புத்தக அறிக்கை ஆரச்சாலை
சென் பாலன்
-மேகமித்ரா.பா
கதைச் சுருக்கம்:
கார்த்திக் ஆல்டோ என்பவர் சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில், சிறப்புப் பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளராக [DSP] பணியாற்றி வந்தார். அங்குள்ள ஆரச்சாலையில் அடிக்கடி பல விபத்துகள் நடந்து வந்தன. தொடர்ச்சியாக 13 விபத்துகள் நடக்க, அந்த வழக்கை புலனாய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவில் இருந்தார் அவர். பல ஆண்டுகளாக விசாரித்தும் அந்த வழக்கை முடிக்க முடியாததால், அந்த விபத்துகளை நடத்துவது ஏதோ ஓர் அமானுஷ்ய சக்திதான் என்று ஊர் முழுவதும் பேச்சு. சிலர், அங்குள்ள தர்காவை இடித்துவிட்டு கோவில் கட்டினால் விபத்துகள் குறையும் என்று கூறினர். கார்த்திக்கிற்கு பதற்றமும் உண்டாகியது. ஒரு பக்கம் மத ரீதியான கருத்துக்கள், மறுபக்கம் பேயின் வேலை என்கிற பேச்சு, இன்னொரு பக்கம் வணிகர்களின் சதி திட்டமா என்ற சந்தேகம் என பல குழப்பங்கள் உண்டாகின. அதோடு, விரைவில் வழக்கை முடிக்காவிட்டால் அது சிபிஐ (CBI) வசம் மாறிவிடும் என்ற அவசரமும் இருந்தது. இவற்றை எல்லாம் தாண்டி ஆல்டோ சம்பவங்களின் பின் உள்ள உண்மையான நோக்கத்தை கண்டுபிடித்தார். ஒவ்வொரு முறை முட்டுச்சந்துகளைச் சந்தித்தபோதும் மனம் தவறாமல், நம்பிக்கை விடாமல், ஆல்டோ அடுத்த கட்டத்துக்கு சென்றார். பரமபதம் போன்ற இந்த வழக்கில், பலமுறை பாம்புகளிடம் கடி வாங்கினாலும், ஏணியைக் கண்டவுடன் வேகமாக ஏறி இலக்கை அடைந்தார். இந்த சம்பவங்களுக்குக் காரணமான நபரைக் கண்டறியப் பல மாத விசாரணை, தூக்கமில்லா இரவுகள் தேவைப்பட்டது. ஆல்டோ இந்த வழக்கை வெற்றிகரமாக முடித்து வைத்தார். அனைவரும் பாராட்டினர். ஆல்போ தன் திறமையை நிரூபித்தார்.
புதுச்சொற்கள் :
கோப்பு :
தகவல்கள், ஆவணங்கள் அல்லது நிரல்களை ஒரே தொகுப்பாகச் சேமித்து வைக்கும் ஒரு முறை
தேவாலயம் :
கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் கடவுளை வழிபடவும், ஆன்மீக காரியங்களில் ஈடுபடவும் ஒன்று கூடும் இடம்.
பேரங்காடி :
பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஒரே பெரிய கட்டடத்திலோ அல்லது வளாகத்திலோ விற்பனை செய்யும் இடமே பேரங்காடி.
அங்கதம் :
ஒரு தனிமனிதனின், சமூகத்தின் அல்லது அமைப்பின் முறைகளை, தவறுகளை வெளிப்படையாகக் கண்டிக்காமல் நகைச்சுவை மற்றும் ஏளனத்துடன் மறைமுகமாகச் சுட்டிக்காட்டித் திருத்த உதவும் ஒரு இலக்கிய உத்தி
கபாலம் :
மனிதனின் மண்டையோடு
மடிக்கணினி விசைப்பலகை :
மடிக்கணினியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முதன்மை உள்ளீட்டு சாதனம்
இரவல் :
ஒரு பொருளை அல்லது சேவையைத் தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு, உரிமையாளரிடம் பத்திரமாகத் திரும்ப ஒப்படைக்கும் முறை
தசம எண் :
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் எண்கள் தசம எண்கள் ஆகும். [1,2]
இரும எண் :
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் எண்கள் [0,1]
சவரம் :
உடலிலுள்ள முடிகளை மழித்து அல்லது நீக்கும் செயல்
இடம் :
→ சென்னை
→ ஆரச்சாலை [Radial road]
→ பல்லாவரம்
→ திருக்கழுகுன்றம்
→ காவல் நிலையம்
→ ஆரச்சாலைச் சுற்றியுள்ள இடம்
→ முதியோர் இல்லம்
கதாப்பாத்திரம் – ஆல்டோ :
பல படங்களில் காட்டப்படும் அதிரடி காவல் அதிகாரி போல் இல்லாமல், கார்த்திக் ஆல்டோ எப்போதும் ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்தே முடிவு எடுப்பார். அதுவே அவருடைய கதாப்பாத்திரத்தை வளரச் செய்தது. சண்டைகள் எதுவும் இல்லாமல், தன்னுடைய புத்திசாலித்தனத்தை வைத்தே வழக்கை தீர்த்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய கவனிப்பு திறன் மிகக் கூர்மையானது. தன் அருகில் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனிக்காமல், அது எதுக்கு நடக்கிறது என்றும் சேர்த்து மனதில் யோசிப்பார். மற்றவர்கள் சுலபமாக விடும் விவரம் கூட, இவருக்கு தெள்ளந்தெளிவாய் தெரியும்.
இவர் உணர்வு ரீதியாகவும் மிகக் கட்டுப்பாடு உடையவர். எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், தன் உணர்வுகளை மட்டுமே கேட்டுவிட்டு எந்த அவசர முடிவையும் அவர் எடுக்கமாட்டார். தன்னுடைய உணர்வுகளை அடக்கவும், சரியாகக் கையாளவும் தெரிந்தவர் அவர். பரபரக்கும் தருணங்களிலும் அவரிடம் ஒரு அமைதியைக் காண முடியும். அதுவே அவர் வழக்கை முடிக்கப் பெருந்துணை புரிந்தது. அவர் மக்களைப் படிக்கும் விதமாக இருக்கட்டும், அவருடைய பேச்சு, நையாண்டி எல்லாமே வாசகர்களின் மனதில் கதாப்பாத்திரத்தை ஆழமாகப் பதிய வைத்தது.
பிடித்த கதாப்பாத்திரம் :
கார்த்திக் ஆல்டோ எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம். ஏனென்றால் அவர் புத்திசாலி, அமைதியானவர் மற்றும் எதையும் சுலபத்தில் தீர்த்து விடுவார். வழக்கமான வீரம் மிக்க காவல்துறை கதாப்பாத்திரங்களைப் போல் இல்லாமல், ஆல்டோ அமைதியாகவும் கூர்ந்து கவனிப்பவராகவும் இருக்கிறார். இது இவரை இயல்பானவராகவும் நம்பக்கூடியவராகவும் உணர வைக்கிறது. விசாரணைகளின் போது அவரது பொறுமை, சிந்தனை மற்றும் உறுதி அவரை நினைவில் கொள்ளத்தக்கவராக ஆக்குகின்றன. எனவே, ஆல்டோ எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் ஆவார்.


