நேர்காணல்:
“நாவலே உகந்த வடிவம்”
-எழுத்தாளர் சித்ரா சிவன்
– பரிவை சே.குமார்
எழுத்தாளர் சித்ரா சிவன் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், சிற்றுளி காலாண்டிதழின் உதவியாசிரியர், தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பெண்கள் கிளையின் மாவட்டத் தலைவர், நேர்காணல்கள் எடுப்பவர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.
இவரின் முதல் நாவலான ‘அத்தினி’ பெண்களின் அக உலகையும், சுதந்திரத்தையும் மையமாகக் கொண்டது. இந்நாவலில் உமையாள், பவித்ரா தேவி மற்றும் சில பெண்களின் வாழ்க்கையும், உணர்வுகளும் மிகத் துல்லியமாக பேசப்பட்டிருக்கும். இந்நாவல் ஜீரோ டிகிரி நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று பல முன்னணி எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றது.
இவர் இதுவரை கல்கி, விகடன், மங்கையர்மலர், தமிழ்வெளி, வாசகசாலை ‘புரவி’ இலக்கிய இதழ், படைப்பு தகவு இதழ், ராணி வார இதழ், வாரமலர், சிற்றுளி உள்ளிட்ட பல இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள், எழுத்தாளர்களின் நேர்காணல்களை எழுதியுள்ளார்.
இவர் அம்மு ராகவ் என்ற பெயரில் ‘ஆதிலா’ , ‘ஒளவையின் கள் குடுவை’ என இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் சித்ரா சிவனாக ‘அத்தினி’ என்ற நாவலையும் ‘பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்’ என்ற நேர்காணல் தொகுப்பையும் கொண்டு வந்திருக்கிறார்.
தனது ஆதர்ச எழுத்தாளர்களாக தி.ஜானகிராமன், ஜெயமோகன், அ. முத்துலிங்கம், தமிழ்நதி, இளம்பிறை, கலாப்ரியா, ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரைச் சொல்கிறார் சித்ரா சிவன்.
ஸீரோ டிகிரி இலக்கிய விருது, ஜீவா நினைவு விருது, கருப்பு கருணா விருது, இலக்கிய சுடர் விருது, செளமா இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
நமது கேலக்ஸியின் ‘விண்மீன்’ இதழுக்காக அவர் கொடுத்த நேர்காணலில் மிகச் சிறப்பாக பதிலளித்திருக்கும் எழுத்தாளர் சித்ரா சிவனுக்கு நன்றி.
சித்ரா சிவனைப் பற்றிச் சொல்லுங்களேன்…
தேனி மாவட்டம் பெரியகுளம் சொந்த ஊர். அப்பா சேகர், அம்மா கண்ணகிசெல்வி. கணவர் சிவன், குழந்தைகள் ஸ்ரீநிதி மற்றும் ஸ்ரீகுகன். வீட்டில் வாசிப்பு சார்ந்த சூழல் நிலவியதால் சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பு சாத்தியமானது. தொடர் வாசிப்பின் விளைவாக எழுத ஆரம்பித்தேன். முதலில் பெரும்பான்மையானவர்களைப் போலக் கவிதைகளே எழுதினேன்.
இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்திருக்கின்றன அம்முராகவ் என்ற புனைப்பெயரில் ‘ஆதிலா’, ‘ஒளவையின் கள் குடுவை’ என இரு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. எழுத்தாளர்களை நான் எடுத்த நேர்காணல்களை தொகுத்து ‘பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்’ என்ற நேர்காணல் தொகுப்பும், ‘அத்தினி’ என்ற ஸீரோ டிகிரி விருது பெற்ற நாவலும் சித்ரா சிவன் எனும் எனது இயற்பெயரிலேயே வெளிவந்துள்ளன. தமுஎகச பெண்கள் கிளையின் தேனி மாவட்ட தலைவர். சிற்றுளி கலை இலக்கிய இதழின் உதவி ஆசிரியர்.
கல்யாண்ஜி, வண்ணதாசன் என்பதைப்போல தாங்களும் கவிதைக்கு அம்முராகவ் கதைகளுக்கு சித்ரா சிவன் என வைத்திருப்பது எதனால்?
முகநூல் கணக்கிற்காக வைத்துக்கொண்ட பெயர் அம்மு ராகவ். அந்தப் பெயரில் கவிதைகள் எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. என் வாழ்வில் திட்டமிடாமல் நிகழ்ந்தது தான் அனைத்தும். எழுத்தும் அவ்வாறே. அம்முராகவ் என்ற பெயர் எனக்கொரு தனித்த அடையாளத்தைக் கொடுத்தது. இப்போதும் அம்முவின் மீது அலாதிப் பிரியம் உண்டு. ஆனால் நாவல் எழுதும் போது சொந்தப் பெயருக்குத் திரும்ப வேண்டும் என்று தோன்றியது.
கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் இயங்குகிறீர்கள்... எந்த வடிவம் உங்களுக்கு சவாலாக இருக்கிறது?
பிற வடிவங்களோடு ஒப்பிட்டால் நாவலே ஒரு படைப்பாளிக்கு உகந்த வடிவம் என்று தோன்றுகிறது. ஏனெனில் கவிதையோ சிறுகதையோ ஒரு குறுகிய கால அவகாசத்தில் அதிலிருந்து வெளியேறிவிடலாம். ஆனால் நாவல் எழுதுவது ஒரு பெரும்வாழ்வை வாழ்ந்து முடிப்பது. சொந்த அனுபவத்திலிருந்தே இதைச் சொல்கிறேன்.
பெண் எழுத்தாளராக பெண்கள் வாழ நினைக்கும் உலகத்தை மிகச் சிறப்பாக அத்தினியில் கொண்டு வந்திருந்தீர்கள். அதன் பின் பெண்களை முன்னிறுத்தி வேறேதும் நாவல் எழுதினீர்களா..?
எனது அடுத்த நாவலும் பெண் குறித்தது தான். அதற்கான கள ஆய்வில் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் தரவுகள் கிடைத்ததும் விரைவில் எழுதத் தொடங்குவேன்.
உமையாள், பவித்ரா தேவி போல் நிஜ வாழ்வில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா..?
விதிவிலக்குகள் நீங்கலாக எல்லோருக்கும் அது அசாத்தியமாகத்தான் இருக்கிறது. தங்கள் பலம் அறிந்து சுதந்திரத்தை அவர்களே எடுத்துக்கொண்டால் மட்டுமே சுதந்திரமாக இயங்க முடியும்.
தங்களின் சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் ’வாசகசாலை’யில் வெளியான ’அணங்கு’ வித்தியாசமான சிறுகதை என்று சொல்லலாம், நல்ல சிறுகதைகளைக் கைவசம் வைத்திருக்கும் தாங்கள் ஏன் இன்னும் சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரவில்லை?
சிறுகதைகளைத் தொகுத்து செம்மையாக்கும் பணியில் இருக்கிறேன். இந்த வருடம் சிறுகதைத் தொகுப்பு வெளிவரும்.
தாங்கள் நிறைய பெண் எழுத்தாளர்களை பேட்டி எடுத்து இருக்கிறீர்கள். அது தொகுப்பாகவும் வந்திருக்கிறது. பெண் எழுத்தாளர்கள் எல்லாம் தங்களுக்கு முன்னே இருக்கும் தடைகளை – அப்படி இருந்தால் – உடைத்துக் கொண்டு வந்து விட்டார்களா..? அல்லது இன்னமும் அதற்குப் பின்னே தயங்கி நிற்கிறார்களா..?
குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் அதேவேளையில் கட்டுப்பாடுகளையும் எல்லைகளையும் வகுக்கும் நிறுவனமாக உள்ளது. அந்த அமைப்பு கிழித்து வைத்திருக்கும் கோடுகளைத் தாண்டிச் செல்லும் பெண்களுக்கு இயல்பாகவே நேரடியாகவும் கண்ணுக்குப் புலப்படாமலும் தடைகள் உருவாகின்றன. அவற்றை தாண்டிச் சென்றால் மட்டும் தான் அவளுக்கான உலகை உருவாக்கிக் கொள்ள முடியும். எழுத்துலகிற்கும் இது பொருந்தும்.
தங்களின் ஆதர்ஷ எழுத்தாளர்களில் ஒருவரான தி.ஜாவின் நாவல்களில் வரும் பெண் நாயகிகள் பற்றிச் சொல்லுங்களேன்?
அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள், இந்து, மோகமுள் யமுனா, மரப்பசு அம்மிணி, சிலிர்ப்பு காமாட்சி, அகிலாண்டம், ஞானம் என தி.ஜானகிராமன் படைப்புகளில் வரும் பெண் நாயகிகள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல; அவர்கள் ஒரு தனி மனஉலகம்.
அவர்களின் ஆசைகள், ஏக்கங்கள், தயக்கங்கள், காதல், கோபம், தியாகம் — எல்லாமே மிக நுணுக்கமான உளவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும்.
அவரது பெண்கள் பெரும்பாலும் மரபின் எல்லைகளை உடைத்து வெளியேற முயல்பவர்கள், உள்ளுக்குள் மிகத் தீவிரமான சுயத்தை கொண்டவர்கள். வெளியில் அமைதியாகத் தோன்றினாலும், அவர்களின் மனதில் இடைவிடாத அலைச்சல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த உள் அசைவுகளை மிக மென்மையான மொழியில் எழுதியதில்தான் தி.ஜாவின் தனித்துவம் இருக்கிறது.
குறிப்பாக, காதலை அவர் பெண்களின் வழியாகப் பார்த்த விதம் மிகவும் அழகானது. அது வெறும் ரொமான்ஸ் அல்ல; ஒருவரை புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆழமான ஏக்கம். அதனால்தான் அவரது பெண் கதாபாத்திரங்கள் வாசக மனதில் நீண்ட காலம் தங்கிவிடுகின்றன.
அவருடைய பெண்கள் முழுமையான “நல்லவர்கள்” அல்ல; அதேபோல் “தவறானவர்கள்” என்றும் இல்லை. முரண்களும் பலவீனங்களும் நிறைந்தவர்களாக இருந்தும் அவர்கள் மீது வாசகர்களுக்கு மரியாதையே தோன்றுகிறது. தி.ஜா கருணையோடு அக்கதாபாத்திரங்களை கையாண்டிருப்பதே முக்கியக் காரணம்.
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் உள் மனதை இவ்வளவு மென்மையாகவும் மரியாதையுடனும் எழுதிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் தி.ஜா என்று நான் நினைக்கிறேன்.
விருதுகள் நம் எழுத்தை மேம்படுத்தும், அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் என நினைப்பதுண்டா..? உண்டு எனில் காரணத்தைச் சொல்லுங்களேன்.
விருதுகள் வழியாக எழுதுபவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். அது எழுத்தின் வழியாக கிடைத்ததே அன்றி எழுத்தே அதன் வழியாக மேம்படும் என்பது பொருந்தாக் கூற்றாக உள்ளது. தீவிரமாக வாசிப்பதன் மூலமும் தொடர்ந்து எழுதுவதன் மூலமும் தான் எழுத்து மேம்படும் என நம்புகிறேன். விருதுகள், பரிசுகள் போன்றவை ஊக்கமூட்டும் முன்னிலைகளாக வேண்டுமானால் இருக்கலாம்.
காலாண்டிதழின் உதவியாசிரியர், தமுஎச பெண்கள் கிளையின் தேனி மாவட்டத் தலைவர், எழுத்தாளர் என சுற்றிச் சுழலும் பணிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்..?
எழுத்து எனக்கு வேலை அல்ல; அது என் ஆர்வம். அதனால் இந்தப் பொறுப்புகள் தனித்தனியாகத் தெரியவில்லை. காலாண்டிதழ் பணியில் வாசிப்பும், புதிய குரல்களைத் தேடுவதும் நடக்கிறது. தமுஎகச பெண்கள் கிளைச் செயல்பாடுகள் மனிதர்களை நெருக்கமாக அறிய உதவுகின்றன. அந்த அனுபவங்களே எழுத்தாகவும் மாறுகின்றன.
நேரத்தைப் பிரித்து வைத்துக் கொள்வதைவிட, மனதைச் சிதறவிடாமல் வைத்துக் கொள்வதே முக்கியம் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் முழுமையுடன் செய்ய முடியாத நாட்களும் உண்டு. ஆனால் பெண்கள், இலக்கியம், சமூகப் பணி — இவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக இருப்பதால் சோர்வைக் காட்டிலும் அர்த்தம்தான் அதிகமாக உணரப்படுகிறது.
தற்போது எழுதும் எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்தவர்கள் யார்? ஏன்?
ஒரே பெயரைச் சொல்லிவிட முடியாத நிலைதான் இன்று தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கிறது. புதிய கதைக்களங்கள், வித்தியாசமான கதைக்கருக்கள், நாவல் மற்றும் சிறுகதைகளின் மரபான வடிவமைப்புகளை உடைத்து மேற்கொள்ளப்படும் புதுமையான முயற்சிகள்—இவை அனைத்தும் சமகால எழுத்தை மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் வாசிக்கத் தூண்டுகின்றன.
சமீபத்தில் ஆதிரன் எழுதிய ‘மாயக்கண்ணி’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தபோது, அந்த அனுபவம் நீண்ட நேரம் மனத்திலிருந்து அகலவில்லை. மொழியின் மயக்கம், கற்பனையின் பரப்பு, கதைகளின் உள்ளார்ந்த உளவியல் ஆழம்—இவை அனைத்தும் சேர்ந்த அந்தத் தொகுப்பு, உலகச் சிறுகதைகளின் வரிசையில் வைத்து பேசப்பட வேண்டிய படைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதேபோல் கரன் கார்க்கி, நரன், என். ஸ்ரீராம், திருச்செந்தாழை, மயிலன் ஜி. சின்னப்பன், கே.என்.செந்தில், சரவணன் சந்திரன், ப்ரிம்யா கிராஸ்வின், லாவண்யா சுந்தர்ராஜன், அனுராதா ஆனந்த் ஆகியோரின் எழுத்துகளும் என்னை ஆழமாகக் கவர்ந்தவை.
ஒவ்வொருவரும் தனித்தனி மொழிநடையுடனும், வாழ்வைப் பார்ப்பதற்கான தனிப்பட்ட அகநோக்குடனும் எழுதுகிறார்கள். அவர்களின் கதைகளில் வாழ்க்கையின் புதிர்கள் மட்டுமல்ல, மொழியின் புதிய சாத்தியங்களும் திறக்கப்படுகின்றன.
உண்மையில், இது முடிவடைந்த பட்டியல் அல்ல. தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கும்போது, இந்தப் பட்டியலில் புதிய பெயர்கள் இணைந்துகொண்டே இருக்கும் என்பதே சமகால இலக்கியத்தின் மிகப் பெரிய நம்பிக்கை.
எழுதும் போது அந்த படைப்பு அடுத்தக் கட்டத்திற்குச் செல்லாமல் பாதியிலேயே நின்று விடும் போது தடுமாறியதுண்டா?
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளாத எழுத்தாளர்கள் அநேகமாக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படி நடக்கும் போது சிறிது காலத்திற்கு அதைத் தொடாமல் விலகி இருப்பது நன்மையில் முடியும். அந்த சிறிது காலம் என்பது சிலருக்கு சில தினங்களாகவோ இன்னும் சிலருக்கு வாரங்களாகவோ பிறருக்கு மாதமாகவோ கூட இருக்கலாம். பிறகு எழுதினால் அந்தச் சிக்கல் சாதாரணமாகத் தீர்ந்து விடுவதை உணரமுடியும்.
புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன?
இதற்கு பதில் சொல்ல எழுத்தில் நெடுந்தொலைவு சென்றிருக்க வேண்டும். எனவே பின்னொரு காலத்தில் இக்கேள்விக்கு பதில் கூறுவேன் என நினைக்கிறேன்.
அறிவுரை என்றில்லாமல் வழிமுறை என்று கேட்டிருப்பதால் நான் பின்பற்றுவதை சொல்கிறேன்.
“எழுதிவிட்டோம்” என்ற உடனடி திருப்திக்குள் விழுந்துவிடாதீர்கள். எழுத்து என்பது முதலில் பிறப்பதல்ல, தொடர்ந்து செம்மையடைவதுதான் அதன் உண்மையான வடிவம். எழுதியதை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்; தேவையற்ற சொற்களை நீக்குங்கள்; வாக்கியங்களை செதுக்குங்கள்; உங்கள் எழுத்தின் மீது நீங்களே கடுமையான வாசகராக இருங்கள். ஒரு நல்ல எடிட்டிங் பல நேரங்களில் சாதாரணமான எழுத்தையும் நினைவில் நிற்கும் படைப்பாக மாற்றிவிடும்.
அடுத்ததாக எல்லோரும் சொல்வதுதான்… நிறைய வாசிங்க. போதுமான வாசிப்பனுபவம் இல்லாதவர்கள் கதை எழுத வரும்போது அவர்களின் ஒரு சிறுகதையை வாசித்தாலே தெரிந்து விடுகிறது எழுத்தின் போதாமை. உண்மையில் வாசிப்பின் மூலம் புதிய சொற்களைக் கண்டடைதல், வாக்கிய அமைப்பு, ஒவ்வொரு எழுத்தாளரும் கையாளும் தனித்துவமான மொழிநடை என நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். புதிதாக எழுத வருபவர்களுக்கு அவர்கள் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல ஆசான் தான் .


