VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ஒரு மனிதனின் கவனக்குறைவு
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > ஒரு மனிதனின் கவனக்குறைவு
சிறுகதைகள்

ஒரு மனிதனின் கவனக்குறைவு

ஒரு மனிதனை அவனது பிம்பம் உடையாதிருக்கும் போதுதான் அவனக் கட்டுப்படுத்த முடியும்.

முரா. இரக்சன் கிருத்திக்
Last updated: May 25, 2026 9:33 pm
By
முரா. இரக்சன் கிருத்திக்
Published: May 25, 2026
2 Views
Share
10 Min Read
ஒரு மனிதனின் கவனக்குறைவு
SHARE

மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகைக் கடையை ஏறிட்ட போது கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. “எப்பா, எவ்வளவு கூட்டம்” என்றான் எனது மகன். எப்படியும் நாம சாமான்களை வாங்கிட்டு திரும்புறதுக்கு, ஒரு மணி நேரத்திற்கு மேல ஆகிடும் என்றே எனக்கு தோன்றியது.

எனது மகனை என்னோடு என் மனைவி அனுப்பி வைத்ததே “உங்க அப்பன் எங்கேயாவது நின்னு வம்பளந்துட்டு நிற்பான், நீயும் கூட போ, அப்பதான், சட்டுன்னு வருவான்” என்றுதான். இப்போது, தாமதமானாலும் பதட்டமடையத் தேவை இல்லை, சாட்சிக்குதான் ஆள் இருக்கிறதே என்கிற ஆறுதல் இருந்தாலும், ஏன் திடீரென்று இவ்வளவு கூட்டம்? இன்று, நாளை, நாளை மறுநாளுகூட எந்த விஷேச தினமும் இல்லையே என்று யோசித்து கொண்டே சாமான்களை வாங்குவதற்கு எடுத்து சென்றிருந்த பையை வண்டியில் இருந்து கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து கடையை நெருங்கினேன். என்னைப் பின்தொடர்ந்து எனது மகனும் கடையின் அருகில் வந்தான்.

‘எனக்கு ஒரு கிலோ தக்காளி’, ‘அரை கிலோ துவரம் பருப்பு’, ‘நூறு கிராம் ஆச்சி சாம்பார் தூள்.’ என்று ஒரு சிலர் மட்டுமே மளிகைச் சாமான்களைக் கேட்டு கொண்டும், பெற்று கொண்டும் இருந்தனர். மற்றவரெல்லாம், யாரையோ எதிர்ப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். சிலர் பல நாள் மனதிற்குள் தேக்கி வைத்திருந்த சொந்தக் கதைகள், சோகக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்த்து விட்டது என்று அருகில் நிற்போரிடம் கொட்டித் தீர்த்து கொண்டிருந்தனர்.

 கூட்டத்தின் ஊடாக என்னைப் பார்த்துவிட்டு “அண்ணே நீங்களும் மாவுக்காகவா நிற்கறீங்க?” என்றார் கடைக்காரர்.

“இல்ல. கொஞ்சம், மளிகைச் சாமான்தான் வாங்கணும்” என்றேன்.

“இங்க வந்து என்னன்னு சொல்லுங்க. அங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா, சாமான் கைக்கு வந்திருமா?” என்றார்.

“இல்ல, எனக்கு முன்னாடி வந்தவங்க, இத்தனை பேரு நிற்குறாங்களே! அதான், யோசனை பண்ணிட்டு நிற்கறேன்” என்றேன்.

“நீங்க வேற, எல்லாம் தோசை மாவுக்கு நிற்கிற கூட்டம். மாவு போடுறவரு இன்னும் வரல, அவர எதிர்ப்பார்த்துதான் எல்லாரும் நிற்கிறாங்க” என்றார்.

வீட்டிலயே அரிசியையும் உளுந்தையும் ஊற  வைத்து தங்களது வீட்டில் இருக்கிற ஆட்டு உரலிலோ, மாவு அரைக்கும் மின் இயந்திரத்திலயோ அரைத்து இட்லி, தோசை செய்து சாப்பிட்ட காலம் போயி, அது அதிக வேலை என்பதற்காக மிக எளிதாக கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மாவுகளையே தற்போது அதிகமாக வாங்கிப் பயன்படுத்துறோம். ஆனால், அதில் இருக்கும் சில மோசமான விஷயங்கள் பற்றி நமக்குத் தெரிவதில்லை.

பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருக்கும் மாவு ஒரே நாளில் புளிப்பேறி, புளிப்பு சுவை வராமல் இருக்கவும் மாவு புளித்துப் போவதால் பாக்கெட் உப்பிக் கொண்டு போகாமல் இருக்கவும் கவரில் புண்களை ஆற்றுவதற்கு பயன்படுத்தும் போரிக் அமிலம் தடவப்படுகிறது. இவ்வகை அமிலம் பாக்கெட்டில் மாவை சேர்ப்பதற்கு முன் தடவப்படுகிறது. இதனால், சில நாட்கள் வரை மாவு புளித்தாலும் வெளியில் தெரியாமல் இருக்கும். போரிக் அமிலம் தடவப்பட்ட பாக்கெட் மாவுகளை வாங்கி சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் உண்டாகும். குறிப்பாக குடலில் பாதிப்பு ஏற்படும். கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும்.

மேலும், பாக்கெட் மாவு தயாரிக்கப்படும் இடங்களில்  மாவை அரைக்க எந்த மாதிரியான தண்ணீர் பயன்படுத்துகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. வீட்டில் அரைப்பது போன்று சுத்தமான தண்ணீரெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். அசுத்தமான தண்ணீரைக் கொண்டு மாவு அரைக்கப்படும் போது அது மிக மோசமான உடல் பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக அதில் ஈகோலி பாக்டீரியாக்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால், நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, டயேரியா, குடல் மற்றும் இரைப்பை சார்ந்த நோய்கள் உண்டாகக் கூடும் என்றாலும் தினமுமா வாங்கப் போறோம் என்று அதை தினம் தினம் வாங்கிப் பயன்படுத்ததான் செய்றோம்.

கடைக்காரர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போதே சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து நின்றார். பிறரை உருவக் கேலி செய்வது என்பது தவறானச் செய்கைதான், இருந்தாலும், அதை தவிர்க்க முடியவில்லை. யாராவது கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாக இருப்பதைப் பார்த்ததும், என்னை அறியாதே அப்படி ஒரு எண்ணம் தோன்றி விடுகிறது, வேண்டுமென்றே செய்வதில்லை. அவரைப் பார்த்ததும் “இந்த மாவு பொட்டலம் என்ன விலை?” என்று கேட்க தோன்றும், அப்படி ஒரு தோற்றத்தில் இருந்தார்.

அவரது மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடை இருந்தது, அதில் நிறம்ப மாவு பொட்டலங்கள் இருந்தது. அவரைப் பார்த்ததும் “உனக்காகத்தான் காத்திருக்கிறோம். ஏன் தாமதம்?” என்றார் காத்திருந்தவர்களில் ஒருவர்.

“ரயில்வே கடப்புல மாட்டிக்கிட்டே…ண்ணே…” என்றார் மாவுக்காரர்.

“ஆமா, ஏதாவது காரணம் சொல்லும். இப்படியே தாமதமா வந்து வந்துதான் வியாபாரத்தைக் கெடுத்துப்புடுதேயரு. எத்தனை பேரு கேட்டு பார்த்திட்டு திரும்பி போயிட்டாங்கன்னு தெரியுமா?” என்றார் கடைக்காரர்.

“என்ன பண்றது அண்ணாச்சி, வழக்கமாக, ஆறர மணிக்கு ஒன்னு, ரெண்டு வண்டிதான் வரும். இன்னைக்குன்னு பார்த்து, ஒட்டுக்க நாலு வண்டி வந்துட்டது.”

            “ஏன் ஒரு பத்து நிமிஷம் முன்ன வர்றதுக்கு என்ன?” என்றார் கடைக்காரர்.

“சரி அண்ணாச்சி. இனிமேல, பத்து என்ன? அரை மணி நேரம் முன்னாலேயே வந்துடுறேன்.” என்றவர் தொழிலில் தீவிரமாக இருப்பதைப்போல காட்டிக்கொள்ள “எத்தனை பாக்கெட் வேணும்?” எனத் தாமதம் குறித்து கேட்டவரிடம் கேட்க, அவரோ “மூனு பாக்கெட்” என்றார்.

“மூனா…ண்ணே” என்றவாறு அவர் கடைக்கு வழக்கமாகக் கொடுக்கிற மொத்த மாவு பொட்டலத்தில் இருந்து மூன்று பொட்டலத்தை எடுத்து கொடுத்தார். அவர் வாங்கிக் கையில் இருந்த பையிக்குள் வைத்து கொண்டார். மாவுக்காரர் மீதி பொட்டலங்களை வண்டியில் இருந்து இறக்கிக் கடைக்காரர் வழக்கமாக வைக்க சொல்லுகிற ஒரு பெட்டியில் அடுக்கி வைத்தார். அடுத்த கணம் அங்கே காத்திருந்த எல்லோரும் தங்களுக்கு தேவையான மாவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

முதலில் மூன்று பொட்டலம் வாங்கிய நபர் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு முழு நூறு ரூபாய்த் தாளை நீட்டி “எனக்கு ரெண்டு.” என்றார். கடைக்காரரும் ஒரு நம்பிக்கையின் பேரில் இரண்டு பாக்கெட் மாவுக்கான பணத்தை மட்டும் எடுத்துகொண்டு மீதி ஐம்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.

பணத்தைப் பெற்றதும், அந்த நபர் மின்னல் வேகத்தில் நடையைக் கட்டினார். அவர் சென்ற வேகம் எதிரே லாரி வந்தால்கூட, அது நசுங்கிப் போயிடும் என்பதுபோல இருந்தது. அதே சமயம் ஏதாவது சிறு புல் தடுக்கியிருந்தாலோ, பின்னிருந்து யாராவது அவரது தோளைத் தொட்டு இருந்தாலோ போதும், அதே இடத்தில் மரணம் சங்கமித்து இருக்கும்.

எனது மகன் காதருகில் வந்து “அப்பா அந்த ஆளு மூன்று பாக்கெட் மாவு வாங்கிட்டு ரெண்டுக்குதான் காசு கொடுத்துட்டு போறாரு.” என்றான். வாயில் ஒற்றை விரலை வைத்து சமிக்ஞையாக ‘பேசாமல் இரு’ என்றேன் நான். அவனும் சட்டென அமைதியாகிவிட்டான். நான் சாமான்களை வாங்கிக் கொண்டிருக்கும்போதே, அதே நபர் திரும்பி வந்து, அதே ஐம்பது ரூபாயைக் கடைக்காரரிடம் நீட்டி “கால் கிலோ துவரம் பருப்பு.” என்றார்.

“இப்பதான மாவு வாங்கிட்டு போனயேரு, அதுக்குள்ள, பருப்புன்னு வந்து நிக்கறயேரு? வீட்டுக்கும் கடைக்கும் நடந்துட்டே இருக்கணும்னு ஏதாவது வேண்டுதல் வச்சிருக்கிறயேரா?” என்றார் கடைக்காரர்.

ஆமா, சாத்தூர் மாரியம்மனுக்கு வச்ச வேண்டுதல். சும்ம இருமய்யா.” என்றவர் தொடர்ந்து… “வீட்டுல பொம்பளைய ஒன்னு ஒன்னா சொல்றாளுவ. மனுஷன நிம்மதியா ஒரு கரையில இருக்கறதைப் பார்த்தாலே பொறுக்க மாட்டக்குது. ஏதாவது ஒரு வேலைய சொல்லிடுறாளுகளா? உமக்கு என்ன? கடையே கதின்னு கெடக்கயேரு… கொடுத்து வச்ச மவராசன்.” என்று சடவு கொள்பவரைப்போல அவரது தவற்றை மறைக்க, வீட்டில் உள்ள பெண்டீரைச் சாடினார்.

அவர் பொய் கணக்கு சொல்லியதை யாராவது கவனித்துவிட்டு சொல்லிவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற குற்ற உணர்வில் வாங்க வேண்டியதை மறந்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஒருவரிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லாவிட்டால், அவர் எந்த அச்சத்தையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதாவது மடியில் கனம் வழியில் பயம் என்ற பழமொழியைப் போல. இப்போது, அவர் வந்தது என்னை பொறுத்தவரை இரண்டு விஷயங்களுக்காகதான் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஒன்று தனது திருட்டு தனத்தைப் பற்றி ஏதேனும் பேச்சு வருகிறதா? என்பதை அறிய வந்திருக்கலாம், மற்றொன்று நான் முன்பு கூறியதுபோல அவர் பதட்டத்தில் வாங்காமல் விட்டு சென்ற பொருளை வாங்குவதற்காக இருக்கலாம்.

நான் சாமான்களை வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு கிளம்ப தயாரான போது “உனக்கு என்ன வேண்டும் தம்பி?” என்றேன் எனது மகனிடம். எப்போதும் அவனாகவே அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு மளிகைப் பொருட்கள் வாங்கிய தொகையில் பாதி அவனுக்கு தின்பண்டம் வாங்கியதாகதான் இருக்கும். அன்று “என்ன வேண்டும்?” என்று நான் கேட்டும் “எனக்கு எதுவும் வேண்டாம்.” என்று கூறிவிட்டான்.

கடைக்காரர்கூட “என்ன உடம்புக்கு ஏதும் சரியில்லையா?” என்று கேட்டு விட்டார். “அதெல்லாம் ஒன்னுமில்ல, நல்லாதான் இருக்கிறான்.” என்று சொல்லிவிட்டு அழைத்து சென்றேன். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து எப்போதும் என்னிடம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் தொணதொணவென்று பேசிக்கொண்டே வருகிறவன் அன்று எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். அந்த நபர் செய்த திருட்டு, அவனது மனதில் எதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் தாமதமாகதான் புரிந்தது, அவன், என்னைப் பற்றி நினைத்து கொண்டிருந்த எதோ ஒரு பிம்பம்  உடைப்பட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிதான் யோசித்து கொண்டிருக்கிறான் என்பது.

ஒரு முறை இதுபோல நானும் அவனும் நியாய விலைக்கடைக்கு ரேஷன் வாங்கச் சென்றிருந்தோம். அங்கே பொருள்கள் விநியோகஸ்தர் எடையில் குளறுபடி செய்து கொண்டிருந்தார். அதாவது, எடை வைக்கும் இயந்திரத்தில் எடைய வைக்கும் பாத்திரத்தோடு சேர்த்து எடையை பூஜ்ஜியத்தில் வைப்பதைத் தவிர்த்துவிட்டு இயந்திரத்தை மட்டும் பூஜ்ஜியத்தில் வைத்து கொண்டு பொருளின் எடையை பாத்திரத்தின் எடையோடு சேர்த்து அளவிட்டு சாமான்களைக் கொடுத்து கொண்டிருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு கடைக்காரரைச் சத்தம் போட்டு எடையை சரி செய்தேன். நான் பார்ப்பதற்கு முன் பொருள் கொடுத்திருந்த எல்லோரையும் அழைத்து வந்து மறுபடியும் அவர்களது பொருளின் எடையை அளவிட்டு சரியாக கொடுக்கச் சொன்னேன். எல்லோருக்கும் அரை கிலோ, ஒரு கிலோ எடை குறைவு இருந்தது. எல்லோரும் என்னைப் பாராட்டி விட்டு சென்றதைப் பார்த்து என் மகனின் பார்வையில் நான் ஒரு கதாநாயகனைப்போல தெரிந்தேன்.

அதன் பிறகு எங்கேயாவது யாராவது குற்றம் புரிந்தார்கள் என்றால் “என் அப்பா மட்டும் இருந்திருந்தால், இங்கே நடந்திருக்கிற நிகழ்வே வேற” என்று மற்ற எல்லோரையும் சீண்டி விடுவான். இவ்வாறான, ஒரு பார்வைதான் அவனுக்கு என் மீது இருந்தது. இந்த இடத்தில் நான் மௌனம் காத்ததினால் அவன் மனம் உடைந்து போனான்.

இதை அப்படியே விடக்கூடாது, எப்படியாவது சரி செய்துவிட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். மறுநாள் வியாபாரம் குறைவாக இருக்கும் நேரம் பார்த்து, கிட்டத்தட்ட உச்சி வேளையில் எனது மகனையும் அழைத்து கொண்டு அந்த கடைக்கு வந்தேன். முந்தைய நாள்  திருட்டைச் செய்த நபர் யா            ர் என்று தெரிவிக்காமலேயே கடைக்காரரிடம் நடந்த சம்பவத்தை மட்டும் சொன்னேன். ‘ஒரு மனிதனின் கவனக்குறைவுகூட இன்னொரு மனிதனைத் திருடனாக்கி விடும்’ கொஞ்சம் கவனமாக வியாபாரம் செய்யும்படி சொல்லிவிட்டு சென்றேன்.

“என்னப்பா பண்ற,? நேத்தே கையோடப் பிடிச்சிக் கொடுக்கிறத விட்டுட்டு இன்னைக்கு வந்து சொல்லிட்டு இருக்கிற? யார் அப்படி செய்ததுன்னு வேற சொல்ல மாட்டேங்கற?” என்றான் என் மகன். 

“தம்பி இந்த கடையில கண்காணிப்பு காணொளி இருக்குது, அத வச்சி யார் அந்த நபருன்னு கடைக்காரர் கண்டு பிடிச்சிருவார்,  நாம காட்டிக்கொடுக்கணும்னு அவசியம் இல்லை. அதுவுமில்லாம நல்ல வியாபாரின்னு சொல்றவன் குற்றவாளி யாருன்னு கண்டு பிடிச்சு தண்டிக்கிறவன் இல்ல. குற்றவாளிய திருத்தி அவனோட வியாபாரம் செய்றவன். அவன் நல்ல வியாபாரியா இல்லையான்னு இனிமேல், நாம கடைக்கு வரும்போது தெரிந்துவிடும்.” என்றேன்.

“அதுபோக அவரைக் காட்டிக்கொடுத்து அசிங்கப்படுத்திவிடக் கூடாது. அது பகையைதான் வளர்க்கும். இந்த உலகம் எப்போதும் நம்மை கவனித்து கொண்டே இருக்குது என்பதை அவருக்குப் புரிய வைக்கணும். ஒரு மனிதனை அவனது பிம்பம் உடையாதிருக்கும் போதுதான் அவனக் கட்டுப்படுத்த முடியும். அவன் அப்படித்தான் என்பதை உலகம் அறிந்து கொண்டால். அதைத் துணிச்சலோடு செய்ய ஆரம்பிச்சிடுவான். அவன நல்லவனைப் போலக் காட்டிதான் திருத்த வேண்டும்.” என்றேன்.

மறுநாள் என் மகனோடவே கடைக்கு வந்தேன். மாவு பொட்டலத்தைக் கடைக்குள்ளே வைத்துகொண்டு அவரே கேட்போருக்கு எடுத்து கொடுத்தார். மாவு பொட்டலத்தை உள்ளே வைத்ததற்கான காரணத்தையும், அவரே எல்லா வாடிக்கையாளரிடமும் பகிர்ந்து வந்தார். அதே சமயம் அங்கே நடப்பவைகளை மூன்றாவது கண்ணாகக் கண்காணிப்பு காணொளி கவனித்து கொண்டிருக்கிறது என்பதையும் சொன்னார். ‘இங்கே கண்காணிப்பு காணொளி பொருத்தப்பட்டுள்ளது.’ என்று எழுதியும் வைத்தார்.

மாவு பொட்டலத்தை அதிகமாக எடுத்து சென்ற அந்த வாடிக்கையாளரிடமும் இந்தத் தகவலை பகிர்ந்திருக்கக் கூடும் என்று நம்புறேன். ரேஷன் கடையில் நான் கவனத்துடன் செயல் பட்டதால் திருட்டுத் தவிர்க்கப்பட்டது. அப்படியென்றால், முதலில் பொருள் வாங்கிய நபரின்  கவனக்குறைவுதானே விநியோகஸ்தரை தொடர்ந்து தவறு செய்ய வைத்தது. மளிகைக்கடைக்காரரின் கவனக்குறைவுதான் அந்த நபரைத் திருடனாக்கியது, ஆக, தவறு மளிகைக்கடைக்காரரிடம்தானே உள்ளது” என்ற கேள்வியை எனது மகனின் முன் வைத்தேன்.

PrevPrevious‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
Next‘கணியன் பூங்குன்றனார் விருது’ பாராட்டு விழாNext

You Might Also Like

போராளி
புரிந்தது
அறிவுரைகள் விற்பனைக்கல்ல!
ஓடுகாலன்
தாபா
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஃபெப்ரவரி 2026
Previous Article ‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
Next Article ‘கணியன் பூங்குன்றனார் விருது’ பாராட்டு விழா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (15) கவிதைகள் (15) சிறுகதைகள் (53) திரைப் பார்வை (7) தொடர்கள் (11) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (9) புத்தகப் பார்வை (28) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 20262
  • April 20262
  • March 20263
  • February 202611
  • January 202621
  • December 202512
  • November 202516
  • October 202519
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202522
  • August 20211

பிரிவுகள்

articles (15) essays (15) Interview (9) Poems (15) Series (11) Short Stories (53) இளையராஜா (1) கட்டுரை (8) கட்டுரைகள் (14) கவிதைகள் (15) குறுங்கதை (14) கேலக்ஸி (2) சினிமா (7) சிறுகதைகள் (59) திரை விமர்சனம் (7) துபை (1) தொடர்கள் (11) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (7) நூல் அறிமுகம் (28) நூல் வெளியீடு (3) நேர்காணல் (9) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (28) புத்தகம் (28) பேட்டி (9) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (11) விண்மீன் அக்டோபர் 2025 (18) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (19) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (2) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (35) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?