VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: கோட்டையும் குட்டிச் சுவர்களும்… நிஸ்வா – பகுதி 3
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > கோட்டையும் குட்டிச் சுவர்களும்… நிஸ்வா – பகுதி 3
தொடர்கள்

கோட்டையும் குட்டிச் சுவர்களும்… நிஸ்வா – பகுதி 3

இளங்கோ ராமசாமி
Last updated: June 18, 2026 1:37 pm
13 Views
Share
11 Min Read
SHARE

கடந்த இதழில் வாசித்த  அதிகாலையில் எழுந்து சந்தைக்குப் போன அனுபவக் கதையை மறந்திருக்க மாட்டீர்கள்  என நம்புகிறேன். மறந்திருந்தாலோ வாசிக்கத் தவறியிருந்தாலோ செப்டம்பர் மாத விண்மீன் இதழை

ஒரு புரட்டுப் புரட்டி விட்டு வந்து விடுங்கள். அப்பொழுதுதான் இந்தக் கட்டுரையை முழுமையாகப் புரிந்து ரசிக்க முடியும். 

 

சந்தையைச் சுற்றிப் பார்த்துக் களைத்துப் போன கால்கள் ஓய்வை வேண்டிக் கெஞ்சும். வயிறு கப கப வெனப் பசியில் தகிக்க ஆரம்பித்திருக்கும். அந்தச் சமயத்தில் வண்டியைக் கிளப்பி ஃபலஜ் தாரிஸ் ஹோட்டலைக் கடந்து சிறிது தூரம் சென்றால் Al Funahan Al Dhabi என்ற ஒரு சிறிய உணவகம் கண்ணில் படும். அதன் கூரையில் ஒரு பெரிய ஓமானி காஃபி கூஜா பொம்மை நிறுவப் பட்டிருக்கும். அது தான் அந்தக் கடையின் அடையாளம். 

 

நிஸ்வாவில் ‘ரஃகால்’ அல்லது ‘ரகாக்’ எனப்படும் ஓமானி தோசையை உண்ண விரும்பினால் நான் செல்வது அக்கடைக்குத் தான். கோதுமை மாவில் தண்ணீரை ஊற்றிக் கரைத்து மிக மெல்லியதாகவும் பெரிதாகவும் தோசைக்கல்லில் ஊற்றித் தேய்த்து மொறு மொறுவென சுட்டெடுக்கப் படும் இந்தத் தோசை தான் ஓமானிகளுக்குப் பிரியமான காலை உணவு. இந்தத் தோசை சுடத் தெரியாத ஓமானி பெண்களுக்குத் திருமணம் ஆவது கடினம் எனச் சொல்லும் அளவிற்கு இது அவர்கள் வாழ்வில் இன்றியமையாதது. 

 

இந்தத் தோசையை வார்த்து அதன் மீது முட்டை, சீஸ், ஸாத்தர் என்னும் மூலிகைப் பொடி, தேன், ஓமான் சிப்ஸ், ஏன் நுட்டெல்லா என விதவித மான சரக்குகளைத் தூவியும் பூசியும் நமது விருப்பத்திற்கேற்பக் கொடுப்பர். 

உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ரகத்திற்கு இரண்டாக எல்லா ரக தோசைகளையும் வாங்கிக் கொடுத்து நீங்கள் அவற்றைச் சிலாகித்து உண்பதைக் கண்டால் தான் எனக்கு வயிறும் மனமும் நிறையும். 

 

அங்கேயே நல்ல திக்கான கரக் சாய் எனப்படும் நம்ம ஊரின் தரமான பால் டீ கிடைக்கும். ஆளுக்கு நாலைந்து தோசைகளையும், ஒரு தேநீரையும் உள்ளிறக்கினால் வயிறு திம்மென்றாகி ஒரு மாதிரி போதையேறும். அப்படி உண்ட களைப்புத் தீர உங்களை அலுங்காமல் குலுங்காமல் கொண்டு போய் அறையில் இறக்கி விடுகிறேன். நீங்கள் நன்கு உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதன் பிறகு உங்களை நிஸ்வாவின் புகழ் பெற்ற கோட்டைக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அந்தக் கோட்டையின் உள்ளே நிறைய ஏறி இறங்கவும் நடக்கவும் வேண்டியிருக்கும். இரண்டு மூன்று மணி நேரங்களை விழுங்கும் அளவிற்குப் பெரிய கோட்டை. 

 

நீங்கள் உறங்கிக் களைப்பாறி எழுவதற்குள் நான் கோட்டையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தேடிப் பிடித்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தவுடன் நாம் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் சரியா? 

 

நிஸ்வாவின் இதயப் பகுதியில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோட்டை ஓமானின் தனித்தன்மை வாய்ந்தது. 700 ஆண்டுகள் பழமையான இக்கோட்டையின் மிகப்பெரிய வட்ட வடிவ கண்காணிப்புக் கோபுரம் இதனை ஓமானில் உள்ள மற்ற கோட்டைகளில் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது. 

 

இக்கோட்டையின் இன்றைய இந்த வடிவத்திற்கு உரு கொடுத்தவர் 1650 களில் நிஸ்வாவை ஆண்ட சுல்தான் பின் சைஃப் அல் யரூபி என்ற இமாம். யரூபி ராஜ்ஜியத்தின் ஸ்தாபகரான இந்த இமாம், ஓமானைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த போர்ச்சுக்கீசியர்களைப் போரில் வென்று நாட்டை விட்டுத் துரத்தியவர். 

போர்ச்சுக்கீசியர்களுடனான போருக்குப் பிறகு 12 ஆண்டுகள் இக்கோட்டையைப் பலப் படுத்தும் பணி நடந்திருக்கிறது. அதன் பிறகு நூற்றாண்டுகளாக இந்தக் கோட்டை பல முற்றுகைகளையும் போர்களையும் தாங்கி உறுதி குலையாமல் நிஸ்வாவின் பெருமையாக நின்று வந்திருக்கிறது. 1957 ஜபல் அக்தர் போரில் ஆங்கிலப் படைகளின் தாக்குதலில் சிதிலமடைந்த இக்கோட்டை 1997 ஆம் ஆண்டு மீண்டும் மிகச் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டு இன்று அதன் பழமை குன்றாது காட்சியளிக்கிறது. 

 

நிஸ்வாவின் புகழ்பெற்ற இக்கோட்டை ஓமானிகளின் ராணுவத் தந்திரத்திற்கும், தற்காப்பில் அவர்களுக்கு இருந்த சாதுர்யத்திற்கும் சான்றாக நிற்கிறது. போர் தொடுத்து வரும் எதிரிகளது கண்களைக் கட்டிக், குழப்பி, அவர்களைத் திக்கு முக்காட வைக்கும் பல உத்திகள் இக்கோட்டையில் உண்டு. இக்கோட்டையின் முக்கியச் சிறப்பே 100 அடி உயரமும் 150 அடி விட்டமும் கொண்ட வட்ட வடிவக் கண்காணிப்புக் கோபுரம் தான். அக் கோபுரத்தின் மேற்தளத்தில் 360 டிகிரியிலும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் நிறுவி, எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் இக்கோட்டை மிக வலுவாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இக்கோட்டைச் சுவர்கள் பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட முடியாத அளவிற்குக் கடினமானவை. மிக உறுதியான பெரிய மரக் கதவுகள் இதனைக் காத்து நிற்கின்றன. கோட்டை வாயிலில் இரண்டு பீரங்கிகள் அலங்காரமாகக் காவல் காக்கின்றன. 

 

 

 

இந்தக் கோட்டையில் மறைவிடங்கள், ரகசியப் பாதைகள், பொய்க் கதவுகள், கிணறுகள், என நாம் கண்டு ரசிக்க ஏராளமான அம்சங்கள் உண்டு. எதிரிகள் முன்புறம் இருக்கும் பெரிய மரக் கதவுகளை எப்படியோ தகர்த்து உள்ளே நுழைந்தாலும் அவர்களது உயிருக்கு உத்திரவாதம் கிடையது. உள்ளே நுழையும் எதிரிகளைத் தாக்கி அழிக்க பல அடுக்கு தற்காப்பு ஏற்பாடுகளை இக் கோட்டை கொண்டிருந்திருக்கிறது.  

வட்ட வடிவ கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே இருக்கிறது. அந்த வழியிலும் ஆங்காங்கே மரணத் துளைகளை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். மேலேறி வரும் எதிரிகளை அந்த மரணத் துளைகளின் வழியே கொதிக்க வைத்த எண்ணை, கொதிக்க வைத்த பேரீட்சம் பழ ரசம், வெந்நீர், போன்றவற்றைக் கொட்டி உருத்தெரியாமல் பொசுக்கும் உத்திகளை வகுத்து வைத்திருக்கின்றனர். 

வழக்கத்திற்கு மாறான இக்கோட்டையின் வட்ட வடிவம் அதன் உண்மையான அளவை விடப் பெரியதாகக் காட்சியளித்து எதிரிகளை மிரட்சிக்குள்ளாக்கும் விதத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மேற்தளத்தில் இருந்து பார்க்கும் போது கோட்டையைச் சுற்றிலும் இருக்கும் பேரீச்ச மரத் தோப்புகளும் அவற்றின் பின்னணியில் தொடுவானுக்கருகில் இருக்கும் ஹஜர் மலைத்தொடர்களும் நமது கண்களுக்கு அரு விருந்து. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான குளிர் பருவத்தில் நல்ல நண்பகலிலும் மேற்தளத்தில் நின்று பார்க்கும் போது குளிரெடுக்கும். சில்லென்ற காற்று மனதை வருடிச் செல்லும்.

இக்கோட்டைக்குத் தேவையான நீரைத் தேடி வெளியே செல்லத் தேவையில்லை. கோட்டைக்குக் கீழேயே வற்றாத நீரோடை ஓடுகிறது. கிணறுகளும் இருக்கின்றன. மண்ணும், கற்களும், சுண்ணாம்பும், ஜிப்சமும் கலந்து கட்டப்பட்ட இக் கோட்டைச் சுவர்கள் பீரங்கிக் குண்டுகளையும் தாங்கி நிற்கும் ஆறு அடி தடிமனுள்ளவை.  

தனித்தன்மையான கட்டிடக் கலைக்காக மட்டுமின்றி இக்கோட்டை ஓமானின் கலாச்சாரச் சின்னமாகவும் ஒளி வீசுகிறது. இதனுள் இருபதுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் புராதன நகைகள், ஆயுதங்கள், பாத்திரங்கள், மரப் பெட்டிகள், கைவினைப் பொருட்கள், ஆடை அணி கலன்கள், ஓமானிகளின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் அரிய புகைப்படங்கள், அவர்களுடைய வாழ்வியல், மதம் எனப் பல்வேறு கூறுகள் மிக நேர்த்தியாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.  

இக்கோட்டை ஓமானின் கலாச்சாரத் தலை நகராகவும், ஓமான் இமாமேட்டாக இருந்த போது பல நூற்றாண்டுகள் அதிகார மையமாகவும் செயல்பட்டது. இங்கு கல்வியும், மதமும், வர்த்தகமும், அதிகாரமும் செழித்து வளர்ந்தன. இன்றைய நிஸ்வாவின் செழுமைக்குக் காரணம் இந்த வலுவான அதிகார மையமே.  

இவ்வளவு சிறப்புக்கள் இருப்பினும் இக்கோட்டையை நமது ராஜஸ்தானில் இருக்கும் கோட்டைகளுடன் ஒப்பிட்டால் இது அளவில் மிகவும் சிறியது. இதன் அறைகள் மிக மிகச் சிறியவை. இதில் காணப்படும் பெரிதாக வேலைப் பாடுகள் எதுவும் அற்ற மண் சுவர்களும் சிறிய சாளரங்களும் நமக்கு, ‘“அட இவ்வளவு தானா?” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும்.  

இக்கோட்டையினுள்ளேயே ஒரு சிறிய தோப்பு இருக்கிறது. அங்கு மாடுகளைப் பூட்டி ஏற்றம் இறைக்கும் பழங்கால நீர்ப்பாசன முறையைக் காட்சிப் படுத்தியிருக்கின்றனர். தினமும் ஒரு இளைஞர் ஓமானி அல்வாவைக் கிளறும் செயல் முறை விளக்கமும் நடைபெறும். கோட்டையின் உட்புறம் சமையலறை, இமாமின் படுக்கை அறை, மதராஸா, விருந்தினர்கள் அறை, வழிபாட்டு அறை, ஆயுத அறை, தானிய அறை, ஒரு சிறு சிறைச் சாலை எனச் சுற்றிப் பார்க்க பல பகுதிகள் இருக்கின்றன.  

 

மேலும் கீழும் நடந்து அலைந்து களைத்துப் போனவர்கள் இளைப்பாற ஒரு கஃபேவும் இருக்கின்றது. மதியம் இரண்டு மணி போல உள்ளே நுழைந்தால் நான்கைந்து மணி வரை நிதானமாகச் சுற்றிக் கொண்டிருந்து விட்டு வெளியே வரும் போது மேற்கில் சூரியன் கீழிறங்கிக் கொண்டிருப்பான்.  

கோட்டையில் இருந்து சந்தைக்குப் போகும் குறுகிய தெருவின் கிழக்குக் கோடியில் ஒரு வாயில் இருக்கிறது. வடக்குப் பார்த்த அந்த நுழைவாயிலின் மேலே இருக்கும் ஒரு அழகிய உணவகத்தில் அமர்ந்து குளிர்கால மாலை நேரத்தை ஒரு சில சமோசாக்களோடும் ஒரு தேநீரோடும் துளித் துளியாகச் சுவைத்துக் கொண்டே அன்றைய தினத்தின் அனுபவங்களை அசை போடலாம். அது பரபரப்பான கோட்டையின் சுற்றுப்புற நிகழ்வுகளைக் கண்டு ரசிக்கத் தோதான இடம்.  

நாம் நிஸ்வாவின் புகழ்பெற்ற சந்தையும் கோட்டையும் தந்த அனுபங்களில் இருந்து வெளிவருவதற்குள்ளாகவே மாலை மங்கி இருள் கவிந்து விடும். அதற்காகவே காத்திருந்த நான் உங்களை அழைத்துக் கொண்டு கோட்டையில் தென்புறமாக பழைய நிஸ்வா நகரத்தின் குறுகலான வீதிகளுக்குள் ஓரு நடை செல்வதே அடுத்த திட்டம்.  

அந்தக் குறுகிய தெருக்களின் இருபுறமும் இடைவெளியின்றி சிறிதும் பெரிதுமாக சிதிலமடைந்த பழைய மண் வீடுகள் இருப்பதைக் காண முடியும். சமீப காலமாக அவற்றில் பல வீடுகள் புனரமைக்கப்பட்டு விடுதிகளாகவும், காஃபி ஷாப்புகளாகவும், ஐஸ்க்ரீம் பார்லர்களாகவும், குட்டிக் குட்டி துரித உணவகங்களாகவும் மின்ன ஆரம்பித்துள்ளன. இரவின் நிழலில் அத்தெரு அழகிய வண்ண வண்ண சரவிளக்குத் தோரணங்களால் ஜோடிக்கப்பட்டு ஒரு மாய லோகத்தைப் போலக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு புதிய காஃபி ஷாப்பும் அதன் மேசைகளில் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு, வித விதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்தவாறே நடந்தால் பத்து நிமிடங்களுக்குள் ‘அல் அக்கர்’ என்ற பெரும் மதிற் சுவரைச் சென்றடைந்து விடலாம்.  

17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மதிற் சுவர் சுமார் 2 கீ மீ சுற்றளவு கொண்டது. 20 முதல் 23 அடி உயரம் கொண்ட இந்த மதிற் சுவர் ஆறு முதல் எட்டு அடி அகலம் கொண்டது. இதன் மேற் தளத்தில் நாம் காலார நடக்க முடியும். இச்சுவரில் குறிப்பிட்ட இடை வெளிகளில் ஆறு கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. தோராயமாக ஒவ்வொன்றும் 35 முதல் 45 அடி உயரம் கொண்டவை. அக்காலத்தில் கவர்னர்கள், நீதிபதிகள், மதகுருமார்கள், ராணுவத் தளபதிகள், அரசின் உயர் அதிகாரிகள் வாழ்ந்த இந்த அதிகார மையத்தை எதிரிகளிடம் இருந்து காக்கும் பொருட்டுக் கட்டப்பட்ட இந்த வலுவான கோட்டைச் சுவர் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது.  

கொரோனாவின் பிடியில் உலகம் முடங்கிக் கிடந்த போது நிஸ்வாவின் சமூகம் ஒன்றிணைந்து இந்தச் சுவரைப் புனரமைக்க முடிவு செய்து வேலைகளைத் துவக்கினர். முதலில் 700 மீட்டர் நீளமுள்ள சுவர் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப் பட்டது. அந்தச் சுவரின் மீது ஒரு சிறு நடை போய் வர ஓமானிகளுக்கு 500 பைசாக்களும் (இந்திய மதிப்பில் 113 ரூபாய்) பிற தேசத்தவர்களுக்கு ஒரு ரியாலும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு ரியால் என்பது ஆயிரம் பைசா.  

இந்தச் சுவர் புனரமைக்கப்பட்டதால் அதன் பாதுகாப்பில் இருந்த குட்டிச் சுவர்களாய்க் கவனிப்பாரற்றுச் சரிந்து கிடந்த மண் வீடுகளும் மெள்ள மெள்ளப் புத்துயிர் பெற்று உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே தங்கும் விடுதிகளும், காஃபி ஷாப்புகளுமாக கூன் விழுந்து, கண்கள் பஞ்சடைத்துப் போய்த் தோல் சுருங்கிப் பரிதாபமாகக் கிடந்த கிழவியைப் போலச் சோம்பிக் கிடந்த அந்தப் பழைய ஊர் இன்று பருவமடைந்த இளம் பெண் போன்று தன்னைச் சோடித்துக் கொண்டு கண்களை உறுத்தாத சீன விளக்குகளின் வெளிச்சத்தில் தக தகவென மினுக்கிக் கொண்டிருக்கிறது. சுவரின் மறுபுறம் நெடித்துயர்ந்த பசுமையான பேரீச்சமரங்களும் சல சலத்து ஓடும் ஃபலஜ் எனப்படும் நீரோடைகளும். இவற்றைக் கண்டு ரசித்தவாறே நடப்பதற்கும் இந்த பழமை மாறாச் சூழலில் ஓரிரு நாட்கள் தங்கி அமைதியாக இளைப்பாறவும் மக்கள் சாரி சாரியாக வருகின்றனர். குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் பார்க்கும் இந்த எளிய ஓமானிகளின் ஒற்றுமையைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பெருமையாக இருக்கிறது.  

அவர்கள் மிகவும் நிதானமாக ஆனால் மிக உறுதியாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறுவதைக் கடந்த சில ஆண்டுகளில் கண்கூடாகக் காண்கிறேன். இந்தச் சுவரைப் புனரமைக்கும் பணி 2028 ல் தான் நிறைவுறும் என நம்பப் படுகிறது. அதற்கு மேலும் ஆகலாம். ஆனால் 2020 க்கு முன் வெறும் குட்டிச் சுவர்களாக யாரும் சீந்துவாரற்றுக் கிடந்த, கார்கள் வசதியாகச் சென்றுவர முடியாத ஒரு பழைய இடிபாடுகள் நிறைந்த பகுதி இன்று மிகவும் பரபரப்பான தொரு சுற்றுலாத் தளமாக மாறியிருப்பது ஆர்வமுள்ளோருக்கு ஒரு பாடம்.  

இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லலாம் இப்படிப்பட்ட தனித்தன்மையான லட்சக் கணக்கான கிராமங்கள் உள்ளன. எனது பூர்வீகமான தும்பிவாடி என்ற சற்றே பெரிய கிராமத்திலும் இது போன்ற குறுகிய தெருக்களும் காரைப் பூச்சுப் பூசப்பட்ட, தேக்கு மர விட்டங்களையும், தூண்களையும், தடித்த மரக் கதவுகளையும் கொண்ட பழமையான வீடுகள் உள்ளன. ஊர் மக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக உழைத்தால் இப்படிப் பட்ட கிராமங்களைச் சுற்றுலாத் தளங்களாக நிச்சயமாக மாற்ற முடியும். ஆனால் அது நடக்குமா? என மனம் ஏங்கிக் கிடப்பது வழக்கமாகி விட்டது.  

நிஸ்வாவிற்குக் குடியேறி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் அந்தச் சுவர் இருக்கும் பகுதிக்குள் முதன் முதலில் கால் வைத்தேன். அதன் பிறகு பல முறை பல நண்பர்களை அங்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி வந்துள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் அங்கு ஏற்படுத்தப் பட்டுள்ள ஏதேனும் ஒரு புதிய அம்சம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. கடந்த முறை அந்தச் சுவரில் ஒரு ஈராக்கியக் கலைஞர் புடைப்புச் சிற்பமொன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். இப்படி கேலக்ஸியின் வாசகர்களை விண்மீன் இதழ் வழி அழைத்துச் சென்று அச்சுவரைச் சுற்றிக் காட்டியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

இரவு உணவை அங்கிருக்கும் ஏதேனும் ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு நீண்ட நாளின் களைப்புத் தீர அறைக்குச் சென்று நிம்மதியாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருங்கள். நீங்கள் விழித்துப் பார்க்கும் போது நவம்பர் மாத விண்மீன் இதழோடு உங்கள் முன் நிற்பேன். அடுத்த இதழில் உங்களை ஓமானின் மிகப்பெரியதும், மிக நவீனமானதுமான Across Ages அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 

PrevPreviousகைத்தூக்கி பாபாக்கள்
Nextபிரிவின் மடல்Next

You Might Also Like

கைத்தூக்கி பாபாக்கள்
கணவாயும் குளங்களும்!!! நிஸ்வா – பகுதி 6
புதிய தொடக்கம்…
பிரிவின் மடல்
விண்மீன் அக்டோபர் 2025 மின்னிதழ்
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் அக்டோபர் 2025
Previous Article கைத்தூக்கி பாபாக்கள்
Next Article பிரிவின் மடல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?