தமிழ் சினிமா வன்முறை, போதையின்னு தடம் மாறி வருடங்களாகிவிட்ட நிலையில் அவ்வப்போது சில குறிஞ்சிகள் பூப்பதுண்டு. அப்படிப் பூத்த படங்களில் ஒன்றுதான் ‘இட்லி கடை’, அதாவது இளைஞர்களுக்குப் போதை நல்லதுன்னு சொல்லிக் கொடுக்கும், கெடுக்கும் கலாச்சாரம் இல்லாமல் வந்த படம். ‘காந்தாரா’ புயலில் காணாமல் போய்விட்டது என்ற பேச்சு இருந்தாலும் ‘இட்லி கடை’ வெற்றி பெற்ற கடையாகி இருக்கிறது என்பதே உண்மை.
இன்னைக்கு மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் எல்லாம் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இரண்டாயிரத்துக்கு முன்பு வரை அருமையான கதைகளைக் கொடுத்த தமிழ்ச்சினிமா, மற்ற மொழிக்காரர்கள் பக்கத்தில் கூட வரமுடியாமல் வைத்திருந்த தமிழ்ச்சினிமா, மெல்லமெல்ல கதைகளை விடுத்து மாஸ் என்னும் சுவற்றை எழுப்பி, கடந்த ஆறேழு வருடமாக கட்டவிழ்த்த போதையையும், கட்டுக்கடங்காத வன்முறையையும் மட்டுமே படமாக்க ஆரம்பித்திருப்பதுடன், இப்படித்தான் படமெடுப்போம் என இயக்குநர்களையும் பேச வைத்திருக்கிறது. ‘காந்தாரா’ எடுத்த ரிஷப் ஷெட்டி தங்களது கலாச்சாரத்தை, நாட்டுத் தெய்வங்களைப் பற்றி படம் எடுப்பேன் என்கிறார். இங்கோ போதையை இன்னும் எப்படியெல்லாம் படத்தில் காட்டலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரி, இட்லி சாப்பிடப் போகலாம் வாங்க.
முதலிலேயே சொல்லிவிடலாம், தனுஷ் இயக்குநராய் ஜெயித்திருக்கிறார். நடிகனாக எப்பவும் போல் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இரண்டுக்கும் வாழ்த்துகள்… ஆனால் கதைக்களத்தில்…?
அந்தக் கிராமத்தில் இருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது அது ஒரு குக்கிராமம் என்பதைப் போல்தான் தெரிகிறது. பக்கத்துக் கிராமங்கள் எல்லாம் அந்த ஊருக்கு வர வாய்ப்புண்டு என்றால் ஏதோ ஒரு இட்லி கடை என்பதே பெரிய விசயம் இதுல போட்டியாய் புரோட்டாக்கடை வேறு. கிராமத்துல பிறந்து வளர்ந்தவன் என்பதால் இன்றைய கிராமத்தின் நிலை என்ன என்பதை நன்கு அறிந்திருப்பதால் இதுவே பெரும் அபத்தமாகத் தெரிந்தது.
அன்னைக்கு வீடுகளிலும் கடைகளிலும் ஆட்டுக்கல்லில் மாவட்டினார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கூட தொன்னூறுகளில் கிரைண்டர் வந்துவிட்டது. ஆட்டுக்கல் மட்டுமல்ல அம்மியும் காட்சிப் பொருளாய் ஆகிப் போய், வீட்டுக்குள் இருந்து மெல்ல வெளியேறியது. இப்போது உள்ள பெரும்பாலான வீடுகளில் ஆட்டுக்கல், அம்மி என எதுவும் இருப்பதில்லை. வீட்டில் இதெல்லாம் இருக்க வேண்டுமென நகரத்துவாசியாகிப் போன கிராமத்து மக்கள் வீடுகளில் வாங்கிப் போட்டிருந்தாலும் உபயோகிக்காமல் வீட்டுக்குப் பின்னேதான் கிடக்கும். அப்படியிருக்க, இந்தக் காலத்திலும் ஒரு கடைக்கான மாவை கல்லில் ஆட்டித்தான் ஆவேன் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.
முருகன் (தனுஷ்) படிக்கும் காலத்தில் அவரது அப்பா சிவனேசன் (ராஜ்கிரண்) அப்படி மாவாட்டித்தான் கடை நடத்தினார் என்பது ஏற்புடையதுதான். அதற்காக முதல்நாள் மாவாட்டி எடுத்துக் கொண்டு போய் இட்லி ஊற்றி, வியாபாரம் பார்த்தார் என்பது சரிதான், ஆனால் கையில் கொண்டு போகும் சிறு தூக்குச்சட்டி மாவில் அந்தக் கிராமத்து மனிதர்கள் அதிகம் பேர் – வீடுகளில் சமைக்கமாட்டார்கள் போல – சாப்பிடுவதாய் காட்டுவதும், கடையில் போய் மாவாட்டி உடனே இட்லி ஊற்றுவதும் நகைப்புக்குரியது.
ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவில் இட்லி, தோசை, பனியாரம், ஆப்பம் என எது செய்தாலும் பூப்பூவாய், சுவையாய் இருக்கும் என்பது உண்மைதான் ஆனால் முதல்நாள் மாவு ஆட்டி, மறுநாள்தான் இட்லி ஊற்றுவார்களே ஒழிய உடனேயெல்லாம் செய்ய முடியாது. அதுவும் தனுஷ் கடையில்தான் மாவாட்டுகிறார். அவர் ஒருவரே ஒரு மணி நேரம் ஆட்டுவதாய் வேறு காட்டுவார்கள், என்ன கொடுமை இது. ஆட்டுக்கல்லில் மாவாட்டியிருந்தால் தெரியும், சிலர் மட்டுமே ஒரு கையால் மாவைத் தள்ளி விட்டுக் கொண்டு மறு கையால் ஆட்டுவார்கள். மற்றபடி ஒருவர் மாவாட்ட மற்றொருவர் அரிசியைத் தள்ளிக் கொடுக்க வேண்டும். கிரைண்டரில் ஒரு தடுப்பு வைத்து அரிசியை அரைபட குழிக்குள் விழ வைப்பது போல. நானெல்லாம் மாவாட்டியும் இருக்கேன், தள்ளியும் கொடுத்திருக்கிறேன்.
இந்தக் கடையை நாம இன்னும் விரிவாக்கலாம், முருகன் இட்லி கடை போல, மதுரை அம்மன் மெஸ் போல வேற வேற ஊர்களில் ஆரம்பிக்கலாம் எனக் கல்லூரி படித்தபின் அப்பாவிடம் பேசும் போது அவர் பழமை மாறமாட்டேன் எனப் பிடிவாதமாய் நிற்க, கோபித்துக் கொண்டு சென்னை போய் அப்படியே வெளிநாடு போன தனுஷ், அங்கு மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் ஊரில் அதே ஏழ்மை நிலைதான்… வீட்டையோ, கூரையிலிருக்கும் கடையையோ அவர் புதிதாகக் கட்டிக் கொடுக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் கடை இருக்கு என்பதாலும், அந்தக் கடை இப்படியே இருந்தால்தான் இறுதிக்காட்சிக்கு தேவைப்படும் என்பதாலும் அப்படியே விட்டிருக்கலாம்.
வீட்டிற்கு ஒத்தைப் பிள்ளையாய் இருக்கும் நாயகன், வெளிநாடு போன இடத்தில் முதலாளி மகளைக் காதலித்து திருமண ஏற்பாடு பண்ணியபோதும் அப்பா கடையை விட்டு வரமாட்டேன் எனச் சொல்வதாய் அம்மா மூலம் போனில் சொல்லி முடிக்கிறார்கள். ஒத்தப்புள்ளை போன இடத்தில் ஆத்தா, அப்பன் வேண்டாமென கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெற்றோர் ஒத்துக் கொள்வார்கள்..? இல்லை பிள்ளைதான் அப்படி நடக்கட்டும் என நினைப்பானா..?
அப்பாவின் இறப்புக்கு வருபவருடன் அவரைக் கண்காணிக்க இளவரசையும் அனுப்புறானுங்க, அந்தாளு ஊருக்கே வராம இருக்கானாம். சரித்தான். கார்ப்பரேட் கம்பெனிக்காரனுங்க மனுசனா இருக்க மாட்டானுங்கதான். ஆனா ஆத்தா, அப்பன் ரெண்டு பேரும் செத்தாலும் சொன்ன தேதியில திருமணத்தை நடத்தியே ஆகணும்ன்னு நிக்கிறதெல்லாம்…? சரி விடுங்க. ஊருக்கு வந்தவன், இட்லிக் கடையை பல இடங்களில் ஆரம்பிக்கணும்ன்னு எண்ணம் வைத்திருந்தவன் அதையெல்லாம் தொலைத்துவிட்டு அப்பாவைப் போல் மாவாட்டுறான். அவர் சொன்ன அகிம்சையைக் கடை பிடித்து அடி வாங்குகிறான். அப்பா, அம்மாவை மாவாட்ட விட்டது போல் தனது சிறுவயதுத் தோழியையும் மாவட்ட வைக்கிறான். சாகும் வரை அப்பா செய்ததை தானும் செய்து நம்மைச் சாவடிக்கிறான்.
சமுத்திரக்கனி புரோட்டாக்கடை வைத்திருக்கிறார். கிராமத்துல காலையிலயே புரோட்டாக்கடையில கூட்டம் கூடி நிக்கிறதெல்லாம்… சினிமாவில் மட்டுமே நடக்கும். இந்தாளு நித்யா மேனனை கட்டிக்க ஆசைப்பட்டு, தனுஷை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைத்து வில்லத்தனம் செய்கிறார். அதுக்காக கன்னுக்குட்டியை வெட்டப் போகும் கொடூர மனமெல்லாம் கிராமத்தானுங்களுக்கு இருக்கவே இருக்காது, ஏன்னா அவன் பொறந்தது முதல் அதுககூடத்தான் வாழ்வான். என்ன போதையில் செய்ய வந்துட்டான்னு காட்ட, சரக்கு ஊத்திவிட்டுட்டானுங்க. நம்ம ஊர்லதான் இப்ப சரக்கு அடிப்பவர்களுக்கு தனி மரியாதையாச்சே. கனி தன்னோட கதாபாத்திரத்தை, அறிவுரை சொல்றேன் பேர்வழியின்னு இல்லாம மிகச் சரியாகவே பண்ணியிருக்கிறார். அதேபோல் பார்த்திபன்… இந்தாளு எதுக்குடா இதுலன்னு நாம நினைக்கும் போதே நல்ல காரியத்தைச் செய்து தன்னோட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சத்தியராஜ் வந்து போகிறார், பெரிதாக ஈர்க்கவில்லை.
வெளிநாட்டுப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் வரை போனவர், ஊருக்கு இட்லி விற்க வந்ததும் நித்யா மேனனை லவ்வுறார். அந்தம்மாவும் நான் இப்புடியே இட்லி அவிச்சே வாழ்க்கையை ஓட்டிக்கிறேன்னு ஒட்டிக்கிருது. தனுஷ் வீட்டில் இருந்து மகளை இழுத்துக் கொண்டு போகும் அம்மாக்காரி பாதி தூரத்தில் மகளின் கையை விடுவிக்கும் இடமும் இயக்குநர் டச், அதேபோல் கன்றுக்குட்டிக்கும் நாயகனுக்கும் ஏற்படும் உறவு, குலதெய்வ வழிபாடு என கிராமத்தைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
ராஜ்கிரணால்தான் தனது பெற்ற அப்பாவுக்கு வாழ்க்கை துவங்கியது என்பதால் அவர் மீது தனுஷ்க்கு மிகப்பெரும் மரியாதை. இதுவரை தனது மூன்று படங்களில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து இருக்கிறார். எல்லாமே சிறப்பு என்றாலும் இந்தப் படத்தில் முதிர்ந்த நடிப்பு. அருமையாக நடித்திருக்கிறார். அவர் இறந்து போனாலும் இறுதிவரை ஆங்காங்கே அவரைக் காட்டி படம் முழுவதும் காட்டியிருப்பது சிறப்பு. அம்மாவாக நடித்த கீதா கைலாசமும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்துக்கு அருண் விஜய், சில இடங்களில் எதுக்கு இவன் இப்புடி பண்ணுறான் எனத் தோன்றினாலும் தனது கதாபாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். இளவரசு குடும்பத்தை ஒருமுறை பார்த்தாலும் படம் முழுவதும் தனுஷுடன் இருந்து சிறப்புச் செய்கிறார்.
வெளிநாட்டுக் காதலியாக வரும் ஷாலினி பாண்டே ஆங்கிலம் அதிகம் பேசுவதுடன், நாமள்லாம் வில்லன்களாப்பா எனக் கேட்பதுடன் தனுஷுக்காக அண்ணனுடன் மோதி வெற்றியும் பெறுகிறார். ஆனால் பணத்தைக் காட்டி அவரால் காதலில் வெற்றி பெற முடியவில்லை. நித்யா மேனன் மாவாட்டிக் கொடுத்து வெற்றி பெற்று விடுகிறார். புரோட்டாக்கடையில் பரிமாறிக் கொண்டிருந்த நித்யா மேனன் இதில் இட்லி விற்கிறார். அது எந்தக் கடைக்காரனைக் கட்டப் போறாரோ தெரியலை என்றாலும் கதாபாத்திரமாக வாழ்ந்து விடுகிறார். திருச்சிற்றம்பலம் போல் இல்லை என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
இசையில் கலக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பதை விடுத்து இசையமைக்கலாம், நாமும் அனிருத் போன்ற பாத்திரங்கள் உருட்டிகளிடமிருந்து கொஞ்சமேனும் தப்பித்து ‘உருகுதே… மருகுதே…’ போன்ற பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். இட்லி கடை பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் சிறப்பு.
இது எனது சின்ன வயதில் எங்கள் கிராமத்தில் பார்த்த கதைதான் என தனுஷ் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் என்றாலும் எண்பது தொன்னூறு கதைக்களம் எனச் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை, இன்றைய காலத்தில் பெரிய வேலையை விட்டுவிட்டு பத்துக்கும் இருபதுக்கும் இட்லி கடை வைத்துக் கொண்டு இருப்பது போல் காட்டியிருப்பதுடன், முன்னேறிச் செல்லுங்கள் எனச் சொல்வதை விட்டுவிட்டு குடும்பத் தொழிலைப் பார்த்தால் போதும் என்று சொல்வதும், இரண்டு பெண்களை மாவாட்ட மட்டுமே பயன்படுத்தி இருப்பதும் பிற்போக்குத்தனத்தின் உச்சம்.
இந்தப் படத்துக்கு பள்ளிக்கூடப் பசங்களைக் கூட்டிக் கொண்டு போய் காட்டியதெல்லாம் எதற்காக..? இதில் என்ன வாழ்வியல் முன்னேற்றத்தைச் சொல்லியிருக்காங்கன்னு பசங்களுக்குப் பாடம் எடுத்தாங்க..? இதுல வேற காந்தி படத்தை பள்ளிகளில் காட்டியது போல் இதையும் காட்ட வேண்டுமாம்..? எதுக்காக..? படிச்சிட்டு பாரின் போய் சம்பாரிப்பதைவிட அப்பன் பார்த்த வேலையை எந்த முன்னேற்றமும் இல்லாம நீயும் பாரு, நாளைக்கு உன் பிள்ளையையும் அதையே பார்க்க வையின்னு சொல்ல ஒரு படம், இதை மாணவர்களுக்கு காட்டியே ஆகணும்ன்னு சொல்ல இங்கே அரசியல்வாதிகள். சரித்தான்.
அபத்தமான படம் என்றாலும் மேலே சொன்ன போதையும் வன்முறையும் இல்லாத படம் கொடுத்த தனுஷ்க்கு வாழ்த்துகள். இட்லி கடையை அவரின் கனவைப் போல் விரிவாக்கியிருந்தால் அதீத சுவையாக மாறியிருக்கும்.


