VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: அஹிம்சை என்பது என்ன?
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > அஹிம்சை என்பது என்ன?
புத்தகப் பார்வை

அஹிம்சை என்பது என்ன?

தமிழ்க்காதலன்
Last updated: May 28, 2026 11:58 am
Share
9 Min Read
அஹிம்சை என்பது என்ன?
SHARE

அஹிம்சை என்பது என்ன?

 

–           தமிழ்க்காதலன்,

சிலம்பூர், அரியலூர்

 

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் தனிச்சிறப்புடன் பிறக்கிறது. தன் இனத்தால் ஒத்த பண்புகளை பெற்றிருந்தாலும், அதையும் தாண்டி தனித்து தன்னை முன்னிலை படுத்தும்படியாய் மிளிரும் குணம், பண்பு, செயல் மூலம் தனித்துவம் பெறுவதே உயிர்களின் சிறப்பு. இதில் மனித இனம் மிகவும் நுட்பமானதும், புரிந்துகொள்ள இயலாததாகவும் இருப்பது தனிப்பண்பின் உச்சம் எனலாம். அந்த வகையில் உலகில் தோன்றிய மாந்தருள் தனக்கென தனி இடம் பிடித்த மனிதர்களுள் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவராகிறார். ஆசியாவின் துணைக்கண்டமாகவும், தீபகற்பமாகவும் விளங்கும் பெரும் நிலப்பரப்பின் மிக சிக்கலானதும், கொடூரமானதுமான ஒரு காலகட்டத்தில் பிறந்து, ஆலையிடப்பட்ட கரும்பாக வாழ்நாள் முழுதும் பிழியப்பட்ட ஒரு மனிதனின் கட்டுரைத் தொகுப்பாக தமிழில் வெளிவந்த அஹிம்சை என்றால் என்ன? என்ற நூலினை தேடலுடன் படிக்க நேர்ந்தது. அந்த மகானுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியே.

 

அஹிம்சை என்பது என்னவாக இருக்கும் என்கிற ஆய்வு மனதுடன் பக்கங்களை நான் புரட்ட, பக்கங்கள் என்னை புரட்ட, தொடரும் போராட்ட மனநிலையிலேயே தொடர வேண்டிய அத்தியாயங்கள். பொதுவாக தமிழகம் பலருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு 1916-ல் சென்னையில் நடந்த பிரசங்க கூட்டத்தில் மோகன்தாஸ் அஹிம்சையை பற்றி விரிவாக பேசத்துவங்கியதில் தொடங்குகிறது நூல்.

 

உலகமெங்கும் போர் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்க, பசியும், பஞ்சமும், பற்றாக்குறையும், நோயும் வாழ்க்கை பாடம் நடத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் பிறந்த தலைமுறை இளைஞனுக்கே உண்டான வாழ்வியலை எதிர்கொள்ள ஏற்படும் தடுமாற்றம் நிறையவே அவருடைய சிந்தனைகளில் தென்படுகிறது.

 

உலகமெங்கும் நாடுகள் அடிமைகளாய் கிடக்க, கண்முன்னேயும், தன் முன்னேயும் விரிந்துக் கிடக்கும் சமூகச் சீரழிவுகளுக்கு தீர்வுதான் என்ன? எங்கிருந்து தொட்டு, எதை பற்றி தொடர்ந்து, எப்படி முடிவை காண்பது..? விடை தெரியாத வினாக்களுக்கு முன் அவரை போலவே நானும் கதியற்று நிற்கிறேன். தான் அடியெடுத்து வைக்கும் எல்லா பக்கங்களிலும் அடிமைகளின் அழுகுரலும், பசியும், பிணியும், நோயும் வாட்ட, வதங்கி நிற்கும் மக்கள். இன்னொருபுறம் உலகின் எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டுபோகும் ஆதிக்கவர்க்கம். எதிர்க்க திராணியற்ற பெருங்கூட்டமாய் உலக மக்கள். எதிர்த்தால் தோட்டாக்களை பரிசளிக்கும் பாசிச நாடுகள். இந்த சூழலுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு இளைஞன் எத்தனை தவிப்புகள், எத்தனை இழப்புகள், எத்தனை கொடுமைகள் தாண்டி, இதற்கான தீர்வை நோக்கி சிந்திக்க தொடங்கினால்… தடுமாற்றம் வராமல் எப்படி…??

 

முதல் சில அத்தியாயங்கள் படிக்கும் போது, அவருடனான கருத்து மோதல்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆம். அஹிம்சை பற்றி அவர் பேசும்போது, காலச்சூழலை ஒட்டியும், கடந்துவந்த மரபுகளை ஒட்டியும், வாழ்வியல் பழக்கங்களோடும் இணைந்தே தன் கருத்தை சொல்கிறார். அதில் பல இடங்களில் நமக்கு முரண்பாடுகள் வருகிறது. இம்சைக்கு எதிரானது அஹிம்சை என்றான பொருளில் முதலில் வார்த்தையை தேர்வு செய்துவிட்டார். விளக்க முற்படும்போது ஆயிரம் எதிர்க்கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கிறது.

 

குறிப்பாக ஒரு உதாரணம் பார்ப்போம். இயற்கையானது எது? என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பதில் கடிதம் ஒன்றை ஒரு வைத்தியர் எழுதியதாக குறிப்பிடுகிறார். (வைத்தியர் பெயரை குறிப்பிட்டிருக்கலாம்) அந்த வைத்தியர் மிக அழுத்தமாக கேள்விகளை அடுக்குகிறார். அவை சரியாகவும் இருக்கிறது. மனித இயல்பில் இயற்கையாய் அவன் எப்படியெல்லாம் செயல்படுவான் என்பதை அடிப்படையாக வைத்து உங்களது அஹிம்சை என்பது இதற்கு எதிராக இருக்கிறது என்றும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு இது பொருத்தமாக இல்லை என்றும் கடிதத்தை தொடர்கிறார். பதில் அளிக்கும் விதம் உண்மையாகவே குழப்பமாகவும், தெளிவின்றியும் இருக்கிறது.

 

அஹிம்சை என்பது தன் முன்னே ஆபத்தை விளைவிக்கும் உயிருக்கு எதிரான வலிமையான எதிர்ப்பு உணர்வு என்றும், அது தன்னை துன்புறுத்துபவர்களுக்கு எந்த தீங்கினையும் எண்ணம், சிந்தனை, சொல், செயல் இப்படி எதன் மூலமும் நிகழ்த்தாத, தனக்கு நிகழும் துன்பத்தை முழுமையாக ஏற்று அனுபவிப்பதன் மூலம், தன்னை சுற்றி இருப்பவர்களை காக்கும் தியாக உணர்வு என்றும் குறிப்பிடுகிறார். நம்முடைய எதிர் உணர்வுகளை மட்டுமே விளைவுகள் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்கிற பொருளில் பேசுகிறார். இவர் உயிர் கொல்லாமை என்பதில் தொடங்கி புத்தரை உள்வாங்கி அவரின் கொள்கைகளை மாற்றுமொழியிலும், வழியிலும் பிரதிபலிக்கிறார். எதிரியை வெல்வதற்கு எதிரியையே நம்முடைய மதிப்புமிக்க நண்பராக்குங்கள் என்கிறார். அவர்கள் நம்மை முழுமையாக நம்பும்படி நடந்துகொள்ளுங்கள் என்கிறார். உயிர்வதை செய்வது யாராக இருந்தாலும் அது ஏற்க முடியாதது என்பதை ஆணித்தரமாக சொல்கிறார்.

 

மற்றொரு விதத்தில் அஹிம்சை என்பது தன்னொழுக்கம், கட்டுப்பாடு, தான் சார்ந்த சமூகத்திலும், குடும்ப அளவிலும் அஹிம்சையை செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதன் மூலம் ஆண், பெண் எப்படி வாழ்வியல் தீர்வுகளை எட்டலாம் என்று வாதிடுகிறார். அஹிம்சை என்பது எதிரி திருந்தும் வாய்ப்பை அவருக்கு வழங்கும் நற்செயல் என்கிறார்.

 

பைபிளில் சொல்லப்பட்ட பல சொற்றொடர்களை மேற்கோள் காட்டுகிறார். அஹிம்சையை விளக்க ”உன்னை நீ நேசிப்பது போலவே உன் அயலானையும் நேசி”, ”நான் உனக்கு இரக்கம் காட்டுவது போலவே நீயும் பிறரிடம் இரக்கம் காட்டு”, “இதயத்தூய்மை உள்ளோர் பேறு பெற்றோர், ஏனெனில் வானுலகம் அவர்களுடையதே” என்பன போன்றவை தரும் பொருளை உணர்த்தும் உள்ளடக்கமாக விளிக்கிறார். ஆன்மீகம், வாழ்வியல் கோட்பாடுகள், மதக்கருத்துகள், முக்கியமாக இந்துமத கருத்துகளை உள்வாங்கிக்கொண்டே இவற்றின் கலவையாக அஹிம்சைக்கு விளக்கம் தர முயல்கிறார். கோழைத்தனமாக இருக்கிறதே தங்களின் கூற்று என்ற கேள்விகள் பலரிடமிருந்தும் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஹிம்சை என்பது உயர்ந்த வீரம் என்கிறார். அஹிம்சையை பின்பற்ற ஒருவருக்கு ஆன்ம பலமும், அதிக வீரமும் வேண்டும் என்கிறார். எளிதில் வீழ்த்த முடிந்தவரிடம் காட்டுவதல்ல அஹிம்சை. தன்னால் வீழ்த்த முடியாதவரிடத்திலும் உண்மையாகவும், நேர்மையாகவும் அஹிம்சை வெளிப்படுத்தப்பட வேண்டும். உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். தன்னை பலி கொடுத்து பிறரை காப்பது அஹிம்சை என்கிறார்.

 

இயேசுநாதர் தான் மிகுந்த வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, வலிகளை சுமந்து சிலுவையில் அறைந்து தொங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும், ”தந்தையே..! இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” என்று அவர்களுக்காக இறைஞ்சுதலை அஹிம்சைக்கு உதாரணமாக்குகிறார். பொய்யும் புரட்டும் இல்லாமல், உண்மையும் நேர்மையும் மிக்கவராக ஒருவர் தமது வாழ்க்கையில் அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும். குடும்பங்களில் அஹிம்சையை உண்டாக்குவதன் மூலம், எளிதாக மக்களுக்கு இதை புரியவைக்க இயலும் என்றும், அதன்மூலம் சமூகம் முழுக்க அஹிம்சை போய் சேரும். அப்போது இந்த உலகம் முழுக்க மிக அமைதியாக மக்கள் வாழ முடியும் என்று போதிக்கிறார்.

 

உண்மையில் நாடு விடுதலை அடைந்தது அஹிம்சையாலா என்கிற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை. பதில் ஆம் என்றால், இந்த போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தும், புரட்சியில் ஈடுபட்டு நாடுகடத்தபட்டு இறந்தது அல்லது மரண தண்டணைக்கு உள்ளானவர்களின் வாழ்வியல் தியாகம், பொருளை இழந்து வறுமையை சகித்துக்கொண்டு, துன்பத்தில் வாழ்ந்தவர்களின் செயல்களுக்கு எல்லாம் ஏதும் மதிப்பில்லையா…? அவர்களுக்கு குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடையாதா…?? இரத்தம் சிந்தியவர்களின் தியாகங்கள் மதிப்பில்லாதவையா.?? சகித்துக்கொள்ள முடியாமலும், பொறுத்துக்கொள்ள முடியாமலும் இனி வேறு வழி இல்லை என்ற நிலையில் போராடி சாவதே மேல் என்று போராடியவர்களுக்கு நாடு என்ன மதிப்பும், மரியாதையும் செய்கிறது…? வெறும் அஹிம்சையால் மட்டுமே இந்த அற்புதம் நிகழ்ந்து விட்டதாக சொல்லபடுவதன் மூலம், இந்த உலகுக்கு நாம் சொல்லும் செய்தி என்ன…? என்கிற கேள்விகளுக்கு விடையற்ற நிலையில்………. தொடர்கிறேன். 

 

நேதாஜி, அம்பேத்கர் போன்றோர் உயர்குடிகளாலும், உயர்ந்த நிலையில் இருந்தோராலும், ஆங்கிலேயருக்கு நெருக்கமாகவும், அதிகார மையத்தின் அடுத்த நிலையிலும் இருந்தவர்களால் அவமதிக்கப்பட்டும், அங்கீகாரம் மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், ஒருவர் (நேதாஜி) நாட்டை விட்டு வெளியேறி, கடல்கடந்து தேசியப்படையை நாட்டுக்காக கட்டியமைத்து சாதித்த தலைவருக்கு இங்கே கிடைத்தது என்ன…? மற்றொருவர் (அம்பேத்கர்) உள்நாட்டுக் குழப்பங்களுக்கு மத்தியிலும், அடித்தட்டு மக்களுக்காக ஓடோடி உழைத்துக்கொண்டும், உலக தலைவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி விளிம்புநிலை எளிய மக்களும் வாழும் உரிமைக்காக போராடிய போராட்டங்களுக்கான அங்கீகாரம் மழுங்கடிக்கப்படுவது ஏன்…? என்ற கேள்விகளோடு நூலை படிக்கிறேன். 

மத கோட்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாமல் பல இடங்களில் மோகன்தாஸ் திணறுவது நன்றாக தெரிகிறது. 

அஹிம்சையை அனைத்துக்கும் மேலானது என்கிறார். சத்தியம், அஹிம்சை இரண்டையும் ஒப்பிட்டு பல இடங்களில் குறிப்பிட்டு இரண்டையும் பிரிக்க முடியாது என்கிறார். கடவுள் கோட்பாடுகளுடனும், சனாதன கோட்பாடுகளுடனும், சமூக கோட்பாடுகளுடனும் மோதிமோதி, மூன்றையும் ஒன்றாக கட்டி இணைத்து அதன் உயர்ந்த மூலப்பொருளாக அஹிம்சைதான் இருக்கிறது என்று சொல்ல விழைகிறார். டால்ஸ்டாய் உடனான தொடர்பினால், அறிவியல் கோட்பாடுகளையும் அஹிம்சையை விளக்க எடுத்துக்கொள்கிறார். பிரபஞ்ச விரிதலையும், அதன் நிலைப்பு தன்மையையும் அஹிம்சையோடு ஒப்பிடுகிறார். 

1914-ல் தொடங்கி மெல்ல மெல்ல 1948 வரையிலான போராட்டக் காலக்கட்டத்தில் தான் கொண்ட இந்த கொள்கையை சமூகத்தின் மீது பரீட்சித்துப் பார்த்து அதில் ஓரளவு வெற்றி கண்டவதாகவும் அவரே குறிப்பிடுகிறார். முழுமையாக வெற்றி இல்லாவிட்டாலும் ஓரளவு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி. முழுமையாக முயற்சி செய்வதன் மூலம் அனைத்தையும் அஹிம்சை மூலமாக அடையமுடியும் என்கிறார். நீங்கள் அஹிம்சையை அடைந்து விட்டால் அதன் மூலம் சத்தியத்தை அடைந்தவர்களாகிறீர்கள். இரண்டும் வேறுவேறு அல்ல. அஹிம்சை வழியாகத்தான் சத்தியத்தை அடைய முடியும் என்கிறார். தனி மனித உள்முக வளர்ச்சிக்கு, ஆன்ம பயிற்சிக்கு அஹிம்சைதான் தீர்வு என்கிறார். 

நூலின் இறுதி அத்தியாயங்களை நெருங்க நெருங்க ஓரளவு தெளிவு கிடைக்கிறது. அஹிம்சை என்பது அன்பு. அன்புதான் அஹிம்சை என்கிறார். அன்புதான் அஹிம்சை என்றால், அன்பு என்ற சொல்லாடலையே ஆரம்பத்திலேயே பயன்படுத்தி இருக்கலாமே. எதற்கு இந்த “அஹிம்சை” என்ற புதிய சொல்லாடல் என்ற கேள்வி மனதிற்குள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. அன்பே கடவுள் என்று இறுதியில் வந்துவிடுகிறார். இதில் முத்தாய்ப்பாக பகவத்கீதையை வைத்து அவரிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது. தான் தவிர்க்க விரும்பும் ஒன்றை, வேறு வழியில்லாமல் தவிர்க்கமுடியாமல் ஒரு பதிலை சொல்லி வைப்போம் பாருங்கள், அதுபோல நழுவியபடி சில பதில்களை தந்திருக்கிறார். இதில் ”பகவத்கீதையில் அஹிம்சை” என்ற தலைப்பில் இடைச்செருகலாக ஒரு அத்தியாயம் வேறு. அவர் அர்ச்சுணன், பகவான் கிருஷ்ணரை வைத்து போர்க்கள காட்சியையும், உரையாடலையும் கொண்டு தன்னுடைய அஹிம்சை வேறு என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார். 

மொத்தத்தில், விருப்பு வெறுப்பு இன்றி இந்நூலை அணுகும் போது, அன்றைய சமுதாயம் இருந்த நிலை, அரசியல் நிலைப்பாடு, மதக்கலவரங்கள், மதத்தலைவர்கள் ஏற்படுத்திய ஆதிக்க குழப்பம், ஆங்கிலேயர் கொடுமைகள், கொள்ளைகளுக்கு மத்தியில் நாடு முழுக்க வலியும், வறுமையும், பசியும், பிணியும் கொண்டு அடிமையாகிக்கிடக்கும் நிலையில் இந்த மக்களுக்கும், நாட்டுக்கும் நம்மால் ஏதும் செய்துவிடமுடியுமா என்கிற வலிமிகுந்த ஏக்கமுடன், தன்னால் கனவிலும் கூட ஒருபோதும் எதிர்த்துவிட முடியாத மிகப்பெரும் பலம் கொண்ட எதிரியின் முன்னால், ஏதும் செய்ய முடியாமல் கையறு நிலையில் நிற்கும் ஒரு இளைஞனின் மனநிலையில் இன்று நாம் நின்று பார்த்தால்….. 

அவர் எத்தனை வலிமிகுந்த நரக இரவுகளை கண்ணீரால் கழுவியபடி கடந்திருப்பார் என்பதும், இதை தவிர்க்கவும் முடியாமல், சகிக்கவும் முடியாமல், பொறுக்கவும் முடியாமல் உயிர் முழுக்க துள்ளத்துடிக்க வலியை சுமந்தவன் தொண்டைக்குள் சிக்கிய மீனின் முள்ளாக வாழ்க்கையை ஒருவன் எதிர்கொள்வது என்பதை நினைக்கவே குலைநடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அஹிம்சையை தன் வாழ்நாள் முழுக்க தூக்கிச்சுமந்தவன், அதையே தன் வாழ்க்கையாக்கிக் கொள்ளப் போராடிப் போராடி, இறுதியில் தானே அஹிம்சையாகி வாழ்ந்த மனிதன்தான் சொல்கிறான்…………………….. 

“செய்…!! அல்லது செத்து மடி…!!” 

————————————————–

அகிம்சை என்பது என்ன?

மகாத்மா காந்தி

தையல் வெளியீடு / வ.உ.சி நூலகம்

பக்கம்-112 | விலை 70/-

————————————————–

 

PrevPreviousவிண்மீன் மே 2026 மின்னிதழ்
Next“நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்Next

You Might Also Like

சந்தியா ராகம்
அச்சம்..!
‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)
நீளிரா
திருடன் மணியன்பிள்ளை
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் மே 2026விமர்சனம்
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article விண்மீன் மே 2026 மின்னிதழ்
Next Article “நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?