சூரிய மலை!!!
இளங்கோ ராமசாமி
கடந்த அத்தியாயத்தில் நான் உங்களை அழைத்துச் சென்ற “மிஸ் ஃபாத்” என்ற பல நூற்றாண்டுகள் பழமையான கிராமத்தில் இருந்து வெளிவர மனமே இல்லாமல் லயித்துக் கிடப்பீர் எனத் தெரியும். அங்கிருந்து கிளப்ப அதைவிட வசீகரமான ஏதாவது ஒரு சங்கதி வேண்டுமல்லவா? அதனால் தான் இந்த அத்தியாயத்தில் “சூரிய மலை” எனப்படும் ஓமானின் மிக உயர்ந்த சிகரமான “ஜபல் ஷாம்ஸ்” ன் அருமை பெருமைகளை எடுத்துக் கூறப் போகிறேன். வாசித்து முடித்த கணம் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு என்னோடு நீங்களும் மலையேறத் தயாராவது திண்ணம்.
அதற்கு முன்பு உங்களில் சாகச மனம் கொண்டோருக்காக இரண்டு இடங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்து விடலாம் சரியா?
முதலாவது “Al Mazare”. அரபி மொழியில் “அல் மஸார்” என்றால் ‘தோப்பு’ அல்லது ‘தோட்டம்’ என்று பொருள். “மிஸ்ஃபாத்” தின் ஃபலஜ்ஜிற்கு வரும் நீரூற்றைப் பின் தொடர்ந்து சென்றால் வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து கிடக்கும் ஒரு மாபெரும் கணவாய்க்குள் நுழையலாம். வளைந்து நெளிந்து படுத்திருக்கும் ராட்சத பாம்பொன்றின் வாய்க்குள் புகுந்து வால் பகுதியை நோக்கிச் செல்வது போல மூன்று மணி நேரம் நடந்தால் நமது இலக்கை அடையலாம். இதயம் பலகீனமானோர், இரண்டு மாடிகளைக் கூட லிஃப்ட் இல்லாமல் ஏற முடியாதோர் கன்னத்தில் வைத்துக் கதை கேட்டு வாயைப் பிளப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.
ஓமானின் மிகச் சிறந்த சாகச அனுபவங்களில் இக் கணவாய்க்குள் நுழைந்து இலக்கை அடைந்து அங்கிருக்கும் ஒரு அழகிய வற்றாத குளத்தில் ஒரு குதியலைப் போடுவதும் ஒன்று. செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் ஒரே ஒரு அடி தப்பினாலும் மரணம் என்னும் படியான குறுகிய பாதைகளைக் கடக்க வேண்டும். கைப்பிடியாகக் கட்டப் பட்டிருக்கும் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இறங்கி ஏற வேண்டும். “இத்தனை பாடு பட்டு அங்கு சென்று வருவது வொர்த்தா?” எனக் கேட்டால் “ஆம் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் வொர்த்” என அடித்துச் சொல்வேன். இது போன்ற கணவாய்களின் முழு மெய்யழகை நாம் அங்கு சென்றால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது கணவாய் “ஜபல் ஷாம்ஸ்” ன் அடிவாரத்தில் உள்ள “வாதி நக்ஹர்” (Wadi Nakhr). “மிஸ்ஃபாத்” தில் இருந்து கீழிறங்கி “ஹம்ரா” நகரை அடைந்தவுடன், ரவுண் அபவுட்டில் இடது புறம் பிரியும் சாலையில் மேற்கு நோக்கிச் சென்றால் இருபது நிமிட பயணத்தில் “வாதி நக்ஹர்” ஐ அடையலாம். இந்த இடத்திற்கு “வாதி குல்” என்றொரு பெயரும் உண்டு.
தார்ச்சாலையில் இருந்து கணவாய்க்குள்ளே 7 கி. மீ தொலைவு வரை 4 x 4 வாகனத்தில் செல்ல முடியும். அங்கு ஒரு அழகிய தங்கும் விடுதி உள்ளது. இரவொன்றிற்குத் தங்க 20 ரியால்கள் கட்டணம். “வேற லெவல் வைப்” வேண்டுவோர் தவற விடக் கூடாத அனுபவம். அதிகம் பிரபலமடையாத யாருக்கும் தெரியாத கூட்டம் இல்லாத இடம். இரவின் ஏகாந்தத்தை அணுவணுவாக ரசிக்கலாம். ஒளி மாசற்ற காரிருளில் இருபுறமும் உயர்ந்து நிற்கும் கணவாய்க்குள் இருந்து வானில் மின்னும் நட்சத்திரங்களை நம்மில் எத்தனை பேர் தரிசித்துள்ளோம்?
அந்த விடுதியில் இருந்து ஒரு மணி நேரம் பாறைகளைத் தாண்டியும் சிறு குன்றுகளில் ஏறியும் ஒரு சிறு சாகசப் பயணம் செய்தால் மற்றுமொரு அழகிய நீர்க் குளத்தை அடையலாம். அடர் மரகதப் பச்சை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் அந்தக் குளமும் ஓமானின் அடைவதற்குக் கடினமான பொக்கிஷங்களில் ஒன்று. இன்று வரை அங்கு கூட்டம் இல்லை. உங்களுக்கே உங்களுக்கான தனித்த நிழற்படங்களை எடுக்கும் சூழல் இக்கணம் வரையில் இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் இப்படி இருக்கும் எனக் கூறவியலாது. குதிரை லாட வடிவக் கணவாயின் கடைமடையில் இருக்கும் இந்தக் குளம் இருக்கும் பகுதியே “வாதி நக்ஹர்” என்றழைக்கப் படுகிறது. இந்தக் கணவாயின் நுழைவாயிலுக்கு “வாதி குல்” என்று பெயர்.
அந்த வாதியின் நுழைவாயிலில் வலது புறத்தில் மக்கள் வாழும் நவீன வீடுகளையும் இடது புறத்தில் பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் காணலாம். அந்த வயல்வெளிகளுக்கு சற்று மேலே பேரீட்ச்சை மரத் தோப்புகளும் உண்டு. அந்த தோப்புகளின் ஊடே நடந்து மேலேறினால் பழைய கிராமத்தின் சிதிலமடைந்த கல் வீடுகள் காலத்தின் சாட்சியாக அமர்ந்து தங்கள் கண் முன் உருமாறும் மக்களின் வாழ்வை அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கின்றன. தங்களது கூரைகளை இழந்து புதர் மண்டிக் கிடக்கும் அந்தப் பெரும் பெரும் கற்களால் கட்டப்பட்ட வீடுகளைக் கடந்து தொடர்ந்து மேலேறினால் 9000 அடி உயரம் கொண்ட சூரிய மலையின் உச்சியை அடையலாம். அதுவும் வழி நெடுக இலக்கைத் தவற விட்டுவிடாமல் இருக்க மூவர்ணக் கொடி கொண்டு அடையாளமிடப்பட்ட மலைப் பாதை. கடந்த ஆண்டு தான் அப்பாதையின் வழி இருபகல்கள் நடந்து உச்சியை அடைந்து திரும்பினேன்.
என் பெருமை பீதாம்பரத்தை விட்டுத் தள்ளிவிட்டு உங்களை மேலே அழைத்துச் செல்லும் வழியைப் பார்ப்போம். “வாதி குல்” ன் உச்சியில் வாகனங்களை நிறுத்த வாகான ஓரிடம் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், பழைய கல் வீடுகள், புதிய குடியிருப்புப் பகுதி அவற்றின் பின்ணணியில் உயர்ந்தும் நீண்டும் கிடக்கும் “சூரிய மலை” என மொத்தத்தையும் கண் குளிரக் கண்டு களிக்கலாம்.
மேற்கு ஹஜர் மலைத் தொடரின் மிகப் புகழ் பெற்ற சிகரங்கள் முறையே “ஜபல் அக்தர்”, “ஜபல் ஷாம்ஸ்” மற்றும் “ஜபல் ஹாத்”. இவற்றில் “ஜபல் அக்தர்” மற்றும் “ஜபல் ஹாத்” என்ற இரண்டு ஊர்களையும் ஏற்கனவே நிதானமாகச் சுற்றிப் பார்த்து விட்டோம்.
“ஜபல் அக்தர்” அளவிற்குப் புகழ் பெற்ற தலமெனினும் “ஜபல் ஷாம்ஸில்” நூறு குடும்பங்களுக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். இங்கு ஒரிரு சாதாரண ரிசார்ட்டுகளும் தங்குமிடங்களும் மட்டுமே உள்ளன. இது வரை இங்கு பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளோ, பெட்ரோல் பங்கோ, விதவிதமான உணவகங்களோ, பொதுக் கழிப்பிடங்களோ, மருத்துவமனைகளோ கிடையாது. அவ்வளவு ஏன் கடைசி வரை செல்ல வசதியான தார்ச் சாலை கூடக் கிடையாது.
ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் இப்போது ஒரு மிகப் பெரிய சுற்றுலாத் தளமும் தங்கும் விடுதியும் சூரிய மலையின் உச்சியில் கட்டப் பட்டு வருகின்றன. அங்கு வரக்கூடிய விருந்தினர்களுக்கு வசதியாக இடைப்பட்ட பகுதியில் இருக்கும் மண் சாலையைத் தார்ச் சாலையாக மாற்றும் பணியும் நிகழ்ந்து வருகிறது.
அத்தனை கூட்டம் வரக்கூடிய அளவிற்கு அங்கு அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு மூன்று பதில்கள் உள்ளன.
முதலாவது — குளிர். கடும் கோடையிலும்” ஜபல் ஷம்ஸ்” சில்லென்று தான் இருக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் தட்பவெப்பநிலை 0 டிகிரி செல்சியஸைத் தொடும். வருடத்தில் ஓரிரு நாட்கள் பனி பொழிந்து, கட்டாந்தரைகள் வெண்ணிறப் போர்வையைப் போர்த்திக்கொள்ளும் அதிசயமும் நிகழ்வதுண்டு.
இரண்டாவது — காட்சியின்பம். ஓமானின் மிக உயர்ந்த சிகரமான ஜபல் ஷம்ஸ், ஒவ்வொரு நாளும் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் முதன்முதலில் முத்தமிடும் நிலப்பரப்புகளில் ஒன்றாகவும், மாலையில் ஆதவன் மேற்கில் மறையச் செல்லும்போது அவனது கதிர்கள் விடைபெறும் கடைசி நிலப்பரப்புகளில் ஒன்றாகவும் காட்சியளிக்கிறது. அதனால்தானோ என்னவோ, ‘சூரிய மலை’ என்று பொருள்படும்” ஜபல் ஷம்ஸ்” என்ற பெயர் இம்மலைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
2000 மீட்டர் அதாவது 6000 அடி உயரத்தில் நின்று “அரேபியாவின் க்ராண்ட் கான்யன்” என்றழைக்கப்படும் குதிரை லாட வடிவக் கணவாயைக் காணக் கோடிக் கண்கள் இருந்தாலும் பலனில்லை. அதுவும் அந்தக் கணவாயின் விளிம்பில் கூடாரமடித்துத் தங்கி சூரிய உதயத்தைக் காண்போர் பாக்கிய சாலிகள். அதனால் தான் அந்தி மயங்கும் நேரத்தில் குடும்பங்களாக இணைந்து பெரும் பெரும் வாகனங்களில் இராத்தங்களுக்குத் தேவையான அத்தனை சாமான்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கும்பல் கும்பலாக உள்ளூர்ச் சனம் இவ்விடம் நாடி வருகிறது. நல்ல குளிரில் நெருப்புக் கூட்டி, சுடுவான் சுட்டுக் கொண்டும் மெல்லிய இசையுடன் நட்சத்திரங்களின் கண்சிமிட்டலை ரசித்துக் கொண்டே அந்த ஏகாந்தத்தை அனுபவிப்பதும் பரம சுகம். இவ்வெழிலை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விடுதிகளில் தங்கி உற்சாக பானம் அருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.
மூன்றாவதும் இம்மலை வாசஸ்தலத்தின் புகழுக்கு முக்கியக் காரணியும் இது அளிக்கும் சாகச அனுபவங்கள். இவை அனைவருக்குமானவையல்ல. சாகச விரும்பிகளின் மனம் கவர்ந்த மூன்று மிக முக்கிய அம்சங்கள் “ஜபல் ஷாம்ஸ்” இல் இருக்கின்றன.
முதலாவது “அல் கித்யம்” என்ற 1900 மீட்டர் உயரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து குதிரை லாட வடிவ வலது புற கணவாய்ச் சவற்றின் விளிம்பில் நடந்து அக் கணவாயின் மையத்தில் இருக்கும் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தை அடைவது. “ஜபல் ஷாம்ஸ்” காட்சி முனையில் இருந்து “அல் கித்யம்” என்ற அக் கிராமம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
அல் கித்யத்தில் இருந்து கீழிறங்கும் பாதை நம்மை “சப் பானி ஃகாமிஸ்” என்ற அந்த கைவிடப்பட்ட புராதான கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அக்கிராமத்தில் மனிதர்கள் வீடுகட்டி, நீர்பாய்ச்சி, விவசாயம் செய்து வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.
அந்தக் கிராமத்தின் குடியிருப்புப் பகுதிக்கு மேலே ஒரு பெரிய தட்டையான கூரை போன்ற பகுதி உள்ளது. அந்தக் கூரையின் மேற்புறம் ஒரு வற்றாத குளம் இருக்கிறது. அந்தக் குளத்தைச் சுற்றி வந்து பாறைகளைத் தாண்டி அதன் மேல் புறத்தை அடைந்தால் அங்கொரு அழகிய குகையிருக்கிறது.
அந்தக் கிராமத்தையும், குளத்தையும், குகையையும் கண்டடைந்து திரும்புவது வாழ் நாளில் என்றும் மறக்கவியலாத அனுபவமாக இருக்கும். இந்தத் தடத்தில் நடக்கத் துணிந்த ஒவ்வொருவரும் மீண்டும் தங்களது வாகனத்தை அடையும் போது குறைந்தது நூறு நிழற்படங்களையாவது சுட்டுத் தள்ளியிருப்பர். இந்தப் பாதைக்கு “பால்கனி வாக்” என்று பெயர். இதுதான் ஓமானின் மிகப் புகழ் பெற்ற ட்ரெக்கிங் ரூட். ஏழெட்டு வயது சிறுவர்கள் முதல் எழுபது வயது பெரியவர்கள் வரை மனத்திடம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடந்து இலக்கை அடைய முயற்சி செய்வது வழக்கம். மிக மிக மெதுவாக நடப்போருக்குப் போக வர ஏழெட்டு மணி நேரம் பிடிக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருப்போருக்கு 4 முதல் 5 மணி நேரம் போதும்.
கொஞ்சம் தீவிரமான “சதுரகிரி” மற்றும் “வெள்ளியங்கிரி” போன்ற மலைகளில் ஏறிப் பழக்கப் பட்டோர் கீழே “வாதி குல்” லில் இருந்து நடக்கத் துவங்கினால் 5 முதல் 7 மணி நேரத்தில் 7 கிலோ மீட்டர்களைக் கடந்து “அல் கித்யம்” கிராமத்தை அடையலாம். அங்கிருந்து சப் பானி ஃகாமிஸை அடைய மேலும் 3 மணி நேரம் பிடிக்கக் கூடும். இரவு குகையில் தங்கி இளைப்பாறிவிட்டுக் காலையில் திரும்பலாம்.
அல்லது அந்தக் குகைக்கு மேலே பாறையில் நெட்டுக் குத்தாக 250 மீட்டர் உயரத்திற்கு பாறைச் சவற்றில் படிக்கட்டுகள் போலப் பதிக்கப் பட்டுள்ள கம்பிகளில் கால் வைத்து இரும்புக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே மெதுவாக மேலேறிக் காட்சி முனையை அடையலாம். ஆனால் அதற்குத் தேவையான தலைக்கவசம், இடுப்புப் பட்டை, பாதுகாப்புச் சங்கிலி போன்ற உபகரணங்களும் வழிகாட்டியும் தேவை. குறைந்த பட்சம் ஒரு நபருக்கு 5000 ரூபாய் செலவாகும். இது இரண்டாம் நிலை சாகசம்.
இந்த இரண்டு சாகசங்களுக்கும் பெரியண்ணன் ஒருவர் இருக்கிறார். அது “ஜபல் ஷம்ஸ்” காட்சி முனைக்கு அருகில் உள்ள “சமா” ரிசார்ட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் நடந்து 3000 மீட்டர் உயரத்தில் உள்ள சிகரத்தை அடைந்து திரும்புவது. விடியற் காலையில் நடக்கத் துவங்கினால் இருட்டுவதற்குள் ரிசார்ட்டிற்கு வந்து விடலாம். வழியில் குடிநீர் கூடக் கிடைக்காது. ஆயிரம் மீட்டர் ஏற்றம். ஐந்தாறு லிட்டர் தண்ணீரைச் சுமந்து கொண்டு நடக்க வேண்டும். நாக்குத் தள்ளி விடும். மேலே தங்கி மறுநாள் காலை கீழிறங்க வேண்டுமெனில் தங்குவதற்குத் தேவையான கூடாரம், ஸ்லீப்பிங் பேக் மற்றும் உணவுப் பொருட்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ஓமானுக்கு வரும் சாகசப் பிரியர்கள் அனைவரது பக்கெட் லிஸ்ட்டிலும் தவறாது இடம் பெறக் கூடிய ஒரு அம்சம் இந்தச் சிகரத்தின் உச்சியில் பதிக்கப் பட்டிருக்கும் வட்ட வடிவ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வரைபடத்தை முத்தமிட்டுத் திரும்புவதே!!!
நிஸ்வாவிற்குக் கிளம்பும் முன் இவற்றில் உங்களுக்குத் தகுந்தவை எவை என முடிவு செய்து விட்டு வரவும். நீங்கள் ரெடியெனில் உங்களை நீங்கள் விரும்பும் சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல நான் ரெடி.
(தொடரும்)


