கதைகளை போல் கவிதைகளை பெரும்பாலான வாசகப்பெருமக்களுக்கு பிடிப்பதில்லை அதற்கு முக்கிய காரணம் பல எழுத்தாளர்களின் கவிதைகள் வெறும் வார்த்தைகளால் நிரம்பி இருப்பதே ஆனால் எழுத்தாளர் மீ.யூசூப் ஜாஹிரின் நினைவுகளின் நதி என்னும் கவிதை தொகுப்பு அப்படியெல்லாம் இல்லை. படிக்கும் ஒவ்வொரு கவிதையும் நம்மை சிந்திக்க வைக்கும், உறவுகள் மற்றும் காதலின் மேன்மையை சொல்ல வைக்கும். என் மனம் கவர்ந்த ஒரு மூன்று கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .
மறக்கவே முடியாத காயங்கள் தான்
உன் கைப்பிடியிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்கிறது
அன்பு தரும் துரோகங்களை இதை விட எப்படி சிறப்பாய் சொல்லி விட முடியும்
விடுதலையை யாரும்
விரும்புவதில்லை
அலைபேசிகளிடம் மட்டும்!
ஆண்ட்ராய்டுகளில் நாம் சிக்கி இருப்பதை, அடிமைப்பட்டு கிடப்பதை யதார்த்த சொற்களின் மூலம் அழகாக்கி இருக்கிறார்.
அழ நினைக்கும் போதெல்லாம்
ஆறுதலாய்
அழுது விடுகிறது
மழை
மனதின் இரணங்களை மழையின் மூலம் நிவாரணமாக்கி இருக்கிறார். நினைவுகளின் நதியை நோக்கி கவிதைகளின் காதலர்கள் நிச்சயம் படையெடுப்பார்கள்.


