VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ஜப்பானிய ஹைக்கு 
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > ஜப்பானிய ஹைக்கு 
கட்டுரைகள்

ஜப்பானிய ஹைக்கு 

ச. கமலக்கண்ணன்
Last updated: May 24, 2026 4:37 pm
By
ச. கமலக்கண்ணன்
Published: July 18, 2025
5 Views
Share
11 Min Read
ஹைக்கூ
ஹைக்கூ
SHARE

ஹொக்கு(Hokku). இதுதான் ஹைக்கு(Haiku) என்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புலவர் மஸாவொகா ஷிகி (Masaoka Shiki) அவர்களால் பெயரிட்டப்பட்ட பாவகையின் மூலப்பெயர். கி.பி 1356இல் புலவர் நிஜோ யொஷிமொதோ (Nijou Yoshimoto) என்பவர் ரெங்கா (Renga ரென் – தொடர், கா – கவிதை) எனும் தொடர்கவிதை வடிவத்தை உருவாக்கினார். ஒரு கவிதையின் ஒவ்வொரு கண்ணியையும் ஒவ்வொரு கவிஞர் எழுதும் முறை இது. அந்தாதி போல முதல் கண்ணி முடியும் சீரை வைத்து அடுத்த கண்ணி தொடங்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருள் தொடர்ச்சி இருந்தால் போதும். நம் கலிப்பாவில் தரவு, தாழிசை, சுரிதகம் என்று இருப்பதுபோல இந்த ரெங்காவிலும் ஹொக்கு(Hokku), வகி(Waki), தாய்சான்(Daisan), அகேகு(Ageku), கோக்யோ(Kougyou) என அடுக்கப்பட்டிருக்கும்.

நமது சங்கப்பலகை போல ரெங்கா கூடல்களும் அக்காலத்தில் நடைபெற்றுள்ளன. பல கவிஞர்கள் சேர்ந்து ஆளுக்கொரு கண்ணியாக இயற்றியிருக்கிறார்கள். முதலில் நிஜோ அவர்கள் தொகுத்தது ஏற்கனவே இயற்றப்பட்ட பாடல்களைத்தான். பின்னர் காலப்போக்கில் விருந்துகளிலும் ஒன்றுகூடல்களிலும் விளையாட்டாகவும் போட்டியாகவும் அரங்குகளில் உடனடி ரெங்கா இயற்றும் முறை தொடங்கியது. 

முதல் கண்ணியான ஹொக்குவைச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் 5-7-5 என்ற சீர்க்கணக்கில் மூன்றடிக் கண்ணியாக இயற்றுவார். இதிலேயே பாடுபொருள் வெளிப்படுத்தப்பட்டுவிடும். இரண்டாவது கண்ணியான வகியை நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தவர் 7-7 என்ற ஈரடிக் கண்ணியாக இயற்றுவார். இவ்விருவர்க்கு அடுத்து வயதில் மூத்தவர் தாய்சான் எனப்படும் மூன்றாம் கண்ணியை மீண்டும் 5-7-5 என்ற சீர்க்கணக்கில் இயற்றுவார். அடுத்து வரும் அகேகுவும் கோக்யோவும் இதே சீர்க்கணக்கில்தான் அமையும். 

ஹொக்கு, வகி, தாய்சான் ஆகியவை ஒரு ரெங்காவுக்கு ஒன்று மட்டுமே பயின்றுவரும். அகேகு மட்டும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை அமையும். பாடலின் நீளத்தைத் தீர்மானிப்பது இவற்றின் எண்ணிக்கைதான். இந்த அகேகுவின் இறுதிச்சீரானது அடுத்த கவிஞர் அடுத்த கண்ணியை இயற்றுவதற்கு ஏதுவாக இறந்தகால வினையெச்சமாக இருக்கவேண்டும். இதுவும் சீர்க்கணக்கும் மட்டுமே இப்பாவகையின் இலக்கணங்கள். கோக்யோ இறுதிக் கண்ணியாதலால் இதுவும் ஒன்று மட்டுமே வரும். தொடர்கவிதையை முடித்துவைக்கவேண்டும் என்பதால் இந்தக் கோக்யோவை இயற்றுவதுதான் மிகவும் கடினம் என்பார்கள்.

இப்பாவகை 14ஆம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத்தில் இடம்பெற்றாலும் கி.பி 6ஆம் நூற்றாண்டிலேயே ஹொக்குவையும் வகியையும் உள்ளடக்கிய தான்கா(Tanka) வகைப்பாடல்கள் 5-7-5-7-7 என்ற ஐந்தடிக் கண்ணிகளாக இயற்றப்பட்டு வந்தன. மான்யோஷு (Manyoushu பத்தாயிரம் ஏடுகளின் தொகுப்பு), ஹ்யாக்குநின் இஷ்ஷு (Hyakunin Isshu நூறு புலவர்கள் நூறு பாக்கள்) ஆகிய முற்கால இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தான்காதான் இதுவரை இயற்றப்பட்ட மிகச்சிறிய ரெங்கா ஆகும். ரெங்கா கூடல்களுக்குச் சுவைகூட்ட வேண்டிப் பல புதுமைகளும் இதில் புகுத்தப்பட்டன. உதாரணமாக ஜப்பானிய அரிச்சுவடியின் 46 எழுத்துக்களில் தொடங்கும் 46 கண்ணிகளைக் கொண்ட ரெங்கா இயற்றும் முறையைக் கூறலாம். மிகப்பெரியதாக நூறு கண்ணிகளைக் கொண்ட ரெங்காக்கள் வரை இயற்றப்பட்டிருக்கின்றன.

இந்த ரெங்கா விளையாட்டின் பக்கவிளைவாக இன்னொரு விபரீதமும் நடந்தது. ஏற்கனவே இலக்கியங்களில் இருக்கும் ஏதோவொரு அடியை முதலடியாகக்கொண்டு அடுத்த அடியை இவர்கள் எழுதுவது. திருக்குறளில் இருக்கும் முதல் அடியை எடுத்துக்கொண்டு இரண்டாம் அடியை நாமே எழுதுவது போன்றது. இந்த அளவில் ஆபத்து ஏதுமில்லைதான். ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தை அள்ளி இறைத்திருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. உதாரணமாக “பனிக்காலத்தில் உடையின் விளிம்பு சற்றே நனைந்துள்ளது” என்ற புகழ்பெற்ற முதலடியை எடுத்துக்கொண்டு “இளவரசி சாஹோ நின்றுகொண்டே சிறுநீர் கழித்ததால்” என்று முடித்திருக்கிறார்கள். 15ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் பாராட்டப்பட்டிருக்கும் யமாசாகி சோகான் (Yamazaki Soukan) என்பவரே இப்படி எழுதியிருப்பதுதான் வேதனை. இவரது கவிதைகளைத் தொகுத்தவராவது இதுபோன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். ஒருவேளை அவருக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா அல்லது இதுவும் கவிஞர் எழுதியதுதானே, இப்படியும் எழுதுவார் என வரலாற்றில் பதிவாகட்டும் என விட்டுவிட்டாரா எனத் தெரியவில்லை.

இங்கு நாம் நம் சங்கத்தமிழ்ப் பாவகைகள் பல சீர்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்து 5-7-5 என்பதைச் சீர்க்கணக்கு என்கிறோம். ஆனால் ஜப்பானியமொழிப் பாக்களில் இதை அசையாகத்தான் கொள்கிறார்கள். அசைக்கணக்கு என்றுதான் சொல்லவேண்டும். ஐந்தசைசீர் – ஏழசைச்சீர் – ஐந்தசைச்சீர் என மூன்றே மூன்று சீர்களைக் கொண்டதுதான் ஜப்பானிய ஹைக்கு. இச்சீர்களில் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் அல்லது பண்புத்தொகையுடன் சேர்ந்து வேற்றுமை உருபுகளும் அடங்கும்.

ஜப்பானிய ஹைக்கு

 

இந்த ரெங்காவின் முதல் கண்ணியான ஹொக்குதான் பிற்காலத்தில் ஹைக்குவாகப் பிரிந்து வந்தது. சிறப்பு விருந்தினர் பாடுபொருளை வெளிப்படுத்தும் விதமாக இயற்றியதால் அடுத்த பாடல்கள் இல்லாவிடினும் முழுமையான பொருள் தருவதாக இருந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இது ஹொக்கு என்ற பெயரிலேயே தொடர்ந்து வந்தது. இன்றும் ஹைக்குவின் பிதாமகராகக் கொண்டாடப்படும் மட்சுவோ பாஷோ (Matsuo Bashou) இதற்கு ஹைகாய் (Haikai) எனப் பெயரிட்டார். புகழ்பெற்ற “பழையகுளத்தில் தவளை” ஹைக்குவை இயற்றிய கவிஞர் பாஷோ ஹைக்குவின் கடவுளாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

இவர் கவிஞர் என்றாலும்கூட இவரது பயண இலக்கியமான “காலநிலை வெளிப்படுத்திய எலும்புக்கூடு” என்ற நூலும் வாசிப்பாளர்களின் பெருவரவேற்பைப் பெற்றதாகும். இவர் மேற்கு ஜப்பானில் உள்ள மியே (Mie) மாநிலத்தின் இகா உவேனோ (Iga Ueno) என்ற இடத்தில் கி.பி 1644இல் பிறந்தவர். சாமுராய் வம்சத்தில் பிறந்தாலும் போர்கள் குறைந்துகொண்டே வந்த 17ஆம் நூற்றாண்டில் சாமுராய்கள் செல்வாக்கிழந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டிருந்தனர். இவரது தந்தை வேளாண்மை செய்துவந்தாலும் சாமுராய் வம்சம் என்பதால் அதற்குரிய சில சலுகைகளையும் பெற்று வந்தார். இவர் சிறுவயதிலேயே யொஷிததா (Yoshitada) என்பவரிடம் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். யொஷிததாவுக்கு ரெங்கா கவிதைகளின் மீதிருந்த ஆர்வம் பாஷோவுக்கும் தொற்றிக்கொண்டது. 

கி.பி 1665இல் இவரும் யொஷிததாவும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து 100 கண்ணிகள் கொண்ட நீள்ரெங்காவை இயற்றினர். யொஷிததாவின் ஆசிரியர் கியோத்தோவில் வசித்துவந்த கிதாமுரா (Kitamura) இந்நீள்ரெங்காவின் முகப்பு ஹொக்குவை எழுதித் தந்தார். முடிவில் இந்நூறில் 18 கண்ணிகள் பாஷோவினுடையதாக இருந்தன. பாஷோ, யொஷிததா இருவரின் கவிதைகளிலும் கிதாமுராவின் பாதிப்பு அதிகம் இருந்தது. பாஷோவின் வாழ்வின் மிக மகிழ்ச்சியான காலகட்டம் அது. ஆனால் அடுத்த ஆண்டு நிகழ்ந்த யொஷிததாவின் திடீர் மரணம் அந்த மகிழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிகழ்வு அவரைத் தற்கொலைக்கும் தூண்டியது. ஆனால் அவர் பின்பற்றிவந்த ஷிண்டோ (Shinto) மதம் தற்கொலை தவறென்று கூறுவதால் அம்முடிவைக் கைவிட்டார். இருபத்தி இரண்டே வயதான அவரது மீதமுள்ள வாழ்வைக் கவிஞராகக் கழிப்பதா, சாமுராயாக மாறுவதா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தார். பின்னர் சாமுராய் வாழ்வைத் துறந்து கவிஞராக மாறினார். இம்முடிவுக்கான காரணம் வரலாற்றில் எங்குமே காணப்படவில்லை. “எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பம் என் வாழ்வை அமைதியற்றதாக ஆக்குகிறது” என அவரே ஒரு படைப்பில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர. ஷிண்டோ மதக்கோயில் ஒன்றில் இருந்த பெண் துறவி ஒருவரைக் காதலித்ததாகவும் அதனாலேயே கவிதைவாழ்வைத் தேர்ந்தெடுத்தார் என்றும் 1956இல் ஒகாமுரா (Okamura) என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதற்குச் சான்றுகள் எதையும் அவர் தராததால் ஐயம் திரிபற உறுதிப்படுத்த முடியவில்லை.

இவரது கவிதைகளில் வெளிப்பட்ட தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும் சில வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இவர் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்று Gregory M. Pflugfelder (1999) (Cartographies of Desire: Male-Male Sexuality in Japanese Discourse, 1600–1950) என்பவரும் இவரது கவிதைகளில் ஓரினச்சேர்க்கை குறித்து எழுதியிருப்பதெல்லாம் இவரது சொந்த அனுபவங்களே என்று Leupp, Gary P. (1997) (Male Colors: The Construction of Homosexuality in Tokugawa Japan) என்பவரும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். உவேனோவிலிருந்து அப்போதைய தலைநகர் கியோத்தோவுக்கு இடம்பெயர்ந்ததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள். 

கவிஞர்களின் வாழ்வே கவித்துவமாவது என்பது அரிது. இவரது கவிதை வாழ்வுக்கு வளம் சேர்த்தவை இவரது பயணங்களும் சீடர்களுக்கு இவர் எழுதிய கடிதங்களும்தான். இவருக்கு முன் வாழ்ந்த ஜப்பானியக் கவிஞர்கள் மற்றும் சமகாலத்தில் வாழ்ந்த சீனக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளை இவர் சேமித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவரது பயணங்களின்போது அவற்றைத் தன்னுடனேயே கொண்டு சென்றிருக்கிறார். இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர் சாய்க்யோ (Saigyou) என்பவரைத் தன் ஆசிரியராக வரித்துக்கொண்டார். என்றாவது ஒருநாள் சாய்க்யோவின் ஏதாவது ஒரு கவிதை நூலை வாசிக்காவிட்டால் அன்றைக்கு நாக்கில் நெருஞ்சிமுள் குத்தியதுபோல் இருக்கும் என நண்பர்களிடம் அடிக்கடி கூறுவாராம். 

ஒரே இடத்தில் வசிப்பதைவிட இடம்பெயர்ந்துகொண்டே இருப்பதை விரும்பியிருக்கிறார். எனவே ஆடம்பரத்தைச் சுமையாகக் கருதினார். இவருக்கு முன் வாழ்ந்த கவிஞர்கள் தங்களது கவிதைகளை எழுதிய இடங்கள், கவிதைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் ஆகியவற்றை நேரில் சென்று கண்டு அங்கே சிலகாலம் அந்த இடங்களில் தங்கிவிட்டு அடுத்த இடத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வோர் இடத்திலும் இதற்குமுன் அங்கு புனையப்பட்ட கவிதையை நினைவுகூர்ந்து அதற்கு மறுமொழியாகவோ அக்கவிதையுடன் தொடர்புடையதாகவோ அல்லது அக்கவிதையில் வெளிக்கொணரப்படாத அவ்விடத்தின் சிறப்பையோ கவிதைகளாக வடித்திருக்கிறார். 

இவர் பின்பற்றிய ஷிண்டோ மதம் வாழ்வை நேசிக்கவும் சிறு நிகழ்வுகளையும் பொருட்களையும்கூட உன்னிப்பாகக் கவனிக்கவும் கற்றுத் தந்திருந்தது. இவரது கவிதைகள் பெரும்பாலும் புல்லின் நுனி, பறவையின் கண், பூச்சிகள் சிறகுகளைத் தேய்த்துக்கொள்ளுதல் என எளிமையான பாடுபொருட்களையே கொண்டுள்ளன. கவிதைகள் வெளிப்படுத்திய கொடூரமான பார்வைகளையும் மாற்ற முனைந்துள்ளார். இவரது சீடர் ஒருவர் “தட்டாம்பூச்சியின் சிறகுகளை வெட்டிவிட்டால் அது சிவப்பு மிளகைப்போல் காட்சியளிக்கும்” என ஒரு கவிதையில் எழுதியிருந்தார். அவரைக் கடிந்துகொண்டு அதையே “சிவப்பு மிளகுக்குச் சிறகுகள் வைத்தால் அது தட்டாம்பூச்சியைப்போல் காட்சியளிக்கும்” என மாற்றி எழுதினார்.

இவ்வாறெல்லாம் கவிவளர்த்துக் கவிதைக் கடவுள்கள் நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்த கவிஞர்களைக் கொண்டிருந்த ஜப்பான் நாட்டில் இன்று கவிதையின் நிலை என்ன? கவிதையின் பாடுபொருளைத் தீர்மானிப்பது காலம்தான். அந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு எது தேவையோ அதுவே இலக்கியத்தில் வெளிப்படும். போர்களற்ற அமைதியான காலங்களில் காதலும் இயற்கையை விதந்தோதுதலும் முன்னிலை வகிக்கும். போர் முடிந்த காலத்தில் வென்ற நாடுகளில் களிப்பும் தோற்ற நாடுகளில் துயர நிகழ்வுகளும் நம்பிக்கையூட்டல்களும் பாடப்பெறும். 17-18ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்துக்குச் சென்ற ஹைக்குவின் நிலை கி.பி 1868இல் மெய்ஜி (Meiji) பேரரசு காலத்தில் இளைஞர்களிடையே தன் நிலையைத் தொழில்வளர்ச்சியிடம் பறிகொடுக்கத் தொடங்கியது. 

ஜனவரி 3, 1868 ஜப்பானில் மிகப்பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள். 1867 வரை சுமார் 260 ஆண்டுகள் அண்டை அயலார் தொந்தரவின்றிப் பாதுகாப்பாக இருந்த ஜப்பானில் நிலவிய உள்நாட்டுப் பாதுகாப்பு இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோலியது. அச்சுத் தொழிலும் காகித உற்பத்தியும் முறைப்படுத்தப்பட்டு நூலகங்களும் வாசிப்பும் பன்மடங்கு பெருகின. தனிமைப்படுத்துதல் முடிவுற்ற 1868ஆம் ஆண்டில் சுமார் 800 பதிப்பகங்கள் ஜப்பானில் இருந்தன என்ற செய்தி வாசிப்பின் வீச்சை வெளிப்படுத்துகிறது. மேத்யூ சி. பெர்ரி என்ற அமெரிக்க மாலுமியால் ஜப்பானின் எல்லைகள் வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டு உலக நாடுகளுடன் வணிகங்கள் பெருகத் தொடங்கின. நவீனமயமாக்கல் தொடங்கியது. அதன் பக்கவிளைவாக மேற்கத்திய ஆதிக்கம் உணரப்பட்டது. இந்த உணர்விலிருந்து தற்காத்துக்கொள்ள நாட்டுப்பற்றும் அதிகரித்தது. 

எல்லாத் துறைகளும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து தற்காத்துக்கொண்டு ஜப்பானியத் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் அக்கலாச்சாரத்தைப் பின்பற்றி மேலும் சிறப்படையவும் என இருவேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியதில் கவிதையும் விதிவிலக்காக அமையவில்லை. பாடுபொருட்கள் மாறின. வடிவமும் மாறிற்று. நம் புதுக்கவிதை போன்று இலக்கணக் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. இங்கே மேற்கத்தியக் கலாச்சாரம் எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க ஐரோப்பியக் கலாச்சாரங்கள் மட்டுமல்ல. சீன, கொரியக் கலாச்சாரங்களும் ஜப்பானுக்கு மேற்கத்தியவைதான். 1867 வரை முடக்கி வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ மதமும் 1868க்குப் பிறகு வளரத் தொடங்கியது. இக்காலகட்ட உரைநடைகளிலும் கவிதைகளிலும் மேற்கத்தியக் கூறுகளின் கலப்பு சுமார் 75 ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் ஜப்பானிய வரலாற்றின் அடுத்த திருப்புமுனையான இரண்டாம் உலகப்போர் தொடங்கிற்று.

கி.பி. 1945இல் போரின் முடிவில் உருக்குலைந்துபோன ஜப்பானை மீட்டெடுக்கப் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் முனைந்து வழிமுறைகளை வகுக்கத் தொடங்கினர். போரில் தோல்வியடைந்த ஒரு நாடு எப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களையெல்லாம் பெறும் என வரலாற்றில் முதல்முறையாக ஜப்பானியர்கள் உணர்ந்தனர். எதிர்காலம் மீதான நம்பிக்கைகள் சிதைந்தன. மதம் மற்றும் கலாச்சாரங்களின் மீதான குருட்டு நம்பிக்கைகள் தகர்ந்தன. எதையாவது பற்றிக்கொண்டு மேலேறிவிட மாட்டோமா எனத் தவித்தவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கைகொடுக்கவில்லை. பஞ்சம், வறுமை, கறுப்புச் சந்தை, நோய்கள், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் இறப்புகள், பெருகிவரும் போர் அனாதைகள், விலைமாதர்கள், தொழிலாளர் தகராறுகள் எனத் தலைவர்கள் பன்முனைத் தாக்குதல்களைச் சமாளிக்கவேண்டி இருந்தது. 

அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவமும் தொழில் வளர்ச்சியும் அணுகுண்டு வீசிய எதிரிகள் என்ற நிலையை மறக்கச் செய்து ஜப்பானியர்களை ஈர்த்தது. கல்வி உட்பட்ட துறைகளில் மேற்கத்திய நாடுகளில் இருந்த புதுமைகள் ஜப்பானியர்களால் பெரும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்தகாலப் பெருமைகளைவிட நிகழ்காலக் குடியரசின் தேவை இளைஞர்களால் உணரப்பட்டது. இதன் விளைவாக 1947இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது. போர்களற்ற சமுதாயத்தை உருவாக்க அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதிர்காலத்தின் மீதான அச்சத்தைப் போக்கின. நாட்டின் இறையாண்மை மன்னரிடமிருந்து மக்களுக்கு மடைமாற்றப்பட்டபோது இனிமேல் மன்னருக்காகப் போர்களுக்குச் சென்று மடியவேண்டியதில்லை என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதுவரை பாடுபொருள்களாக இருந்த அழிவு, விரக்தி, மரணம், நிலையற்ற தன்மை ஆகியவை மாறி அன்பும் காதலும் நம்பிக்கையும் மேலோங்கத் தொடங்கின.

அதன்பின் 1950களில் ஏற்பட்ட அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சி மக்களிடையே இருந்த இலக்கிய ஈடுபாட்டைக் குறைக்கச் செய்தது. புதுக்கவிதைகளை எழுதுபவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தாலும் மரபுக்கவிதைகளான ஹைக்கு, தான்கா போன்றவற்றை எழுதுபவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குச் சுருங்கினர். ஹொக்குவுக்கு ஹைக்கு என்று பெயரிட்ட மசாஓக்கா ஷிகி (Masaoka Shiki 1867-1902), ஒகிவாரா செய்சென்சுய் (Ogiwara Seisensui 1884-1976), ஓஸாக்கி ஹோசாய் (Ozaki Housai 1885-1926), சந்தோகா தனேதா (Santouka Taneda 1882-1940) ஆகியோர் கடந்த நூற்றாண்டின் ஹைக்குக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவருமே பாஷோவின் சீடப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறலாம். 

காலப்போக்கில் கவிஞர்களின் எண்ணிக்கையும் கவிதையின் அடர்த்தியும் குறைந்து வருவது ஜப்பான் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவானதுதான் என்றாலும் சுருங்கச் சொல்லிப் பொருள்தேடச் செய்யும் ஹைக்கு, அது தோன்றிய ஜப்பானைவிட்டுப் பல நாடுகளில் பல மொழிகளில் பரவியிருப்பது அதன் வடிவத்துக்கும் பொருள்கொள்ளக் கற்பனையை விரியவைக்கும் தன்மைக்கும் கிடைத்த வெற்றியே எனலாம்.

PrevPreviousநிலை மாறும் உலகில்
Nextதாவணி கோவிலில் காவடி சிந்துகள்Next

You Might Also Like

மன அமைதி
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
உரையாடல்கள்
சிட்டுக்குருவியின் சாபம்
அரேபியாவின் ஆபரணம்
TAGGED:articlesessaysகட்டுரைகள்விண்மீன் ஜுலை 2025
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article நிலை மாறும் உலகில் நிலை மாறும் உலகில்
Next Article மலரே மலரே உல்லாசம் தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?