ராகவனுக்குத் திருமணமாகி சுமார் இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, காலம் ஒரு நதியைப் போல சத்தமின்றி ஓடியிருந்தது. அவனும் அவனது மனைவி கீதா மற்றும் குழந்தைகள் நகரத்தில் வசித்து வந்தனர். ஒரு சிறிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்த சமயம், இயந்திரம் போல் இருவரும் இயங்கத் தொடங்கினர். அவர்களுக்குள் இருந்த அன்பும், பாசமும் அந்த இயந்திர ஓட்டத்தில் தேய்மானம் கொண்டது போல மாயமாகத் தொடங்கியது. காலை உணவுக்குப் பின் வெளியே கிளம்பிய ராகவன் இரவுதான் வீடு திரும்பும் வழக்கமாக வைத்திருந்தான். இந்தச் செயல் ராகவனுடைய குற்றமில்லை. அவன் வேலைச் செய்கிற இடமானது சுமார் அவர்களது வீட்டிலிருந்து நாற்பது கிலோமீட்டர்த் தூரம்.
ஒரு நாளில் அவன் பெரும் பகுதியை நிறுவனத்திலும் மற்றும் நிறுவனத்தின் பேருந்திலும் தான் செலவழிப்பது வழக்கமாக இருந்தது. அவனது வாழ்வின் பெரும்பகுதி, பஸ் பயணங்களிலும், அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள்ளும் ஒரு மெழுகுவர்த்தியைப் போல உருகிக் கரைந்தது. குறைந்தது ராகவன் பதினாறு மணி நேரம் வீட்டை விட்டு வெளியே இருக்கும் சூழ்நிலை உருவானது. இதற்கு முக்கியக் காரணம் குடும்பச் சூழல், பிள்ளைகள் படிப்பு, நகர வாழ்வு இவையனைத்தும் தான். குழந்தைகள் வளரத் தொடங்கினர், இருவரும் இரட்டையர்கள். இரு குழந்தைகளும் இப்போது பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் கல்விப் பயிலத் தொடங்கினர்.
***
இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் ராகவனுக்கும், கீதாவுக்கும் அவ்வப்போது சண்டை வருவதுண்டு, இதனால் அவர்கள் மனதிலும் வேறுபாட்டை உணரத் துடங்கினர். சில சமயங்களில் சிறு பொறியாகத் தொடங்கும் வாக்குவாதங்கள், பெருங்காட்டுத் தீயெனப் பரவி, அவர்களின் மன அமைதியைக் கொளுத்திவிடும். சின்னச் சின்னச் சண்டை வந்து அதுவே பெரிய சண்டையாக மாறுவதும் உண்டு. ராகவனும் சரி கீதாவும் சரி எப்படியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்று தீவிரமாகப் பல சமயங்களில் யோசித்ததுண்டு.
ஆனால் அவர்களால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சரிவரப் புரிதல் இல்லாததே. எங்கே போகிறது இந்தப் புரிதல்? ஆரம்பக் காலத்திலிருக்கும் இந்தப் புரிதல் ஏன் சில வருடங்கள் கழிந்தப் பின் காணமுடியவில்லை? சாம்பல் பூத்த நெருப்புக் கங்குகளைப் போல, ஆழ் மனதில் இருவருக்கும் அன்பு, பாசம், நேசமெல்லாம் இருக்கிறது. ஆனால் அதைவெளியே காட்ட இருவரும் முன் வரவில்லை. இருவருக்கும் நன்றாகவே தெரியும் இப்படி அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டால்; பிள்ளைகளின் மனதில் இவ்வகைச் சண்டையானது பசுமரத்து ஆணியைப் போல் அப்படியே பதிந்துவிடும் என்று. ஆனாலும் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில் இருவரும் பிரிந்து விடலாம் என்று நினைப்பர். ஆனால் அவர்களது பிள்ளைகளின் முகம்தான் அவர்கள் கண் முன் வந்து செல்லும். இதன் காரணமாக அவர்கள் அந்த விபரீத முடிவை எடுக்க வில்லை. மாறாக இருவரும் சகிப்புத்தன்மையை வரவழைத்துக் கொண்டு காலத்தை நடத்தினர்.
சில சமயம் ராகவன் தனிமையில் இருக்கும் போது ஏன் கீதாவுக்கு ஒரு கடிதம் எழுதக் கூடாது என்று நினைத்து, ஒரு நாள் அவன் கடிதத்தையும் எழுதினான்.
***
அன்பு கீதாவுக்கு,
ராகவன் எழுதிக் கொள்வது என்னவென்றால்? சுமார் இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்தத் தருணத்தில் கடிதமா என்று யோசிக்கையில் சற்று வேடிக்கையாகத் தான் இருக்கும். ஆனால் அதுவே உண்மையும் கூட. ஆம் இதுவே முதல் முறை மனதில் இருப்பதை வெள்ளைக் காகிதத்தில் நிரப்பியுள்ளேன். மனதில் தேங்கிக் கிடந்த வலிகளை எல்லாம் அந்த வெள்ளைக் காகிதமானது ஒரு மௌன சாட்சியைப் போல வாங்கிக் கொண்டது. படிக்கும் போது விந்தையாகத்தான் இருக்கக் கூடும்.
ஆழ்ந்துச் சிந்தித்த பிறகு மற்றும் அதிகம் யோசித்த பிறகே; இங்கு நான் இதைப் பதிவு செய்கிறேன். சில காலங்களாகவே நம் இருவருக்கிடையே இருந்து வரும் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த அன்யோன்யம் (பரஸ்பரம்) எங்கோ காணவில்லை. இப்போது நினைத்தாலும் வினோதமாக உள்ளது.
இதற்குக் காரணம் இருவருமாகக் கூட இருக்கலாம். எப்படிச் சரிசெய்து கொள்வது என்று யோசித்து, பல முறை பன்மடங்கு நடவடிக்கைகள் எடுத்தாகிவிட்டது. ஆனால் அவையனைத்தும் ஏனோ வீணாகிப்போய்விட்டன. நீயாக இருக்க முயற்சி செய்து வருகிறாய்; அதில் உனக்குக் கூடிய விரைவில் வெற்றிக் கிட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இங்கு இதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் போதிருந்த சந்தோசம் இப்போது அதைவிடப் பல மடங்குச் சம்பாதிக்கும் போது இல்லை.
என்னுடைய அன்பு திரைத்துறையில் வருவது போல் இருக்காது. எனக்கு எப்படி அதை வெளிப்படுத்த தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துவது தான் என் வழக்கம். எப்படி உன்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டேனோ! அப்படித்தான் இன்றும் உள்ளேன். பாசத்தை எதிர்பார்த்துத் தோற்றும் போன ஒரு நபராகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
இப்பொழுது, பெருந்தொற்றுக் காலமாக இருப்பதால் நான் இதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை மறுபடியும் நான் இந்தப் பெருந்தொற்றில் சிக்கிக்கொண்டால் என்னை அப்படியை விட்டுவிட்டு பிள்ளைகளின் மேல் கவனத்தைச் செலுத்து. பிள்ளைகளை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் இதைத் தொடர்ந்து செய்வாயாக. இனியிருக்கும் காலங்களில் என்னாலான உதவிகளை நான் செய்வேன்.
ஒரு வேளை நான் மரணமடைந்தால். நீ தான் இந்த அசையும் சொத்து, அசையாச் சொத்து, LIC மற்றும் eNPS மூலம் வரும் பணத்தைவைத்துப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். என் மனதில் தோன்றியதை எழுதியாகிவிட்டது. மனதில் வலியை வைத்துக் கொண்டு; வெளியில் வேறுவிதமாக இருக்க முடியவில்லை. இனி வரும் காலங்கள் எப்படி நகரப் போகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு உன் ராகவன்…
***
இந்தக் கடிதத்தை எழுதினானே தவிர, அவன் கீதாவிடம் கொடுக்காமல் அவனே வைத்துக்கொண்டான். அவன் மேலே கடிதத்தில் கூறியது போல வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு அதன் பின் ஓட ஆரம்பித்தான்.
இப்படிதான் ஒரு நாள் எதற்கோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடிந்தது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயம். கட்டுப்பாட்டை இழந்த கோபம், ஒரு புயலைப் போல இருவரையும் சுழன்றடித்தது. வாய்ச் சண்டையானது கைகலப்பாக மாறி விட்டது. இருவரும் அடித்துக் கொண்டனர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ராகவன் மேசையில் இருந்த கண்ணாடித் தண்ணீர்க் கூஜாவைக் கீழே போட்டு உடைத்தான். அது தரையில் விழுந்து நொறுங்கிய சத்தம், அவர்களின் இல்லறத்தின் மகிழ்ச்சி நொறுங்கியதன் ஓசையாகவே ஒலித்தது. கண்ணாடிக் கூஜாவானது தரையில் விழுந்து அதிலிருந்து சிதறியக் கூரிய துகள், ஒரு விஷ அம்பைப் போல கீதாவின் கண்களில் பாய்ந்து அவளது பார்வை இழக்க நேர்ந்தது.
ராகவன் இப்போது எண்ணிப் பார்க்கிறான் நாம் சற்று அவசரப் படாமலிருந்திருந்தால் கீதா பார்வையை இழந்திருக்க மாட்டாள். அந்த ஒரு நொடி கோபம், இப்போது யுகங்கள் தாண்டியும் தீராத ஒரு பெரும் சுமையாக அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு சிறிய தவற்றால் பாதிப்பு அவளை மட்டும் வந்து சேரவில்லை, குடும்பத்தை முழுவதுமாகப் பாதித்தது. ராகவன் இதை நினைத்து வருத்தப்படுவதும், பிள்ளைகள் மற்றும் கீதாவும் ராகவனைச் சமாதானம் செய்வதுமாக இருந்தார்கள்.
ராகவன் சிந்திக்கத் தொடங்கினான். ஒவ்வொருவரும் அவரவரிடம் இருக்கும் இறுமாப்பை (ஈகோவை) அகற்றிவிட்டு மறுபடியும் பழையபடி ஒன்றிணைந்து வாழ முற்பட்டால் வாழ்வும் சிறக்கும் மற்றும் அவர்களது மண வாழ்க்கையில் மகிழ்ச்சித் தவிர வேறொன்றும் இருக்காது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ராகவன் புதியதொரு இலக்கை நோக்கி ஓட முற்பட்டான் தன் குடும்பத்திற்காக. ராகவன் அவனுடைய இரண்டு கண்களிலிருந்து ஒரு கண்ணை அவனது மனைவிக்குக் கொடுத்து, தன் வாழ்வின் ஒளியில் ஒரு பாதியை அவளுக்குத் தந்து, அவளது இருண்ட உலகில் மீண்டும் வெளிச்சத்தைப் பற்றவைத்தான். இனியாவது நாம் இருவரும் சண்டையிடாமல் சமாதானமாக வாழ்வது என்று முடிவெடுத்து வாழ முற்பட்டான்.
அந்தத் துயர நெருப்பில் புடம்போட்ட தங்கமாக அவர்களின் உறவு பிரகாசிக்கத் தொடங்கியது. ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொண்டனர் இருவரும். இருவரும் இப்போது எண்ணிப் பார்ப்பதுண்டு, நாம் அன்று சரியான முடிவுதான் எடுத்தோம். மாறாக அன்று இருவரும் விவாகரத்துக்குச் சென்றிருந்தால்! இப்போது பிள்ளைகளின் கதி என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குள்ளேயே மனதில் எண்ணிக் கொண்டனர். ராகவன் மேலும் ஒன்றை சிந்தித்தான். நல்ல வேளை நாம் எழுதிய கடிதத்தைக் கீதாவிடம் கொடுக்கவில்லை. மீறிக் கொடுத்திருந்தால் அவளது மனது எப்படிப் பாடுபட்டிருக்கும் என்று அவனது ஆழ் மனதில் எண்ணி தனக்குள்ளேயே அந்த நிகழ்வை மறைக்கவும் செய்தான். பிள்ளைகளும் ராகவனுக்கு உறுதுணையாக இருந்தனர். அவனிடமிருந்த அந்த முன்கோபம், இறுமாப்பு எல்லாம் அந்தத் துயர நெருப்பில் சாம்பலாகிப் போயிருந்தன.


