இசைஞானியின் சிம்ஃபொனியை நேரில் கேட்க வேண்டும். அந்த நாளை வாழ்நாளெல்லாம் நினைந்துருக வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு நிறைவேறியது. ஆம், அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை துபாய் ஓபராவில் யுஏஇ ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவினரால் இசைஞானியின் வேலியண்ட் சிம்ஃபொனி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரங்கு நிறைந்த ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவனாக அந்த இசைவெள்ளத்தில் கரைந்து போனேன்.
அந்த இசையின் அதிர்வு என்னை விட்டு நீங்க நெடுநேரம் ஆனது என்பதே உண்மை. நான்கு பகுதிகளாக வாசித்துக் காட்டப்பட்ட சிம்ஃபொனி என்னுள் நிகழ்த்திய மாயம் சொற்களில் அடங்காது. பெரியவர் மேடையில் முதல் அடி எடுத்து வைத்ததும் எழுந்து நின்ற மக்களின் கைதட்டல்கள் அடங்க நேரம் பிடித்தது. இருக்க இருக்க சிறு குழந்தையாகிக் கொண்டே போகிறார் இசைஞானி. நடை, சிரிப்பு, பேச்சு எல்லாம் அவரைக் கட்டித் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. எப்பேர்ப்பட்ட இசை, என்ன ஒரு அருமையான கலைஞர்களைக் கொண்டு சிம்ஃபொனி வாசிக்கப்பட்டது தெரியுமா?
கலைஞர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் இசையால் பேசுகிறார்கள். மிகத் துல்லியமான நகர்வுகள். பல வயலின்கள் இருக்கிறதென்றால் அனைவரின் கைகளும் ஒரே அசைவு. ஒவ்வொரு இசைக்கருவியின் பின்னாலும் அந்தக் கலைஞர்களின் செய்கை ஒரு அழகிய நடனத்தைப் பார்ப்பது போன்றே இருந்தது. கூட்டத்தையோ அவர்கள் வாசிக்கும் கருவியையோ அவர்கள் கண்கள் பார்க்கவில்லை. எழுதப்பட்டு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அந்தக் இசைக்குறிப்பை விட்டு அவர்கள் கண்கள் அகலவில்லை.
குறிப்பாக அந்த இசைக்குறிப்புத் தாளின் அடுத்த பக்கத்தை திருப்பவதற்கு ஒரே நேரத்தில் அந்தக் கலைஞர்கள் முன்னே வந்து கையை நீட்டி தாளைத் திருப்புவது நான் கண்ட அழகியல் நிகழ்வுகளில் ஒன்று. அத்தனை நேர்த்தி அவரவர்களின் ஒவ்வொரு அசைவிலும். ஒவ்வொரு முறை கைதட்டல்கள் எழும்போதும் பாராட்டை ஏற்கும் வண்ணம் அனைவரும் எழுந்து நின்று அதை ஏற்றுக் கொண்டனர். இசை இன்பத்தின் இரண்டாம் பகுதி முடிந்து மூன்றாம் பகுதிக்குள் நுழைந்ததும் உடல் முழுவதும் இசையால் நிரம்பிவிட்டார் இசைஞானி. நான்காம் பகுதி முடிந்தபிறகு மக்களின் கைதட்டல்களெல்லாம் கொஞ்சம் தொலைவாகவே எனக்குக் கேட்டன. ”என்ன செஞ்சு வச்சார் இந்த மனுசன்? இப்ப என்ன ஆகிட்டிருக்கு?” என்றுணர்ந்து, மீண்டும் சமநிலைக்கு வரவே சற்றும் காலம் தேவைப்பட்டது.
சிறிய இடைவேளைக்குப் பிறகு நம் திரைப்படங்களிலிலிருந்து சில பாடல்களின் இசையை வாசித்துக் காட்டினார்கள், அதற்கு ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் இசைக்குழுவினரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது என்றே சொல்லலாம்.
மைக்கெல் டாம்ஸ் சிம்ஃபொனி நடத்துநர், கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் நமது ஞானியை வியந்து புகழ தவறவிடவேயில்லை. மய்ஸ்ட்ரோ இளையராஜா மய்ஸ்ட்ரோ இளையராஜா என்று பெரியவரைப் பற்றி வியந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தனியாகப் பேட்டி எடுத்தால் இன்னும் நுணுக்கமான விசயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். முன்பு எஸ்பிபி நமக்குச் சொன்னதை இவரும் உறுதி செய்தார். மய்ஸ்ட்ரோ சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல, அவர் ஆகச்சிறந்த இன்ஸ்ட்ருமெண்டலிஸ்ட்டும் கூட; அவருக்குத் தெரியும் எந்தக் கருவியில் இருந்து எந்த இசை எந்த ஒலி அளவில் கேட்டால் நன்றாக இருக்கும், அதை எப்படி கொண்டு வரலாம் என அனைத்தும் அறிந்தவர் இளையராஜா என்பதை உறுதிபடக் கூறினார்.
அதன்பின்பு மேடைக்கு வந்தார் பெரியவர். ஃப்ரான்ஸ் ஷுபெர்ட்டின் அன்ஃபினிஷ்ட் சிம்ஃபொனி எழுதப்பட்ட ஆண்டு கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு; அதாவது 1828 ஆம் அக்டோபர் மாதம்; இன்று 2025 அதே அக்டோபர் மாதம் அந்த சிம்ஃபொனியை துபாயில் வாசித்து அதோடு நம் பாடலை கலந்து நானே பாடப்போகிறேன் என்று இசைஞானி சொன்னதும் பெரும் ஆரவாரம். அதே போல சிம்ஃபொனி கலைஞர்கள் வாசிக்க “இதயம் போகுதே எனையே பிரிந்தே” என பெரியவர் பாடவும் என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருகியதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அனுபவத்தை நேரில் உணரும் போதுதான் இந்த எழுத்தின் உண்மை புரியும்.
இந்த அனுபவம் மற்றவர்களுக்கு புதிதாகவோ, பெரிதாகவோ கூட இருக்கலாம், ஆனால் தமிழர்களுக்கு, இசைஞானியின் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான பழக்கமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களை சிம்ஃபொனி இசைக்கு பழக்கி வந்திருக்கிறார் இசைஞானி என்பதை துபாய் சிம்ஃபொனி நிகழ்வில் கண்டேன். இந்த இசை நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்த போதும் சரி கேட்டு முடித்த போதும் சரி, இத்தனை ஆண்டுகளாக நாம் கேட்ட பல பாடல்களில் பெரும்பாலானவற்றை சிம்ஃபொனியாகத்தான் இந்த மனிதர் நமக்குத் தந்திருக்கிறார் என்றுணர முடிந்தது.
நண்பர்களே, உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் சொல்கிறேன். இந்த இசையை முதலில் அந்தந்தக் கருவியில் வாசித்துப் பார்த்து, ஒவ்வொரு கருவியாகச் சோதித்து சோதித்து இசை கேட்டு உருவாக்கப்பட்டதல்ல. ஒரு மனிதன், அந்த ஞானி தன் கற்பனையில் கருவாக்கி, இசைக்குறிப்புக் காகிதத்தில் தன் கைப்பட எழுதி அதை அப்படியே இசைக் கலைஞர்கள் தங்களுடைய கருவிகளில் வாசிக்கும் போது இப்படி இசை இன்பம் நமக்கு கிடைக்கிறது என்றால் அது எப்பேர்ப்பட்ட படைப்பாக இருக்கும். அவர் எப்பேர்ப்பட்ட படைப்பாளியாக இருப்பார்.
நம் ஊரின் ஒரு கிராமத்தில் இருந்து தன்னுடைய உழைப்பால் அறிவால் இசை ஞானத்தால் இனி இந்தியத் திரையிசையில் யாரும் தொடமுடியாத பல சாதனைகளைப் படைத்துவிட்டு, மேற்குலகம் தங்களுடைய வெஸ்டர்ன் கிளாஸிக்கல் இசையில் சிம்ஃபொனியின் இலக்கணமாக வகுத்து வைத்த அத்தனைக்கும் உட்பட்டு இத்தகைய மாபெரும் சாதனையைப் படைத்திருக்கும் இசைஞானி நாம் எப்போதும் கொண்டாட வேண்டும். இசை போற்றுவோம். இசைஞானி போற்றுவோம். நம்மில் ஒருவர் உலக இசையின் உச்சத்தை போய்த் தொட்டுவிட்டு அவர்களால் பியாண்ட் பெர்ஃபெக்சன் என்று வாழ்த்தும் வாங்கி வந்திருக்கிறார். அவர் காலத்தில் நான் வாழ்வதும் அவர் இசையைக் கேட்டு வளர்வதும் என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.
இரண்டு நாட்கள் கழித்து இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது இசைஞானியின் காணொளி ஒன்று வந்தது. அதில் தீபாவளி வாழ்த்துச் செய்தியோடு இன்னொரு புதிய சிம்ஃபொனியும், அத்துடன் புதிய படைப்பாக சிம்ஃபொனிக் டான்சர்ஸ் என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத இருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சி பெரியவரே.
ஓர் ஒப்பற்ற கலைஞன். எவராலும் நெருங்க முடியாத சாதனைகளை தமதாக்கி நம்மையெல்லாம் பெருமைப்படுத்தும் இசைஞானிக்கு வாழ்த்துகளை அவர் பாதம் தொட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க இசைஞானி; வாழ்க அவர் புகழ்.


