முதியோர் இல்ல வளாகம்.
மாலை நேர
தேநீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவராய் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும், முதியோர் இல்லத்தில்
சேர்ந்த அல்லது சேர்க்கப்பட்ட சோகக் கதைகளையும் பகிர்ந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது
அங்கு வந்த மீனாட்சி அம்மாள், “என்ன எல்லோரும் ஜாலியா இருக்கீங்க போலிருக்கு…” என்று
கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“சும்மா கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டிருக்கிறோம்.”
என்றார் சுப்பிரமணி.
“கல்நெஞ்சம் படைத்த
பிள்ளைகள் தங்கள் சுயநலம் பற்றியே எண்ணுகிறார்களே தவிர, அவர்களைப் பெற்று, வளர்த்து,
படிக்கவைத்து, திருமணம் முடித்து வைப்பதற்குள் பெற்றோர்கள் படும் பாட்டை கொஞ்சங்கூட
நினைத்துப் பார்ப்பதில்லை.” என கவலைப்பட்டார் மணிமேகலை.
இப்படி ஆளாளுக்கு குழந்தைகள் மீதான வெறுப்பை அள்ளிக் கொட்டினர்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சி
அம்மாள், “சரி, நான் ஒண்ணு கேக்கறேன். அதற்கு பதில் சொல்லுங்கள்…” என்றதும், அனைவருடைய
பார்வையும் அவர் மேல் பதிந்தது.
“நாளைக்கு உங்க மகளோ, மகனோ வந்து உங்களை மீண்டும் அவர்களுடன்
சேர்த்துக்கொள்ள அழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
“கண்டிப்பா அவர்களோடு போகவே மாட்டோம்…” – கோரஸாக சொன்னார்கள்.
“ஏன்?”
“நேத்து வந்தவளோட பேச்சைக் கேட்டு முன்பின் யோசிக்காமல்
எங்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டவன், நாளை வேறு ஏதாவது சின்ன விஷயத்துக்காக மீண்டும்
எங்களை துரத்தியடிக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?” – ஆவேசமான வார்த்தைகள் வந்து விழுந்தன.
தெளிவு பெற்ற
மீனாட்சி அம்மாள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
மறுநாள் நியூயார்க்கிலிருந்து மீண்டும் மகன் சபரீஷின்
கால்.
“அம்மா… என்னம்மா முடிவு எடுத்திருக்கீங்க?”
“என்னால் மீண்டும்
உன் மருமகளோடு சேர்ந்து வாழ முடியாதுப்பா. அதுமட்டுமில்லை… என்னை நம்பி இருக்கும் இருபது
பேரை உதறிட்டு என்னால் வரமுடியாது.”
உறுதியாக சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தாள் அந்த முதியோர் இல்லத்தைத் தொடங்கி அதை நிர்வகித்துவரும் மீனாட்சி அம்மாள்.


