சிலேடைச் சுவடியின் சதி
– கங்கா (காங்கேயன் பசுபதி)
உப்பளக் காற்றும், ஓங்கி ஒலிக்கும் கடலலையின் முழக்கமும் நாகைப் பெருந்துறையின் நள்ளிரவுக்கு உயிரூட்டின. பாய்மரக் கம்புகளில் உரசிக் கடந்த காற்று சீழ்க்கையொலி எழுப்ப, கடலன்னையின் மடியில் அசைந்தாடி மிதந்தன மாபெரும் மரக்கலங்கள். சாவகத் தீவிலிருந்து வந்திறங்கிய நறுமணப் பொருட்களின் வாசனையும், புதிய தேக்கு மரங்களின் நெடியும் அந்த நள்ளிரவுக் காற்றில் செவ்வனே கலந்திருந்தன. கார்மேகங்கள் நிலவை முழுதாய் மறைத்திருக்க, அந்த மையிருட்டிலும் சோழர்களின் கடற்படை, விடிந்தால் பகைவனின் குருதி குடிக்கும் பெருஞ்சீற்றத்தை உள்ளடக்கி அமைதியாகப் பதுங்கியிருந்தது.
மூன்று வீரர்கள் கைகோர்த்துக் கட்டியணைத்தாலும் அகப்படாத தடிமன் கொண்ட பாய்மரங்கள், விண்முட்டும் அரண்மனைக் கோபுரங்களென எழுந்து நின்றன. இப்பாய்மரங்கள் அனைத்தும் மாமன்னர் ராஜேந்திர சோழர் நேரில் விடுத்த வாய்மொழி ஆணையைத் திருமந்திர ஓலை அதிகாரி செவிமடுத்து எழுத்தாக்கிய ‘திருவாய்க்கேழ்வி’யின்படி, கடாரப் படையெடுப்புக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட பெரும் நாவாய்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆங்காங்கே எரிந்த பந்தங்களின் செந்நிற ஒளியில், அந்தப் பாய்மரங்களின் உச்சியில் கட்டப்பட்டிருந்த சோழப் புலிக்கொடி வீறுடன் பறக்க, துறைமுகத்தின் மணற்பரப்பில் விழுந்த பெரும் நிழல்கள் அதன் அசைவோடு சேர்ந்து நடனமாடின.
பல்வேறு தேசத்து வணிகலன்கள் கூடும் அங்கே, சீனத்துப் பட்டும் ஸ்ரீவிஜயத்துக் கற்பூரமும் மலைமலையாய்க் குவியும். சோழரின் கடல் வணிகப் பாதையைச் சீனக் கடல்வரை சீண்டிய கடாரத்து வேந்தன் சங்கிராம விஜயதுங்கவர்மனுக்குப் பாடம் புகட்ட, ராஜேந்திரர் தீட்டிய மாபெரும் சூளுரையே இந்தப் படையெடுப்பு. அகில், சந்தனம், ஏலக்காய் வாசனையோடு கடல் உப்பின் நெடியும் வீசிய அந்தத் துறைமுகக் காவலரணில், மாமன்னரின் மெய்க்காப்பாளர்களான வேளைக்காரப் படையினரின் வாள் முனைகள் பந்த ஒளியில் மின்னி மறைந்தன.
துறைமுகத்தின் ஆரவாரத்திலிருந்து சற்றுத் தள்ளி, காரிருள் கவிந்த மரங்களடர்ந்த பகுதியில் அமைந்திருந்தது பூவணத்தின் விடுதி. பூவின் மென்மையும், வாளின் கூர்மையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள் அவள். அவளது காந்தக் கண்களில் உறையும் மர்மம், அவளைச் சிலருக்குத் தெய்வத் தன்மை பொருந்திய ‘ஏகவீரி’யாகக் காட்டியது. பல்வேறு தேசத்து மொழிகளும், மறைவான செய்திகளும் தடையின்றிப் புழங்கும் இடம் அது. சோழப் படைவீரர்கள், பல தேசத்து ஒற்றர்கள், வேற்றுநாட்டு வணிகர்கள் என அந்தி சாய்ந்தால் கூடும் அந்த விடுதியின் பின்புறம்… காரிருள் கவிந்த மரத்தடியில் கத்தியொன்று இருளைக் கிழித்தது. தன்னுயிரைக் காக்க அல்ல, தன்னுள் இருக்கும் மறைபொருளைக் காக்க அவன் போராடினான். ஆனால் நெஞ்சில் ஆழமாக இறங்கிய குத்து அவனை வீழ்த்தியது. நள்ளிரவின் இருண்ட அமைதியைக் கிழித்துக்கொண்டு மரண ஓலம் அதிர்ந்தது.
பொழுது புலர்ந்தது. நாகைப் பெருந்துறை வழக்கம் போல் சுறுசுறுப்படைந்தது. வீதிகளில் புரவிகளின் குளம்பொலியும் போர் முரசொலியும் எழத் தொடங்கின. ஆனால், பூவணத்தின் விடுதிக்குப் பின்புறம் இருந்த மரத்தடியில் மட்டும் மரணத்தின் குளிர்ந்த அமைதி குடிகொண்டது.
சோழ ஒற்றர் படையின் தேர்ந்த வீரன் சாத்தன் நெஞ்சில் ஆழமாகக் குத்துப்பட்டுக் கிடந்தான். உடலெங்கும் வழிந்த செங்குருதி உறைந்து கறுத்துப்போயிருந்தது. அவனது வலதுகை எதையோ இறுகப் பிடித்தபடி மரத்திருந்தது. சடலத்தை முதலில் கண்ட மூத்த வீரன் கோதண்டன், செய்தி அனுப்பித் தண்டநாயக்கர்களை வரவழைத்திருந்தான்.
புரவிகளிலிருந்து மிடுக்குடன் இறங்கினர் சோழக் கடற்படையின் இரு பெரும் தண்டநாயக்கர்கள். அகன்ற மார்பும், வேல் போன்ற தீர்க்கமான பார்வையும் கொண்டவன் வீரமாறன். அவனுடன் வந்த பழையனோ, வீரத்தை விடச் சூழ்ச்சியை அதிகம் நம்புபவன். அவனது வலது கன்னத்துத் தழும்பு, கடந்த காலப் போர்களின் கோர எச்சமாகத் தெரிந்தது. புரவியிலிருந்து இறங்கிய வீரமாறனின் விரல்கள், இடுப்பில் தொங்கிய வாளின் பிடியைச் சுற்றியிருந்த தோல்பட்டையை இறுகப் பற்றின.
“பழையா! சாத்தன் பல கடல்கள் கடந்த தேர்ந்த ஒற்றன். மாமன்னரின் திருவாய்க்கேழ்வியின்படி நிகழவிருக்கும் கடாரப் படையெடுப்புக்கு முன் இவன் கொலையுண்டிருக்கிறான் என்றால்… பெரும் சதிவலை நம்மைச் சுற்றிப் பின்னப்படுகிறது”
சாத்தனின் உயிரற்ற உடலைக் குனிந்து நோக்கினான் பழையன். வடுவுள்ள வலது கன்னத்தைத் தடவியபடி, உதட்டோரம் ஏளனப் புன்னகை ஒன்று அரும்பியது. “ஓலைக்காக உயிர் கொடுப்பவன்தான் ஒற்றன். உயிர் போனாலும் ஓலையைக் காப்பான். பேரரசின் வரம்புமீறிய பெருமைக்காகப் பலியாகும் இத்தகைய எளிய வீரர்களின் மரணம், குடிசையில் ‘விதவைச் செய்தி’. உனக்கு இது தேசப் பாதுகாப்பு. எனக்கு இது வெறும் சடலம். இவன் மனம் தளரவில்லை, உயிர் மட்டுமே தளர்ந்திருக்கிறது. இன்று சாத்தன். நாளை நம்மைப் போன்ற தளபதிகளின் தலைகளும் இப்படியே உருளக்கூடும்”
“இப்போது அரசியல் பேசும் நேரமல்ல” உறுதியாக நோக்கினான் வீரமாறன். “கடாரம் நம் வணிகப் பாதையை முடக்கியிருக்கிறது. பேரரசரின் வியூகங்களை விமர்சிக்க நமக்குத் தகுதியில்லை. கொடுக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வாள் பிடிப்பது மட்டுமே நம் கடமை”
“வாள் பிடிக்கும் கரங்களுக்கு மூளை இருக்கக் கூடாது என்பதுதான் அரச தர்மமா தளபதியாரே?” முணுமுணுத்தான் பழையன். “வணிகப் பாதை ஒன்றினைத் திறக்க, நூறு வீடுகளின் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுகின்றனவா என்பதையும் எப்போதாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீ எதற்கெடுத்தாலும் தேசப் பாதுகாப்பு, பேரரசின் கவுரவம் என்று பதறுகிறாய் மாறா” சடலத்தையும் வீரமாறனையும் அவனது பார்வை மாறி மாறி நோக்கியது. அதில் தெரிந்தது வெறும் ஏளனம் மட்டுமல்ல, பேரரசின் மீதான ஒரு தீராத வன்மத்தின் நிழலும் கலந்திருந்தது என்பதை வீரமாறன் அப்போது உணரத் தவறினான். “இந்தப் பூவணத்தின் விடுதியில், ஏதோவொரு விலைமகளுக்காக இவன் வாள் சுழற்றிச் செத்திருப்பான். அங்கே பார்… மரத்துப் போன அவன் கையில் பனையோலை ஒன்று கிடக்கிறதே”
பழையன் குனிந்து சாத்தனின் இறுகிய விரல்களை முறுக்கித் திறந்தான். குருதி தோய்ந்த அந்த ஓலையை விரித்தான். அதிலிருந்த வரிகளைப் படித்ததும் வாய்விட்டுச் சிரித்தான்.
“நான் சொன்னதுதான் நிஜம். எந்தப் பெண்ணுக்காகவோ சாத்தன் தன் உயிரை விட்டிருக்கிறான். இது காதல் கவிதை” ஓலையைச் சுழற்றி வீரமாறனிடம் காட்டினான். “கீழே ‘கங்கா’ என்று கைச்சாத்திட்டிருக்கிறது. கோழைக் கவிஞன் ஒருவன், பெண் பெயரைப் புனைப்பெயராகச் சூட்டிக்கொண்டிருக்கிறான் போலும்”
பழையன் அந்தப் பாடலை நையாண்டியுடன் ராகமிட்டு வாசித்தான்:
“செவ்வானங் கார்த்திகைமீன் சேர்ந்தவங் கந்திரும்ப
எவ்வாரும் மாநக் கரமடைந் – தவ்வேளை
மன்னவனுந் தேவி மகிழ்ந்துடனே புல்குவரால்
கன்னியிவள் நெஞ்சங் களித்து!”
வீரமாறனின் தொண்டை வறண்டது. மூச்சுக்காற்று கனத்தது. மாறனின் கண்கள் அந்த வரிகளில் நிலை குத்தி நின்றன. அந்த வரிகள் முந்தைய நாள் தான் சுயமாக வடித்தெடுத்தவை! ‘கங்கா’ என்ற தன் மறைப் புனைபெயரில் எழுதிய ஓலை, எப்படி ஒற்றன் சாத்தன் கைக்கு வந்து சேர்ந்தது? காவலையும் மீறித் தன் கூடாரத்திற்குள் நுழைந்து இதைத் திருடிய நிழல் யார்? எண்ணற்ற வினாக்கள் அவன் மனதை அலைக்கழித்தன.
மாமன்னரின் போர்த் திட்டம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தை விட, அந்தப் பாடல் கிளறிய பழைய அவமானக் காயமே வீரமாறனை அதிகம் வதைத்தது.
“வாளைச் சுழற்றும் கைக்கெல்லாம் எழுதுகோல் வசப்படாது மாறா! கத்தி பிடிப்பவனுக்குக் கவிதை எதற்கு?”
பத்தாண்டுகளுக்கு முந்தைய அந்த ஏளனக் குரல் அவன் செவிகளில் மீண்டும் பேரொலியாய் அதிர்ந்தது. அன்று அரசவைக் களஞ்சியத்தில் தான் எழுதிய வெண்பாவை வாசித்த மூத்த புலவர், தளை தப்பியுள்ளது என்று கூறிப் பரிகசித்தபோது எழுந்த சிரிப்பொலிகள்… அன்றைய அவமானம் வடுவாக இன்னும் அவன் நெஞ்சில் தங்கியிருந்தது. வாளின் காயங்களைப் பெருமையாகக் காட்டிய வீரமாறன், சொல்லால் பட்ட வடுவை நெஞ்சுக்குள் புதைத்து, தான் கவிஞன் என்பதை இதுநாள் வரை எவருக்கும் தெரியாமல் காத்து வந்தான்.
அவனது கைகள் மெலிதாக நடுங்கின. ஆனால், அதை வெளிக்காட்டாமல் வாளின் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டான்.
சலங்கை ஒலி காற்றில் மெல்ல மிதந்து வந்தது. தளிரடிகளில் சிலம்புகள் ஒலிக்க, பேரரசவையின் மறைபொருள் ஆய்வுக் குழுத் தலைவி வீரசோழி அங்கே வந்து நின்றாள். இலக்கணங்களில் தேர்ந்தவள். எழுத்துக்களை மட்டுமல்ல, மனிதர்களின் அகத்திரைகளையும் வாசிப்பதில் அதீத வல்லமை படைத்தவள்.
“வாருங்கள் தேவி” அவளைக் கண்டதும் சற்றே தலைபணிந்த பழையன், “இது சாதாரணக் கொலைதான். குருதி தோய்ந்த இந்த ஓலையில் கங்கா என்பவன் எழுதிய காதல் கவிதை கிடக்கிறது” என்று ஓலையை உதாசீனமாக நீட்டினான்.
அதை வாங்கிய வீரசோழியின் கூரிய கண்கள் அந்த வரிகளுக்குள் ஊடுருவின. அவளது வளைக்கரங்கள் அசைவின்றி நின்றன. அந்த நொடியே, முகத்தில் கலக்கமும், அரசவைக்கே உரிய அதிகார மிடுக்கும் குடிகொண்டன.
“பழையா! உன் கண்கள் வாளுக்கு மட்டுமே பழக்கப்பட்டவை. அதனால் இது உனக்குக் காதல் கவிதையாகத் தெரிகிறது. போர்க்களத்தில் வாள் முனைகள் எதிரியைத் தற்காலிகமாகவே வீழ்த்தும். ஆனால் ஓலையில் ஒரு புள்ளி மாறினாலும் அது ஒரு பேரரசையே வீழ்த்தும். வாளின் கூர்மையை விட மதியின் கூர்மை கொடியது. இது சிலேடை என்னும் இருபொருள் படும் இலக்கிய உத்தியில் எழுதப்பட்ட மிக முக்கியமான மறைச் செய்தி. சொற்களைக் கொண்டு சோழப் பேரரசின் தலைவிதியை நிர்ணயிக்கும் சூழ்ச்சிவலை இது!”
வீரசோழியின் சுட்டெரிக்கும் சொற்கள் பழையனைச் சீண்டின. அவனது வலது கன்னத் தழும்பு சிவந்து துடித்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாவிட்டாலும், உள்ளூர மூண்ட நெருப்பு அவனது நெஞ்சைப் புகைத்தது.
“இருபொருள் தரும் சங்கேதக் கவிதையா? என்ன சொல்கிறீர்கள் தேவி?” அதிர்ச்சியைக் குரலில் செவ்வனே மறைத்துக் கேட்டான் பழையன். அங்கே நின்றிருந்த வீரமாறனின் இதயம் ஒரு பெரும் முரசம்போல அடித்துக் கொண்டது.
“ஆம். வெளிப்பார்வைக்கு இது காதல் பாடல். ஆனால் இதன் உள்ளே ஒளிந்திருப்பது மாமன்னர் ராஜேந்திர சோழரின் பெரும் கடற்படைப் போர்த் திட்டம்” வீரசோழி ஓலையை உயர்த்தி முதல் அடியைச் சுட்டினாள். “‘செவ்வானம் கார்த்திகைமீன்’ என்பது, கிழக்குத் திசையிலிருந்து நாம் தாக்குதலைத் தொடங்கும் நாள்”
“நாள்? கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் வானில் தெரியும் மாதம் எத்தனை நாட்கள் நீளும்? எந்த நாள் என்று எப்படித் துல்லியமாகக் கண்டுபிடிப்பது?” பழையன் அவநம்பிக்கையோடு குறுக்கிட்டான்.
“அத்தனை நாட்கள் அல்ல பழையா. ஒரேயொரு அதிகாலை. அது எப்போது என்பது கீழ்வரும் அடிகளில் மறைந்திருக்கிறது” என்றவள் அடுத்த அடிக்குச் சென்றாள். “‘வங்கம் திரும்ப’ என்பது எதிரிகளைத் திசைதிருப்புவதற்காக நமது போர்க்கப்பல்கள் பின்வாங்குவது போலப் பாவனை செய்யும் ஏமாற்று உத்தி. இந்தச் சூழ்ச்சியை எதிரிகளுக்குத் தெரிவிக்கவே இந்த ஓலை விரைகிறது”
மூத்த வீரன் கோதண்டனின் முகத்தில் கவலை சூழ்ந்தது. “தேவி சோழி சொல்வது உண்மையென்றால், இது மாபெரும் சதி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கிழக்குத் துறைமுகத்தில், சிறு வதந்தியைப் புறக்கணித்து நூற்றுக்கணக்கான சோழ வீரர்களை இழந்தோமே… அதுபோல இதிலும் பெரும் சூழ்ச்சி இருக்கலாம்”
‘கிழக்குத் துறைமுகம்’.
இந்த வார்த்தை செவியில் விழுந்ததும் பழையனின் முகம் அந்திவானம் போல் கறுத்தது. அன்று ஒற்றன் ஓலை வந்தபோது, ‘பழையன் வதந்திக்குப் பயந்தான்’ என்று பரிகசிப்பார் என்ற பழிக்கு அஞ்சியே, அதை ‘வெறும் ஊகம்’ என்று கிழித்தெறிந்தான். அந்த ஆணவ முடிவின் விளைவாக நூற்றுக்கணக்கான வீரர்கள் மாண்டனர். அதன் பழியை எண்ணி இன்றுவரை அவன் மட்டுமே தன் உள்ளுக்குள் மறைவாக வெம்புகிறான்.
இப்போது வீரசோழியானவள், கூட்டத்தின் நடுவே நின்று ‘உன் கண்கள் வாளுக்கு மட்டுமே பழக்கப்பட்டவை’ என்று சொல்லால் வெட்டியிருக்கிறாள். கோதண்டன் அதற்கேற்பக் கிழக்குத் துறைமுகப் பழியை நினைவுறுத்தியிருக்கிறான். பதினைந்து ஆண்டுகளாக அவனுள் உறைந்திருந்த நெருப்பு இப்போது பெரும் வஞ்சமாக வேறு வடிவம் எடுத்தது.
வீரசோழியின் சுழலும் கண்கள் அங்கே நின்றவர்களைத் துருவின. “இந்தப் பாடலைப் படைத்தவனுக்கு நம் படையின் போர்த் திட்டம் அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்திருக்கிறது. கங்கா என்ற புனைபெயரில் உலவும் அந்த மாபெரும் நாட்டுப்பகைவன்… நம் கடற்படையின் தண்டநாயக்கர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும்!”
சலசலப்பைக் கேட்டுப் பூவணம் கூட்டத்தின் விளிம்பில் வந்து நின்றாள். அவளது கண்கள் சடலத்தை நோக்கவில்லை. பழையன் கையிலிருந்த ஓலையின் விளிம்பில் தன் பார்வைக்குத் தட்டுப்படும் ஏதோ ஒன்றைத் தீவிரமாகத் தேடின. அடுத்த நொடி அவளது பார்வை ஓர் இலக்கில் நிலைத்தது. சுவடியின் ஓரத்தில் தெரிந்த நுட்பமான முத்திரையைக் கண்டுகொண்ட திருப்தியோ என்னவோ, முகத்தில் எந்தச் சலனமுமின்றித் திரும்பி மெல்ல விடுதியை நோக்கி நடந்தாள். இதை யாரும் கவனிக்கவில்லை.
வீரசோழியின் பார்வை அங்கே அமைதியாக நின்றிருந்த வீரமாறனை நேருக்கு நேர் ஊடுருவி அப்படியே அவனை அளைந்தது. அவளது பார்வையில் நாணேற்றப்பட்ட வில்லைப் போன்ற கூர்மையும் பதற்றமும் நிலவின.
“என்ன தண்டநாயக்கரே… நான் சொல்வது உண்மைதானே?” என்று கேட்டாள் வீரசோழி.
வீரமாறனின் மறைபொருள் அம்பலமாகும் நொடி நெருங்கிவிட்டது. அவனது வலது கை இடுப்பில் இருந்த வாளின் பிடியை இன்னும் இறுக்கமாகப் பற்றியது. சோழப் பேரரசின் மறைபொருள், சிலேடைக்குள் ஒளிந்த அந்தச் சூழ்ச்சி, பேரரசின் ஆணிவேரையே அசைக்கத் தொடங்கியது. எவரும் எவரையும் நம்ப முடியாத பெரும் சூழ்ச்சிவலை பின்னத் தொடங்கியது.
(தொடரும்)
*
செவ்வியல் தமிழ் அகராதி
கங்கா (காங்கேயன் பசுபதி) எழுதியுள்ள இக்கதையில் இடம்பெற்றுள்ள செவ்வியல் தமிழ் மற்றும் வரலாற்றுச் சொற்களுக்கான விளக்கங்கள்:
- வணிகலன்கள் – வணிகம் + கலன்கள் = வணிகலன்கள்.
பொருள்: வியாபாரக் கப்பல்கள். “வணிகம்” என்றால் வியாபாரம். “கலன்” (கலன்கள்) என்பது இந்த இடத்தில் “கப்பல்” அல்லது “படகுகள்” என்ற பொருளைக் குறிக்கிறது. இலக்கியங்களில் கடல்வழி வணிகம் செய்த கப்பல்களைக் குறிக்க “கலம்”, “மரக்கலம்”, “வணிகலன்” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- நாவாய்
பொருள்: பெரிய அளவிலான கப்பல். பழந்தமிழர்கள் தொலைதூரப் பயணங்களுக்கும் போர்களுக்கும் பயன்படுத்திய மிகப்பெரிய கடற்பயணச் சாதனம்.
- சுவடி / ஓலைச்சுவடி
பொருள்: பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட பண்டைய ஆவணங்கள் அல்லது நூல்கள். காகிதம் புழக்கத்திற்கு வருவதற்கு முன் தமிழர்களின் முதன்மை எழுத்து ஊடகம்.
- சிலேடை
பொருள்: ஒரு சொல் அல்லது தொடர் பல பொருள்படும்படி அமைவது. இரட்டுறமொழிதல் என்றும் அழைக்கப்படும்.
- ஒற்றர் / ஒற்றன்
பொருள்: வேவுகாரர், உளவாளி. எதிரிகளின் ரகசியங்களை அறிந்து வந்து அரசனுக்கோ அல்லது தளபதிக்கோ தெரிவிக்கும் மறைமுகமான பணியாளர்.
- நாழிகை
பொருள்: பண்டைய தமிழர்களின் கால அளவை. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிக்கும். ஒரு நாளுக்கு 60 நாழிகைகள்.
- பாயமரம்
பொருள்: காற்றின் விசையைப் பயன்படுத்தி கப்பலை இயக்குவதற்காகத் துணிகளால் கட்டப்பட்ட மரம்.
- வேளைக்காரப் படை
பொருள்: சோழ அரசர்களின் மெய்க்காப்பாளர் படை. அரசனுக்காக எந்த நேரத்திலும் (வேளையிலும்) உயிரைக் கொடுக்க சித்தமாக இருக்கும் பிரத்யேகப் படையினர்.
- வியூகம்
பொருள்: போர்த்தந்திர முறை. போர்க்களத்தில் படைகளை அணிவகுத்து நிறுத்தும் முறை.
- கடாரம்
பொருள்: தற்போதைய மலேசியாவின் கெடா (Kedah) மாநிலத்தைக் குறிக்கும் பண்டைய பெயர். ராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்து வென்றதால் ‘கடாரம் கொண்டான்’ எனப் பெயர் பெற்றார்.
- ஈழம்
பொருள்: இலங்கையின் பண்டைய தமிழ் பெயர்.
- அந்தப்புரம்
பொருள்: அரண்மனையில் அரச குடும்பத்துப் பெண்கள் மற்றும் மகாராணிகள் வசிக்கும் தனியான, பாதுகாப்பான உட்பகுதி.
- சேனாபதி / தளபதி
பொருள்: படைகளை வழிநடத்தும் முதன்மைத் தலைவர்.
- முரசு
பொருள்: போர்க் காலங்களிலும், அரச அறிவிப்புகளின் போதும் ஒலிக்கப்படும் பெரிய தோல் வாத்தியம்.
- நீரோட்டம்
பொருள்: கடலில் நீரின் ஓசை அல்லது நகர்வு. மாலுமிகள் நீரோட்டத்தை வைத்து திசையையும், கரையின் தூரத்தையும் கணிப்பார்கள்.
- சுக்கான்
பொருள்: கப்பலைத் திசைதிருப்பப் பயன்படும் கருவி.
- திருவாய்க்கேழ்வி
பொருள்: சோழர் கால அரச நிர்வாகத்தில் ஒரு முக்கியப் பதவி. அரசர் தன் திருவாயால் நேரடியாகக் கூறும் ஆணைகளைக் கேட்டு (கேள்வி), அவற்றை ஓலைகளில் எழுதுபவர் அல்லது நடைமுறைப்படுத்துபவர்.
- சாவகம்
பொருள்: பண்டைக்காலத்தில் ‘ஸ்ரீவிஜயப் பேரரசின்’ தலைநகராக விளங்கிய இன்றைய இந்தோனேசியாவின் சுமத்திரா தீவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர். இது நறுமணப் பொருட்கள், வாசனை திரவியங்கள் ஏற்றுமதிக்காகச் சிறப்புற்றிருந்த புகழ்பெற்ற கடல்சார் வணிக மையம்.
- நாகை
பொருள்: நாகப்பட்டினம், பண்டைய சோழர் காலத்தில் கடல் வாணிகத்தில் முக்கியப் பங்கு வகித்த நகரம். முக்கியத் துறைமுகமாகவும், பல பௌத்த விகாரைகளைக் கொண்ட மையமாகவும் இருந்தது.
- புலிக்கொடி
பொருள்: சோழர்களின் அரச சின்னம் மற்றும் போர்க் காலங்களில் பயன்படுத்தப்பட்ட கொடி. சோழப் பேரரசின் பெருமையையும், வீரத்தையும், அதிகாரத்தையும் பறைசாற்றும் சின்னமாக இது விளங்கியது.
- ஸ்ரீவிஜயம்
பொருள்: தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இன்றைய இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, கடல் கடந்த பேரரசு. இது கடல்சார் வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்தது. சோழப் பேரரசின் முக்கிய எதிரியாகவும், போட்டி நாடாகவும் விளங்கியது.
- புரவி
பொருள்: குதிரை
- ஓலை
பொருள்: பண்டைய காலத்தில் எழுத உபயோகப் படுத்திய பனை ஓலை.
- கைச்சாத்து இட்டு
பொருள்: கையால் சின்னம் இட்டு
- கல்பண்டாரம்
பொருள்: கோயில்களில் பொன்னையும் மணியையும் பாதுகாக்கும் கருவூலங்களுக்குக் ‘கல்பண்டாரம்’ என்று பெயர்.
- மறையோலை
பொருள்: இரகசிய ஓலை
- கடாரம் கொண்டான்
பொருள்: கடாரத்தை வென்றவன். சோழ மன்னர் ராஜேந்திரரை மக்கள் அன்போடு அழைக்கும் ஒரு பட்டப்பெயர்.
- கங்கை கொண்டான்
பொருள்: சோழ மன்னர் ராஜேந்திரரை மக்கள் அன்போடு அழைக்கும் ஒரு பட்டப்பெயர். கங்கையாற்றின் நீரைத் தனது வெற்றிப் பயணத்தின் இறுதியில் தஞ்சைப் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்ய எடுத்து வந்ததால் இப்பெயர் பெற்றார்.
- யாழி முத்திரை
பொருள்: பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மிகப்பழைமையான மிகச்சிறந்த நரம்பு இசைக்கருவி ஆகும். யாழ் வடிவத்தில் பொறிக்கப்பட்ட சின்னம். இது கடார தேசத்தின் ஒற்றனைக் குறிக்கும் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.
- தளை
பொருள்: வெண்பாவில் தளை என்பது சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்படும் இலக்கண விதியைக் குறிக்கும். வெண்பாக்களை இயற்றும்போது தளை தட்டினால் ஓசை சிதைந்துவிடும். “வெண்டளையால் மட்டுமே அமைய வேண்டும்” என்ற கடுமையான விதி வெண்பாவிற்கு உள்ளது.
- தளை தவறுதல்
பொருள்: வெண்பாவில் எதுகை தவறுதல், சீர் தவறுதல், யாப்பு இலக்கணப் பிழை. (கவிதைப் பிழை)
- நங்கூரமிடுதல்
பொருள்: கப்பலை ஒரு இடத்தில் நிறுத்துவதற்காகக் கடலின் அடியில் இரும்புக் கருவியை நிலைநிறுத்துதல்
- முத்திரை
பொருள்: அரச சின்னம். தூதுவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அரச முத்திரையைப் பயன்படுத்துவார்கள்.
- சுரங்கப்பாதை
பொருள்: நிலத்திற்கு அடியில் மக்கள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதை. சோழப் பேரரசு காலத்தில், அரண்மனை மற்றும் அரசு நிர்வாகத்தில் இரகசியத் தொடர்புகளுக்காகச் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- வங்கம்
பொருள்: சோழப் பேரரசின் பகுதியாக இருந்த கடற்படைத் தளம். சோழர்கள் தங்களுடைய கடல் கடந்த படையெடுப்புகளுக்கு வங்கத்தை முக்கியத் தளமாகப் பயன்படுத்தினர்.
- நச்சுக்குறுவாள்:
பொருள்: நஞ்சு தடவப்பட்ட சிறிய வாள். தமிழ் இலக்கியங்கள் அல்லது வரலாற்றுப் பின்னணியில் பேசப்படும் போர்க் கருவி.
- காவலரண்:
பொருள்: காவல் + அரண் = பாதுகாப்பு + கோட்டை, மதில் அல்லது பாதுகாப்பு அரண்.
சொற்றொடரில்: “காவலரணில்” = “பாதுகாப்பு கோட்டையில்” அல்லது “காவல் சாவடியில்”.


