கேலக்ஸி பதிப்பகம் கடந்த மூன்றாண்டுகளாகப் பதிப்புத்துறையில் தொடர்ந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அக்டோபர் 4-ஆம் தேதி மாலை துபை ‘Time Grand Plaza Hotel’-ல் நடைபெற்ற 70-வது புத்தக வெளியீடே சாட்சி.
ஆம்… கேலக்ஸி பதிப்பகம் வெளியீடான, ஐயா ‘காப்பியக்கோ‘ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் ‘இம்மைத் துறக்கம் எழில் மிகு துபை‘ நூல் வெளியீட்டு விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று வருடங்களுக்கு முன் கேலக்ஸியின் தொடக்க நிகழ்வில் முதல் புத்தகமாய் காப்பியக்கோ ஐயா அவர்களின் ‘மைவண்ணன் இராம காவியம்‘ என்னும் நூல் வெளியிடப்பட்டது. தற்போது வெளியான 70-வது நூலும் ஐயாவின் நூலாய் அமைந்தது மிகச் சிறப்பு. அதுவும் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது மட்டுமில்லாமல் தமிழகத்துடன் மிகுந்த நெருக்கம் கொண்ட, உலகளவில் அறியப்பட்ட ஒரு எழுத்தாளரின் நூலை கேலக்ஸி தொடர்ந்து வெளியிடுவது பெருமையும்… மகிழ்வும்.
மிகச் சிறப்பான மனிதரின் புத்தகத்தை, அமீரகத்தில் தொழில் முனைவோர்களாக, பலருக்கு உதாரணமாக, பலரால் போற்றப்படும் மிகச் சிறந்த மனிதர்கள் வந்திருந்து புத்தகத்தை வெளியிட்டுப் பேசியது சிறப்பு.
நிகழ்வில் காப்பியக்கோ அவர்களின் குறும்படம் ஒன்று பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஐயாவின் சிறுவயது முதல் இப்போது வரையிலான தொகுப்பு. குறிப்பாக இடையிடையே ஏ.ஐ மூலமாக ஐயாவைக் காட்டியது சிறப்பு. இந்த குறும்படத்தைத் தயாரித்த கலைஞன் நாஷ் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.
‘AL Reem Company LLC’ நிறுவனத்தின் அபுதாஹிர் அவர்கள் வரவேற்க, ஜெசிலா மேடம் நூலறிமுகம் செய்தார். ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் ஹபிபுல்லாஹ் கான், அறிவியல் அறிஞர் வெள்ளம்ஜி இக்பால், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், முத்தமிழ் சங்கத் தலைவர் ஷா, தொழிலதிபர் ஜாஹிர் ஹூசைன், மக்ரூப், பாலா, கமால், நஜீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். ஐயா குறித்தும் அவரின் காவியங்கள் குறித்தும், தமிழ் மீதான காதல் குறித்தும் பேசினார்கள்.
காப்பியக்கோ அவர்கள் தனது ஏற்புரையில் ‘பல காவியங்களை இயற்றியிருக்கிறார். எல்லாக் காவியத்திலும் பாட்டுடைத் தலைவனாக ஒருவன் வருவான். இந்தத் துபை என்ற நூலின் பாட்டுடைத் தலைவனாக இருப்பது துபை என்ற நாடுதான் என அபுதாஹிர் அவர்கள் தனது வாழ்த்துரையில் சொல்லியிருப்பதாய் சொன்னார்.
மேலும் நான் எதற்காகத் துபை குறித்து காவியம் எழுதினேன் என்றால் நான் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன் என்றாலும் மற்ற நாடுகளில் காணாத ஒன்றை இந்த நாட்டில் கண்டேன். அதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி என்று சொன்னார். மேலும் இந்தப் புத்தகத்துக்கு பாலாஜி அவர்கள் பிழை திருத்திய விதம் என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, இந்தப் புத்தகத்தில் ஒரு எழுத்துப்பிழை கூட இருக்காது என்ற உறுதியையும் வழங்கினார்.
மிகச் சிறப்பான இரவு உணவும், நண்பர்களின் அளவளாவல் என மிகச் சிறப்பானதொரு நிகழ்வாக இந்தப் புத்தக வெளியீடு நடந்து முடிந்ததில் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.
இலக்கிய, இலக்கணத்தில் ஐயா ஒரு பெரும் கடல். நானெல்லாம் கரையில் இருந்து அதை ரசிப்பவனாய் மட்டுமே. இந்த வயதிலும் அவர் தீவிரமாய் எழுதுவதைப் பார்க்கும் போது மகிழ்வாகவும், ஆச்சர்யமாகவும் நாமெல்லாம் அப்படி ஒன்றும் எழுதிவிடவில்லை என்ற எண்ணமும் ஒரு சேர மனதுக்குள்.
ஐயா இன்னும் தொடர்ந்து பல காப்பியங்கள் எழுத வேண்டும். எங்களின் கேலக்ஸி அவற்றைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
இந்த மிகச் சிறப்பான நிகழ்வின் அனைத்து வீடியோக்களும் எங்களது யூடியுப் சேனலில் இருக்கிறது பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

பரிவை சே.குமார்.
ஆசிரியர் - விண்மீன்


