ஆசிரியர்: பரிவை சே. குமார்
மருள்…
இந்தப் பெயரைக் கேட்டவுடன் பலரது மனதில், மருள் என்றால் என்ன..? இது என்னவாக இருக்கும்..? இதனுடைய அர்த்தம் என்ன..? என்ற பல கேள்விகள் எழலாம். இப்படி மனதுக்குள் எழும் பல்வேறு கேள்விகளுக்கு விடையாக இந்நூல் அமைந்துள்ளது எனலாம்.
பொதுவாக கிராமம் என்றாலே முதல் நினைவிற்கு வருபவை பசுமையான சூழல், அன்பான மக்கள், குறிப்பாக தெய்வ வழிபாடு. மருள் பற்றிப் பேச ஆரம்பித்து எதற்காக கிராமத்துக்குள் போயிருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றலாம்.
ஆம்… நான் இப்படி ஆரம்பிப்பதற்கும் காரணம் இருக்கிறது. அது என்னவெனில் இக்கதையின் களமே கிராமம்தான். ஒரு மனிதனின் கிராமத்து வாழ்க்கை எவ்வாறு அமைகிறது..? அதுவும் அந்த மனிதன் ஒரு சாமியாடியாக இருந்தால் அவனது வாழ்வு எப்படியிருக்கும்..? என்பதுதான் இக்கதையின் சாராம்சம்.
கதையின் முக்கிய கதாபாத்திரமான வீராயி, பூங்குளம் கிராமத்தின் சாமியாடியாகத் திகழ்கிறார். அதுவும் வழிவழியாக தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்படும் சாமியாடி வரிசையில் அவளும் ஒருத்தி. அவள் சொன்னது நடக்கும்.
‘சாமியாடியா..! சாமியாடி வீடுன்னா ஊர் உலகம் தப்பாப் பேசுமே, உருப்படாதே என நினைக்கும் அப்பா, வீராயியைக் கடவுளாக நினைத்து அவள் சொல்வதுதான் வேதவாக்கு என்று நினைக்கும் ஊர்மக்கள். எதிர்காலத்தில் நடப்பதையெல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி அவளிடம் இருப்பதால் ஊரில் நடக்க இருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் வீராயி எனக் கதை நகர்கிறது
இவற்றிற்கு இடையே அந்தக் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள், பிறகு அங்கிருக்கும் தெய்வங்கள் உருவான கதை என நாவல் பரபரப்பாக நகர்கிறது. ஒரு சாமியாடியோட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும், அவர் அனுபவிக்கும் இன்பம், துன்பங்களையும் மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்தியம்புகிறார் எழுத்தாசிரியர் பரிவை சே.குமார் அவர்கள்.
இவருடைய எழுத்துக்கள் எல்லாமே மண் சார்ந்து இருப்பதால் எளிய மக்களுக்கு எளிதாகப் புரியும்படி இருப்பதுடன், பழமையான கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளும்படியாகவும் இருக்கிறது. மழை பெய்தவுடன் முதலில் வரும் மண்வாசனையைப் போல் கிராமம் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் எழுத்தாளர் பரிவை சே.குமார் எனலாம்.
இவருடைய அனைத்து நூல்களும் மண்சார்ந்து எழுதப்பட்டவை. எதிர்சேவை, வேரும் விழுதுகளும் என்ற இவரின் புத்தக வரிசையில் எட்டாவது நூலான மருளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அதுமட்டுமின்றி எங்கள் அறிவுச் சிந்தனைகளுக்கு விருந்தளித்தமைக்கு நன்றிகளும்.
நான் வாசித்த பல்வேறு புத்தகங்களில் என்னளவில் சிறந்ததாக நான் கருதும் நூல் ‘மருள்’. இந்நூலை அனைவருக்கும் பரிந்துரைப்பதில் மனதளவில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.


