VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: செங்கதிர்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > செங்கதிர்
சிறுகதைகள்

செங்கதிர்

"அரோகரா... மாவூற்று வேலப்பனுக்கு அரோகரா..."

கு. மணி
Last updated: October 14, 2026 4:41 pm
18 Views
Share
12 Min Read
SHARE

செங்கதிர்

  • கு.மணி

மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகளில் வருசநாட்டுப் பெருங்காற்று கானகப் பெருமரங்களை உலுப்பிக் கொண்டிருந்தது. ஆண்டிபட்டி மலைத்தொடரின் சாய்வில், அடர்ந்த மருத மரங்களின் வேர்களுக்கிடையே ஒரு மெல்லிய ரத்தநாளம் போலக் கசிந்து வழியும் நீர்க்கோடுதான் மாவூற்று. கரிய பாறைகளின் இடுக்குகளிலிருந்து வற்றாது வழியும் அந்தச் சுனைநீர்தான் அந்தப் பகுதியின் ஆதி உயிர். இந்த ஊற்றுநீர் அந்த மலையின் வாயிலை விட்டு எங்கே செல்கிறது என்பது இன்றும் ஓர் அறிவியல் புதிராகவே உள்ளது                                        

அந்த ஊற்றுக்கண்ணுக்கு அப்பால், பாறைப் பொந்துகளையும் மூங்கில் கழிகளையும் பச்சிலை இலைகளையும் பின்னி அமைக்கப்பட்ட பளியர்களின் ‘குடி’ அமைந்திருந்தது. அங்கே சமவெளியின் நாகரிக வாசனைகளோ, மின்விளக்குகளின் மாயப் பிரகாசங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

இரவு நேரங்களில் உடலையும் ஆன்மாவையும் சூடேற்றும் ‘தீமூட்டம்’ மட்டுமே அவர்களின் உயிருள்ள களம்.

​அந்தத் தீமூட்டத்தின் புகையருகே, பாறைப் பிளவில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் கிழவன் காடன். அவனது உடம்பின் ஒவ்வொரு சுருக்கமும் இந்த மலையின் வறட்சியையும், செங்குத்துப் பாறைகளில் கொம்புத்தேன் எடுத்த வடுக்களையும் மௌனமாகப் பேசிக் கொண்டிருந்தன. கண்பார்வை மங்கிவிட்ட போதிலும், கானகத்தின் வாசனையை வைத்தே நாரவள்ளிக் கிழங்கின் முதிர்ச்சியையும், எந்தச் சரிவில் கரடி இளைப்பாறுகிறது என்பதையும் அவனது கூரிய செவிகளும் மூக்கும் காட்டின் மொழியிலேயே வாசித்துவிடும்.

அவனுக்கு எதிரே அவனது பத்து வயதுப் பேரன் வேழன் உட்கார்ந்திருந்தான். உடலில் கிழிந்த அரைக்கால் சட்டை மட்டுமே மிச்சமிருந்தது. காடன் அவனது கையில் ஒரு கூர்மையான மூங்கில் கொழுவை வைத்து விரல்களை மூடச் செய்தான்.

“வேழா… இந்தக் காடு நம்ம தாய். நாரவள்ளிக் கிழங்கைத் தோண்டும்போது தாய்மடியைக் கீறாம, பக்குவமா கொழுவை இறக்கணும். காடு நமக்குச் சோறு போடும்; ஆனா மனிதப் பயலுக காலடி பட்டா இந்த மலையே மலடாயிடும். நாளைக்குக் கார்த்திக நாளு விடியுது. சமவெளி சனம் மலையேறி வரும். அவங்க சாமிக்கு நெய்வேத்தியம் வைக்க வருவாங்க. நாம காட்டின் பிள்ளைகளா தள்ளி நின்னு சாமியைக் கும்பிட்டுட்டு, அவங்க தர்றத வாங்கிட்டு அடங்கி நிக்கோணும்” என்றான் காடன்.

​அப்போது குடிசையின் வாயிலில் செங்கதிர் வந்து நின்றாள். பதினாறு வயதான அவளது கண்களில் மலையின் அமைதியும், அதே சமயம் சமவெளியின் ஏமாற்றுத்தனங்களை அடையாளம் கண்டுவிட்ட கூர்மையும் தெரிந்தன. ஆண்டிபட்டி அரசினர் மகளிர் உண்டு உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அவள், விடுமுறைக்காக மலைக்குத் திரும்பியிருந்தாள். அவளது அக்குளில் ஒரு நோட்டுப் புத்தகமும் கணக்கு புத்தகம் ஒன்றும் இருந்தது.

​”தாத்தா… வேழனுக்குக் கிழங்கு தோண்டச் சொல்லிக் குடுக்குறதுல தப்பில்ல. ஆனா, அவனுக்குக் காலண்டர்ல இருக்குற எண்களை எண்ணத் தெரியலியே… ஊருக்குள்ள போனா எவனாவது ஏமாத்திட்டுப் போயிருவானே. அவனுக்குக் கல்வி வேணாமா?” என்று கேட்டாள் செங்கதிர்.

​காடன் அவளை நிமிர்ந்து பாராமல், வாயில் இருந்த புகையிலைக் காரத்தைக் காட்டின் புழுதியில் துப்பினான். “பள்ளிக்கூடம் போயிட்டா வயிறு நெறைஞ்சிருமா செங்கதிரு? மலையைத் தாண்டி நமக்கு என்ன இருக்கு? கார்த்திக நாளு வந்தா சக்கம்பட்டி நெசவுக்காரங்க வருவாங்க. வேலப்பனுக்கு மொட்டையடிச்சு மாவிளக்கு போடுவாங்க. அவங்க போடுற நாலு காசை வாங்கிட்டு பேசாம ஒதுங்கி நிக்கணும். அதுதான் நம்ம தலைமுறை காலமா கத்துக்கிட்ட சடங்கு”

​விடியற்காலை நான்கு மணிக்கே ஆண்டிபட்டி–சக்கம்பட்டி நெசவுத் தெருக்களில் தறிகளின் சடசடப்பு அடங்கிவிட்டது. தினந்தோறும் தறிக்குழியில் அமர்ந்து பாவு நூலை எண்ணி, இழைகளைச் சேர்த்துச் சேலை நெய்யும்  நெசவாளர்களுக்குக் கார்த்திகை திருநாள் என்பது உடம்பின் வலியை ஆற்றும் ஒரு புனித கிரிவலம். பஞ்சுப் புழுதியும் சாய நெடியும் உடம்பில் ஊறிப்போன அந்த நெசவாளர்கள், மாவூற்று வேலப்பனை தரிசிக்க விடியலிலேயே திரண்டனர்.

சக்கம்பட்டியின் மூத்த நெசவாளர் பொன்னுச்சாமி, தோளில் பருத்தித் துண்டை முறுக்கிப் போட்டபடி தன் மகன் முத்துவையும் மருமகன்களையும் அழைத்தார்.

“டேய் முத்து… பஞ்சாமிர்தத்தையும், தறியில முதல் பூவா நெய்த பட்டுகரை வச்ச வேட்டியையும் பத்திரமா எடுத்துக்கோ. வருசம் பூரா தறி தட்டாம ஓடணும்னா மாவூற்று வேலப்பனோட பார்வை வேணும். அந்த ஊத்துல நீராடி, முருகனுக்கு வஸ்திரம் சாத்திட்டா நெசவுல ஒரு நூலும் அறுந்து போகாது” என்றார்.

​அவர்கள் தேங்காய், பழம், பச்சரிசி மாவு, வெல்லம் நிரம்பிய பைகளுடன் மாவூற்றுப் பாதையில் ஏறத் தொடங்கினர். சமவெளியின் கடின உழைப்பாளிகள் அவர்கள்; ஆனால் அந்த உழைப்பிற்கு நடுவே ஒருவித பக்திச் சடங்கு அவர்களை ஆண்டுதோறும் இந்த மலை முகடுகளை நோக்கி இழுத்து வந்தது.

​அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் பளியர் குடியின் எல்லைக்கற்கள் தெரிந்தன. அங்கே மலையின் பூர்வகுடிகள் காட்டு நெல்லிக்காய்களையும், சுவைமிக்க கொம்புத்தேனையும், நாரவள்ளிக் கிழங்குகளையும் மூங்கில் கூடைகளில் பரப்பி வைத்து பக்தர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

​செங்கதிர் தன் தம்பி வேழனின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றாள். “வேழா… இன்னைக்கு யார்கிட்டயும் போயி கையேந்தி நிக்கக் கூடாது. பசியெடுத்தா குடிசையில சுட்ட கிழங்கு இருக்கு, தின்னுக்கோ. நான் சொல்லிக் குடுத்த அந்த எண்களைத் தரையில எழுதிப் பழகு” என்றாள்.

​வேழன் தலையசைத்தான்; ஆனால் அவனது பார்வை மலையேறி வரும் கூட்டத்தின் பளபளக்கும் வேட்டிகளிலும், அவர்களின் கைகளில் இருந்த பித்தளைத் தட்டுகளின் மீதும் நிலைத்திருந்தது. அவனது மனதில் பசியும், சமவெளி மனிதர்கள் வீசும் அந்தப் பளபளக்கும் காசுகளின் மீதான ஒரு விசித்திரமான மிரட்சியும் கலந்திருந்தன.

​பகல் பத்து மணியளவில் மாவூற்றுப் பிரகாரம் திருவிழாக் கோலம் பூண்டது. மலையடிவாரத்தின் நீர்ச்சுனை பளிங்கு போலக் கொப்பளித்து வழிய, பக்தர்கள் அதில் மூழ்கி எழுந்து ஈரத் துணியோடு சன்னதிக்கு வந்தனர். சன்னதி மணியோசை மலை முகடுகளில் மோதிப் பள்ளத்தாக்கெங்கும் எதிரொலித்தது.

“அரோகரா… மாவூற்று வேலப்பனுக்கு அரோகரா…” என்ற முழக்கம் காட்டின் அமைதியைக் கிழித்தது. ஆனால், அந்த சன்னதிக்கு அப்பால், நூறாண்டுப் பழமையான மருத மரத்தின் நிழலில் பளியர்களின் ஆதி வழிபாட்டுச் சடங்கு மெளனமாக நடந்தது.

​காடனும் அவனது மகன் சின்னானும் ஒரு வெள்ளைக் கல்லை நட்டு, அதற்குச் செம்மண் பூசி, காட்டுப் பூக்களால் அலங்கரித்திருந்தனர். அது ‘பழச்சி அம்மன்’ பீடம். வெளியாட்கள் வேலப்பனை முருகனாகப் பார்த்தபோது, பளியர்கள் அந்தச் சுனையின் காவல் சக்தியைத் தங்கள் ஆதித் தாயாகவே வணங்கினர். காடன் ஒரு மூங்கில் குழாயில் அடைத்து வைத்திருந்த முதல் கொம்புத்தேனை எடுத்து அந்தக் கல்லின் மீது ஊற்றினான்.

​”ஆத்தா பழச்சி… மலைக்கு மனுசங்க வர்றாங்க. ஆனை வழி மறிக்காம, கரடி சீறாம எம்புள்ளைகளக் காப்பாத்து. காட்டை நாங்க காயம் பண்ணாம வாழுறோம்; எங்களை நீதான் கைவிடாம பாக்கணும்,” என்று தரையில் விழுந்து வணங்கினான். இது இரத்தமற்ற, பந்தாடல்களற்ற ஓர் ஆதி மரபு. இயற்கையிடம் இருந்து பெற்றதற்குப் பிரதியாக இயற்கையின் காலடியிலேயே சமர்ப்பிக்கும் கானகச் சடங்கு.

​ஆனால், சன்னதியின் வாசலில் வேறொரு காட்சி அரங்கேறியது. சாமி தரிசனம் முடித்து வந்த சக்கம்பட்டி பக்தர்கள் பிரசாதங்களை உண்டுவிட்டு, படிகளில் அமர்ந்திருந்த பளியர் சிறுவர்களின் கைகளில் பிரசாதம் சில்லறைகளை கொடுக்கத் தொடங்கினர்.

​செங்கதிரின் சொல்லை மறந்து, பசியின் உந்துதலால் வேழனும் படிக்கட்டுகளின் ஒரு மூலையில் போய் அமர்ந்துவிட்டான். அவனது விரிந்த பிஞ்சு உள்ளங்கையில் பக்தர்கள் வீசிய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் குவிந்தன. அந்த உலோக நாணயங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ‘கிலுங் கிலுங்’ என்ற சத்தம் அவனுக்கு ஏதோ மாய உலகத்தின் வாசனையைக் காட்டியது.

​அப்போது சமவெளியைச் சேர்ந்த ஒரு மளிகைக் கடை வியாபாரி வேகமாகப் படிக்கட்டுகளில் இறங்கி வந்தார். கோவில் வாசலில் தேங்காய் வாங்க அவருக்குச் சில்லறை தேவைப்பட்டது.

​மடி நிறையச் சில்லறைகளை அள்ளி வைத்து விளையாடிக் கொண்டிருந்த வேழனைக் கண்டதும் அவர் சட்டென்று நின்றார். தன் சட்டைப் பையிலிருந்து அழுக்கடைந்த, கசங்கிய ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வேழனின் முகத்துக்கு நேரே நீட்டினார்.

​”டேய் தம்பி… எங்கிட்ட சில்லறை இல்ல. இந்தா இந்த ஐம்பது ரூபாயை வச்சுக்கோ. உங்க சாமிகிட்ட தேங்காய் உடைக்கப் பத்து ரூபாய் காணிக்கை குடுக்கணும். இந்த ஐம்பது ரூபாயில பத்து ரூபாய் போக, மீதி நாற்பது ரூபாயைச் சில்லறையா எடுத்துக் கொடு, சீக்கிரம்!” என்றார் அதிகாரத் தொனியில்.

​வேழன் அந்த ஐம்பது ரூபாய் தாளைப் பார்த்தான்; பின் தன் மடியில் கிடந்த சில்லறைக் குவியலைப் பார்த்தான். அவனது பிஞ்சு மூளைக்குள் உலகம் இருண்டுபோனது.

​அவனுக்கு ‘ஐம்பது’ என்றால் என்னவென்று தெரியாது. ‘பத்து’ என்ற சொல்லின் எல்லை புரியவில்லை. ‘மீதி நாற்பது’ என்பது அவனது கற்பனைக்கும் எட்டாத ஓர் அசாத்திய புதிர். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: பாறையில் தேனீக்கள் எத்தனை இருக்கின்றன, சுனையில் மீன்கள் எப்படி நீந்துகின்றன என்பது மட்டுமே. எண்களின் மாய உலகமும், சமவெளியின் கூட்டல் கழித்தல் தந்திரங்களும் அவனது கானக அறிவுக்கு அப்பாற்பட்டவை.

​வியாபாரி அவசரப்படுத்தினார். “என்னடா அப்படி முழிக்கிற? சொன்னது காதுல விழல? பத்து ரூபாயை எடுத்துக்கிட்டு மிச்சம் நாற்பது ரூபாயைக் கொடுடான்னா பேய் மாதிரி பாக்குற!” என்று குரலை உயர்த்தினார்.

​வேழனின் கண்கள் மிரண்டன. கைகள் நடுங்கின. மடியில் இருந்த நாணயங்களை அள்ளினான்; அதில் ஒன்று, இரண்டு, ஐந்து எனப் பல எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் எது ஒன்று, எது இரண்டு, எது ஐந்து என்று அவனுக்குப் பிரித்தறியத் தெரியவில்லை. எல்லாமே பளபளக்கும் வட்ட உலோகங்கள், அவ்வளவுதான். அந்த வியாபாரி கோபத்தில் அடித்துவிடுவாரோ என்ற அச்சத்தில், தன் மடியில் இருந்த சில்லறைக் குவியலை அப்படியே இரண்டு கைகளாலும் அள்ளி, அந்த ஐம்பது ரூபாய்க்காக அவரிடம் மொத்தமாக நீட்டினான். அதில் அறுபது ரூபாய்க்கும் மேல் சில்லறை இருந்தது!

​அடிவாரத்தில் நின்று தம்பியைத் தேடி வந்த செங்கதிர், இந்தக் காட்சியைக் கண்டதும் மின்னல் பாய்ந்தது போல ஓடிவந்தாள்.

​வியாபாரி அந்தச் சில்லறைக் குவியலை அள்ளித் தன் பையில் திணிக்க முற்பட்ட அந்தக் கணத்தில், செங்கதிர் குறுக்கே புகுந்து வேழனின் கைகளைத் தட்டிவிட்டாள். சில்லறைகள் படிக்கட்டுகளில் சிதறி “சலசல”வென உருண்டோடின.

​”நில்லுங்க!” என்று செங்கதிர் அலறினாள். அவளது கண்கள் கோபத்தில் கனன்றன.

​வியாபாரி அதிர்ந்து போய், “என்னம்மா… நான் அவன்கிட்ட ஐம்பது ரூபாய் குடுத்து சில்லறைதான கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி எகிறுற?” என்றார்.

​”சில்லறை கேட்டீங்களா… இல்ல இந்தக் கொழந்தையோட அறியாமையை வச்சு ஏமாத்துனீங்களா?” என்று செங்கதிர் வெடித்தாள். “ஐம்பது ரூபாயைக் குடுத்துட்டு நாற்பது ரூபாய் கேக்குறீங்க. இவன் இன்னும் பள்ளிக்கூடத்துப் படியையே மிதிக்காத பளியர் காட்டுப் பிள்ளை! இவனுக்குப் பத்து எது, நாற்பது எதுன்னு தெரியாதுங்கிறது உங்க கண்ணுக்குத் தெரியலையா? அவன் பயத்துல மடியில் இருந்த மொத்தக் காசையும் அள்ளிக் குடுக்கும்போது, அதுல அறுபது ரூபாய்க்கு மேல இருக்குதுன்னு தெரிஞ்சும் கையை நீட்டுறீங்களே… இதுதான் உங்க சமவெளி நாகரிகமா?”

​சுற்றியிருந்த சக்கம்பட்டி நெசவாளர்களும் பக்தர்களும் அந்த இடத்தில் கூடினர்.

​செங்கதிர் தன் தம்பியை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். வேழன் பயத்தில் அக்காவின் சேலை முந்தானைக்குள் முகத்தைப் புதைத்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

​”பாத்தீங்களா பெரியவர்களே…” என்று செங்கதிர் கூட்டத்தைப் பார்த்து உடைந்து அழுதாள். “மாசம் தோறும் கார்த்திகைக்கு வந்து எங்க மலையில இருக்குற வேலப்பனை வணங்குறீங்க. எங்க பிள்ளைகளுக்குப் புண்ணியத்துக்குச் சில்லறையை தாறீங்க. ஆனா, அந்தப் பிள்ளைக்குக் கையில விழுந்த காசுல பத்து எது, நாப்பது எதுன்னு எண்ணத் தெரியலையே… ஒரு ஐம்பது ரூபாய் தாளைக் காட்டி அவனோட மொத்த உழைப்பையும், மடியில் கிடந்த சில்லறையையும் பறிச்சுட்டுப் போற அளவுக்கு இங்க அறியாமை இருட்டு சூழ்ந்து கெடக்குதே! இந்த படிக்கட்டுல நாங்க பிச்சைக்காரங்களா இருக்குற வரைக்கும், எங்களை ஏமாத்துறதுக்கு ஆயிரம் வியாபாரிங்க வருவாங்க. எங்களுக்குத் தேவை உங்க சில்லறைக் காசுகள் இல்ல… என் தம்பிக்கு எண்களை எண்ணத் தெரிய வைக்கிற கல்வி!”

​செங்கதிரின் வார்த்தைகள் படிக்கட்டுகளில் மோதி, ஒரு தீப்பொறியைப் போல அங்கிருந்தவர்களின் மனசாட்சியை உலுக்கியது. அந்த வியாபாரி வெட்கித் தலைகுனிந்து, தன் ஐம்பது ரூபாய் தாளை எடுத்துக்கொண்டு கூட்டத்தில் நழுவி மறைந்தார்.

சக்கம்பட்டியின் மூத்த நெசவாளர் பொன்னுச்சாமி மெதுவாக முன்னே வந்தார். தறி நெய்து பழக்கப்பட்ட அவரது கைகள் நடுங்கின. அவர் வேழனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். கீழே சிதறிக் கிடந்த நாணயங்களில் ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்தார்.

“தாயி செங்கதிரு…” என்று தழுதழுத்த குரலில் சொன்னார் பொன்னுச்சாமி. “தறியில பாவு நூலை எண்ணி ஓட்டுற எங்களுக்கு, இந்த மலையோட பிள்ளைகள் கணக்குத் தெரியாம ஏமாறுறதைப் பாக்கிறப்போ நெஞ்சு வெடிச்சுடும் போல இருக்குதும்மா. நாங்க செஞ்சது தர்மம் இல்ல; அறியாமையில உங்களை மூழ்கடிச்ச அநீதி. சில்லறையை வீசிட்டுப் போனா புண்ணியம் வரும்னு நெனச்சோம்… ஆனா, உங்க வாழ்க்கையோட கணக்கு அறுந்து போய்க் கெடக்குறதை இன்னைக்கு நீ கண்ணுல விரல் விட்டு ஆட்டி காட்டிட்ட.”

​பொன்னுச்சாமி எழுந்து நின்று, தன் தோழர்களான நெசவாளர்களைப் பார்த்தார்.

​”தம்பிகளா… இனிமே கார்த்திகை நாளுல மாவூற்றுக்கு வரும்போது நாம சில்லறைக் காசுகளை இந்த படிக்கட்டுல இருக்கிற பசங்களுக்கு தரக்கூடாது. நம்ம சார்பா, இந்தப் பளியர் குடியில இருக்குற அத்தனை பிள்ளைகளுக்கும் நோட்டுப் புத்தகம், சிலேட்டு, பென்சில், பள்ளிக்கூடத்துக்கான சீருடை எல்லாத்தையும் நாமளே வாங்கித் தருவோம். வேழனை ஆண்டிபட்டிப் பள்ளிக்கூடத்துல சேர்க்குறதுக்கான அத்தனை செலவையும் நம்மளே ஏத்துக்கிடுவோம். இங்க ஒரு கொழந்தை கூட எண்களைத் தெரியாம ஏமாந்து நிக்கக் கூடாது!”

​கூட்டத்தில் இருந்த நெசவாளர்களும் நெகிழ்ச்சியோடு அதை ஆமோதித்தனர். பல தலைமுறைகளாக நீடித்த யாசகத்தின் பிணைப்பு, அன்றைய பொழுதில் சமத்துவத்தின், கல்வியின் பிணைப்பாக உருமாறியது.

​மாலை மங்கத் தொடங்கியது. மாவூற்றின் கரிய பாறைகளின் மேல் செவ்வானத்தின் பொன்னிற ஒளி படர்ந்திருந்தது. சக்கம்பட்டி நெசவாளர்கள் மலைப்பாதையில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் நெஞ்சில் வழக்கமான கிரிவலக் களைப்பு இல்லை; ஒரு புதிய விடியலை நோக்கிய கூட்டுப் பொறுப்புணர்வின் அமைதி படர்ந்திருந்தது.

​குடிசையின் முன்னால், காடன் மூட்டிய தீமூட்டம் தகதகவென எரிந்து கொண்டிருந்தது.

​செங்கதிர் ஈர மணலில் ஒரு குச்சியால் எண்களைப் பெரிதாக வரைந்து காட்டிக் கொண்டிருந்தாள்:

​10… 20… 30… 40… 50…

​வேழன் தன் பிஞ்சு விரல்களை அந்த மணல் எண்களின் பள்ளங்களில் வைத்து, கூர்ந்து கவனித்துச் சொன்னான். “அக்கா… நாப்பதுக்கு அப்புறம்தான் ஐம்பது வருதுல்ல? பத்து போயிட்டா நாற்பது மிஞ்சும், அப்படித்தானே?”

​செங்கதிர் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள். “ஆமாடா வேழா… இனிமே உன்னை இந்த உலகத்துல எந்தக் கொம்பனாலும் ஏமாத்த முடியாது.”

​பாறை விளிம்பில் அமர்ந்திருந்த கிழவன் காடன், தன் மங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு அந்த மணல் எண்களைப் பார்த்தான். அவனது உதடுகள் கானகத்தின் ஆதிப் பிரார்த்தனையை முணுமுணுத்தன

“ஆத்தா பழச்சி… காடு நமக்குச் சோறு போடும்; ஆனா இந்த உலகத்துல மனுசனா வாழ இந்த எண்களும் எழுத்தும்தான் வழி காட்டும்னு இன்னைக்கு என் பேத்தி நெரூபிச்சிட்டா. பளியன் காட்டுக்குள்ளயே அடங்கிப் போயிட மாட்டான்… இனி எண்களைக் கொண்டும் உலகத்தை அளப்பான்!”

இரவின் குளிர் மாவூற்றை மெல்லத் தழுவியது. பாறைகளின் வழியே கசிந்து பாயும் அந்தச் சுனைநீரின் சலசலப்பில், பசியின் முனகலோ அல்லது அறியாமையின் கையேந்தலோ இனி இல்லை; எண்களின் வெளிச்சத்தோடு மலையுச்சியிலிருந்து சமவெளியை நோக்கி நடைபோடத் தயாராகிவிட்ட ஓர் ஆதி குலத்தின் கம்பீரமான வரலாற்றுப் பாடல் மிக ஆழமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

You Might Also Like

கேட்கமறந்தோம்
கறி விருந்து
காலக்குடில்
நினைவுச் சாரல்
நெஞ்சம் மறப்பதில்லை
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் செப்டம்பர் 2026
Previous Article பகுதி 3: கங்கா என்னும் மர்மம் – சிலேடையில் சிக்கிய சோழம்
Next Article ஹபீபி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?