க தியாகம் பண்ணியிருக்கலாம்னுதான் என் உள்ளுணர்வு சொல்லுது…” சிவரஞ்சனி நன்றிப் பெருக்குடன் கை கூப்பினாள். அவள் மனம் நிம்மதி அடைந்திருப்பதை உணர்ந்தாள் கலையரசி.
குழந்தைகள் இருவரும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர். மித்ரா தியாவிடம், “உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?” என்று கேட்டாள்.
“எங்கம்மா விளையாடவே விடமாட்டாங்க… எப்பவும் படிச்சுட்டே இருக்கணும்…” அவள் குரலில் தெரிந்த வருத்தத்தைக் கவனித்த மித்ரா, “கவலைப்படாதே, நா உன் மம்மிகிட்ட சொல்றேன்…” என்றாள்.
“மம்மி, தியாவுடைய அம்மா அவளை விளையாடவே விடமாட்டேங்கிறாங்களாம்… நீங்க கொஞ்சம் சொல்லுங்க…”
மித்ராவை வாரியணைத்து முத்தமிட்டாள் சிவரஞ்சனி. அவளுக்கு அதில் ஒருவித ஆறுதல் உண்டாயிற்று. “ஏன் குட்டி, நீ சொன்னா நா கேக்கமாட்டனா… எதுக்கு அம்மாகிட்ட சிபாரிசு பண்றே…”
கலையரசி புன்னகைத்தாள். “ஆமா, நீங்க எப்ப புறப்படணும்…”
“நைட் பத்து மணிக்கு ஃப்ளைட்…”
”ஓ, இன்னும் கொஞ்ச நேரந்தான் இருக்கு… ஆமா, தியாகுகிட்டப் பேசினீங்களா..?”
”எவ்வளவோ முயற்சி பண்ணேன்… பாக்கக்கூட விருப்பமில்லையாட்ட தோணுது… இன்னும் என் மேல அவருக்குக் கோபம் தீரலேன்னு நினைக்கிறேன்… ஒருவேளை என் லெட்டரைப் படிச்சிருந்தா மன்னிச்சிருப்பாரோ என்னவோ…?” விசும்பினாள்.
“என்னங்க…” தூரத்தில் நின்றிருந்த தியாகராஜனை சத்தம் போட்டுக்கூப்பிட்டாள் கலையரசி. திரும்பிப் பார்த்தவன் என்னவென்று சைகையாலேயே கேட்டான்.
“இங்க ஒரு நிமிஷம் வாங்க…”
அவன் ஆர்வம் காட்டாமல் இருந்தான். அவள் உடனே குழந்தைகள் இருவரையும் அழைத்து ’ரெண்டு பேரும் போய் அவரைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டு வர்றீங்க’ என உசுப்பிவிட்டாள். குழந்தைகள் இருவரும் ஓடிச்சென்று ஆளுக்கொரு கையைப்பிடித்தபடி இழுத்தார்கள். மித்ரா, “வாங்கப்பா…” என்றாள். தியா, “ப்ளீஸ், வாங்க அங்கிள்…” என்று கெஞ்சினாள். மறுக்க முடியாமல் மெதுவே அவர்களிருக்குமிடம் நோக்கி வந்தான்.
கலையரசியிடம், ”என்ன?” என்றான்.
“ஏங்க எப்பவோ நடந்ததுக்கு இன்னும் வன்மமா இருக்கீங்க… பாவங்க அவங்க… உங்களைப் பாக்கிறதுக்காகவே அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்காங்க… ஒரு ரெண்டு வார்த்தையாவது ஆறுதலாப் பேசுங்க…”
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சிவரஞ்சனியின் முகத்தை நேருக்கு நேர் அப்போதுதான் பார்த்தான். அவள் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள். மயங்கி விழுந்துவிடுவாள் போலிருந்தது. அவன் பேசினான்.
“லூஸு எப்பிடியிருக்கே…?”
*


