பகுதி 3: கங்கா என்னும் மர்மம்
கங்கா (காங்கேயன் பசுபதி)
முன்கதைச் சுருக்கம்: நாகைப் பெருந்துறையில் ஒற்றன் சாத்தன் கொல்லப்பட, அவனது கையிலிருந்த சிலேடை ஓலை சோழரின் கடாரப் படையெடுப்புத் திட்டத்தின் இரகசியக் குறியீடு என்பதை வீரசோழி கண்டறிகிறாள். அச்சுவடியைக் கைப்பற்ற வந்த கடார ஒற்றனின் தாக்குதலை பூவணத்தின் விடுதியில் முறியடிக்கும் வேளையில், அச்சுவடியில் உள்ள ஆழ்கடல் கணிப்பைக் கொண்டு ‘கங்கா’ எனும் புனைபெயரில் இயங்கும் கவிஞன் வேறு யாருமல்ல, தளபதி வீரமாறனேதான் என்பதை வீரசோழி உணர்கிறாள்.
இனி…
நிலவொளி ஊடுருவிய அந்த மங்கலான அறையின் வாசலில், உருவமொன்று இருளைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தது. பளபளத்த நச்சுக்குறுவாளொன்று வீரசோழியின் முதுகைத் துளைக்கக் குறிபார்த்து நீண்டது.
வீரமாறனின் விழிகளில் ஆபத்தின் நிழல் மின்னியது. அவன் இடக்கரத்தால் வீரசோழியின் இடுப்பை வளைத்துத் தன்பக்கம் சுண்டி இழுத்தான். அதே கணத்தில், வலக்கையிலிருந்த வாள் உறையிலிருந்து வெளிப்பட்டு, பாய்ந்து வந்த குறுவாளை ஓங்கித் தட்டியது. ‘கணீர்’ என்ற ஒலியோடு இரும்பும், இரும்பும் மோதியதில் அனற்பொறிகள் சிறகடித்துச் சிதறின. வீரமாறனின் பரந்த மார்போடு ஒட்டி நின்றிருந்த வீரசோழியின் நெஞ்சு கணப்பொழுது விதிர்த்தது.
பாய்ந்து வந்தவன் கடாரத்து ஒற்றன் அநங்க தேவன். தன் எதிர்பாராத தாக்குதல் வீணானதை உணர்ந்தவன், இடுப்பிலிருந்த சிறு களிமண் குடுவையைத் தரையில் ஓங்கி அடித்தான். உள்ளே காய்ந்த வேம்பிலைகளும், கடுகு எண்ணெயில் நனைத்த பஞ்சும், கரித்தூளும், சிறிதளவு படிக்காரம், கருஞ்சீரகம் இன்னும் சில பொருட்களும் கலந்திருந்தன. உடைந்த குடுவையின் வாயில் பற்றிய தீப்பொறி, அந்தக் கலவையை அடர்த்தியான வெளிறிய புகையாக்கியது. அறையெங்கும் புகை மண்டலம் படர, இருவரும் கண்களைக் கசக்கிக் கொண்டு இருமினர். வீரமாறன் அந்த ஒற்றனைத் துரத்திப் பிடித்தான். பலகணியை நெருங்கிய அநங்க தேவனின் கால் முள் பதித்த கால்விரல் இரும்புப் பிடியில் சிக்கியது. வீரமாறன் வாளை உயர்த்தினான். ஆனால் அநங்க தேவன் திரும்பி, சிறு ஈட்டியொன்றை வீசினான். அது வீரமாறனின் வாள் முனையைத் தட்டி, அவன் வாள் பலகணிச் சட்டத்தில் ஆழப் பதிந்தது. அதற்குள் அந்த ஒற்றன் பலகணி வழியே பாய்ந்து இருளில் கரைந்துவிட்டான். வீரமாறன் வாளை வலுக்கட்டாயமாக இழுத்தெடுத்தான். முனை சிறிது உடைந்திருந்தது. அந்த வாள் உடைந்த இரும்போசை, அவனுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. சாதாரணமானதொரு கடார ஒற்றனல்ல இந்த எதிரி என்பதை மாறனின் கூர்ந்த பார்வை துல்லியமாக உணர்ந்துகொண்டது.
புகை மெல்ல விலகியது. வீரசோழியின் கூர்மையான பார்வை வீரமாறனின் மீது நிலைத்து நின்றது. “அந்த ஓலையில் தீட்டப்பட்டிருந்த மையைக் கவனித்தேன், தளபதியாரே! அது நாகை அங்காடியில் சாதாரண மக்கள் வாங்கும் மையல்ல. சோழக் கடற்படையின் உயர்மட்டத் தளபதிகள் மட்டுமே போர்த்திட்டங்களை ரகசியமாக வரையப் பயன்படுத்தும் கடுக்காயும், அரக்கும் கலந்த பிரத்தியேக மை. அதுமட்டுமன்றி, இந்தச் சிலேடையில் ஒளிந்திருக்கும் கடல் வியூகம், கடலையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிக்கே சாத்தியம். சோழப் பேரரசின் பெரும்படையில் கவிதை உள்ளம் கொண்ட மாவீரன் யாராக இருக்க முடியும்?”
பெருமூச்சொன்று வெளியானது வீரமாறனிடமிருந்து. தப்பிப்பதற்கு இனி வழியேதும் இல்லை என்பதை உணர்ந்த அவனது குரலில், ஆழ்கடலின் அமானுஷ்ய அமைதி குடிகொண்டது. “உம் மதிநுட்பம் வென்றது தேவி. ஆம், நான்தான் கங்கா. சோழ நாட்டின் மீது உயிர்நாடி கொண்டவன்.”
வீரசோழி சில நொடிகள் அசையாது நின்றாள். “ஓலை உன்னுடையதல்ல என்று முன்னரே கூறினீரே. அது பொய்யா?”
“ஆம்.” எந்தத் தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டான் வீரமாறன். “நான் கவிஞன் என்பது தெரிந்தால் என் வாளுக்குச் சபை மரியாதை தராது என்ற அச்சம் இருந்தது. முன்னொருமுறை, நான் இயற்றிய வெண்பா தளை தவறியது. புலவர் சபையின் முன், போரில் வாள் இழந்த வீரனைவிடக் கேவலமாகத் தலைகுனிந்து நின்றேன்.”
வீரசோழி அந்த ஓலையை மீண்டும் விரித்துப் பார்த்தாள். அவளது கண்கள் இரண்டாம் அடியில் நிலைத்தன. “இதிலும் தளை தட்டுகிறது தளபதியாரே. ‘சேர்ந்தவங்கம்’ என்று நீர் பிரித்த இடத்தில் மாமுன் நிரை வந்துவிட்டது. ‘சேர்ந்த வங்கம்’ என்று பிரிக்காமல், ‘சேர்ந்தவங் கந்திரும்ப’ என்று அமைத்திருந்தால், காய்முன் நேர் வந்து தளை தப்பாதிருந்திருக்கும்.” மெல்லச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பில் ஏளனம் இல்லை, கரிசனமே இருந்தது. “ஓர் இலக்கணப் பிழை வெறும் எழுத்துப் பிழையல்ல தளபதியாரே. சொல்ல வந்த பொருளின் வேகத்தில் மனம் தடுமாறியதற்கான சான்று அது. வாளை ஏந்தும் கைகள் எழுத்துக்களையும் இவ்வளவு கூர்மையாகக் கையாள வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?”
தலை குனிந்தான் வீரமாறன். “இலக்கணத்தை விட உணர்வு முக்கியம் என்று கருதினேன் தேவி.” ஒரு கணம் தயங்கி, “ஆனால் இன்று புரிகிறது. வாள்வீச்சில் பிசகினால் உடல் காயப்படும். கவிதையில் தளை பிசகினால், படைப்பின் உயிரே காயப்படும்” என்றான்.
“தளை தவறிய வெண்பா கவிஞனை அழிப்பதில்லை தளபதியாரே. தவறை மறைக்கும் தயக்கமே கலையை அழிக்கும்.” அவளது விழிகள் அவனைக் கூர்மையாகத் துருவின. “ஆனாலும்… போரின் மறைச்செய்தியை ஏன் இப்படிச் சிலேடையில் மறைத்து எழுதினீர்?”
“என் போர்த் திட்டத்தைக் கடாரத்து ஒற்றர்களிடமிருந்து காக்கவே சிலேடையாக வடித்தேன். மாநக்கரம் தான் நம் இலக்கு என்பதை, எதிரிக்குக் காதல் கவிதையாகத் தோன்றும் வண்ணம் புனைந்தேன்.” வீரமாறனின் குரலில் குற்றவுணர்வு நிழலாடியது.
புருவம் சுருக்கினாள் வீரசோழி. அவள் கண்களில் தெரிந்த மின்னல் வியப்பல்ல, அடக்கப்பட்ட கோபமாகும். “தளபதி தன் போர்த் திட்டத்தைக் கவிதையாக எழுதி ஒற்றனின் உயிரைப் பலிவாங்குவதா? உங்கள் அறிவின் செருக்கு, சோழ தேசத்திற்குச் சிறந்த ஒற்றனை இழந்த வடுவை மட்டும் தரவில்லை, நம் ஒற்றர் வலைப்பின்னலையே சிதைத்திருக்கிறது!”
“அது அறிவின் செருக்கல்ல தேவி.” குரலில் கனிவை ஏற்றினான் வீரமாறன். “என் கவிதை அடையாளத்தை உலகம் அறிவதை விட, என் திட்டம் எதிரிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பயன்படுத்திய மாற்று வழி அது. சாத்தனுக்கு அது புரியவில்லை என்பது என் துரதிர்ஷ்டம்.”
“மாற்று வழி என்றால் அது உங்கள் ஆட்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனுக்குப் புரியாத சங்கேதம் எப்படிப் போர்த் திட்டமாகும்? உங்கள் கவிதைப் பெருமையால் சோழ நாடு சிறந்த ஒற்றனை இழந்துவிட்டது.” அவள் வார்த்தைகள் சவுக்குப் போல் அவனைத் தாக்கின.
“அவன் எதிரிகளிடம் பிடிபட்டால் சங்கேதம் உடையக் கூடாது என்பதற்காகவே அப்படி எழுதினேன். ஆனால், அவன் பிடிபடுவதற்கு முன்பே உயிரிழப்பான் என்று நான் கணிக்கவில்லை…” அவனது குரலில் வேதனை தெரிந்தது.
“ஆம்… என் பிழையே. புலவர் சபையில் அன்று நான் அடைந்த அவமானத்தை விட, இன்று உங்கள் முன் நிற்கும் இந்தக் கணம் என்னை மிகவும் வதைக்கிறது. என் அறிவாற்றல் எனக்கான கவசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதுவே சாத்தனின் மரணக் கண்ணியாகிவிட்டது.”
அவனது குரலில் இருந்த அந்த உண்மையான குற்றவுணர்வு, அவளது கோபத்தின் தீவிரத்தைக் குறைத்தது. வாள்வீச்சில் அஞ்சாத அந்த மாவீரன், தன் தவறை எந்தத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்ட விதம், அவள் கண்களில் மெல்ல வேறொரு ஒளியாகப் படர்ந்தது.
வீரமாறன் அவளைக் கவனித்தான். விளக்கின் ஒளியில் அவளது நெற்றியில் வழிந்த சிறு வியர்வைத் துளி, கூர்மையான சிந்தனையின் அடையாளமாகத் தெரிந்தது.
பார்வையைத் தாழ்த்தினான் வீரமாறன். “இனி நான் எழுதும் எந்தச் சங்கேதமும் என் அறிவின் பெருமைக்காக இருக்காது தேவி. அதைச் சுமந்து செல்லும் ஒற்றனின் உயிரைப் பாதுகாக்கும் அளவுக்குத் தெளிவாக இருக்கும். போர்த் திட்டம் என்பது எதிரியை ஏமாற்ற மட்டுமன்றி, நம்மவர்களைக் காக்கவும் வேண்டும் என்பதை… சாத்தன் தன் உயிரைக் கொடுத்து எனக்குக் கற்றுக்கொடுத்துவிட்டான்.”
“உங்கள் சிலேடையில் சிறு திருத்தம் செய்ய அனுமதிப்பீர்களா, தளபதியாரே?” என்று கேட்டவள், அவன் பதில் சொல்வதற்குள் தன் எழுத்தாணியை எடுத்தாள். அந்த ஓலையில், ‘கார்த்திகைமீன் சேர்ந்தவங்கம் திரும்ப’ என்ற அடிக்குக் கீழே, நுண்ணிய சுழியொன்றைப் பொறித்தாள். “இந்த ஒற்றைச் சுழி எதிரிக்கு வெறும் அணிகலன். ஆனால் நம் ஒற்றனுக்கோ, ‘மீன் மறையும் நாழிகையில் வா’ என்று மெல்லக் கூவும். மறைபொருள் உங்களுக்கு மட்டும் விளங்கினால் போதாது தளபதியாரே. அதைச் சுமப்பவனுக்கும் வழிகாட்ட வேண்டும். சாத்தனுக்கு இந்த ஒற்றைச் சுழி இருந்திருந்தால்…” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அதற்கானத் தேவையும் இல்லை.
வீரமாறன் அசந்து போனான். தன் கலையையே தன்னைவிடக் கூர்மையாக அவள் வாசித்துச் செதுக்கியதைக் கண்டு அவன் நெஞ்சில் வியப்பும், மரியாதையும் ஒருசேரப் பொங்கின. ஓலையைத் திரும்பப் பெற அவன் கை நீட்டியபோது, அது அவள் விரல் நுனியில் கணப்பொழுது தயங்கி நின்றது. இருவரின் கைகளும் அந்தச் சுவடியின் மேல் மெல்லத் தீண்டிக்கொண்டன. எழுத்தாணியின் குளிர்ச்சிக்கு நடுவே எழுந்த அந்த வெதுவெதுப்பு, இருவரையும் நொடிப்பொழுது அசைவின்றி நிறுத்தியது. விளக்குச் சுடர் அவர்களது நிழல்களைச் சுவரில் ஒன்றாய்க் கலந்தது.
“கவிதைக்கும் திருத்தம் வேண்டும் என்றீரே. என் முதல் திருத்துநர் நீங்களே தேவி” என்றான் வீரமாறன், குரலில் லேசான மென்னகை பொதிந்திருக்க. வீரசோழி விரைந்து அந்த ஓலையை விட்டு விலகினாலும், தன் இதழோரம் மலர்ந்த புன்னகையை மட்டும் மறைக்க அவளால் இயலவில்லை.
இருட்டறையில் நிகழ்ந்த அந்த உரையாடல் அவர்கள் இருவருக்கும் இடையே புதியதொரு பிணைப்பை உருவாக்கியிருக்க… மறுபுறம், அந்த இருண்ட நகரத்தின் மற்றொரு முனையில் வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது.
அதே வேளை, அலைகள் ஓயாது ஆர்ப்பரிக்கும் வங்கக் கடற்கரையை ஒட்டிய செண்பகப் பூஞ்சோலை.
புதிய தேக்கு மரக் கட்டைகளின் நறுமணத்தோடு, உவர்ப்பான இரவுக் கடற்காற்றும் சிலுசிலுவென வீசியது. முழுநிலவொளியில், முகிலனும் யாழினியும் தனிமையில் கூடியிருந்தனர்.
குளிர்ந்த காற்று யாழினியின் கருங்குழலை மெல்ல வருடிச் சென்றது. கடலை நோக்கி ஆழ்ந்து செவிமடுத்தாள் அவள். அலை கரையை அறைந்து மீளும் ஓசையில் அவளுக்குப் புரியாத மறைவில்லை. எந்த அலை மந்தமாக வருகிறது, எது அடியில் கிழக்கு ஓட்டத்தை மறைத்துக்கொண்டு சீறுகிறது என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றவள் அவள்.
“அலை மேலே அமைதியாக இருக்கிறது முகிலா,” என்றாள் யாழினி மெல்லிய குரலில். “ஆனால் அடியில் நீரோட்டம் மாறத் தொடங்கிவிட்டது. பெரும் புயல் பிறக்கவிருக்கிறது.”
முகிலன் வியப்போடு அவளை நோக்கினான்.
“விண்மீன்கள் உனக்கு வழிகாட்டினால்… அலை எனக்கு வழிகாட்டும்.”
இருவரும் மை தீட்டிய வானில் சிதறிக் கிடந்த விண்மீன் கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தனர்.
“என் தந்தை வாள் பிடித்த வீரன் அல்ல யாழினி,” முகிலனின் குரல் தணிந்தது. “அவர் கயிறு பிடித்த மாலுமி. பாய்மரம் நடுங்கும் ஓசையைக் கேட்டே காற்று மாறப்போகிறது என்று கணிப்பார். கப்பலின் மரத்தடியில் காதை வைத்தால், அலை கீழே எங்கு ஓடுகிறது என்று அறிந்துவிடுவார்.”
யாழினி அமைதியாக அவனது விழிகளையே நோக்கிக் கேட்டாள்.
“முன்னொருமுறை ஈழப் பயணத்தில், காரிருள் பனியில் முன்னணி சோழக் கப்பல்கள் தவறான சுழல் ஓட்டத்தில் சிக்கிக்கொண்டன. அப்போது என் தந்தை தன் கப்பலைப் பக்கவாட்டாகத் திருப்பி, அலை முறியும் இடத்தைப் பிற கப்பல்களுக்குக் காட்டினாராம். மற்றவர்கள் தப்பித்துக் கரை திரும்பினர். அவர்… கடலன்னைக்கு இரையாகிவிட்டார்.”
முகிலன் வானில் ஒளிர்ந்த கார்த்திகை விண்மீனை உற்று நோக்கினான். அவனது கண்களில் நீர் திரண்டது.
“அம்மா எப்போதுமே ஒரே சொல்லைத்தான் சொல்வார்… ‘உன் தந்தை போரில் சாகவில்லை. மற்றவர்கள் வழிகாண தன் கப்பலையே அலைக்குக் கொடுத்துவிட்டார்’ என்று.”
யாழினி அவனது முரட்டுக் கரங்களைத் தன் மென்கைகளுக்குள் ஆதரவாக எடுத்துக்கொண்டாள். ஆறுதலாக அவனைத் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொள்ளப் போன அந்தப் புனிதமான நொடி…
அலைகளின் தாளத்தை மீறி ஒரு சலசலப்பு யாழினியின் செவிகளை எட்டியது. அலைகள் மணலைத் தொடும் சத்தத்தோடு, கனமான காலடிகள் ஈர மணலில் பதுங்கி நடக்கும் அதிர்வை அவளது பாதங்கள் சட்டெனக் கணித்தன. மென்விரல்கள் முகிலனின் கையை இறுகப் பற்றின.
“முகிலா… எச்சரிக்கை! இருளில் யாரோ நெருங்குகிறார்கள்,” என்று பதறினாள் யாழினி.
சொல்லி முடிப்பதற்குள், செண்பகப் புதர்களுக்குப் பின்னிருந்து நான்கு கரிய நிழல்கள் பாய்ந்து வந்தன. முழுநிலவின் கதிர்களில் வளைக்கத்திகள் கொடூரமாகப் பளபளத்தன. இருளில் மினுமினுத்த வஞ்சகக் கண்கள். அவர்கள் யார்? எதற்காக வந்தார்கள்? யூகிப்பதற்குள் முகிலனைச் சூழ்ந்துகொண்டனர் அந்த மர்ம மனிதர்கள்.
இருளில் ஒரு பளபளப்பு மின்ன, முகிலனின் நெஞ்சைப் பிளக்கும் வெறியோடு முன்னால் நின்றவனின் வளைக்கத்தி பாய்ந்து வந்தது!
(தொடரும்…)

