அச்சம்..!
–
பவானி சிம்ஹன்,
துபை, அமீரகம்
ஒரு பெண்ணின்
அமைதியான
இரவுகளில்
அவள்
இதயத்துக்குள் மட்டுமே
எட்டிப்பார்க்கும்
அச்சம்
தனிமை
அல்ல…
ஒருநாள்
தன்
கனவுகளை எல்லாம்
மடித்துப்
பழைய சேலையோடு
சேர்த்து
அலமாரிக்குள்
வைத்துவிட
நேருமோ என்று…
காதல்
இல்லாத ஒரு வீட்டில்
கடமைகளின்
சத்தத்துக்குள்
தன்
சிரிப்பை மெதுவாக
இழந்துவிட
நேருமோ என்று….
குழந்தைகளின்
எதிர்காலத்தைப்
பிடித்துக்
கொண்டிருக்கும் கைகளில்
தன்
எதிர்காலமே
கரைந்து
போய்விடுமோ என்று….
அனைவருக்கும்
எல்லாமாக இருந்தபின்
தனக்காக
மட்டும்
யாருமில்லாத
வெறுமை வந்து
அமருமோ
என்று…
சமையலறை
வாசத்திலும்
அழுகையை
மறைத்த சிரிப்புகளிலும்
தன்
இளமையைச் சாம்பலாக்கிவிட்டு
ஒருநாள்
கண்ணாடி முன் நின்று
இவள்
யார்?”
என்று
தன்னையே அடையாளம்
காண
முற்பட நேருமோ என்று…
பெண்கள்
விரும்புவது
வெறும்
திருமணம் அல்ல…
மெய்யான
உயிர் திளைக்கும் வாழ்வை!
அவர்கள்
தேடுவது
வெறும்
பாதுகாப்பல்ல…
தங்களை
இழக்காத அன்பை!
அவர்கள்
வேண்டுவது
ஒரு
பொன் கூண்டல்ல…
பறந்து
விரிந்த வானை!
இன்றைய
பெண்களின்
மிகப்
பெரிய அச்சம்….
தனிமை
அல்ல!
தன்னையே
மெதுவாகப்
புதைத்துக்கொண்டு
மற்றவர்கள்
எழுதிய கதையில்
ஒரு
பாத்திரமாய்
வாழ்ந்து
மறைந்து போவதுதான்!


