கடைசி அத்தியாயம்
– ராஜேஷ் சிவன் செல்லப்பா
பத்து நாட்களாக, ஒவ்வொரு இரவும் அவள் வந்துகொண்டிருந்தாள்.
இன்னைக்கு நம்ம கிளைமாக்ஸ் எழுதிடலாமா?”
அவரின் இரு நாவல்கள் பல மாநிலங்களின் மொழிகளிலும், சில தேசங்களின் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. எழுதியவை மொத்தம் நாற்பதுக்கும் மேல் இருக்கும்.
“செம்பா சார், சொல்லுங்க. எழுதிடலாம்.”
அவளின் குரல் அன்பாகக் கேட்டது.
கட்டிலின் முன்பாக இருந்த மேசையில், அவளுக்கு விருப்பமான கைப்பையும் தேநீர்க் குவளை இருந்தது. அவள் ஒருபோதும் அந்தக் குவளையைத் தொடவில்லை. அதில் கூடவே மென்மையான, நூல் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கைக்குட்டை. அவள் வியர்வையைத் துடைத்திருக்கக் கூடும். அந்த இளஞ்சிவப்பு கைக்குட்டையை அவள் எப்போதும் மேசையின் வலது மூலையில்தான் வைப்பாள்.
அறையின் மங்கலான வெளிச்சத்தில், அதன் இளஞ்சிவப்பு நிறம் பளிச்சென்றிருந்தது.
“இயந்திரக் கதியில் கண்விழித்து எழுந்தேன். இந்த நாள் வேண்டாம் என்பது போல, கண்களும் அயர்வாகவும் உடல் சோர்வாகவும் இருந்தது.
பின் இரவு அதிக நேரம் விழித்திருந்ததால், பாதி உறக்க நிலையிலேயே மெத்தையிலிருந்து எழுந்தேன்.
ஜன்னல் வழியாக வந்த அதிகாலை வாடைக் காற்று என்னுடைய தலைமுடியைத் தொட்டுப் போனது.
அதை ரசிக்கவில்லை. மாறாக, ஏதோ ஒரு வெறுமை மனதில் பரவியது.
இன்னும் இரவு இருட்டாகவே இருந்தது.
அறையை விட்டு வெளியே வந்த நான், மாடிப்படிகளருகே நின்றேன்.
சில நொடிகள் கழித்து படிகளில் இறங்கத் தொடங்கினேன்.
நீல நிற ஜீன்ஸ் கால்சட்டையும், கருப்புச் சட்டையும் அணிந்துகொண்டு, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே எழுதுவதற்கான வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறை முழுவதும் சுருட்டு நெடி மட்டும் பரவி இருந்தது. அவ்வப்போது அது கண் எரிச்சலைத் தந்ததுடன், கண்ணீரையும் வரவழைத்தது. கண்ணீரைத் துடைக்கின்ற சாக்கில், கைக்குட்டையால் அவள் வாசனையை சுவாசப் பாதை முழுவதும் நிறைத்துக் கொண்டேன்.
நான் உயரம் என்பதால், அந்தச் சிறிய அறையில் குறுக்கும் நெடுக்குமான நடையின் திசையை மாற்றி நடக்க வேண்டியதாக இருந்தது.
ஓடிய மின் விசிறியின் சத்தம் அதிகமாகக் கேட்டது. காரணம், ஒரு நிமிட மௌனம்தான்.
“இம்ம்… மேலே சொல்லுங்க சார்.”
விசிறியினால் அவளது கூந்தல் அலைபாய்வதைப் பார்த்தேன்.
மை பேனாவின் காகித உராய்ப்புகள் காதில் விழுந்தன.
ஒருநாள் சூதாட்ட விடுதியில், கோப்பையின் கடைசி மதுவை குடித்தேன்.
சூதாட்ட பலகையின் எதிரே இருந்த அந்தப் பிசாசு என் செல்வத்தை மட்டும் அல்ல; வீடு, புகழ், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டிருந்தது. அவளையும் அதுதான் என்னிடம் இருந்து பிரித்தது.
பலகையிலிருந்து எழுந்தபோதுதான் இவளைச் சந்தித்தேன். இந்தப் பாசமான குரல் அங்கேதான் எனக்கு அறிமுகமானது.
இரவை கண்ணாம்பூச்சி விளையாட்டுக்கு அழைத்துக்கொண்டு சூரியன் ஒளிந்து கொள்ளத் தொடங்கிய நேரம்.
என்ன வசீகரம்! கண்களில் கருணைதான் விஞ்சியிருந்தது.
இச்சே! ஐம்பது வயதைக் கடந்த நான், எண்ணில் பாதி வயதைக் கூட பார்க்காத இவளை நான் இப்படி நேசிக்கலாமா? அனிச்சைச் செயலாய் அவளையே மனம் நினைத்துக் கொண்டேயிருந்தது. சில சமயங்களில், அவளின் ஆதரவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
“இவ்வளவுதானா? அடுத்தது என்ன?” அவள் குரல்தான்.
சுருட்டை ஊதினேன்.
“எங்கே நான், நிறுத்தினேன்?”
“படிகளில் இறங்கத் தொடங்கினான்”ன்னு நிறுத்துனீங்க.”
“இம்ம்…” தொடர்ந்து சொல்லத் தொடங்கினேன்.
மேன்சனில் இருக்கும் இரண்டாவது தளத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை நோக்கி இறங்கினேன்.
உறக்கம் முழுவதும் கலையாமல், மாடிப்படியின் கைப்பிடியை வலது கையால் தாங்கினேன்.
வலது கால் ஏனோ என் மூளையுடன் இணைந்து செயல்பட மறுத்துவிட்டது.
அது உடலைத் தாங்கவில்லை.
நிலை தடுமாறி சரிந்து விழுந்தேன்.
எனது கைப்பிடியும் கூட உதவவில்லை.
ஒரு நொடியில் பத்து படிகள் என்னை வாரி விழுங்கிவிட்டன.
என் இடுப்பை நகர்த்த முடியவில்லை.
தாடை, தலையில் யாரோ சம்மட்டியால் அடித்த மாதிரி உணர்ந்தேன்.
முதுகில் சில்லென்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
மூக்கிலும் தலையிலும் ஏதோ ஈரம் பரவியது.
தொட முயற்சி செய்தும் முடியவில்லை.
என் உடல் இயக்கம் முழுவதுமாக நின்றுபோய்விட்டது.
இறந்துவிட்டது என் உடல்.
முற்றும்.
“சார்! என்ன இது! ஹீரோவைக் கொன்னுட்டீங்க?”
இந்த முடிவானது, இளகிய குரலை கலங்கடித்தது.
அவளின் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்ததை நான் பார்த்தேன். அவளின் கைக்குட்டையை அவளிடமே எடுத்து நீட்டினேன். அவள் அதனை வாங்கி கொள்ளவே இல்லை.
தற்போது குடியிருக்கும் இடத்தின் முன்பணமும், இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ந்துபோகும் நிலையில் இருந்தது. இந்த மனநிலையுடன் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.
எனக்கு அது, பட்டினியைவிடக் கொடுமையான தண்டனை.
எனக்கு உதவியாக யாரேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இவளிடம் உதவி கேட்டேன்.
எப்போதும் புடவைதான். சிலையில் உடுத்திய துணி ஒருபோதும் அதன் அழகை மறைத்துக் காட்டாது.
என் பெரு மூச்சு வெறுமையை தந்தது. இவளின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வாழவே முடியாது போல.
பானையின் குவளைத் தண்ணீரை எடுத்து குடிக்கும் போது, சில துளிகள் தரையிலும் என் தாடியிலும் பட்டு நனைத்தன.
“ஏன்? என்ன ஆச்சும்மா?”
“சார், கடந்த பத்து நாளா, இந்த கதையின் ஹீரோ அந்த பொண்ணுக்கிட்ட காதல் சொல்லுவார்ன்னு ஆசையா இருந்தேன். இப்படி அவன் அதைச் சொல்லாமலே முடிச்சிட்டீங்களே சார்? இது மாதிரி ஒரு முடிவு ரொம்ப பரிதாபமாக இருக்கு.”
குவளையை அவள் அருகில் சென்று மேசையின் மீது வைத்துவிட்டு சத்தமாகச் சிரித்தேன்.
நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. அவர் சிரிப்பின் சத்தம் அதிகமாகக் கேட்டது.
“ஹா… ஹா… இந்த கதையில் வர்ற பொண்ணு, அவனோட ரொம்ப சின்னவ. அவனோ குடிகாரன். சூதாடி! எல்லாச் சொத்தையும் இழந்தவன். பாரில் நடந்த கைகலப்பில் அவன் புகழும் மங்கிப்போயிற்று. போலீசும் பரிதாபம் பார்த்து விட்டுட்டாங்க.”
அணைந்துபோன சுருட்டை மீண்டும் பற்ற வைத்தேன்.
“சார், அவன் இப்படித்தான் சாகப் போகிறான்னு தெரிஞ்சா, அவள் கண்டிப்பா ஓகேன்னு சொல்லியிருப்பா சார்!”
என் மனத்தில் இருந்தது, அந்தக் குரலில் வந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.
அவள் கண்களைப் பார்க்காமல் நான் கேட்டேன், “உதாரணத்துக்கு, நீயாக இருந்தால் அவனை காதலிப்பியா?”
என்னுடைய எண்ணம் கேள்வியாக வந்து விழுந்தது.
கட்டிலின் மீது நானும் சென்று, அவள் அருகில் உட்கார்ந்தேன்.
புன்முறுவல் மட்டுமே பதிலாக வந்தது.
அவள் கோபித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
இரவு முடிந்தது.
சூரியன் வரும் நேரம், காலை ஐந்து மணி.
அந்த பழைய கட்டிடத்தில் அமைந்திருந்த மேன்ஷனில் இரண்டாவது தளத்தில், துணைக் கண்காணிப்பாளர் தனது உயர் அதிகாரியிடம் அலைபேசி அறிக்கையைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்.
‘கிளிக்… கிளிக்….’ புகைப்படக் கருவியின் திசைகளும், கோணங்களும் மாறிக்கொண்டே இருந்ததை, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த கிளிக்குகள் உணர்த்தின.
“ஹலோ சார். ஸ்பாட்டில் தான் இருக்கேன். கூடவே, ஹெட் கான்ஸ்டபிள், போட்டோகிராபர் இருக்காங்க சார். சம்பவம் சுமார் நாலு மணியில் இருந்து நாலரை மணிக்குள் நடந்திருக்குமுன்னு நினைக்கிறேன் சார்.”
துணைக் கண்காணிப்பாளர், சி1 காவல் நிலையத்தின் கண்காணிப்பாளரிடம் அலைபேசியில் தொடர்ந்து தனது அறிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“ரூம்ல கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டேன் சார். சிசிடிவியையும் செக் பண்ணிட்டேன்… ம்ம்… சரி சார்… அப்படியே பண்ணிறேன்…” என்று அழைப்பைத் துண்டித்தார்.
“இம்ம்… யாருப்பா இங்க முதல்ல பார்த்தது?”
“நான் தான் சார் பார்த்தேன்.”
அந்த மேன்ஷனில் இரண்டாவது தளம் இரைச்சலாகவும் பரபரப்பாகவும் இருந்தது.
கீழே மேன்ஷனின் முகப்பில் ஒரு அவசர சிகிச்சை வாகனம் வந்து நின்றது.
தன் கைலியைச் சரிசெய்துகொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டான்.
“சார், நா பாத்ரூம் போக எழுந்தேன். இந்த இடத்தை கிராஸ் செய்யும் போது, யாரோ விழுந்து கிடக்குற மாதிரி இருந்துச்சு.
வெளிச்சம் இல்லன்னு லைட்டை போட்டேன் சார்.
ரொம்ப ரத்தத்தை பார்த்து பயந்துபோய் மேன்ஷன் மேனேஜருக்கு போன் பண்ணிட்டேன் சார்”
மேன்ஷனின் பல அறைகளின் முன்னால் இருந்த கைப்பிடிச் சுவரில் சில துணிகளும், உள்ளாடைகளும் வெயிலுக்காகக் காத்திருந்தன.
“சார், அவரு இங்க வந்து பதினைந்து நாள்தான் ஆகுது. யார் கூடயும் ஒரு வார்த்தை பேச மாட்டாரு. மூணாவது மாடியில் அவரு ரூம்ல தனியாத்தான் இருக்காரு. சில சமயம் ஏதாவது தனக்குத்தானே பேசிக்கிட்டு இருப்பாரு.” மேன்ஷனின் மேலாளர் சொல்லி முடித்தார்.
“சார், இங்க டெட் பாடிய போட்டோ எடுத்துட்டேன். நான் மாடிக்கு போய் ரூம்ல இருக்குற எவிடென்ஸையும் போட்டோ எடுக்கணும். நானும், ரைட்டரும் மேல போறோம் சார்.”
அவசர சிகிச்சை ஊழியர்கள் இருவர், தூக்குக்கட்டிலுடன் இரண்டாவது தளத்தை வந்தடைந்தனர்.
புகைப்படக் கருவியின் முதல் பதிவில், அறையில் ஒரு கட்டில் மெத்தை. தலையணை இல்லை. அதன் அடியில் இரண்டு துணிப் பெட்டிகள்.
அடுத்த புகைப்படப் பதிவில், ஒரு மூலையில் ஒரு தண்ணீர் பானை, ஒரு குவளை.
தரையில் சில புகைத்துவிட்டு போட்ட சுருட்டின் மீதித் துண்டுகள்.
அடுத்த புகைப்படப் பதிவில், படுக்கைக்கு எதிரே ஒரு சுவரில் ஜன்னல்.
அதன் பக்கத்தில் ஒரு பெரிய கருப்பு-வெள்ளைப் புகைப்படம்.
அதன் மேல் கண்ணாடி இல்லாமல், கருப்பு சட்டம் மட்டுமே இருந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவரின் கையால் பரிசு பெறும் செம்பா.
கடைசியாக ஒரு பதிவை, கருவியின் கண் பார்வையால் பெரிதாக்கிய படமாகப் பதிவு செய்தார்.
அதில் மேசையின் மீது சாயம் போன பெண்கள் பயன்படுத்தும் ஒரு இளஞ்சிவப்பு கைக்குட்டை.
அதன் அருகில் எழுதிய காகிதங்களும், மை பேனாவும்.
ஒரு காகிதம் மட்டும் கீழே கிடந்தது.
தலைமைக் காவல் அதிகாரி அதனை எடுத்துப் பார்த்தார்.
அதில் ஒரு மங்கலான செம்பாவின் கல்யாணப் புகைப்படம்.
அந்தக் காகிதத்தில் “கடைசி அத்தியாயம்” என்று எழுதியிருந்தது.
மேன்ஷனின் நுழைவாயிலில் இருந்த அவசர சிகிச்சை வாகனத்தில் செம்பாவின் உடல் ஏற்றப்பட்டு இருக்கும் காட்சியையும் மேல் தளத்தில் இருந்து புகைப்படம் எடுத்தார்.
செம்பாவின் திருமணப் புகைப்படத்தில் இருந்த அதே இளஞ்சிவப்பு கைக்குட்டை, மேசையின் மீது மடித்து வைக்கப்பட்டிருந்தது.
புகைப்படத்தின் பின்புறம் பலமுறை மடித்து திறந்த தடயங்கள் இருந்தன.
புகைப்படத்தின் பின்புறம் ஒரு வாக்கியம் இருந்தது.
அது செம்பாவின் கையெழுத்து.
“என் வாழ்வின் வாசகி.”
*


