VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: நான் என்பது…
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > நான் என்பது…
சிறுகதைகள்

நான் என்பது…

இந்த காலத்தில் யாருமே உண்மையானவங்க இல்லை. எல்லோருமே ஒரு முகமூடியோடதான் அலையறாங்க.

அப்பு சிவா
Last updated: September 3, 2026 11:54 am
9 Views
Share
14 Min Read
நான் என்பது…
SHARE

நான் என்பது…

அப்புசிவா

            கண்ணாடியில் மறுபடி தன்னைப் பார்த்தான் செல்வகுமார். ‘மீசையும் தாடியும் மற்றவர்களைவிட அதிகமாக உனக்கு வருகிறது’ என்று தன் அப்பா சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்தான். ரகுராமனுக்கு இன்னமும் அரும்பு மீசைகூட வரவில்லை என்பதையும் யோசித்தான். சீப்பால் மீசையை சீவிவிட்டான். மெல்லிய அந்த மீசை, முறுக்க ஏதுவாக எலிவால் போல நீண்டு இருந்தது. கன்னத்தில் படந்த மெல்லிய தாடியில் சீப்பு விளையாடி கோடுகள் போட்டது.

            “இன்னுமாடா தலை சீவற? நேரமாவல?” என்று அவன் அம்மா கத்தியதும் சீப்பை போட்டுவிட்டு பவுடரை லேசாக தீட்டிக்கொண்டு, பவுடரைத் தொட்டு நெற்றியில் நீறு போல வைத்துக்கொண்டு வெளியே வந்தான் செல்வகுமார். செல்வகுமாரின் அம்மா சுமதி, திண்ணையில் தட்டு வைத்து நான்கு இட்லிகள் போட்டிருந்தார். அவரின் சாம்பாருக்கும் இட்லிக்கும் தெருவே அடிமை. ஆனால் எவ்வளவு வியாபாரம் ஆனாலும் ஒன்பது மணிக்கு வாசலில் போட்டிருந்த இட்லிகடையை ஓரங்கட்டிவிடுவார்.

அவன் அப்பா ரங்கராஜ், மேஸ்திரி வேலைக்கு அதிகாலையிலேயே போய்விடுவார். அவருக்கு ஏற்கனவே ஒரு தடவை நெஞ்சுவலி வந்ததில் இருந்து அதிக பாரம் தூக்கக்கூடாது என்று ஹாஸ்பிடலில் சொல்லியிருந்தார்கள். சுமதி ஒன்பது மணிக்கு ரங்கராஜ் வேலை செய்யும் இடத்துக்கு ஓடிவிடுவார். செங்கல் எடுத்துக்கொடுப்பது, சிமெண்ட் தட்டு தூக்கித்தருவது என சித்தாள் வேலை.  கூலி குறைவு என்றாலும் கணவரின் கூடவே இருந்து அவரை பார்த்துக்கொள்வது சுமதியின் மனதில் எழுதப்பட்ட கடமை.

            “என்னாடா உனக்கு மட்டும் நீறு இவ்வளவு வெள்ளையா இருக்கு?” என்றார் பக்கத்து வீட்டு சரசு. அவர் காலையில் வந்து உட்கார்ந்தால் சுமதியின் இட்லிகடைக்கு கூடமாட உதவுவார். பதிலுக்கு போகும்போது காலை உணவு இங்கேயே அவருக்கு முடிந்துவிடும். சுமதியின் ஒரே ஒரு உற்ற சினேகிதி.

            “அது வந்து…” என்று இழுத்தான் செல்வகுமார். அது நீறு இல்லை, முகப்பவுடர் என்று தெரிந்தால் சுமதியின் முகம் கோபத்தில் சிவந்துவிடும். நீறு வைப்பது சாமி கும்பிடுவது எல்லாம் செல்வகுமாருக்கு எப்போதும் ஆகாது. கொஞ்சம் அப்பா ரங்கராஜ் படிப்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்களை படித்ததால் வந்த கைங்கர்யம் அது.

            “அவன் நல்லா கலருல்ல, அதான் பளிச்சுன்னு இருக்கு. நீ வேற கண்ணு வைக்கறியா?” என்றார் சுமதி.

            “அச்சோ, இனிமே உன் பையன் மேல கண்ணு வச்சு எனக்கு என்னா ஆகப்போகுது. சும்மா கேட்டேன் ஆயா, விடு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சரசு. சாப்பிட்ட தட்டை கழுவ எடுத்துப்போனான் செல்வகுமார். அவனைத் தடுத்து தட்டை வாங்கிக்கொண்டார் சுமதி. அவருக்கு ஆண்பிள்ளை தட்டு கழுவக்கூடாது. வாங்கியவர் அவனையே உறுத்துப் பார்த்தார்.

            “என்னம்மா அப்படி பாக்கற? நிஜமா இது நீறுதான்” என்றான் செல்வகுமார்.

            “அது இல்லடா, உங்க அப்பாதான் சொல்றாரில்ல, அந்த தாடிமீசையை வழிச்சாதான் என்ன? முகமே கருப்படிக்குதுல்ல, ஸ்கூல் போற பையனாட்டமா இருக்க நீ?” என்றார் சுமதி.

            “அட போம்மா, அவர்தான் சொல்றாருன்னா நீ வேற. ப்ளஸ்டூ படிக்கற பையன் இப்பவே முகத்தில் பிளேடு பட்டா அப்புறம் இன்னும் கருகருன்னு வந்திடுமாம். எங்க க்ளாஸ்லயே யாரும் பண்றது இல்ல” என்று சொல்லிவிட்டு படபடவென கிளம்ப ஆரம்பித்தான் செல்வகுமார்.

            செல்வகுமார் கடைசிப்பையன். பெரிய அக்கா அவரது மூன்று வயதிலேயே இறந்துவிட்டதாக அம்மா சுமதி அவ்வப்போது சொல்லி அழுவார். இரண்டாவது அக்காவை திருச்சியில் கட்டிக்கொடுத்தார்கள். கடைசி அக்கா கல்லூரி படிக்கும்போது கூட படித்த நபரை காதலித்து திருமணம் செய்து கோவையில் செட்டில் ஆகிவிட்டார். அப்போது செல்வகுமார் ஆறாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான். பெண்கள் இருவருக்கும் இருக்கும் வீட்டை விற்று குறைவில்லாமல் சீர் செய்திருந்தார் செல்வராஜ். கடைசியாக தவமிருந்து பெற்ற மகன் செல்வகுமார்.

            “எல்லாத்தையும் இப்படி பொண்ணுங்களுக்கே குடுத்துட்டா பெத்த ஒரே பையனுக்கு என்ன செய்வீங்க?” என்பார் சுமதி.

            “அவனை நல்லா படிக்க வைக்கிறேண்டி, பெரிய படிப்பு படிப்பான். எல்லாம் அவன் சம்பாதிப்பான். ஆம்பளடீ அவன்” என்று சுமதியின் வாயை அடைத்துவிடுவார் செல்வராஜ். 

            இரண்டு கிலோமீட்டர் சைக்கிளில் சென்றால் ஸ்கூல். இன்னமும் தனியார் பள்ளிகள் அங்கே வரவில்லை. இருப்பது ஒரே அரசுப்பள்ளிதான். செல்வகுமாரின் பள்ளியில் மேத்ஸ் குரூப்பில் ஆட்களும் குறைவு. செல்வகுமார் முதல் அல்லது இரண்டாம் ரேங்க்தான் எப்போதும் எடுப்பான். கணிதப்புலி என்று அவனை கணித ஆசிரியர் கூப்பிடுவார். ஊரில் பெரும்பாலும் பாதியில் படிப்பை நிறுத்திவிடுவார்கள் அல்லது ஆர்ட்ஸ் குரூப் எடுத்துக்கொள்வார்கள். எளிதாக காப்பியடிக்கலாம். செல்வகுமார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊரின் கடைசியில் இருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்றான். சாலையில் இருந்து உள்ளே தள்ளி இருக்கும் கோயில் அது. சைக்கிளை கோயில் சுவரின் மறைவில் நிறுத்தினான். பெரிய பெரிய அய்யனார் சிலைகள் கையில் வீச்சரிவாளுடன் இருக்க, அருகே பிருமாண்டமான குதிரைச்சிலைகள் இருந்தன. சின்ன அய்யனார் கருப்பாக, சின்ன கோயிலின் கருவறையில் இருந்தார்.  சாலையின் பார்வையில் இருந்து பார்த்தால் கோயிலின் பின்புறம்தான் தெரியும். வாசல் தெரியாது. அங்கே அமர்ந்தான் செல்வகுமார். பையில் மறைத்து வைத்திருந்த சின்னக் கண்ணாடியை எடுத்துப்பார்த்தான். தாடியையும் மீசையையும் எடுத்துவிட்டால் தான் இன்னமும் எவ்வளவு அழகாக இருப்போம் என்று முகத்தை திருப்பித்திருப்பி பார்த்தான். கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்த அம்மாவின் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துப்பார்த்தான். மீசையை மறைத்து கண்களும் பொட்டும் மட்டும் கண்ணாடியில் தெரிவதை ரசித்துப்பார்த்தான். தான் எவ்வளவு அழகு என்பதை தனக்குள் சொல்லிக்கொண்டான்.

            கால்களை கைகளால் அணைகொடுத்து அம்மா உட்கார்ந்திருப்பதைப்போல உட்கார்ந்தான். அவன் முகம் கவிழ்ந்திருந்தது. மெல்ல முதுகு குலுங்க அழ ஆரம்பித்தான்.

            சென்ற ஆண்டில்கூட இப்படியெல்லாம் அவனுக்கு தோன்றியது இல்லை. இத்தனைக்கும் அப்போதெல்லாம் இன்னமும் பால்வடியும் முகம். அவ்வப்போது கூட படிக்கும் நண்பர்கள்தான் எப்போதாவது கிண்டல் செய்வார்கள். அவன் பெண்போல பேசுவதாக. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே கொஞ்சம் சுதாரித்துக்கொண்டான். முடிந்தவரை தன்னை கட்டுப்படுத்தி பேச ஆரம்பித்தான். முடிந்தவரை மற்றவரிடம் பேசுவதை குறைத்தான். அவனுடன் முதல்வகுப்பில் இருந்து ஒன்றாகப்படிக்கும் ரகுராமனிடம் மட்டும் பேசுவான். அவன் எப்போதும் செல்வகுமாரை வேறாக நினைப்பதே இல்லை. ஆசிரியர்களிடம் பேசும்போது வலுக்கட்டாயமாக ஒரு மிலிட்டரி ஆள் போல நிற்கவும் பழகியிருந்தான் செல்வகுமார். மீசையும் தாடியும் எடுக்கவேகூடாது, அதுவே தனது கவசம் என்றும் மனதிற்குள் சொல்லிக்கொள்வான். முகத்தில் ஏதோ வேண்டாத ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற உணர்வு மட்டும் அடிக்கடி வரும்.  

            இதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று அவனுக்குள் சமீபமாக பயம் வர ஆரம்பித்திருந்தது. படிப்பில் கவனம் குறைவதையும் உணர்ந்தே இருந்தான் அவன். இப்படி வகுப்புக்கு போகாமல் இந்த கோயிலில் வந்து உட்கார்ந்துகொள்வது இந்த மாதத்திலேயே மூன்றாவது தடவை. உடல் நிலை சரியில்லை என்று மறுநாட்களில் லட்டர் கொடுத்துவிடுவான். சில மாதம் முன்பு ரகுராமன்தான் அவனுடைய பிறந்தநாளின்போது இந்த இடத்தை காட்டியிருந்தான். சில நேரம் வகுப்பை கட் அடித்துவிட்டு இங்கே ஒதுங்கிவிடுவானாம். அன்று பியர் வாங்கி வந்திருந்தான். அதன் சுவை செல்வகுமாருக்கு குமட்டியது. அதை முடித்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்து இழுத்தான் ரகுராமன். அதையெல்லாம் பார்க்கப்பார்க்க பயம் வந்து உடனே கிளம்ப எத்தனித்தான் செல்வகுமார். நல்லவேளையாக சிகரெட் ரகுராமனுக்கும் சேரவில்லை. சற்று நேரத்தில் வாந்தியெடுத்துவிட்டான்.

            “களவும் கற்று மறக்கணும்டா செல்வா” என்பான் அவன்.

            “களவு என்னன்னு தெரிஞ்சா போதும், தவிர்க்க” பதிலுக்கு சொல்வான் செல்வகுமார்.

            அவனிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. என்ன பேசுவது என்பதை நினைக்க நினைக்க தலைவலிப்பதாக தோன்றியது. தலைமேல் ஏதோ பாறையை தூக்கிவைத்தது போலவும் இருந்தது. அப்படியே கண் அயர்ந்தான். அவன் கனவில் ரகுராமன் வந்தான். ஆதரவாக அவன் கையைப்பற்றினான். ‘நான் இருக்கேண்டா உன்கூட… உன் உயிர் நண்பன்’ என்றான். ஒரு சிகரெட்டை பற்றவைத்து அவன் முகத்தில் ஊதினான். அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினான் செல்வகுமார். அவன் கையைப்பற்றி முதுகுபக்கம் வளைத்துப்பிடித்தான் ரகுராமன். ‘நீ பொண்ணுடா, என்னோட சண்டைபோட உனக்கு வலு பத்தாது’ என்று சிரித்தான் அவன். அவன் அப்படிச்சொன்னதும் கோபம் வர படாரென கையை உருவிக்கொண்டு அவனை ஓங்கி உதைத்தான் செல்வகுமார்.

            “அய்யோ…” என்று கத்தியபடி கீழே விழுந்தான் அவன். சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து திருதிருவென விழித்தான் செல்வகுமார்.

            “அடேய், என்னடா இப்படி உதைக்கிற?”

            “அது வந்து… நீ எங்க இங்க? எப்ப வந்த?”

            “அதுசரி, ஃபர்ஸ்ட் பீரியட் நீ காணம், லீவுன்னு இருந்தேன். அடுத்து மேத்ஸ் எமன் வந்துடும். நீ இருந்தா பதில் சொல்லி எல்லாத்தையும் காப்பாத்துவ. இல்லைன்னா எங்களை நல்லா கேள்வி கேட்டு போட்டு எடுக்கும். அதான் எஸ்கேப் ஆகலாம்னு வந்தேன். இங்க வந்து பாத்தா நீ என்னை விட செம்ம எஸ்கேப் பார்ட்டின்னு தெரிஞ்சது. அதெப்படிடா ஸ்கூல் கட் அடிச்சுட்டு இப்படி தூங்க முடியுது உன்னால?” என்றான் அவன்.

            “வந்து, எனக்கு… ஆமாண்டா எனக்கு காய்ச்சல். லீவு போட்டா வீட்ல கேள்வி கேட்பாங்க. அதான் இங்க வந்து அப்படியே அசந்துட்டேன்”

            “நிஜமாவா?” என்று சொல்லிவிட்டு சட்டென செல்வகுமாரின் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப்பார்த்தான் ரகுராமன். அவன் கை பட்டதும் இயல்பான கூச்சமாக அதை தவிர்த்தான் செல்வகுமார். ரகுராமனின் கையை பற்றி நகர்த்தினான்.

            “ஆமாண்டா, காய்ச்சல் போலதான் இருக்கு, அதுக்கேன் என் கையை தள்ளிவிடுற… பொண்ணாட்டம். ஆனா பாவமா தூங்கறயேன்னு நான் என் செல்லை பார்த்துட்டு இருந்தேண்டா, இடுப்பிலயே விட்டே பாரு ஒரு உதை… ஆத்தீ… கழுதை கெட்டுது போ” என்று சிரித்தான் ரகுராமன். அவனின் இயல்பான உரையாடல் செல்வகுமாரையும் பற்றிக்கொண்டது.

            “நான் கழுதைன்னா நீ எருமை” சொல்லிவிட்டு அப்போதுதான் அவன் நெற்றியை பார்த்தான் ரகுராமன்.

            “அடேய், என்னாடா இது… ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் வச்சுருக்க… அய்ய, நிஜமாவே மீசைக்கும் பொட்டுக்கும் குட்டி அய்யனார் போல இருக்கடா நீ” என்றான் ரகுராமன்.

            “அப்போ மீசை தாடியை எடுத்துட்டா? எப்படி இருக்கும்?”

            “அப்போ…” சொல்லிவிட்டு அவனை கேமராவில் போகஸ் செய்வது போல கையை வைத்து பார்த்தான்.

            “என்னாடா பண்ற?”  என்றவனுக்கு அவனின் இயக்குநர் சேட்டைகள் ரசிக்கும் வகையில் இருந்தது.

            “மனசில் உன் மீசையை எடிட் பண்ணி பார்த்தேண்டா, அப்படியே சினிமா கதாநாயகி போல இருப்ப நீ”

            “நிஜமாவா?”

            “சொன்னா நம்ப மாட்டல்ல? இரு வரேன்” என்று சொல்லிவிட்டு தன் செல்லில் செல்வகுமாரை படம்பிடித்தான் அவன். அது அவன் அப்பா வாங்கிக் கொடுத்ததாம். ஸ்கூலில் செல் வைத்திருக்க தடை உண்டு. ஆனாலும் மறைத்து மறைத்து பார்ப்பார்கள் பலர்.

            எடுத்த படத்தை மடியில் வைத்து ஏதோ எடிட் செய்தான் அவன். ஐந்து நிமிடத்தில் செல்வகுமாரிடம் காட்டினான். அதில், செல்வகுமார் இருந்தான். மீசை தாடி இல்லாமல் இருந்தான். பொட்டு, தோடு எல்லாம் இருந்தது. சேலை கட்டியிருந்தான். மிகவும் அழகாக இருந்தான். அப்படியே வைத்த கண் மாறாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வகுமார்.

அவன் தலையை பிடித்து ஆட்டிய ரகுராமன், “அடேய் பயலே, என்னாடா… உன்னை நீயே சைட் அடிச்சுட்டு இருக்க?” என்று சிரித்தான். தன் தலையை பற்றிய ரகுராமனின் கையை பற்றி கீழே வைத்த செல்வகுமார் சொன்னான்.

            “இதான் நிஜமா நான்”

            ஒரு நிமிடம் அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் விழித்தான் ரகுராமன். அவன் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே உறைந்து இருந்தது. அவன் செல்வகுமாரையே உறுத்துப்பார்த்தான். அவன் கரத்துடன் பற்றியிருந்த செல்வகுமாரின் கையில் தன் தாயின் ஸ்பரிசம், அவன் அக்காவின் தலைகோதிய கையின் மென்மை, சிறு வயதில் கூட விளையாடிய பக்கத்து வீட்டு பெண்ணின் கைகள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் உணர்ந்தார்போல இருந்தது அவனுக்கு. கையை விலக்கிக்கொள்ள நினைத்தான். ஆனால் அவன் செல்வகுமார் என்பதை உறைக்க, கையை விலக்காமல் அவனையே பார்த்தான்.

            “என்னாடா சொல்ற?”

            தலைகுனிந்து இருந்தான் செல்வகுமார். குனிந்தபடியே மெல்ல பேசினான்.

            “ஆமாடா, நிஜமா நான்தான் அந்த படம். இங்க இருக்கற நான் வெறும் முகமூடி”

            “டேய் செல்வா, ஸ்கூல்ல எல்லாம் கிண்டல் பண்றது வச்சு அப்படி சொல்றயா?”

            “அதுவும்தான்”

            சிரித்தான் ரகுராமன்.

            “அடப்பாவி, அது எல்லா டீன்ஏஜ் பசங்களுக்கும் இருக்கும்டா, ஒரு பெண்மைத்தனமான அழகு. அது ஒரு சிலருக்கு அதிகமா இருக்கும். உங்க வீட்ல எல்லோரும் பொண்ணுங்க. அதான் உன்னையும் அப்படியே வளர்த்திருப்பாங்க. ஆனா மீசை தாடியெல்லாம் வந்திருச்சே பாக்கலையா நீ? மனசு போட்டு குழப்பிக்காதே” என்றான் ரகுராமன்.

            “அது இல்ல ரகு, நீ புரிஞ்சுக்கோ. என் மனசு சொல்லுது. என் உடல் சொல்லுது எனக்கு. நானும் எல்லாம் படிச்சிருக்கேன். ஆனா நான் நிஜமாவே வேற. எனக்கு உணர முடியுது. சொல்லத்தெரியலை” என்றான் செல்வகுமார்.

            அதிர்ச்சியாக அவனையே பார்த்த ரகுராமன் சட்டென தன் செல்லை எடுத்து ஏதோ தட்டினான். அதை செல்வகுமாரிடம் காட்டினான்.

            “தோ பாரு செல்வா, இது போல சைக்லாஜிக்கல் ப்ராப்ளம்தான் இது. இதுக்கு கன்சல்டிங் கூட இருக்கு. பயப்படாம ஜாலியா இருடா, ஒரு நல்ல டாக்டரைப்பார்த்து…”

            “அய்யோ ரகு, உனக்கு புரியலையா… இந்த சயின்ஸ், டாக்டர், சைக்கலாஜிக்கல் எல்லாம் விடு, நான் நிஜமாவே பொண்ணுடா… எனக்கு முழுசா புரிஞ்சு ஒரு மாசம் ஆச்சு. நான் வேற உடலில் இருக்கேண்டா” என்று அழ ஆரம்பித்தான் செல்வகுமார். அவன் அழுவதையே அதிர்ந்துபோய் பார்த்தான் ரகுராமன். அவனுக்கு என்ன சொல்வது என்றே குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. இருந்தாலும் உயிர் நண்பன் கண்முன்னே அழுவதைக்கண்டதும் அவனுக்கும் கண் கலங்கியது.

            “சரி விடு செல்வா, நான் உன்னை நம்பறேன். இப்போ என்ன பண்ண?”

            “எனக்கு தெரியலை”

            “அதாண்டா, உங்க வீட்ல சொன்னியா?”

            “லூசா நீ, இதை எப்படி சொல்லமுடியும்?”

            “அப்புறம் சொல்லாம எப்படி காலம் தள்றது. எப்படி இருந்தாலும் அவங்களுக்கு தெரிஞ்சுதானே ஆகணும். தெரிஞ்சா உன்னை வீட்டை விட்டு துரத்திடுவாங்கன்னு இருக்கியா? அப்படி துரத்தினா எங்க போறது என்ன பண்றதுன்னு குழம்பறியா? இதுக்குன்னு அமைப்பு எல்லாம் இருக்குடா”

            “அய்யோ ரகு, நீ ரொம்ப யோசிக்கற… இப்படி ஆனா வீட்டை விட்டு போயே ஆகணுமா? ஏண்டா? நானும் உன்னைப்போலதானே. நானும் எங்க அம்மா அப்பாவுக்கு பிள்ளைதானே, இவ்வளவு உயிர்கள் வாழும் பூமியில் வாழ நானும் உரிமையுள்ள ஜீவன்தானே”

            அழுகையுடன் செல்வகுமார் பேசிக்கொண்டே போக, அவன் மூடை மாற்றும் கட்டாயம் இருப்பதாக ரகுராமன் தனக்குள் தீர்மானித்தான்.

            “அலோ செல்வா, க்ளாஸ்ல அந்த மேத்ஸ் எமன் கேள்வியா கேட்கும்னுதான் நானே ஓடி வந்தேன். இங்க வந்தா இந்த மேத்ஸ் புலி என்னை கேள்வியா கேட்டு கொல்லுதே” என்று புலம்புவது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்த செல்வகுமார் கேட்டான்.

            “இது பதில் இல்லாத கேள்விகள் ரகு”

            “அய்ய, பெரிய தத்துவ ஞானி நீ”

            “இல்லதான், ஆனா வாழ ஆசைப்படும் சாதாரண ஜீவனோட அடிப்படை கேள்விகள்தான் இதெல்லாம். இதெல்லாம் ஞானிகள்கூட உணரமுடியா உணர்வுகள்டா”

            “சரிவிடு… என்ன பண்ணலாம்?” என்றான் ரகுராமன்.

            “நீ சொல்லு. நான் கேட்கிறேன்”

            “என்ன குழப்பம் இப்போ உனக்கு?”

            “நான் ஆணா, பெண்ணா… எப்படி இந்த உலகில் காட்டிக்கிறது? என் நிஜ உருவமா, இல்லை இந்த போலி உடலையா?” கேட்டான் செல்வகுமார்.

            “இப்போ என்ன தேவை இருக்கு அதுக்கு?”

            “புரியலை”

            “ஒன்னு புரிஞ்சுக்கோ, இந்த காலத்தில் யாருமே உண்மையானவங்க இல்லை. எல்லோருமே ஒரு முகமூடியோடதான் அலையறாங்க. நம்ம சார்ங்க, ஃப்ரெண்ட்ஸ்ங்க, வழியில் பாக்கும் எல்லாருமே தன் நிஜத்தோட இல்லை. காலம் அப்படி இருக்கு. நீ மட்டும்… நாம் மட்டும் ஏன் உண்மையை சொல்லியே ஆகணும்?”

            “அதுக்கு?”

            “செல்வா, இப்போதைக்கு நீ செல்வகுமார்தான். படி. நல்லா படி. உங்க அப்பா, அம்மாவுக்காக படி. உலகில் நம்மகிட்ட உண்மையா இருக்கும் சொந்தம் அது ஒன்னுதான். நீ நல்லா படிக்கிற… எதிர்காலத்தில் ஏஐ படிக்கணும்னுகூட சொல்வ. பாரேன்… உன் ஃபோட்டோவை நான் ஒரு சில நிமிடத்தில் மாத்தி காட்டிட்டேன். பலபேர் இதை பண்ணிட்டு ஏஐ விற்பன்னர்ன்னு கதை விடுவாங்க. இது கன்ஸ்யூம் பண்றது. இதை உருவாக்கும் அடிப்படையையே படிக்கப்போற நீ. எதிர்காலம் நல்லா இருக்கும். பெரிய ஆள் ஆகிடுவ நீ. அப்புறம் மத்தது எல்லாம் பேசிக்கலாம். இப்போதைக்கு செல்வகுமார் முகமூடி ஒன்னும் தப்பு இல்லை”

            “அவங்களை ஏமாத்திடறேனே… தப்பில்லையா?”

            “அச்சோ, இல்லடா… அவங்களுக்கு அந்த அதிர்ச்சியை இப்போதைக்கு தாங்கமுடியுமா பாரு? எதிர்காலத்தில் எல்லாம் மாறும். அப்போ சொல்வது எளிதா இருக்கும். நீ நல்லா பெரிய ஆளா ஆகணும்டா… எங்க வீட்ல வசதி இருக்கு. படிக்கலைனாலும் சமாளிப்போம். நீ படிக்கணும்டா… என் ஃப்ரெண்டு பெரிய ஆளாவணும்டா” இதை சொல்லும்போதே ரகுவும் அழ ஆரம்பித்தான்.

            “அடப்பாவி, என்னாடா நீ அழற?” ரகுராமனை தேற்றினான் செல்வகுமார்.

            “நீயும்தான் அழுத”

            “அது வேறடா”

            “ஆனாலும் அழுகை நிஜம்தானே”

            “சரிவிடு, இனிமே நாம அழவே கூடாது”

            “அப்போ சிரி நீ…”

            “ஆனா நான் உண்மையாவே இருக்க முடியாதுல்ல?” ஏமாற்றமாக கேட்டான் செல்வகுமார்.

            “உன் ஃப்ரெண்டு நான் இருக்கேனே… என் கேர்ள் ப்ரெண்டு நீ… போதுமா”

            “நட்புன்னா நட்புதாண்டா, இதிலென்ன ஆண், பெண்”

            “நீ கேட்டியேன்னு சொன்னேண்டா லூசு.”

            “இது நல்லாயில்லை” என்றாள் அவள்.

            யோசித்து சொன்னான் ரகுராமன்.

            “நீ கேட்டியேன்னு சொன்னேண்டீ லூசு. இனிமே எனக்கு மட்டும் நீ செல்வி” சொல்லி சிரித்தான் ரகுராமன்.

You Might Also Like

தீராக் கனல்
பாதுகாப்பு
மாணிக்கம் உணவகம்
கேட்கமறந்தோம்
எது சரி? எது தவறு?
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஆகஸ்ட் 2026
Previous Article சூரிய மலை!!! நிஸ்வா – பகுதி 13
Next Article பெரிதினும் பெரிது கேள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?